வேத ரிஷிகளின் கவிதை
சி. சுப்பிரமணிய பாரதி

முடிவுரை

வேத ரிஷிகள் காலத்தில் கோவில் கிடையாது விக்ரஹாராதனை கிடையாது; ஸந்யாஸம் கிடையாது. அத்வைத த்வைத விசிஷ்டாத்வைதப் பிரிவுகள் கிடையா; பக்தி மாத்திரந் தானுண்டு.

கோவிலும் மடமும், பௌத்தமதப் பழக்கத்தால், வெளிநாடுகளிலிருந்து நமக்குக் கிடைத்த பேறுக ளென்று சரித்திரக்காரர் சொல்லுகிறார்கள். ஆனால், இப்போது ஹிந்துமதப் பயிற்சிகளுள்ளே கோவிலும், சிலையும் நெடுந்தூரம் ஆழ்ந்து போய்விட்டன. ஆதலால், இப்போது ஹிந்து மதத்திலிருந்து கோவிலைப் பிரிக்க முடியாது. கோவில்களுக்குள்ளே பரஸ்பரம் பொறாமையும், சண்டையு மில்லாதபடி எல்லாக் கோவில்களும் ஸாக்ஷாத் ஸூர்யனாகவும், அக்நி குமார னாகவும், ருத்ரனாகவும், இந்த்ரனாகவும், வாயுவாகவும், விஷ்ணுவாகவும், வருணனாகவும் விளங்குகிற பர மாத்மாவின் கோவில்களென்றும், கோயில்களுக்குள்ளே கக்ஷி பேதங்கள் கிடையாவென்றும் பண்டித பாமரர்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ப்ரக்ருதி இயற்கைத் தோற்றம்; காணப்படுகிற உலகம் விஷ்ணுவுடைய சரீரம். இதற்குள்ளே வ்யாபித்து நிற்கும் ஆத்மாவே விஷ்ணு. விஷ்ணுவைச் சிலையிலும் வணங்கலாம், மலையிலும் வணங்கலாம், தூணிலும் துரும்பிலும் வணங்கலாம். சிலைகளிலே வணங்குதல் ஒருவகை யோகம். வேதரிஷிகள் இந்த விஷ்ணுவை, இந்த்ரனை, ஸூர்யனை, ருத்ரனை நேராகக் கண்டு வணங்கினார்கள். உலகமே இவனுடைய உடம் பாதலால் அவர்கள் உலகத்தை வணங்கினர். அறிவுக்குள்ளே வானமும் ஸூர்யனு மிருப்பது போலே வெளியுலகத்திலும் இருக்கின்றன. உள்ளும் புறமும் ஒன்று.

மற்றொரு முறை விளங்கச் சொல்லுகிறேன். புயற்காற் றடித்தது. வேதரிஷிகள் அதன் முன்னே போய் நின்றார்கள். ஆயிர மின்னல்கள் வாள் போல வீசின. உலகம் குலுங்கிற்று. அண்டங்கள் இடிவது போலே சத்தம் கேட்டது. மேற்படி ரிஷிகள் பயப் படவில்லை.மந்திரங்களைப் பாடினார்கள். ருத்ரனுடைய உடம்பு தானே உலகம்? வாயுவே ருத்ரன். வாயுவினுடைய உடற் செய்கை தானே புயற்காற்று? இந்திரன் மின்னலையும் இடியையும் காட்டுகிறான். மேகங்கள் சிதறுகின்றன. பூமிக்குக் தண்ணீர் கிடைக்கிறது. இதில் பயத்துக் கிடமெங்கே? ரிஷி புயற்காற்றைத் துதிக்கிறார். பிறகு, இரவு நீங்கி ஸூர்யோதயம் உண் டாகிறது; ஒளி தோன்றுகிறது. அதைப் பார்த்து நேரே கைகூப்பி ரிஷி மந்திரம் பாடுகிறார். பக்ஷிகள் பாடுகின்றன. பூக்கள் மலர்கின்றன. நீரும் காற்றும் சிரிக்கின்றன. இஃதத்தனையும் இயற்கை தெய்வத்தின் காட்சி. இதை ரிஷி போற்றும்போது ப்ரத்யக்ஷ நாராயணனைப் போற்றுகிறார்.

வீட்டிலே நெருப்பு வளர்த்து அதிலே தெய்வத்தைக் கண்டு தொழும் வழக்கம் அக் காலத்தில் மிகுதிப் பட்டது. பொதுவாக இயற்கை வணக்கம் வழக்கமில்லாமல் போன பிறகும் அக்நி பூஜையும், ஸூர்ய பூஜையும் இன்றுவரை நமக்குள்ளே மிஞ்சி நிற்கின்றன. ஸந்த்யா வந்தனாதிகளில் ஸூர்ய பூஜை நியதமாக நடந்து வருகிறது. ஸர்வ வைதிக கிரியைகளும் ஹோமம் வளர்த்துப் பூஜை பண்ணாமல் நடப்பதில்லை.

ப்ரக்ருதியை நேரே தொழும் வழக்கம் மிகுதிப் பட்டால் வேதம் ஒளி பெறும்.

சரணாகதியே வழி.

வேதரிஷிகள் வேறு வழி காட்டியதாக ஸம் ஹிதைகளிலே தெரியவில்லை.

குருவுக்கு மரியாதை செய்யவேண்டு மென்றும், பரமாத்மா ஒருவனுக்கே சரணாகதி தகுமென்றும் என்னுடைய அபிப்ராயம்.

மனதைக் கட்டி ஆளுவதற்கு மந்திரத்தை உச் சரிப்பதே வழி, மந்திரத்தின் ஒலியை தியானம் செய்வதில் பயன் கிடைக்குமென்று தோன்றவில்லை. அதன் பொருளை தியானிக்கவேண்டும். பின்வரும் ‘பாட்டில் பரம்பொருளாகிய நாராயணனுக்கு சக்தி நாமம் வழங் கப்படுகிறது.

பாட்டு

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்க ளாமிவள்
பார்வைக்கு நேர் பெருந் தீ,
வஞ்சக மின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென் றேயுரைப்பீர் ; அவள் பேர், சக்தி
ஓம், சக்தி ஓம், சக்தி ஓம். (1)

நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப்பாள்;
அல்லது நீங்குமென்றே யுலகேழும்
அறைந்திடு வாய்முரசே!
சொல்லத் தகுந்த பொருளன்று காணிங்கு
சொல்லு மவர் தமையே
அல்லல் கெடுத் தமரர்க்கிணை யாக்கிடும்
ஓம், சக்தி ஓம், சக்தி ஓம். (2)

நம்புவ தேவழி யென்ற மறை தன்னை
நாமின்று நம்பிவிட்டோம்;
கும்பிட்டெந் நேரமும் சக்தியென்றாலுனைக்
கும்பிடுவேன் மனமே.
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில்லாத படி
உம்பர்க்கு மிம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம்,சக்தி ஓம், சக்தி ஓம். (3)

பொன்னைப் பொழிந்திடு, மின்னை வளர்த்திடு,
போற்றி யுனக்கிசைந்தோம்;
அன்னை பராசக்தி யென்றுரைத் தோம்;தளை
யத்தனையுங் கலைத்தோம்;
சொன்னபடிக்கு நடந்திடுவாய்,
மனமே தொழில் வேறில்லை காண்;
இன்னும தேயுரைப் போம்,சக்தி ஓம், சக்தி
ஓம், சக்தி ஓம், சக்தி ஓம். (4)

வெள்ளை மலர்மிசை வேதக் கருட்பொரு
ளாகி விளங்கிடு வாய்,
தெள்ளு கலைத் தமிழ் வாணி, யுனக் கொரு
விண்ணப்பஞ் செய்திடுவேன்:
எள்ளத்தனை பொழுதும் பயனின்றி
யிரா தென்ற னாவினிலே
வெள்ள மெனப் பொழிவாய், சக்தி வேல், சக்தி
வேல், சக்தி வேல், சக்தி வேல்! (5)

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !