வேத ரிஷிகளின் கவிதை
சி. சுப்பிரமணிய பாரதி

தீ (அக்நி தேவன்)


முன்னுரை


அக்கினி விஷயமாக ரிஷிகள் எழுதியிருக்கும் கவிதையைப் பற்றிப் பேசும்போது, ஸ்ரீ அரவிந்த கோஷ் சொல்லுகிறார்:-

வலியவனாகிச் சுடர் வீசிக்கொண்டு நிற்கும் இந்த தேவனைப் பற்றிய மந்திரங்களிலே கவிதை மிகவும் செழிப்புற்றிருக்கின்றது. ஸூக்ஷ்மப் பொருள் ஆழ்ந்து நிற்கிறது. தெய்வ வெறி தெளிந்து நிலவுகிறது. பாட்டுக் கொள்ளுகிற அக்கினி தேவனுடைய தழலும், அவன் உறுமுதலும் ஒளியும் பாடுகிற ரிஷிகளின் அறிவிலே தாவிவிட்டன போலும்; அங்கே அவற்றின் களி தழல் கொண்டு எரிகிறது.

ஆம், உயர்ந்த கவிதையின் நெறியே அது. கவியின் இஷ்ட தேவதை அல்லது இஷ்ட சித்தி, இஷ்ட தர்மம், இஷ்ட சுகம் – இதனுடைய காந்தி அவனுடைய உள்ளத்திலே வீசும். அந்த ஒளி பாட்டிலே தெரியும். உயர்ந்த கவிதையின் நெறி அது, அக்கினி விஷயமாக ரிஷிகள் சொல்லியிருக்கும் மந்திரங்கள், சித்திரங்கள், காட்சிகள் – இவற்றிலே சில இங்கு மொழிபெயர்த்துக் காட்டப்படும்.


தீயைப் பாடிய பாடல்கள்

தீயே, [தீ யென்பது ஞான சக்தி. ] நீ தேவர்களில் முதற்பட்டவன், முன்னோன், தலைவன். மறைந்திருக்கும் முதற் கடவு ளுடைய வடிவத் தழலை – அதன் வெம்மை கொண்ட வலியை, அதன் கனலுவது போன்ற திறமையை அக்நி யென்று வாழ்த்துகிறோம்.

அவன் வையகத்தின் படிகளை அமைக்கும் பொருட்டு வருகிறான். அவற்றுள்ளே ரஹஸ்ய தேவதையாக வீற்றிருந்து நடைகளையும், செயல்களையும் தூண்டுகிறான்.

எல்லா வகைப்பட்ட செய்கைத் திறமை, உயிர், வலிமை, வடிவழகு, ஒளித் திகழ்ச்சி, அறிவு, பொலிவு, – இவையனைத்தும் அக்நி தேவனுடைய விளக்கங்கள்.

அவனுக்குள்ளே ஸத்யம் மோன நிலையிலே நின்று அவனைச் செயல்களிலும் கிளர்ச்சிகளிலும் நடத்து கிறது.

அவன் கை வைத்த பொருளையெல்லாம் பரிசுத்தப் படுத்துகிறான். வையத்திலே தத்தளித்துக் கொண் டிருக்கும் ஜீவனை இருளிலிருந்து ஒளியிலே கொண்டு சேர்க்கிறான்.

வெப்பத்திலும், தொல்லையிலு மிருந்து உபசாந் தியிலும், ஆனந்தத்திலும் கொண்டு நிறுத்துகிறான்.

ஆரம்பத்திலே இவன் உயிர்ப் படியில் எரியத் தொடங்கும்போது, இவனை நாலு புறத்திலும் புகை வந்து சூழ்கிறது.

இப்போது, அக்கி புகைச்சல் நீங்கி, நமது வானங்களிலே தெளிவுபெற எரிகிறான். சுத்த மனம் என்ப தோர் ஆகாசத்தைப் பற்றி ஏறுகிறான்.

இவன் க்ரது – வேள்வித்திறம், செய்கைவலிமை, துணிவு; தெய்வத் துணிவையே அக்கி யென்கிறோம். இவன் கவி.

அறிவுக் கதிர்களை இவன் காவல் செய்கிறான்.

அந்தக் கதிர்கள், புல்லாந்தரையில் மேயும் பசுக்களைப் போலே, நமது உயிர்நிலத்தில் மேயும்போது, இருளுக்கும் பிரிவுக்கும் மக்களாகிய ராக்ஷஸப் பகைவர் அவற்றைக் கவர்ந்து செல்லாதபடி இவன் காக்கிறான்.

பொய் பிழை இவற்றின் கோணல் வழிகளையெல்லாம் கடந்து, தாழ்வும் உடைவும் வளைவும் கொண்ட தரையிலிருந்து மேலேறி, நேர் வழியையும் உயர்ந்த திறந்த வெளிகளையும் இவனுடைய உதவியால் அடைகின்றோம்.

இவனை உள்ளத்தே நிறுத்துகிறோம். அறிவும் துணிவும் ஒரு பொருளாகின்றன. வேள்வியின் வளர்ச் சியையும், ஏற்றத்தையும் அக்கி நடத்துகிறான். இவன் புரோஹிதன், ஹோதா, ரித்விக் ; புறத்தே வேதியர் சூழ்ந்து நின்று செய்வதாகச் சித்திரப்படுத்தும் கர்மங்களை யெல்லாம் உள்ளத்து வேள்வியில் இவன் ஒருவனே நின்று செய்கிறான்.

நமது வேள்வி தேவருலகத்திற்கு மூண்டு செல்லுகிறது, அந்த மஹா யாத்திரையிலே அதனை ராக்ஷஸர் கவர்ந்து செல்லாதபடி அக்நி காக்கிறான்.

இவன் உயிருக்குத் தோழன். நமது காதலன்.

இவனை நம்பினவர்க்குப் பழுதில்லை.

இரவிற்குள்ளே ஆழ்ந்த இருளிலே மூடிக் கிடப்பவனும் இந்தச் சுடரைக் கொளுத்தினால், அவனுக்குக் கண் தெரியும். இது வளர வளர, ஏற ஏற, அவன் பரி பூரண உண்மையைக் காண்பான்.

உஷையை (ஞானோகயத்தை)க் காணும் பொருட்டு இவன் வானை நோக்கி வளர்கின்றான்.

பிராண லோகத்தின் வானங்களிலே ஊடுருவிச் சென்று தேஜோமயமான ஸ்வர் லோகத்தை எய்துகின்றான்.

ஸ்வர் லோகந் தான் அவனுடைய வீடு.

அது உண்மையிடம், தீரா இன்பம்; அங்கே, தேவர்கள் ஸபை கூடியிருந்து அமிர்த பானம் செய் கிறார்கள்.

இங்கே, மண்ணுலகில் இவ் வொளி மறைந்திருக்கிறது. பூமிதேவி இவனைக் கருவிலே தரிக்கிறாள்.

வானத் தலைவனாகிய பிதாவின் காரியங்களுக்கு இவனை விடுவிக்கவில்லை. தனது விளைவுகள் அனைத்திலும், செடிகளிலும், பூண்டுகளிலும், மரங்களிலும் இவனை மறைத்து வைத்திருக்கிறார்கள்.

அறிவு முதிர்ச்சி பெறும்போது, இவன் மண்ணிலிருந்து வானத்தை நோக்கி எழுகின்றான்.

முதற் பெருங்கடவுளின் துணிவு, அஃதே தீ இவனை இரண்டு அரணிக் கோல்கள் கடைந்து தருகின்றன.

மண் கீழ்க்கோல், வானமே மேற்கோல்; கடையும் தொழிலிலே தோன்றுகிறான். ஆதலால் இவன் ‘வறுமையின் மைந்தன்.’

பிராண லோகத்திலே இவன் ஏறும்போது, புல்லாந் தரையில் மேயும் மாடு போலே, பூமியின் விளைவு களையெல்லாந் தின்று கொண்டு புகையுடன் எரிவான்.

அங்கு வேட்கையின் வலிமை,விடாயின் கிளர்ச்சி, அது தீ. தனது உணவுகளை யெல்லாம் அழித்து நாசமாக்குகிறான். தான் போகிற வழியிலே,முன்பு மகிழ்ச்சியும் பொலிவும் திகழ்ந்த இடங்களில், ஒரு கரிக்கோடு மாத்திரமே மிஞ்சி நிற்கும்படி செய்கிறான்.

ஆனால், எதனை அழிக்கிறானோ, அதனை மாசு தீர்க்கிறான். பிறகு, புகை மறைந்து விடுகிறது.

அப்பால், ஞானோதயங்களின் முன்னே இவன் ஒரு வெள்ளைப் பரி போன்று, நம்மை ஏற்றிக்கொண்டு பரம ஸ்தானங்களிலே விடுகிறான். அங்கே நமது விருப்பங்களெல்லாம் உண்மை பெறுகின்றன. அறிவு ஸம்பூர்ணமாகிறது. அது களியுடனும் வெற்றியுடனும் தொழில் செய்கிறது.

வேள்வி செய்யும் சூரியனை வேள்வித் தீ இத் தகைய தெய்வ நிலையில் உயர்த்துகிறது. அமரத் தன்மைக்கு வெற்றி யுண்டாகிறது. எண்ணமிட்டும் போர் செய்தும் பாடுபட்டுக் கொண்டிருந்த மனிதனைக் கவியாகவும் ஸ்வராஜனாகவும் இயற்கையின் வேந்தனாகவும் அக்நி தேவன் செய்து விடுகிறான்.

தீயைச் சத்திரங்களிலே புகழ்கின்றோம்.

நமது வாயில்கொண்ட மாளிகையின் தலைவன்; நம்மிடத்தே அன்புடன் விருந்துண்ண வந்தோன்; ; உயிரிலே இறைவன்; தழலுகின்ற சடைகளையுடைய கவி; தெய்வக் குழந்தை; புண்ய மூர்த்தியாகிய குமார தேவன் ; வெல்லொணாத சூரன் ; தீ.

மனிதரின் முன்னே சென்று வழி காட்டு வோன்; இறப்பவருள்ளே இறப்பின்றி நிற்போன்; மனிதனுக்குள்ளே தேவர் நிறுத்திய தொழிலாளி; அறிவிலே தடைப்படாதோன்; உண்மையில் முடிவற் றோன்; தீ.

விரிந்தொளிர் செய்யும் உண்மை ஞாயிறு; வேள்வியைச் சுமப்பவன் ; அதன் படிகளை வகுப்பவன் ; உறுதியான அடிப்படை; தெய்வத் தோற்றம் ; ஒளிக் காட்சி; தீ.

தீயை (அக்கி தேவனை) மதுச்சந்தர் என்ற ரிஷி பாடியது. [ரிக் வேதம், மண்டலம் 1, ஸூக்தம் 1. ]

1. தீ வேள்வியின் முன் நிற்பவன் ; அதன் பருவங்களை வகுக்கும் தேவன்; அங்கு வானவரை அழைப்பவன்; செல்வங்களை மிகுதியுற நாட்டுவோன்; அவனை வேண்டுகிறேன்,

2. தீயை முன்னைப் புலவர் போற்றினர்; புதியோரும் அவனையே போற்றுக. அவன் இங்கு அமரரைக் கொண்டு தருக.

3. நாளுக்கு நாள் வளருஞ் செல்வமும், வீர மிக்க புகழும் தீயாலே பெறுக.

4. தீயே,நெறியிலோங்கும் வேள்வி யதனை நீ எப்புறத்துஞ் சூழ்ந்து காக்கிறாய்; அஃதே வானவரிடம் சேரும்.

5. தீ வானவரை யழைப்போன்; புலமையுள்ள செய்கைத் திறமை யாவோன் ; சித்திரமாகிய ஞானக் கேள்வி தருவதிலே சிறந்தோன்; அவ் வானவன் வானவருடன் வருக.

6. அன்ப, வேள்வி தருவோனுக்கு நீ சீர் தருவாய். அதுதான், தீயே, நினது உண்மை.

7. தீயே, நின்பால் நாள்தோறும், இரவும் பகலும் நாம் பணிவேந்தி வருகிறோம்.

8. நெறியிலோங்கும். வேள்விகளின் அரசே, நேர்மை காப்பாய், சுடர் வீசுவாய், தனது மனையிலே வளர்வாய், தீயே, நின்னை யடைகிறோம்.

9. அருகே போவதற்கெளியவனாய், மகனுக்குத் தந்தை போல் தீ எமக்கு ஆகுக. நல்வாழ்வு பெறும்படி எம்மை நீ சார்ந்திடுக.

விளக்கம்

‘அமிர்தத்தின் பிறப்பிடமாகிய ஸூர்யன் என்ற ஒளியில் நான் என்னையே ஹோமஞ் செய்து கொள்ளுகிறேன்’ என்று வேத ரிஷிகள் தமது வேள்வியின் பொருளைத் தாமே வெளிப்படுத்தி யிருக்கிறார்கள். வேதியனும் இன்றைக்கும் காலையில் ஒவ்வொரு இந்த மந்த்ரத்தைச் சொல்லுகிறான். இவ்விதமான வேள்வி நடைபெறவேண்டுமானால், அதற்குத் தீயின் துணை வேண்டும். தீ என்பது தவக் கடவுள். தெய்வீகமாகிய அறிவுத்துணிவு தீ எனப்படும். ‘தேவருக்கு என்னை ஆஹுதி செய்துவிட்டு, அவர்கள் தரும் அமிர்தத்தை உண்டு நானும் அமரனாகி விடுவேன். இதை அஸுர சக்திகள் தடை செய்ய மாட்டா என்று மனதிலே நிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளும் போது, தீ பிறக்கிறது.

1. தீயை எழும்பும்படி செய்தால் போதும். பிறகு இந்த வாழ்க்கை வேள்வியின் பொறுப்பு; என்னைச் சார்ந்ததன்று. அவனே வேள்வியை அதன் பரு வங்களுக்குத் தக்கவாறு படிப்படியாக மேலே ஏற்றுக் கொண்டு போகிறான். எல்லா விதமான தெய்வ சக்திகளையும் அங்கு அழைத்து வருகிறான்.

2. ‘நமக்கு முன்னே விடுதலைபெற்ற மகரிஷிகளெல்லோரும் தீயையே துணை கொண்டனர். புதிய ரிஷிகளாகிய நாமும் அவனாலேயே விடுதலைபெறு வோம்’ என்று முதல் வேதத்தின் முதல் ஸூக்தம் சொல்லுகிறது. ரிஷி பரம்பரையின் ஆரம்பத்தை எப்படி யறிவோம்!

3. ‘செல்வம்’ என்பது இவ்வுலகச் செல்வங்கள் ஞானச் செல்வங்கள் ஆகிய இரண்டையும் குறிப்பது. இவற்றை நமக்கு அக்கிதேவன் தருவான்.

‘எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்

என்று திருவள்ளுவர் சொல்லுகிறார்.

தீக்கடவுள் எல்லா மனிதரிடத்தும் உள்ளத் திண்மையாக நிற்கின்றான். அவனை வளர்த்தால் எண்ணிய பொருள் எதுவும் எவ்வுலகத்திலும் கைகூடும்.

4. மனித நிலையிலிருந்து அமரநிலை நோக்கிச் செல்லும் வழிதான் வேள்வி போகும் வழி.

5. ‘ஞானக் கேள்வி’ இன்னதென்பதை மேலே காட்டி யிருக்கிறேன்.

7. முழுதும் பணிவு கொள்வதே தேவரை அழைக்கும் வழி. அஹங்காரத்தை விட்டு, இவ்வுடல் முதலியவற்றை தேவருடைமை யாக்கி அவரையே சரணடைந்து விடுதல் வேண்டும்.

8. நேர்மை – சொல்லிலும், நடையிலும், உள்ளத்திலும் முழு நேர்மை – காணும்போது அங்கே அக்நி சக்தி பிறந்திருப்பதாக அறிந்து கொள்ளலாம். உள்ளத் திண்மை இல்லாவிடில் நேர்மையைக் காத்தல் அரிது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !