மணிவாசகப்பெருமான் வரலாறு கா. சுப்பிரமணிய பிள்ளை

5. திருவாசக ஆராய்ச்சி

திருவாதவூரடிகள் வரலாற்றிற்கேற்பத் திருவாசகத் திருப்பதிகங்களை ஒருவாறு வரிசைப் படுத்தின் அஃது இப்பொழுதுள்ள பதிகவரிசையின் வேறாகும். அச் சோப்பத்து, சென்னிப்பத்து, அதிசயப்பத்து, அற்புதப் பத்து, உயிருண்ணிப்பத்து என்பன திருப்பெருந்துறை யில் அடிகள் மதுரைக்குப் போவதற்கு முன் அருளிச் செய்யப்பட்டன என்ப. அவற்றுள் நரி பரியாக்கிய செய்தியுந் தம்மோடிருந்த அடியார்கள் தம்மைப் பிரிந் தமையுங் கூறப்படவில்லை. கோயிற்றிருப்பதிகம் என்னுந் திருவாசகம் திருப்பெருந்துறையிற் பாடப்பட்டதாய்த் தெரிகிறது. அதன்கண்ணும் திருப்பள்ளியெழுச்சியின் கண்ணும் ‘ பண்டாய நான்மறை’ யின் கண்ணும் குறிப் பாகவே இச்செய்திகள் சுட்டப்பட்டனவாதலால் அவையுந் திருப்பெருந்துறையின்கண்ணே தொடக்கத்திலேயே பாடப்பட்டனவோ என்னும் ஐயம் நிகழ்கின்றது.

எண்ணப்பதிகம் , வாழாப்பத்து, அடைக்கலப்பத்து என்பவைகள் அடிகள் பாண்டியன் பொருட்டு மதுரைக்கு மீண்டு அரசனாலே துன்புறுத்தப்பட்டகாலை பாடப் பட்டன என்ப. திருப்பாண்டிப்பதிகம் மதுரையில் திரு விளையாடல்கள் நிகழ்ந்த பின்னர்ப் பாடப்பட்ட தென்பது தெளிவு. திருச்சதகம், திருவார்த்தை திருவம்மானை, திருத்தசாங்கம், குயிற்பத்து முதலியன மதுரையினின்று திருப்பெருந்துறைக்கு மீண்டபின் இயற்றியருளப் பட்டவை, தம்மோடிருந்த அடியார் இறைவனோடு கலந்தபின் பாடப்பெற்ற பதிகங்கள் செத்திலாப்பத்து, ஆசைப்பத்து, புணர்ச்சிப்பத்து, பிரார்த்தனைப்பத்து, திருவெண்பா, குழைத்தபத்து என்பன. ஆனந்தமாலை என்பது திருப்பெருந்துறையிலாவது தில்லையிலாவது இயற்றப்பெற்றிருக்கலாம். அதன் இறுதிப் பாட்டுக்கள் ‘தேவே தில்லை நடமாடி’ எனவும், ‘ பிச்சதேற்றும் பெருந்துறையாய் ‘ எனவும் வந்தமை காண்க. நீத்தல் விண்ணப்பமும், திருப்பொன்னூசலும், அன்னைப்பத்தும் உத்தரகோசமங்கையில் அருளிச் செய்யப்பட்டன. திருப்புலம்பலிலுள்ள மூன்று பாட்டுத் திருவாரூர், திருப் பெருந்துறை, திருக்குற்றாலம் என்னும் மூன்று திருப்பதி களுக்கு முறையே உரியனவாகத் தெரிகின்றன. திரு வேசறவு திருவிடைமருதூரில் அருளிச்செய்யப்பட்டது. கழுமல மதனிற் காட்சி கொடுத்தும்’ என்றபடி திருக் கழுமலத்தில் இறைவனது திருக்காட்சியைப் பெற்று அடிகள் அவ்விடத்திற் பிடித்தபத்தைப் பாடியிருத்தல் கூடும். திருவெம்பாவை திருவண்ணாமலையில் அருளிச் செய்யப்பட்டது போலும். அதற்குப் பின்னேயே திருக் கழுக்குன்றப்பதிகம் அமைக்கப்படல் வேண்டும். தில்லையி லருளிச் செய்யப்பட்ட பதிகங்களாவன: கண்டபத்து, கோயில் மூத்ததிருப்பதிகம், குலாப்பத்து, அச்சப்பத்து, திருப்பூவல்லி, திருக்கோத்தும்பி, திருத்தோணோக்கம், திருப்பொற்சுண்ணம், திருத்தெள்ளேணம் என்பன வாகும். திருப்படையாட்சி, திருப்படை எழுச்சி, யாத் திரைப்பத்து என்னும் மூன்றும் இறுதிக்காலத்தில் அருளிச்செய்யப்பட்டிருத்தல்கூடும்.

சிவபுராணம் திருப்பெருந்துறையிலருளிச் செய்யப் பட்டது. கீர்த்தித்திரு அகவல் தில்லையி லருளிச் செய்யப் பட்டது. திருவண்டப்பகுதியும் போற்றித் திருவகவலும் தில்லையிலாவது திருப்பெருந்துறையிலாவது அருளிச் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

திருவாசகத்தின்கண் இயற்கைப் பொருள்களின் அழகைப்பற்றிப் பேசும் பாட்டுக்கள் மிகச் சிலவே. இறைவனியல்பையும் உயிரினியல்பையும் பாசத்தினியல்பையும் இனிதுணர்த்தும் புகழ்ப்பா மாலைகளே செறிந்துள்ளன. அடிகளது சிவானுபவ நிலையை உணர்த்தும் பகுதிகள் பல. அவை யாவர்க்கும் உருக்கத்தைத் தருவன.

இறைவன் ஒப்பற்ற ஒரே முதல்வனென்பார் ‘ ஒருவனென்னு மொருவன் காண்க ‘ ‘ உருமூன்றுமாகி உணர் வரிதாம் ஒருவனுமே ‘ ‘ சோதியாய்த் தோன்றும் உரு வமே அருவாம் ஒருவனே’ என்றார். ஒருவன் என்று இறைவனை வழங்கும் மரபு பெரியபுராணத்திலும் பிற நூலிலுங் காணப்படும். ‘எவ்வுயிர்க்குஞ் சான்றாம் ஒருவனை’, ‘ உணர்வினால் உணரவொண்ணா ஒருவரை’ என்ற ஆசிரியர் சேக்கிழார் திருவாக்குங் காண்க.

முனைவன் என்ற சொல்லாற் கடவுளை உணர்த்துதல் தொல்காப்பியத்திலுந் திருவாசகத்திலும் காணப்படு கின்றது. ‘முனைவன்பாத நன்மலர் பிரிந்திருந்தும்’ என்ற துகாண்க. இறைவனது தனித்தன்மையை ‘ஒரு நாமம் ஒன்றுமிலான் ‘ ‘ஏதவனூர் ஏதவன் பேர் யாரும் சார் யா ரயலார் ஏதவனைப் பாடும் பரிசு ‘ – குறியொன்று மில்லாத கூத்தன்’. ‘ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே ‘ ‘ எப்பாலவர்க்கும் அப்பாலாம் என்னாரமுது’ ‘ நாடற்கரிய நலத்தை’ என்றினைய அருண்மொழிகளா லடிகள் குறித்தருளினார்.

கடவுள் உயிர்கட்குத் தலைவனென்பதை ‘ஆனவறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்குங் கோனாகி நின்றவா ‘ என்றவிடத்து விளக்கி யருளினர். உயிர்களின் சுட்டறி வினால் அறியப்படாதவனென்பார் ‘ ஓசையால் உணர்வார்க்கு உணர்வரியவன் ‘ ‘ நினைப்ப தாக சிந்தை செல் லும் எல்லையேய வாக்கினாற், றினை த்தனையு மாவ தில்லை சொல்லலாவ கேட்பவே ‘ ‘ நின்னை ஐம்புலன்கள் காண்

கிலா’ ‘ நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க’ முதலிய திருவாசகப் பகுதிகளால் உய்த்துணர்ந்து கொள்க. அவன் உலகத்தைப்படைத்துக் காத்து அழிக் கும் மூவராலும் பிறதேவராலும் அறியப்படாதா னென் பார் ‘ மூவர்மற் றறிகிலர் யாவர் மற் றறிவார்,’

‘பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பயைந்த
நாவேறு செல்வியும் நாரணனும் நான்முகனும்
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்

சேவேறு சேவடிக்கே சென்று தாய் கோத்தும்பீ’

என்றுரைத்தருளினர்.

“தேவர்கோ வறியாத தேவ தேவன்
செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கு மற்றை
மூவர்கோ னாய்நின்ற முதல்வன்”

“முத்து நடுவு முடிவு மாகிய மூவாறியாச்
சிந்துரச் சேவடி யானை”

என்ற துங் காண்க.

இறைவனே எல்லாவற்றிற்கும் ஆதியும் நடுவும் அந்த முமாம் ஐந்தொழிலியற்றுவானென்பதைச் ‘ சொல்லுதற் கரிய ஆதியே நடுவே அந்தமே பந்த மறுக்கு மானந்த மாகடலே தீதிலா நன்மைத் திருவருட்குன்றே’ என்பது போன்ற திருவாக்குகளாற் பெறவைத்தனர்.

‘முந்திய முதனடு விறு தியு மானாய்’ என்றமையால் இறைவன் முதல் நடு விறுதி இல்லாதவனென்று அறி வுறுத்தினர். ‘ தன் பெருமை தானறியா’ ‘ தன்மை பிறராலறியாத’ என்றதுங் காண்க. இறைவன் பிற சமயக் கடவுளர்க்கு மிகவும் வேறாய அளவில் பெருமை யுடையவனென்று கூறுவார்,

‘ அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும்
வீடுபே றாய்நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையுங் கிழவோன்’

என்றார்.

இறைவன் எப்பொருளினும் எவ்வுயிரினும் இரண் டறக் கலந்து நின்றும் பொருட்டன்மையால் வேறாவா னென்பார்,

‘எல்லா உயிருமாய்த் தழைத்துப் பிழைத்தவை
யல்லையாய் நிற்கும் எத்தனே’

நீயலாற் பிறிதுமற்றில்லை

ஒன்று நீயல்லை யன்றி யொன்றில்லை

விரிபொழின் முழுதாய் விரிந்தோன் காண்க

நிற்பதுஞ் செல்வது மானோன் காண்க

மருவியெப் பொருளும் வளர்ப்போன் காண்க

இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே

என்றார்.

கடவுள் மெய்ப்பொருள் என்பார்,

‘மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யவென் னுள்ளத்து ளோங்கார மாய்கின்ற

மெய்யா ‘

என்ற விடத்து விளக்கினமை காண்க.

‘மெய்ப்பொருட்கட் டோற்றமாய் மெய்யே நிலைபேறாம்’

என்றது மது.

மெய்யர்க்கு மெய்யாயும் பொய்யர்க்குப் பொய் யாயும் இறைவர் இருக்கின்றா ரென்பதை

உண்மையுமா யின்மையுமாய்

பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யை

என்பவற்றாற் பெறவைத்தார்.

இறைவன் அன்பர்கட் கருள் செய்யும் பொருட்டுத் தமது திருவருட் சத்தியினாலே பல்வேறுருவு கொள்வா னென்பார்,

‘ஏறுடை ஈசனிப் பவனியை யுய்யக்
கூறுடை மங்கையுந் தானும்வந் தருளி
நூறு நூ றாயிர மியல்பின தாகி’

‘எவ்வுருவுந் தன்னுருவாம்’

‘பித்த வடிவு கொண் டிவ்வுலகிற் பிள்ளையுமாம்
அருவா யுருவமு மாயினான்

போரேறே அடர் கரியே கயிலைப் பரம்பரனே

என்றார்.

நிறங்களோ ரைந்துடையாய்

என்ற தற் கேற்பச்

செந்தழல் புரை திரு மேனி

அரத்த மேனியாய்

பச்சையனே செய்ய மேனியனே

‘புண்சுமந்த பொன்மேனி

தாமரை மேனியப்பா

‘திருநீற்றை உத்தூளித்து

ஒளியொளிரும் வெண்மையனே

என்றார்.

இறைவன் அன்பு வடிவின னென்றும் அன்பர்க்கே அருள் புரிபவனென்றும் தெரிவிப்பார்,

பத்திவலையிற் படுவோன் காண்க

ஓவாதே யுன் குவா ருள்ளிருக்கு முன்ளானை

தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினு மன்பபோற்றி

என் றியம்பியருளினார்.

மந்திரங்களுள் ஓங்காரத்தையும் ஐந்தெழுத்தையுமே விதந்தோதினார்.

ஒங்காரத் துட்பொருளை

உள்ளத்து ளோங்காரமாய் நின்ற

நமச்சிவாய வாழ்க

சிவாயகம் வெனப் பெற்றேன்

நமச்சிவாயவென் முன்னடி பணீயாப் பேயனாகிலும்

நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம வெனப்பெற்றேன்

என்பவை காண்க.

சிவபெருமான் பசுபாசத் தொடக்கற்ற பேரின்ப வடிவினன் என்பார்,

பேரா ஒழியாப் பிரிவில்லா மறவா நினையா அளவில்லா மாளாவின்ப மாகடலே

என்றார். ஏழுகட லாதலின் ஏழு அடைமொழி கொடுத் தார். ‘ குணங்கடா மில்லாவின்பமே’ என்றதுமது. கடவுளை ‘ ஆதிப் பிரம்’மென்றும் ‘ தாட்செய்ய தாம ரைச் சைவ’ னென்றும் அடிகள் செப்பினர்,

அவர் தமது காலத்துள்ள மூவேந்தர் பேரையும் இறைவனுக்கே அமைத்துப் பாடினமை உற்று நோக்கத் தக்கது.

‘தென்னவன் சோலன் சோழன் சீர்ப்புயங்கன் வரக் கூவாய்’

என்றது காண்க.

சிவபெருமான் தனது திருவருட் சத்திக்குப் பல் வேறு முறையில் இனமாக நூல்களாற் கூறப்படுவா னென்பார்,

எம்பெருமான் இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன்

என்றனர்.

சிவபெருமான் தூய பேரின்ப வடிவினனாய்த் தமக்கு அத்தகைய இன்பத்தை யிடையறாது நல்குகின்றா னென் பார்,

தேனைப் பாலைக் கன்னலின் றெளிவை

‘தேனே யமுதே கரும்பின் றெளிவே

‘தேனையும் பாலையுங் கன்னலையு மமுதத்தையுமொத்
தூனையு மென்பினையு முருக்காநின்ற வொண்மையனே’

‘ஊனா யுயிரா யுணர்வாயென் னுட்கலந்து
தேனா யமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்’

‘ஞானக் கரும்பின் றெளிவைப் பாகை
நாடற் கரிய நலத்தை நந்தாத்
தேனைப் பழச்சுவை யாயினானைச்
சித்தம் புகுந்து தித்திக்க வல்ல கோனை’

‘ பாலு மமுதமுந் தேனுடனாம் பராபரமாய்’

நெல்லிக் கனியைத் தேனைப் பாலை

நிறையின் னமுதை

என்றுள்ள கனிவு மொழிகள் புகன்றனர். இறைவன் தம்மைப் பேரின்ப நுகர்ச்சிக்குத் தகுதியாக்கி யருளி னதைக் குறிப்பான்,

‘கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனை’

‘கல்லை மென்கனி யாக்கு மிச்சை கொண்(டு)
என்னை நின்கழற் கன்ப னாக்கினாய்’

காயத்துள் அமு தூறவூற நீ கண்டுகொள்ளென்று காட்டி

‘அவையவம் கோற்றேன் கொண்டு செய்தனன்

‘அளிதரு மாக்கை செய்தோன் போற்றி

ஆற்றா வின்பம் அலர்ந்தலை செய்யப்

போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்

இன்பே அருளி உயிருண்கின்ற எம்மானே

என் றியம்பினார். தம்மை இழித்துக் கூறும் பொருட்டு அடிகள் நாய் என்ற சொல்லைப் பல விடங்களில் வழங்கி யிருக்கின்றனர். ‘ நாயிற் கடையா நாயேனை ‘ ‘ செய்வ தறியாச் சிறு நாயேன்’ ‘ஊர் நாயிற் கடையானேன்’ ‘ நாணமில்லா நாயினேன் ‘ முதலிய பல சொற்றொடர் களில் அச்சொல் வந்தமை காண்க. திருவருள் பெறு வதற்கு முன் உலக இன்பத்தில் தான் உழன்றதைப் பல விடங்களிற் குறித்துள்ளார்.

‘செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி யாரிற்பன்னாள்
விழுகின்ற என்னை’

வேனில்வேண் மலர்க்கணைக்கும்

வெண்ணகைச்செவ் வாய்க்கரிய
பானலார் கண்ணியர்க்கும்
பதைத்துருகும் பாழ்நெஞ்சே’

‘மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவடைந்து
தாழியைப் பாவு தயிர்போற் றளர்ந்தேன்.’

தாம் பல பிறவி எடுத்து உய்ந்ததை,

‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்து
ளெல்லாப் பிறப்பம் பிறந்திளைத்தேன்’

என்றார்.

தாம் வீடு நாடி மெய்ப்பரம் பொருளைத் தேடி யலைந் ததைப் பின்வரும் அடிகளிற் கூறினமை காண்க.

‘என்னை யப்பா அஞ்சலென் பவரின்றி நின்றெய்த் தலைந்தேன்’

‘கொம்பரில்லாக் கொடி போல் அலமந் தனன் கோமளமே’

‘ உன்னை யோலமிட் டலறி யுலகெலாங் தேடியுங் காணேன்.’

திருவருள் பெற்றபின் எடுத்த உடலைவிட்டு இறைவ னோடு இரண்டறக் கலக்க வேண்டுமென்று அடிகள் பெரு விழை வுற்றதைப் பின்வரும் அடிகளா லறிக.

‘ உடலிது களைந்திட் டொல்லை உம்பர் தந் தருளுபோற்றி’

‘வருகவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி’

‘ஊனையான் இருந்தோம்புகின்றேன் உயிர் ஓயாதே’

உன்னருள் பெறுநாள் என்றென்றே வருந்துவனே

வீடுதந் தருளு போற்றி

அவர் அழுதடி யடைந்த அன்ப ரென்பது,

வினையேன் அழுதா லுன்னைப் பெறலாமே

அழுகே னின்பா லன்பாய்‘,

மயல்கொண் டழுகேனே

அழுமதுவே யன்றி மற்றென் செய்கேன்

முதலிய பல அடிகளிற் காண்க . சிவபெருமானைத் தலைவ னாகவும் தம்மைத் தலைவியாகவுஞ் சில விடங்களில் திரு வாசகத்துள்ளுங் குறித்துள்ளார். ஓர் உதாரணம் வரு மாறு :

” சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்றிரடோள்
கூடுவேன் கூடி முயங்கி மயங்கிநின்
றூடுவேன் செவ்வாய்க் குருகுவே னுள்ளுருகித்
தேடுவேன் றேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்
வாடுவேன் பேர்த்து மலர்வே னனலேந்தி
ஆடுவான் சேவடியே பாடுதுங்கா ணம்மானாய்.”

தமது உள்ளத்தினையும் உறுப்பினையும் இறைவன் தனக்கே பயன்படுத்திக்கொண்டா னென்பார்,

“சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன்
கண்ணிணைநின் றிருப்பாதப் போதுக் காக்கி
வந்தனையு மம்மலர்க்கே யாக்கி வாக்குன்
மணிவார்த்தைக் காக்கியைம் புலன்களாக
வந்தனையாட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே”

என்றார்.

‘ என்னுடைய அன்பே’ என்றபடி இறைவ னிடத் துத் தனக்கு உருக்க மிருப்பதை ஒப்புக்கொண்ட அடி கள், தம்மிடத்து இறைவன் பேருபகாரத்திற்கு ஏற்ற அளவு அன்பும் நன்முயற்சியு மில்லை என்பார்,

நெகுமன் பில்லை நின்னைக் காண

‘இனையன் பாவனை இரும்புகல் மனஞ்செவி
இன்னதென் றறியேனே’
‘வன்ப ராய்முரு டொக்குமென் சிந்தை
மரக்கண் என்செவி இரும்பினும் வலிது’

” உள்ளந்தா ணின்றுச்சி யளவு நெஞ்சா
யுருகாதா லுடம்பெல்லாங் கண்ணா யண்ணா
வெள்ளந்தான் பாயாதா னெஞ்சங் கல்லாங்
கண்ணீணையு மரமாந்தீ வினையி னேற்கே”

‘ஆடுகின்றிலை கூத்துடையான் கழற் கன்பிலை ‘

இரும்பின் பாவை

” யனையநான் பாடேனின் நாடேன் அந்தோ
அலறிடேன் உலறிடேன் ஆவிசோரேன் ”

கிடந் திருகேன்

என்றமை காண்க.

இறைவன் அருள் புரிந்தபின் அவனது பிரிவாற் *றாமையால் தாம் உயிர் விடவில்லை என்று சில விடங்களில் அடிகள் வருந்துவது மிகவும் உருக்கத்தை விளைப்ப தாகும்.

‘முனைவன் பாதநன் மலர் பிரிந் திருந்து நான்
முட்டிலேன் தலைகீறேன்’

‘தாயி லாகிய இன்னருள் புரிந்த என்
தலைவனை நனிகாணேன் தீயில்
வீழ்கிலேன் திண் வரை யுருள்கிலேன்
செழுங்கடல் புகுவேனே’

முதலியன காண்க. இடையறா அன்பொன்றினையே இறைவன்பால் அடிகள் வேண்டின ரென்பது,

‘இடையறா அன்புனக்கென் னூடகத்தே
நின்றுருகத் தந்தருள்’

‘ஐயா எனறன் வாயாலரற்றி அழல்சேர் மெழுகொப்ப
ஐயாற்றரசே ஆசைப்பட்டேன்’

‘உற்றாரை யான்வேண்டே னூர்வேண்டேன் பேர் வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன் கற்பனவு மினியமையுங்
ற்றாலத் தமர்ந் துறையுங் கூத்தாவுன் குரைகழற்கே
கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே

என்பதாற் றெளியப்படும்.

பல பிறவி எடுத்தாலும் இறைவனை அன்பினாற் றொழும் பேறு வேண்டு மென்பார்,

‘வேண்டுநின் கழற்கணன்பு
மன்னரின் வணங்கவே’

என்றார்.

‘யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக்
கென்கடவேன்’

என்றது மது.

திருவருளாலே நரகம் அடைந்தாலும் தான தனை இகழாமையை,

‘நரகம் புகினும் எள்ளேன் றிருவருளா
லிருக்கப் பெறின்’

என்ற விடத்துத் தெரிவித்தார். ‘யாமார்க்குங் குடியல் லோம் ‘ ‘ குற்றாலத்துக் கூத்தன் ‘ முதலிய சில சொற் றொடர்கள் பிற்காலத்தே அப்பர் சுவாமிகள் தேவாரத்தும் வந்துள்ளன. மும்மலங்களைப் பற்றிய குறிப்புத் திருவாச கத்திற் பலவிடங்களில் வந்துள்ளன.

மூலமா மும்மல மறுக்கும்

மும்மை மல மறுவித்து

மும்மலங்கள் பாயும்

மும்மலப்பழ வல்வினைக்கு எழுந்தவும்

என்று வருவன காண்க. மலங்கள் ஐந்தென்பதும் ஓரிடத்துக் கூறப்பட்டது.

” மலங்கள் ஐந்தாற் சுழல்வன்
தயிரிற்பொரு மத்தெனவே”

 பசுபாச மென்ற சொற்றொடரை,

கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம்

பல்லோருங் காண என்றன் பசுபாச மறுத்தானை

என்ற இடங்களிற் காண்க. ‘இருவினை மாமரம் என்றது போன்ற சொற்றொடர்களாற் கன்மமலம் குறிக்கப் பட்டது.

‘மாய வாழ்க்கை வல்வினைச் சிறுகுடில்
மயக்காந் தொடக்கு’

‘மையலா யிந்த வாழ்வெனும் ஆழி

பாச மானவை பற்றறுத்து

முதலிய சொற்றொடர்களால் மாயா மலங் குறிக்கப் பட்டது. ஆணவ மலமென்பது இருளென்ற சொல்லினா லேயே பெரிதும் விளக்கப்பட்டது.

நெஞ்சத் திருளகல வாள் வீசி

என்னுடை யிருளை ஏறத் துறந்தும்

‘மறைந்திட மூடிய மாய விருளை

இருள் திணிந் திட்டதோர்

என்றும் வருவன காண்க

தேவாரத்திலும் திருவாசகத்திலும் முப்பத்தாறு தத்துவம் விதந்தோதப்படவில்லை. அத்துவசுத்தி என் பது பின் வருஞ்செய்யுளிற் கூறப்பட்டது,

‘என்புள் ளுருக்கி யிருவினையை யீடழித்துத்
துன்பங் களைந்து துவந்துவங்க டூய்மை செய்து
முன்புள்ள வற்றை முழுதழிய வுள் புகுந்த
அன்பின் குலாத்தில்லை யாண்டானைக் கொண்டன்றே.’

கண்ணப்பரையும் சண்டேசுரரையும் பற்றி அடிகள் திருத் தோணோக்கம் என்பதில் விதந்தோதினர்.

 “பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச்
செருப்புற்ற சீரடி வாய்க்கலச மூனமுதம்
விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தங்
கருட்பெற்று நின்றவா தோணோக்க மாடாமோ.”,

” தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் றாதைதனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப வீசன் றிருவருளாற் றேவர்தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்.”

நாராயணன் சிவபெருமானுக்குப் பூசனை புரிந்து சக்கரம். பெற்றதையும் இதன்கண் கூறினார்.

”பங்கய மாயிரம் பூவினிலோர் பூக்குறையத் –
தங்கண் இடர், து) அரன் சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரமாற் கருளியவா ”

என்றது காண்க. ஒருவனை அவன் செய்த குற்றத்திற் காக ஒறுத்தல் அவன் அக்குற்றத்தின் நீங்கித் திருத்த மடைதற் பொருட்டே யென்பதை,

‘தக்கனையும் எச்சனையுந் தூய்மைகள் செய்தவா

என்றவிடத்து விளக்கிப் போந்தனர். சித்தர்கள் யோகி கள் ஞானிகள் முதலியவர்களுக்கு அவரவர் கடமைகளை அடிகள் வற்புறுத்துவதால், அவர் ஞான நிலையில் நின்றா ரென்பது தெளியப்படும்.

“தொண்டர்கா டூசி செல்லீர் பத்தர்காள் சூழப்போகீ
ரொண்டிறல் யோகிகளே பேரணி யுந்தீர்க
டிண்டிறற் சித்தர்களே கடைக்கூழை சென்மின்க
ளண்டர்நா டாள்வோநா மல்லற்படை வாராமே”

‘நிற்பார் நிற்கநில்லா உலகில்
நில்லோம் இனிநாம் செல்வோமே
பிற்பால் நின்று பேழ்கணித்தாற் –
பெறுதற் கரியன் பெருமானே”

 என்றது காண்க.

”சுழி சென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய
அழிகின் றனனுடையா டியேனுன் னடைக்கலமே”

என்ற விடத்து வாசனா மலத்தொடர்பு குறிக்கப்பட்ட தென்ப.

” உன் னருளா ரமுதத்தை
வாரிக்கொண்டு
விழுங்குகின் றேன் விக்கி னேன் வினை
யேனென் விதியின்மையால்
தழங்கருந் தேனன்ன தண்ணீர்
பருகத்தந் துய்யக் கொள்ளாய்”

என்றது மது.

‘ சீவோபாதி யொழித’ லென்பதில் கடவுளோடு இரண்டறக் கலந்தபோதுள்ள சிவப்பெரு வாழ்வின் அமைவு நிலை தெள்ளிதின் விளக்கப்பட்டது. அதனுள், ‘எண்ணிலியாகிய சித்துகள் வந்தெனை யெய்துவதாகாதே’ என்றமையால் அடிகள் அளவற்ற அற்புதமியற்றும் ஆற்ற லுடையவரென்பது உய்த்துணரற்பாற்று,

பாநயஞ் சிறந்திலங்குமாறு இறைவன் திருமேனி வடிவினை அழகாகப் புனைந்துரைக்கும் அடிகளின் பேராற் நல் திருவாசகப் பகுதிகள் சிலவற்றில் தெள்ளிதின் விளங்குகின்றது. சிவனார் திருமுடியிற் கங்கை நிலையுற் றிருப்ப மதியும் அவண் தங்கியிருப்பது, கங்கை வெள்ளம் பெருகிய சிறு குளத்துள் மலை வாழ்வார் வழங்கும் சிறு தோணி கிடப்பது போல்வதென்பார்,

“கங்கை பொங்கி வருநீர் மடுவுண்
மலைச்சிறு தோணி வடிவின் வெள்ளைக்
குருநீர் மதிபொதி யுஞ்சடை வானக் கொழுமணியே”

என்றார். பரமர் திருமுடியின்கணுள்ள வெண்டலை மாலைக் குகையிற் பதுங்கிய பாம்பு தன்னை விழுங்கி விடுமென் றஞ்சி மதி கங்கையுள் ஒளித்ததாக அடிகள் பிறிதோரிடத்திற் கூறியருளினர்.

‘வெண்டலை முழையித் பதியுடை வாளாப்
பார்த்திறை பைத்துச் சுருங்கவஞ்சி
மதிநெடு நீரில் குளித்தொளிக் குஞ்சடை மன்னவனே.’

ஒரு குளத்தில் குவளை மலர் மலர்ந்திருப்பது உமையம் மையின் திருமேனி போலவும், செந்தாமரை மலர்ந்திருப் பது இறைவன் திருமேனி போலவும், அங்குள்ள அன்னக் கூட்டம் இறைவன் திருமேனியின் வெண்டலை மாலை போலவும், நீர்ப் பாம்புகள் இறைவன் திருமேனியில் வளைந்து கிடக்கும் அரவம்போலவும் இருத்தலானும்,. மாசு கழுவுதற்பொருட்டுக் குளத்திற்கு மக்கள் வருவது போல மும்மலங்களையுங் களைதற் பொருட்டு அம்மையப் பர்பால் உயிர்கள் சேருதலானுந் , திருக்குளமானது பிராட்டியையும் பெருமானையும் ஒத்திருந்ததென்று திருவெம்பாவையிற் புனையப்பட்டது.

” பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம் போதா
லங்கங் குருகினத்தாற் பின்னு மரவத்தாற் றங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தலினா . லெங்கள் பிராட்டியு மெங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடு”

என்றது காண்க.

‘முகில்கள் நீருண்டு கறுத்து மின்னி இடித்து மழை பொழிவதை உமையம்மையின் திருமேனிபோல விளங்கி, அவள் இடைபோல மின்னி, அவள் தன் திருவடிச் சிலம்பு போல ஒலித்துத், திருப்புருவம்போல வில் லெறிந்து, சிவனன்பர்க்குந் திருவருட் பதிவுடையார்க்கும் அம்மை வழங்கும் இன்னருள்போல மழைபொழிவன’ என்றது மிகவும் உவமைநயஞ் செறிந்தது.

” முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையா
ளென்னத் திகழ்ந்தெம்மை யாளுடையா ளிட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்

பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவ
மென்னச் சிலைகுலவி நந்தம்மை யாளுடையா

. டன்னிற் பிரிவிலா வெங்கோமா னன்பர்க்கு
முன்னி யவணமக்கு முன்சுரக்கு மின்னருளே

யென்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.”

சிவபெருமானது மாதொரு பாகத் திருவடிவத்தைத் திருக்கோத்தும்பியில் ஓர் அழகிய செய்யுளாற் றெரிக் கின்றார்.

“தோலுந் துகிலுங் குழையுஞ் சுருடோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ்
சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ.”

மாணிக்கவாசகப் பெருமானது திருச்சிற்றம்பலக் கோவையார், இப்பொழுதுள்ள கோவை நூல்களி லெல்லா முற்பட்டது. ஒத்த நலனு மன்பு மமைந்த தலை வனுந் தலைவியும் நிகழ்த்துங் களவு கற்பென்னு மொழுக் கங்கள், இருபத்தைந்து கிளவிக்கொத்தென்னும் அதிகாரங்களுட் கூறப்பட்டன. ஒவ்வொரு அதிகாரமும் பல துறைகளாகவும் வகுக்கப்பட்டு ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு கட்டளைக்கலித்துறைச் செய்யுளமைக் கப்பட்டிருப்பதால், இந்நூல், நானூறு செய்யுட்க ளடங் கிய சிறு காப்பியமாகும்.

திருக்கோவையாரிற் பல இடங்களில், இயற்கைப் பொருள் வனப்பு புனைந்துரைக்கப் பட்டது.

திருவாசகத்துள் முகில்வனப் பொன்றுமே திருவண் படப் பகுதியுள் விரிக்கப்பட்டது. திருக்கோவையார் முதற்றிருப் பாட்டிலேயே தலைவியின் மேனி கொடி போன்ற நறுமண மிக்க மலர்மாலைக்கும் அவளுறுப்புக் கள் பலவும் பலவகை மலர்களுக்கும் உவமிக்கப்பட்டமை காண்க. தாமரை முகத்திற்கும் இதழிற்கும், குவளை கண்ணிற்கும், குமிழ் மூக்கிற்கும், கோங்கரும்பு நகிற் காம்பிற்கும், காந்தள் கைக்கும், உவமையா மாதலின் அடிகள்,

 “ திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர் தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள் கொண்
டோங்குதெய்வ மருவளர் மாலை “

என்றார்.

இம்மலர்கள் முறையே மருதம், நெய்தல், முல்லை, பாலை, குறிஞ்சி யென்னும் ஐந்திணைக்குரியனவாதலின் ஐந்திணை யின்பமுங் குறிப்பானுணர்த்தப்பட்டன. தலைவி யின் நடைக்கு அன்ன நடையும் பிடி நடையும் (உச) சாய லுக்கு மயிலையும், பாவையையும் (ககூ) நுதலுக்குப் பிளவு மதியையும் (கO) சுரிகுழலுக்குப் புயலையும் (கூரு) கண்

ணிற்கு மான் விழியையும் (கஉ, உசு) கண்ணின் துன் புறுத்து மியல்பிற்கும் இணங்கி யின்புறுத்து மியல்பிற்கும் பிணியையும் மருந்தினையும் (ரு) விடத்தையும் (ங) அயிலை யும் கணை யினையும், கண்ணின் ஒளிக்கு வாளினையும் (கO), பிறழ்ச்சிக்குக் கயலினையும் கெண்டையினையும் (சு) கண் ணின் வடிவிற்கு மாவிடுவினையும், புருவத்திற்கு வான வில்லையும் (கசு), செவ்வாய்க்குக் கொவ்வைக் கனியையும் (கூ) பவளத்தையும் (கூஉ) ஆம்பற் பூவையும், பல்லிற்கு வெண் முத்தத்தையும் (கசு) முகத்திற்குத் திங்களையும் (கசு), பணிமொழிக்குக் கிள்ளை மொழியையும், இனிமைக் குக் குயிலினையும் (ஙO) தோளிற்கு மூங்கிலையும் (ஙக) மின்னிடைக்குத் துடியினையும் (உக) மார்பிற்கு இணைச் செப்பினையும் (கூரு) அல்குலுக்கு அரவத்தையும் ஒப்பிட் டமை காண்க. பிற்கால நூல்களிற் காணப்படும் இவ் வுவமைகளிற் பல முதன் முதற் றிருக்கோவையாரிலே தான் வந்துள்ளன.

காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கு ‘ (எக)

‘கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரங் கோளிழைக்கும்
பாம்பைப் பிடித்துப் படங்கிழித் தாங்கு’

என்ற விடங்களில், இயற்கை நுட்பங்கள் குறிக்கப் பட்டமை காண்க.

‘வைகொண்ட ஆசி கொற்சேரியில் விற்று
கொடுங்குன்றி னீன் குடுமி’

மேற்றேன் விரும்பு முடவனைப் போல மெலியு நெஞ்சே

என்பவை இந்நூல்களுள் வந்த பழமொழிக்கு உதாரணங் களாவன.

எம்மூர்ப் பருங்குன்ற மாளிகை நுண்கள்
பத்தொளி பாயநும்மூர்க் கருங்குன்றம்
வெண்ணிறக் கஞ்சுகமேய்க்கும்’

என்ற விடத்தில், அண்மைத்தாய் வெள்ளொளி வீச்சினால் கருப்பு வெளுப்பாய்த் தெரியுஞ் சிறப்புக் கூறப்பட்டது காண்க. வேங்கை மலர்கள் உதிர்ந்து பரவிக்கிடக்கின்ற பாறையைப் புலியென்று யானை அஞ்சியொளித்தல் நகைச் சுவையொடு கலந்த இயற்கையினை யுணர்த்தும்.

“நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகநண்ணி
மறமனை வேங்கை யெனநனி யஞ்சும் “

என்றது காண்க. வேங்கை யென்ற சொல் இரு வேறு பொருளில் வந்தது நோக்கத் தக்கது. தேன் நிறைந்த

தோம்புதல் காதற்சுவை மிக்க இயற்கை நயமுணர்த்தும்.

“பந்தியின் வாய்ப்பல வின்சுளை பைந்தே
னொடுங்கடுவன் மந்தியின் வாய்க்கொடுத் தோம்பும்.”

மரங்களினின்றுங் கனி யுதிர்வதை நயம்பெற இரண்டடி களில் விளக்கினர்.

“தெங்கம் பழங்கமு கின்குலை சாடிக் கதலிசெற்றுக்
கொங்கம் பழனத் தொளிர் குளிர் நாட்டினை.”

இது, மிகவுயர்ந்த தென்னையினின்று விழுந் தேங்காய்,

கீழுள்ள வாழைக் குலைகளை உதிர்த்துக் கீழே விழுந் ததைக் குறித்தவாறாம். தலைவன் தலைவி யொருமை நேர்தலருமைக்கு உவமை கூறுவார்,

கோங்கு, வேங்கை, பாதிரி என்பவற்றின் மலர்களைப் பெண்டிர் குழலிற் சூடிக் கொள்வது அக் காலத்துக் குறிஞ்சிநில மக்கள் வழக்கமென்பது,

”குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு
கோங்கம் விராய் நறப்பா டலம்புனை வார் ”

என்றமையாற் புலனாகின்றது. ஊழிப் பெரு வெள்ளத்தை ஓர் அழகிய முறையிற் சுருங்கிய வளவில் அடிகள் குறித் தனர்.

‘ விண்ணை மடங்க விரிநீர் பரந்துவெற் புக்கரப்ப
மண்ணை மடங்க வருமொரு காலத்து மன்னிநிற்கும்.’

அண்ணல், தலைவியின் முகமலர்ச்சியைக் குறிப்பார், திருக்குளத்துள் குவளை பூத்தன வென்றனர்.

முகமடுவிற் பைந்தாட் குவளை கள் பூத்திருள் சூழ்ந்து பயின்றனவே

என்றது காண்க,

கண்ணின் விளக்கமே அகமலர்ச்சியை யுணர்த்து மென்று குறித்தவாறாம். மல்லிகையை வெண்சங்காக வும் வண்டை ஊதுவோனாகவும் ஓரிடத்திற் குறித்தார்.

மல்லிகைப் போதின் வெண்சங்கம் வண்டூத‘  

என்றார். குற்றாலத்தைக் குறித்தபோது ஆங்கு வீற்றிருந் தருளும் உமையம்மையின் திருநாமத்தை அடிகள் நவின் றருளினர்.

குழல்வாய் மொழிமங்கை பங்கன் குற்றாலத்து

என்றார்.

சில் திருப்பதிகள் திருக்கோவையாரின் கண் ஆங்காங்குக் குறிக்கப்பட்டன. கூடல்வாய் பெருந் துறை (கச) ஈங்கோய்மலை (உககூ) திருப்பனையூர் (கஙஎ) பொதியின் மலை (கசO, ஙகூச) மூவலூர் (ககூக), இடைமருது திருவேகம்பம் திருவாஞ்சியம் (உசு அ) திருப்பூவணம் (ஙாரு, (ஙஙஅ) சீகாழி (ங எகூ) என்ற திருப்பதிகளிற் பெரும் பாலன திருவாசகத்துட் கீர்த்தித் திருவகவலிற் காணப் படும். இறைவன் திருவடியை நிலத்தை அகழ்ந்து நெடிது சென்றுங் காணமாட்டாத திருமால், தில்லையம்பலத்துள் ஆடவெடுத்த பாதங் கண்டவுடன், மற்றத் திருவடியை யுங் காட்டென்று தவங்கிடந்ததாக அடிகள் புனைந்து கூறிய நயத்தினைப் பின்வரும் பாட்டினுட் காண்க.

” புரங்கடந் தானடி காண்பான் புவிவிண்டு புக்கறியா
திரங்கிடெந் தாயென் றிரப்பத்தன் னீரடிக் கென்னிரண்டு
கரங்கடந் தானொன்று காட்டமற் றாங்கதுங் காட்டிடென்று
வரங்கிடந் தான்றில்லை யம்பல முன்றிலம் மாயவனே.”

இதனால், அடிகள் காலத்தே, தில்லைக் கோவிந்தர் கோயில் தில்லைக் கோயிலின் மேலைவாயிலில் இறைவனை அவர் தலை யால் வழிபடுதற்குரிய இயைபுடன் இருந்ததென்று தெரி

கிறது.

வாகுணனாம் தென்னவ னேத்துசிற் றம்பலத்தான்

 என்ற விடத்துக் குறிக்கப்பட்ட வரகுணன் அடிகளை அமைச்சனாகப் பெற்ற அரசனின் முன்னோனாய்த் தில்லை யிற் றங்கியிருந்தவனாதல் வேண்டும். தில்லை மூவாயிரவர்’ என்ற சரித்திரக் குறிப்பும் எழுபத்திரண்டாவது பாட லுட் காணப்படுகின்றது. ‘கூடலினாய்ந்த ஒண்டீந்தமிழ்’ என்றமையால், அடிகள் காலத்தே கடைச்சங்க முடி வெய்தி யிருத்தல் வேண்டும். பாணனைப் பழித்த செய்யு ளுள் (ங அகூ) அவனை ‘ஆத்தின்னி’ என்றிகழு முறை காணப்படுதலின், பாணர் ஆவின் ஊனையுண்ணும் புலை யரோ டொத்த மரபினரென்று தெரிகிறது. உயர் மரபினர் அக்காலத்தும் அருளொழுக்க முடையராயத திகழ்ந்தனரென்பது, மடலேறுந் தலைவனுக்கு அது அருளா லரிதென விலக்கிய விடத்துச் சுட்டப்பட்டது.

“பெண்ணை உடனாம் பெடையொடொண் சேவலும்
முட்டையுங் கட்டழித்து மடனாம் புனை தரின்
யார்கண்ண தோமன்ன வின்னருளே”

என்றது காண்க.

புதல்வன் மேல் வைத்துப் புலவி தீர்தலைக் கூறுந் திருப்பாட்டின்கண், தலைவனின் பரத்தையர், புதல்வனின் சிற்றன்னை மார்களென அழைக்கப்பட்டமை கருதத் தக்கது. தலைவன் விழைந்த பரத்தை தலைவியை யிகழ்ந்து தன்னை வியந்துரைத்தமை கேட்ட தலைமகள், பரத்தைக்கும் ஓர் தங்கை தோன்றின், அவள் இறுமாப்பொழியுமென்ற விடத்து தலைவனின் காதற்பரத்தையர் தங்கைய ரென்று குறிக்கப்பட்டமை காண்க.

‘இறுமாப் பொழியுமன் றேதங்கை தோன்றின் என் எங்கை’

என்றது காண்க. தலைவன் கழலணிவதும் வெள்ளையுடை யுடுப்பதும், தலைவி சிலம்பணிந்து செம்பட் டுடுத்துவதும் அக்கால வழக்கமென்பது,

“மின்னொத் திடுகழல் நூபுரம் வெள்ளைச்செம் பட்டுமின்ன
ஒன்றொத் திடவுடை யாளொடொன் றாம்புலி யூரனென்றே”

டொத்த மற்றொரு ஆண் மகனுக் குரியளாதல் உல கியற்கை யென்பார்,

‘சுரும்பிவர் சந்துந் தொடுகடன் முத்தும் வெண் சங்குமெங்கும்
விரும்பினர் பாற்சென்று மெய்க்கணியாம்…….

கரும்பன மென்மொழி யாருமந் நீர்மையர் காணுநர்க்கே’

என்றார். சந்தனமும் கடலில் விளைந்த முத்தும் வெண் சங்கும் தாம் பிறந்தவிடங்கட்குப் பயன் படாது தம்மை விரும்பி யணிவாரிடத்தே சென்று அவர் மெய்க்கு அணி யாவன ; அவைபோலவே மென்மொழி மங்கையரு மாவர் என்றவாறு. ஓவியமெழுது மாற்றலைப் பண்டைத்  தமிழ்மக்கள் பெரிதும் வளர்த்து வந்தனர். தலைவியின் உருவினை யெழுதி அதை மடற்குதிரைக்கு முன் வைத்தே மடலூர்தல் வழக்கம். தலைவியின் குரலையுஞ் சில வுறுப் புக்களையும் எழுதுதல் அரிதெனக் குறிக்குந் தோழி கூற்றாகவந்த பாட்டு மிகுந்த நயமுடையது.

“யாழு மெழுதி யெழின் முத் தெழுதி யிருளின் மென் பூச்
சூழு மெழுதியொர் தொண்டையுந் தீட்டியென் றொல் பிறவி யேழு மெழுதா வகைசிதைத் தோன்புலி யூரினமாம் போழு மெழுதிற்றொர் கொம்பருண் டேற்கொண்டு போதுகவே”

இஃதென் சொல்லியதெனின், தலைவியின் மொழி போன்ற யாழினையும், புன்முறுவல் பூக்கும் எயிறு போன்ற முத் துக்களையும், கூந்தல் போன்ற இருட் செறிவையும் கூந்த லின் அமைத்த முறையிலுள்ள பூமாலையையும், வாய் போன்ற தொண்டைக் கனியையும் கண்கள் போன்ற பிஞ்சுமாவடு வகிரையும் எழுதி யமைத்ததோர் கொம் புண்டாயின், அதனை முன்வைத்து மடலேறும் என்ற வாறாம். உவமானப் பொருள்கள் உவமேயமாக வமைக் கப்பட்டன. தன் பிறவி யேழும் எழுதவியலாமை போல், இவையுமா வென்று குறித்தவாறாம். உடன் போக்கின் கண், தோழி தலைவன் தலைவியை எஞ்ஞான்றும் பாது காத்தலை வற்புறுத்துவான் கூறுமுரை ஓம்படுத்துரைத்த லென்பதனால், ஓம் என்பது காப்பு என்ற பொருளுடைய தென்பது துணியப்படும். இறைவன் அமைத்த அற் முறை கூறும் அருமை நிலை திரியாமையும் கடல்வற்றாமை யும் இதன் கண் சுட்டப்பட்டது. தலைவன் அருள் தலை வியினின்று வேறுபடுமாயின், அறநிலை திரியும் ; கடல் வற்றும் என்று குறித்தார்.

” அறந் திருந் துன்னருளும்பிறிதாயி னருமறையின்
திறந் திரிந் தார்கலி யும்முற்றும் வற்றுமிச் சேணிலத்தே”

என்றமை காண்க, ! தலைவி தலைவன்பாற் காதலுறுவதை ‘நெருப்புறு வெண்ணெயு நீருறு முப்பும்’ (ஙகரு) என் அவமித்தார். ‘சொற்பாலமுது இவள் யான் சுவை ‘(அ) என்றதும் இருவர் நட்பின் ஒருமை யுணர்த்தும். ‘ நா னிவளாம் பகுதிப்பெற்ற ‘ என்றமையால், தலைவன் தலைவி யின் வயமாய் நிற்றல் குறிக்கப்பட்டது. ‘ இதோ வந்து நின்றதென் மன்னுயிரே’ (கூக) என்ற விடத்து, தலைவி தலைவன் மன்னு தற் கேதுவாய் உயிரெனப்பட்டமை காண்க. தலைவன் றலைவி யொருமைப் பாட்டைத் தோழி மதியுடம்படுதலின் கட் கூறுவது மிக்க நயஞ் சிறந்தது.

காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவ ராகத்து ளோருயிர் கண்டனம் யாமின்றி யாவையுமா மேசத் தொருவ னிரும்பொழி லம்பல வன்மலையிற் றோகைக்குந் தோன்றற்கு மொன்றாய் வருமின்பத் துன்பங்களே.”

“உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினும் !!.
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று’ (பொருள், கள. உஉ.)

என்னுந் தொல்காப்பியக் கருத்து

“தாயிற் சிறந்தன்று நாண்டைய லாருக்கந் நாண்டகைசால்
வேயிற் சிறந்தமென் றோளி திண் கற்பின் விழுமிதன்று”

என்ற விடத்து மொழியப்பட்டது. உயிரினைக் கூறாது தாயினைக் கூறினர்; உயிரினும் தாய் சிறப்பாகப் போற் நற்குரிய ளாகலினென்க. ‘ சிறியேன் சொல்லும் வாச கமே’ (

கஅ) ‘ தமியேற் கொரு வாசகமே’ (கஎஎ) ‘புற்றில் வாளரவன்’ (ஙஉO), ‘ பைங்குவளை’ (ஙசுங), ‘ மூவர் நின்றேத்த’ (ஙக எ), முதலியன. திருவாசகச் சொற்களையுங் கருத்துக்களையும் நினைவுறுத்துவன. ‘கூற்றாயின’ (ஙஅஉ) என்பது அப்பமூர்த்திகளின் முதற் றேவாரத்தை நினைவுபடுத்தும். திருக்கோவையாருள் பலபாட்டுக்களில், தில்லைச் சிற்றம்பலவர்மாட் டன்பிலா தவரே துன்புறுவார்க்கு உவமிக்கப்பட்டனர். சஅ , எரு, அஎ, கஙக, கா, கஅகூ, ககூஉ, உசு, உகஉ, உஎ, உஉகூ, உசO, உ , உருகூ. உருச, உசு, உசுங, உ எஅ, உ அகூ, உ அச, கூசு, கூஉக, க.சO, கூசரு’, கூரு ந, கூசுஎ என்னும் எண்ணுடைய திருக்கோவைப் பாட்டுக் களை நோக்குக. அவன தருள் பெற்றவரே பேரின் புற்றார்க்கும், மகிழ்ச்சியுற்றார்க்கும், ஒப்புளாராக்கப்பட் டனர். அடிகள் இறைவன் தம்மை யாட்கொண்டு பிறவி யறுத்ததையும் பல விடங்களிற் கூறிப்போந்தனர். ‘பிறவி பெறாமற் செய்தோன்’ என்றது காண்க. தலைவியின் கண்களைப் புனைந்துரைப்பார் அவை தமதன்பின் விரிந்து, பாசம்போற் கறுத்து, தில்லையம்பலம் போல் ஒளியை யுடையவாய்த் திருநீறென வெளுத்து இறைவன் புகழ் மொழிபோல் நீட்சியுடையன என்றமை காண்க.

“ஈசற் கியான்வைத்த வன்பி னகன்றவன் வாங்கியவென்
பாசத்திற் காரென் றவன்றில்லையின்னொளி போன்றவன்றோன் பூசத் திருநீ றெனவெளுத் தாங்கவன் பூங்கழல்யாம் பேசத் திருவார்த்தை யிற்பெரு நீளம் பெருங்கண்களே.”

ஈண்டும் இறைவன் தன் பாசத்தை வாங்கியதும், அவன் பாற் றாம் பேரன்பு பூண்டதுங் குறித்தமை நோக்குக. கல்வி நலங்குறித்த விடத்து, கல்வியுடையார் இறையடி தொழுவார்போல் அளவற்ற பெரும்பய னுறுவார் என் றமையாற் கல்விப்பெருஞ்சிறப்பும், அதன் பெரும்பயன் இறைவழிபா டென்பதும் குறிப்பாக உணர்த்தினர்.

“சீரள வில்லாத் திகழ்தரு கல்விச்செம் பொன்வரையி
னாரள வில்லா வளவு சென் றாரம் பலத்துணின்ற
லேரள வில்லா வளவின ராகுவ ரேந்திழையே.”

செல்வச் சிறப்பு

வறியா ரிருமை யறியார்

முனிவரு மன்னரு முன்னுவ பொன்னான் முடியும்

என்றவிடத்து, எதிர்மறையானும் உடன்பாட்டானு முணர்த்தப்பட்டது. இத்திருக்கோவையார் இறுதிப் பாட்டில், ‘ மற்றியாவர்க்கு மூதியமே’ என்ற குறிப்பாற் சிற்றின்பம் விழைவார்க்கும் பேரின்பங் கருதுவார்க்கும் எக்கலை பயில்வார்க்கும் இந்நூல் நயந்தருவது என்ப தினி துணரக் கிடக்கின்றது. இதுபற்றியன்றே பெரியோர்,

“ஆரணங் காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின்
காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர்
ஏரணங் காணென்ப ரெண்ண ரெழுத்தென்பரின் புலவோர்
சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே”

என்றனர்.

திருவாசகத்தின் முதனான்கு பகுதியின் கருத்தினை யுஞ் சுருக்கமாக ஆராய்வாம்.

சிவபுராணம் : சிவபுராணத்துள் உலகியலுக்குரிய திருவைந்தெழுத்து முதற்கண் வாழ்த்தப்பட்டது. உயிர் கள் கட்டுற்ற நிலையில் தமது அறிவினை உலகின்கட் செலுத்தும் மறைப்புச் சத்தியின்வயமாய் நிற்றலின், ஈண்டுக்கூறிய திருவைந்தெழுத்தில் நகரமானது முதலில் நின்றது. மறைப்புச் சத்தியையே ஆதிசத்தி யென்ப. ஆதிசத்தி பந்தத்திற்கும் பராசத்தியாகிய அருட்சத்தி வீட்டிற்குக் காரணமாதலின், உலகத்தோற்றத்திற் கேது வாகிய ஆதிசத்தியையே முதற்கண் இதனுள் விதந் தோதினார். புராணமென்பது பழைய வரலாறாதலானும், வரலாற்று முறையில் மிகத் தொன்மையானது உலகத் தோற்றமாதலானும், உலகத்தோற்ற முதலியனவற்றை இறைவனது திருவருட் செயலின்வைத்து விளக்கக் கருதிய அடிகள் அதற்கேதுவாகிய ஆதிசத்தியைத் திருவைந்தெழுத்தின் வாயிலாக வாழ்த்தின ரென்க. ‘நமச்சிவாய வா அழ்க’ என்றது அது. படைப்பின்கண் நாத தத்துவமாகிய ஒலிமுதலே தொடக்கத்தில் தோற்ற முறுதலானும் அத் தத்துவத்தைச் சிவதத்துவமென்று வழங்குதலானும் அத்தத்துவத் தலைவனாகிய இறைவனை நாதன் என்ற பெயரால் விளக்கினர். ‘நாதன்றாள் வாழ்க’ என்றது காண்க. அறிவினில் அருளால் மன்னி’ என்றபடி அருட்சத்தி வாயிலாக உயிரினது அறிவின் கட் கலந்து அவற்றின் உயிர்க்குயி ராய் அவற்றை நடத்து தலாலே அச்செயலுக்குரிய சத்தி தத்துவ முதல் வனைச் சிவபுராணத்தின் இரண்டாவது அடியில் வாழ்த்தினர், ‘ என்னெஞ்சி னீங்கா தான் றாள்வாழ்க’ என்றதும் அது, அருளுதலென்னும் ஐந்தாந் தொழிலுக்குரிய சதாசிவ முதல்வரை மூன்றாவதடியில் வாழ்த்து முறை யானே சதாசிவ தத்துவத்தைக் குறிப்பா னுணர்த்தினர். குருமணிதன் றாள் வாழ்க’ என்பது காண்க. அன்பர் கட்கு அருளுருக்கொண்டு இன்னருள்கள் புரிவதற்குரிய மகேசுர தத்துவத்தைச் சிவபுராணத்தின் நான்காவதடி யில் ‘ அண்ணிப்பான்’ என்ற சொல்லாலும், உயிர்கட்குச் சுட்டறிவினை உதிப்பித்தற்குக் காரணமாகிய சுத்த வித்தியா தத்துவத்தை ‘ ஆகமமாகி’ என்ற சொல்லாலும் பெறவைத்தமை காண்க. சுத்த தத்துவங்களில் ஐந் தொழிலையும் தாமே யியற்றும் முதல்வன் ஒருவனே கீழ்ப்பட்ட தத்துவங்களிலே முத்தொழில் நிகழ்த்துவதற் குக் காரணமாகிய மூர்த்திகள் பலரையும் அதட்டித்து நிற்றலின், ‘ அநேகன் ‘ என்றார். அங்ஙனம் அநேகனாயும் தனது இறைமைத் தன்மையிற் குறைவுபடா தவனென் பார், ‘ இறைவனடி வாழ்க’ என்றார். இங்ஙனம் பொதுப் பட இறைவன் செய்யும் நன்மையைக் கூறிய பின்னர், தமக்குச் சிறப்பாக அவன் புரிந்த அருட்டிறத்தை விதந் தோதுவாராயினர்.

அவனரு ளாலே யவன்றாள் வணங்கி

என்றமையால், இறைவனை வணங்குவதற்கு அவனுடைய திருவருள் வேண்டுமென்பது பெறப்பட்டது. அறநெறி யில் நின்று உலக நிலையாமை கண்டு வீடு பேற்றின் கண் அவா மிக்குடையார்க்கே இறைவன் றிருவருள் புரிவன்.

முனிவி லாததோர் பொருளது கருதலும்

தெய்வ மென்பதோர் சித்தமுண்டாகி

என்றது மது.

சிவனவனென் சிந்தையுள் நின்ற வதனால்

என்று ஈண்டுக் குறித்ததும் அக்கருத்தை வலியுறுத்துதல் காண்க. இறைவனது அருளும் அடியவரது அன்பும் வித்தும் மரமும் போல் ஒன்றுக்கொன்று ஏதுவாயிருத்தல் வாயுசங்கிதையுள் ஆங்கவ னருளால் பத்திநன் குண் டாம், பத்தியால் அவனருளுண்டாம்’ என்றுரைத்தவாற் றால் தெளியப்படும். பத்திக்குக் காரணம் அறம் என் பதும் ஆண் டுணர்த்தப்பட்டது.

“ஆங்கவ னருளாற் பத்திநன் குண்டாம்
பத்தியா லவனரு ளுண்டாம்
வீங்கிய பத்தி பற்பல பிறப்பில்
வேதங்க ளுரைத்திடும் படியே
தீங்கறு கரும் மியற்றிய பலத்தாற்
சிவனருள் செய்திட வருமால்
ஓங்கிய பத்தி யாற்சிவ தரும
மொழிவறப் புரிந்திடப் படுமால்.”

பல்வகைப் படைப்புகளும் செவ்விதிற் றிகழ்வதற்கு ஒளி வேண்டப்படுமாதலின், ‘விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்” என்றார். கிறித்து விவிலிய நூலிலும் கடவுள் ஒளியை முதற்கண் படைத்தார் என்றது காண்க. நிற்பனவும் நடப்பனவுமாகிய பல்வகை உயிர்களைக் குறித்த விடத்து எழுவகைப் பிறப்புங் குறிக் கப்பட்டன. புழு, பாம்பு என்பன ஊர்வனவற்றையும், நீர் வாழ்வனவற்றையும் அடக்கிநிற்கும். பேய்க்கணம் அசுரர் முதலியவை தேவப் பிறப்பினுள் அடங்கும். கணங்களென்றது பூதகணங்களை. கல்லாய்’ என்றது. புல்லாவதற்கு முன் கல்லினிடை காண்டற்கரிய நுண்ணிய உருவொடுகிடந்த உயிர்களைக் குறித்தற்கு. அவை கல்லின் வேறாகப் பகுத்தறியப்படுமாறின்மையின், அவற் றைக் கல்லா யென்றார். நிலத்தி லகழ்ந்தெடுக்கும் பொன் வெள்ளி முதலிய தாதுப்பொருள்களிடத்தும் உயிர்ச் செயல் காணப்படுகின்றது என்று டாக்டர் போஸ் முதலிய உயிரியல் நூலார் கூறுவதும் இக்கருத்தை வலி யுறுத்தும். அண்டத்துள் நாதவடிவாய் நின்று எவற்றை யும் இயக்குவது ஒப்ப , பிண்டத்துள்ளும் ஓங்காரமாய் நின்று உயிரினையும் உடம்பினையும் தொழிற்படுத்தும் முதல்வனென்பார், “உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா என்றார். போக்குவாய் என்னைப் புகுவிப்பாய்’ என்றது மறைத்தற்றொழிலைக் குறிக்கும். பந்த மும் வீடும் உணர்த்தப்பட்டன என்பாரும் உளர்.

“ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் ”

என்றதனாலே ஐந்தொழிலுங் குறிக்கப்பட்டன ; ‘ஆழ்ந் தகன்ற நுண்ணியனே’ என்றமையால் முதற்பூதம் குறிக் கப்பட்டதென்றும், ‘வெய்யாய் தணியாய் ‘ என்றமை யால் தீயும் நீரும் குறிக்கப்பட்டன வென்றும், காணப் படும் மூன்று பூதங்களுங் குறிக்கப்படவே, காணப்படாத இரண்டும் பெறப்படும் என்றும் , ‘ இயமான’ னென்றமை யால் உயிர் குறிக்கப்பட்டதென்றும் இயம்பி உயிரில் பொருட்காரணமாகிய ஐம்பூதங்களின் கண்ணும் இறை வன் கலந்திருப்பது ஈண்டுச் சுட்டப்பட்ட தென்ப. இறை வன் முத்தொழிற்படான் என்பார் , “ஆக்க மளவிறுதி யில்லாய் ” என்றவிடத்து ஐம்பூதங்களின் நிறம் உணர்த் தப்பட்டது. இறைவனது ஐம்முகத் திருமேனியில் உச்சி முகம் பளிங்குநிறமாயும், கிழக்கு முகம் பொன் நிறமாயும், தெற்கு முகம் கரிய நிறமாயும், வடக்கு முகம் செம்மை நிறமாயும், மேற்கு முகம் பால்நிறமாயு மிருத்தல் காண்க. வானிற்கு நிறம் பளிங்கின தென்றும் காற்றுக் கறுப் பென்றும், மண், புனல், அனல் முறையே பொன்மை, வெண்மை, செம்மை நிறங்கள் உள்ளன வென்றுந் தத்துவ நூல்கள் பகர்வதை யுணர்க. ஐந்து திருமுகங் களின் நிறம் சிவதரு மோத்திரத்திற் றெளிவாய்க் கூறப் பட்டது.

“உச்சிமுகம் ஈசானம் ஒளிதெளியப் பளிங்கே
நிச்சயித்த முகத்தின் கீழ்ப் பூர்வதிசை நோக்கி
நிகழுமுகம் தற்புருடம் கோங்கலர்போல் நிறமே
அச்சுறுத்தும் அகோரமுகம் அறக்கரிது கராளம்
அவிழ்தாடி வலத்தோளில் தென்னோக்கி
அமரும் செச்சைநிறத் தெரிவைமுகம்
இடத்தோண்மேல் வாமம்
சிறுபுறத்தின் முகஞ்சத்தி யோசாதந் திதழ்பால்.”

‘அறம் பாவம்’ என்ற சொற்கள் இருவினைகளை உணர்த்தி நின்றன. அறம் என்பது தமிழ்ச்சொல்லா யிருத்தல் போலவே பாவ மென்பதுந் தமிழ்ச்சொல்லே யென்பாரு முளர். பாவுதல் என்றாற் பரவுதல் என்று கருத்து. வரையறுக்கப்பட்ட அறவழியிற் செல்லுதல் நல்வினை என்றும் வரம்பிற்குள் நில்லாது உள்ளம் ஈர்த்த வழியே பரந்து செல்லுதல் பாவமாகிய தீவினை என்றும் கருதுக. இதனாற் கன்மமலங் குறிக்கப்பட்டது. ‘மூடிய மாய இருளை’ என்ற விடத்து உடம்பின் றொடர்பால் வரும் மயக்கமாகிய மாயாமலங் குறிக்கப்பட்டது. ஆணவமலத்தை நீக்கவே உடம்பு கொடுக்கப்பட்டது. அவ் வாணவமலம் அஞ்ஞானம் எனவும் படும். ‘அஞ் ஞானந்தன்னை அகல்விக்கு நல்லறிவே ‘ என்ற விடத்து அது குறிக்கப்பட்டது. மும்மலமாகிய பாசத்தை இறை வன் நீக்குதலால் , பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கு மாரியனே’ என்றார்.

‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்’ என்ற விடத்து ‘உணர்ந்து’ என்பது நுகர்ந்து உணர்ந்து என்று பொருள்படும். உரை, கருதல் என்னும் ஈரளவையினும் நுகர்ச்சியாகிய காட்சியே சிறந்த கருவியாதல் தெளிக. ‘செம்பொருள் காண்பது அறிவு’ என்ற திருவள்ளுவ நாயனார் கருத்தையும் உற்று நோக்குக.

கீர்த்தித்திருவகவல் : கீர்த்தித்திருவகவலின் முதற் கண் தில்லை மூதூர்’ என்றது எல்லாவுலகங்களின் தோற்றத்திற்கும் அடிப்படையாகிய முதலிடம் என்ப. அவ்விடத்தே நடத்துந் திருக்கூத்தினால் உலகங்களைத் தோற்றுவித்தும், பின்னர்த் தோன்றும் உயிர்களை உள் ளத்தே நின்று அவற்றை இயக்குவித்தும், படைப்பு முதலிய தொழில்களினால் அளவற்ற பல் வேறு வகைப் பட்ட கடவுட்டன்மைகள் புலனாகும் வண்ணம் சிறப் பாகத்திகழ்ந்தும், வெவ்வேறு உலகங்களிலுள்ள தலைவர் களும் பிறரும் சுட்டறிவாற் றத்துவ வுண்மை உணர்ந்து

உய்தற் கேதுவாகிய கலைஞானத்தைத் தோற்றுவித்தும், அன்னோர் பாசநீக்கத்துக்குரிய ஞான்று சுட்டறிவிற் கேது வாகிய கலை ஞானத்தை மறைப்பித்தும் இறைவன் பொது வாக ஆட்கொள்ளும் முறைமையை விளக்கிய பின்னர் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு திருவடிவங்கொண்டு இறைவன் அவர்களை ஆட்கொண்டருளிய சிறப்பு முறை களை ஆசிரியர் எடுத்துக்காட்டு முகத்தால் விளக்குவா ராயினர். ‘ என்னுடை யிருளை யேறத் துறந்தும்’ என்ற விடத்து இருள் என்றது ஆணவ மலத்தைக் குறித்து நின்றது. இருள் என்ற சொல்லைத் தனியாக வழங்கு மிடத்து அஃது ஆணவமலத்தை உணர்த்துமென்றும், அடைமொழிகளோடு சேர்ந்துழி ஏனையவற்றை யுணர்த்து மென்றும் அறிக. சிவபுராணத்துள் ‘மாயை இருளை ‘ என்ற விடத்து மாயாமலங் குறிக்கப்பட்டது. ‘ இருள் திணிந் தெழுந்திட்டதோர் வல்வினை’ என்ற விடத்துக் கன்ம மலம் குறிக்கப்பட்டது. ‘ இருள் சேர் இருவினை’ என்ற குறட்பகுதியில் இருள் என்பது இருவினைக்கு அடைமொழியாக வந்தது காண்க. இருண்டு பந்தித்து நின்ற பழவினை என்ற தேவாரமு மது.

மகேந்திரமலையில் இருமுறை ஆகமங்களை இறைவன் தோற்றுவித்ததாகத் தெரிகின்றோம். ‘ மன்னுமாமலை மகேந்திர மதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளி யும்’ என்று முதற்கூறிய பின்னும், ‘மற்றவைதம்மை மகேந்திரத் திருந்து, உற்றஐம் முகங்க ளாற்பணித் தருளி யும்’ என்றருளிச் செய்தமையால் அது தெளியப்படும். முதலில் உமையம்மையார்க்கும் பின்னர் ஐந்து திருமுகங் கள் வாயிலாக ஐந்து முனிவர்கட்கும் ஆகமம் அறி வுறுத்தியதாகக் கருத இடமுண்டு. வலைவீசிய திருவிளை யாடலினால் ஒரூழியிற் றோன்றிய ஆகமம் பிறிதோர் ஊழி யில் மறைவுற்றமையால் இறைவன் அவற்றை மீட்டும் வெளிப்படுத்தினன் என்பது அறியக்கிடக்கின்றது. மகேந் திரம் பொதிய மலைக்குத் தெற்கேயுள்ளதென்று சிவ தரு மோத்தரங் கூறுகின்றது. இவ்வகவலில் ‘ மந்திரமாமலை மகேந்திர வெற்பன்’ என்று பிறிதோரிடத்திலும் அருளிச் செய்தமை உணர்க. திருவார்த்தை என்னும் பதிகத்தில் தூவெள்ளை நீறணியும் எம்பெருமான் சோதி மகேந்திர நாதன், ‘வேடுருவாகி மகேந்திரத்து மிகுகுறை வானவர் வந்து தன்னைத் தேடவிருந்த சிவபெருமான்’ என்ற இடங் களில் மகேந்திரத்தை விதந்தோதினமை காண்க. நந்தம் பாடி என்ற இடத்திலும், உத்தரகோச மங்கையிலும், திருவாரூரிலும் இறைவன் ஞானமுணர்த்தும் அருட்குரவ னாகத் திகழ்ந்தனன் என்று கீர்த்தித்திருவகவலில் குறிக் கப்பட்டது. கல்லாடம், பஞ்சப்பள்ளி, திருவேகம்பம், திருவாஞ்சியம் என்னுமிடங்களில் அம்மையுடன் இறை வன் கலந்து தோன்றி அருள் செய்தனன் என்று விதந் தோதப்பட்டது. விதந்தோதாத விடத்தும் முதற்கண் திரு வருட்சத்தி பதியப்பெற்ற பக்குவமுடையார்க்கே இறை வன் சிவப்பேறு நல்குதலால் , கூறுடைமங்கையுந் தானும் வந்தருளி யேறுடையீசன் இப்புவியை உய்’விக்கின்றனன் என்று தெளிக. இறைவனின் திருவடிவம் அருள்வடிவமா தலின், அவன் திருவுருக்கொண்டு அன்பர்க்கருளும் வண் ணம் வெளிப்பட்டபோ தெல்லாம் அவனும் அம்மையும் உடனெழுந் தருளுவதாகவே கூறுதல் மரபு. ஆட்பால் வர்க்கருளும் வண்ணமும் ஆதிமாண்பும் கேட்பான் புகில் அளவில்லை’ என்றதற் கேற்ப, ‘வேறுவேறு உருவும் வேறுவேறு இயற்கையும் நூறு நூறாயிரம் இயல்பின் தாகி’ என்றார். இங்ஙனங் கூறியவாற்றால் இவ்வகவலுள் விதந்தோதிய அருட்செயல்கள் எடுத்துக் காட்டாமாதல் மாத்திரையேயா மென் றுணர்க..

கீர்த்தித் திருவகவலுள், பெரும்பான்மையும் பாண் டிய நாட்டில் இறைவன் இயற்றிய திருவிளையாடல்கள் எடுத்தோதப்பட்டன. கல்லாடம் , சாந்தம்புத்தூர், வேலம்புத்தூர், திருப்பனையூர் , திருப்பூவணம், பட்ட மங்கை , ஓரியூர் , பாண்டூர், தேவூர்த் தென்பால் தீவு, குற்றாலம் முதலிய இடங்கள் பாண்டிய நாட்டிலுள்ள னவே, ‘ குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசை

என்ற விடத்துக் குடநா டென்பது திருப்பெருந்துறைக்கு மேற்றிசையி லுள்ள தாய் மதுரையைச் சூழ்ந்துள்ள பாண்டிநாட்டுப் பகுதியே யென் றுணர்க. அரசர்க்குச் சிறந்த பத்துறுப்புக்கள் எனப்படுந் தசாங்கமென்பது இருவகையாக இந் நூலுட் கூறப்பட்டது. கீர்த்தித் திரு வகவலிலும் தசாங்கமென்னுந் திருப்பதிகத்திலும் வெவ் வேறு முறையிற் கூறப்பட்டமை காண்க. அகவலில் நீற்றுக் கொடியும், தசாங்கத்தில் ஏற்றுக்கொடியுங் கூறப் பட்டன. பாசநீக்கத்தினையுஞ் சிவப்பேற்றினையும் நினை வுறுத்தும் திருநீற்றின் பொலிவே இறைவன் அருட்குரு வாய் வந்தகாலை அடிகள் உள்ளத்தைக் கவர்ந்ததா மாக லின், தன்னை வெல்லுதற் கெடுத்த கொடியென்று அதனைச் சிறப்பித்தனர். எல்லார்க்கும் பொதுவாகிய அறத்தை யுணர்த்தும் ஏற்றுக் கொடியைத் தசாங்கப் பொதுமை கூறும் பதிகத்தே விதந்தனர். ஆனந்தமே அவனுடைய ஆறென்றும், பாண்டிநாடே அவனுடைய நாடென்றும், உத்தர கோசமங்கையே அவனுடைய ஊரென்றும், புரவியே அவனுடைய ஊர்தியென்றும், நாதப்பறையே அவனுடைய பறையென்றும், முத்தலைச் சூலமாகிய கழுக்கடையே அவனுடைய படையென்றும், அருண்மலையே அவனுடைய மலையென்றும், ஈரிடத்தும் ஒத்த முறையிலேயே குறித்தருளினர். அவன் தேவர் கட்கெல்லாம் தேவனென்ற கருத்தினையே தேவதேவ னென்ற சொல்லுந் தேவர் பெருமா னென்ற சொல்லும் உணர்த்துமா தலின் , அவன் திருப்பெயரும் ஒன்றாகவே ஈரிடத்துங் குறிக்கப்பட்டது. மாலையைக் கூறுமிடத்து அகவலுள் கழுநீர் மாலையும், தசாங்கத்துள் அறுகின் தாரும் கூறப்பட்டன. தமக்கு அருள் புரிந்த காலத்து முதற்கண் கழுநீர் மாலையையும், பின்னர் அறுகின் தாரை யும் இறைவன் அணிந்திருந்தனன் போலும். ‘ தாளி அறு கின் தாராய் போற்றி’ என்று போற்றித்திருவகவலின் கண் குறித்தமையுங் காண்க அடிகள் இறைவன் தில்லைக்கு வரும்படி பணித்தருளிய செய்தியும் இவ்வகவ லுள் உரைத்தமை காண்க. உலகத்தோற்றத்தின்

பொருட்டு உமையம்மையோ டாடியும், அதன் ஒடுக்கத் தின் பொருட்டுக் காளி காண ஊன நடன மியற்றியும் மன்னுயிர்களை இறைவ னுய்யக்கொள்ளுதலால், கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு அருளிய திருமுகத் தழகுறு சிறுநகை ‘ யென்றார். ‘ஒளிதரு கயிலை உயர்கிழ வோனே ‘ என்ற விடத்துக் குறிக்கப்பட்ட கயிலையானது நாத தத்துவத்திற் கப்பாற்பட்டதென்று உய்த்துணர்க.

திருவண்டப்பகுதி : திருவண்டப்பகுதியுள் படைப்புப் பொருள்கள் முழுவதையும் உள்ளடக்கிய பேரிடமாகிய பிரமாண்டத்தை அண்டமென்றும், அவற்றின் பல்கோடி பிரிவுகளை உண்டைப்பிறக்க மென்றுங் கூறி, முத்தொழிற் நன்மையைப் பொதுப்பட வியந்தார். அண்டங்கள் பல என்றும், அவற்றின் பகுதிகள் உண்டை வடிவாகத் திகழ் கின்றன என்றுங் குறித்ததாகக் கருதலாம். அங்ஙனங் கருதுமிடத்து உருண்டை வடிவாகிய பல உருவங்களின் தொகுதியே அண்டமென்றும் உணரக்கிடக்கின்றது.

ஒரு வெஞ்சுடர் மண்டிலத்தை நடுவாகவுடைய உல கங்கள் பலவும் ஓர் அண்டமாகக் கூடுமென்று கருதுவாரு முளர். ஓர் அண்டத்துள் நுண்ணுடம் புடைய உயிர்கள் வாழ்தற்கு ஏற்றவாறு நமக்குக் கட்புலனாகாத சிறப் பிடங்கள் பல இருத்தல் கூடும். அவற்றைப் புவன மென்று கூறுப. இறந்த உயிர்கள் செல்லும் உலக மானது நுண்ணிய தன்மையுடையதாதலின், நம்மவர் கண்ணுக்கு அது புலப்படுவதில்லை. நமது சமய நூல் களிலே இயமனது உறைவிடமும் பிற திக்குப் பாலகர் களின் உறைவிடமும் மேருவின் முடியில் உள்ளனவென்று கூறப்பட்டிருப்பதால், மேருவும் கட்புலனாகாத நுண்ணிய தோற்றமுடையதென்று கருதற்பாலது. சமய நூல்கள் அண்டப் பகுதிகளைக் கூறுமுறை , உண்மையைச் செவ்வி தின் விளக்குந் தெளிவோ டமையவில்லை. ஆதியில் எழுதப்பட்ட அவற்றின் வரலாறு பற்பல காலங்களில் மாறுபாடடைந்தமையால், இப்போதுள்ள ஏடுகள் உண் மையை நேரே மொழியலாகாதன வாயின. ஆதலால்  அவை பொய்யானவையென்று சிலரால் ஒதுக்கப்படுகின் றன. அங்கனம் ஒதுக்குதலுந் தக்கதன்று. பொய்யினின்று மெய்யைப் பிரித்தறியவே முயலவேண்டும். உல கங்கள் எண்ணிலா தன என்றும், அவை வெவ்வேறு தொகுதிகளாகப் பகுக்கப்பட்டகாலை அண்டமென்று பேர்பெற்று நின்றன என்றும் இதுகாறுங் கூறியவாற்றால் எளிதில் அறியப்படும். சைவ நூல்கள் நிலமுதல் நாதம் ஈறாக ஙசு தத்துவங்கள் கூறி, ஒவ்வொரு தத்துவத்தினும் அண்டங்கள் பலவுள்ளன என்று தெரிக்கின்றன. கீழுள்ள தத்துவங்களைப் பார்க்கிலும் மேலுள்ளவைகள் ஒன்றுக் கொன்று பெரிதும் விரிவுடையன ஆகலான், அண்டங் களும் அவ்வாறே விரிந்து பெருகியுள்ளன. ஆதலாற்றான், ஆசிரியர் சிவஞான யோகிகள் சிவஞானமா பாடியத்துள் பின்வருமாறு கூறின ரென்க.

‘சாதாரணமான அப்பு தத்துவ அண்டம் பிருதிவி யண்டத்தளவிற் பதிற்று மடங் கேற்றமாகிய ஆயிரங்கோடி யோசனை மானமுடைத்து. அவ்வண்டங்களும் எண்ணி றந்தன. இவ்வாறே சாதாரண தேயு தத்துவ முதற் சாதா ரண மூலப்பகுதி தத்துவங்காறும், கீழண்டத்தை நோக்கி மேன்மேலண்டம் பப்பதிற்று மடங்களவு ஏற்றமாக வுடை யன வெனக்கொள்க. இவற்றின் விரிவினைச் சிவதருமோத் தரத்துட் காண்க.’

‘மூலப்பகுதிக்கு மேற் புருடதத்துவ முதல் மோகினி யீறாகிய ஏழு தத்துவங்களுங் கீழ்க் கீழ்த் தத்துவங்களை நோக்கி மேன் மேல் நூறு நூறு மடங்கு பிரமாணம் ஏற்ற மாக வுடையன.’

‘ இவ்வேழுக்கும் மேலாகிய சுத்தவித்தை , ஈசுரம், சாதாக்கியம் என்னும் மூன்று தத்துவங்களுங் கீழ்க் கீழ்த் தத்துவங்களை நோக்கி மேன்மேல் ஆயிரம் மடங்கு பிர மாணம் ஏற்றமாக வுடையன.’

‘சத்தி தத்துவஞ் சிவதத்துவம் இரண்டுங் கீழ்க் கீழ்த் தத்துவப் பிரமாணத்தை நோக்கி நூறாயிர மடங்கு பிர மாணம் ஏற்றமாக வுடையன. ‘

அண்டங்களெல்லாம் நுண்ணிய அணுக்கள் போல இறைவன் திருமுன் இயங்குதலால், ‘ இல்நுழை கதிரின் துன்னணுப்புரையச் சிறியவாக’ என்றார். அண்டங்கள் தோறும் அயன் அரி அரன் என்னும் மூவரும் வெவ் வேறாவர். ஆதலின் அவர்கள் தொகையும் அளப்பிலா தனவே. அவருள் அரன் நிலையில் நிற்போர் சிவபெருமான் பால் வீடு பயக்கும் உணர்வு பெற்று, பிறப்பிறப்புக் கடந்தவராதலின், அன்னோரைத் தோன்றிநின்றழியும் பிற தெய்வங்களோடு ஒருங்கு சேர்த்துக் கூறிற்றிலர். பிற தெய்வங்களுள் அயனும் அரியும் சிறந்தோ ராதலின், அன்னோரையே விதந்தோதினா. அன்னோரது உடம்பு களே முத்தொழிற்படுவனவாதலான், அவைகள் குறிப் பான். உணர்த்தப்பட்டன என்று தெளிக. பெரியவாகிய அண்டங்களும் சிறியவாகிய உடம்புகளும் தோன்றுதற் கும், தோன்றி வளர் தற்கும், விரிதற்கும், மறைந் தொடுங் குதற்குக் காரணமாகிய அடிப்படையான சுழற்சியை இறைவன் எழுப்பு தலையே,

” தோற்றமுஞ் சிறப்பு மீற்றொடு புணரிய
மாப்பே ரூழியு நீக்கமு நிலையுஞ்
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்
தெறியது வளியிற்
கொட்கப் பெயர்க்குங் குழகன் ”

என்றவிடத்துத் தொகுத்துரைத்தனர். தோன்றி மறைந் தழிவது நுண்ணுடம்பின் கண்ணும், பருவுடம்பின் கண்

ணும் நிகழ்வன ஆதலின், ‘ சூக்கமொடு தூலத்து’ என்றார். சுழற்சிக்கு உவமை சுழற்காற்றாதலின், ‘ சூறை மாருதத்து’ என்றார். சிறப்பு என்பதையே ஆங்கில நூலார் ‘ இவல்யூஷன்’ (Evolution) என்பார்கள். அறு வகைச் சமயமென்று அடிகள் கருதிய சமயங்கள் யாவை யென்னின், அவர் காலத்திற்கு முற்பட்ட மணிமேகலையுள் கூறிய ஆறு சமயங்களென்று கருதுதல் வரலாற்று முறைக் குப் பொருத்தமானது. உலோகாயதம், பௌத்தம், ஆருகதம், சாங்கியம், நியாயம், மீமாம்சகம் என்பன.

இவற்றுள் யாதுங் கூறாத உலோகாயதத்தை யொழித்துப் பாஞ்சராத்திரத்தைக் கொள்ளுவதும் பொருத்தமே. திரு வார்த்தையுள் ‘ அறுசமயம் பணிவகை செய்து ‘ என்று வந்தமையுங் காண்க.

ஒவ்வொரு சமயமுந் தாம் கைக்கொண்ட தத்துவங் களின் அளவில் நின்றுவிடு மாதலால், அவைகள் தனித் தனியே முடிவாகக் கொண்ட தத்துவங்களின் தலைவர் களே அச்சமயக் கடவுளர்களாவரென்பது சைவநூற் கருத்து. தத்துவங்களிலுள்ள புவனங்களின் அதிபதி கள் உயிரினத்தைச் சார்ந்தவரே யன்றி முழுமுதற் கடவுளர்களாகார். தத்துவமெல்லாங் கடந்த பரம்பொரு ளாகிய முழுமுதற் கடவுளை நோக்க அவர்கள் மிகச் சிறுமை யுடையோராதலின் , ‘ விண்ணோர் பகுதி கீடம் புரையுங் கிழவோ ‘ னென்றார். முழுமுதற் கடவுள் ஒரு வனே வீடுபேற்றினை யருளும் ஆற்றலுடையானாதலின், தத்துவத்தலைவர்களால் அவர் பெறும் முத்திமெய்யான வீடு பேறாகாமையை ‘இருமுச் சமயத் தொரு பேய்த் தேரினை ‘ என்றார். அளவற்ற நற்றவஞ்செய்து திருவருட்சத்தி பதியப்பெற்ற பெரியோர்க்கே இறைவன் தனது அருட் காட்சியை நல்குவானே யன்றிப் பிற எத்தவத்தார்க்கும் அதனை நன்கு புலப்படுத்தாமையால், ‘ஒளிக்கும் சோர’ னென்றார். சோரனுக்கு விலங்கிடுதல் போல அவனுக்கும் ‘மலர்மாலையாற் றாளிற் றளையிடுமின்’ என்றார். தாள் தளையிடுமி னென்பதை தாள் தலையிடுமினென்று கொள்ளு மிடத்து இறைவன் திருத்தாளினைச் சென்னியிற் சூட்டு தலாகிய முத்திநிலை குறிக்கப்பட்டதென் றுணர்க.

திருவண்டப் பகுதியுள் பரமானந்தப் பழங்கடலாகிய முகிலானது அருண்மழை பொழிந்து தொண்டராகிய உழவர்க்கு அருளமுதம் உண்பித்த அருஞ்செயல் மிகவும் அழகாகவும் விரிவாகவும் புனைந்துரைக்கப்பட்டது, இறை வன் தன்னை வலியவந் தாட்கொண்டமையால் ‘ அறை கூவி யாட்கொண்டருளி, மறையோர் கோலங் காட்டி யருளலு’ மென்றார். செம்பொருளைக் கண்டு பிறவி நீங்கப் பெற்றார்க்கு இந் நிலவுலகின்கண்ணும், தாங்குதற் கரிய பேரின்பம் இடையறாது பொங்கித் ததும்பும் என் பது ‘ அருளிய தறியேன் பருகியு மாரேன் விழுங்கியும் ஒல்லகில்லேன் ‘ ‘ வாக்கிறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன்’ ‘ அமுததாரைகள் எற் புத்துளைதொறும் ஏற்றினன்’ என்னும் திருவாக்குகளாற் றெள்ளிதிற் றெளியப்படும்.

போற்றித் திருவகவல் : போற்றித் திருவகவலுள் உயிர் கள் பல்வகைப் பிறப்பெடுத்தபின் மக்கட் பிறவியை யடைந்து, பலவகையான இடையூறுகளைக் கடந்து பேரன் பின் பயனாகச் சிவபெருமானே குருவாக வந்தருளப் பெற்று வீடுபேற்றிற்குரிய நெறியில் நிற்கும் முறையினைத் தொகுத்துக்கூறி இறைவன் புகழைப் பகுத்துப் பாடியரு ளிய சிறப்பு மிகவும் பாராட்டத் தக்கது. . உயிர்கள் ஒரு மல முடையவர்கள், இரு மல முடையவர்கள், மும்மல முடையவர்கள் என முத்திறத்தராவர். மும்மலமுடைய சகலருள் வானவர் தலைநின்றவராவர். வானவருள் திரு மாலே மிகச் சிறந்த தெய்வமாதலின், அக்கடவுளையே இதனுள் விதந்தோதினர். மும்மூர்த்திகளுள் அரன் இறைவனை நேரே கண்டு வீடு பயக்கும் உணர்வு பெற்றவ னாதலின், அங்கனம் நல்கப்பெறாதாருள் தலைநின்றவன் அரியாதலின், ‘ அவன் வழுத்தியுங் காணா மலரடி யிணை கள்’ என்றார். அயன் அரிக்குக் கீழ்ப்பட்டவனாதலா னும், ஏனை வானவருள் முதன்மையுற்றவ னாதலானும் ‘ நான்முகன் முதலா வானவர் தொழுதெழ’ என்றார். திருமால் இறைவன் அடியைத் தேடினமையே ஈண்டு அடிகள் எடுத்துரைத்தா ராதலின், ‘ அடிமுடி ‘ என்ப தற்கு – அடியின் முடிவென்றே பொருள் கொள்ள வேண் டும். இறைவனை வழுத்திய பின்னும் திருவடிப்பே றெய் தும் பக்குவம் வாய்க்கப் பெறாமையான், இறைவன் மல ரடிகளை அவன் காணானாயினான். அருந்தவத்தின் பய னாகத் திருவருட் சத்தி பதியப் பெற்றுப் பாசநீக்க மெய் தற்குரிய பக்குவம் வந்தபோது இறைவன் குருவாய்

வந்தருள் புரிவனென்ற கருத்தை ‘வார்கட லுலகில் “வழுத்துதற் கெளிதாய்’ ‘ அருபரத் தொருவன் அவனி யில் வந்து குருபரனாகி யருளிய பெருமையை ‘ என்ற விடத்து இனிது விளக்கினர். நிலத்தின் கண் யாவர்க்குங் கட்புலனாதற்குரிய உயிர்களுள் யானை பெரியதும் எறும்பு சிறியதுமாதலின், ‘யானை முதலா எறும்பீறாய ‘ என்றார். எனினும் யானையினும் பெரிய திமிங்கிலம் முதலிய நீர் வாழ் உயிர்களும் எறும்பினுஞ் சிறிய கட்புலனாகாப் புழுக்கள் முதலியனவும் இவற்றுள் அடக்கிக்கொள்க.

தப்பிக் கடக்க வேண்டிய பொருள்களுள் கருப் பையிற் றுன்பம் மிகவுங் கடுமையாதலின், அதனை விரித் துரைத்தனர். உயிரில் பொருளிடத்து வைக்கும் பற்றுப் புறப்பற்றெனவும், தொடர்புடைய உயிர்கள் மாட்டு வைக்கும் பற்று அகப்பற்றெனவுங் கூறப்படும். மனைவி மக்கள் பாலுள்ள பற்றுக் கடத்தற்கரியது. மக்களைப் பெறுவதற்குமுன் இளைஞர்க்குப் பெண்களிடை உள தாகும் பற்றானது அறிவை மயக்கி மிக்கதோர் பிணிப் பினை விளைக்குந் தன்மைத்தாதலின், அதன் கடுமையை யும் அடிகள் பாநயந்தோன்றக் கூறி இனிதுணரவைத் தார். ‘மைய லாய் இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியு ளகப்பட்டுத், தைய லார் எனுஞ்சுழித்தலைப் பட்டுத் தலை தடுமாறாமே’ என்ற விடத்துத் தையலாரைப் பிறவித் துன்பக்கடலில் உள்ள பெருஞ் சுழியென்று கூறி அதன் சுழற்சியினின்று தப்புதலருமையைக் குறிப்பா னுணர்த் தினமை காண்க. மாதரைவேட்டு மணந்த பின்னேயே மக்களரும் உறவினரும் பல்கிப் பொருளீட்டு மவாவும், குடும்பத் தொல்லையும் பிறவும் ஏற்படுதலால், பிறவேட்கை யைப் பெண்டிர் விழைவிற்குப் பின் வைத்தனர். ஆசை மிகுந்த காலத்தே அதன் வலிமையால் ஈர்க்கப்பட்டு உயிர்கள் அறிவிழந்து பித்துக் கொள்வராதலின், ‘மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும்’ என்றார்.

உலகிற் சிறப்பெய்தற்குரிய கல்வியானது பல்வகைப் பட்டு விரியும். ஒவ்வொரு கலையிலும் தேர்ச்சியடைய

விரும்புவோர் பல்பிறவிகளில் அதனைப் பயிலவேண்டியதா யிருத்தலினாலும், அத்தன்மையையுடைய கல்விகளுள் மெய்ந்நூற்கல்வி தலைசிறந்த தெனினும் அதனைக் கற்ற வண்ணமே நன்னெறி நிற்றல் அரிதாகலானும், அந்நன் னெறியை எய்துவித்தலின்றி விரிந்து கிடக்கும் பல்வேறு வகைக் கல்விகளும் வீடுபேற்றினை யுதவாவாதலின், ‘கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும் ‘ என்றார். கழி

குங் கவலையால் விழுங்கப்பட்டுத் துன்புறுவ ராதலின் ‘செல்வ மென்னும் அல்லலிற் பிழைத்தும்’ என்றார். உலகியல் வாழ்க்கை செவ்விதின் நடைபெறுவதற்கு வேண்டப்படும் உண்டி, உடை உறைவிடம், மருந்து முதலியவற்றைக் கைவரப் பெறுதற்குப் பொருள் இன்றி யமையாதாதலின் அப்பொருளில்லா தவர்கள் இவற்றைப் பெறுதற்கே வாழ்நாட்கழிப்ப ராதலானும், இவற்றைப் பெறாவிடத்துப் பொருளில்லார்க் கிவ்வுலகமில்லை ‘ என்ற வாறு இறந்தாரோடு ஒப்பராதலானும் நல்குரவென்னுந் தொல்விடம் பிழைத்தும்’ என்றார். பலவகையாகவும் இன்பவாழ்வடைய முயன்று, இந்நிலவுலகில் அதனை நல்கும் மக்களும் இல்லையென்று தேர்ந்து, அதனை ஈய வல்ல கடவுளுண்டென்று துணிந்த விடத்தேதான் கடவுள் நினைவு உறுதிப்படுமாதலின் ‘புல்வரம் பாய் பலதுறை பிழைத்தும், தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி’ என்றார். கடவுட் கொள்கை யாராய்ச்சியில் மிகப் பயின்று அன்பு வடிவாய பரம்பொரு ளுண்டென்று தெளிந்து அதனை யடையும் வீட்டு நெறியிலே செல்லத் தொடங்குங்கால், அச்செலவிற்கு இடையூறாகிய அகப் பகைஞரையும் புறப்பகைஞரையும் அடிகள் அழகாகத் தொகுத்துரைத்தனர். காம வெகுளி மயக்கம், ஈயாமை , செருக்கு, அழுக்காறு என்னுமிவைகள் எழுவதற்குக் காரணமாகிய மாயா காரியப்பொருள்கள் யாவும் ‘ஆறு. கோடி மாயாசத்திகள் ‘ என்றவிடத்துக் குறிக்க

“ மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
யோமாயை யுள்ளொளி யோராது கோடியிற்
ராமான மந்திரஞ் சத்திதன் மூர்த்திகள்

ஆமா பலவாந் திரிபுரை யாங்கே”

என்ற திருமந்திரச் செய்யுளில் மாயாசத்தி ஆறுகோடி என்று விதந்து கூறினமை காண்க.

வீடுபேற்றினை நாடும் ஒருவன் பலர்க்கும் உதவி புரியுந் தன்மையனாயிருப்பின், உதவி பெற விரும்பும் நண்பரும் உறவினரும் அவனை அந்நெறிச் செல்லாது தடுத் தற்பொருட்டு நாத்திகம் பேசுதல் உலகியல்பு. இந்திரன் அரசினை நீத்துத் தவம் புரியச் சென்றகாலை, வியாழப் புத்தேள் விண்ணவர் அரசு நிலைத்தற் பொருட்டு அவ னுக்கு நாத்திக நூலைப் போதித்தனர் என்ற கதை கேட்கப்படுகின்றது. ஞான நெறியிற் செல்லுவோர்க்குப் பயன் கருதிப் பயிலுங் கருமநெறியைப் போதித்து மேல் நெறி செலலாது தடுக்கும் மீமாஞ்சகரையே,

“விரத மேபர மாகவே தியரும்
சரத மாகவே சாத்திரங் காட்டினர் ”

என்றவிடத்துக் குறித்தனர். தன் தெய்வம் என் தெய்வ மென்று வழக்கிடும் பல கோடி சமயங்களும் தத்தஞ் சமயக்கொள்கைகளைப் பெரிதாகப் பிதற்றி மெய்ப் பொருளை யறியவொட்டாது மலைவு செய்தலின், அவற்றை அடிகள் கடிந்தனர். ! உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம், சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறும் கவலைக்கெடுத்து’ என்றதுங் காண்க. அடிகள் காலத்து வழங்கிய சமயங்களுள் புத்தமும், உலோகாயதமுமே மக்களுக்குப் பெருமயல் விளைத்தமையால் அவற்றையே விதந்தோதினர். மாயாவாதமென்பது அடிகள் காலத் துப் பௌத்த மதத்தையே குறிக்கவேண்டுமென்று திரு. மறைமலையடிகளால் திருவாசக விரிவுரையுள் விளக்கப் பட்டது. வாதவூரடிகளுக்குப் பிற்காலத்தே அச்சொல் ஏகான்ம வாதங் கூறும் சங்கரர் கொள்கையைக் குறிக்க வழங்குவதாயிற்று. அடிகள் காலத்து ஏகான்ம வாதக் கொள்கை தலையெடுத்துப் பரவவில்லை. பிற்கால மாயா வாதமும் மறைந்த பௌத்தமென்று வழங்கப்பட்டது. பௌத்த மதம், குரு உண்மை , இருவினை யுண்மை , அறிவுண்மை முதலியவற்றை யொப்புக்கொண்டாலும் அறி வினைக் கணந்தோறுந் தோன்றியழியுமென்று கூறி அஃது அற்றுப்போதலே முத்தியென்பதாலும், அறிவிலே தான் உலகந் தோன்றுவதென்றும், அறிவின் வேறாய உலகம் இல்பொருளென்றுங் கூறுதலாலும், அது சூனியவாதங் கூறுஞ் சமயமாகவே தோன்றுகின்றது. எல்லாம் உண்மை போலக் காட்டி மக்கள் மனத்தை இழுத்துச் சென்று சூனியக்கொடியைத் தள்ளுதலால் அதனைச் சண்டமாருத மென்றார். உலோகாயதன், கடவுளும் உயிரு மில்லை யென்று கூறி உயிர்க்குறுதியைத் தொலைத்தலின் அதனைக் கடுவிடமென்றார். கடவுள் உண்மை தெளிந்து அதனை நெகிழவிடாது கடைப்பிடித்து இறைவன்பாற் பயன் கருதாது பேரன்பு செலுத்துவதே வீடுபேற்றினை விரும்பி னோர் கடனென்பதைக் ‘கொடிறும் பேதையுங் கொண் டது விடாதெனும்படியே யாகி, நல் லிடையறா வன்பிற் பசுமரத் தாணியறைந்தாற் போல’ என்ற விடத்தே இனிது விளக்கினார். உலகியல் ஒழுக்கத்துச் செல்வார்க்கு வீட்டுநெறி செல்லும் பேரன்பர் நிலை பித்தர் நிலைபோற் றோன்றும். தமது அறியாமையான் உலகவர் பேரன் பரைப் பித்தர் பேயர் என்று நகையாடி எள்ளுவர்.. அதனைப் பொருட்படுத்தாது, நன்னெறி கடைப்பிடித்தல் வேண்டுமென்பார்,

‘ நாணது வொழிந்து நாடவர் பழித்துரை
பூணது வாகக் கோணுத லின்றி’

என்றார்.

போற்றித் திருவகவலுள் மதுரை, தில்லை, திருவிடை மருதூர், திருவாரூர், திருவையாறு, திருவண்ணாமலை, திருவேகம்பம், திருப்பராய்த்துறை, திருச்சிராப்பள்ளி, திருக்குற்றாலம், கோகழி , ஈங்கோய்மலை, திருப்பழனம், திருக்கடம்பூர், திருக்கயிலை, திருக்கழுக்குன்று, திருப்பூவணம் என்னுந் திருப்பதிகள் விதந்தோ தப்பட் டன. தென்னாடாகிய தமிழ்நாட்டில் ஆதியில் வழங்கிய சிவநெறியே பின்னர் எந்நாட்டினும் பரவிய தாதலின்,

‘தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கு மிறைவா போற்றி’

என்றார். இதனையே தமிழ்ப்பற்றுடையார் பேரவை களில் கிளர்ச்சி மிக வழங்கி வருகின்றார்கள். இறைவன் மாதொருபாக னென்ற கருத்தை அடிக்கடி நினைவூட்ட விரும்புவார்,

‘குவளைக்கண்ணிகூறன்காண்க
அவளுந் தானும் உடனே காண்க ‘

என்னும் திருவாசக அடிகளை முறையே முதன்மொழியாகவும் எதிர்மொழியாகவும் வழங்குதல் மிகவும்  பொருத்தமானது.

திருச்சிற்றம்பலம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *