வேத ரிஷிகளின் கவிதை
சி. சுப்பிரமணிய பாரதி

அசுவிநௌ தேவர்


முன்னுரை

அசுவிநௌ’ என்றால், ‘குதிரை யேறி வரும் இருவர்’ என்பது பொருள். இவர் இரவு பகலைக் குறிப்பிடுவதாகச் சில ஐரோப்பிய பண்டிதர்கள் கருதுகிறார்கள். தேவ வைத்தியரென்பது புராணக் கொள்கை. தமிழிலே, வாசி என்ற சொல் குதிரையைக் குறிக்கும்; இது வாஜி என்ற வடமொழியின் திரிபு. இந்தச் சொல்லை யோகிகள் உயிர்க்காற்றென்ற பொருளில் வழங்குவதுண்டு. அசுவம் என்பது உயிர்த் திறமை. அத்திறமையை அதன் போக்கு வரவுகளிலே பாதுகாக்கும் இரண்டு வித சக்திகளே அசுவிநௌ தேவர் என்பது யோகிகளின் மதம்.

மதுச்சந்த ரிஷி அசுவிநௌ தேவரையும், இந்திரனையும், வானவர் கூட்டத்தையும், ஸரஸ்வதி தேவியையும் பாடியது. [ரிக்வேதம்: மண்டலம் 1. ஸூக்தம் 3: அஷ்டகம் 1. அத்தியாயம் 1. வர்க்கம் 5-6. ]

அசுவிநௌ தேவர்

(1) புரவி நடத்துவீர், விரைந்த நடை கொண்டீர், நன்மைத் தலைவரே,பல இன்பங்களுடையீர், எமது வேள்வியின் விருப்பங்களிலே மகிழ்ச்சி பெறுக.

(2) இருவீர், பரியூர்ந்து வருவீர், பல வெற்றிகளை யுடையீர், வீரரே, மதி சிறந்தீர், நுமது வலிமை கொண்ட அறிவினால் எமது சொற்களை விரும்புக.

(3) வெல்வீர், இளமையுடையீர், நெறி செல்வீர் ருத்ரன் வழிகண்டீர், வேள்விப்புல்லை நன்றாகத் துணித்துப் பரப்பி வைத்திருக்கும் மனிதரிடத்தே ஸோமரஸங்களை உண்ணும்பொருட்டு வருக.

இந்திரன்

(4) வருக, இந்திரா, சித்திரக் கதிரோய்! இந்தத் தேன்கள் நின்னை விரும்பி நிற்கின்றன. இவை நுட்பங்களாலே முழுதும் தூய்மை செய்யப்பட்டன.

(5) வா, இந்திரா! அறிவினாலே தூண்டுதல் பெற்று ஞானிகளின் ஏவுதல் கொண்டு இங்கே ஸோமத்துடன் வேண்டுவோனது மந்திரங்களை நோக்கி வா.

(6) இந்திரா, புரவி யூர்வாய், விரைவுடன் எம்முடைய அறிவு மந்திரங்களை நாடி வருக, எமக்கு. ஸோமத்திலே இன்பத்தை நாட்டுக,

விசுவ தேவர் (வானவர் கூட்டம்.)

(7) வானவர் எல்லீரும் வாரீர்; காப்புத் தொழிலுடையீர், தொழில் செய்வோரைத் தாங்குவீர், ஸோமந்தருவோனுக்கு (நன்மைகள்) தருவீர், வருக.

(8) வானவர் கூட்டமே, ஆறுகளைக் கடப்பீர், எமது ஸோமத்தை நாடி வருக, மந்தைக்கு வரும் ஆவினம் போலே.

(9) வானவர் கூட்டமே, பகையற்றீர், பல சூழ்ச்சிகளுடையீர், தீங்கற்றீர், தாங்கும் வலிமை யுடையீர், வேள்வியை விரும்புக.

ஸரஸ்வதி

(10) தூய்மை செய்வாள் ஸரஸ்வதி; வளங்களிலே வளமுடையாள், கருப்பொருள் ஆவாள்; நமது வேள்வியை அறிவினாலே தாங்குக.

(11) உண்மைகளைத் தூண்டுவாள். நல்ல மதிகளை ஒளிபெறக் காண்பாள், நமது வேள்வியை ஸரஸ்வதி தாங்குகின்றாள்.

(12) (உண்மைப்) பெருங்கடலைக் காட்சியினாலே தெளிவுறச் செய்கின்றாள். அறிவுக ளனைத்திலும் ஸரஸ்வதி அரசு செய்கின்றாள்.

இந்திரன்

மதுச்சந்த ரிஷி இந்திரனைப் பாடியது. [ரிக்வேதம்: மண்டலம் 1, ஸூக்தம் 4 : அஷ்டகம் 1, அத்யாயம் 1, வர்க்கம் 7,8. ]

1. நல்ல வடிவங்கள் சமைக்கும் இந்திரனை நாள் தோறும் காக்கும்படி அழைக்கின்றோம், பால் வேண்டுவோர் நன்கு கறக்கும் ஆவினை நாடுவது போல.

2. எமது தேன் பிழிவுகளை நாடி வருக. ஸோமமுண்பாய், எமது ஸோமத்தை யுண்ணுக. செல்வனாகிய நினது களி எமக்குக் கதிர்களைத் தருமன்றோ?

3.இனி, நினது மிகவும் நுட்பமாகிய மதிகளை அறியக்கடவோம்.

எம்மை நீ கடந்து சென்று விடலாகாது.

4. வேள்வி செய்யும் மானுடனே, இந்திரன் வலியவன், அழிக்க வொண்ணாகான், தெளிவுடை யோன். அவனிடம் உதவி கேள். நினது நண்பருக்கு அவன் வரமளித்தான்.

5. இந்திரனிடத்தே செயல்களை ஒப்புக்கொடுத்து விட்டுப் பிறகு நம்மவர் நமது பகைவரை நோக்கி ‘இங்கிருந்து விலகி யோடுவீர்’ என்று கூறுக.

6. நமக்கு அழிவு செய்ய நாடும் பகைவர் நம்மை ‘நற்பேறு பெற்றோ’ ரென்று பேசுக ; இந்திர னுடைய இன்பத்திலே இருந்திடுவோம்.

7. வேள்வி செய்வோய், விரைந்து வரும் இந்திரனுக்கு விரைவுடைய தேனைக் கொண்டுவா; தேன் வேள்வியின் செல்வம்; வீரருக்குக் களி தருவது; கோழரைக் களிப்புறச் செய்யும் இந்திரனை நோக்கி வீழ்வது.

8. நூறு வேள்வித் திற னுடையாய்! இந்திரா! இத்தேனையுண்டு விருத்திரரை (மறைப்புப் பேய்களை) கொன்றிடுவாய்; வளமுடைய மனிதனை வளங்களிலே காப்பாய்.

9. இந்திரா, வேள்வித்திறன் பலவுடையாய், வளமுடைய நின்னை வளமிகச் செய்கின்றோம், செல்வங்கள் பெறும் பொருட்டாக.

10. இன்பச் செல்வங்களை வென்று தருவான், பெரியோன், நன்கு கரையேற்றுவோன், தேன் பிழியும் மனிதருக்கு நண்பன் – அவ் விந்திரனைப் பாடுங்கள்.


இந்திரனை மதுச்சந்த ரிஷி பாடியது. [ரிக்வேதம்: மண்டலம் 1, ஸூக்தம் 5: அஷ்டகம் 1, அத்யாயம் 1, வர்க்கம் 9, 10.]

வாருங்கள், வீற்றிருங்கள், இந்திரனைப் பாடுங்கள், துணைவரே! ஸ்தோமங்களைச் [தோமம் மந்த்ர ப்ரதிஷ்டை] சுமப்பவரே! (1)

பல செல்வங்க ளுடையவனை, விரும்பத் தக்க இன்பங்களின் அரசனை, இந்திரனை, ஸோமரஸம் பிழியுமிடத்தே, ஒன்றுகூடிப் (பாடுங்கள்). (2)

அவன் எங்கள் யோகத்திலே அமர்க. செல்வமும் பலவகை யறிவும் பெருகும்படி அவன் எம் மிடத்தே பொருந்துக. அவன் நம்பொருட்டு வளமைகளுடனே வருக. (3)

போரில், மோதுமிடத்து, இவன் குதிரைகளைப் பகைவர் நயப்பதில்லை (அஞ்சுகின்றனர்). இவ்விந்திரனுக்குப் பாட்டுச் சொல்லுங்கள். (4).

ஸோம முண்பானுக்கு இந்த ஸோமங்களை வடித்தோம். இவை தூய்மை யுடையன, விருந்துக் களி தருவன, கட்டிப்பால் [பால் என்பது ரிஷிகளின் பாஷையிலே ஒளிச் சுவை என்றும் பொருள் படும்: ‘கோ என்னும் மொழி பசுவென்றும், ஒளிக்கதிரென்றும் இரண்டு பொருள்பட வழங்குதல் வேதத்தில் ஸர்வ ஸாதாரண மானது.] கலந்தன. (5)

இந்திரா, செய்கை நலமுடையாய், ஸோமத்தின் முதற் பானத்துக்கு நீ பிறந்து விட்டாய்.

பிறக்கும்போதே முதிர்ந்த வலிமையுடன் வந்தாய். (6)

விரைவு கொண்ட ஸோமங்கள் நின்னுள்ளே பாய்க. இந்திரா, பாட்டினை விரும்புவோய், அறிவோங்கிய நின்னிடத்து நலங்கள் சார்ந்திடுக. (7).

உன்னை ஸ்தோமங்கள் வளர்த்திடும் ; பல வேள்விகளின் இறைவனே, உன்னைச் சொற்கள் பெருகும்படி செய்யும். எமது பாட்டுகள் உன்னை வளர்த்திடுக. (8)

எல்லா வகை ஆண்மைகளும் உடைய ஆயிரவிதமான பெருவளத்தை இந்திரன்,தேயாத காவல் செய்பவனாகி, எமக்கு வென்று தருக. (9)

உடல்களைக் கொல்லும் காலன் எமக்குத் துன்பஞ் செய்யாதொழிக. இந்திரா, பாட்டை விரும்புவோய், அவன் படைக்கலத்தை நீ தடை செய்திடுக. (10)

விளக்கம்

சுத்தமான அறிவு வட்டம் காங்கும் நிறைந்திருக் கிறது. அதன் தலைமைக் கடவுகள் இந்திரன்.

இந்திரனை நமதுள்ளத்திலே ஸ்தாபனம் செய்ய வேண்டுமானால், அதற்குரிய மனோநிச்சயம் செய்து கொள்ளவேண்டும். அம் மனோநிச்சயம் மந்திரவாக்காக வெளிப்படுகின்றது. மந்திரம், மனம் என்ற இரண்டு சொற்களும் வடமொழியில் ‘மங்’ என்ற ஒரே பகுதியில் தோன்றியவை. இந்திரன் வருகையை வேண்டி இந்த ஸூக்தம் சொல்லப்படுகிறது. தேவர்களை அழைப்போர் முன்னதாகவே ஸோமரஸம் பிழிந்து வைக்கிறார்கள். ஸோமப் பச்சிலையை உரலிலே போட்டு உலக்கையால் இடித்து ஸோமரஸம் பிழியப்படுகிறது. யோகானுபவத்திலே, உரல் பிரகிருதி; உலக்கை சேதனத் திறமை; உயிர்வாழ்க்கை என்ற இலையை இங்ஙனம் பிழியும்போது, சித்தத் தெளிவாகிய ஸோமரஸம் பிறக்கிறது. யோகசித்தியும், மூவுலகின் செல்வங்களும், அறிவும் – பல வகை பொருட்டு தரும் இந்திரனை வேண்டுகிறோம்.

மனித அ றிவிலே தெய்வத் திறமைகள் தோன்றுவதை தேவர்களின் புதிய பிறப்பென்று ரிஷி வர்ணிக் கிறார். இங்கு இந்திரன் பிறப்பும், அடுத்த ஸுக்தத்தில் மருத்துக்களின் பிறப்பும் இப்பொருளிலே கொள்ளத் தக்கன.

இந்திரனும் மருத்துக்களும்

இந்திரனையும் மருத்துக்களையும் மதுச்சந்த ரிஷி பாடியது

அவனைச் சூழ்ந்து நிற்போர் வேகமும்,ஒளியுமுடைய சிவப்புக் குதிரையைத் (தேரிலே) பூட்டுகிறார் வானத்திலே சுடர்கள் ஒளி வீசுகின்றன. (1)

விரும்பத்தக்கன, செந்நிறமுடையன, துணிவுடை வீரனைப் பொறுப்பன, இங்ஙனமாகிய குதிரைகளிரண்டையும் இந்திரனுடைய தேரில் இருபுறத் திலும் பூட்டுகின்றனர். (2)

ஒளியில்லாத விடத்தே ஒளியினைச் செய்து, வடிவ மில்லாத விடத்து வடிவத்தினை அமைத்து, வீரனே, நீ புலரிகளுடன் [புலரி வைகறை, காலைச் செவ்வானம். இங்கு. ‘புலரிகள் என்பது ஞானோதயங்களை ] பிறந்து விட்டாய்.[இம்மூன்று ரிக்குக்களும் இந்திரனைப் பாடியன. ] (3)

பின்பு தமது வழக்கப்படி மருத்துக்கள் மீளவும் பிறந்தனர், தமது வேள்விப் பெயர் கொண்டனர். [ரிக்குக்கள் 4, 6-10 மருத்துக்களைப் பாடியன. ](4)

இந்திரா, கோட்டைகளை உடைத்து, மறைவிடங் களிலே வேள்வியைச் சுமந்து செல்லும் மருத்துக்களுடனே,[மருத்துக்கள் புயற் காற்றின் தேவர்;இவர் நமது அறிவொளியை மூடும் இருள்களை யெல்லாம் சாடிப் புடைத் துக் குத்தி யொழித்துவிட்டு, வானமழையையும் ஒளியையும் பெறும்படி செய்வர். ] நீ ஒளிக்கதிர்களைச் சென்று மீட்டுக் கொடுத் தனை. (5)

பெரியோன், ஞானக் கேள்வியுடையோன், செல்வங்கள் தேடிக்கொடுப்போன். அவ்விந்திரனை நோக்கி மதியின்படி பாடலுற்றனர், பாட்டினாலே தேவநிலை பெற விரும்புவோர். (6)

அஞ்சாத இந்திரனுடன் நீயும் [இந்தப் பாட்டில் நீ என்ற சொல் மருத்துக்களின் கூட்டத்தைக் குறிப் பிடுவதாகப் பழைய உரைகாரர் சொல் லுகின்றனர். ] வந்து எங்கள் முன்னே தோன்றுக. நீங்களிருவரும் களியுடையீர். நிகரான ஒளியுடையீர். (7)

பழிக்கக்கூடாதவர், ஒளி சரர்ந்தோர், இந்திர னுடைய விரும்பத் தக்க கணங்கள் இந்த மருத்துக்களால் வேள்வி வலிமையுடன் ஒளிர்கின்றது. (8)

எங்கும் ஸஞ்சாரம் செய்வாய், இந்திரா, இவ் வேள்வியிலே நின்னை வாக்குக்கள் ஒன்றுகூடி வேண்டுகின்றன. றன. அங்கு அச் சுடர் தரும் அறிவு வானத்தி லிருந்து வருக. (9)

அல்லது, அங்கு இம் மண்ணைச் சார்ந்த வானத்தி னின்றும் வருக. அல்லது, மஹோ லோகத்திலிருந்து வருக. (10)

விளக்கம்

நமது மனமாகிய வேள்விக்கூடத்தை நோக்கி இந்திரன் புறப்படுகிறான். சிவந்த ஒளியும் துணைவு முடைய குதிரைகளால் அவனுடைய தேர் இழுக்கப் படுவதாகக் கவி கற்பனை செய்கிறார்.

பிறகு, மூன்றாவது படியில், இந்திரன் நமது மனோ மண்டலத்தில் வந்த பிறகு நடக்கும் செய்திகளைக் காட்டுகின்றார். அவன் வருமுன்னே ஒளியின்றி யிருந்தது. அவன் வந்தவுடன் ஒளியுண்டாயிற்று. அவன் வரு முன்னே நமது மனோமண்டலத்தில் நல்ல திருத்தமான வடிவங்கள் அமைந்திராமல் கலங்கிக் குழப்பமுற்றுக் கிடந்தது. அவன் வந்தவுடனே, அங்கு நல்ல வடிவங்கள் உண்டாயின; அதாவது, ஒழுங்கும் அழகுமுடைய மனோ நியமங்கள் ஏற்பட்டன. பிறகு, ‘வைகறைகள்’ என்று சொல்லப்படும் ஞானோதயங்கள் தோன்றின. பின்பு, அங்கே இந்திரனுடைய சேனை மறவராகிய மருத்துக்கள் என்னும் தேவர் பிறக்கிறார்கள். இந்திரன் தான் தோன்றும்போது, அஞ்ஞானம் அச்சம் கவலை முதலிய தன் பகைவரைக் கொல்லும் பொருட்டுப் பகையுடன் வருகின்றான்.

ஒளியின் கதிர்களை அசுரர் ஆங்கு ஓரிருட் குகையில் மறைத்து வைத்திருக்கிறார்கள். இந்திரனும், மருத்துக்களும், அசுரருடைய கோட்டையைத் தகர்த்து, உள்ளே புகுந்து, அவ்வொளிக் கதிர்களை விடுவித்துக் கொடுக்கிறார்கள்.

வலிமைகொண்ட மந்திரங்களாலே, அதாவது மனோ நிச்சயங்களாலே, மனிதன் இவ்வுலகத்தில் அமரநிலை யடைகின்றான். அது பற்றியே, ‘பாட்டினால் தேவநிலை பெற விரும்புவோர் இந்திரனைத் தமது, மதியின்படி பாடலுற்றனர்’ என்று ரிஷி சொல்லுகிறார்.

அதிதி

(ரிக்வேதம்: 1 மண்ட.-191 ஸூ.-6 ரிக்)

வான் உங்களுக்குத் தந்தை. மண் உமக்குத் தாய். ஸோம ரஸம் உடன் பிறந்தது. அதிதி உடன் பிறந்தாள்.

(8 மண்ட.-101 ஸூ.- 15 ரிக்.)

ருத்திரர்களின் தாய், வஸுக்களின் மகள், தன் மக்களாகிய தேவருக் கெல்லாம் உடன்பிறந்தாள், அமிர்தத்தின் ஊற்றாவாள். அறிவுடைய மனிதனுக்குச் சொல்லுகிறேன் ; ‘மாசற்ற ஒளியாகிய அதிதியை மறக்கலாகாது.’

(10 மண்ட.-63 ஸூ.—10 ரிக்.)

நன்கு காக்கும் மண்ணாகவும், நிகரற்ற வானாகவும் அதிதியே விளங்குகிறாள்; நிறைந்த நலந் தருபவள் ; நன்கு நடத்துபவள்; அந்த அதிதியாகிய தெய்வத் தோணியிலே, நாம் நல்ல நிலையின் பொருட்டாக ஏறிக் கொள்ளுவோம் ; அது நல்ல தண்டுகளுடையது, மாசற்றது, தொளையில்லாதது.

(10 மண்ட.-36 ஸூ.3 ரிக்.)

எல்லாத் தீமையினின்றும் நம்மை அதிதி காத் திடுக. அவள் மித்திரனுக்கும் செல்வ மிகுந்த வருணனுக்கும் தாய். அவளாலே அழிவற்ற வானொளியைச் சேர்ந்திடுவோம்.

(9 மண்ட.-74 ஸூ.-3 ரிக்.)

அதிதியின் நேர்மை நெறியிலே செல்வோன் விசாலமான ஒளிப் பாதையிலே செல்லுகின்றான்.

(2 மண்ட.-27 ஸூ.-7 ரிக்.)

ராஜமாதாவாகிய அதிதியும், அர்யமானும் நம்மை நல்ல வழிகளிலே செலுத்திப் பகைமைகளை யெல்லாம் கடக்கும்படி செய்க. நாம் நல்ல வீரராகிப் பகைமை தீர்ந்து மித்ரவருணரின் மங்களத்தில் வாழ்வோமாக.

(8 மண்ட.-67 ஸூ.–14 ரிக்.)

கட்டுண்ட திருடனை அவிழ்த்து விடுவது போல, எம்மை ஓநாய்களின் வாயிலிருந்து அதிதியும் அவள் மக்களும் விடுதலை செய்க.

(8 மண்ட.-18 ஸூ.—6 ரிக்.)

இரண்டற்றவளாகிய அதிதி பகலிலும் இரவிலும் எமது செல்வத்தைக் காத்திடுக. எப்போதும் வளர்ப்பவளாகி எம்மை அவள் தீமையினின்று காத்திடுக.

(8 மண்ட.-18 ஸூ.-7 ரிக்.)

மதியிலே நிற்பவளாகிய அதிதி நமக்குப் பகலொளியிலே துணை புரிய வந்திடுக. அவள் நமக்கு மங்களமயமாகிய பேரின்பத்தைத் தருக. அவள் நமது பகைவரை (ராக்ஷஸரை) யெல்லாம் ஒழித்திடுக.

(1 மண்ட.-185 ஸூ.-3 ரிக்.)

நிகரற்றதும் தீங்கற்றது மாகிய அதிதியின் வரத்தை வேண்டுகிறேன்.

(7 மண்ட -40 ஸூூ.- 2 ரிக்)

தேவியாகிய அதிதி நமக்குப் பெருஞ் செல்வம் தருக.

(10 மண்ட.-100 ஸூ.- 1 ரிக்.)

அனைத்தையும் சமைப்பவளாகிய அதிதியை வேண்டுகிறேன்.

சில திருஷ்டாந்தங்கள் காட்டினேன். பிற்காலத் துக் கதைகளிலே அதிதியின் உண்மைப் பொருள் மறைந்து விட்டது. ‘அநந்த சக்தியை’ ஒரு ரிஷி பத்தினி யாக்கிவிட்டார்கள். அதிதி யென்பது எல்லை யில்லாத பரமாத்ம சக்தி. ‘அஹங்காரம்’ பிரிவு படுத்து

கிறது, கட்டுப்படுத்துகிறது. நான் என்ற பிரிவுணர்ச்சி நீங்கும்போது மனிதன் எல்லை யற்ற நிலை யுடன் பொருந்துகிறான். அதுவே ‘அதிதியோகம்’ அல்லது சக்தியோகம் என்று சொல்லப்படும். அதிதி யின் மக்கள் ஆதித்யர். இது தேவருக்கெல்லாம் பொதுப் பெயர். ஸூர்யனுக்குச் சிறப்புப் பெயராக வழங்குகிறது. அதிதியைச் சரணமடைந்தோரும் ஆதித்யரே யாவர்.

வாக்கு

வேதத்தில் வாக்கை ஒரு தெய்வமாகச் சொல்லியிருக்கிறது. திருஷ்டாந்தமாகப் பின்வரும் மந்திரங்களை நாம் ஏற்கெனவே படித்திருக்கிறோம் :–

‘நம்மைப் பரிசுத்தம் செய்வாள் ஸரஸ்வதி; வளங்களிலே மிகுந்தாள், அறிவுச் செல்வ முடையவள், (நமது) வேள்வியைத் தாங்குக.

“உண்மை யொளிகளைத் தூண்டுவாள், நல்ல மதி களை விளங்கச் செய்வாள், ஸரஸ்வதி வேள்வியைக் காக்கின்றாள்.”

“பெரு வெள்ளமாகிய ஸரஸ்வதி, ஞானவொளி யால் விளக்குவாள், எல்லா அறிவுகளிலும் கதிர் செய்கின்றாள்.”

‘வாக்’கென்பது, மூலத்திலே, படைத்தல் என்று பொருள்படும். ஸரஸ்வதியை இந்திரனுடைய மறைவுயிர் என்று சொல்வதுண்டு. ஸ்ருஷ்டியே வாக்கு ;. ஸ்ருஷ்டியே சக்தியானபடியாலே தான் புராணக்காரர் ஸரஸ்வதியைப் பிரம்மாவின் சக்தியென்றார். பைபிள் புஸ்தகத்திலே, ‘ஆரம்பத்தில் வாக்கு இருந்தது; அந்த வாக்கு ஈசனோ டிருந்தது; அந்த வாக்கே ஈசன் என்று சொல்லப்படுகிறது. சக்தி பரம புருஷனோ டிருப்பதையும், அவ்விரண்டும் ஒன்றென்பதையும்’ அந்த வாக்கியம் காட்டுகிறது.

ஸரஸ்வதி பூஜைஉண்மை வழி

சொல்லை ஸாதாரணமாக நினைத்துவிட லாகாது. உண்மைச் சொல் க்ஷேம மந்திர மாகும். பொய்ச்சொல் அழித்துவிடும். “வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்.”

இவளை அறிஞன் தனக்குள்ளே ஞான வெள்ளமாகக் காண்கிறான். அவனுடைய அறிவு கதிர்விடுகின்றது. இவளுடைய பூஜைக்கு முக்கிய வழிகள் எவை? தான் எப்போதும் எவ்விடத்திலும் உண்மை சொல்லுதல், பிறர் உண்மை சொல்வதை எப்போதும் எவ் விடத்திலும் விருப்பத்தோடு கேட்டல் என்ற இவ் விரண்டுமேயாம். தான் உண்மை சொல்வது மிகவும் சிரமமாய் விட்டது. பிறர் உண்மை சொல்வதைக் கேட்கும்போது நாராச வாணமாய்விட்டது. ஸாதாரண நிலையில், மனித வாழ்க்கை அத்தனை கோணலா விட்டது; மனித அறிவு அவ்வளவு குழப்பமடைந்து நிற்கின்றது.

தேவ வாக்கு அவதாரம் : ஸரஸ்வதி

வேத மார்க்கமாகிய வேள்வியின் ரஹஸ்யப் பொருளை உணர்ந்து நடந்தால், உண்மை சொல்வதிலும் துன்பமிராது; கேட்பதிலும் துன்பமிராது. உலக வாழ்க்கையே தேவருக்குச் செய்யப்படும் வேள்வியல்லவா? அதனை ஸரஸ்வதியே தரிக்க வேண்டுமென்று மதுச்சந்த ரிஷி வேண்டுவதை மேலே கண்டோம். உண்மைச் சொல்லே ஸரஸ்வதி வசம் நமது வேள்வியை ஒப்புக்கொடுப்பதற்கு முக்கிய வழி யென்றோம். இதனுடன், நிந்தை, பழி,சாபம்,பயம், அசுசி – இவற்றினால் வாக்கை மாசுபடுத்தா திருக்கவேண்டும். அமங்கள வார்த்தைகளும் அவச் சொற்களும், பய வசனங்களும் தீமை தரும். பரிபூர்ணமான தீரமும், வலிமையும்,உண் மையும், திருத்தமும், தெளிவும் பொருந்திய வாக்கே தேவ வாக்கென்று சொல்லப்படும். மனித ஜாதிக்கு தேவ வாக்குப் பிறந்திடுக.

ஸரஸ்வதியும் இலக்கியமும்

உலக நடையிலே, உண்மை முதலிய குணங்கள் ஸரஸ்வதி தேவியின் கருணைக்கு நம்மைப் பாத்திரமாக்கி, நம்மிடத்திலே தேவ வாக்கைத் தோற்றுவித்து, நமது வேள்வியைக் காக்கும் என்பது கண்டோம். இலக்கியக் காரருக்கோ வென்றால், இத்தெய்வமே குல தெய்வம். அவர் இதனைச் சுடர் செய்யும் உண்மையுட னே போற்றவேண்டும். எதுகை மோனைகளுக்காகச் சொல்ல வந்த பொருளை மாற்றிச் சொல்லும் பண்டிதன் ஸரஸ்வதி கடாக்ஷத்தை இழந்து விடுவான். திரிபு முதலிய சித்திரக்கட்டுக்களை விரும்பிச் சொல்லுக்குக் தக்கபடி பொருளைத் திரித்துக்கொண்டு போகும் கயிறு பின்னிப் புலவன் வாணியின் திரு மேனியை நோகும்படி செய்கிறான். அவசியமில்லாத அடைமொழிகள் கோப்போன் அந்த தெய்வத்தின் மீது புழுதியைச் சொரிகின்றான். உலகத்தாருக்குப் பொருள் விளங்காதபடி இலக்கியஞ் செய்வோன் அந்த சக்தியைக் கரித்துணியாலே மூடுகின்றான் ; ‘வெள்ளைக் கலை’ யுடுத்துவதில்லை. மனமறிந்த உண்மைக்கு மாறு சொல்லும் சாஸ்திரக்காரனும் பாட்டுக்காரனும் ஸரஸ்வதிக்கு நிகரில்லாத பாதகம் செய்கின்றனர். இலக்கியத்துக்குத் தெளிவும் உண்மையுமே உயிரெனலாம். இவ்வுயிருடைய வாக்கே அருள் வாக்கென்று சொல்லப்படும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !