
மணிவாசகப்பெருமான் வரலாறு கா. சுப்பிரமணிய பிள்ளை
2. குருவருள் பெற்றது
பாண்டிநாட்டிலே திருவா தவூரிலே ஆதிசைவ மரபிலே நமது நாயனார் தோன்றினார். அவரது இயற்பெயரும், பெற்றோர் பெயரும் விளங்கவில்லை. சுந்தரநாதர் என்னு மாதிசைவர்க்குப் பிறந்ததாக வடமொழி ஆலாசி யங் கூறுகின்றது. காலஞ்சென்ற பெரும் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்க ளியற்றிய பெருந்துறைப் புராணம், இவரது தந்தை பெயர் சம்பு பாதாசிரியர் ; தாய் பெயர் சிவஞானவதி என்று கூறும். இவை முன்னூல்களிற் காணப்படாமையாற் பிற்காலத்திற் புனைந்துரைக்கப்பட் டனபோலும். இவர் கயிலையிற் கண நாதராய்த் திகழ்ந்தவ ரொருவரென்று திருவாலவாயுடையார் புராணங் கூறு கின்றது, ‘குடமுழ நந்தீசனை வாசகனாக் கொண்டாய்’ என்ற அப்பர் தேவார அடிகளும், ‘ நீக்கி முன்னெனைத் தன்னொடு, நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து’ என்ற திருவாசகப் பகுதியும் இதற்குச் சான்றாமென்ப. ‘ நந்தி’ என்று கணநாதர்க்குப் பெயர். ‘வாசகன்’ என்பது வாயிற் காவலன் என்று பொருள்படு மென்பாருமுளர். அடிகளது முற்பிறப்பு எங்ஙனமாயினும், அவர் முன்னைப் பெருந்தவத்தினரென்பது கூறாமே விளங்கும். அடிகளது மரபை அமாத்தியர் குலமென்றது, அம்மரபினருள் நின்று அமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டமையா னென்க. அமாத்தியர் என்ற சொல் பக்கமிருக்கு மந்திரியைக் குறிக்கும். கடவுண் மாமுனிவர், திருவாதவூரரென்ற நாமத்தையே அடிகளுடைய பெற்றோர் அவர்க்கிட்டன ரென்கின்றார். ஆரூரர் என்ற சொல் அத்தகைய தாதல் காண்க.
நிலையாத இவ்வுலகின் வாழ்வார் மயக்கமாகிய இருளை யொழித்தற்பொருட்டும், புறச்சமய விண்மீன்களி னொளி மழுங்கவும், சிவனன்பர் உள்ளக் கமலங்கள் மலரவும், அறிவின் கதிரவனாகிய திருவாதவூரர் தோன்றி யருளி னார். அடிகளைக் கடவுண் மாமுனிவர் ஓர் செந்நெற் கதி ருக்கும் ஒப்பிட்டுள்ளார்.
”தவமெனும்பெரியவித்துட்டங்கியேயங்குரித்துப்
பவமெனும்பங்கநீங்கிப்பயிலருட்குருத்துண்டாகி
அவமெனுங்களைகணீங்கியாக்குவோனரு
ளாலுண்மைச்சிவமெனும்விளைவண்டாக
வளர்ந்ததுதெய்வச்சாலி.”
பயன் கருதாது செய்யுந் தூய நற்றவமாகிய வித்திலே முளைத்துப் பிறவியாகிய சேற்றினைக் கடந்து அருளென் னுங் குருத்து விட்டுப் பயனில் செயலாய களைகளிற் பிணிப் புறாது, மெய்ப்பொருளாஞ் சிவம் விளையுஞ் செவ்விய நெற்கதிராக வளர்ந் திலங்கினார் திருவாதவூரடிக ளென்ற வாறு. பிறவிப் பசிதீரச் சிவஞானவமுதுண்ணத் தோன் றிய செம்மலார்க்குச் சோறூட்டுதற்குரிய நாளிலே, தேனும் கருப்பஞ்சாறு முக்கனியும் ஆன்பாலுங் கலந்த உணவை யளித்தனர். உரிய பருவங்களிலே, குடுமிவைத் தல், கல்வி தொடங்குதல், நூலணிதல் முதலியன நிகழ்ந் தன. பதினாறாம் ஆண்டிற்குள் எல்லாக் கலைகளையும் அடி கள் கற்றுத் தேர்ந்து சிவனடிப் பேரன்பினராய்ப் பெருந் திறமையோடு திகழ்வதைப் பாண்டிய மன்னன் கேட்டு அவரை யழைத்து உரிமைகள் பல நல்கிப் பெரு நட்புப் பாராட்டிச் பின்னாளில் அவரை முதல் அமைச்சராய் நியமித்துத் தென்னவன் பிரமராயனென்னும் பட்டமுங் கொடுத்து, மணிக்கலன்கள், பொன்னாடைகள், மதிக் குடை, சிவிகை, கவரி , யானை முதலியனவு மீந்தனன், எவ்வகைச் செல்வமும் மின்பமும் பெற்று, அரசரது படைத்தலைவர் சூழ அடிகள் அமைச்சு பூண்டிருந்தது, . விண்ணின் றிழிந்த மதி விண்மீனடுவணிருந் திலங்கியது போன்றது.
திருவாதவூரர் அறஞ் செய்வோர்க்குப் பெருந்துணை யாயும் அல்லாரைத் தக்கவாறு திருத்தும் நடுநிலையராயும் நாட்டின் அகத்தும் புறத்தும் பகையொழித்துப் பாண்டிய மன்னன் ஆட்சியைப் பிறவெல்லா அரசர் ஆட் சியினுஞ் சிறப்புற நடத்திவரு நாளில், கடவுள் உயிர் உலகம் என்னும் இவற்றின் மெய்யியல்பு தெரிக்குஞ் சைவ நூற்பொருளை நன்குணர்ந்து பிறப்பிறப்புப் பிணி மூப்பு என்னும் இடும்பைக்கஞ்சிச் சிவபெருமான் மாட்டு மிகுந்து வளரும் பேரன்புடையராய் அகத்துறவு பூண்டு இறை யருள் பதியப்பெற்றுச் சிவஞானச் செல்வம் நல்கும் நல் லாசிரியனை உலகெங்கும் உசாவித் தேடுவாராயினர்.
இவர் இவ்வாறிருக்கும் நாளில் ஒரு நாட் பாண்டிய மன்னன் கொலுவீற் றிருக்கும் பொழுது சில தூதர் அவன் பாற் சென்று வணங்கி ஆரிய வணிகர் கீழைக் கடற்கரை யிற் குற்றமில்லாத நற்குதிரைகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாகக் கூறினர். உடனே அரசன் அதனைக் கேட்டு மகிழ்ந்து திருவாதவூரடிகளை நல்ல குதிரைகள் வாங்கிக்கொண்டு வரும்படி வேண்டினன். அதற்கவர் இசைந்தவுடன் நிதிச்சாலை சென்று மிகுந்த பொன்னை எடுத்து அவரிடங் கொடுத்தான். அதனைப் பெற்றுக் கொண்டு பரிசனங்கள் பலருடன் திருவாலவாய் அண்ணலைத் தொழுது விடைபெற்றுக் கூடன் மாநகரைக் கடந்து கீழ்த்திசை நோக்கிச் சென்றனர். திருக்கானப்பேர் என் னுந் திருப்பதியை வணங்கித் திருப்பெருந்துறை என்னும் பதியினை நண்ணியவுடன் அப்பதியின் பாங்கர்ப் புன்னை, செண்பகம், சந்தனம், நரந்தம், செருந்தி, கோங்கு, பாதிரி, கமுகு, தெங்கு, குரவு, மா, முருக்கு, மகிழ் முதலிய மரங்கள் செறிந்து மயிலுங் குருகும் மந்தியும் உலாவித் திரிதற்கிடனாய் வண்டுகள் பண்பாடத் தேனனைய கண்ணீர் ததும்ப இறைவன் முன்னின்றுருகும் அன்பரைப் போன்ற பூம்பொழிலின் கீழ் உயர்ந்து அகன்று கவடுகள் பல போக்கிப் பெரு நிழல் செய்யும் அழகிய ஒரு குருந்த மரத்தின் கீழ் இறைவன் மக்கட் போர்வை போர்த்து எழில் மிக்கதோர் ஆசிரிய வடிவங்கொண்டு தொண்டர் புடை சூழ வீற்றிருந்தருளித் திருவாதவூரற்கு (கட்ட றுத்து) மலநீக்கிச் சிவமாக்குதற்குரிய பொழுதினை எதிர் பார்த்திருந்தனர்.
திருவாதவூரடிகளை விட்டகலும் பாசம் போலக் காயாமரங்கள் கரியபூக்களைப் பூத்தன. அவருக்கு இனிப் பிறப்பில்லை என்று கையினாற் காட்டுவபோலக் காந்தட்செடிகள் மலர்ந்தசைந்தன. காமன்கை அம்பாகிப் பிறரை வருத்தும் எமது பாவச்செயலை யொழிப்ப தற்கு உம்மினுந் தக்கவரில்லையாதலின் நீர் எமக்கு அருள் செய்க என்று பல்லைக் காட்டி நிற்பவர்போல் மெல்லிய முல்லைக்கொடிகள் மலர்ந்தன. இத்தகைய இயற்கை வனப்பினைக் கண்ணுற்றுத் திருப்பெருந்துறையைத் திருவாதவூரடிகளடைந்தபோது மலர்மரங்கள் மலர்களை உதிர் த்துப் புகழ்கூறி வரவேற்பவை போன்றன. தாழைகள் வருவார்க்கு உணவளிப்பன போலச் சோறேந்தி நின்றன. நீறணிந்து பொய்கைகளிலுள்ள தாமரைகள் தவத்தினர் போல அலர்ந்தன. கரும்பு பிறர்க்குரியாள ராய் அகத் தினிமை கொள்ளும் நல்லறிவினர்போல் நெருங்கி வளர்ந் தன. தலைவர் முகங்கண்டு தலைகவிழ்ந்து நிற்கு மாதர் போலச் செந்நெற்கதிர்கள் விளைந்து தலை வணங்கின,
இவைகள் இவ்வாறிருப்பத் திருவாதவூரடிகள் அப் பதியை நண்ணிய அளவில் நெஞ்சொடுக்கமும் அவாவின்
ஒழிவு முணர்ந்து வியப்புற்று அத்திருப்பதியின் பெரு மையை நினைந்து அகம் நெக , உரைவேறாக , அன்பு பொங்க, விழியருவிபாய , மயிர்சிலிர்த்து அழல்சேர் மெழு கெனச் சென்னிமேற்குவித்த கையராய் நின்றனர். நின்ற போது அணித்தாக அருள் நூலோதும் ஒலியினைக் கேட்டு ஏவலர் சிலரை யனுப்பி இஃதென்னென் றறிந்தும் சொல் லுங்கள் என்றனர். அவர்கள் சென்று குருந்தமர நிழ லிற் பெரியவரொருவர் அடியார் பலருடன் வீற்றிருந்து. நூலாய்வதைக் கண்டு வந்து கூற அவர்களைக் காணும் விருப்புடன் சிவிகை நின்றிழிந்து, இறைவனது பேரவைக்குட் சென்று பரமாசிரியரனக் கண்டவுடன் நிலமிசை வீழ்ந்திறைஞ்சிப் பன்முறை பணிந்து நின்றார். இறைவன் முடிமுதல் அடிவரை நோக்கி ஐந்தெழுத்து அருள் நிலை அறிவுறுத்தி அவர் சென்னிமேற் றிருவடி சூட்டிப் பாச நீக்கமுஞ் சிவப்பேறும் உடன் நல்கி ஆட்கொண்டருளினர். அடிகள் நின்ற நிலையைப் பின் வருஞ் செய்யுளாலறிக.
சிரித்தமுகமுங்கவின்குழலுந்தீராவருவிக்கண்மலரும்
விரித்த கரமுஞ் செபவட மும் வெண்ணூன் மார்புந் திருநீறும்
தரித்த திருவா சகமொழியுஞ் சாந்த மெய்யுங் குறுவியர்வு
மரித்த மனமும் புளகமுமாய் நின்றார்வாத வூர் முனிவர்
அடிகள் அப்பொழுது சென்னிப்பத்துப் பாடியருளினர். அவருடைய இன்றமிழ்ச செழும் பாடல்களைக் கேட்டு வந்த இறைவன் மாணிக்க வாசகனென்னுந் திருப்பெயர் அளித்தனன். பின்னர்த் திருவாதவூரடிகள் உடல் பொருள் ஆவி மூன்றையும் இறைவன்பால் ஒப்புவிக்கக் கருதித் தாம் குதிரை வாங்கக் கொண்டு வந்த பொருள் னைத்தையும் இறைவன் திருவடியிற் சேர்த்தனர். இறைவனவற்றை நல்லறங்களிற் பயன்படுத்தக் கட்டளை யிட்டருளினர். அடிகள் அவ்வாறே திருப்பெருந்துறை யிலே திருக்கோயிலமைப்பதற்கும், அடியார்க்கும் அருந் தவர்க்கும் வேண்டுவன செய்தற் பொருட்டும் அந்நிதி யினைப் பயன்படுத்தினர்.
ஆராய்ச்சி
சைவத் திருநெறித் தலைவருண் முதற்கண் உலகிற்றோன்றித் திகழ்ந்தவராகிய திருவாதவூரடிகளது இயற் பெயர், அவரது பெற்றோர் பெயர், மரபு முதலியவற்றைப் பற்றித் திட்பஞ்சிறந்த தெள்ளிய வரலாறு இல்லாமை, தமிழ்மக்கள் தமது பெரியோரைப்பற்றிய வாழ்க்கை வர லாறுகளைச் செவ்விதின் எழுதிவைத்துப் பாதுகாக்கும் நல்வழக்கத்தை இடைவிடாது மேற்கொள்ளத் தவறின ரென்பதை நன்கு விளக்கும். அடிகள் ஆதிசைவ மரபினர் என்று வடமொழி ஆலாசியங் கூறியதைச் சுற்றும் உற்று நோக்காது, அவர் அமாத்தியகுலம் என்று தமிழ் நூல் கள் புகன்றமை வியப்பை விளைக்கின்றது. வடநூலினை நேரே கற்று அதனைத் தமிழிலே மொழிபெயர்க்காது, வடமொழிவாணர் கூறுவதைக் கேட்டுத் தமிழ் நூலுடையார் தாங் கூறுங் கதையை எழுதினராதல் வேண்டும். அமாத்தியரென்ற சொல் அமைச்சரைக் குறிக்கு மாயின் அமைச்சர் குலமென்ற ஓர் வகுப்பு அந்தணருள் இருந்திருப்பதாய்க் கருத இடமில்லை. ஆளுடைய வடிகள் ஆதிசைவரென்று கூறின், ஆதிசைவர் பெருமை பெறுவர். அது நல்லதன்று. அவரை அயன்முகத் துதித்த பிராமணனென்று தெளிவாகக் கூறுதல் வரலாற்றிற்கு முரணாம். எவ்வாறாயினும், அவர் அந்தணர். அமைச்ச ராகவுமிருந்தனர். ஆதலின் அவரை அமைச்சர் குல அந்தண ரென்றலாற் படுமிழுக் கியாதுமில்லையென்று கருதிய ஒருவர் கூற்றிற்குச் செவிசாய்த்த தமிழ்வாணர் அடிகள் மரபினை அமாத்தியர் குலமென்றோதி யொழிந்தனர்.
அடிகள் குடும்பம் தெலுங்க நாட்டினின்று இவண் போந்த தென்பர் ஒருசாரார். அந்நாட்டிலே கோதா வரிக் கரையிலே மந்தான காளீச முதலிய ஆதிசைவ மடங்கள் இருந்தனவென்று அசிதாகமங் கூறுகின்றது. தெலுங்கருந் தமிழ்ப் பெருங்குழுவின் ஓர் பகுதியினரே , ‘ அதெந்துவே ‘, ‘ எந்து’ என்ற சொல் தெலுங்கிற் காணப்படுவதாயினும், ஆதியில் தமிழ் நிலவழக்கச்சொல்லா யிருந்திருத்தல் கூடும். ‘எந்தா’ என்ற சொல், மலையாளத்திலும் வழங்குவதைக் காணலாம். ஆகமநெறி யைச் சிறப்பித்து, ‘ஆகமமாகிநின் றண்ணிப்பான் றாள் வாழ்க’, ‘ மன்னுமா மலை மகேந்திரமதனிற் சொன்ன வாகமந் தோற்றுவித்தருளியும்’ என்றினைய பல மொழிந் தருளினமையும், அடிகளது சைவமரபினை வலியுறுத்து மென்க. தமிழ் மக்களுள் ஆதியிற் சமய ஆசிரியராய்ப் பெரும் பயனளித்தவர் ஆதிசைவரே. மருதநில மக் களுள், கடவுள் வழிபாட்டிற் குரியராய்ச் சமய நூல் பேணுங் கடமையை மேற்கொண்ட குழுவினர் ஆதிசைவ ராதலின், அன்னோருட்சைவ முதலாசிரியர் தோன்றித் திருவருள் பெற்றுத் தலைமைபூண்டிலங்குதல் பொருத்த மாவதொன்றே. ‘தென்னாடுடைய சிவனே போற்றி ‘ ‘பாண்டிநாடே பழம்பதியாகவும்’, ‘தென்பாண்டிநாட் டைச் சிவலோகமாக்குவித்த’ என்னும் அருண்மொழிக ளானே சிவநெறி பண்டே எழுந்து நிலைத்துத் தழைத் தோங்கிய நாடு தென்றமிழ் நாடென்று அடிகள் குறித் தருளினமையுங் காண்க.
திருவாதவூரடிகள் பதினாறாண்டினுட் கல்விப் பயிற்சி முற்றப்பெற்றார் என்பதனால், அக்காலத்திலே ஐந்தாண்டு முதற் பதினாறாண்டுவரை உள்ள காலமே மக்கள் கல்வி பயில்வதற்கு அமைந்த காலமாய்க் கருதப்பட்டதுபோ லும். பதினாறாண்டிற்குமேற் பொருளீட்டு தற்குரிய முயற் சிகளை மக்கள் மேற்கொண்டனர். திருவாதவூரடிகள் முதலமைச்சராக நியமனம் பெற்றது பதினாறுக்குமேல் முப்பத்திரண்டிற்குள்ளாக விருத்தல் வேண்டுமென்பது திண்ணம். அத்துணை இளமைப் பருவத்திலேயே அரச னுக்கு முதலமைச்சராய் நியமனம் பெறவேண்டுமெனின், அரசியற்றுறையில் நீண்ட பழக்கமுடைய தலைவர்களின் றிறமையை நமது அடிகள் அறிவாற்றலாலும் கலைவன்மை யாலும் இளமையிலேயே எய்தின ராதல் வேண்டும். பிரமராயர் என்ற பட்டம் ‘பிராமண அதிபதி’ என்று பொருள் படும். இச்சொற்றொடர் கி. பி. மூன்றாவது நூற்றாண்டில் வழங்கிற்றென்று கொள்ள இடமில்லை. அது பிற்காலத்தில் முதலமைச்சரைக் குறிப்பதற்கு வழங்கி இவ்வரலாறு எழுதப்பட்ட காலத்தே அதனுள் நுழைந்திருக்கலாம். அக்காலத்தில் அமைச்சர் முதலியோருக்கு வெண்மதிக்க விகை, சிவிகை , தண்டு, வேழம் முதலிய விருதுகளோடு வேண்டிய பொன்னும் அணிகலனும் தொகுதியாகக் கொடுக்கப்பட்டனவேயன்றி இக்காலத்திற்போல மாதச் சம்பளமாக ஊதியம் அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ‘இந்திரச் செல்வம் போல இயைந்துள இன்பமெய்தி’ என்ற மையால், பொருள் வளமும் இன்பவளமும் அடிகள் உடையராய்த் திகழ்ந்தனரென்ப. அவர் மணவாழ்க்கை நிகழ்த்தியதாகத் தெளிவாக யாண்டுங் கூறப்படவில்லை. திருவாசகத்துள்
முடித்தவாறுமென்றனக்கேதக்கதேமுன்னடியாரைப்பிடித்த
வாறுஞ்சோராமற்சோரனேனிங்கொருத்திவாய்
துடித்த வாறுந் துகிலிறையே சோர்ந்த வாறு
முகங்குறுவேர் பொடித்த வாறு மிவையுணர்ந்து கேடென் றனக்கே
[சூழ்ந்தேனே
என்ற திருப்பாட்டில் ஒருத்தி யென்றது அடிகளது மனைவியாரை என்று சில அறிஞர் கருதுகின்றார்கள். திருவருள் பெற்றபின் தம்மைத் தேடிவந்த தேவியார்க்குக் கடவுள் நிலை உணர்த்துதற்பொருட்டு நிட்டை கலைந்தமையே தமக்குக் கேடு சூழ்ந்ததாகக் கருதினரென்ப. திருவருள் பெறு முன் மணவாழ்க்கை நடத்தித் திருவருள் பெற்றபின் பேரின்ப வாழ்க்கைத் துணையாகத் தமது தேவியைக் கொண்டிருத்தலாற் போந்த இழுக்கு யாது மில்லை. இறைவனைக் கண்டு ஞானம் பெறுவதற்குமுன் உலக வாழ்க்கையில் அடிகள் ஈடுபட்டது போன்ற குறிப்புகள் திருவாசகத்தின் கண் உள்ளன. பிறவியறுத்துப் பேரருள் புரியும் பேராசிரியனாகிய இறை வனை நாடிச் செல்லும் ஆர்வமுடைய அருட்சத்தி பதிந்தார்க்கு வினை வயத்தால் ஐம்புலன்கள் தத்தமக்குரிய பொருள்மேற் செல்லின் அது பேரிடையூறாகத்தோன் றும். அக்காரணத்தால் தம்மை மிகப் பழித்துரைத்தல் பற்றி அவர்களைக் குறைபாடுடையராகக் கருதுதல் தவறு. பெருஞ் செல்வங்களனைத்தையும் துகர்ந்தும் அரசியற்றுறைகளில் மனஞ்செலுத்திக் கடனியற்றியும் உலகியல்பில் தலைநின்ற அடிகள், வெளிப்படையாக அமைச்சர் கடமைகளிற் பொழுது போக்கினும் உள்ளத்தினுள்ளே உலக நிலையாமையை நன்குணர்ந்து விடுபேற்றிற்குரிய சிவஞானத்தை நல்கும் அருட்குரவனை இடைவிடாது நாடி நின்றுழன்றனர். ‘ உறினே பருவமுடல் சிறையென் சொல்கி யலமாருந் தேடுவனாய்ந்து’ என்ற செய்யுள் இவரது மனநிலையைக் குறிக்கும். “நிருத்தனே நிமலா நெற்றிக் கண்ணனே விண்ணுளோர் பிரானே, பொருத்தனே யுன்னையோலமிட்டலறி யுலகெலாந் தேடியுங் காணேன் ” என்ற துங் காண்க. அடிகள் தாமரை இலையில் நீர்போல உலகவாழ்க்கையில் நின்று அதனைப் புறத்தே தழுவி
அகத்தே துறந்தமையின்,
“கூத்தினர்தன்மைவேறுகோலம்வேறாகுமாபோ
னீத்தனர் மனத்தின் முன்போ னிகழ்த்தினர் வழுதிமீதி”
என்றனர் கடவுண் மாமுனிவர். திருவருட்சத்தி பதியப் பெற்றவரே அருட்குரவனை வீடுபேற்றின் பொருட்டு நாடிச் செல்வர், உயிர்கட்கு உலகப்பற்று விளைத்தற் கேதுவாகிய அறியாமையின் வலி குறைவுற்று நழுவும் பான்மையுற்ற காலத்திலேதான் திருவருள் உயிரின் கட் பதியும்.
இம்மையிலும் மறுமையிலும் நுகரப்படும் எவ்வுலக இன்பத்தையும் பொருட்படுத்தாது வினயான் வரும் இன்பமுந் துன்பமும் ஒரு நிகரெனக் கருதி இரண்டையும் உவர்க்கும் உள்ள நிலையே இருவினை யொப்பு எனப்படும். இருவினை பொப்பு வந்த விடத்தே அறியாமையாகிய ஆணவமலம் நழுவுந் தகுதியடையும். அதனை மலபரிபாகமென்பர். இருவினையொப்பும் மலபரிபாகமும் உளதாய காலை உயிரினது அறிவின்கண்ணே திருவருள் பதிதலே சத்தினி பாதமெனப்படும். இவ்வருட்பதிவு நால்வகைப் படுமென்ப. கடவுள் திருவருளை நாடி உலகப்பயன் கரு தாது வீடுபேற்றை அவா விநின்று தஞ்செயலற் றிருத்தல் முதற்படி. இறைவனை அடையும் வழியாதென்று ஆராய்ந்து மேற்செல்லுதல் இரண்டாம்படி. அகத்தால் முற்றும் உலகத்தைத் துறந்து திருவருள்வழி நின்று புறத்தே உலகவாழ்க்கை நடத்துதல் மூன்றாம்படி. அகத் தும் புறத்தும் துறவுநிலையுற்று ஞானாசாரியன் ஒருவனையே தேடிவருந்தித் திரியும் நிலை நான்காம்படி. திருவாதவூரடிகள் நாலாஞ் சத்தினிபாத மெய்தியதாகக் கடவுண்மாமுனிவர் கூறுகின்றார்.
‘பரம அஞ்செழுத்தும் ஒன்றாம் பராபர முணர்த் தும் ஞான குருபரன் திருத்தாள் கூட விரும்பினர்’ என்றனர். சிவயநம என்னும் ஐந்தெழுத்தில் சிகரம் சிவத்தைக் காட்டும். வகரம் அருட்சத்தியைக் குறிக்கும். நகரம் உயிர்களைப் போகத்திற் செலுத்தும் மறைப்புச் சத்தியை யுணர்த்தும். யகரம் உயிரைச்சுட்டும். மகரம் மலத்தினைக் குறிக்கும். உயிர்கள் நகரவாற்றலாற் பாச வாழ்க்கை யுறும். அருட்சத்தியும் மறைப்புச் சத்தியும் சிவசத்தி ஒன்றேயா மாதலின் வீடுநாடலுறுவார்க்கு மறைப்புச்சத்தி அருட்சத்தியி லொடுங்கி அருட்சத்தியே மேற்பட்டுத்தோன்றும். அதனை நகரம் வகரத்தி லொடுங் குவதென்ப. சிவத்திற் சத்தி ஒடுங்குதலால், சிகரத்தில் வகரம் ஒடுங்குவதாகும். உயிர் அருட்சத்தியின் துணை கொண்டு சிவத்தில் ஒடுங்குவதால் யகரமும் சிகரத்தி லொடுங்குமென்ப. உயிரைப்பற்றிய மலம் வலியற்றடங் குதலால் மகரம் யகரத்தி லொடுங்கும். இம்முறையாக ஐந்தெழுத்தும் சிகரத்தி லொடுங்குதலால் ‘பரம அஞ் செழுத்தும் ஒன்றாம் பராபரா’ என்றது சிவபரம் பொரு ளையே. சிவத்தைத் தந்தை என்றும் அருளினைத் தாயென்றுங் கூறும் வழக்கமுண்மையால் அருளின்
துணை கொண்டு சிவத்தை யடைவதைத் தாயுடன் சென்று பின் தாதையைக் கூடுதலென்ப.
மாயநட்டோரையுமாயாமலமெனுமாதரையும்
வீயவிட் டோட்டி வெளியே புறப்பட்டு மெய்யருளாந்
தாயுடன் சென்று பின் ராதையைக் கூடிப்பின் றாயை மறந்
தேயும் தேநிட்டை யென் னெழிற்கச்சி யேகம்பனே.
அக்காலத்தில் ஆரியரென்பார் வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்குக் குதிரை கொண்டு வந்து வணிகஞ் செய்தனரென்று தெரிகிறது. அரசன் ஏழேழுகோடிப் பொன் குதிரை வாங்கக் கொடுத்தானென்றது மிகுந்த பணம் கொடுத்தானென்று குறித்தவாறாம். அக்காலத்தில் வழங்கிய பெருநாணயம் பொன் என்று அழைக்கப்பட் டமையால் அது பொன்னினாலாயது என்று கருதுதல் கூடும். குதிரை வாங்குதற்பொருட்டுப் பாண்டியன் திரு வாதவூரடிகளை யனுப்பினமையால், குதிரைகளின் இலக்கணத்தை அடிகள் பிறரினும் நன்கறிந்தவரென்பது தெளிவு. குதிரை வாங்கச் சென்ற அடிகளது பரிசனங்களுள் சீனர் மாளவர் மலாடர் முதலியவரிருந்தனரென்பதும் பிறவும் உயர்வு நவிற்சியின் பாற்படும். அடிகள் திருக்கோயிலிற் சென்று காரியம் பலித்தல் வேண்டு மென்று வேண்டியதாகவும், அப்பொழுது ஒரு சைவ வேதியன் திருவெண்ணீறளிப்ப அதனை வாங்கி உவப் புடன் அணிந்து காரியம் பலிக்குமென் றெண்ணின ரென வுந் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் இயம்புகின்றது. இது மக்களியற்கையொடு பொருந்திய புனைவுரையாகவு மிருத்தல் கூடும்.
திருப்பெருந்துறைப் பெயர்க் காரணத்தைக் கட் வுண்மாமுனிவர் ஓர் செய்யுளில் அழகாக விளக்கியுள்ளார்.
வெம்பிறவிவேலைதனில்வீழ்பவர்களெல்லாம்
நம்புசிவ நாமமெனு நற்புணை பிடித்தா
லெம்பர னருட்கரையி லேறுதுறை யாமா
லம்புவி மொழிந்துள்ள பெருந்துறை யதன் பேர்.
அடிகள் செல்லும் வழியிலுள்ள மரங் கொடி முதலியவைகளை மக்கள் போல உணர்ச்சியை யுடையவைகளா கவும், அவை எவ்வாறு அடிகள் அகக்கண்ணிற்குத் தோன்றின வெனவும் புனைந்துரைத்ததுந் தற்குறிப் பேற் றத்தின் பாற்படும். இறைவன் அருட்குரவனாய்த் திருக் கோயிலுள் ஒருபுறம் அமர்ந்திருந்தன ரென்று திரு வாலவாயுடையார்புராணம் கூறுதல் வரலாற்றிற் கொத்த தன்று. அடிகள் திருப்பெருந்துறையில் திருக்கோயி லெடுத்ததற்குமுன் ஆண்டுக் கோயிலிருந்ததாகத் தெரியவில்லை. அடிகள் திருப்பெருந்துறை படைந்ததும். நெஞ் சொடுங்கிப் பேரன்பு முகிழ்க்கப் பெற்றாரென்னுந் திரு வாலவாயுடையார் திருவிளையாடற்புராணப் பகுதியே பொருத்தமுடைதது. கண்ணப்பநாயனார் திருக்காளத்தி மலையில் ஏறியபோது தம்மேல் இருந்த பாரங் குறையுற்ற தாக உணர்ந்து ஒப்பற்ற அன்புருவமாயினாரென ஆசிரியர் சேக்கிழார் குறித்தமையை உற்று நோக்குக. ‘ பேணு தத்துவங்களென்னும் பெருகு சோபானம் ஏறி ஆணை யாம் சிவத்தைச் சாரவருபவர்போல’ என்ற துங் காண்க. அருட்குரவன் முன்னர் மந்திரியார் மேன்மையுடன் வந்து நின்றார் என்பதும், குரவன் திருக்கையிற் சிவஞான போ தம் இருந்ததென்பதும் அதனைப்பற்றி அடிகள் குரவனை வினாவினர் என்பதும் அனய பிறவும் பிற்காலத் துப் புனைவுரைகளா மென்று தெளிக. ஆசிரியர் மெய் கண்ட தேவனார் முன் அருணந்தி முதல்வர் அருளுப தேசம் பெற நின்ற முறையையே மனத்திற்கொண்டு கடவுண்மாமுனிவர் ‘ மந்திரியார் மேன்மையுடன் வந்து நின்றார்’ என்றனர். சிவஞானபோதமென்பது ஆசிரியர் மெய்கண்டா ரால், முதற்கண் – இயற்றப்பட்டதா தலின், சிவபெருமான் றிருக்கரத்திற் சிவஞானபோத மிருக்கக் காரணமில்லை. கடவுண்மாமுனிவர், சிவஞானபோதம், சிவஞானசித்தியார் முதலிய சைவசித்தாந்த நூல்களில் மிக்க தேர்ச்சியுடையராய், அவற்றுட்போந்த கருத்துக் களையும் அவற்றைப்பற்றிய சரித்திரங்களையுந் தமது புராண நூலுட் கலந்துள்ளன ரென்று தெளிக. .
எல்லாம் வல்ல முழுமுதற்கடவுளின் இயல்பை அக் கடவுளே வீடடையுந் தகுதியுடையார்க்கு அறிவுறுத்தி யருளினாலொழியச் சிற்றுயிர்கள் அதனையறிதல் கூடாது. உயிர்கள் மூவகைப்படுவர். உயிர்களைத் துன்புறுத்துவன், பெற்று, வினை, மயக்கம் என்பன. பற்றினான் மாத்திரங் கட்டுண்டவர் , பற்றினாலும் வினையினாலுங் கட்டுண்டவர்; பற்று வினை மயக்கமென்னு மூன்றினாலும், கட்டுண்டவர் என்னும் மூவகையாருள், முதல் வகுப்பார்க்கு இறை வன் தனதியல்பை உண்ணின் றுணர்த்துவ னென்றும், இரண்டாம் வகுப்பார்க்கு இறைவன் செய்வத் திரு மேனி கொண்டு ஆட்கொள்ளுவா னென்றும், மூன்றாம் வகுப்பார்க்கு மனிதவடிவத்தோடு வந்து மெய்யறிவுச் சுடர் கொளுத்துவானென்றுஞ் சைவ நூல்கள் கூறும். மாணிக்கவாசகப் பெருமானுக்குச் சிவபெருமான் மக்கட் போர்வை போர்த்தெழுந்தருளித் திருவடி ஞானம் நல் கினன். இனி மக்களும் திருவருள் பெற்ற பெரியாதை அதிட்டித்து நின்று இறைவன் குருமொழி வைத்த முண்டென்பது, ஆசிரியர் மெய்கண்டதேவர்க்குப் பரஞ் சோதிமாமுனிவர் சிவஞானமளித்தன ரென்ற வரலாற்றினாற் போதரும். இங்ஙனம் இறைவன் அருள்வது அள வற்ற பொருந்தவத்தால் வீடுபேற்றிற்குரிய தகுதியைப் பெற்றவர்க்கேயன்றி யேனையோர்க்கன்று. சைவ நூற் கொள்கைப்படி, படைப்புக்கடவுளும், காப்புக்கடவுளும் இறைவனது பேரருளைப் பெற்று வீடடைதற்குரிய பெருமையுற்றிலராதலின், அக்கடவுளரறியா முதலவர் சிவபெருமானென்று மறைகள் முழங்குவனவாயின். திருமாலாம் அவன் விருப்பெய்தவும் அலாவனாசைப் படவும் நின்னலர்ந்த மெயக்கருணையு நீயும் அவனியிற் புகுந்தெமையாட் கொள்ளவல்லாய்’ என்றும், ‘ அன் பாகி மற்றருந்தவ முயல்வார் அயனுமாலுமற் றழலுறு மெழுகாம் என்பராய் நினைவா ரெனைப்பலர் நிற்க, இங்கு ‘என்னை யெற்றினுக்காண்டாய் ‘ என்றும் அடிகள் மொழிந்தருளினமை காண்க. இறைவன் பயன் கருதிய அன்பர் நினைந்த வடிவோடு தோன்றி அவ்வவர் விரும்பு வனவற்றை யளித்தருள்வ னெனின் , வீட்டிற்குரியார்க் கன்றி யோனயோர்க்குத் தன் மெய்யியல்பினை உணர்த்த மாட்டா. னென்று தெளிக. இக்கருத்துப் பற்றியே, அடிகள் இறைவனை ‘ஒளிக்குஞ் சோரன்’ என்றார், ஆளுடையபிள்ளையாரும், ‘ உள்ளங் கவர்கள்வன் ‘ என்ற னர். தன்னுணர்ச்சி மிகுந்தார்க்கு மாத்திரம் அவன் ஒளிப்பானல்லன், அவனைத் தனது சூழ்ச்சி யொன்றாற் காண லுறுவார்க்கும், நாலுணர்ச்சியான் மட்டுந் தெரியக் கருதுவார்க்கும், உருவ வழிபாட்டு மாத்திரத்தாற் காண லுறுவார்க்கும் யோகநெறியாற் காணலுறுவார்க்கும் பிறர்க்கும் ஒளித்துத், தாழ்வெனுந் தன்மையுடையராய்ச் சார்பு, செயல் , ஒருமையென்னு நிலைகளைக் கடந்து திருவருள் பதியப் பெற்ற மேலோர்க்கே இறைவன் தன் மெய்ந்நிலை யுணர்த்துவானென்பார்,
திசைமுகன்சென்றுதேடினர்க்கொளித்தும்
முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்தும்
ஒற்றுமை கொண்டு நோக்கு முள்ளத்து
உற்றவர் வருந்த உறைப்பவர்க் கொளித்தும்
மறைத்திற நோக்கி வருந்தினர்க் கொளித்தும்
இத்தந் திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க்
கத்தந் திரத்தி னவ்வயி னொளித்தும்
ஆணெனத் தோன்றி யலியெனப் பெயர்ந்து
வாணுதற் பெண்ணென வொளித்துஞ் சேண்வயின்
ஐம்புலன் செல்விடுத் தருவரை தொறும்
போய்த் துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை
அருந்தவர் காட்சியுட் டிருந்த வொளித்தும்
ஒன்றுண் டில்லை யென்றறி வொளித்தும்
பண்டே பயிறொறு மின்றே பயிறொறும்
ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்
என்றருளினர்.
இறைவன் தாங் காண நேரில் வந்தருளியதை அடிகள்
தேவருமறியாச்சிவனேகாண்க
கண்ணா லியானுங் கண்டேன் காண்க
புவனியிற் சேவடி தீண்டினன் காண்க
சிவனென யானுந் தேறினன் காண்க
அவனெனை யாட்கொண் டருளினன் காண்க.
என்றமையா லினிது விளக்கியருளினர்.
கனவிலும்தேவர்க்கரியாய்போற்றி
நனவிலு நாயேற் கருளினை போற்றி
என்றமையால் இறைவன் கனவில் வந்திலனென்பது தெளிவு.
‘பாவனையான கருத்தினில் வந்த பராவமு தாகாதே’
என்றதுங் காண்க
அவன் மானுடச்சட்டை சர்த்தி வந்தமை
ஈறிலாதநீயெளியையாகிவந்
தொளி செய் மானுட மாக நோக்கியுங்
கீறி. லாதநெஞ் சுடைய நாயினேன்
என்றவிடத்து விளக்கப்பட்டது.
பத்தர் சூழப் பராபான் பாரில் வந்து பார்ப்பானென
என்றதுங் காண்க. திருப்பெருந்துறையி லாட்கொண் டமை பலவிடத்துஞ் சுட்டப்பட்டது.
போதலர்சோலைப்பெருந்துறையெம்
புண்ணியன் மண்ணிடை வந்திழிந்
தாதிப் பிரமம் வெளிப்படுத்த
அருளறிவாரெம் பிரானா வாரே.
இறைவன் பேராசிரியனாய் வந்தாட்கொண்டதை நயம்பெற ஒரு திருப்பாட்டிற் கூறியுள்ளார். அது வரு மாறு,
கருணையினாற்பெரியோனொருவன்
கண்டுகொ ளென்றுன்
பெய்கழ லடிகாட்டிப் பிரியே
னென்றென் றருளிய உருளும்
பொய்யோ வெங்கள் பெருமானே.
இறைவனுக்கே அடிகள் தமது உடல் பொருள் ஆவி மூன்றையு மொப்புவித்த இடத்துப் பாண்டியன் பொரு ளையு முடனளித்தது…. எவ்வாறு பொருந்துமெனின், பாண்டியன் பொருளையும் இறைவன் பொருளாகவே அடிகள் கருதினமையா லென்க. தன் கையகத்துப்பட்ட பொருளனைத்தையும் இறைவனதாகவே அடிகள் கருதி னர். இறைவன்பால் தன் பொருளின் ஒரு பகுதி ஒப்பு விக்கப்பட்டால், அவ்வளவு பொருட்குரிய பெருநலத்தைப் பாண்டிய மன்ன னெய்துவா னென்பதும் நாயனார் திருவுள்ளக் கிடையாயிருத்தல் கூடும். பொருளின் பயனைத் துய்த்தலுறுவார்க்குத் துணை நிற்பார், அப் பொருள் ஒன்று பலவாய்ப் பெருகி யோங்குதற்குரிய செவ்விய முறையில் அதனைச் சேமித்து வைப்பின், பொருளுடையாரால் அவர் பாராட்டப்படுதலே உலக வழக்கிற் காணப்படும். சேமமுறையின் பெருநலனை யுய்த்துணராதானே அவரை அறியாமைபற்றிக் குறை கூறுவன். அரசனுக்குப் பெருநண்பராய்த் திகழ்ந்த அமைச்சர் அவன் பொருட்டுப் பெருங் கிழமை பற்றிச் செய்த பெருான்மையின் வன்மையை அவன் முதற்கண் அறியாது சினங்கொண்டாலும், பின்னர் மெய்யுணர்ந்து மேன்மை புறுவானென்ற திண்ணிய கொள்கைபற்றி, ஆளுடைய அடிகள் அரசனது நீதியையுந் தமது அருட் குரவர்பா லொப்புவித்தன ரென்று கோடல் இழுக்காது. சிவஞானம் பெற்றுச் சித்தஞ் சிவமாகப்பெற்ற வாதவூரடி கட்கு உலகர்விதியும் விலக்கு மொவ்வா. அப்பெருந் தகையார் யாது செய்யினும், அது சிவச்செயலாய தவச் செயலா மென்பது ,
சித்தஞ்சிவமாக்கிச்செய்தனவேதவமாக்கு
மத்தன் கருணையினாற் றோணோக்க மாடாமோ
என்னும் அடிகளது திருவாக்காற் றெளிக.
இக்கருத்துப் பற்றியே சிவஞான சித்தியாருடை யாரும்.
ஞாலமதின்ஞானநிட்டையுடையோருக்கு
நன்மையொடு தீமையிலை நாடுவதொன் றில்லை
சீலமிலை தவமில்லை விரதமொடாச் சிரமச்
செயலில்லை தியானமிலை சித்தமல் மில்லை
கோலமிலை புலனில்லை. கரண மல்லை
குணமில்லை குறியில்லை. குலமு மில்லை
பாலருடன் உன்மத்தர் பிசாசர்குண மருவிப்
பாடலினே டாடலிவை பயின்றிடினும் பயில்வார்
என்றார்.
கடவுண் மாமுனிவர் இறைவன் ஞானோபதேசஞ். செய்த முறைமையைப் பிற்காலத்திலே நிருவாண தீக்கை செய்யு முறைமைக்கு ஒத்தவாறு கூறியுள்ளார். திரு வாலவாயுடையார் திருவிளையாடலில் இம்முறை கூறப் படவில்லை. திருநோக்கினாலும் நினைவாலும் தொடுத்த லாலும் மலமறுத்துப் பேரறிவு நலகினன் கான்ற அளவே அதனுள் கூறப்பட்டது. சிவபெருமான் வாதவூரடி களுக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படும் கருத்துக்கள் பலவும் நூலாசிரியர் கருத்துக்களே. ஞானம் பெற்ற வுடன் இறைவன் வாதவூரடிகளைப் பாடும்படி கட்டளை யிட்டதாகவும், அவர் சென்னிப்பந்து அச்சோப்பதிகம் என்பவற்றை அடிகள் பாடியதாகவும், பழைய திருவிளை யாடல் பகர்கின்றது. அது மெய்யாயிருத்தற்குரியதே. ஆனால் இப்பதிகங்கள் திருவாசகத்து முதற்கண் வைக்கப் படவில்லை. காலமுறைப்படி திருவாசகப் பதிகங்கள் தொகுக்கப்படவில்லை.
திருவாதவூரர் அளித்த நிதியைத் திருப்பணிக்கும் அருந்தவர்க்கும் அலந்தவர்க்கும் பயன் படுத்தும்படி இறைவன் வற்புறுத்தினர் என்றமையாலே, நல்லறத்திற் குந் தக்கார்க்கும் வறியாருக்குமே ஒருவனது பொருள் பயன்படற்பால தென்பது தெளியப்படும். ஏனையோருக் குப் பொருளை வழங்குதல் சிறந்த அறமாகாதென்பது தெளிசு,
கதைத் தொடர்பு
இறைவன் திருவாதவூரடிகளுக்கு அருள் புரிந்த பின்பு அடிகளுக்குத் தில்லையிற் பரமுத்தி யருளுவதாக மொழிந்து தமது அடியாரோடு மறைந்தருளினார் என்பது
நாயினேனைநலமலிதில்லையுட்
கோல மார்தரு பொதுவினில் வருகென
ஏல வென்னை இங்கொழித் தருளி
அன்றுடன் சென்ற அருள் பெறு மடியரை
ஒன்ற வொன்ற வடன் கலந் தருளியும்
என்றருளியவாற்றால் தெளியப்படும்.
திருப்பெருந்துறையில் இறைவன் கட்டளைப்படி பொருள்களைப் பயன்படுத்திய பின்னர், அடிகள். ஒப் பற்ற அன்பு வடிவமாய் உலகை மறந்து முத்தர் நிலையுற்ற னர். அவர் நிலையை உணர்த்தும் ஓர் செய்யுள் வருமாறு,
‘அன்புடனோக்கிநிற்பரழுவர்கைதொழுவர்வீழ்வ
ரின்பற வெழுவர் பின்பா லேகுவ ரிரங்கி மீள்வர்
நன்பகல் கங்குல் காணார் ஞான நல் லறிவே கொண்டு ,
கொன்புனை பித்தர் பாலர் பிசாசர் தங் கொள்கை யானார்.’
நின் கோயில் வாயிற் பிச்ச னாக்கினாய்.
என்றும் ,
பித்தென்னைஏற்றும்பிறப்பறுக்கும்பேச்சரிதாம்
மத்தமே யாக்கும் வந்(து) என்மனத்தே
என்றும் அருளிச்செய்தமையும் இதனை வற்புறுத்தும். தம்மைப் பித்தனென்று உலகர் கூறுவதற்குக் காரணம் அடிகளே விதந்துள்ளார்
பித்தனென்றெனையுலகவர்பகர்வதோர்
காரணமிது கேளீர்
ஒத்துச் சென்று தன் றிருவருட் கூடிடு
முபாயம தறியாமே
செத்துப் போயரு நரகிடை வீழ்வதற்
கொருப்படு கின்றேனை
அத்தனாண்டு தன் னடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.
திருவாதவூரடிகள் சிவபோகக் கொழுந் தேறல் வாய்மடுத்துப் பிறிதொன்றையுங் கருதாதிருந்த வளவிலே அவருடன் குதிரைவாங்கச் சென்றவர்கள் அவரை நோக்கிக் குதிரை வாங்கக் காலந் தாழ்த்ததைப்பற்றி அரசன் முனிதல் கூடுமென்று தெரிவித்து அவரைக் குதிரை வாங்குதற் கழைத்தபோது அடிகள் ‘ நீங்கள் யாதும் என்னிடங் கூறவேண்டாம் போங்கள் ‘ என்று கழறினர். உடனே அவர்கள் செய்வதறியாது தென்ன வன்பாற் சென்று திருவாதவூரடிகள் திருப்பெருந்துறை யில் ஓர் பூங்காவில் அடியார் புடைசூழ விருந்த பெரியார் ஒருவரால் ஆட்கொள்ளப்பட்டு அவர் கட்டளைப்படியே பொருளெல்லாவற்றையுஞ் செலவழித்து விட்டுத் திரு நீறுங் கோவணமுமே தரித்துக்கொண்டு ஒருவரோடும் பேசாது பித்தராயினாரென் றுரைத்தனர். இதனைக் கேட்ட மன்னன் பெருஞ்சினங் கொண்டு கடு – நடைத் தூதரிடம் அடிகட்கு ஒலையனுப்பி அவரைக் கையோ டழைத்து வரும்படி ஏவினன். ஏவலாளர் திருப்பெருந் துறைக்குப் போய் அடிகளைக் கண்டு வணங்கி அரசர் திரு முகத்தைக் காட்டினர். இறைவன் திருமுகத்தை யன்றிப் பிறிதொரு முகத்தையுங் காண விருப்பமில்லாத பேரன் பர் ஓலையை வாசிக்கும்படி கட்டளையிட்டனர். ஓலையில் எழுதியிருந்தது யாதெனில் பரிவாங்கக்கொண்டுபோய்ப் பொன்னைப் பிறிதொரு வழியிற் செலவழித்துவிட்டுப் பரி கொள்ளாது கோவணங் கொண்டிருப்பது அரசரது கருமஞ் செய்வார்க்கு அழகா? வேந்தனைப் பிழைத்துச் செய்யும் செயல் யாது பலிக்கும்? அரசரொடு பயிலுதல் பாம்பொடு பழகுவதைப் போலுமென்று நீர் தெரிந்திருப் பீராயின், இவ்வோலை கொண்டுவருந் தூதரோடு உடனே மதுரைக்கு வருக’ என்பதே. இதனைக்கேட்டு அடிகள் இறைவனும் இறைவனடியாருமே எம்மை அடிமை கொள்ள வல்லாரன்றி மன்னன் எம்மை : இவ்வாறு கொள்ளுதல் பொருந்துமோ? கூற்றுவனும் எம்பால் ஓலை விட அஞ்சுவன். இறைவன் தமராவார் அரசர்க் கஞ்சுவரோ என்று கூறிவிட்டுத் தமது அகக் கண்ணுக் குத் தோன்ற இறைவனிடம் இச்செய்தியை அறிவிப்ப, இறைவனும் அடிகளைக் கடைக்கணித்து நீ வருந்தாதே, மன்னவன் பால் தூதரொடு சென்று ஆவணித் திங்கள் மூல நாளன்று நல்ல குதிரைகளெல்லாம் வந்து சேரும், தூதர் ஓலை கொணர்ந்தமையால் நான் விரைந்து முன்னே வந்தேன் என்று நீ அரசனுக்கு மொழிக’ என்றருள் செய்தனர். அடிகளும் அமைச்சர் வேடம் பூண்டு இறை வனைத் தொழுது தூதரோடு புறப்பட்டு மதுரைப்பதி வந்தடைந்தனர்.
மன்னவன் முன் னேகி வணக்கத்துடன் இறைவன் தமக்குக் கொடுத்த ஒரு மாணிக்கத்தைக் கையுறையாகக் கொடுத்து அவன் கட்டளைக் கிணங்கித் தமதிருக்கையி விருந்தனர். அரசன் செய்தி வினாவியபோது நின்னுடைய நிதி கொண்டு வாங்கிய நல்லிலக்கண மமைந்த குதிரைகள் மதுரைக்கு வருதற்குரிய நல்லநாள் ஆவணி மூலமென்று தெரிந்து இடைவழியில் திருப்பெருந்துறை யில் தங்கினேன், சூழ்ச்சிமிக்க உள்ளத்தினர் சிலர் சொல்லக் கேட்டு நீ விடுத்த ஓலை ஏதுவாக நான் இப் பொழுது வந்தேன் என்றனர். அரசனும் மனமுவந்து ஓலை விடுத்தது பிழை என்றுணர்ந்து அடிகளோடு பழைய நண்பு பாராட்டி அவருக்கு வேண்டுவன நல்கி அவரை மனையிடைச் சென்றிருக்கும்படி பணித்தான். அவ்வாறே அடிகளும் தமதில்லம் புகுந்து விற்றிருக்குநாளில் குதிரை வரக் குறித்த நாளிற்கு இரண்டு நாள் முன்னர் அமைச்சர் களுள் ஒருவன் அரசனிடஞ் சென்று
பெருந்துறையில் நின் பொருளனைத்தையுஞ் செலவழித்து விட்டு இங்குவந்து உன்னுடைய சீற்றத்திற்குத் தப்பி உய்யக்கருதிப் பொய் கூறினர் என்றனன். அரசன் ஐய முற்றவனாய்ப் பெருந்துறைக்கு அருந்து தர்களை யனுப்பி அங்கே குதிரைகள் உளவா என்று பார்த்துவரும்படி சொன்னான். அவர்கள் போய்ப் பெருந்துறையிலும் அதன் பக்கத்திலுள்ள பிறபதிகளிலும் பரித்திரள் காணாது மீண்டு, வாதவூரர் மொழிந்தது பொய்யென் பதை உறுதிப்படுத்தினர்.. அதனைக்கேட்ட அரசன் வெகுண்டு தண்டலாளரை ஏவி அடிகளை வருத்திப் பொருள் முழுவதையும் வாங்கும்படி கட்டளையிட்டான். தண்டலாளர் அடிகள் பாற் சென்று அரசன் கருத்தைத் தெரிவிக்க அவர் வாளா விருந்தமையால், அவரைப் பிடித்துச் சிறைச்சாலையிலிட்டனர். அப்போது அப் பெருந்தகையாரது வருத்தக்கைக் காணப் பொறுக்காத வன்போலக் கதிரவன் மேலைக்கடலில் ஆழ்ந்தனன். அர சன்மேற் சினங்கொண்டு அவனை விழுங்கும் பொருட்டு வெண்பிறையாகிய வளை பல்தோன்ற வாய்திறந்த பேயின் கொள்ளிவாய்போலச் செவ்வானம் விளங்கிற்று.
நல்லவர்க்குற்ற தீங்கைக்கண்டு நகையாடுஞ் சிறியர்போல முல்லைகள் மலர்ந்தன. அதனைக் கண்டு வருந்தும் நல்லவர் உள்ளம்போலக் கமலங்கள் குவிந்தன. தெய்வத் தன்மை வாய்ந்த திருவாதவூரடிகளது துயரத்தைப் பிறர் கண்டு வருந்தலாகாதென்று இரவாகிய நங்கை தனது இருட்கரத்தால் மக்கள் கண்களை மறைத்தனள். மந்திரித் தலைவருக்கும் இவ்வாறு மன்னன் பகைவிளைத்தல் கூடுமோவென்று வருந்திக் காதலரை அகன்றுறையும் மடவார்போல, நன் மக்கள் பலர் துயிலொழிந்தனர். அவ்விரவு கழிந்து விடியற்காலம் வருங்காலை அடிகள் இடரும் நிலையை ஆறுமுகக் கடவுளுக்கு உரைப்பது போலக் கோழிகள் கூவின. திருக்கோயில்களில் இறைவன்பால் முறையிடுவதுபோலச் சங்குகள் முழங்கின. மறுநாளும் அரசன் பொருளை மீண்டளிக்காமையால் அடிகளைக் காவலாளர் வெயிலில் நிறுத்தினார்கள். அப்போது அவர் இறைவனை நோக்கி வாழாப்பத்து அருட்பத்து என்னுந் திருப்பதிகங்களைப் பாடினா ரென்று திருவிளையாடற் புரா ணங் கூறுகின்றது.
பாரொடு விண்ணாய்ப் பாந்த வெம்பானே
பற்று நான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத் தாசே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாரொடு நோகேனார்க்கெடுத் துரைக்கேன்
ஆண்ட நீ அருளிலை யானால்
வார்கட லுலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகவென் றருள் புரி யாயே.
அடைக்கலப்பத்தும் குழைத்தபத்தும் அக்காலத்திலேயே அருளிச்செய்யப்பட்டன என்ப. திருவாதவூரடிகளது முறையீட்டினைக் கேட்ட இறைவன் நரிகள் பலவற்றை நற்குதிரைகளாக மாற்றி இமையவர் பலரையுங் குதிரைத் தலைவராகக்கொண்டு தாம் ஆரியவணிக வேடம் பூண்டு திருப்பெருந்துறையி னின்று புறப்பட்டுத் திருவாதவூர் வழியாகவந்து அடிகட்குப் பாதச் சிலம்பொலி காட்டி விட்டு இவுளித் திரள்களைக் கூடன்மா நகரத்திற்குச் செலுத்தி வந்தனர். குதிரையின்றிரள் வருவதைக் கண்ட வர்கள் அரசனுக்கு அதனைத் தெரிவிப்ப அரசன் மகிழ்ச்சி மிக்கவனாய் அடிகளை அச் சிறை நீக்கிக் குதிரைகாண வரும்படி அழைத்துக் குதிரைப்படை உலாவுதற்குரிய செண்டுவெளி என்னும் நிலப்பரப்பின் பாங்கர் ஓர் முத்துப் பந்தரின் கீழ் படைசூழ அரசன் வீற்றிருந்தான். அப் போது பரித்திரளானது எங்கணுந் துகளெழுந்து பரவ, எக்காளம் முழவம் முதலியன ஒலிப்ப, கடல் பொங்கி வருவதுபோல ஆவணி மூலத்தன்று மதுரையில் வந்து நிறைந்தது. அக்குதிரைப் பெருஞ்சாத்தின் தலைவராகிய சிவபெருமான் அரைக்கச்சில் உடைவாளை ஆர்த்துப் பச்சைநீலம் முதலிய பன்னிறமணி பட்டுஞ் சட்டையுந் தொப்பியுமணிந்து கையிற்கொண்ட செண்டொடு ஒருவெண் குதிரையிலேறித் திருவடியிற் கட்டிய மணியும் அரைக்கச்சையிற் கட்டியமணியுங் குதிரையின் இருபக்கங்களிலுந் தொங்கவிட்ட மணிகளும் இன்னிசை ஒலிப்பச் சென்னிமேற் கவித்த செழுங்குடை வயங்க, ஆரிய மன்னன் வருவதுபோல் வந்தருளினர். மன்னவன் இறைவர் திருக்கோலங்கண்டு பெருவியப் புற்றனன். மணிவாசகப் பெருமான் இறைவன் திரு வருளை வியந்தனர். மன்னன் முனிவரை அழைத்து; ஆரியத்தலைவரை, கொண்டுவந்த குதிரைகளின் வகை களையும் அவற்றின் வன்மைகளையும் ஒரு வீதியின் கண் குதிரை ஏற்றஞ் செய்துகாட்டும் வண்ணங் கேட்டருள்க என்றனன். அடிகளும் இறைவனுக்கு வேலை கொடுப் பதைப்பற்றி நினைந்து வருந்தினாலுந் தமது வருத்தத்தை வெளிக்குக் காட்டாது அரசன் கருத்தினை இறைவருக்குத் தெரிவித்தனர். அதற்கு வணிகத்தலைவர் இசைந்து பல் வகைப்பட்ட குதிரை ஏற்றங்களை எல்லாம் இனிதாக ஏறிக் காட்டித தாளத்திற் கேற்றபடி நடனஞ் செய்யுங் குதிரை ஒன்றின் மீதேறி அரசனுக்கு எதிர்வந்து நின்றார்..
அரசன் விலைமதித்தற்கு அரியதொரு பொன்னாடையைக் குதிரைத் தலைவருக்குக் கொடுக்க, அவர் அதைத் தமது சவுக்கின் மீது ஏற்றுப் புன்னகைசெய்தனர். அவர் குதிரையினிழிந்து வந்து பணிவொடுவாங்கித் தலையிற் கட்டிக்கொள்ள வில்லை யென்று அரசன் வெகுண்ட போது அங்ஙனம் பரிசினை ஏற்றுக்கொள்ளுதல் ஆரிய நாட்டு வழக்கமென்றுகூறி அடிகள் அரசனின் சினந்தணி வித்தார். பின்னர்க் குதிரை நூல் வல்லாரை அழைத்து, வந்த குதிரைகளின் இலக்கணத்தை அரசன் ஆயத் தொடங்கினான். குதிரை நூல் வல்லவர்கள் கெடுதியைக் காட்டும் எண்வகைச் சுழிகளுங் கொம்பு போல நீண்ட செவிகளும் முறுகிய செவிகளும் ஒருகாற் கறுப்பும் முக் கால் வெளுப்பும் நீலகண்டமும் வித்தின்மையும் முகம் வால் கால் இவைகளிற் சுழியின்மையும் ஆகிய குற்றங்களின்றி, தலையில் இரண்டு நல்ல சுழிகளும் கொப்புளில் நான்கு சுழிகளும் மார்பில் இரண்டு சுழிகளும் நெற்றியில் ஒழி சுழியும் உதட்டில் ஒரு சுழியும் உடையனவாய், நரி கரி கருங்காகம் நாய் பன்றி முதலிய குரல் இல்லா தன வாய்க் கடல் முகில் சங்கு காளை முழவு இவற்றின் ஒலிகளை யுடையனவாய், புலி கரடி கழுதை செந்நாய் முதலியவற்றின் நிறம்பொருந்தாது, முத்து திங்கள் நீலமணி தாமரைத்தாது பொன் காயாம்பூ செவ்வரத்தமலர் பசுங் கிளி முதலியவற்றின் நிறத்தையுடையனவாய், அகன்ற நெற்றியும் உயர்ந்த மேலுதடும் ஒத்து விளங்கும் வெண் பற்களும் நறுமணமுங் காற்றினுங் கடிய வேகமும் உடையனவாய் , உள் வளைந்து முக்கோணம் போல் விளங்கும் முகத்தையுடையனவாய், உடம்பின் கண் தசைப்பற்று மிகுதியுமில்லாதனவாய், ஒரே நிறமான தலைமயிரும் பிடரிமயிரும் உடையனவாய், குவிந்து உட்சுழிந்த குளம்புகள் உடையனவாய் , நெளித்த முதுகும் திரண்ட தொடைகளும் நீண்டவாலும் நெய்த்த உடம்பும் உடை யனவாய், உயர்ந்த எமுவகைக் குலத்தினவாய், பஞ்ச கல்யாணி, மங்காளன், சாரங்கன் முதலிய பதினைந்து வகுப்பினுட்பட்டனவாய் ஆரியத்தலைவர் கொணர்ந்த குதிரைகள் திகழ்கின்றன வென்று கூறிய பின்னர், அவற் றின் விலையை மதித்து அவை தாங்கொடுத்த பொருளினும் எண்மடங்கு விலை மதிப்புடையன என்று தெரிந்து மன்னன் மிகுந்த மகிழ்ச்சியடைந்து குதிரைத் தலைவரைக் கயிறுமாறிக் கொடுக்கும்படி கேட்டனன். கயிறு மாறிக் கொடுத்தவுடன் குதிரைகளெல்லாம் பாண்டியனது குதிரைப்பந்தியிற் சேர்க்கப்பட்டன. குதிரைத் தலைவரும் இனியாதுங் குறை கூறுதல் கூடாதெனப் பாண்டியனிடம் மொழிந்துவிட்டுக் கீழ்த்திசை நோக்கிச் சென்றனர். அரசனும் வாதவூரடிகளைப் போற்றி மனைக்கேகும்படி விடைகொடுத்துத் தானும் அரண்மனை சேர்ந்தனன். இரவு வந்தபின் குதிரைகளெல்லாம் பெருங் கூச்ச லுடைய நரிகளாய் மாறி மதுரைப் பதியிலுள்ளார்க்குத் தூக்கத்தைக் கெடுத்து இருந்த பழைய குதிரைகளையுங் கொன்று மண்டபங்கள் கோபுரங்கள் அரசவீதி கடை வீதி முதலிய இடங்களெல்லாந் திரிந்து கூக்குரல் எழுப் பின. நரிக்கூட்டம் வந்த குதிரைக் கூட்டத்திலும் அதிகமாகப் பெருகிற்று. அரசனது படைவீரர் தக்க ஆயுதங் களுடன் நரிகளை எதிர்த்தபோது அவைகள் சிங்கம் போலப் போர் செய்யத் தொடங்கின. மதுரையூரிலுள் ளாரெல்லாரும் நரிகளை ஒட்டுவாரும், அவற்றிற்காகப் பயந்து ஒளிப்பாரும், ஒளிக்குமிடந் தேடுவாரும், வீட்டுக் கதவுகளைத் தாழிட்டு அடைத்துத் தம்மைக் காத்துக் கொள்வாரும் ஆயினர். இங்ஙனம் பரிநரியாயதற் கேது நாட்டில் தவக்குறைவு ஏற்பட்டதனாலோ, மன்னவன் செங்கோல் மாறியதாலோ என்று மக்களெல்லாரும் பேசத் தொடங்கினர். குதிரைத் தொழிலாளர் வாயிலாக அரசன் பரி நரியான செய்தி கேட்டனன். குடிகளது ஆரவாரமும் குறு நரிகளின் ஓசையும் அரசன் செவி களிற் காய்ச்சிய வேல்போல நுழைந்து துன்புறுத்தின. அரசன் அளவற்ற சீற்றமுற்றான். ஆலவாய்ப் பெரு மான் கட்டளையால் நரிப்படைகள் ஊரைவிட் டோடின. அரசன் தனக்குக் கண்போன்ற தண்டலாளரை அழைத்து அடிகளை உடனே தன் முன் கொணரும்படி ஏவினன். அடிகள் பாற் சென்று அவரை அவர்கள் அழைத்தகாலை, அவர் புன்முறுவல் செய்து திருநீறணிந்து புறப்பட்டு அரசன் முன்வந்து நின்றார். அரசன் அவரைக் கண்டு பொங்கிய சினமுடையவனாய் எனை அமைச்சரைப் பார்த்து ‘நம்முடைய பொருள்களை எல்லாம் இவர் இரவலர்க்குக் கொடுத்துவிட்டுக் காட்டிலுள்ள நரிகளை யெல் லாம் பரிகளாக்கிக் காட்டின மாயத்தைக் கண்டீரா’ என்றனன். பின்னர்த் தண்டலாளரைநோக்கி இவரைக் கொண்டு நல்ல வெயிலிலே ஒரு வளைப்பினுள் நிறுத்தி இவர் கவர்ந்த பொருள்களை யெல்லாம் வாங்குங்கள்’ என்றான். அங்ஙனமே அவர்கள் வைகை ஆற்று மண லிலே அடிகளை நிறுத்தித் துன்புறுத்தினார்கள். அப் போது அவர் எண்ணப்பதிகம் பாடியருளினர். இறைவன் மிகக் கருணை கூர்ந்து , வைகையாற்றிற் பெருவெள்ளம் வரும்படி செய்தனன். வைகையாறானது இருகரையும் பெருக்கெடுத்துக் கடல்போலப் பெருகியோடிற்று. வெண்முத்தென்னும் பற்களைக் காட்டி, வெண்புனலாகிய ஆடையணிந்து, செங்காந்தளாகிய கைகளை வீசி, தெங்கின் குரும்பைகளாகிய தனங்களை இடை இடையே காட்டி, மாந்தளிராகிய கால்களின் மீது திரைகளாகிய சிலம்புகளொலிக்கப் பெருமித நடைகொள்ளும் பொது மகளிரை பொத்தது. பெரிய கொம்புகள் போன்ற அலை களினாலே இருகரைகளையுங் குத்திச் செறிந்துநின்ற மரங் களை முறித்து, வயல்களிலுள்ள நெல்லையெல்லாம் அழித்து, நுரைத்திரள் சிந்திக்கொண்டு வண்டுகள் மொய்க்க வருதலால், வைகை நதியானது மதயானையை நிகர்த்தது. வைகையாறானது வரம்பு கடந்து மதுரை மூதூரின் மதில்களைத் தாக்கி அந்நகரை யழிப்பது போன்று பெருகி வந்ததை யாவருங் கண்டு கவலைகொண் டார்கள். அப்போது அரசனும் அச்சுற்று அமைச்சரை நோக்கி ‘இப்பெருக்கிற் கேது நீதிக்குறைவோ’வென்று வினாவியகாலை ‘அரனடிப்பேரன்பராகிய வாதவூரடிகளை வருத்திய குற்றமே இதற்குக் காரணம் போலும்’ என்றார் கள். அவனும் அவ்வாறே நினைந்து வாதவூரடிகளை அழைப்பித்து ‘ நீர் செய்த பேரறத்தின் பயன் என்னைச் சாரும் என்றுணராது உம்மை யொறுத்தது எனது பெருந்தவறே; அதனை நீர் பொறுத்துக்கொண்டு வைகை யானது நம்மூரை யழிக்கா தவண்ணம் நீரே அதனை அடக்கவேண்டு மென்று குறையிரந்தான். அவர் பரி மேல்வந்த பெருமானார் திருவடிகளை நினைந்தவுடன் வைகைப் பெருக்கானது குறைந்து அடங்கிச் சென்றது. வைகைக் கரையிற் சென்று அடிகள் நின்றவுடன் அரசனது அமைச்சர் பலர் அவரை வணங்கி இனி யாது செய்யவேண்டு மென்றார்கள், அப்போது அடிகள் உடைந்த கரையை விரைவில் நகரமாந்தர் எல்லாருங் கூடிச் செம்மைப்படுத்த வேண்டுமென்றனர். உடனே அவர்கள் நகரெங்கும் பறையறைவித்தனர். நகரத்தில் வதிவார் மண்வெட்டியுங் கூடையுங்கொண்டு விரைவில் வைகைக்கரைக்கு ஓடினர். ஒவ்வொருவரும் அடைக்க வேண்டிய பகுதியைப் பிரித்துக் கொடுத்துக் கரையினை அடைப்பித்தபோது, பிட்டு விற்றுப் பிழைக்குஞ் செம் மனச் செல்வி என்னும் நரைமூதாட்டி அடைக்க வேண் டியபகுதி அடைபடாதிருந்தமை கண்டு காவலாளர் அவள் பாற்சென்று அவளைத் துன்புறுத்தினர். பிட்டினைக் கூலியாக வாங்கிக்கொண்டு அவளுக்காகக் கரை அடைப்பாரில்லாமையால், அவள் திருவாலவாய் அண் ணலைத்தொழுது தனது வறுமையையுந் துணைசெய்வாரின் மையையும் எடுத்துரைத்துக் குறையிரந்தனள்.
“தாயமிலை தந்தையிலை தமருமிலை தமியேனைப்
பேயினுட னின்றாலும் பிரித்தறிய வொண்ணாது
தீயதென திலம்பாடென் சிந்தையில்வெந் துயர் தீர
நீயருளா தொழியினுயிர் நீப்பேன்மற் றென்செய்வேன்.”
என்றவுடன் அவள் பாற் கருணை கூர்ந்த இறைவன் அவளது வேண்டுகோட் கிணங்கிக் கந்தையுடுத்துத் தோள் மேல் மண்வெட்டி தொங்கவிட்டு மண்கூடை யைத் தலைமேற் கொண்டு, பெரும் பசியுடைய வேலை யாளர்போல வடிவுகொண்டு பிட்டு வாணிச்சி கண்முன் வந்து, ‘என்னை ஏவல்கொள்வாருண்டோ’ என்று உசாவினர். அப்போது பிட்டு வாணிச்சி கவலை தீர்ந்து அவரை நோக்கி ‘மகனே நீ எனக்குக் கூலியாளாய் வரக்கடவை’ என்றனள். அதற்கு அவர் ‘முற்கூலி தருவாயாயின் வருவேன்’ என்றனர். அப்போது அவள் ‘நீ உண்ணும்படி இனிய பிட்டைக் கூலியாகத் தருவேன்; அது வேண்டா மென்றால் இப்பிட்டைவிற்று மாலைப்பொழுதில் உனக்குக் கூலி தருவேன்’ என்றனள். அதற்கவர், ‘மிகுந்த பசி யுடையேனாதலால் இப்பொழுது பிட்டையளிப்பாயாகில் உன் பகுதியை நன்றாக அடைப்பேன்’ என்றவுடன் பிட்டு மூடிய கருந்துணியில் உதிர்ந்ததை யள்ளி இதோ இதனை வாங்கிக்கொள்வாய் என்றனள். அவர் அதனை வாங்கி உண்டு பசி தீர்ந்ததாகக் கூறி, ‘இது நன்று, இன்னும்
வேண்டு மென்று கேட்டுத் தனது துணி நிறையப்பிட்டு வாங்கிக்கொண்டு அம்மையுடன் வைகைக் கரைக்குச் சென்று, அவள் தன் பகுதியைக் காட்டக் கண்டு அதனை அடைக்கத் தொடங்கினர். வேலை செய்வதற் கிடையிடையே உடம்பிளைத்தவர்போலப் பிட்டினைச் சிறிது சிறிது எடுத்துச் சுவை பார்த்துப் பிட்டு நன்று நன்றென்றுகூறிக் கூடையைச் சென்னி மேற்கொண்டு கூத்தாடிக் காலங்கழிப்பதைக் கண்ட செம்மனச் செல்வி, அரசன் தூதர் இதனைக் கண்டால் துன்புறுத் துவரே..என்று நினைந்தாள். அப்போது அவர் அவளைப் பார்த்து, அன்னையே, “இக்கரையை இப்பொழுதே விரைவி லடைப்பேன் ; இதைப்பற்றி நீ வருந்தாதே; வீட்டிற்குப்போ’ என்னவும், அவளும் அவ்வாறே வீட் டிற்குச் சென்றனள்.. அவள் சென்றபின் மண்கூடையைத் தலையணையாக வைத்துக் கொன்றை மரநிழலில் நிறைந்த மணலின் மேல் வேலை செய்திளைத்தவர் போல வள்ளலார் பள்ளி கொண்டார். அப்போது அரசன், குடிகள் கரை அடைத்ததைக் கண்டறிவதற்காக அமைச்சரோடு கரை வழியாகச் சென்றகாலை, பிட்டு வாணிச்சிக்கென வகுத்த பகுதி நன் கடைபடாதிருப்பது கண்டு இது யார் பங்கென்று. அரசன் வினவ, அங்குள்ளார் அவனை நோக்கிப் பிட்டு வாணிச்சி யொருத்திக்காக வந்த கூலியாளனொருவன் ஒழுங்காக வேலை பாராது ‘மண்ணை வெட்டிக்கூடையிலிட்டு எப்படித் தனித்தெடுப்ப தென்று. மனம் வருந்திச் சிறிது வாளா நிற்பன்; பின்பு தலைமீது கூடை எடுத்து வைத்துக் கொட்டப்படும் இடத் தில் அதனைக் கொட்டாமல் வேறிடத்திற் சிந்துவன்; இஃ ‘தென்ன! திசை மயக்கமாயிற்றென்று சொரிந்துவிட்டு மிக இளைத்தவன் போல நெடுநேரம் நிற்பான்; ஓடுவான்; ஓடி மீண்டுவந்து ஒரு கைமண் கரையில் போடுவான்; போ வென்றால் வருவான்; வாவென்றால் போவான்; பிட்டினைத் தின்று விட்டு அது மிக நன்றென்று கையைக் கொட்டுவான்; தோற்றத்தால் அரசிளங் குமரனொப்பான்; அவன் அந்தக் கொன்றை மரநிழலில் தூங்குகின்றான்; யார் சொல்லையுங் கேளான்; அவனைப் பாருங்கள்’ என் றனர்.
அரசன் அவனை இங்கே கொணர்மின் என வேலையாளரை ஏவினன்.. அவன் போய்ப் பெருமானை எழுப் பிய வளவில், அவர் திடீரென விழித்தெழுந்து அச்சங் கொண்டு நின்றதும், காவலாளனொருவன் அவரை வலிந்து பிடித்திழுத்து அரசன் முன் கொண்டுவந்து நிறுத்தினன்: அரசன் அவரைப் பிரம்பாலடித்தனன். அங்ஙனமடித்த போது அவ்வடி படைக்கப்பட்ட யாவர்மேலும் பட்டது.
” தார்மேனின் றிலங்குபுய வழுதி மேலுந்
தன்மனைமங் கையர்மேலு மமைச்சர் மேலும்
ஆர்மேலுஞ் சென்று பெருஞ் சேனை மேலுந்
அயன்மேலு மரிமேலு மறவோர் மேலுந்
தேர்மேல்வெம் பகன்மேலு மதியின் மேலுஞ்
சிறந்துளவிந் திரன் மேலுந் தேவர் மேலும்
பார்மேலுங் கடன்மேலு மரங்கண் மேலும்
பட்டதரன் மெய்யிலடி பட்ட போதில்.”
உடனே யாவரும். வியப்புற்று வருந்தும் ஏல்வையில்,
கொத்தாளாய் வந்த இறைவன் மறைந்தருளினன்.
இறைவனே, இங்ஙனந் திருமேனி கொண்டு வந்தர னென்று நினைந்து மிக நொந்தனர். இறைவன் அடியவர்க்கு எளிவந்து அருள் செய்யும் பெருங்கருணையை வியந்து அரசன் அச்சமும் வருத்தமும் நாணமும் உற்று, கடவுளின் பெருங்கருணையை வியந்து நின்றனன். மன்னவன் அடிகளை வணங்கி, ‘இறைவன் பெருமையும் பேரன் பர் பெருமையு முணராது சிறுமையேன் கொடுமை செய்தேன். தமியேனது எவ்வகைப் பிழையையும் நீர் பொறுத்தருளல் வேண்டும். நான் உமக்குப் பணிவிடை செய்தொழுக நீரே இந்நாட்டினை ஆட்சிசெய், தருளல் வேண்டும்’ என்று வேண்டினன், திருவாதவூரடிகள் அதற்கியையாது, அரசனை நோக்கிப் பெருந்துறைக்குச் செல்லும்படி என்னை விடுப்பதே எனக்கு இவ்வுலகை அளிப்பதாகும் என்றனர். தென்னவன் அரனன்பர்க்கு அரசவாழ்வில் அவாவிராதென்றுணர்ந்து அடிகளது பூங் கழல்களை வணங்கி, ‘ஐயா, நீவிர் திருவுள்ளங் கருதியவாறு செய்க’ என்று பணிந்து விடைபெற்றுத் தனது அரண் மனைக் கேகினன். அடிகள் அமைச்சர் வேடந்துறந்து நற்றவக் கோலங்கொண்டு ஆலவா யண்ணலை இறஞ்சிக் கூடலம்பதியை நீங்கித் திருப்பெருந்துறைக்கு விரைந்து சென்றனர். .
இறைவன் திருவருள் புரிந்து மறைந்தவுடன் பிரிவாற் றாமையினால் அடிகள் வருந்தின ராதலின், அவர் பரமுத்தி விருப்பால் அழுதிருத்தல் கூடும். உடனே தமது உடம்பை மாய்த்துக் கொள்ளலாமெனினும் அதுவும் இறைவன் உடைமையாதலால், அதனை அழிப்பதற்குத் தமக்கு உரிமை இல்லை என்று அடிகள் கருதியதாகப் பரஞ் சோதி முனிவர் தமது திருவிளையாடலிற் கூறிப் போந்தனர்..
“வஞ்சவினைச் கொள்கலனா முடலைத் தீவாய்
மடுக்கிலேன் வரையருண்டு மாய்ப்பே னல்லேன்
நஞ்சொழுகு வாளாலுங் குறைப்பே னல்லே
னாதனே யதுவுநின துடைமை யென்றே
அஞ்சினேன் றானேயு மழியா தாவி
யையனே நினைப்பிரிந்து மாற்ற கில்லேன்
என் செய்கோ வெந்தாயோ வெந்தா யோவென்
றிரங்கினார் புரண்டழுதா ரினைய சொல்வார்”
‘ சிவமாநகர் குறுகப் போனா ரடியார்
யானும் பொய்யும் புறமே போந்தோமே.”
“அழுதாலுன்னைப் பெறலாமே”
“அழுமதுவே யன்றிமற் றென்செய்கேன்”
“அழுகேனின்பா லன்பா மனமாய்”
“தீயில் வீழ்கிலேன் திண்வரை யுருள்கிலேன் ”
“நெருப்புமுண்டு யானுமுண்டு”
“செடீசே ருடல பிது நீக்க மாட்டேன்”
முதலிய திருவாக்குக்கள் மேற்கூறிய கருத்தை வற்புறுத் துவன. இறைவனது ஒப்பற்ற பெருமையையுஞ் சிறுமை யையும் நினைந்து இறைவன் எளிவந்தருளிய பெருங் கருணை த்திறத்தினை உணருங்கால் நன்றியறிவின் மிகுதி யாற் கண்ணீர் வருதல் இயல்பு என்பது,
”என்னையாண் டாய்க்கு
உள்ளந்தா ணின்று ச்சி யளவு நெஞ்சா
யுருகா தால் உடம்பெல்லாங் கண்ணா யண்ணா
வெள்ளந்தான் பாயாதால் “
என்று குறித்தருளினமையா லினிது விளங்கும்.
‘உன் விரையார் கழற்கென்
கைதான றலைவைத்துக் கண்ணீர் ததும்பி’
என்றதுமது. பேரானந்தங் காரணமாகக் கண்ணீர் ததும்பு மென்பது “கண்களி கூர நுண்துளியரும்ப” என்ற வாக் காற் புலனாம். அழுவது போலச் சிரிப்பதும் சிவஞானிக ளியல்பென்பது.
” சிரிப்பார் களிப்பார் தேனிப்பார்
திரண்டு திரண்டுன் றிருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார்”
என்றவிடத்துக் கூறப்பட்டது. பேரன்பர் சிரிப்பதற்கும் அழுவதற்கும் காரணத்தைப் பிறர் அறிய மாட்டாராத லின், பிறர்க்கு அவர் பித்தர் பாலர் பிசாசர்போலத் தோன் றுவர். அவர்கள் இறைவன் பால் பித்துடையரா யுங் களங்க மற்றவர்களாயும் நிலையாப்பொருள்களில் விருப் பிலராயு மிருப்பராகலின் அவரைப் பித்தர் பாலர் பிசாசருக்கு ஒப்பாவ ரென்பர். இறைவனைச் சிவஞானிகள் சுட்டற உணர்ந்து இன்புறுவா ராகலின் சுட்டுணர்வுக் கேதுவாகிய கால எல்லை அவரது கருத்திற் படாதென் பார்’, ‘நண்பகல் கங்குல் காணார்’ என்றனர்.
” இராப்பக லற்ற விடத்சே யிருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகார் ”
என்றது மது. சிவமாந்தன்மை யெய்திய அன்பர். தன் னுணர்வினை இழந்தாராகலின், தமது பரிசனங்கள் குதிரை வாங்குதலைப்பற்றிக் கூறிய எதற்கும் அவர் செவிசாய்த் திலர். ஆதலின், அவர் பித்தராயின ரென்று அன்னோர் கருதினர். அவர் பித்தராயினரென்று கேட்ட மன்னன் அவரது மெய்ந்நிலையை ஆயக் கருதுமதுகையின்றிப் போர்புரிதற்குக் குதிரை வாங்குந் தன் னோக்கத்தையே பெரிதாகக் கருதி, அதற்கு அடிகள் இடையூறு இழைத் தனர் என்று. வருந்தினன். இடம் பொருள் ஏவலுடைய ராய் வாழ் வெனு மையலிற் பட்டு உலகநெறி செல்வார்க் குக் கடவுள் நிலையின் தன்மை ஒரு சிறிதும் புலப்படாது. ‘பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்’ என்றபடி உலக பாசமானது மெயப்பரம் பொருளையும் மெய்யன்பர் பெருமையையும் மறைத்து விடும் என்பது அரசன் செய் கையாற் றெளியப்படும். முதலமைச்சர் அரசனது நிதி யைத் தமக் கெடுத்துக்கொள்ள வில்லை. அவர் அமைச்சர். வேடத்தையும் அதிகாரத்தையும் அறவே விட்டுச் சிவனன் பின் தனி வடிவாய்ப் பித்தர் போலாயினர் என்று கேள் விப்படினும் பெருந்துறையிற் புகும்வரை யாதொரு குற்ற முமின்றிச் செவ்விதிற் கடமை யாற்றிய அடிகளின் நிலையை அரசன் வியப்புற்று ஆராய்ச்சி செய்யாமை, அவனது கழி பெரும் பொருட்பற்றினை யே வற்புறுத்துவ தாகும்.
அத்தகைய மன்னனைச் சிவபத்தியிற் சிறந்த வர குணன் என்று கூறுதல் தவறென்பது தெளிவு, அடிகளை அமைச்சராகப் பெற்ற பாண்டியன் வெகுட்சியுற்றதற்கு அவனது நல்வினையே காரண மென்றலும் ஒன்று. அவன் எவ்வாற்றானுங் குதிரை வேண்டுமென்று வற்புறுத்தியது இறைவன் நரி பரியாக்கிய திருவிளையாடல் நிகழ்த்துவதற்கு இடமாயிற்று, திருவாதவூரடிகளை வருத்தினமையினாலேயே இறைவன் மண்சுமத்தல் முதலிய திருவிளையாடல் களியற்றித் திருவா தவூரடிகள் பெருமையைப் பாண்டிய மன்னருக்கும் பிறருக்கும் விளக்கியருளினன். கதிரவன் உதிக்கு முன்னுள்ள குமரி யிருட்டுப்போலப் பாண்டிய மன்னன் நல்லறிவு விளங்குவதற்குமுன் அறியாமை வயப் பட்டன னெனினும், அவன் ஆட்கொள்ளப்பட்டா னென் பது..
‘ மதுரையர் மன்னன் மறுபிறப் போட மறித் திடுமே‘
‘ ஈண்டிய மாயா விருள்கெட எப்பொருளும் விளங்கத்
தூண்டிய சோதியை மீனவ னுஞ்சொல்ல வல்லனல்லன்’
என்றமையாற் றெளிக. உலக நலத்தின் பொருட்டு இறை வன் பரிமேற் கொண்டானென்பது ‘பாரின்ப வெள்ளங் கொளப் பரிமேற் கொண்ட பாண்டியனார்’ என்றதின் வைத்துணர்க.
மன்னன் அனுப்பிய ஒலையை அடிகள் தாம் பார்த் திலராயினும், அதனைக் கேட்க முயன்றதும் திருவருள் வழி நின்று ஊழ்வினைப் பயன் நுகர்தற்பொருட்டே என்க. அடிகள் ஞானநிட்டையி லிருந்தகாலை அவருடன் கூடவந்த பரிசனங்கள் அவரை நெருங்கினமையால் அவர் களை அறவே அகற்றினரென்றும், இடையீடுள்ள காலத்தே அரசன் தூதுவர் சென்றாராதலின் அரசன் ஒலைக்கு அடிகள் செவிசாய்க்க நேர்ந்ததென்றுங் கூறுப. இறை வனது திருவிளையாடல்கள் அடிகள் வாயிலாக உலகில் நிகழ்தற்குரிய பான்மை இருந்தமையால், இறைவன் திரு ஞானம் நல்கியவுடன் தம்மோடு அடிகளை அழைத்துச் செல்லவில்லை என்பது பரஞ்சோதி முனிவரால் விளக்கப் பட்டுள்ளது.
“தித்திக்கு மணிவார்த்தை யின்னஞ் சின்னாட்
டிருச்செவியி லருத்தவுங்கைச் செம்பொ னெல்லாம்
பத்திப்பே ரன்பளித்துக் கவர்ந்து வேண்டும்
பணிகொடுபாண் டியனையிவர் பண்பு தேற்றி
த்திக்கே விடுத்திடவம் புத்தை வாது
முடிந்திடவுந் திருவுள்ள முன்ன மெய்தி
எத்தித்தொண் டரைக்கருமஞ் சிறிதுண் டிங்கே
யிருத்தியென வுருக்காந்தா னடியரோடும்.”
திருவாதவூரடிகளின் நிலையறியாது மன்னவன் எழுதிய ஓலையைக் கண்டு தமக்கும் மன்னவனுக்கும் தொடர்பொழிந்தமையை அடிகள் தூதருக்கு உணர்வித் தார். ஈசன் தமராயினபின் இவ்வுலகத் தொடர்பு விடுபட் டொழிதலின, அப்பமூர்த்திகளும் இவ்வாறு உணர்ந்துரைப் பாராயினர். முன் அரசனோடுற்ற தொடர்பின் பொருட்டு அவனுக்கு மறுமொழி கூறக் கருதிய அடிகள் அம்மறு மொழி விடுக்குங் கடமையையும் இறைவன் பாலேயே ஒப்புவித்தார். அரசன் ஓலை அனுப்பிய காலம் ஆடித் திங்களாக இருக்கலாம். ஆதலினாற்றான் சோதிட நூற்படி நல்லநாளாகிய ஆவணி மூலத்திலே குதிரைகளைக் கூடற் பதிக்குக் கொண்டுவருவதாகச் சொல்வதற்கு இயைபு ஏற்பட்டது. மணிவாசகப்பெருமான் காலத்திலேயே நன்னாள், நன்னிமித்தம் முதலியவற்றைக் கருதும் வழக்கம் இருந்ததென்பது புலனாகின்றது. அடிகள் அரசனிடம் குதிரை வருமென்று இறைவன் கூறிய வண்ணமே செப்பியது மெய்யான செய்தியே. ஆரியர்பாற் குதிரை வாங்குவதற்கீடாகத் தமது ஆசிரியனாகிய அருட்குருவிடம் அரசன் பொருளைக் கொடுத்துக் குதிரை கொள் வாராயினர். இறைவன் பால் தாம் திருவருள் பெற்ற செய்தியை அரசனுக்கு அடிகள் அறிவுறுத்தாமைக்குக் காரணம் அரசன் அதனை அத் தருணத்திற் பெரிதாகக் கருதானென் றுணர்ந்தமையேயாகும். அருளைப் பொருட் படுத்தாது பொருளையே மன்னன் பாராட்டி நின்றானென் பது. திருப்பெருந்துறையில் அடிகள் எய்திய நிலையை முன்னர்க் கேட்டவிடத்து அதனைப்பற்றி யாதும் உசா வாது, பொருள் இழப்பையே நினைந்து வருந்திச் சினங் கொண்டமையாற் றெளியப்படும். ஆதலால் அடிகள் தமது திருவருட் பேற்றினை அரசனுச்கு உரையாமை ஒரு குற்றமாகா தென் றுணர்க.
ஆவணிமூல நாட்குச் சற்று முன்பே அமைச்சர்களிலொருவன் அரசனிடம் அடிகளைப் பற்றிப் புறங் கூறினமை அவனது இழிவைக் குறிக்குமாயினும் அரசன் அடிகளை வருத்து தற்குரிய ஊழ்வினை இருந்ததென்பதை விளக்கும். அரசனும் அடிகளை அழைத்துக் காரணங் கேளாது துன்புறுத்தினமை அவனது ஆராய்ச்சிக் குறைவைக் காட்டும். இறைவன் தனக்கு உறுதி கூறி யதை அடிகளும் அரசனுக்குத் தன்னைத் துன்புறுத்தத் தொடங்குங் காலத்தும் கூறாமை எதனாலெனில், அவன் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இல்லாதவனா யிருந்தமை கருதியே. தமக்கு வருந் தீங்கு ஒன்றினையும் சிவஞானிகள் பொருட்படுத்தாராதலின், ‘ சற்றுமுட் டளர்விலாத தன்மையின் வாதவூரர் ‘ என்றார். இறை வனது திருவருட் பெருமையைப் பாண்டியனும் பிறரும் அறிந்துய்ய வேண்டுமென்னுங் கருத்துப்பற்றியே அடிகள் இறைவனைக் குதிரை கொணரும்படி வேண்டினர். அங்ங னம் வேண்டுதல் தன்னுணர்ச்சி வயப்படுங் குற்றமா மென்று அடிகள் கருதினா ரென்பது குழைத்தபத்தின்க
ணுள்ள திருவருட் பாடல்களாற் றெளியப்படும்.
‘ அன்றே யென்ற னாவியு
முடலு முடைமை யெல்லா முங்
குன்றே யனையா யென்னையாட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோ ரிடையூ றெனக்குண்டோ
எண்டோண் முக்க ணெம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே’
‘ஆயக் கடவே னானோதா னென்ன
தோவிங் கதிகாரங் காயத்
திடுவா யுன்னுடைய கழற்கீழ்
வைப்பாய் கண்ணுதலே’
என்றது காண்க.
புராணத்துட் கூறிய வண்ணம், அடிகள் இறைவனை நோக்கி, ‘நவின்ற சொற் பொய்மையாமோ ‘ ‘நின் புகழ்க்கு ஏற்றமாமோ ; ‘ நான் இடும்பையுற்றால் யார் உனக்கு அடிமையாவார் ‘ ‘ ஈன நானொருவன் சொல்வதேறுமோ என்று இன்னோரன்னபற்றி இயம்பினா ரெனின் , அவை இறைவன் மாட்டுத் தோழமை பாராட் டினமையே குறிக்கும். குதிரைகள் வரும் நேரத்தைக் கருதியிருந்தனராதலின், காவற்சாலையிலுள்ள அவருக்கு இறைவன் பாதச் சிலம்பொலி காட்டினர் போலும் ! ”
குதிரைப்படைகளை வகுத்து நிறுத்திப் பரிசோதனை செய்தற்குரிய நிலப்பரப்பானது செண்டுவெளி எனப் பட்டது. ஆண்டுள்ள வெப்பந் தோன்றாதவாறு அரசன் முத்துப்பந்தரின் கீழ் வீற்றிருந்தனன் போலும்!
அன்பர் வேண்டிய வடிவத்தோடு இறைவன் தோன்றி அருள்புரிவனாதலின், இறைவனே குதிரைச் சாத்தின் தலைவனாக எழுந்தருளினன் என்க.
‘சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தாளியும்‘
‘ஆட லமர்ந்த பரிமாஏறி ஐயன்பெருந்துறை
யாதியந்தாள் ஏடர் களை யெங்கும்
ஆண்டு கொண்ட இயல்பறி வார்’
‘பரிமேற் கொண்ட சேவகனார்
ஒருவரை யன்றி யுருவறி யாதென்ற னுள்ளமதே’
இறைவன் திருவுருக்கொண்டருளுதலால் அவனுக்கு யாதொரு குறையுமில்லை.
‘எந்தைதா னின்னனென்று மின்னதா மின்னதாகி
வந்திடா னென்றுஞ் சொல்ல வழக்கொடு மாற்ற மின்றே’
‘நிறுத்திடு நினைந்தமேனி நின்மல னருளினாலே‘
என்றுங் கூறியவற்றால் இதனுண்மை தெளியப்படும்.
இறைவன் தானே உருவெடுத்து வருவனெனவும், மும்மூர்த்திகளில் தலைநின்ற உருத்திர மூர்த்தியை அதிட் டித்து வருவனெனவும் இருகொள்கைகள் உள்ளன. இறைவன் தானே உருவெடுத்துச் சிவஞானிகட்கு அருள் செய்வனென்று சிவஞான சித்தியாருட் கூறப்படுதலின், அடிகள் விரும்பியவண்ணம் அவனே குதிரைத் தலைவனாகத் திருமேனிகொண் டெழுந்தருளினானென்று கோடலே பொருத்தமுடைத்து. ‘குறித்ததொன்றாகமாட்டாக் குறைவிலன்’ என்றது மது. மறைத்தல் அழித்தலென் னும் இருதொழிலையும் இறைவனே யாண்டும் இயற்று கின்றா னென்னுஞ் சித்தாந்தக் கொள்கைக்கு இணங்க, இவ்வுலகத்தும் அடியார்களை ஆட்கொள்ளுதற்பொருட்டு இறைவனே நேரில் தோன்றினானென்று கருதுதல் தவ றாகாது. ‘ தூண்டிய சோதியை மீனவனுஞ் சொல்ல வல்லனல்ல’ னென்றபடி குதிரைமேல் வெளிப்பட்ட கடவுளைப் பாண்டியன் தனது அறியாமையால் உணர்ந் திலன், உணராமையின் தானளித்த ஒண்கலையை மதிப் பாகக் குதிரைத்தலைவன் வாங்கவில்லை என்று முனிவு கொண்டான். முனிவு கொண்டு மயங்கிய அரசனுக்கு ஏற்ற வண்ணம் அடிகள் விடையளித்தாரே யன்றிக் கடவுளின் தன்மையை அவனுக்கு உணர்த்தவில்லை, என்னை, உணர்த் தினும் ஊனக்கண்ணுடைய மன்னன் உண்மை யுணரா னென்பது திண்ணமாதலி னென்க. இதனால் உயிர்களின் ‘பக்குவங்கண் டுணர்த்தும் ‘பான்மையன் என்பது தெளி யப்படும். கடவுளின் இயல்பறிந்து அவன்பால் மெய் யன்பு செய்து அவனைக் காணவேண்டுமென்னும் பேரவா வுடையார்க்கு அவன் தோன்றி அருளுதல் கூடுமேயன்றிப் பிறருக்கு அவன் தோன்றுவதாற் பயனில்லை என்பது அறிஞர் கருத்து. கடவுள் நாட்டமில்லாத மக்கட்கு மக்கள் வடிவமாக அவன் தோன்றின் மக்களுள் ஒருவ னாக அவனை மதிப்பரே யன்றி அவனைக் கடவுளென்று தேறார். தாமே தேறமாட்டாதார் பிறர் சொல்லினாலுந் தேறமாட்டார். அங்ஙனந் தேறினுந் தாமே யறிந்தவராக மாட்டார் ஆதலின்
”ஒளித்துல கெங்கு நிற்போ னுறுபவ மொழித்து ஞான
மளித்திடி னன்றி யாவ ரவன்றிற மறிய வல்லார்?”
குதிரைகளின் வகைகளையும் இலக்கணங்களையுந் தமிழ்நாட்டினர் நன்குணர்ந்திருந்தா ரென்பது இவ்வர லாற்றினால் நன்கு புலப்படுகின்றது. உடம்பெடுத்த உயிர் வகைகள் ஒவ்வொன்றின் நல்லியல்பையுந் தீய இயல்பையும் உணர்த்துதற்கு அவ்வவற்றின் உடம்புகளின் மீது அடை யாளங்கள் உள்ளன என்பது உடற்றோற்ற ஆராய்ச்சி நூலாரது கொள்கை. குதிரை மாடு முதலிய விலங்குகளிற் போல மக்களுள்ளும் இவ்வடையாளங்கள் காணப்படுமென்ற கொள்கை பண்டைக்காலத்திலேயுந் தமிழ் நாட்டில் வழங்கியதென்பது சிலப்பதிகாரக்கதையால் இனிது விளங்கும். சிலப்பதிகாரத்திற் கோவலனைக் கள்வனென்று ஒரு பொற்கொல்லன் குறைகூறியபொழுது அவன் மீது கள்ளனுக்குரிய அடையாளங்களில்லை என்று பிறர் புகன்றது காண்க. இக்கொள்கையைச் சென்ற நூற்றாண்டினிறுதியில் இத்தாலிய நாட்டில் ‘லம்புரோசோ’ என்னும் பெரியவர் சிறைச்சாலைகளிலுள்ள பல குற்ற வாளிகளைப் பரிசோதித்து இக்கொள்கையை நிலைநாட்ட இதுநிற்க, நரியைப் பரியாக்கினாரென்பது திருவாச கத்துள் ‘ நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லா நிகழ்வித்துப் பெரியதென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய் ‘ என்று பல இடங்களினுங் கூறப்பட்டது..
“நரிகளெல்லாம் பெருங்கு திரை யாக்கியவா றன்றேயுன்
போருளே”
‘ நரியைக் குதிரை யாக்கிய நன்மையும்‘
என்றும் வருவன காண்க. பரி நரியானதைப்பற்றி யாதுந் திருவாசகத்திற் காணப்படவில்லை யெனின், பரிகள் நரியாகமாறிய பின்னரே பரிகளாய் வந்தவை நரிகளென்று கருதப்பட்டன ஆதலாலும், நரிகளைப் பரிகளாக்கின மையே வியப்பிற்கிடனாகிய கருணைச்செயலா தலாலும் நரி பரியானதையே கூறினா ரெனினும், பரிநரியானதும் ஆண்டே குறிப்பா னுணர்த்தப்பட்ட தென்றுணர்க ‘மதுரை – எல்லாம் பிச்சதேற்றும் பெருந்துறையாய்’ என்ற விடத்துப் பரிநரியானது குறிப்பா னுணர்த்தப்பட்டது
பிற விலங்குகளைப் பரியாக்காது நரிகளை அவ்வாறு செய்தது தந்திரக் குறிப்பை யுணர்த்துவதாகும். நரியே விலங்குகளுள் மிக்க சூழ்ச்சியுடையது. பாண்டிய மன்னனை இறைவன் கள்ளமாகவே ஆட்கொள்ள எழுந்தருளினன், ஊர்தியாதற்குச் சிறிதும் பயன்படாத நரிபோன்ற சூழ்ச்சிமிக்க மக்களை, ஊர்தியாகவும் பிறவாற்றானும் பெரிதும் பயன்படுங் குதிரைபோல இறைவனது திருவடி சூட்டுதற்குரிய பெரு நலமிக்க நன்மக்க ளாக மாற்றும் ஆற்றல் சான்றவன் இறைவனென்பதை இவ்வியத்தகு செயலால் அறிவுறுத்தியவாறாகும்.
பரி நரியாயினபின்பும் அதனை ஓர் தெய்வச் செயல் என்று கருதித் திருவாதவூரடிகளிடம் உண்மையை அறிய முயலாது அரசன் மீட்டும் அவரைத் துன்புறுத்தக் கருதியது அவனது அறியாமையை வற்புறுத்தும். – எல்லாவற் றையும் இறைவன் திருவிளையாடலாகவே அடிகள் கருதினமையால் அரசன் முனிந்து ஆளனுப்பிய காலையும் அடி கள் தம்முட் சிரித்து மகிழ்ந்தாரென்பார் ‘முறுவல் செய்து’ என்றார். அடிகளை ஆற்றுமணலில் ஒரு வளைவினுள் நிறுத் தித் துயருறுத்தகாலை அவர் இறைவனை நினைந்திருத்தல் கூடும். இறைவன் திருவிளையாடல் நிகழ்த்தியபின்னுந் தமது நிதியினை அடிகளிடமிருந்து மீளப்பெறவேண்டுமென்
னுங் கருத்தினையே பற்றி நின்ற அரசனது இரங்கத்தக்க மனப்பான்மையை இறைவன் இன்னுமாற்றிலனே என்று அடிகள் கருதியிருத்தல் கூடும். ஆவணித்திங்களில் வைகை யிற் பெருவெள்ளம் இயற்கையில் வருதற்கு இடமில்லை. ஆதலின் பெருவெள்ளம் வந்தவுடனே அஃது அடிகட் குத் தண்டஞ் செய்தலைத் தடுப்பதற்கு வந்ததாக அரசனுக் குத் தோன்றிற்று. பிற அமைச்சரும் அவன் எண்ணத்தை உறுதிப்படுத்தினர். வெள்ளம் மிகுதியாகப் பெருகி ஊரை அழிப்பது போல் வந்தமையானுந் தெய்வத்தை வேண்டியும் அவ்வெள்ளம் குறைவுபடாமையானும் அர சன் அஞ்சுவனாயினன். ‘செல்வச்செருக்கும் அதிகாரச் செருக்கும் அடங்கியொழிய, அச்சம் மேற்பட்ட காலத்திலேதான் கடவுட்பெருமையையும் அடியார் பெருமையை யும் அரசன் நினைப்பானாயினன். நினைத்தபின்னரே திரு வாதவூரடிகளை அழைத்துத் தன் குற்றத்தைப் பொருத் தருளவேண்டும் என்றிரந்தான்.
“ஈச னடியார் இதயங் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பு மழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசமதாகும்”
என்ற வண்ணம் சிவனடிப்பேரன்பர் உள்ளங்கலங்கிய விடத்து நாட்டிற்கு அழிவு வருதல் திண்ணமே. ஆயின் ஈண்டுத் திருவாதவூரடிகள் மனங்கலங்காது அரசன் நல்லறிவு பெறல் வேண்டுமென்று திருவுள்ளங் கொண்டமையால், வந்த வெள்ளமானது ஊரை அழிவு செய்யாது
அழிப்பது போலத் தோன்றிற்று என்று உணர்க.
‘பேரன்பர் விரும்பியவண்ணம் பூதங்களுந் தந்தொழி லியற்றும்’ என்பதற் கிணங்க வைகைநீர் வற்றவேண்டு மென்று அடிகள் நினைந்தவுடன் வெள்ளங்குறைவுபட்டது. அரசன் தம்மைத் துன்புறுத்தியபோதும் மகிழ்வித்த போதும் அடிகள் ஒரே தன்மையராய்த் திகழ்ந்தனர். இதுவே உயர்ந்த பேரறிவாளரது பொறுமை நிலையாம். இந்நிலைக்குக் காரணம் விருப்பு வெறுப்பற்ற நடுநிலைத்தன் மையும், பயன் கருதாது இறைவன்பால் வைத்த பேரன்பு மாம். இக்கருத்தைக் கடவுண் மாமுனிவர்
அருட்பெரு வழுதி யிவ்வா றன்புரை பகர்ந்த போதும்
தரிப்பரி தென்ன முன்னந் தழலென வெசண்ட
போதும் விருப்பொடு வெறுப்பிலாத மெய்ம்மையார் தம்மை யாண்ட
திருப்பத நினைந்தார் வைகைச் செழும்புன லூர்கொ ளாமல்
என் றினிது விளக்கினர். ஆளுடைய அடிகள் தம்முடைய நினைவாற்றலினாலேயே வைகைநீர் முற்றும் வடிவிக்கக் கருதினாரெனின், அற்புதம் நிகழ்த்த அவர் விரும்பியவ ராவர். மக்களாலியல்வதை , மக்கள் செய்வதே கடமை யாதலின் கரைகட்டுந் தொழிலினை ஊராராற் செய்விக்கும்படி கட்டளையிட்டனர். இறைவன் திருவருள் வழியே அடிகள் சொல்லும் நிகழ்வதாதலின், மண்சுமக்குந் திரு விளையாடலை நிகழ்த்தக் கருதிய கடவுள் அவ்வாறு கட் டளை பிறப்பித்தனன் என்றலு மொன்று. அக்காலத்தில் ஊர்ப்பொது வேலைகளைக் குடிகளே தம்முட் பங்கு வைத் துச் செய்து முடிக்க வேண்டுமென்னும் நியம மிருந்ததாகத் தெரிகிறது. குடிகள் தாமே வேலைசெய்யாது ஆள் வாயிலாகவும் வேலையைச் செய்வித்துக்கொள்ளும் வழக்க மும் அக்காலத்திலிருந்தது. வேலையாள் ‘கிடையாமை யால் வருந்திய பிட்டுவாணிச்சியை அரசன் ஏவலாளர் உதவியற்ற அவள் நிலையை அரசர்க்குணர்த்தாது, துன் புறுத்தினரெனவும், அவள் அரசன்பாற் சென்று தன் குறையைத் தெரிவித்தற்கு இடமில்லா திருந்ததெனவும் அறிகிறோம்.
‘செம்மனச்செல்வி ‘ என்ற பெயர்க்கேற்ப அப்பிட்டு வாணிச்சி செம்பொருளாகிய ஆலவாய் அண்ணல்பால்” உள்ளன்பு செலுத்தும் பெருந்தவம் வாய்ந்தவளாய் இருந்தமை பாராட்டத்தக்கது. அன்பு செய்தார்க்கு இறை வன் எவ்வகையிலும் உதவிபுரிவ னென்பது இச்சரித்திரத் தால் இனிது விளங்கும். :: கல்லாதவனும் உயிருக்குயிரா யுள்ள கடவுளை உணர்ந்து மெய்யன்புடையனாயின் இறை வன் திருவருளுக்கு உரியனவனென்பதும், அவன் கற்ற ‘வனுங் காணாத பேரின்பத்தைக் காண்பன் என்பதுஞ் செம்மனச் செல்விக்கு இறைவன் விரைவி லருள் செய் தமையானும் பாண்டியனுக்கு அவ்வாறு விரைவி லருள் செய்யாமையானுந் தெளியப்படும்.
கல்லா தவருங் கருத்தறி காட்சியை
வல்லா ரெனிலருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதா ருண்மைபற் றாநிற்பர் கற்றோருங்
கல்லாதார் பேரின்பங் காணுகி லாரே.
செம்மனச்செல்விக்குக் கொத்தாளாய் வந்த கடவுள் விளையாடி வேலைசெய்து – பிட்டினைச் சுவைபார்த்துக் கொண்டு பித்தன் போலத் திரிந்தமையால் அடிகள்,
‘ பிட்டுநேர்பட மண்சுமந்த பெருந்துறைப்பெரும் பித்தனே’
‘மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளி‘
‘ஆங்கது தன்னில் அடியவட்க காகப்
பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும்’
என்றருளிச்செய்தனர்.
மண்சுமந்தவரை அடித்தவன் பாண்டியன் என்பது,
‘மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவான் மொத்துண்டு
புண் சுமந்த பொன்மேனி பாடுதுங்கா ணம்மானாய்’
என்ற தாற் பெறப்படும்.
எவ்வுயிரினுங் கலந்திருப்பதால் அவனை அடித்த அடி யாவர்மேலும் பட்டதெனினும், பாண்டியனும் அவனைச் சேர்ந்தோருமே அடியால் விளைந்த துன்பினை உணர்ந்திருத்தல் கூடும். இறைவனும் வாதவூரடிகளும் இருவினைத் தொடக் கற்றவராதலின், அத்தகைய துன் பினை உணர்ந்திரார். வைகைவெள்ளப் பெருக்கினாலே மனந்தெளிவுற்றுத் தாழ்மையுற்ற பாண்டியனை அடிபட்ட காலத்தே தமது இறைமைத் தன்மையையும் அடிகளின் பெருமையையும் விளக்கி இறைவன் ஆட்கொண்டனன்
‘தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட’
என்றது மது. அடிகள் வாயிலாகவே அவனை உய்யக் கொண்டமையால், அடிகளே அவனுக்குப் பரமாசாரியர் ஆவர் ஆதலின், அவன் அவர் திருவடியில் வீழ்ந்து தன்னா வியையும் ஆக்கையையும் பொருண் முழுவதையும் ஒப்பு விக்கலாயினன். அடிகள் திருப்பிக் கொடுத்த அரசி னையே அவன் ஆட்சி புரிவானாயினன். அரசன் தொடர்பு விட்டது முதல் அடிகள் பரமுத்தியை நாடியே அரன் கழற் கண் மறவாது அன்புடையராயினர்.



