வேத ரிஷிகளின் கவிதை
சி. சுப்பிரமணிய பாரதி

முகவுரை

ஸ்ரீ காசியில் ஹிந்து ஸர்வகலா சங்கத்திற்கு அஸ்திவாரக் கல் நாட்டிய போது, பல வித்வான்கள் வந்து உபந்யாஸம் செய்தார்கள். இவற்றுள்ளே, நவீன சாஸ்திர (ஸயன்ஸ்) பண்டிதர்களின் சிகாமணியாக விளங்கும் ஸ்ரீமான் ஜகதீச சந்திர வஸு செய்த உபந்யாஸம் மிகவும் மாண்புடையது.

‘லௌகிக சாஸ்திர ஆராய்ச்சிகளிலே மறுபடியும் பாரத தேசம் தலைமை வகிக்கும்படி செய்வது நம்முடைய கடமை’ என்பதை இவர் பல வகையிலே விளக்கிய பின்பு, தமது முடிவுரையில் பின்வருமாறு சொல்லுகிறார்:-

‘ஹிந்து நாகரிகத்திற்குள்ளே ஒரு விசேஷ சக்தியிருக்கிறது. காலத்தின் அழிவுகளையெல்லாம், உலகத்திலேயுள்ள பொருளனைத்தையும் சிதைவுபடுத்த வரும் மாறுதல்களையெல்லாம், இந்த சக்தியினாலே நமது நாகரிகம் எதிர்க்க வல்லதாயிற்று. (எகிப்து தேசத்தில்) நீல நதிக்கரையிலேயும், அஸ்ஸீரீயா தேசத்திலும், பாபிலோனிலும், பல்லாயிர வருஷங்களுக்கு முன்னே, பெரிய பெரிய அறிவுப் பயிற்சிகள் தோன்றி வளர்ந்ததையும், மாறியதையும், மறைந்ததையும், நமது மஹத்தான நாகரிகம் பார்த்துக் கொண்டிருந்தது. (அப்போது கூட நமது நாகரிகம் அளவிட முடியாத பழமை கொண்டதாக விளங்கிற்று). அந்த நாளிலே பாரத மாதா தனக்கு அழிவில்லையென்ற தீராத பக்தியுடன் விளங்கினாள். இன்றும் யௌவனத்தோ கொண்டிருக்கிறாள். இனி, எதிர் காலத்திலும் அழியமாட்டோமென்கிற தீராத பக்தியிலே உறுதிகொண்டு நிற்கிறாள்.’

இங்ஙனம்,நவீன சாஸ்திரக் கல்வியாகிய குன்றத்தின் மேலே நெருப்புத் தூணைப் போல ஒளிவீசி நிற்கும் ஸ்ரீமான் வஸு கூறிய வார்த்தைகள் வெறுமே உபசாரமல்ல. நம்முடைய இடைக்காலத்து மடமைகளை யெல்லாம் மஹிமைகளென்று நினைத்து வீண்பெருமை கொள்வோரின் பேச்சை நாம் உதறிவிடுதல் நியாயம். ஆனால் வஸு- பண்டிதர் சொல்லியதை நாம் மதிப்புடன் ஏற்றுக் கொள்ளுதல் தகும். இடைக்காலத் திலே நமது ஜாதி பொய்களும் சோர்வுகளும் குவித்த குப்பையின் கீழே அழுந்திக் கிடந்தது. பாரத மாதா நித்திரையிலிருந்தாள், இப்போது,மறுபடியும் அந்தக் குப்பையிலிருந்து வெளிப்பட்டு, தைரியமென்னும் கங்காநதியில் ஸ்நானம் செய்துவிட்டு, நமது பாரத ஜாதி தனது வானத்திலே தோன்றும் ஸூர்யோதயத்தை அன்புடன் அழைத்து வாழ்த்துக் கூறுகின்றது.

மரண மில்லாத இந்த ஹிந்து நாகரிகமாகிய கற்பக விருக்ஷத்துக்கு ஆதியிலே விதை யூன்றியவர்கள் வேதரிஷிகள். அவர்கள் எக் காலத்திலே- எத்தனை நூற்றாண்டுகளின் முன்னே – இருந்தார்களென்பதைக் கணக்கிட்டுச் சொல்ல, நவீன ஆராய்ச்சி யாதொரு கருவியுமில்லாதிருக்கிறது. ஹிமவத் பர்வதம் எப்போ துண்டாயிற்று? யாருக்குத் தெரியும்? வேத ரிஷிகள் எக்காலத்தில் வாழ்ந்தனர்? எப்படிச் சொல்வது?

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்லுகிறார்:-

‘நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது அது உள்ளத்தின் அடியிலிருந்து வெளிப்பட வேண்டும். பிறகு சிறிதுகாலம் காத்துக் கொண்டிருந்தால், எனது தாயாகிய ஜகதம்பிகை உங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொடுப்பாள்.’

நன்று சொல்லினர் ராமகிருஷ்ண முனி. உள்ளத்தின் அடியிலிருந்து வெளிப்படுகிற வேண்டுதலுக்கு ‘மந்திரம்’ என்று பெயர். அது பலிக்கும். ஆனால் அங்கிருந்து பிரார்த்தனை கொண்டு வருதல் எளிதன்று. அது பெரிய ஆழம். உள்ளத்தின் அடி! கடலடியை மானுடர் அளந்து பார்த்திருக்கிறார்கள். உள்ளத்தின் அடி காண்பது அதனிலும் பலமடங்கு கஷ்டம். இருந்தாலும் சோர்வு பெற வேண்டா. ஒவ்வொருவனும் உள்ளக் கடலில் இயன்றவரை மூழ்கி அங்கிருந்து பொருள் கொண்டு வரலாம். எத்தனைக் கெத்தனை ஆழத்திலே போகிறாயோ, அத்தனைக் கத்தனை நல்ல முத்து கிடைக்கும்.

ரிஷிகள் உள்ளத்தைத் தெளிவு செய்து கொண்டோர். ஆதலால், அடிவரை எளிதாகப் பாய்ந்து அங் கிருந்து மந்திரங் கொண்டு வந்தனர். அம் மந்திரங்களுக்கு தேவர் வசப்படுவர். வெறும் ‘சொல்’லுக்கு மஹிமையில்லை. அச் சொல் உள்ளத் துணிவை உணர்த் துமாயின், அதற்கு மஹிமையுண்டு. ‘எதனை நினைக்கிறாயோ அதுவே யாகிறாய்’ என்பது தவறாத உண்மை. நினைப்பு நிஜ நினைப்பாக இருக்கவேண்டும். ஆழ்ந்த நினைப்பு, அசையாத நினைப்பு, வலிய நினைப்பு, மாறாத நினைப்பு – அவ்வித நினைப்பு விரைவில் உலகம் அறியத் தக்க வெளியுண்மையாக மாறிவிடும். ‘இந்திரன்’ எனப்படும் விஞ்ஞான சக்தியை மதுச்சந்த ரிஷி மேற்கூறப் பட்டப்படி வலிமை கொண்ட மந்திரங்களால் ஸ்தாபனம் செய்கிறார். அம் மந்திரங்கள் கவிதையிடத்தில் திகழ்கின்றன.

ரிக் வேதத்திலே ரிஷிகளுடைய கவிதையைப் படிக்கும்போது நமது உள்ளத்திலே தேன் பாய்கிறது; அறிவு தெய்வவெறி கொள்ளுகின்றது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !