
வேத ரிஷிகளின் கவிதை
சி. சுப்பிரமணிய பாரதி
மருத்து
(புயற்காற்று)
முகவுரை
இது கண்வ ரிஷி காட்டிய மந்திரம். மருத்துக்க ளென்றால் புயற் காற்றடிக்கும் தேவர். இவர்கள் ருத்திரன் மக்கள். ருத்ரன் அஞ்சத் தக்கவன். அவனுக்கு மூவுலகமும் நடுங்கும். பரமாத்மாவின் ஸம்ஹார வடிவத்துக்கு, வேதம் ருத்ரன் என்ற பெயர் சொல்லுகிறது. இவன் தன்னைச் சரணமடைந்தோருக்கு எங்கும் எப்போதும் நல்ல துணையாவது போல், இவன் மக்களும் இந்திரனுடைய மறத் தோழருமாகிய மருத்துக்கள் இருளை ஒழிப்பதிலே கொடியோ ராயினும் வேள்வி செய்வோருக்கு நன்மை யெல்லாங் தருவர். வானத்திலே தோன்றும் புயற்காற்றுக்களையும், உள்ளத்திலே காணப்படும் உக்ர வேகங்களையும் ஆட்டிவைப்போர் மருத்துக்கள். இவர்களைச் சரணமடைந்தால், காவலும், இன்பங்களும், உண்மையறிவும் தோன்றும். இந்த வானவருடைய துணை வேண்டிக் கண்வ ரிஷி பின்வரும் மந்திரத்தை ஓதுகிறார்.
மருத்தைக் கண்வரிஷி பாடியது [1. ரிக்வேதம்: மண்டலம் 1, ஸூ 39; அஷ்டகம் 1; வர்க்கம் 18,19. ]
1. இப்படி உங்களுடைய திறமையை மேலிருந்து தீபோல் வீசுவது யாருடைய வேள்வியால்? யாருடைய சூழ்ச்சியால்? யாரிடம் போகிறீர், உலகினை அசைப்பீர், யாரிடம்?
2. உம் ஆயுதங்கள் தாக்குவதில் உறுதியும் எதிர்ப்பதில் வலிமையும் பெறுக. தொழில் செய்யும் வீரம் உமக்கே யாகுக. மாயங்கள் செய்யும் மானுடனுக்கில்லை.
3. உறுதி கொண்டதை விசிறி யெறிகிறீர். கன முடைய பொருளைச் சுழல்விக்கிறீர். மண்ணில் மரங்களையும் குன்றுத் தொளைகளையும் ஊடுருவிச் செல்லுகிறீர்.
4. பகைவரைக் கடித்துண்பீர்! உமக்கு வானத்தில் பகையில்லை, மண்ணிலு மில்லை. விரிவுடைய ஆற் றல் நுமக்கேயாம். ருத்ரரே! அதனை யாரும் மீறலாமா?
5. மலைகளை நடுங்கச் செய்கிறார்கள், மரங்களைப் பிளந்து தள்ளுகிறார்கள். வாரீர், மருத்துக்களே, பித்தரைப்போல் ; தேவரே, உமது முழுக் குலத்துடன் வருக.
6. புள்ளி மான்களைத் தேர்களில் பூட்டினீர். சிவப்புமான் தலைவனாக இழுக்கிறது. உமது வரவை மண்மக்களும் உற்றுக் கேட்டார், மனிதர் நடுங்கினர்.
7. ருத்ரன் மக்களே, விரிவின் பொருட்டு, உமது துணையை விரைவில் வேண்டுகிறோம். பழமை போலே எமக்குத் துணை கொண்டுவருக; அஞ்சி நிற்கும் கண் வனை நாடி இங்கு வருக.
8. உம்மாலேனும் மனிதராலேனும் தூண்டம் பெற்றதாகி எம்மை அடிக்க வரும் பிசாசு யாதாயினும் அதற்கு ஆற்றலும் வலிமையும் உம்முடைய உதவி களும் இல்லாதபடி செய்க.
9. வேள்வி காப்பீர், கண்வனை முழுதும் காத்து விட்டீர்; உமது முழு வரங்களுடன் எம்மிடத்து வருக, மழையிடத்து மின்னல்கள் கூடுவதுபோலே.
10. நன்றாகப் பிளப்பீர், முழு வன்மையும் கொண்டு வருகிறீர், உலகத்தை ஆட்டுவீர், மருத்துக்களே! ரிஷிகளின் கொடிய பகையின் மீதே அம்புபோ லொரு பகையினை வீசுக.
விளக்கம்
உள்ளம் பழங்காடு போலாகி விட்டது. இருள் சேர்ந்து போயிற்று. நல்ல காற்றுப் புக வழியில்லை. புதரும் கிளையும் மிகுதியாகி, இருளும் சேறும் நாற்றமுமாகி, நடக்கத் திரிய வழியில்லாம லிருக்கிறது. அப்போது தேவனாகிய இந்திரனிடம் முறையிடுகிறோம். அவனுடைய தோழராகிய வேகசக்திகளை நாடுகிறோம். அந்த யோக சக்திகள் புயற்காற்றைப் போலே வந்து, உள்ளத்திலே சுத்தநிலையும், அமர வாழ்க்கையும் தந்து காக்கின்றன. ஓம் ததாஸ்து.
புயற்காற்றுத் தேவராகிய மருத்துக்களை கோதமர் பாடியது [ரிக்வேதம்: மண்டலம் 1, ஸூக்தம் 88; அஷ்-1,- அத்-6, வர்க்கம் -14.]
(1) வாரீர், மருத்துக்களே!
மின்னல்களும், நல்ல பாட்டுக்களும், வேல்களும் நிரம்பியனவாய், (காற்றுக்) குதிரைகளைச் சிறகு போல் உடையனவாகிய தேர்களின் மீதேறி வருக. நல்ல மாயைகளை யுடையீர்!
மிக்க வளமுடைய இன்பத்தைக்கொண்டு, எம் மிடத்தே பறவைகள் போல் வருக.
(2) தேர்களை விரைந்திழுக்கும் சிவப்புக் குதிரைகளும் மாநிறமுடைய குதிரைகளுங் கொண்டு, அவர்கள் ஒளியுடன் வருகிறார்கள். (அவர்களில்) ஒருவன் அரிவாள் கொண்டிருக்கிறான். அவன் பொன்னொளி வீசுகினான். தேருருளையினால் அவர்கள் பூமியை அடித்தனர்.
(3) (வானவரே, நீங்கள்) உடம்பிலே, செல்வத்தின் பொருட்டு, வாள் பூண்டிருக்கிறீர்கள். காட்டை மேலோங்கும்படி அசைப்பது போலே, எம தறிவையும் ஓங்கும்படி செய்க! மானுடரே, உங்கள் பொருட்டாக இந்த மருத்துக்கள் நன்கு பிறந்து மிகவும் ஊக்க முடையவராய், மலையை அசைக்கிறார்கள்.
(4) பருந்துகளே!
எமது நாட்கள் உம்மை ஒரு முறை சுற்றி வந்து, பிறகு எமதறிவினிடத்தேயும், எமது தெய்விகமான செய்கையினிடத்தேயும் மீண்டெய்தி விட்டன.
நல்ல பாட்டுக்களாலே வேள்வி செய்யும் கோதம ரிஷியின் கூட்டத்தார் தண்ணீர் குடிப்பதற்காகக் கிணற்றின் மேன்மூடியைத் திறந்துவிட்டனர்.
(5) மருத்துக்களே, உமக்காக, கோதமன் பாடிய இப்பாட்டுக்கு நிகர் வேறொன்று கண்டதில்லை. பொன் னுருளைத் தேர்களில் இரும்புப் பற்களுடைய காட்டுப் பன்றிகளைப் போலே வரும் உம்மைக் கண்டு, (கோதமன் இப்பாட்டைச் செய்தான்).
(6) தொண்டன் வாக்காதலால், உமக்கிணங்கிய இந்தப் பாட்டு உம்மை நோக்கி ஒலித்தெழுகின்றது. எம்மிடமிருந்து, சிரமமின்றி, இயற்கையின்படி இந்த வாக்குண்டாயிற்று.
விளக்கம்
இந்த மந்திரம் பாடினவர் கோதம ரிஷி.
1.பழைய உலகத்தை மாற்றிப் புதிய உலகம் செய்வதும், பழைய காட்டை அழித்துப் புதிய காடு தோற்றுவிப்பதும், பழைய அறிவை நீக்கிப் புதிய அறிவு கொடுப்பதும், மருத்துக்களின் தொழில். அதனால் அவர்களுடைய தேர்களில் “மின்னலும், நல்ல பாட்டும் வேலும்” கொண்டு வருகிறார்கள். மின்னலாலும் வேலாலும் பழமையை அழித்து, நல்ல பாட்டினால் புதுமை பிறக்கும்படி செய்கிறார்கள். மருத்துக்கள் “நல்ல மாயைகளை யுடையோர்.” தேவ மாயை யென்றும், அஸுர மாயை யென்றும் இரண்டு வகை யுண்டு. நல்ல மாயைகளாவன தேவ மாயைகள்.
2. மருத்துக்களிலே ஒருவன் ‘அரிவாள் கொண் டிருக்கிறான்.’ இவனுடம்பு பொன்னொளி வீசுகிறது. இவன் யார்? கணநாதன் போலும்.
3. மனிதர் பொருட்டாக மருத்துக்கள் ‘மலையை அசைக்கிறார்கள்.’ இந்த மலை அஞ்ஞானம், அஹங்காரம்.
4. நாட்கள் மருத்துக்களைச் சூழ்ந்து நம்மிடம் திரும்பி வரும்போது, மருத்துக்களை அழைத்து வருகின்றன. அதாவது, நாம் பல நாளாக மருத்துக்களை வேண்டிச் செய்த தவம் பயனடைந்து விட்டது என்று அர்த்தம். கோதம ரிஷியின் கூட்டத்தார் ‘தண்ணீர் குடிப்பதற்காகக் கிணற்றின் மேல் மூடியைத் திறந்து விட்டனர்.’ அந்தக் கிணறு யாதெனில் அதுவே அமர வாழ்க்கை. அதில் ஊறிவரும் நீர் அமிர்தம். அந்தக் கிணற்றின் மேல் மூடியாவது ஆணவம். ஆணவத்தை நீக்கி அமிர்த பானம் செய்கிறோமென்பது பொருள். பருந்துகளென்றது மருத்துக்களை.
5. காட்டுப் பன்றிகள் மத்த நிலையும் வலிமையுங் காட்டுவன. அவற்றின் ‘இரும்புப் பற்கள்’ பழய காட்டைக் கிழித்துத் தள்ளும் பொருட்டேயாம். இங்ஙனம் மருத்துக்கள் வருவதை நேரே ஞான விழியால் கோதம ரிஷி கண்டு இப்பாட்டைப் பாடினாராதலால் இதில் அனுபூதி ரஸம் காணப்படுகிறது. ஆதலால் ‘இந்தப் பாட்டுக்கு நிகர் வேறொன்று கண்ட தில்லை’ என்று ரிஷி சொல்லுகிறார்.
6. ஸ்வானுபூதியால் வெளிப்பட்ட பாட்டாகை யால், யாதொரு சிரமமில்லாமல், ஊற்றிலிருந்து நீர் புறப்படுவது போல் இயற்கையிலே தோன்றுகிறது. கோதம ரிஷியின் வாக்கினால் உலகத்தாரின் அஞ்ஞா னம் நாசமடைகிறது.



