

மதமும் மனித வாழ்வும்
ப. ஜீவானந்தம்
முன்னுரை
நமது வணக்கத்திற்குரிய தோழர் ப. ஜீவானந்தம் எழுதியுள்ள “மதமும்-மனித வாழ்வும்” என்கிற இந்த நூலுக்கு முன்னுரை எழுதும் பேறு எனக்குக் கிடைத்துள்ளதற்கு மகிழ்ச்சியடைகிறேன்.
தோழர் ஜீவானந்தம், தமிழகத்தில் தலைசிறந்த கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் இருவர்களில் ஒருவர். மற்றவர் தோழர் ம. சிங்காரவேலர். கம்யூனிஸத் தத்துவப் பிரச்சாரத்தையும், தமிழ் இலக்கியத்தையும் இழையோட்டி தமிழ் மக்களுக்கு வழங்கிய மேதை தோழர் ஜீவா. அவருடைய கருத்துச் செலுத்தப்பட்டு, தமிழ் இலக்கியமும் சிறப்புப் பெற்றது.
மதம் மக்களை மயக்கும் அபின். இருப்பினும் விஞ்ஞான ரீதியில் மத ஆதிக்கத்தையும் மூட நம்பிக்கைகளையும் எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது மனித சமுதாய மாறுதலின் மறுமலர்ச்சி இயக்கத்தின் தனிப் பிரச்சினையாகும்.
பொருளாதார அமைப்பிலும், அரசியலிலும் சுரண்டுகிற வர்க்கங்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற சமுதாயத்தில், மதத்தைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் ஆஸ்திகப் பிரச்சாரம் ஆதிக்கம் செலுத்தும், மதமும் கடவுளும், சுரண்டுகிற வர்க்கங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அபயம் புகும் கடைசி ஆயுதம் ஆகும்.
எனினும் சுரண்டப்படுகின்ற வர்க்கங்களாகிய தொழிலாளர்கள், விவசாயிகள், படித்த நடுத்தர வர்க்கத்தினர்
பெரும் பகுதி, மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால். தலைவிதியின் பெயரால், புண்ணியம் பாவத்தின் பெயரால், நல்வினை – தீவினையின் பெயரால் மூட நம்பிக்கைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
எனவே உழைக்கும் மக்களின் ஒற்றுமையைக் குலைக்க இடமளிக்காதவாறு மதம், கடவுள், மூட நம்பிக்கை போன்றவைகளை எதிர்த்துப் போராடி இருக்க வேண்டும். மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடுகின்ற முறைகள், வர்க்க ஒற்றுமையை உருவாக்குவதற்கு உட்பட்டிருக்க வேண்டும்.
முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அமைப்புதான் மதம், சமயம், கடவுள் போன்ற மூட நம்பிக்கைகளைப் பரப்புவதற்கு ஆணிவேர். அத்தகைய அமைப்பை எதிர்த்துப் போராட வளர்க்கின்ற ஒற்றுமையின் மூலம்தான், மூட நம்பிக்கைகள், ஜாதி, மத வேற்றுமைகளையும் களைவதற்கான சூழ்நிலையை உருவாக்குவது ஏதுவாகும். அன்றி மதம்- கடவுள் போன்ற மூட நம்பிக்கைகளை, எதிர்த்துப் போராடுவதற்கு முதலிடமளிப்பது, முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அமைப்பைத் தகர்க்க வேண்டுமென்கிற வர்க்க உணர்வைத் திசை திருப்பி விடும், சீர்த்திருத்தவாத சாகசமாகிவிடும்.
ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் ஏற்பட்டுள்ள தாழ்வுகளை எதிர்த்து, சகல பகுதி மக்களுக்கும் சம உரிமைகளுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் நிற்பது கம்யூனிஸ்ட் கட்சியாகும். தமிழகத்தில் திராவிடக் கழகமும் தி.மு.கழகமும் பகுத்தறிவு இயக்கத்தை ஓரளவிற்கு நடத்தியுள்ளன. அவற்றினுடைய நடவடிக்கைகள் விஞ்ஞான அடிப்படை கொண்டவையல்ல. எனவேதான் வரட்டு “நாத்திக”ப் பிரச்சாரத்திலிருந்து ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கிற சர்வ மத சமரச சித்தாந்த நிலைக்கு தி. மு. கழகத்தினர் வந்துள்ளனர்.
திராவிடக் கழகம், தி.மு.க. ஆகிய இயக்கத்தின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் உள்ள ஊனங்களைத் தோழர் ஜீவா
மார்க்சிய மெய்ஞானத்தின் வெளிச்சத்தில் அலசி ஆராய்கின்றார், இந்தச் சிறு நூலில்.
மதத்தைப்பற்றி மார்க்சிய – லெனினிய அடிப்படை அணுகுமுறை எவ்வாறு இருக்கவேண்டும், மத எதிர்ப்பில் சரியான பாதை எது, தவறான பாதை எது என்பதைப் புரிந்து கொள்வதற்கு இந்த நூல், புதுமையைக் கற்றுக் கொள்ளத் துடிக்கும் இளைஞர்களுக்கும், குறிப்பாக மாணவர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்.



