மதமும் மனித வாழ்வும்
ப. ஜீவானந்தம்

அராஜகவாதிகளுக்குக் கண்டனம்

டூரிங், பூர்பாக் ஆகியவர்களின் லோகாயதவாதப் போக்கைப் பற்றிய மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் விமர்சனத்தைச் சென்ற வாரம் கண்டோம். அந்த விமர்சனத்தின் மூலம் மார்க்சியவாதிகளின் மதத்தைப் பற்றிய கொள்கை. திட்டம் நடைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பார்த்தோம்.

ஏங்கெல்ஸ் காட்டும் மற்றும் சில உதாரணங்களையும் கவனிப்போம்.

பிளாங்குஸ்டுகளின் தவறு

‘பாரிஸ் கம்யூன்’ எழுச்சி, இரத்தவெள்ளத்தில் புதைக்கப்பட்ட பிறகு, புரட்சித் தலைவரான லூயி பிளாங் என்பவரைப் பின்பற்றியவர்கள் அகதிகளாகி லண்டனில் குடியேறினர். இந்த பிளாங்குஸ்டுகள் 1874ல் வெளியிட்ட திட்ட அறிக்கையில் மதத்தை எதிர்த்து மிக ஆரவாரமாக யுத்தப் பிரகடனம் செய்திருந்தார்கள். ஏங்கெல்ஸ் இந்த தடபுடலான மத எதிர்ப்பை சுத்த மடத்தனம் என்று கண்டித்தார். அந்தக் கண்டனத்தில் இத்தகைய யுத்தப் பிரகடனம் பக்தர்களுக்கு மதத்தின்பால் புதிய அக்கறை தோன்றத் தூண்டு கோலாவதோடு சுடுகாட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற மதத்தின் அழிவுப் பயணத்தைத் தடுத்து நிறுத்தவும் செய்யும் என்று விளக்கிக் காட்டினார். அதோடு பலப்பல உருவங்களில் தோன்றும் சமுதாயப் பணிகளில் பாட்டாளி மக்களில் பெருவாரியானவர்களை இழுத்து உணர்வுப் பூர்வமாகவும் புரட்சிகரமாகவும் மேன் மேலும் ஈடுபடுத்தும் வர்க்கப் போராட்டத்தால் மாத்திரமே மத நுகத்தடியிலிருந்து அடிமைப்பட்ட மக்களை விடுதலை செய்ய முடியும் என்றும் எடுத்துக் காட்டினார். இதனால் மதத்தின்மீது யுத்த பிரகடனம் செய்வது கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் கடமை என்பது வெறும் அராஜகவாதச் சொல்லடுக்கேயன்றி வேறொன்றுமன்று என்று ஏங்கெல்ஸ் பிளாங்குஸ்டுகளைக் குற்றம் சாட்டினார்.

டூரிங் செய்த குற்றம்

இதுபோலவே, 1877ல் தாம் தீட்டிய “டூரிங் எதிர்ப்பு” என்ற நூலின் மூலமும் ஏங்கெல்ஸ் வழிகாட்டினார். அந்த நூலில் தத்துவஞானியான டூரிங் மத எதிர்ப்புத் துறையில் செய்த இரண்டுவிதக் குற்றங்களைக் கண்டித்தார்.

குற்றம் ஒன்று: லோகாயதவாதியான டூரிங் மதத் திற்கும், கருத்து முதல்வாதத்திற்கும் (Idealism) லவலேசம் சலுகை காட்டியது. இதை ஏங்கெல்ஸ் ஈவிரக்கமின்றித் தாக்கினார்.

குற்றம் இரண்டு : “சோஷலிஸ்டு சமுதாயத்தில் மதத்தை பகிஷ்கரிக்க வேண்டும்” என்றார் டூரிங். டூரிங்கின் இந்தப் போலிப் புரட்சி எண்ணத்தையும் முதல் குற்றத்தைத் தாக்கிய அத்தனை வேகத்தோடு ஏங்கெல்ஸ் கண்டித்தார்.

மத எதிர்ப்பு யுத்தப் பிரகடனவாதிகளை விமர்சனச் சாணையில் திட்டிக் காட்டும் பொழுது, ஏங்கெல்ஸ் மற்றொரு சரித்திர சம்பவத்தையும் அதன் படிப்பினைகளையும் நம் முன் வைக்கிறார். மதத்தை எமலோகம் அனுப்ப பகிரங்கப் போர் தொடுப்பது “பிஸ்மார்க்கைவிடப் பெரிய பிஸ்மா மார்க் ஆவதாகும்.” அதாவது ஜெர்மனியில் கத்தோலிக்க மத-எதிர்ப்பு நடத்திய பிஸ்மார்க்கின் ‘களிமண்’ புத்தியைக் காப்பியடிப்பதாகும் என்கிறார்.

பிஸ்மார்க்கின் குருட்டுப் பாய்ச்சல்

பிஸ்மார்க் இராணுவ சர்வாதிகாரியாக ஜெர்மனியை ஆட்டிப் படைத்தவன். “கலாச்சார போராட்டம்” என்ற நாமம் சூட்டி, அவன் ஜெர்மன் கத்தோலிக்கர் கட்சிக்கு விரோதமாகப் போலீஸ் நடவடிக்கை எடுத்து அதை நசுக்கித் துடைக்கத் தலைகீழாக நின்றான். பலன் என்ன? பிஸ்மார்க் தொடுத்த மத எதிர்ப்புப் போராட்டத்தின் பலனாக கத்தோலிக்க மதம் அழியவில்லை. மாறாக கத்தோலிக்கரிடம் மத உணர்ச்சியும் போர்க் குணமும் முறுக்கேறி அது வலுவடைந்தது. இது மட்டுமா? இந்த மத எதிர்ப்புப் போராட்டம், அரசியல் பிரிவுகளின் மோதல்களை முன்னணிக்குக் கொண்டுவர வேண்டியதற்குப் பதிலாக மதப் பிரிவுகளின் மோதல்களை முன்னணியில் ஏற்றி வைத்தது. இதன் மூலம், பாட்டாளி வர்க்க ஜனநாயக சக்திகளில் ஒரு பகுதியினர் கவனம் திசை திருப்பி விடப்பட்டது. உடனடியான வர்க்கப் போராட்டப் புரட்சிப் போராட்டப் பணிகளில் அவர்களை ஈடுபடச் செய்வதற்கு மாறாக மிகமிக மேலெழுந்தவாரியான பொய்யான போலித்தனமான பூர்ஷ்வா மத-எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தது.

சங்கமும் கல்வியும்

எனவே, வருங்கால-அந்தப் புரட்சிப் புலியான ‘டூரிங்’ பிஸ்மார்க்கின் மடத்தனத்தை மற்றொரு வடிவத்தில் ‘காப்பி’ அடிக்க விரும்பினார் என்று ஏங்கெல்ஸ் குற்றஞ் சாட்டினார். அதே பொழுதில் கம்யூனிஸ்டுகளுக்கு (அன்று ஜெர்மனியில் சோஷல்-டிமாக்கிரட்டுகள் என்று அழைக்கப் பட்டனர்) பின்வருமாறு புத்தி புகட்டினார்.

“பாட்டாளி வர்க்கத்தை ஸ்தாபன ரீதியாக உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கும் பொழுதே அதற்கு அறிவுச் சுடர் கொளுத்த வேண்டும். ஸ்தாபனத்தைக் கட்டல், கல்வி புகட்டல் ஆகிய திருப்பணிகளில் கம்யூனிஸ்டுக் கட்சி மிகுந்த சகிப்புத் தன்மையோடு முழு மூச்சாக ஈடுபட வேண்டும். இது ஒன்றுதான் மதத்தை சுடுகாடு சேர்க்கும் வெற்றிப் பாதை. மாறாக, கம்யூனிஸ் டுகள் மதத்தின்மீது அரசியல் போர் தொடுக்கும் அவசரக் குடுக்கை வாதத்தில் ஒருக்காலும் குதிக்கக் கூடாது.”

ஏங்கெல்ஸின் இந்தக் கருத்தோட்டத்தை, ஜெர்மன் கம்யூனிஸ்டுக் கட்சி முற்ற முற்ற ஜீரணம் செய்து பிசகற்ற முறையில் கடைப்பிடித்தது. உதாரணமாக, ஜெர்மன் கம்யூனிஸ்டுகள் ஜெஸ்யூட்கள் என்ற ரோமன் கத்தோலிக்க பாதிரிமார்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அவர்கள் ஜெர்மனியில் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட எந்த மநத்திற்கெதிராகவும் போலீஸ் நடவ டிக்கை எடுப்பது தடுக்கப்பட வேண்டும் என்று போராடினர்.

சர்க்காருக்கு மதம் தனிப்பட்ட விவகாரம்

மத எதிர்ப்பில் வேறு ஒரு கருத்தோட்டத்தையும் ஏங்கெல்ஸ் எடுத்துக் காட்டி குணதோஷம் கூறுவதைப் பாருங்கள்.

1891ல் ஜெர்மனியில் உள்ள எர்பர்ட் என்ற இடத்தில் இரண்டாவது அகிலம் கூடி ஒரு திட்டம் வகுத்தது. இந்த எர்பர்ட் திட்டத்தில் மதம் தனிப்பட்ட விவகாரம் என்ற பேர் போன கொள்கை இடம்பெற்றது. இந்த அம்சத்தை திட்டத்தில் இணைத்ததின் மூலம் ஜெர்மனியில் கம்யூனிஸ்டுகள் ஏங்கெல்ஸ் அறிவுறுத்திய அரசியல் நடைமுறைத் தந்திரங்களை உறுதிப்படுத்தினர்.

ஆனால் எர்பர்ட் திட்டத்தில் கண்ட இந்தக் கொள்கையை, சிலர் தங்களுடைய சந்தர்ப்பவாதத்திற்கு ஏற்றவாறு புரட்டினர். கம்யூனிஸ்டுகள், கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த மட்டில் மதம் தனிப்பட்ட விவகாரம் என்றே இதற்கு அர்த்தம் என்றும், எனவே நம்மைப் பொறுத்தமட்டிலும் சரி, நமது கட்சியைப் பொறுத்த மட்டிலும் சரி, மதம் தனிப்பட்ட விவகாரமாகவே இருக்க வேண்டும். எனினும் இவர்கள் கோணற்கழி வெட்டி அகராதி படித்தனர்.

கம்யூனிஸ்டுகளுக்கு அல்ல

இந்த சந்தர்ப்பவாதக் கருத்தோட்டத்திற்கு எதிரிடையாக ஏங்கெல்ஸ் ஒரு நீண்ட நேரடி விவாதத்தில் இறங்கவில்லை. இதற்கு அவர் நேர்முகமாக ‘பளிச்’ சென்று பதில் சொல்லி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் ஏங்கெல்ஸ் ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறியது இதுதான். “அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில்தான் மதம் தனிப் பட்ட விவகாரம் என்று கம்யூனிஸ்டுகள் கருதுகிறார்கள். ஆனால் அவர்களைப் பொறுத்த மட்டிலோ, மார்க்சியத்தைப் பொறுத்த மட்டிலோ கம்யூனிஸ்டுக் கட்சியைப் பொறுத்த மட்டிலோ மதம் தனிப்பட்ட விவகாரம் அல்ல.”

சரித்திரத்தின் போதனை

மேற்படி சரித்திர நிகழ்ச்சிகளிலிருந்து வடித்தெடுத்த மார்க்சிய போதனைகள் பின்வருவன:

1. மத எதிர்ப்புப் போர் முழக்கம் அணைந்து வரும் அகல் விளக்குக்கு நெய்யும் திரியும் இடும் செய்கை.

2. மேன்மேலும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினை களில் பாட்டாளிப் பொது மக்களை ஈடுபடுத்தும் வர்க்கப் போராட்டத்தால் மட்டுமே மதப் பிடிப்பிலிருந்து மக்களை விடுதலை செய்ய முடியும்.

3. மத எதிர்ப்புப் போர் முழக்கம் கம்யூனிஸ்டுக் கட்சியின் அரசியல் கடமை என்பது வெறும் அராஜகவாதச் சொல்லடுக்கே.

4. லோகாயதவாதியாக மட்டும் இருந்து போதாது. மதத்திற்கும் மாயாவாதத்திற்கும் துளிகூட இடங் கொடாத லோகாயதவாதியாக இருக்க வேண்டும்.

5. சோஷலிஸ்டு சமுதாயத்தில் மதத்தைப் பகிஷ் கரிக்க வேண்டுமென்பது போலிப் புரட்சி மனப்போக்கு,

6. மத – எதிர்ப்புப் போர் முழக்கம் அரசியல் பிரிவுகளின் மோதல்களை முன் வரிசையில் வைப்பதற்குப் பதில் மதப் பிரிவுகளின் மோதல்களை முன் வரிசையில் வைக்கிறது. ஜனநாயக சக்திகளில் ஒரு பகுதியை வர்க்கப் போராட் டத்தில் ஈடுபடுத்துவதற்குப் பதில் மேலோட்டமான போலித்தனமான பூர்ஷுவா மத எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட வைக்கிறது.

7. பாட்டாளிப் பொதுமக்களின் வர்க்க ஸ்தாபனங்களை உருவாக்குவதும் அதே பொழுதில் அறிவுச் சுடர் கொளுத்துவதும்தான் -ஒழிப்புக்கு ஒரு தனி வெற்றிப் பாதை, மதத்தின் மீது போர் முழக்கம் செய்வது அவசரக் குடுக்கை வாதம் (Adventurism).

8. அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் மதம் தனிப் பட்ட விவகாரம். மார்க்சியத்தையோ, கம்யூனிஸ்டுக் கட்சியையோ பொறுத்த மட்டில் மதம் னிப்பட்ட விவகாரம் அல்ல.

தி. மு. .களின் வாதங்கள்

ஆனால் தி.மு.க. ‘பகுத்தறிவு வாதிகளோ” மதம் தான் ‘அடிப்படைச் சாபத்தீடு’, ‘அடிமைத் தனத்தின் தாய்’ என்றும் அந்தத் தாய்பெற்றெடுத்த பெண்கள்தான் பொரு ளாதார அடிமைத்தனம், அரசியல் அடிமைத்தனம், சமுதாய இழிவு ஆகியவை என்றும் அறுதியிட்டு உறுதி கூறுகிறார்கள். இந்தத் தாய்-மகள் பிரச்சினையில் தெளிவு ஏற்பட்டாலன்றி ‘கம்யூனிஸ்டுகளின் போக்கில் உள்ள தடுமாற்றம் நீங்காது” என்று தாங்கள் தேர்ந்து தெளிந்த முடிவை அனுதாபத்தோடு தெரிவிக்கிறார்கள்.

“விதையிலிருந்து செடி வந்ததா, செடியிலிருந்து விதை வந்ததா?” என்று கேட்டால் என்ன பதில் சொல்வோம். விதையிலிருந்து செடி, செடியிலிருந்து மீண்டும் விதைகள் என்று தானே பதில் சொல்லுவோம். அது போலத்தான் மத எண்ணத்தின் அடிப்படையில் பொருளாதார அரசியல் அடிமைத்தனங்கள் உருவாகி அவை மூலம் மேலும் மத அடிமைத்தனம் என்ற விதையைப் பெருக்குகிறது. “மத அடிமைத்தனம் என்ற குட்டை நீர், அரசியல் பொருளாதார அடிமைத்தன மழையாக வெப்பத்தாலும் மத அடிமைத்தனக் குட்டை நீராகவே தேங்குகிறது” என்று இந்த அறிவியக்க அறிஞர்கள் “மார்க்சியத்தை” கிளிச்சானுக்கு மறிச்சானாகப் புரட்டி வார்த்தைக்கு வார்த்தை சிங்காரம் பேசுகிறார்கள்.

‘நிலத்தைப் பண்படுத்திய பிறகே விதை தூவ வேண்டும். மனத்தை, மத மாசுகள் எனும் வெடிப்புகள் கொண்ட நிலமாக வைத்துவிட்டு அதில் பொருளாதாரச் சீர்திருத்தம் எனும் விதையைத் தூவினால் என்ன நடக்கும்? விதை சத்தற்றதாகி மக்கிவிடும். அல்லது தப்பித் தவறி முளைத்தாலும் முளையிலேயே கருகிவிடும். வீட்டில் ஒட்டடை தட்டித் தூசி துடைத்து வெள்ளையடிக்கா விட்டால் வெள்ளை கருப்பாகிவிடும். அதுபோல், மதம் ஒழிக்கப்படாமல், வர்க்கப் போராட்டம் நடத்தினால் ஊதியத்தைச் சூடம் சாம்பிராணிக்கே தொழிலாளி செலவிடுவான் என்று இடம், பொருள் ஏவலைத் தாண்டி உவமான உவமேயங்களைச் சரமாரியாகப் பொழிந்து மார்க்சிய விரோத “அராஜகவாதச் சொல்வீச்சுக்கு” இலக்கியம் படைக்கிறார்கள், தி.மு.க. எழுத்துக் கலைஞர்கள்.

அசல்களின் மார்க்சியம்

“வர்க்கப் போராட்டத்தால் மாத்திரமே மதப்பிடிப்பிலிருந்து மக்களை விடுதலை செய்ய முடியும்”, என்ற மார்க்சிய சித்தாந்தத்தை கொய்னா மாத்திரை போல் கருதும் தி. மு.க. தலைமை, மதக் கருத்துக்களின் ‘மோதல்களை’ முன் வரிசையில் வைத்து, “மேலோட்டமான, போலித்தனமான பூர்ஷுவா மத-எதிர்ப்புப் போராட்டம்” நடத்துகிறார்கள். இந்துக்களின் “கல்லு முதலாளிகள்”தான் முதற்பெரும் எதிரி என்னும், இந்த ‘ஒருவனே தேவன்’ வாதிகள் பாட்டாளிகளின் வர்க்க ஸ்தாபனத்தை உருவாக்க மறந்தும் நினையாதவர்கள். இவர்கள்தான் மத எதிர்ப்பைப் பொறுத்தமட்டில் எதார்த்த மார்க்சிய சித்தாந்தத்தைக் கடைப்பிடிக்கும் “உண்மையான பொதுவுடைமைவாதி” களாம்!

மத எதிர்ப்பு பற்றிய சரித்திர சம்பவங்களில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகிய மார்க்சிய மூலவர்களின் பிரதிபலிப்புகளை – அறிக்கைகளை லெனின் தொகுத்துக் காட்டியதைத் தான் இதுவரை கூறினோம்.

நம்மைப்பற்றி தி. மு. .

“மார்க்சியத்தைக் கடைப்பிடிப்பதில் ஏனோ தானோ என்ற கவலையற்ற மனப்பான்மையுடையவர் களுக்கும் சரி, மார்க்சிய வழியில் சிந்திக்க முடியாத அல்லது சிந்திக்க விரும்பாதவர்களுக்கும் சரி, மேலே எடுத்துக் காட்டிய சரித்திரம் மார்க்சியத்தின் அர்த்தமற்ற முரண்பாடுகளையும் பொருளற்ற ஊசலாட்டங்களையும் தொகுத்த தொகுப்பு என்றே படும். “முன் பின் முரணற்ற” நாஸ்திகம், மதத்திற்கு விட்டுக் கொடுக்கும் சலுகைகள் கடவுளுக்கு எதிரான பு-ர்-ர்-ர்-ரட்சிப் போராட்டத்திற்கும் மத உணர்ச்சி கொண்ட தொழிலாளிகளைத் திருப்திப் படுத்தும்” கோழைத்தனமான விருப்பம், அவர்கள் பீதியடையக் கூடாதென்ற பயம் இத்யாதி இத்யாதிகளுக்கும் இடையில் நிகழும் ஊசலாட்டங்கள் ஆகியவற்றால் ஆக்கிய அவியல் என்றே மார்க்சிய முதல்வர்களின் மத எதிர்ப்புச் சரித்திரத்தை அந்தச் சிந்தனைச் சிற்பிகள் கருதுவர். அராஜகவாதச் சொல்லடுக்கு வீரர்களின் (Anarchist phrase montgers) இலக்கியத்தில் மார்க்சியத்தின் மீது ஏவப்படும் இத்தகைய தாக்குதல்கள் ஏராளமாகக் காணக்கிடக்கின்றன.

லெனின் போதிப்பதென்ன?

“மார்க்சியத்தைப் பொறுப்புணர்ச்சியோடு கடைப் பிடிக்க முடிகிற யாருக்கும், மார்க்சிய தத்துவஞானக் கொள்கைகளின் மீதும் கம்யூனிஸ்டு இயக்கத்தின் சர்வதேச அனுபவத்தின் மீதும் ஆழ்ந்து சிந்தை செலுத்துகிற எவருக்கும் மதத்தைப் பற்றிய மார்க்சியத்தின் முறைத் தந்திரம் (Marxist-Tactics) முழுக்க முழுக்க முன் பின் முரணற்ற தன்மையது என்று பளிச்சென்று வெளிச்சமாகும். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியவர்கள் ஆழ்ந்த சிந்தனை யின் விளைவுதான் மேற்படி தந்திரங்கள் என்பதும் தெளிவாகப் புலனாகும். மேலும் ஆழ்ந்த உணர்ச்சியற்ற போலித் தத்துவ வாதிகள் (Dilietantists) ஊசலாட்டம் என்று கருதும் மார்க்சிய நடைமுறைத் தந்திரம் இயக்குவியல் லோகாயத வாதத்தின் நேரடியான தவிர்க்க முடியாத விளைவாகும் என்பது நன்கு விளங்கும். மத உணர்ச்சி கொண்ட தொழிலாளிகளைப் “பயமுறுத்தக்கூடாது” என்ற விருப்பம்தான், மதத்தைப் பொறுத்த மட்டில் மார்க்சியத்தின் தோற்ற மாத்திரையான ‘மிதவாதப் போக்குக்கு’க் காரணம் என்று சமாதானம் கூற நினைப்பது பெருந் தவறாகும். மாறாக இந்தப் பிரச்சினையைப் பொறுத்த மட்டில் மார்க்சியத்தின் அரசியல் நடைமுறை அதன் தத்துவ ஞானக் கொள்கைகளோடு பிரிக்க முடியாத படி இணைக்கப்பட்டிருக்கிறது.”

–இவ்வாறு மதத்தைப் பொறுத்த மட்டில் மார்க்சிய வழியை எதிர்ப்பவர்களும் ஏற்பவர்களும் எவ்வாறு கருதுவார்கள் என்பதை நேர் நிகரற்ற மார்க்சியவாதியான லெனின் ஒப்பற்றவிதத்தில் விளக்கிக் காட்டுகிறார். லெனினுடைய இந்த நிர்ணயிப்புகளை ஒரு முறைக்குப் பன்முறை தமிழ் மக்கள் படித்துச் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

21-11-54

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *