மதமும் மனித வாழ்வும்
ப. ஜீவானந்தம்

கம்யூனிஸ்டுகளும் மதமும்

கம்யூனிஸ்டுகளின் மதம் பற்றிய கொள்கைக்குத் தமிழகத்தில் இரண்டு முனைகளிலிருந்து தாக்குதல் வருகிறது.

ஒரு முனையில் மதவாதிகளான சங்கராச்சாரிகளும், மகா சந்நிதானங்களும், ஜீயர் பிரான்களும், மௌல்விகளும், பாதிரிமார்களும், நவீன ஆழ்வார்களும், நூதன நாயன்மார்களும், பஜகோவிந்தப் பக்தர்களும் நின்று கொண்டு கம்யூனிஸ்டுகளின் மதக் கொள்கையின் மீது பாணம் தொடுக்கிறார்கள். “சாமியில்லை, சாத்தானில்லை, கோவில் இல்லை, குளம் இல்லை என்பவர்கள் கம்யூனிஸ்டுகள்; கம்யூனிஸ்டுகள் படு நாத்திகர்கள், படு மத விரோதிகள், அவர்கள் திரியும் திசையையும் திரும்பிப் பாராதீர்கள்” என்று பக்த கோடிகளுக்கும், பொது மக்களுக்கும் எச்சரிக்கை விடுகிறார்கள்.

வைதீக அழுகற் பழங்களும், மடத்தாண்டிகளும் கூட கம்யூனிஸ்டுகளின் மதக் கொள்கையை வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கடுந்தாக்குத் தாக்குகிறார்கள்.

பதில் சொல்லுகிறோம்

மற்றொரு முனையில் ‘மத எதிரி’களான திராவிட இயக்கத்தார் நின்று கொண்டு கம்யூனிஸ்டுகளின் மதக் கொள்கையை எதிர்த்துப் போர் தொடுக்கிறார்கள். “சுய மரியாதை சுப்ரதீபங்கள்” என்று சுய விளம்பர ஒலிபெருக்கும் தி.மு.க. தலைமையினர் இந்தத் தாக்குதலில் பாசறை வகுத்துப் பரணிபாடி முன்னணியில் நிற்கின்றனர். இந்தியக் கம்யூனிஸ்டுகள் மதத்தைப் பொறுத்தமட்டில் “மார்க்சிய ஞான சூன்யர்கள்” என்றும் மதத்தை வெட்டி வீழ்த்துவதில் ‘புரட்சிக் கோழைகள்’, ‘சந்தர்ப்பவாதிகள்’ என்றும் கனஜோராகக் கண்டனக் கோடரியைப் பாய்ச்சுகிறார்கள்.

மதமொழிப்பில் தாமே தமக்கு நிகரென்னும் தி.மு.க. தலைமையினர் இத்துறையில் கம்யூனிஸ்டுகள் மீது அவதூறுச் சகதியை வீசுவதில் “சித்தம் போக்கு சிவம் போக்கு” என்ற மனப்பாங்குடன் தங்கள் பிரச்சார பீரங்கிகளை முடுக்கி விடுகிறார்கள்.

இந்தத் தொடர் கட்டுரையில் கம்யூனிஸ்டுகளின் மதக் கொள்கையை எதிர்க்கும் “மத விரோதி”களான தி.மு.க. தலைமைக்குப் பதில் சொல்ல விரும்புகிறோம். இதில் அவர்கள் கிளப்பும் முக்கியமான மறுப்புகளுக்கு மறுப்புக் கூற மட்டுமே விரும்புகிறோம். முதன் முதலில் அவர்கள் எழுப்பும் சித்தாந்த ரீதியான ஆட்சேபணைகளுக்குப் பதில் சொல்ல விரும்புகிறோம்.

மார்க்ஸியமும் தி.மு..வும்

தி.மு.க. ஏடுகள் கூறுவதென்ன?

1. “மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகிய கம்யூனிஸ்டு இயக்க உலகத் தலைவர்கள் வகுத்த மதம் பற்றிய சித்தாந்தத்தை இந்தியக் கம்யூனிஸ்டுகள் (குறிப்பாகத் தமிழக கம்யூனிஸ்டுகள்) பின்பற்றவில்லை. நாங்கள் பின்பற்றுகிறோம். எனவே இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள கம்யூனிஸ்டுகள் உண்மைப் பொது உடைமை வாதிகளல்ல. திராவிட முன்னேற்றக் கழகமே உண்மையான பொது உடைமைத் தத்துவத்தை மலரச் செய்யும் மகத்தான சக்தி.

2. நாத்திகக் கருத்துப் பிரச்சாரமும் மதமொழிப்பு அறிவியக்கப் போராட்டமும்தான் லெனின், ஸ்டாலின் அடிச்சுவட்டைப் பின்பற்றிச் செயலாற்றும் புரட்சிப் பணிகளாகும்.

3. முதலாளி வர்க்கம் தங்களுடைய சுரண்டல் கொள்கையை நடத்த எளிதான ஆயுதங்களாகப் பயன்படுத்தும் மதத்தையும், மத ஸ்தாபனங்களையும், கோவில்களையும் அழித்தொழித்தால் தான் விஞ்ஞானப் பூர்வமான பொது உடைமை நிலை பெற முடியும் என்பது மார்க்சியத்தின் உண்மைச் சித்தாந்தம்.

4. ஏழைப் பாட்டாளி வர்க்கத்தின் நலனில் அக்கறை கொண்டுள்ள ஏழைகள் கட்சியானது மதத்தையும் மத மூடப் பழக்க வழக்கங்களையும் சுட்டுப் பொசுக்கினாலொழிய வெற்றி காணமுடியாது.

மேற்கூறிய உண்மைகளை தி.மு.க. தலைவர்கள் ‘தத்துவ ஞானிகள்’ மார்க்சியத்தை ஆழ்ந்து ஆராய்ந்ததின் விளைவாக ஏற்பட்டு முடிந்த முடிவுகள் என்று நாம் கருதலாம். அண்ணாத்துரையின் ‘அறிவுச் சுடரி’லிருந்து, திராவிடன், தென்றல், தீச்சுடர் வரையில் தி.மு.க. இதழ்கள் அனைத்திலும் கம்யூனிஸ்டுகளின் மதக் கொள்கைக்கு எதிரிடையாக அடிக்கடி அடிபடும் மணி மகுடக் கருத்துக்களாகவும் இவைகள் திகழ்கின்றன.

மேற்படிக் கருத்துக்களில் மார்க்சிய சித்தாந்தம் ‘நாத்திகம்’ ‘மதமொழிப்புப் போராட்டம்’, கம்யூனிஸ்டுக் கட்சி ஆகியவை பற்றிய தி.மு.க. தலைமையின் நிர்ணயிப்பு பொதிந்து கிடக்கிறது. எனவே, இந்தக் கருத்துக்களை மார்க்சிய வெளிச்சத்தில் அலசிப் பார்க்க வேண்டியது நமது கடமை. அப்பொழுது தான் தி.மு.க. கம்யூனிஸ்டுக் கட்சி ஆகியவற்றின் மார்க்சியம் பற்றிய தரத்தையும் தன்மையையும் தமிழ் மக்கள் அறிந்து ஒப்பு நோக்கி உண்மை காண வாய்ப்புக் கிடைக்கும்.

மார்க்ஸியத் தலைவர்கள் வரையறுப்பதென்ன?

“விஞ்ஞான சோஷலிசத்தை அதாவது மார்ச்சியத்தை ஆதார பீடமாகக் கொண்டே கம்யூனிஸ்ட் கட்சி தனது தத்துவ ஞானக் கட்டடம் முழுவதையும் உருவாக்கி இருக்கிறது. இயக்குவியல் லோகாயத வாதம் (Dialectical Materialism) மார்க்சியத்தின் தத்துவஞான அஸ்திவாரம் என்று மார்க்ஸும் ஏங்கெல்ஸும் பறைசாற்றுகிறார்கள்.

-இவ்வாறு லெனின் ‘மதத்தைப் பற்றிய கம்யூனிஸ்ட் கட்சி மனப்பான்மை’ என்ற நிகரற்ற கட்டுரையில் எடுத்த எடுப்பிலேயே ஆணித்தரமாகக் கூறுகிறார். பொருள்கள் ஒன்றோடொன்று எவ்வாறு இணைந்திருக்கின்றன, எவ்வாறு வளர்ந்தும் மாறுதல் அடைந்தும் வருகின்றன என்பனவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாத வரையில் பொருள்களைப் பிசகற்ற முறையில் துல்லியமாக நாம் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் மற்றப் பொருள்களோடு பிணைக்கப்படாத பொருள் ஒன்று கூட உலகத்தில் இல்லை. அன்றிருந்த மேனி அழியாமலும், மாறாமலும் இருக்கிற பொருளும் ஒன்றுகூட இல்லை. ஒவ்வொரு பொருளும் இடையறாது தொடர்ந்து மாறிக் கொண்டும் இயங்கிக் கொண்டுமே இருக்கிறது.

இயற்கை, சமுதாயம் ஆகியவை முழுவதிலும் எதிரும் புதிருமான முரண்பட்ட போக்குகள் எழுகின்றன; இவற்றின் போராட்டம் மாறுதலிலும் வளர்ச்சியிலும் முடிகிறது. இந்த முரண்பாடுகளையும், முரண்பாடுகளின் மோதல்களையும், மோதல்களின் முடிவுகளையும் கருத்தூன்றிக் கவனிக்க வேண்டும். ஏனென்றால் எல்லாவித வளர்ச்சியிலும் வளர்ச்சியின் படிப்படியான மாறுபாடு (அளவு மாறுபாடு) ஏதாவதொரு புதிய பொருளில் (வளர்ச்சியின் புதிய கட்டத் தில் குண மாறுபாட்டில்) முடிகிறது.

உலகத்தில் காணப்படும் சகல அசைவுகளுக்கும் இயக்கங்களுக்கும், இயக்கங்களின் மாறுதல்களுக்கும் இந்த பௌதீக உலகமே மூல காரணம், ”கடந்து நிற்கும்” ‘ஆத்மீக முழுமுதல் பொருள்” அல்ல. ஏனென்றால் உலகத்தின் இயற்கையான தன்மையே பௌதீகத் தன்மைதான். முதலாவது ஜடப் பொருள். இரண்டாவதுதான் ஆத்மா, மனம், சிந்தனை இத்யாதி.

இதுதான் இயக்குவியல் லோகாயத வாதம். மனித வர்க்கத்தின் விடுதலைக்காக மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகிய இரு மகா மேதைகளும் கணடருளிய தத்துவ ஞானம்.

தி.மு.. வுக்குத் தத்துவம் உண்டா?

திராவிட முன்னேற்றக் கழகம் என்றேனும் இந்த இயக்குவியல் லோகாயதவாதத்தைத் தனது தத்துவஞான அஸ்திவாரமாகக் கொண்டதுண்டா? இல்லை. வேண்டாம். தி.மு.க.வுக்கு ஏதேனுமொரு தத்துவ ஞான அடிப்படை யாவது உண்டா? அதன் தலைமையால் தெளிவாக வரையறுக்கப் பட்டதென்றோ, அதன் மாநில மாநாடுகளில் வகுக்கப்பட்டது என்றோ இன்றுவரை தமிழ் மக்களின் முன் ஏதாவதொரு தத்துவ ஞானம் வைக்கப்பட்டதுண்டா? இல்லவே இல்லை.

மாறாக, ஒவ்வொரு நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும்- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும்தான்–அதன் தத்துவ ஞான அஸ்திவாரம் இயக்குவியல் லோகாயதவாதம் என்பது உலகறிந்த உண்மை.

18வது நூற்றாண்டில் பிரான்சிலும், 17வது நூற்றாண்டின் முற்பகுதியில் ஜெர்மனியிலும் லோகாயதவாதம் தலை தூக்கி நின்றது. இந்த லோகாயதவாதம் அடி முதல் முடி வரை நாத்திகத் தன்மையும், எல்லா மதங்களையும் திட்ட வட்டமாக எதிர்க்கும் தன்மையும் உடையது . மார்க்சும், ஏங்கெல்ஸும் உருவாக்கியது இயக்குவியல் லோகாயத வாதம். இந்த லோகாயத வாதத்தின் சரித்திர வேர்களை ரூபாய்க்குப் பதினாறு அணா திட்டம் பரிபூரணமாக ஏற்றுக் கொள்கிறது.

அன்று எங்கே ?

ஆனால் ‘பகுத்தறிவுப் பாசறை’ என்று தன்னைத் தானே பெருமை முழக்கம் செய்துகொள்ளும் தி.மு.க. வோ, ‘சுய மரியாதை’ இயக்கம், தமிழகத்தில் தனது ஆரம்பப் பத்தாண்டு வளர்ச்சியின் உருவாக்கமாக மலர்ந்து, 1933-34ல் தோன்றிய ‘பகிரங்க நாத்திக இயக்கத்தின்’ அடிப்படைக் கருத்துக்களைக் கூட ஏற்றுக் கொள்ளத் தொடை நடுங்கி பின்னடித்திருக்கிறது; அன்று சிங்காரவேலர் தலைமையில் பகிரங்க நாத்திக இயக்கம் (மார்க்சியப் பார்வையில் குறை பாடுடையதாயினும்) நடந்த காலத்தில் அண்ணாத்துரை அந்த முகாமின் அருகாமையில்கூட நடமாடினதில்லை. ஈ. வே. ராவோ 1935 ஆரம்பத்திலேயே, “சுயமரியாதை இயக்கம் அவமரியாதை இயக்கமாகி விட்டது” என்ற சிங்காரவேலரின் பழிப்புக்கு இரையாகி விட்டார்.

மத ஒழிப்பா இது ?

திராவிட இயக்கத்தின் இன்றைய கோஷமென்ன? “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பது. இது மார்க்சிய கோஷமா? அல்ல. லோகாயதவாத கோஷமா? அல்ல. பகுத்தறிவுவாத கோஷமா? அல்லது சைவ சித்தாந்த திருமூல முனிவரின் “திருமந்திர” கோஷம்.

மார்க்சியத் தத்துவ ஞானத்தைப் பற்றிய தலை சிறந்த நூல் “டூரிங்-எதிர்ப்பு” (Anti-Duhring) என்ற நூல். இதை ஏங்கெல்ஸ் எழுதினார்; மார்க்ஸ் சரிபார்த்தார். இந்த நூல் தன்னை மிகப் பெரிய “லோகாயதவாதியாகவும் நாத்திகனாகவும்” பாவித்துக்கொண்ட டூரிங் என்ற பேராசிரியரைக் கூர்மையாக நையாண்டி பண்ணிக் கண்டிக்கிறது. முன்பின் முரணற்ற லோகாயதவாதியாக விளங்கினார் என்பதற்காகக் கண்டிக்கவில்லை. தனது லோகாயதவாதத்தில் ஓட்டைகளையும், பொத்தல்களையும் விட்டு வைத்ததன் மூலம் மதத்திற்கும் மதத் தத்துவத்திற்கும் இடங் கொடுத்தார் என்பதற்காகவே கண்டிக்கிறது.

இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“லட்விக் பூர்பாக்’ என்று ஏங்கெல்ஸ் மற்றொரு தத்துவ ஞான நூல் எழுதியிருக்கிறார். இது மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இருவருக்கும் லோகாயதவாதத்தில் முன்னோடியாகத் திகழ்ந்த பூர்பாக் என்ற அறிஞரின் தத்துவத்தைப் பற்றிய விமர்சன நூல் ஆகும், பேர்போன ஜெர்மன் லோகாயத வாதியான பூர்பாக் மதத்தை ஒழிப்பதற்காக மதத்தை எதிர்த்துப் போராடவில்லை. மதத்திற்குப் புத்துயிர் கொடுப்பதற்காகவே புதியதொரு சிறந்த மதத்தைச் சிருஷ்டிப்பதற்காகவே மத எதிர்ப்புப் போராட்டம் நடத்தினார். இந்தப் போக்கை. ஏங்கெல்ஸ் தமது நூலில் வன்மையாகக் கண்டிக்கிறார். தையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மதத்துக்குப் புத்துயிர் ஊட்டுகிறது தி. மு. .

மேற் சொன்ன இரண்டு நூல்களின் மூலம் மார்க்ஸும் ஏங்கெல்ஸும் நமக்குப் போதிப்பது என்ன?

மதமும் மதத் தத்துவமும் நுழைந்து உயிர் வாழ இடம் கொடுக்கிற தத்துவச் சந்து பொந்துகளைக் கொண்ட லோகாயதவாதத்தையோ நாத்திகத்தையோ, மத எதிர்ப்பையோ அவற்றின் ஆடை ஆபரண அலங்கார ஆர்ப்பாட்டத்தைக் கண்டு மயங்கி ஆதரிக்கக்கூடாது. முன்பின் முரணற்ற லோகாயதவாதத்தின் வெற்றிக்காகத் தொடர்ந்து போராட வேண்டும். மத எதிர்ப்பின் பேரால் மதத்திற்குப் புதிய ஜீவன் பெய்ய அனுமதிக்கக்கூடாது. மத எதிர்ப்பின் பேரால் புதுமத ‘பிரம்மாக்கள்’ அவதாரம் செய்யவும் இடம் கொடுக்கக் கூடாது.

தி. மு.க.வின் ‘ஒருவனே தேவன்” என்ற கோஷத்தில் மத மயக்கத்தின் அத்தனை அசுர குணங்களும் சதிராட இடமுண்டு. “அன்பே கடவுள், அறமே அபிஷேகம்” என்று தி.மு.க. பொதுச் செயலாளரால் புது மெருகிடப்பட்ட பழைய மதம் திரைப்படத்தில் ஓடுகிறது. “கடவுளைத் தேடி அலைகிறவர்களில் எங்களை யாரும் மிஞ்ச முடியாது” என்கிறார் அண்ணாத்துரை. ‘சொர்க்கவாசல்’ படத்தில் மட்டுமென்ன? அதற்கு முன்பு ‘வேலைக்காரி’ படத்தில் கூட ‘ஒருவனே தேவன்’ கொள்கையை நிலைநிறுத்தியிருக்கிறார் ‘அண்ணா’ என்று ஒரு தம்பி பகுத்தறிவு வாதம் பேசுகிறார்.

“ஒருவனே தேவன்—ஆம்; அவனுக்கு உருவமில்லை; பெண்டு பிள்ளை கிடையாது. அவன் அன்பு மயம். அறிவு மயம்” என்பது மதத்தை ஒழிக்காது, வளர்க்கும். மார்க்சியம் இந்த ‘மத எதிர்ப்பு அறிவியக்கத்தை’க் கடுமையாக எதிர்க்கிறது. பழைய சுயமரியாதை இயக்கத்திற்குக்கூட தி.மு.க.வின் இந்த ‘அறிவியக்கம்’ எதிரிடையானது.

மதம் அபின், அதை ஒழிப்பது எப்படி?

“மதம் மக்களை மயக்கும் அபின்”-மார்க்ஸ் அருளிய இந்தப் பொன்னுரை மதத்தைப் பற்றிய மார்க்சிய சித்தாந்தத்தின் அஸ்திவாரக் கல். நவீன மதங்கள், கோவில்கள், மத ஸ்தாபனங்கள் முகலிய யாவற்றையும் முதலாளித்துவப் பிற்போக்கின் ஆயுதங்களாகவே மார்க்சியம் மதிப்பிடுகிறது. சுரண்டல், கொள்ளைக்கு வாளும் கேடயமுமாக உதவுவதும், பாட்டாளி வர்க்கத்தை அறியாமையில் ஆழ்த்துவதுமே மதம், மத ஸ்தாபனங்களின் பெரு நோக்கமாகும்.

இவ்வாறு கூறிய ஏங்கெல்ஸ், அதே பொழுதில், கம்யூனிஸ்டுகளை விட மத எதிர்ப்பில் ‘அதி தீவிரவாதிகளாக’ அல்லது ‘அதிகப் புரட்சிக்காரர்களாக’ விரும்பியவர்களை மீண்டும் மீண்டும் கண்டித்திருக்கிறார். கம்யூனிஸ்டுக் கட்சித் திட்டத்தில் பகிரங்க நாத்திகப் பிரச்சாரமு வெளிப்படையான மத எதிர்ப்பும் இடம் பெற வேண்டுமென்று அவர்கள் ஆர்ப்பாட்டமாக நடத்திய கிளர்ச்சிகளையும் ஏங்கெல்ஸ் அழுத்தமாகக் கண்டித்திருக்கிறார்.

இங்கே மார்க்சியத் தலைவர்கள், மத எதிர்ப்புக் கொள்கையையும் மத எதிர்ப்பு நடைமுறையையும் எப்படி எவ்வாறு இணைக்கிறார்கள் என்பது சிந்தனைக்கு விருந்தாகும். கொள்கையைப் பொறுத்தமட்டில் மதம் அபின் தான் என்றும், மத ஸ்தாபனங்கள் சுரண்டல் சூறையாட்டத்தின் கற்கோட்டைகளும் இரும்புக் கதவுகளுமே என்றும் ஐயந்திரிபு அறக் கூறுகிறார்கள். ஆனால் நடைமுறையைப் பொறுத்தமட்டில் கட்சித் திட்டத்தில் பகிரங்க நாத்திகம் வெளிப்படையான மதஎதிர்ப்பு இடம்பெறக் கூடாதென்று கச்சிதமாகக் கூறுகிறார்கள். கட்சித் திட்டத்தில் இடம் பெற வேண்டும் என்கிற அதி தீவிரவாதிகளை அழுத்தமாகக் கண்டிக்கிறார்கள்.

தி.மு.க. தலைமைப் பீடமோ, கம்யூனிஸ்டுகளின் திட்டத்தில் பகிரங்க மத-எதிர்ப்பு இடம்பெறாததால் அவர்கள் உண்மையான பொது உடைமைவாதிகளல்ல என்கிறார்கள். “உறுதியாக வெளிப்படையாக மத எதிர்ப்புப் போராட்டம் நடத்தும் நாங்கள்தான் மெய்யாகவே” “மார்க்சிய சித்தாந்தத்தை’ப் “பரப்பும் மகாசக்தி” என்கிறார்கள். பளா பளா! மார்க்ஸைவிடச் சிறந்த மார்க்சிய வாதிகள்!

14-11-54

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *