
மணிவாசகப்பெருமான் வரலாறு கா. சுப்பிரமணிய பிள்ளை
4. புத்தரை வாதில் வென்றது
திருவாதவூரடிகள் தில்லையில் தங்கியிருந்த காலத்தே புத்தரைவாதில் வெல்ல நேர்ந்தமைக்குக் காரணத்தை ஈண்டு ஆராய்வாம். சிவபெருமானது திருவடிகளை மறவாத ஒரு பேரன்பர் பன்னாட்டு வளங்களையுங் காண விரும்பிச் சோழநாட்டு வளங்களைத் தெரிந்து தில்லையம் பலவரைத் தொழுதபின் ஈழநாட்டு வளங்களைக் கண்டறி யுங் கருத்துடன் அவண் சென்று அந்நாட்டு அரசரது தகரையடைந்து தாம்போய் இருக்குமிடங்களிலெல்லாம் ‘பொன்னம்பலம்’ என்று சொல்லத் தொடங்கினர்.
அப்போது அங்குள்ள புத்தமதத்தினர் அரசனிடஞ் சென்று, திருநீறு, கண்மணி முதலியன அணிந்த சைவனொருவன் நாடொறும் ஐயமெடுத்துண்பவன் “பொன்னம்பலம் நீடூழி வாழ்க” என்று ‘நிற்கும்போதும் இருக் கும்போதும் சொல்லுகின்றான்’ என்று கூறியவுடன் அவனை அரசன் இங்கே கொணர்மின் என, அவர்கள் சென்று அவரை அழைப்ப, அவர் ஐயமெடுத்துண்பவ
னுக்கும் அரசனுக்கும் என்ன தொடர்பு உளது என்றார். யாவரையும் பாதுகாப்பது அரசன் கடமையாதலால் அரசனைப் போய்ப் பார்த்தல் உமது கடனென்றார்கள். உடனே அவருந் தூதர்களுடன் அரசனவைக்குச் சென் றார். தனது புத்த குருவோடு தனது பரிவாரங்கள் புடைசூழ அரசன் அவையின் கண் வீற்றிருந்தான், பெரியவர் வெண்கோவண முடுத்து ஐயம் எடுக்கும் பையைத் தோளில் தாங்கிக்கொண்டு நெற்றியில் திருவெண்ணீறுங், கையிற் பிரம்புந், தலையிற் சடையுங், காதிற் சுந்தரவேட மும், இதழில் முறுவலு முடையவராய்ப் புத்த அரசன் மருங்கு சென்று பொன்னம்பலம் என்று சொல்லிக் கொண்டு கீழிருந்தனர். பொன்னம்பலமென்று கூறுவதற் குக் காரணம் யாதென்று அரசன் விவன, ‘அவர் சோழ நாட்டிலே தில்லை என்றொரு திருப்பதியுண்டு. அஃது எத் தலத்துக்கும் முதற்றலமாய் ஞாலத்திற்கு நடுவாய் விளங்கு வது, அங்குள்ள அம்பலத்தில் இறைவன் அம்மைகாணத் திருநடம் புரிந்தருளுவன் : அத்திருக்கூத்தினைக் கண்டோர் பிறவாநெறி எய்துவர். கொடுந்தன்மையுடையாரும் பொன்னம்பலமென்று ஒரு காற் புகன்றால் திருவைந் தெழுத்தை இருபத்தொராயிரத்து அறுநூறு முறை உரைத்ததற்கு ஒப்பாகு’ மென்றார். இதனைக் கேட்ட புத்தகுரு, ‘பிடக நூற்றலைவனாகிய புத்தனினும் பெரிய கடவுள் வேறில்லை’ என்பதைத் தில்லை சென்று மூன்று நாளில் நிலைநாட்டித் திருமன்றினைப் புத்தர் பள்ளியாக்கு வேன்’ என்று மொழிந்து தில்லைக்கு உடனே புறப் பட்டான்.
இலங்கை மன்னனுந் தன் அருமை மகளுக்குள்ள ஊமைத்தன்மை சிதம்பரத்திற்குப் போனால் நீங்குமென்று கேள்விப்பட்டுத் தன்னுடைய சேனை சூழச் சிவிகை ஏறி மகளுடன் புறப்பட்டுத் தில்லையெல்லையடைந்தான் , இவர் முன் சென்ற புத்தகுரு தில்லைத் திருக்கோயிலின் கண் ஒரு மண்டபத்திலே போய்த் தங்கியிருந்தான். அரசன் அவன் சென்று புத்தகுருவைக் கண்டு மகிழ்ந்திருந்தபோது கோயிலிலுள்ள தொண்டரெல்லாரும் ஒருங்கு சேர்ந்து புத்தகுருவைப் பார்த்து நீ இங்கிருத்தல் கூடாது : இவ்வூர் எல்லையைக் கடந்து ஓடிப்போய்விடு’ என்றார்கள். அப்போது அவன் சோழ மன்னன் முன்பு சைவசமயம் தக்க நெறி அன்றென்றும் புத்தனே உயர்ந்த தெய்வ மென்றும் நிலை நிறுத்தாமல் நான் போவதில்லை’ என் றான். இதனை ஊரார் யாவருக்குங் கோயிலார் தெரி வித்தனர். அவர்களெல்லாரும் புத்தகுருவினிடஞ் சென்று அஞ்சாது ‘நீ இங்கு வந்திருந்து மதியாது பேசுவதன் காரணமென்ன வென்று வினவ, அப்போது புத்தகுரு அவர்களைப் பார்த்து உங்கள் கடவுளே கடவளென்பீ ராயின் எங்கள் கடவுளே மெய்க்கடவுளென்று நான் கூறுவேன். நீங்கள் மறுக்க முடியுமாயின் மறுக்கலாம் என்றான். அதுகேட்ட அங்குள்ள பெரியோர்கள் இவன் கூறுவதை மறுக்காமல் இவனைத் துரத்தினால் தில்லையிலுள்ளார் புத்த மதத்தை மறுக்க முடியாது புத்
தனைத் துரத்திவிட்டார்களென்று பிறர் குறைகூறுதல் கூடுமாதலின், இவனோடு தக்க அறிஞர் முன் வாது செய்து இவனை வெல்லுவதே நன்முறை என்று கருதி அரசனுக் கும் பிறபெரியார்க்குந் தில்லைக்கு வரும்படி ஓலையனுப் பினார்கள். அப்போது மாலைக்காலம் வரக் கதிரவன் மறைந்து மதி தோன்றினான். வான் மாதின் திலகம் போலவும், கங்குல் என்னும் நங்கை முகம்பார்க்குங் கண்ணாடிபோலவும், சிவபெருமானுக்குக் கவித்த முத்து வெண்
குடை போலவுந் திங்கள் மண்டிலம் இலங்கிற்று. தில்லை யோர் இரவில் உணவுண்டு தூங்குங்காலை அம்பலவாணன் அவர்கட்குக் கனவிற் றோன்றி இவ்வூர் எல்லையில் திருவாதவூரன் எம்மிடம் அன்பு செலுத்திக் கொண்டிருக் கின்றான். அவன் பாற் சென்று இதனை நீங்கள் கூறினால் உடனே வந்து புத்தரை வாதில் வெல்லுவான் என்று அருளிச்செய்து மறைந்தான். அக்கனவு கண்டோர் அனைவரும் விழித்தெழுந்து கோயில் மண்டபத்தே வந்து கூடி ஒருவர்க்கொருவர் கண்ட கனவைத் தெரிவித்து அம்பலவர் திருவருளை வியந்து மகிழ்ந்து திருவாதவூரடிகள் வீற்றிருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர் நிட்டை நீங்கியவுடன் அவரைக்கண்டு வணங்கிக் கனவினை உரைத்தனர். உடனே அடிகள் வந்தவர்களு டன் திருமன்றிற்கு ஏகி இறைவனை வணங்கிக்கொண்டு புத்தகவிமண்டபத்திற்குப் போய் ஒரிருக்கையில் இருந் தருளினர். அப்போது சோழமன்னனும் அம்பலவரை வழிபட்டு வாதுமண்டபத்திற்குச் சென்று அடிகளை வணங்கி அவருக்கருகோ ரிருக்கையிலிருந்தனன். ஈழ மன்னனுஞ் சோழமன்னனை வணங்கி அவரால் இருக்கை பெற்றனன். வாதுக்கு நடுநிலையாக நின்று சான்று புகல் வோருந் தெரிந்தெடுத்து நியமிக்கப்பட்டனர். வாதினைப் பார்க்க வந்தவர்களும் பலர் அங்கிருந்தனர். அரசன் வாதவூரரை வாது நிகழ்த்தும்படி வேண்டினன். புத்த குரு இவ்விடம் வந்த காரணம் யாதென்று அடிகள் வினவ, அவன் ‘என் சமயத்தை நிலைநாட்டிப் பொன்னம் பலத்தைப் புத்தர் கோயிலாக ஆக்கவந்தேன்’ என்றனன்.
இப்போது ‘அடிகள் உன்னுடைய கடவுளின் தன்மையையும் அவனடியிற் சேரும் முறைமையையுங் கூறுக’ என் றார். உடனே புத்தகுரு புகன்றதாவது, எம் இறைவன் அறங்களை விரித்துரைக்கும் பிடக நூலினை இயம்பியதோடு எவ்வுயிர்க்கும் அன்புடையனாய்ப் பல் பிறப்பெடுத்து உயிர்களுக்கு நன்மை செய்து கொல்லாமை முதலிய அறநிலை நின்று அரசமர நிழலில் உருவத் திருமேனி கொண்டு எழுந்தருளியிருப்பன். கருவிலே சேரும் உருவம் வேதனை, குறிப்பு , பாவனை, விஞ்ஞானம் ஆகிய ஐந்து கந்தங்களுங்கூடி உடம்பு தோன்றுகிறது. அதன் கண் எழும் பலதிறப்பட்ட அறிவுகளே உயிராகும். எல்லாப் பொருள்களுங் கணந்தோறுந் தோன்றியழியும். கந்தங்களின் கூட்டம் அழிவுறுவதே பிறவித்துன்பம் அறுத லாம். ஐங்கந்தமும் முற்றும் அற்றுப் போதலே முத்தி’ என்பது. அப்போது அடிகள் புத்தகுருவை நோக்கி ‘உன் தலைவன் பிடக நூல் உரைத்தான் என்றனை. அறிவு கணந்தோறும் அழியுமாயின் சொல்லையும் பொருளையும் நாடி நூல்செய்வதின் முன்னமே அவற்றை அறிந்த அறிவு பங்கமுறுமானால் நூலினை எவ்வாறு இயம்ப முடி யும்? ஆதலால் அறநூல் கூறப்பட்டதென்பது பொருந் தாது. உன் கடவுள் பிறந்தனன் என்றால் , பிறவியானது மயக்கத்திற்குக் காரண மாதலால் உன் கடவுள் மயக்கத்தில் வாழ்ந்தவனாவான். பிறர் மயக்கத்தைத் தீர்க்க வந்தவன் தானே மயக்குற்றால் பிறர் மயக்கை அவன் எவ்வாறு தீர்க்க முடியும்? முடியாதாகலின் உன் கடவுட் கொள்கை பிழைபட்டதே. உன் கடவுள் கொல் வது கருதான்’ என்றாய். புலி, நரி முதலிய விலங்கு களாகப் பிறந்த காலை , பசி மிகுந்தபோது ஊன் தின்னா திருத்தல் இயல்பாமோ? பஞ்ச கந்தக்கூட்டம் அழிவ தானால் உன் கடவுளுக்கு உருவம் எது உன் தலைவனாய புத்தன் பிறக்கும் பொழுது தாயின் வயிற்றைப் பீறிக் கொண்டு வெளிவந்தமையால் தன் தாய்க்கே தீங்கிழைத் தவனாவான். பூதநான்கின் கலப்பாலே அறிவு உண்டாவ தென்றால் அவ்வறிவு அப்பூதப்பிண்டத்தின் குணமாக வேண்டும். ஒருவன் தூங்குங்காலை அவன் மேலேறிச் செல்லும் பாம்பினை அறியமாட்டான். பூதச்சேர்க்கை யாகிய உடம்பு பாம்பின் செலவை அறிய முடியுமோ? ஆதலால் அறிவு பூதக்கூட்டத்தில் எழுவதென்று கொள்ளுதல் தவறு, ஐங்கந்தமாகிய உடம்பு அழியாது கிடப்ப, உயிர் நீங்கிய காலை அஃது அறிவொழிந்து போதலும் இதனை வற்புறுத்தும். நாற்பூதமே யெப்பொருளுமென்று கூறும் நீ, அவை கலப்பதற்குரிய இடத்தை யாதென்று கூறுவாய். இடம், திசை என்பனவற்றை இல்பொருள் என்பையாயின் நீயே வடதிசை நோக்கிப் புத்தரை வணங்குதல் எப்படி? மரம் முதலிய ஓரறிவு உயிர்களை உயிரில் பொருளென்பாய்? அவை அங்ஙனமாயின் உண வுண்டகாலை வளர்தலும் அஃதில்லா தகாலை தேய்தலும் அவற்றிற்கு எவ்வாறு இயலும்? தீவினைப்பயனை நுகா மக்கள் அவையாய்ப் பிறத்தல் யாங்ஙனம்? கொல்லுவது குற்றம்; பிறர் கொன்றதைத் தின்னுதல் குற்றமில்லை என் பது உன் கொள்கை. ஓர் உயிரைக் கொன்று அதன் ஊனை உனக்குக் கொடுத்தவன் கொலைப்பாவ மெய்துவது உன் மனத்திற்கொத்ததுதானா? ஐவகைக் கந்தங்கெடவே உயிர்கெடும். ‘உயிர் கெடுமாயின் முத்திபெற்றது யாது?’ என்று இவ்வாறு மொழிந்து புத்தர் கொள்கைகளை அடி கள் மறுத்தனர்.
புத்தகுரு வெகுண்டு அடிகளை நோக்கி உம்முடைய கடவுளின் இயல்பு யாது? முத்தி என்பதின் இலக்கண மென்ன? என்று வினவினன். அப்போது அடிகள் அருளிச்செய்வதாவது எங்கள் கடவுள் உலகம் உய்தற் பொருட்டு ஆல நீழலிலிருந்து நால்வர்க்கு அறம் உரைத் தார். உலகத்தை ஐந்தொழிற்படுத்தும் இறைவர் தமது திருவுருவினை உலகர் அறிந்து கும்பிடுதற்பொருட்டுப் பொன்னம்பலத்தில் திருநடனம் புரிகின்றார். அவர் உமையொருபாகர் ; நீறணி மேனியர் ; அவர் பெருமை சொல்லவொண்ணாது என்று மொழிந்த அளவில், புத்த குரு அவரை யாதும் மேற்சொல்லாவண்ணம் தடுத்துச் சில கேள்விகள் கேட்டான். ‘ஆலநீழலில் உமது கடவுள் செப்மாலை யோடிருக்கிறாரெனின், எக்கடவுளை நினைந்து அவர் தியானத்திலிருக்கின்றார். தில்லையில் அவர் நடிப் பாரெனின் நல்லறிவுடையோர்கள் யாராவது தாமாக ஆடிக் கொண்டிருப்பார்களா? திருநீற்றினைச் செவ்வொளி தங்குந் தமது திருமேனியில் எதன்பொருட்டு அணிந்தார்? புனிதமென்று அணிந்தாரா? உம்முடைய இறைவன் மங்கையொருபங்கனெனில் உடம்பிற் பாதி பெண்வடி வுடையார் யாராவதுண்டா? அவர் பெண்ணோடிருப் பின் அவரை வணங்கும் நீர் துறவியாவானேன்?’ இவைகளைப் புத்தன் புகன்றகாலை அடிகள் பின்வருமாறு மறு மொழி செப்பினர். ‘எங்களிறைவன் செபமாலை வைத் திருத்தல் தம்பொருட்டன்று. உலகத்தாருக்குத் தவங் கற்பித்தற் பொருட்டு ; அது படைக்கலத்தொழில் பயிற்றுவோர் பிறர் பொருட்டுத் தங்கையிற் படைகல மேந்திய தனை ஒக்கும். உயிர்களுக்கு உயிராய் எல்லாவற்றையும் ஆட்டுவிக்கு மியல்பைக் காட்டுவதற்காக மன்றினுள் நடிக் கின்றாரேயொழியத், தம்பொருட்டு நடிக்கவில்லை. நீற்றினை இறைவனணிந்தது உலகினரது இடரை யொழித்தற் பொருட்டு முடிவுகாலத்தில் எல்லாவற்றையும் ஒடுக்கித் தாமே தனி நிற்பரென்பதை அது குறிக்கும். போகத்தை உலகத்தார்க்குக் கொடுத்தற் பொருட்டு மாதொரு பாகராயும், முத்தி கொடுத்தற் பொருட்டு யோகியாயும் இறைவர் இருப்பதை நீ அறியாய்’ என்றனர். புத்தகுரு வும் பிறரும் ஒழுங்காக வாது செய்யாமற் பொருந்தா வழக்குகளையும் இழிவான சொற்களையும். புகன்றது கேட்டு அவர்கள் நாவினின் றுங் கலைமகளை ஏகிவிடும்படி பணிந்தார்.
முக்கணானரு ளில்லையென்றிடு மூகர்நாவை யகன்று நீ நக்கனார் திரு வாணையேகென நன்மடந்தையு மஞ்சினாள்.’
புத்தகுரு முதலாயினோர் ஊமையானதை யாவருங் கண்டு வியந்தனர். அப்போது ஈழமன்னன் அடிகள் திருவடிக் கமலங்களில் வீழ்ந்து, ‘பேசுந்தன்மையுடை யாரை ஊமை யாக்கினீர். ஊமையாயிருக்கும் என் புதல்வியைப் பேசும்படி செய்தருள வேண்டும். நான் உமக்கு அடிமை’ என்றனன். அடிகள் அதற்கிசைந்து அவளை இங்கு அழைத்துவாருமென்று கட்டளையிட்டார். அரசன் தன் புதல்வியை அடிகள் முன் நிறுத்தினன். அவள் அடிகளை வணங்கி நின்றபோது அடிகள் அக்கன்னியைப் பார்த்துப் புத்தருரைத்த வினாக்களுக்கு விடை பகர்க’ என்று விளம்பினார். அங்குள்ள புத்தர் கேட்ட இருபது வினாவிற்கும் அவள் வாய் திறந்து தக்கவிடை பகர்ந்தனள். அவற்றை அடிகள் திருச்சாழல் என்னும் திருவாசகமாகப் பாடியருளினர். அப்போது ஈழமன்னனுந் திருநீறணிந்து திருவைந்தெழுத்தினை ஓதி வளவனோடுந் தில்லைவாழ் மக்கள் எல்லாரோடும் ஒருங்கு சேர்ந்து அம்பலவரை வணங்கி அடிகளின் பெருஞ்சீர் பரவினன். பின்னர்ப் புத்தர்களெல்லாம் ஊமை தீரப் பெறவேண்டுமென்று அடிகளிடம் வணக்கத்துடன் ஈழ நாட்டு மன்னன் தெரிவித்தான். அடிகள் அவர்கள் மீது திருவருள் நோக்கம் பாலித்தவுடன் அவர்கள் யாவரும் வாய்திறந்து பேசினர். அவர்கள் ‘புத்தவேடத்தை யொழித்துத் திருவெண்ணீறணிந்து சைவராயினர். பின்னர் யாவருங் கூத்தப் பெருமானைத் தொழுது அவரவர் இடங்கட்குச் சென்றனர். திருவாதவூரடிகளைத் தில்லை யிலே இருக்கும்படி அவ்வூர் வாசிகள் வேண்டினர். திருவாதவூரடிகள் தாம் முன்னிருந்த இடத்திற்குச் சென்று நிட்டையில் வதிந்தனர். அடிகள் அங்கிருக்கு நாளிலே திருப்படையாட்சி, திருப்படையெழுச்சி, யாத்திரைப் பத்து முதலிய திருவாசகப் பதிகங்களைப் பாடியருளினர்.
அம்பலவாணர் ஓர் அந்தணர் வடிவங்கொண்டு, திருவாதவூரடிகள் முன் சென்றகாலை, அடிகள் அவரை நீர் எவ்விடத்தீரென்று வினவினர். அதற்கவர் ”நான் பாண்டி மண்டலத்திலேயுள்ளவன் ; நீர் இறைவனைப் பரி மேல் வரும்படி செய்தருளின்மையால் பாண்டிநாடு பெருமை யடைந்தது. நீர் திருப்பெருந்துறையில் ஐயன்
திருவடி சேவை செய்து திருக்கழுக்குன்றிற்குச் சென்று இறைவனது திருக்கோலங்கண்டு தில்லை யெய்திப் புத்தரை வாதில் வென்ற செய்தி யெல்லாங் கேட்டு அங்குள்ள நாட்டார் யாவரும் மகிழ்ச்சிகொண்டார். நீர் அருளிச் செய்த திருப்பாடல்களை ஓதக் கருதி அவற்றை எழுது வான் ஈண்டுவந்தனன். நீவிர் அவற்றை இயம்பவேண்டுமென்று வற்புறுத்தினர். அப்போது அடிகள் அவற்றை மொழிய, ஐயர் ஒரு ஏட்டினில் அனைத்தையும் வரைந்து கொண்டபின்னர், அம்பலவர்மீது ஒரு கோவை பாட வேண்டுமென்று அடிகளைக் கேட்டனர். அவரும் அங்ஙனமே பாடியருள அதனையும் எழுதி முடித்து ஐயர் மறைந்து போயினர். இதனைக் கண்ட அடிகள் அந்தண ராய்வந்த முதல்வரைத்தேடி அயர்ச்சியுற்றார்.
‘ எழுந்தன ரெங்கு மோடி நாடின ரென்கொ லென்னா
வழிந்தனர் மன்று ளாடு மாதியென் றறிந்த பின்னர்ப்
பொழிந்தனர் கண்ணீ ரெங்கே போயினை யென்று
மண்மேல் விழுந்தனர் பரமானந்த வேலைவெள் ளத்து ளானார்.’
இறைவன் தானெழுதிய ஏட்டின் முடிவில் வாதவூரன் விளம்பிட அம்பலவன் எழுதியது என்று வரைந்து அழகிய திருச்சிற்றம்பல முடையார் என்ற கையெழுத்தும் அமைத்துப் பொன்னம்பலத்தின் திருவாயிற் படியிற் றிரு வேட்டினை இட்டனர். அதனைப் பூசனை புரியவரும் அந்த ணர் கண்டு வியப்புற்று அப்புதுமையை யாவர்க்குந் தெரிவித்தார். எல்லாரும் ஓடிப்போய்ப் படிமேல் இருந்த புத்தகத்தைக் கண்டார்கள். யாவருங்கூடி இஃது இன்ன தென்று பார்ப்பதே தக்கதென்று தீர்மானித்தபோது, ஒருவன் மலர் தூவி வணங்கி அதனை எடுத்து முழுதும் படித்துக்காட்டி முடிவி லெழுதியுள்ள அம்பலவர் திருவுள்ளக் கருத்தையும் எல்லாருக்குந் தெரிவித்தான். எல்லாருங் கேட்டுக் குறுவியர்ப்பும் மயிர்ப்புளகமுங் கொண் டவராய் வீட்டு நெறிக்கு இனிச் சிவ நூல் வேறுளதோ வென்றார்கள். அறிஞரும், அந்தணரும் இந்நூலின் பொரு ளினை அறியக்கருதித் திருவாதவூரடிக ளிருக்குமிடத் திற்குச் சென்று நிகழ்ந்தவற்றை யுரைத்தனர். அவர் கடவுள் தமக்களித்த பெரும்பேற்றினை நினைந்து அளவற்ற அன்போடு திருவருளை வியந்தனர். இறைவன் தம்பால் ஏடெழுதிக் கொண்ட சூழ்ச்சியையும் அவர்களுக் கெடுத் துரைத்தார். இவ்வரிய தமிழ்மாலைகளின் நுண்பொருளை எங்களுக்கு அறிவுறுத்த வேண்டுமென்று அடிகளை வேண்டிக்கொண்டகாலைச் சிற்றம்பலவர் திரு முன்பு நுண் பொருள் புகல்வதாகச் செப்பிப் பொன்னம்பலத்திற் கேகினர். எல்லாரும் அவர் பின்னே அவண் சென்றனர். அடிகள் இத்தமிழ்மாலைப் பொருள் இவரென் றுரைசெய்து திருமன்றினுள் விரைந்தேகி யாவருங்காண மறைந்து இறைவனுடன் இரண்டறக் கலந்தனர். யாவருங் கண்டு கசிந்து நெக்கு நெக்குருகிக் கண்ணீர் மழை பொழிந்து பரவசப்பட்டனர். விண்ணவர் பூமாரி பொழிந்தனர். வானில் மந்திர ஒலிகள் முழங்கின. பூதங்கள் ஆனந்தக் கூத்தாடின. கணநாதர் இறைவனைப் புகழ்ந்து பாடினர். யாவருந் திருவாசக வின்பம் நுகர்ந்தனர்.
‘திருவாத வூரடிகள் சரிதையே சிவசரிதை
திருவாத வூரடிகள் ஞானமே சிவஞானம்
திருவாத வூரடிகள் திருவாக்கே சிவவாக்கு
திருவாதவூரடிகள் சிவமிஃதென் சிந்திதமே’.
மாணிக்கவாசகப் பெருமான் காலத்தில் இலங்கை யில் புத்தமதம் பரவியிருந்ததென்றும், இந்நாட்டிலுள் ளார் அந்நாட்டுக்குச் சென்று தலயாத்திரை செய்வது வழக்கமாயிருந்ததென்றும் இச்சரித்திரத்தினாலே யறி கின்றோம், வடக்கே மோரியர் தலைவனாய் கிமு உஎஉ முதல் உஙஉ-வரை மகத நாட்டில் அரசாண்ட அசோக மன்னன் தன் உடன் பிறந்தானாகிய மாகேந்திரன் என்பவ னையும், உடன் பிறந்தாளாகிய சங்கமித்திரை என்பவளை யும் இலங்கையிற் புத்தமதத்தைப் போதித்தற் பொருட்டு அனுப்பினான். அவர்கள் திச்சன் என்னும் இலங்கை அரசனால் விருப்புடன் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். மாகேந் திரனென்பான் இலங்கையிலேயே வாழ்நாள் முழுவதும் கழித்தொழிந்தான். ஆதலால் கி. மு. மூன்றாவது நூற்றாண்டு முதற்கொண்டே இலங்கையிற் புத்தமதம் பரவியிருந்தது. திருவாதவூரடிகள் காலத்தே அஃது ஆங்குத் தழைத்தோங்கி யிருந்தது. ஆதலாற்றான் தென்னாட்டுப் பெரியவர் பொன்னம்பலம் என்று பன்முறை கூறியதைக் குற்றமென்று சிலர் கருதி அரசனிடஞ் சென்று குறை கூறுவா ராயினர். ஆண்டுச் சென்ற பெரியவர் உறுதி யான பேரன் புடையாராதலின் யாவர்க்கும் அஞ்சாது பொன்னம்பலத்தின் பெருமையை எடுத்து அரசனுக்கு உரைப்பாராயினர். புத்தமதத்தில் மூழ்கியிருந்த நாட்டி னைச் சிவநெறிப் படுத்துவதற்கு இப்பெரியவரின் உறுதிப் பாடே முதற்காரணமாயிற்று. பொன்னம்பலம் என்று ஒருகாற் சொன்னால் அஃது ஒருநாள் முழுவதும் ஐந் தெழுத்தைக் கூறியதனோ டொக்குமென்பார், இருபத் தோராயிரத்து அறுநூறு தரம் அதனை உரைப்பதற் கொப்பாகு மென்றார். ஒருநாள் முழுவதும் விடும் மூச்சு இருபத்தோராயிரத்து அறுநூறாதலின் அவ்வாறு கூறினர். பொன்னம்பலமென்று கூறியதற்காகப் பெரியவரை வருத்தாமற் புத்தமதத்தைத் தில்லை சென்று நிலைநாட்டுவேன் என்று புத்தகுருப் போந்தது தக்கதொரு நல்ல முறையே. சமயப் பகைவரைத் துன்புறுத்துஞ் செயலைப் புத்தர் அக்காலத்தில் அந்நாட்டில் மேற்கொள்ளாதிருந் தமை பெரிதும் பாரட்டத் தக்கதே. தில்லையிலுள்ளாரும் புத்தகுருவோடு வாதஞ்செய்ய முயன்றார்களே யொழிய அவனை அடித்துத் துரத்திற்றிலர். அஃது அக்காலத்துச் சமயப் பொறுமையை எடுத்துக் காட்டுவதொன்றே.
இலங்கை மன்னனும் புத்தசமயத்திலே மிகுந்த உறு திப்பாடுடையவனாகத் தெரியவில்லை. சைவ நூல்கள் விதித் ததை ஒருவாறு நம்பித் தில்லைக்குத் தன் மகளையும் அழைத்துச் சென்றனன் என்று தெரிகின்றது. இக்காலத் திலும் ஒரு சமயத்திலுள்ள பொது மக்கள் மற்றொரு சமயத்துக் கோயில்களுக்கு யாதாவதொரு பயன் கருதிச் செல்லுதல் ஒர் வழக்கமாக நிலவகின்றது. அயற்சமயத் தாரைத் திருக்கோயிலினின்று அகற்ற முயலுதல் பொது மக்களியல்பேயாதல் பற்றிக் கோயிலிற் றொழில் செய்வோர் புத்தகுருவையும் அவனைச் சார்ந்தாரையும் கோயில் மண்டபத்தினின்றுந் துரத்தத் தொடங்கினர். அறிஞர்கள் அவரோடு வாது செய்வதனையே மேற்கொண்டனர். இறைவன் அறிஞருக்குக் கனவிற்றோன்றித் திருவருள் செய்தமையால், திருவாத வூரடிகளைப் பற்றி அவ்வூரார் யாது மறியாதிருந்தனர் என்று தெரிகிறது. அடிகள் தாழ்மைமிக்க தூய மனமுடையாராதலின் தம்பெருமையைப் பிறர் அறியாவண்ணம் தில்லையிற்சென்று இறைவனை வணங்கித் தில்லைக்கு மேற்பாலொரு தனியிடத்தில் ஞானத்தில் ஞானமாகிய இறைநினைவிற் றலைநின்றார். அரன் நாமம் உலகமெங்கும் பரவவேண்டுமென்ற ஒரு பெருங்கொள்கையினைத் திருவுள்ளத்திற் கொண்டமை யினாலே தான் அவர் புத்தரோடு வாது நிகழ்த்தற்கு விரைந்தனரென்க. கடவுண் மாமுனிவர் புராணத்தின்படி அடிகள் காலத்துச் சோழ மன்னனுக்கு ஈழநாட்டு அரசன் (கப்பம்) திறை செலுத்துதற்குரியவனாயிருந்தானென்று தெரிகிறது. சோழ அரசன் தோல்வியடைந்த புத்த மதவாதி களை உயிர் செகுப்பக் கருதினன் என்ற புராணக் கூற்று கடவுண் மாமுனிவர் கருத்தினையே உணர்த்துமன்றி மெய்வரலாற்றினை உணர்த்துவதன்று, கடவுண் மாமுனிவரும் பரஞ்சோதி முனிவரும் மிகப் பிற்காலத்த்தவர்கள். அடிகள் காலத்து மக்கள் மனநிலையை உணராதவர்கள். சமணர் கழுவேறிய செய்தியின் தவறிய முறையை மனத்திற் கொண்டு, அடிகள் காலத்திலும் தோல்வியுற்றுச் சைவத்திற்கு வாராத புத்தர் கொடிய தண்டனைக்கு உள்ளாயினரென்று பரஞ்சோதி முனிவர் தமது திருவிளை யாடலிற் கூறிப் போந்தனர். புத்தர் தோல்வியுற்றால் தம் மைச் செக்கிலிட்டு அரைப்பதற் கிணங்கினரெனவும், அங்ஙனமே சோழ அரசன் அவர்களைத் தண்டித்தான் எனவும், மனம்போனவாறு திருவிளையாடற்காரர் கூறினமை பெரியதோர் இழுக்கே. இக்காலத்துச் சமயப் பற்றில்லாத சிலர் ஆராய்ச்சியின்றிச் சைவ சமயத்தைக் குறைகூறுவதற்கு அத்தகைய கூற்றுக்கள் இடந்தருகின்றன. சைவ அறிஞர் எக்காலத்திலும் பிறநெறியாளர்க்குக் காரணமின்றிக் கொடுமை செய்யக் கருதவில்லை. கடைச் சங்கத்தார் காலத்திலே பல சமயத்தாரும் தத்தம் கொள்கைகளை எடுத்து மொழிய இடம்பெற்றரென்பது கி.பி. இரண் டாவது நூற்றாண்டில் எழுந்த இரு பெருங்காப்பியங் களில் ஒன்றாகிய மணிமேகலையினால் நன்கு விளங்கும். கி. பி. மூன்றாவது நூற்றாண்டின் பிற்பகுதியே அடிகள் காலமாதலின், அக்காலத்தும் சமயப் பொறுமை இந் நாட்டிற் றிகழ்ந்ததென்பது மேலே கூறப்பட்டது. ஐந் தாவது ஆறாவது நூற்றாண்டுகளிலே சமணர்கள் மிகுந்து மூர்த்தி நாயனார் முதலிய சைவர்களுக்கு இடையூறு விளைத்தனர். ஏழாவது நூற்றாண்டிலே சமணர்கள் சிவனடியார் மடத்திலே தீ வைத்தமையானும் , தாமே கழுவேறுவதாகக் கூறினமையானும் பிறரால் தடுக்கப்படாமல் அவர்கள் கழுவேற நேர்ந்தது. இராமானுசர் காலத்திலே சோழ மன்னன் வைணவர் சிலரைத் தண்டித் தற்கு ஏது, வாது செய்த வைணவர் சிலர் தவறாய மொழிகளைச் சோழன் அவைக்களத்தே கூறினமையும், சிவ புராணம் முதலிய சில வடநூல்களில் சிவநிந்தனை புரி வார்க்குக் கடுந் தண்டனை விதிக்க வேண்டுமென்ற விதி யினைச் சோழ மன்னருக்குச் சிலர் எடுத்துரைத்து வற் புறுத்தினமையுமே யாமென்க.
பன்னிரண்டாவது நூற்றாண்டிற்குப் பின் மக்களுள் ஒடுங்கிய நோக்கம், நிலவியதெனினும் சமய வாதிகள் சொற்போர்தொடுத் தனரே யன்றிக் கொடுஞ்செயல் புரிந்திற்றிவர்.
புத்த சமயமானது கௌதம புத்தருடைய மாணாக்கர் கருத்தின் படி உருவெடுத்ததாகும். கி.மு. ஆறாவது நூற்றாண்டினிறுதியில், கௌதம புத்தர் அருளொழுக் கத்தை உலகிற் பரப்புதலே தலையாய கடமை யென்று கருதி அதனை யாவர்க்கும் எடுத்துரைப்பாராயினர்.
அவர் கடவுளைப் பற்றி யாதுங் கூறவில்லை. கடவுள் இல்லை என்றும் அவர் கூறவில்லை. வாசட்ட னென்னும் பார்ப்பன மாணவன் ஒருவனுக்குப் புத்தர் கூறிய அறிவுரையை நோக்கும்போது புத்தரை நாத்திகரென்று கூற இடமில்லை. அருளொழுக்கமுந் தூயவுள்ளமும் உடைய வன் இறந்தபின் பிரமத்தோடு கலத்தற்குரியனா யிருப்பானென்று கௌதம புத்தர் கூறிப் போந்தது காண்க. கி. மு. சஅஎ-ல் அவருடைய ஐந்நூறு மாணவர்கள் அவருடைய போதனைகளையும் மொழிகளையுந் தொகுத்து மூன்று நூலியற்றினர். அவைகளே திரிபிடக நூல் களாகும். பிடசமென்ற சொல் பெட்டி அல்லது கூடை என்று பொருள் படும். முதல் நூலுள் புத்தர் கூற்றுக் களும், இரண்டாவதில் ஒழுக்க விதிகளும், மூன்றாவதில் சமயக் கொள்கையுந் தொடுக்கப்பட்டன.
புனித வாழ்க்கை யியற்றும் ஆடவரும் பெண்டிருந் தனித்தனி மடங்களிற் றங்கினர். அசோகன் காலத்திற்கு முன்னமேயே புத்த சமயம் பிளவுபடத் தொடங்கிற்று. அசோகன் காலத்திற் கூடிய புத்த சங்கத்தில் பெரும் பாலார் தென்னாட்டினரே. புத்தர் சமயக் கொள்கை யொன்றும் வெளியிடாதிருந்தும் அவருடைய மாணாக்கர் கள் அவர் சொன்ன சில மொழிகளை அடிப்படையாக வைத்துப் புத்த சமயக் கொள்கையைத் தங்கருத்திற் கேற்ப அமைத்தனர். புத்தர் சூத்திரங்களை அதற்கு அடிப்படையாகக் கொண்டமையால், அவர் சௌத்தி ராந்திகர் எனப் பெயர் பெற்றனர். இவர்களது சிறந்த சமயக் கொள்கை கணபங்கவாதமாகும். இக்கொள்கை தொடக்கத்தில் எங்கும் பரவிற்று. தென்னாட்டுப் பெளத் தர் சௌத்திராந்திக மதத்தைத் தழுவினவரே. இவர்கள் கொள்கையே வடநாட்டின ரால் ஈனயானம் எனப்பட்டது. இக்கொள்கை அசோகன் காலத்தில் வலியுற்றது. கி. பி. கச-ல் காசுமீர மன்னராகிய கணிட்கர் என்பவராற் கூட்டப்பட்ட புத்த மகா சங்கத்தில் வடநாட்டிலிருந்த – மகாயான வகுப்பினர் ஒருங்கு கூடினர். – அவர்கள் கொள்கை சாத்தேய மத சமயக் கொள்கைகளோடு பெரிதுங் கலப்புற்றது. மகாயானம் என்பது பெரு நெறி என்று பொருள்படும். ஈனயானம் என்பது சிறு நெறி என்று பொருள்படும். முன்னையதின் நூல்கள் பெரும்பான்மை வடமொழியில் உள்ளன. பின்னையதின் நூல்கள் பாலி முதலிய பேச்சுமொழிகளில் உள்ளன. பாலியிலே தான் பிடக நூல்கள் ஆதியில் ஏற்பட்டன. மகாயானத்தின் ஒரு பிரிவாகிய மாத்தியமிக மதம் நாகார்ச்சுனர் என்பவரால், கி. பி. முதல் நூற்றாண்டில் உண்டாக்கப்பட்டது ; அதன் மற்றொரு பிரிவாகிய யோகாசார மதம் அசங்கர் என்பவராற் கி. பி. நான்கா வது நூற்றாண்டில் வகுக்கப்பட்டது; சௌத்திராந்திகத்தினின்று சிறிது வேறுபட்டவை. வைபாடிகமதம் மிகவும் பிற்காலத்து எழுந்ததே. இவையொழிந்த வேறு பல பிரிவுகளும் புத்த மதத்திற் பிற்காலத்தி லேற்பட்டன. சௌத்திராந்திகம் யோகாசாராம் மாத்தியமிகம் வைபாடி கம் என்னும் நான்குமே சிவஞான சித்தியார் முதலிய சைவ சித்தாந்த நூல்களில் மறுப்புக்கு எடுத்துக்கொள் ளப்பட்டன.
அடிகள் காலத்தில் சௌத்திராந்திக மதமே தென் னாட்டில் வழங்கியிருத்தல் கூடும். அடிகட்கும் இலங்கைப் புத்தருக்கும் நிகழ்ந்த வாதத்தை நன்கறியப் போதிய நூல்கள் கிடைக்கவில்லை. சிவஞான சித்தியாரிற் கூறிய சௌத்திராந்திக மத மறு தலையைத் தழுவியே கடவுண்மாமுனிவர் வாதின் வரலாற்றை இயம்பினர். புத்த சமயக் கதைகள் அசோகன் காலத்தே தொகுக்கப்பட்டன. புத்த சமயச் சரித்திரம் இலங்கைப் புத்த மடத்தில் உள்ள மகாவமிசம், தீபவமிசம் என்று இரண்டு நூல்களிற் காணப்படுகின்றது. அந்நூல்கள் சரித்திர ஆராய்ச்சியாளர்க்குப் பெரிதும் பயன் றருவன..
புராணங்களுள் திருமால் புத்தராகத் தோன்றித் திரிபுரத் தசுரர்கள் பாற் சென்று அவர்களுக்குப் புத்த மதத்தைப் போதித்துச் சிவசிந்தனை யில்லாது செய்தனர் என்ற கதை காணப்படுகின்றது. –
இக்கருத்துப் பற்றியே பரஞ்சோதிமா முனிவர் தமது திருவிளையாடலில்,
‘ மாயனிடும் புத்தவிரு ளுடைந்தோட வந்தொருவர்
சேயவிளம் பரிதியெனச் சிவனருளா லவதரித்தார்’
என்றனர்.
புத்தர்கள் யாவருக்கும் பொதுவான கொள்கை கணபங்க வாதம் என்னப்படும். கணமென்பது தாமரை இதழ்கள் எட்டினை ஒன்று சேர்த்து அவற்றை உளியினால் ஊடறுப்பதற்கு வேண்டிய கால அளவாகும். பங்கம் என்பதின் பொருள் சிதைவு. அறிவும், அறியப்படும் பொருளுங் கணந்தோறும் தோன்றி யழிகின்றன வென்ற கொள்கையே கணபங்க வாதம் எனப்படும். முற்கணத் தில் அழிவெய்திய அறிவின் வாசனை பிற்கணத்திற் றோன்றும் அறிவோடு தொடர்புறுதலின், அறிவு நீரோட்டம் போலச் செல்கின்றது என்ப. நீரோட்டம்போலுந் தொடர்ச்சி தாராசந்தானம் எனப்படும். விளக்கின் சுடர்போற் றொடர்வுற்றழிவது தீபசந்தானமென்றும், வாயுவைப்போலுள்ள தொடர்ச்சி வாயுசந்தானமென் றும், எறும்பின் கூட்டம் போன்ற தொடர்ச்சி பிபீலிகா சந்தானமென்றுங் கூறப்படும். இந்நால்வகையுள் ஒவ் வொன்றினை ஒவ்வொரு வகையார் தமது கொள்கை யென்பர். மாத்தியமிகர் புறப்பொருளைச் சூனியமென் றும், யோகாசாரர் அதனைக் காட்சிப் பொருளன்று, கருதலளவையா லறியப் படுவதென்றுங் கூறுவர். சௌத்திராந்திகர் கொள்கை வருமாறு :- பொருள்கள் அகச்சமுதாயம், புறச்சமுதாய மென்னு மிருவகைப்படும். அவற்றுட் பின்னையது. நிலவணு, நீரணு, தீயணு, வளி யணு வென்னு நான்கின் தொகுதியே. முன்னையது சித்தத்திலெழும் ஐவகைக் கந்தங்களாம். கந்தமென்பது கூட்டம். ஐவகையாவன: உருவம், வேதனை, ஞானம், குறி, மணம் என்பனவாம். சித்தத்திற் றோன்றும் வடிவப் பொருள்களனைத்தும் உருவக்கந்தமாம். அவ்வுருவக்கந் தத்தை யுணருமுணர்வு ஞானக்கந்தம். இவ்வுணர்வாற் றோன்றும் இன்ப துன்ப முதலியவை வேதனைக்கந்தம். பொருள்களை யறிந்துரைத்தற் கேதுவாய பெயர்கள், குறிக்கந்தமெனப்படும். அவற்றின் நினைவு மணக்கந்த மெனப்படும். ஐங்கந்தங்களின் தொகுப்பே அகச்சமு தாயமெனப்படும். அகச்சமுதாயத்தின் வாசனை கெடு தலே முத்தியென்றும், அகச்சமுதாய முற்று மொழிதலே சிறந்த முத்தியென்றுங் கூறுவர்.
ஈண்டுக் குறித்த சௌத்திராந்திக மதக் கொள்கையே திருவாதவூரடிகளால் மறுக்கப்பட்டதென்று அவர் வரலாற்றினால் விளங்கும்.
திருவாசகத்திலே ‘புத்தன் முதலாய புல்லறிவிற் பல் சமயம்’ என்ற அடி காணப்படுகின்றது. இங்கே சமயம் என்ற சொல் சமயத்தாரைக் குறித்து நின்றது.
‘புத்தன் புரந்தராதி பயன்மால் போற்றிசெயும்
பித்தன் பெருந்துறை மேயபிரான்’
என்ற விடத்துப் புத்தன் என்ற சொல் யாரைக் குறிப்ப தென்று ஆராயற்பாலது. அச்சொல் கௌதம புத்தரைக் குறிக்குமெனின், கௌதம புத்தர் புரந்தரன் அயன் முதலி யோர் போலச் சிவபெருமானை வழிபட்டனர் என்று கருத நேரும். அவர் அங்கனம் வழிபட்டதாகக் குறிப் பதற்கு அவர் வரலாறு கூறவில்லை. ஒருவேளை அவர் சிவபெருமானை அகத்தால் வழிபட்டிருக்கலாம். சிவ நெறிக்கு எதிரிடையாக அவர் யாதுங் கூறவில்லை. சுவே தாசுவரம் முதலிய பழைய உபநிடதங்களிலே சிவ வழி பாடு கூறப்படு தலின் வடநாட்டிலும் புத்தர் காலத்திலே சிவநெறி பயின்றிருததல் கூடும். கௌதம புத்தரைச் சிவவழி பாட்டினராகக் கருதுவதினும் புத்தன் என்ற சொல்லிற்கு வேறு பொருள் கொள்ளுதலே பொருத்தமா மென்பர் நம்மவரிற் பலர். அச்சொல் புதியவனென்றும் பொருள்படும்.
‘முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே’
என்றபடி எப்பொருட்கும் (பழமை) ஆதியாயிருத்தலின் எவற்றிற்கும் பழமையானவனாயும், என்றும் வாடாத சீர்மை வாய்ந்தவனாதலின் எவற்றிற்கும் புதுமையனாயும் இறைவன் திகழ்கின்றான். ஆதலின் என்றும் புதியனா யிருக்கும் அவனது தனிப் பெருந்தன்மையை விளக்கு வார் அவனைப் புத்தனென்றார். ‘உணர்ந்தார்க் குணர்வரி யோன்’ என்றவாறே அவனை அறியலுற்றார்க்கும் முற்றி லும் அவனையறிதல் கூடாதாகலின், என்றைக்கும் அவர்கட்கும் அவன் புதுமையனேயாதல்பற்றி அடிகள் அவனைப் புத்தன் என்றார். புத்தனென்று தொடங்குஞ் செய்யுளின் முதலடியில் இறைவனைப் புத்தன் என்ற வாறே இரண்டா மடியிற் பித்தன் என்றும் மூன்றாமடியில் அத்தன் என்றும் மொழிந்தது காண்க.
புத்தகுருவின் கொள்கைகளை மறுத்த பின்பு புத்த குரு கேட்ட வினாக்களுக்குத் தக்க விடையளிக்கு முகத் தாற் சிவபெருமானது பேராற்றலையும் பேரருட் டிறமை யையும் இனிது விளக்கியருளினர். ஆல நிழலில் உலக முய்யும் பொருட்டு இறைவன் தவவேடங்காட்டி அற முரைத்தா னென்றது அருந்தவத்தாற் பகுதி வாய்ந்த உயிர்கட்கு இறைவன் (அறிவனாய்) ஞான குருவாய் வந்து மெய்யறிவுறுத்தும் முறைமை கூறியவாறாம். இறைவன் உடலுயிரனைத்திலுங் கலந்து எல்லாவற்றையு மறிவித்தும் ஆட்டுவித்தும் ஐந்தொழிலியற்றுவதனையே திருநடமென்று தெரிவித்தார். திருநீற்றினை இறைவ னணிந்திருப்பது எல்லாவற்றையும் ஒடுக்கவல்லவனென் பதையும், ஒடுங்கிய காலத்துப் போன்பர்க்கருளும் திருவருட் பேரொளியொடு திகழ்வனென்பதையுங் குறித்தற் பொருட்டென்று அடிகள் குறித்தனர்; ஒடுக் கத்தினால் உயிர்கட்கு இளைப்பாறுதலும் பேரன்பர்க்கு வீடடைதலும் உளவாமாகலின்.
”நீற்றினை யணிந்ததுவெனின்னிறைவ னென்றே
சாற்றினை யுயிர்க்கிடர் தணிக்கவென வெண்ணாய்”
என்றார் புராணவாசாரியர்.
இறைவன் உமையம்மையோடு விளங்குதல் உயிர்கள் ஆணும் பெண்ணுமாய்ப் பிறந்து போகந் துய்த்தற் பொருட்டு ஆதலின்,
”பாகமதி லுத்தமியை வைத்தல் பழு தென்றாய்
போகமுல குக்கருள் புரிந்தருள வென்றே
மாகமுகி லொத்த குழன் மங்கையொ டிருந்தான்
யோகமுயிர் கட்குதவ யோகவுரு வானான் “
என்றார். பிற வினாக்களுக்கு விடை திருச்சாழலுட் காண்க.
தோல்வி யடைந்த புத்தகுருவும் அவனைச் சார்ந் தோரும் வெகுண்டு தமக்கு வேண்டியவாறு கூறுதல் நடுநிலைக்கு மாறாமாதலாலும், வழக்கீட்டினால் மெய்ம்மை யுணர்த்தியும் அன்னோர் உணர்ந்திலராகலின் அடிகள் அவர்கட்குக் காட்சியளவையான் மெய்ம்மை யுணர்த்தக் கருதினாராகலானும், அன்னோரை ஊமையாகப் பணித் தார் என்க.
அடிகள் நிறைமொழி மாந்தர் தந் தலைவராதலின் அவர் உரைத்தமொழி கருதிய பயவைப் பயந்துவிட்டது. அழிக்கவும் ஆக்கவும் வல்லாராதலின் ஊமையாயிருந்த ஈழ மன்னன் மகள் பேசுந்திறமை பெற்றதோடு, புத்தர்கள் வினாவுக்கு விடையளிக்கவும் ஆற்றலுடையவளானாள். அன்பர்கள் விரும்பிய வண்ணம் இறைவன் திருவருள் புரிவானாதலின் அடிகள் கருதிய வண்ணம் இவ்வருஞ் செயல்களைத் திருவருள் முன்னின்று முடித்ததென் றுணர்க. இக்காலத்தில் நிகழும் மெஸ்மெரிசம் (Mes imerism) முதலியவைகளால் உயிரின் ஆற்றலை விரிவு செய்தல் கூடுமாயின், அடிகளின் அருள் மொழியால் ஈழ மன்னன் மகள் எல்லா மறிந்தமை இயல்பாயதொன்றே யெனத்தெளிக. பெரியாரது எச்செய்கையும் அருள் நலம் பயப்பதேயா மாதலின், அடிகளது அருஞ்செயல் ஈழ மன்னனும் வாதுசெய்த புத்தரும் திருநீறணிந்து சைவத்துட் புகுந்துய்தற்குக் காரணமாயிற்று.
அடிகள் இலங்கைப் புத்தமன்னனை ஆட்கொண்ட காலந்தொட்டே இலங்கையிற் சிவநெறி நன்கு நிலைபெறு வதாயிற்று.
திருவாதவூரடிகள் திருவருட் பாடல்களின் தொகுதி யாகிய திருவாசகத்தினையும் திருக்கோவையாரையும் இறைவன் அந்தண வடிவங் கொண்டு எழுதி உலகுக்கு வெளியிட்டன னென்பதைச் சிலர் நம்பாதிருக்கலாம். இறைவன் அடியவர்க்கு எளிவந் தருள் செய்யுங் கருணையை உற்றுநோக்குமிடத்து அது நிகழாத தொன்றாகத் தெரியவில்லை. அடியவர்களுக்காக இறைவன் பொதி சோறு கொணர்ந்து கொடுத்தும், தூதுபோகியும், அனைய பிற செயல்கள் நிகழ்த்தியும் அவர்களை உய்யக் கொண்டானெனில் திருவாசக ஏட்டினை அவன் எழுதி யது அவன் பெருமைக்கு ஒரு குறைவாகாது, திருவாசகத் திற் பதிகங்க ளமைக்கப்பட்டிருந்த முறை, இறைவன் அவற்றை எழுதிய முறையோ வென்ற ஐயப்பாடு பலர்க்கு நிகழ்கின்றது. பாடிய முறையில் அவைகள் அமைக்கப்படவில்லை என்பது தெளிவு.
நூலெழுதிய கதை எவ்வாறாயினும், அடிகள் தில்லை யில் பொன்னம்பலவரோடு இரண்டறக் கலந்தருளிரென் பது அவருடைய திருவாக்கினாலேயே அறியக் கிடக்கின்றது. திருப்பெருந்துறையில் இறைவன் அருட் பெருஞ் சோதியாய்த் தோன்றிப் பிற அடியார்களைத் தம் மோடு சேர்த்துக்கொண்ட விடத்து அடிகளைத் தில்லைக்கு வரும்படி பணித்தருளினர். அது
“நாயி னேனை நலமலி தில்லையுட்
கோல மார் தரு பொதுவினில் வருகென
எல என்னை ஈங்கொழித் தருளி
அன்றுடன் சென்ற அருள்பெறு மடியவர்
ஒன்ற ஒன்ற உடன் கலந் தருளியும் ”
என்றமையால் தெள்ளிதிற் புலனாதல் காண்க.
“சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபரத்தின்’
என்றபடி அடிகளது திருவருட்பாடலின் பொருளுணர் வார்க்குப் பயன் பல்லோரு மேத்திப்பணியச் சிவபுரத் துறை தலாமெனின், அத்தகைய பாடல்களை மொழிந் தமைக்கு அடிகள் சிவபெருமானோடு இரண்டறக் கலத்த லாகிய பெருமபய னெய்து தற்குரியா ரென்பது திண்ணம். தமது அமுதச் செழும்பாடல்களின் பொருள் சிவானு பவத்தாலேயே முற்று முணர்தற் குரியதாகலானும் அவ் வனுபவத்திற்கு உள்ளீடா யிருப்பவன் இறைவனாத லானும் கூத்தப் பெருமானையே அவற்றின் பொரு ளென்று அடிகள் சுட்டியருளின ரென்க. அங்ஙனஞ். சுட்டியவுடன் மூண்ட பேருணர்ச்சியின் பேராற்றல் அடி களது ஆருயிரை இறைவனோடு இரண்டறக் கலப்பித்தது. அடிகள் அருவச் சித்திபெற்ற திருமேனியுடையவராத லின் அவர் திருமேனியிற் கலந்த ஐம்பூதமும் அருவாய்ப் பிரிவுற்று ஐம்பூதத் தொகுதியிற் கலந்தன. ‘ எண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை யெய்துவதாகாதே’ என்றது காண்க. திருமேனி. உலகத்தில் நிலவாது அருவாய்ப் பூதத்தொடு கலக்கும் பேறுற்றமையாலே, அடிகள் முத்தி பெற்ற முறையை ஒப்பற்ற தென்ப. சோதியிற் கலந்து பரமுத்தி எய்தினோரை அருவுருவச்சித்தி பெற்றோ ரென்ப. உருவச்சித்தி பெற்றோர் கூட்டோடு கைலை செல்வார்.
திருவுருவம் சிவசத்தி வடிவாகிய பேரொளியிற் கலக்கத் தாம் இறைவனோடு கலக்கும் பெருமுத்தியைத் திருஞான சம்பந்தர் பெற்றனர். அப்பமூர்த்திகளும் நண்ணரிய சிவானந்த ஞான வடிவாய் அண்ணலார் சேவடிக்கீ ழமர்ந்தனர். அவரை அருவச்சித்தி யுடையா ரென்ப. இம்மூவரும் வெவ்வேறு முறையாகப் பர சைவ சித்தாந்தக் கொள்கைப்படி ஞானத்தின் ஞானத்துப் பயின்றவரென்றுணர்க.
சுந்தரமூர்த்தி ஊனுடல் வேறு செய்யப் பெற்றுச் சிவபோக முதிர்ச்சியுடையராய்த் திருக்கயிலை சென்ற மையின் ஞானத்தின் ஞானத்தைப் பயின்று உரிய காலத்திற் பரமுத்தி யெய்துதற்குரியராய்ச் சிவபுரத்தமர்ந் தனர். ஆதலின் நால்வரும் சைவ சித்தாந்தத் திருநெறிப் பெருந்தலைவரென்பது ஒரு தலையாய முடிவாகும்.



