மணிவாசகப்பெருமான் வரலாறு கா. சுப்பிரமணிய பிள்ளை

1. தோற்றுவாய்

இந் நிலவுலகத்திலே கடவுள் உயிர்களுய்தற் பொருட்டு அருளுருக்கொண்டு தோன்றியுந் தோன் றாதும் அருள் புரிவர். அன்பர்கள் நினைந்த வடிவொடு எப்போதாவது தோன்றி அருள் புரியா விடத்து இறை வனியல்பை மக்கள் திட்பமாக உணரமாட்டார். வீடென்பது இறைவனோடு இரண்டறக் கலத்தல் என்று கருதுவார்க்கு அவ்விறைவன் இயல்பை யுணர்ந்தாலன்றி வீடெய்துதல் முடியாது. இறைவன் உருவு கொண் டெழுந்தருளியிருக்கும் ஓர் உலகத்தையடைதலே வீடென் பார்க்கும் இறைவன் திருவுருக் காண்டல் வேண் டப்படுவதொன்றே. இறைவன் அருளொளியாகத் தோன்றினும் அவ்வொளியும் ஓர் உருவே. கடவுள் எந்நாளும் தோன்றாத் துணையாகவே யிருப்பார் என்னுங் கொள்கையும் உலகத்தில் நிலவுகின்றது. கடவுளைக் கண்ட வர் இல்லாத நாட்டிலே கடவுளைக் காணுதல் கூடுமென்ற கொள்கை உண்டாதற் கிடமில்லை. கடவுளைக் கண்டவர் இருந்திருப்பினும் அவர்களைப்பற்றி யறியாத மாந்தர் கடவுள் தோன்றுதல் கூடுமென்பதை நம்பமாட்டார். கௌதம புத்தர், வாசெட்டன் என்னும் பார்ப்பன மாணவனை நோக்கிப் பிரமத்தைக் கண்டவர் யார்? என்று வினவியபோது ஒருவருமிலர் என்று அவன் கூறவும், அவர். ஆதலினாற்றான் மும்மறைகளுங் கற்று வல்லவர்கள், ‘நாமதனைப் பார்த்ததுமில்லை அறிந்ததுமில்லை, அதனோடு ஒன்றாகும் வழியையும் நம்மாற் காட்டமுடியாது என்றனர்’ என்று அக்கொள்கையை வற்புறுத்தினர். அவர் காலத்திலே மூன்று வேதங்களையுங் கற்றவர் கடவுளைக் காண முடியாதென்ற கொள்கையை உடையராயிருந்தன ரென்பது தெளிவு.

“காணுயாறரிதரிதாமெனக்கணிப்பிலாப்பலசாகைக்
கோணை மாமறை யாவையுந் தனித்தனி குழறுவ
தல்லான் மாணு மாறிது வெனக்காட்ட வல்லதே”

என்று ஆசிரியர் சிவஞான முனிவர் கூறியதுங் காண்க. தென்னாட்டிலே நான்மறைகளையும் இறைவன் நால்வர்க் கீந்தனனென்று தமிழ் மறைகள் முழங்குகின்றன.

சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள்

என்ற தேவாரப் பாட்டில் ‘ சைவவேடந்தானினைத்து ஐம்புலனு மழிந்த சிந்தை அந்தணாளர் ‘ என்றமையால், இறைவனது சிவவேடத்தினை முனிவர் நினைந்தாரென்பது பெறப்படும். படவே இறைவர்க்கு உருவம் உண்டென்று கொள்ளப்பட்டது. திருவாசகத்துள்

மற்றவைதம்மைமகேந்திரத்திருந்து
உற்றஐம் முகங்க ளாற்பணித் தருளியும்

என்றமையால் ; இறைவன் ஐந்து திருமுகங்களோடு ஆகமங்கேட்ட முனிவர்க்குத் தோன்றியருளின னென்பது பெறப்படும். இறைவனே – முதனூலருளினன் என்ற கருத்துந் தலைச்சங்கப்புலவருக்கு இறைவன் தோன்றி யருளின னென்பதுந் தமிழ்நாட்டுக் கொள்கையே. இவற்றாற் புலனாவ தென்னெனின், கடவுள் தக்க தவத் தினர்க்குத் தோன்றியருள்புரிவனென்ற கொள்கை தமிழகத்திலே மிகப் பழமையான காலத்திலே நிலை பெற்றிருந்த தென்பதே. பண்டை நான் மறையும் அறிவனூ லுந் தலைச்சங்கமும் மறைந்தொழிந்தற்குப்பின் நக்கீரர் நூலாகிய திருமுருகாற்றுப்படையில் ‘முரணினர் உட்க, முருகாற்றுப் படுத்த உருகெழுவியனகர்’ என்ற விடத்து இக்கொள்கை குறிக்கப்பட்ட தெனினும்,

புத்தசமயம் தென்னாட்டிலே கடைச்சங்கத்தார் காலத் திலே பரவிய பின்னர் அது மழுங்கிப்போயிற்று. மீட்டும் இதனை மலையிலக்காக நிலைநாட்டிப் பண்டைத் தமிழரது சிவநெறியின் உண்மையை உலகினருக்குத் தமது பெரு வாழ்வினால் விளக்கியருளிய முதற்பெருந்தகையார் சைவத்திரு நெறித்தலைவர்கள் நால்வருள் முற்பட்டவராகிய மணிவாசகப் பெருமானாவர். இவர் அறிவனூல் கூறும் முறையிற் செவ்விதின் ஒழுகித் தனிப்பெருந்தவம் நோற்று இறைவன்பால் உலகப் பயன் எதனையும் விழை யாது வீடுபேற்றினையே பெரிதும் அவாவி நின்று இறை வன் மனிதப் போர்வை போர்த்துக் குருவாக வந்து

ஆட்கொண்டருளப் பெற்ற பேராசிரியராவர்.

இவர் மூன்றாவது நூற்றாண்டின் பிற்பகுதிலேயே நிலவுலகிற் றிகழ்ந்தன ரென்பது உயர்திரு மறைமலை யடிக ளால் மிக விரிவான ஆராய்ச்சி செய்து முடிவுகட்டப் பட்டது. அஃது அந்நூற்றாண்டிலேயே தென்னிந்தியா வின் மேலைக்கரையிற் குடியேறி வதிந்திருந்த பாதிரிமார் களால் ஏட்டுச்சுவடியில் அப்பெருந்தகையார் சார்பாக எழுதிவைத்த குறிப்புக்களால் ஐயத்திற்கிடமில்லாதபடி வலியுறுதல் ‘ காண்க. திருவனந்தபுரத்திலுள்ள கேரள சங்கத்தின் தொன்னூ லமைச்சராய் விளங்குந் திருவாளர். T. K. ஜோசப் அவர்கள் மாணிக்கவாசகரைப் பற்றிய மலையாளக் கிறித்துவச் செப்புப்பட்டயங்களைத் தமது ஏலொன்றிற் றொகுத்து வெளியிட்டிருக்கின்றார். அவை கள் மலையாள எழுத்தில் இருப்பதால், மாணிக்கவாசகப் பெருமான் சார்பான செப்புப்பட்டயத்திலுள்ள சொற் றொடர்களைத் தமிழெழுத்தில் எழுதித் தெரியாத சொற் களுக்குப் பொருள் விளக்கமுஞ் சேர்த்து இந்நூலெழு துங்காலத்திலே மிக்க அன்புடன் அனுப்பிய அவர்களது பெரு நன்றிக்கு நாம் என்றுங் கடமைப்பட்டுள்ளோம். அச்செப்புப்பட்டயப் பகுதி இந்நூலின் இறுதியிற் சேர்க்கப்பட்டுள்ளது. அப்பட்டயத்தினால் நாம் அறிந்து கொள்வது யாதெனில், ” காவிரிப்பூம் பட்டினம் முதலிய

துறை முகங்களிற் றமிழரிற் சிலர் கிறித்து மதக் குருமார் சொற்கேட்டு அச்சமயநெறி நின்றனர். கி. பி. உக ங-வது ஆண்டிற்கு முன்னேயே அவ்விடத்தில் சைவக்கிளர்ச்சி ஏற்பட்டது. மணிவாசகப்பெருமானுடைய அடியார்கள் மேலைக்கரை முதல் கீழைக்கரை வரையிலுள்ள பல இடங்களிலுந் திருவருளினாற் பலவகை அருஞ்செயல்களை இயற்றிச் சைவத்தை வளர்த்தனர். ஆய காலை கிறித்து மதத்திலிருந்தும் பலர் ஆவிலைந்தும் உட்கொண்டு ஐந்தெழுத் தோதிச் சிவநெறிக்கு மீண்டனர். மலையாள நாட்டில் மேலைக்கரையிலுள்ள குரக்கணியென்னு மிடத்திற்கு அரு கில் சிவநெறிக்கு மீண்டார்க்கும் மீளாதார்க்கும், பிணத்தை அடக்கஞ் செய்யும் முறையைப் பற்றி ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முன்னையோர் பின்னையோரி னின்றும் விலகி மணிக்கிராமம் என்னும் ஒரு தனி ஊர் ஏற்படுத்தி அதன்கண் வாழ்ந்தனர்,” என்பதே.

இனி , மணிவாசகனார் காலம் முற்பட்டது என்பதற்குப் பிற சில காரணங்களும் உள.

மாணிக்கவாசகர் காலத்திலே புத்த சமயமே தலை எடுத்து நின்றது. ‘புத்தன் முதலாய புல்லறிவிற் பல் சமயம் ‘ என்ற விடத்துப் புத்தசமயம் திருவாசகத்திற் கூறப்பட்டது போலச் , சமண மதம் திருவாசகத்துட் குறிக்கப்படவில்லை. மணிவாசகப் பெருமான் புத்தரை வாதில் வென்றபோது, புத்த மதத்தினர் பலர் சைவந் தழுவியதை இலங்கையிலுள்ள ‘ மகாவமிச்’ மென்ற புத்த சரித்திர நூல் எடுத்தியம்புகின்றது. அது குறிக்குங் காலமும் மூன்றாவது நூற்றாண்டின் பிற்பகுதியோ டொத் திருக்கின்றது.

மூன்றாவது நூற்றாண்டிற்குப் பின் புத்தசமயம் சிறப்பாகத் தமிழ் நாட்டில் நிலைபெறவில்லை. தேவார காலத்தில் அது சமணசமய நிழலில் தங்கியிருந்தது. ஒன்ப தாவது நூற்றாண்டில் சமண சமய சங்கங்களே தமிழ் நாட்டிற் பல இடங்களிற் றிகழ்ந்தன. ஆதலால் மணிவாசகப் பெருமான் ஒன்பதாவது நூற்றாண்டில் வாழ்ந் திருந்தனர் என்று கூறுதல் தவறு. பல்லவ மன்னரைப் பற்றித் தேவாரத்துட் குறிப்புக் காணப்படுகின்றது. ஆனால் திருவாசகத்துள் அன்னோரைப்பற்றி யாதுங் கண்டிலம். பல்லவர் அரசாளத் தொடங்கியது கி. பி. நாலாவது நூற்றாண்டிலே யாதலால் திருவாதவூரடிகள் அதற்கு முன்னேயே திருவாசகம் அருளிச்செய்திருக்கவேண்டும். திருவாசகத்தின் பாவமைப்பும் சொல்லமைப்பும் அது தேவாரத்திற்கு நெடுநாள் முற்பட்டதென்பதை வலியுறுத்துவன. வடசொற் கலப்பும் விருத்தப் பாக்களும் தேவாரத்திற் காணப்படுதல் போலத் திருவாசகத்துள் மிகுதியாய்ப் பயிலாமை காண்க, மணிவாசகப்பெருமானாராற் குறிக்கப்பட்ட வரகுண பாண்டியன் ஒன்பதாம் நூற்றாண்டிற் திகழ்ந்த போர்வீரனாகிய வரகுண னின் வேறாவனென்று உயர்திரு மறைமலையடிகளால் நன்றாக நாட்டப்பட்டது. வரகுணனென்ற சொற்றொடர் வடமொழியாதலின், வடமொழிப் பெயர் மூன்றாம் நூற்றாண்டிற் பாண்டியர்க்கு அமையவில்லை என்ற கருத்துப் பிழைபட்டதாகும். உக்கிரப் பெருவழுதி என்ற சொற்றொடரில் உக்கிரனென்ற சொல் வடமொழி யாதலாலும், உக்கிரப் பெருவழுதியின் காலம் கடைச்சங்கத்தின் இறு திக்காலமாகிய மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியாத லாலும் வடசொல்லானது மூன்றாம் நூற்றாண்டிலேயே பாண்டிய மன்னர் பெயர்களிற் கலந்துள்ள தென்பது தெளிவு. வரகுணன் என்பதை, வரகு உணன் எனப் பிரித்துப் பொருள் கொள்ளின், அது தமிழ்ச் சொற் றொடராதல் காண்க. ஈண்டுச் சுட்டிய ஏதுக்களாலும் பிறவற்றாலும், மணிவாசகப்பெருமான் காலம் கி. பி. நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்று தெளியப்படும்.

நமது அடிகளைப்பற்றிய வரலாறு வடமொழியில் ஆலாசிய மான்மியம், ஆதிகைலாச மான்மியம், மணி வாசகபுராண முதலிய நூல்களிலும், தமிழிலே கடம்பவன புராணம், திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், திருப்பெருந்துறைப் புராணம், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம், உத்தரகோசமங்கைப் புராணம், திருவாதவூரடிகள் புராணம் என்னும் நூல்களி லுங் காணப்படுகின்றன. இவையாவும், அடிகள் காலத்திற்கு நெடுநாட்குப்பின் இயற்றப்பட்டமையால், சிற்சில பகுதிகள், தம்முள் முரண்படுவன. இறுதியில் நின்ற புராணம் கடவுண்மா முனிவரா லியற்றப்பெற்று அடி களது வரலாற்றினைச் செந்தமிழ்ப் பாக்களான் விரிவாகப் பகர்வதாகலின் அதனைப் பெரிதுந்தழுவியே இந்நூல் எழு தப்படுகின்றது. அதனுட் பொருத்தமில்லா தனவும் ஆங் காங்கே சுட்டப்படும். கடவுண்மா முனிவர் ஆசிரியர் சிவஞான முனிவரது முதன் மாணாக்கராகிய கச்சியப் பரோ டுடன் பயின்றன ரென்ப. இவர் வரலாறு தெளி வாகத் தெரியவில்லை.

இனி, திருவாதவூரடிகள் அறுபான் மும்மை நாயன் மாருள் ஒருவராகச் சேர்க்கப்படாமையின், அவர் நம்பி யாரூரர் காலத்திற்குப் பிற்பட்டவராதல் வேண்டுமென்று கோடல் பொருத்தமின்மை காட்டுதும். திருத்தொண் டத் தொகையுள் அடிகள் விதந்தோ தப்படாமைக்குக் காரணம் பலவாறு கூறப்படுகின்றது. ஒரு காரணம் யாதெனின், திருத்தொண்டத்தொகை வல்வினையாற்றி இறையருள் பெற்ற பெரியாரையே தனிப்பட விதந்தோ தும். அறுபான் மும்மை நாயன்மாருள் ஒருவரும், மணி மொழியார் போலச் சிவஞான போதத்துட் கூறியாங்கு மக்கட்போர்வை போர்த்துக் குருவாய் வந்த இறைவனால் ஆட்கொள்ளப்படாமையின், அவ்வகைத்தாய ஆகம முறையாகிய உபதேச நெறிக்குப் புறனடையா யமர்ந்த தமிழ் பாட்டுப் பெரியாரே, அறுபான் மும்மை நாயன் மாராகத் தொகுத்துக் கூறப்பட்டரென் றுய்த்துணர் வார்க்கு, திருவாதவூரடிகள் வரலாறு பெரிய புராணத்திற் காணப்படாமைக் கேது தெள்ளிதிற் புலனாமென்க. இனிப் பொய்யடிமை யில்லாத புலவ’ ரென்பார் மாணிக்கவாசக ரென்பாரு முளர். அவர் பிறப்பால் வீரசைவ மதத்தின் ரென்றலு மொரு கொள்கை. எவ்வாறு கொள்ளினும், அடிகள் வரலாறு பெரியபுராணத்திற் குறிக்கப்படாமை காலம் பற்றி நேர்ந்த தென்று கோடல் தவறென்பது மேற்கூறிய காரணங்களால் நிலையுறுதல் காண்க. ஒரு சாரார் திருவெம்பாவையுள்,

“வேதமுதல்விண்ணோருமண்ணுந்துதித்தாலும்
ஓத வலவா, வொருதோழன் தொண்டருளன்”

என்றவிடத்து ‘ ஒரு தோழன் தொண்டருள் உள்ளவன்’ என்று பொருள் கொண்டு, தம்பிரான் றோழராகிய சுந்தர மூர்த்திகளை இவ்வடிகள் குறிக்கின்றன வென்பர். அது தக்க பொருளன்று. ‘ஒரு தோழன்’ என்றது இறைவனையே. தொண்டர் உளன் என்பதற்குத் தொண்ட ருள்ளத்தி லிருப்பவன் என்பதே பொருள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *