வேத ரிஷிகளின் கவிதை
சி. சுப்பிரமணிய பாரதி

இந்திரன்

முன்னுரை


கீழே இந்திரனைப் பற்றிய மந்திரங்கள் சிலவற்றை மொழி பெயர்த்து எழுதுகிறேன். அம் மந்திரப் பொருளை விளக்கும்படியான சில விஷயங்களை முதலாவது சொல்லுகிறேன்.

‘இந்திரன்’ என்பது விஞ்ஞான சக்தி; இவனுக்குப் பகை அஞ்ஞானம். இந்த அஞ்ஞானத்திற்கு ‘விருத்திரன்’ என்று பெயர். (விருத்ரன்–மூடுவோன், மறைப்போன்.) விருத்திரன் இருள். அவனே தெய்வ இன்பங்களிலிருந்து நம்மைப் பிரித்து வைக்கும் அஹங் காரம் – அதாவது, பிரிவுணர்ச்சி. அவன் தாய்க்கு “தாநு” என்று பெயர்.(தாநு – பிரிப்பது.)

நமக்குள்ளே மூன்று படிகள் இருக்கின்றன, மண் காற்று வானம் என. (அதாவது, உடல், உயிர், அறிவு என்ற மூன்றும்) வானத்தின் மேலே உண்மை யுலகம் இருக்கிறது. அந்த உண்மை யுலகத்திலிருந்து நமது அறிவிலே ஞானவொளியின் கிரணங்களும், தேவ இன்பங்களாகிய நதிகளும் எப்போதும் பாயும் படி செய்யவேண்டும். இதுவே வேத ரிஷிகளின் நாட்டம்.

அந்த நதிகளையும் கதிர்களையும் நம்முள்ளே பாய வொட்டாதபடி, விருத்திராசுரனும் அவன் கூட்டத்தாராகிய பணி முதலிய மற்றப் பிசாசுகளும் தடுக்கின்றன.

அச்சம், கவலை, சிறுமை, திகைப்பு, சோர்வு முதலாக நமக்குள்ளே வாழும் அசுரருக்குக் கணக்கில்லை. இவர் களுக்கெல்லாம் தலைவன் விருத்திரன். இவன் மேற் கூறப்பட்ட தேவாதிகளை மண்மலையின் கீழே உள்ள ஓர் இருட் குகையில் அடக்கிவைத்து, அவை தம தறிவிலே பாயாதபடி மேலே நின்று தடுக்கிறான்.

இந்த விருத்திரனை வேதம் பாம்பென்று சொல்லுகிறது. அஞ்ஞானம் ஒரு விஷப்பூச்சி; அதற்குக் கை கால் கிடையாது; வீரியம் கிடையாது. நெளிந்து நெளிந்து உள்ளே புகுந்து ஒளியையும் இன்பத்தையும் மறைக்கிறது.

இந்திரன் முதலிய தேவர்களை யாகத்தினாலே தோழமை கொண்டால், அவர்கள் இந்தப் பாம்பையும் இதன் சேனைகளையும் கொன்று,தேவ நதிகளை விடுவித்து நம்முள்ளே பாயும்படி செய்து, நமக்கு அமரத் தன்மை உண்டாகும்படி செய்கிறார்கள். யாகம் (வேள்வி) என்பது நமது உடல் பொருள் ஆவி அறிவு அனைத்தையும் தேவர்களுக்கு அர்ப்பணம் செய்து விடுதல். இந்த வேள்வி செய்தால் நமக்குள் மண், காற்று, வான் (உடல்,உயிர்,அறிவு) என்ற மூன்று படிகளிலும் தேவர் வந்து நிலைபெற்று (அமிர்தபானம் ஸோம ரஸம் குடித்தல்) செய்கிறார்கள். இது மஹர்ஷி களின் யோகானுபவத்திலே கண்டது. இதனை நன்றாகத் தெரிந்து கொண்டால், பின்வரும் மந்திரங்களின் பொருள் தெளிவுபடும்.

இந்திரனை ஹிரண்ய ஸ்தூபர் (தங்கத்தூண்) என்ற ரிஷி பாடியது. [1 ரிக்வேதம்; மண்டலம் 1, ஸூக்தம் 32 : அஷ்ட கம் 1, அத்யாயம் 2, வர்க்கம் 36-8. ]

1. இந்திரனுடைய வீரச்செயல்களை இங்கு சொல்லுகின்றேன்.

அவன் வஜ்ரி ; மின்னல் அவனுக்குப் படை, அவனுடைய முன்னைத் திறமைகளைச் சொல்லுகிறேன்.

பாம்பைக் கொன்றான் ; ஆறுகளைப் பெருகச் செய்தான். மலைகளின் சார்புகளை உடைத்தான்.

2. மலையின் மேலே கிடந்த விருத்திரப் பாம்பை அழித்துவிட்டான்.

அறிவினாலே செய்த – வானத்தாலாகிய – வயிரப் படையை இவனுக்கு த்வஷ்டா என்ற தேவன் செய்து கொடுத்தான்.

நதிகள் வானக் கடலை நோக்கிப் பாடிக்கொண்டு விரைந்து சென்றன, இரைந்துகொண்டு செல்லும் ஆவினம் போல,

3.இந்திரன் ஏறு போன்றான், மூன்று படிகளிலே மதுவுண்டான்; அந்த மது வேள்வியிலே வடிக்கப்பட்டது.

4. அரவுகளிலே முதலில் தோன்றியவனை இந்திரன் கொன்ற பிறகு, மற்ற மாயாவிகளின் மாயைகளை யெல்லாம் வென்றான்.

பின்பு, ஸூர்யனையும் வானத்தையும் உஷாதேவியையும் தோற்றுவித்தான். அதன் பிறகு, இந்திரா, உனக்கோர் பகைவனுமில்லை.

5. மறைக்கும் தொழிலே கொண்ட விருத்திரனுக்குத் தோளில்லை. அவனை இந்திரன் பேரிடியாலே கொன்றான்.

பிளந்த விறகுகளைப் போலே விருத்திரன் மண் மீது சிதறி வீழ்ந்தான்.

6. போர்த் தொழிலறியாதவன் விருத்திரன். இவன் நேர்மை நாடுவோனும் மஹா வீரனுமாகிய இந்திரனைப் போருக்கழைத்தான்.

இந்திரனுடைய அம்புத் திரளை இவனால் கடந்து செல்ல முடியவில்லை. சிதறுகின்ற தனது திறமைகளை இந்திர – சத்துரு ஒன்று சேர்க்க முயன்றான்.

7. காலும் கையு மில்லாதவன் விருத்திரன். இந்திரனோடு இவன் போர் செய்ய வந்தான். அவனுடைய வயிரப் படை இவனை மலையின்மீது கொன்றது.

பலவற்றிலே விளங்குவோன் இந்திரன்.

ஆணேறுகளை ஆண்மை போகிய எருதுகள் எதிர்ப்பது போல, அவனை விருத்திரன் பகைத்தான்; சிதறி வீழ்ந்தான்.

8. ஆற்றடி பிளவுண்டு கிடப்பது போலே, விருத்திரன் கிடந்தான்.

இவன் மீது நதிகள் சென்றன.

அவை மனதின் மேல் ஏறிச் சென்றன.

முன்னர், அவற்றை விருத்திரன் தனது வலிமை யாலே சூழ்ந்து நின்றான்.

இப்போது அவற்றின் அடியிலே வீழ்ந்து கிடக்கிறான்.

9. விருத்திரன் தாயும் அகல வீழ்ந்தாள். தாய் மேலும் மகன் கீழுமாயினர்.

இந்திரன் அவள்மீது வீசியிருந்த படையை மீட்டுக் கொண்டான்.

கன்றுடன் கிடக்கும் பசுவைப்போலவே கிடந்தனள தாநு.

10. தங்குதடை யில்லாது பாயும் நதிகளிடையே அவனுடல் அமிழ்ந்திக் கிடந்தது.

விருத்திரனது உடல் மறைவைக் கடந்து நதிகள் விரிந்து பெருகின.

இந்திரனைப் பகைகொண்டோன் நெட்டிருளில் வீழ்ந்தான்.

11. கதிர்களைப் பணியென்னும் பகைவன் பிடித்து வைத்தது போலே, நதிகளை விருத்திரன் தடுத்துக்கொண்டான்.

அவை பகைவனுக்குப் பத்தினிகளாயின. அவற்றைப் பாம்பு காத்தது.

நீர்த் திரள் வெளிப்படும் வாயில் அடைபட் டிருந்தது.

விருத்திரனைக் கொன்று இந்திரன் அதைத் திறந்தான்.

12.இந்திரா, முதற்பெருங் கடவுள் உன்னைப் போரிலே செலுத்தினான்; அப்போது நீ எமக்கு வலியதோர் உயிர்க்காவல் ஆயினை.

கதிர்களை வென்றாய், சூரா, மதுவை வென்றாய், எழு நதிகளையும் பெருகும்படி விடுத்தாய்.

13. இந்திரனும் விருத்திரனும் போர் செய்த காலத்தில், பகைவன் விளைவித்த மின்னலும் குமுறலும் இடியும் அவன் பொழிந்த மழையும் இவனைத் தீண்டவில்லை.

பிறகு பகைவனுடைய சேனைகள் வந்தெதிர்த்தன, அவற்றையும் இந்திரன் வென்றான்.

14. இந்திரா, பகைவனை அழித்த பிறகு, அச்சத்தோடு செல்லும் பருந்துபோல, நீ எதன் பொருட் டாகத் தொண்ணூற்றொன்பது நதிகளையும் உலகங்களை யும் கடந்து மேலேறிச் செல்லுகிறாய்?

நீ கண்டு மனமஞ்சத் தகுந்த போராளி, பாம்பிற் கேது?

15.செல்வன, நிற்பன், அனைத்திற்கும் இந்திரனே அரசன்.

இவன் வயிரப்படை கைக்கொண்டான். சிகரங்களுடைய அனந்த மலைக்கும் இவனே வேந்தன்.

தொழில் செய்வோரை யெல்லாம் இவனே ஆளுகின்றான்.

ஆரக்கால்களை வளையம் சூழ்ந்திருப்பது போலே இவன் அவரைச் சூழ்ந்து நிற்கின்றான்.

இந்திரனை மதுச்சந்தர் (தேனிசை) என்ற ரிஷி பாடியது. [1 ரிக்வேதம்; மண்டலம் 1, ஸூக்தம் 7: அஷ்டகம் 1,அத்யாயம் 1, வர்க்கம் 13-14. ]


1. பாடுவோர் இந்திரனைப் பாடுகின்றனர். மந்திர மோதுவோர் இந்திரனை யோதுகின்றனர். மொழிகள் இந்திரனை வேண்டி எழுகின்றன.

2.இந்திரன் இரண்டு குதிரைகளில் (அவை பூட்டிய தேரில்) ஏறுகின்றான். மொழிகள்மீது ஏறு கின்றான் ; அவன் இடித்தலைவன்; பொன் வண்ண முடையவன்.

3. நீண்ட காட்சியின் பொருட்டாக இந்திரன் வானத்திலே ஸூர்யனை ஏற்றினான்; ஒளிக் கதிர் களால் மேகத்தைப் பிளந்தான்.

4. வலிய ஒளிகொண்ட இந்திரா, செழுமைகளிலும் ஆயிர வகைச் செல்வங்களிலும் எம்மை வளர்த்திடுக, நினது வலிய ஒளிகொண்ட வளர்ப்புக்களால்.

5. பெருஞ் செல்வத்திலும், சிறு செல்வத்திலும், இந்திரனை அழைக்கிறோம்; மறைவு செய்யும் பேய் களின் மீது மின்னற் படை வந்தது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !