
மதமும் மனித வாழ்வும்
ப. ஜீவானந்தம்
மதத்தைப் பற்றி சோவியத் குடியரசின் கொள்கை
ரஷ்யாவில் புரட்சி-முற்காலத்தில் வைதீகக் கிறித்து மதமே கொடிகட்டிப் பறந்தது. மற்ற மதங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டன. எந்த மதத்திலும் சேர, சேராதிருக்க மக்களுக்கு உரிமையில்லை, வைதீகக் கிறித்துவ மதத்தில் சேருவதற்கே மக்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
கிறித்து மதத்திலிருந்து இதர மதங்களில் சேருவதென் பது சிறைத் தண்டனையை விலை கொடுத்து வாங்குவதா யிருந்தது. நாத்திகமோ, மகாபாதகமாக மதிக்கப்பட்டது. மாதாகோவிலில் மதச் சடங்குகள் செய்து கொள்ளாத வர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்களுடைய குழந்தைகளுக்குச் சட்டபூர்வமான எந்தவித உரிமையும் கிடையாது.
ரஷ்ய வைதீக சர்ச்சு, இதர மதங்களுக்கு மறுக்கப்பட்ட சகல சலுகைகளையும் வாய்ப்பு வசதிகளையும் அதிகாரத் தோடு ஏகபோகமாக அனுபவித்து வந்தது. இந்தச் சர்ச்சுக்குத் தலைவன் ஜார் மன்னன். ஜாருக்கு சர்ச் அடங்கிக் கிடந்த நிலைமை ராஜ்யத்தின் சட்டங்களிலும் எதிரொலித்தது. “கிறித்துவ அரசரான ஜார் சக்கரவர்த்தி தான் ஆதிக்கம் வகிக்கும் வைதீகக் கிறித்துவ மார்க்கத்திற்கும் பரிசுத்த மாதா கோவிலுக்கும் காவலரும் புரவலரும் ஆவார்” என்று மதத்தைப் பற்றிய ஜாரின் பங்கைச் சட்டம் வரையறுத்தது.
‘சர்ச்’க்கு உடைமையாயிருந்த ஸ்தாவர ஜங்கம சொத்துகளுக்குக் கணக்கு வழக்கு இல்லை. தொழிலாளர் விவசாயப் பெருமக்களைச் சுரண்டிச் சூறையாடுவதில் பகாசுரமுதலாளியாகவும் இராட்சஸ நிலப்பிரபுவாகவும் ‘சர்ச்’ விளங்கிற்று. பாதிரிமார்களுக்குப் போலீஸ் அதிகாரமும் இருந்தது.
தேசிய இன ஒடுக்கு முறையோடு மதச் சித்திரவதையும் கைகோர்த்துச் சதிராடிற்று. வைதீகக் கிறித்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் பள்ளிகளிலும் பல துறை களிலும் உத்தியோகங்கள் வழங்கப்பட்டன.
மனச்சாட்சி சுதந்திரம், மத சுதந்திரம் அன்று ரஷ்யாவில் மருந்துக்குக் கூடக் கிடையாது.
இது மதத்துறையில் ஜாரின் எதேச்சாதிகார ஆட்சியில் கண்ட எதார்த்தச் சூழ்நிலை.
இந்தச் சூழ்நிலையைச் சரியாகக் கணக்குப் போட்டுத் தான் ஜாராட்சியை முறியடிக்கப் போராடிய ரஷ்யாவின் முற்போக்குப் பிரதிநிதிகள் பின்வரும் கோரிக்கைகளை வகுத்தனர்.
1. “மனச்சாட்சி சுதந்திரம் வேண்டும்.”
2. சர்க்காரிலிருந்து ‘சர்ச்சை’ (மாதா கோவில்)யும் ‘சர்ச்’சிலிருந்து பள்ளிக்கூடத்தையும் பிரிக்க வேண்டும். அதாவது மத சுதந்திரம் வேண்டும்”.
1883ல் “தொழிலாளர் விடுதலைக் குழு” என்ற முதல் ரஷ்ய மார்க்சியக் குழு தோன்றியதும் “தங்கு தடையற்ற மனச்சாட்சி சுதந்திரம்” வேண்டும், “மத பேதம், தேசிய இன பேதம் பாராட்டாமல்” சகல மக்களுக்கும் சம உரிமையும், சம அந்தஸ்தும் அளிக்கப்பட வேண்டும். என் ற கோரிக்கைகளை வைத்தது.
1902ல் லெனின் தீட்டிய ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமும், சர்க்காரிலிருந்து ‘சர்ச்சும்’ சர்ச்சிலிருந்து சகல கல்விச் சாலைகளும் பிரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக் கையையே வைத்தது. இந்தக் கொள்கையே ரஷ்யக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மதம் பற்றி புரட்சி முற்காலக் கொள்கையாக இருந்தது.
புரட்சிக்குப் பின் மதத்தின் நிலைமை என்ன?
1917 நவம்பர் 7ல் நடந்த சோஷலிஸ்டுப் புரட்சி சர்க்காருக்கும், ‘சர்ச்சு’க்கும் இருந்த பழைய உறவுகளை இருந்த இடம் தெரியாமல் அழித்துத் துடைத்து விட்டது. 1918 ஜனவரி 23ம் தேதி சோவியத் சர்க்கார் மத சுதந் திரம் பற்றியும் சர்க்காருக்கும், மதத்திற்குமுள்ள உறவு பற்றியும் ஓர் உத்தரவு அறிக்கையை வெளியிட்டது. அதில் பின்வரும் அம்சங்கள் காணக்கிடக்கின்றன.
1. சர்க்காரிலிருந்து ‘சர்ச்’ பிரிக்கப் படும்.
2. மனச்சாட்சி சுதந்திரத்தைத் தடுத்து வந்த சட்டங்களும், மதத்தின் பேரால் கிடைத்து வந்த சலுகைகளும் ரத்து செய்யப்படும்.
3. ஒவ்வொருவரும் தமக்கு இஷ்டமான மதத்தை ஏற்றுக் கொள்ளலாம். அல்லது மதமின்றி வாழலாம். குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவன் அல்லது சாராதவன் என்று பாகுபடுத்துவது எல்லா வழியாலும் தடை செய்யப் படும். சர்க்கார் தஸ்தாவேஜுகளிலுள்ள குடி மக்களின் மதக் குறிப்புகள் நீக்கப்படும்.
4. சர்க்கார் நடவடிக்கைகளில் மதச் சடங்குகளுக்கு இடமிராது.
5. மற்றவருக்கு இடையூறு இல்லாமலும் மற்றவர் உரிமையைப் பறிக்காமலும் இருக்கும் அளவுக்கு மதச் சடங்குகளை நடத்தும் உரிமை அனுமதிக்கப்படும்.
6. மத நம்பிக்கைகளைச் சாக்காகக் கொண்டு யாரும் சமூகக் கடமைகளைத் தட்டிக் கழிக்க உரிமை கிடையாது.
7. மத ரீதியான சத்தியங்களும், உறுதி மொழிகளும் ஒழிக்கப்படும். அவசியமான சந்தர்ப்பங்களில் நேர்மையான வாக்குறுதிகளே போதும்.
8. சமூகச் சடங்குகள் (மணவினை, பிறப்பு, இறப்பு போன்றவை) குறிப்பிட்ட அதிகாரிகளால் மட்டுமே நடத்தி வைக்கப்படும்.
9. ‘சர்ச்சி’லிருந்து (திருச்சபை மடாலயங்களிலிருந்து) பள்ளிக்கூடங்கள் பிரிக்கப்படும்.
10. சர்க்கார் பள்ளிக்கூடங்கள், தனிப்பட்ட பள்ளிக் கூடங்கள் யாவற்றிலும் மத போதனை தடைசெய்யப்படும். பொதுவான விஷயங்களே போதிக்கப்படும்.
இந்த உத்தரவு அறிக்கையின் மூலம், லெனின் 1905ல் வகுத்த வழியைச் சோவியத் சர்க்கார் உறுதியாகக் கடைப் பிடித்தது.
விடுவிக்கப்பட்டது
சர்க்காரிலிருந்து ‘சர்ச்’சைப் பிரித்ததன் மூலம் சர்க்கார் இயந்திரத்தில் ஒரு அங்கமாகக் கட்டுண்டு கிடந்த ரஷ்ய வைதீகச் சர்ச்சுக்கு விடுதலை கிடைத்தது. இந்தச் சர்ச்சின் ஆதிக்கத்திற்கு அடங்கிக் கிடந்த ரோமன் கத்தோலிக்க, பாப்டிஸ்டு போன்ற ஏனைய கிறித்துவ மார்க்கங்களுக்கும், இஸ்லாம் போன்ற இதர மதங்களுக்கும் விடுதலை கிடைத்தது.
மேற்படிப் பிரிவினையின் மூலம் மத ஸ்தாபனங்களுக்கு, அவற்றின் எல்லைக்கு அப்பாலுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து விடுதலை கிடைத்தது. மக்களுக்கு மத ஸ்தாபனங்களில் கட்டாயம் பங்குகொள்ள வேண்டுமென்ற நிர்ப்பந்தத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது.
சர்க்காரின் பொதுப் பணத்திலிருந்து வைதீக சர்ச்சுக்குச் செலவழித்த பண விரயமும் இந்தப் பிரிவினை மூலம் ஒழிக்கப்பட்டது.
இதனால் மதகுருமார்களுடைய அல்லது மத பக்தியுள்ள சாதாரண மக்களுடைய பிரஜா உரிமை பறி போகவில்லை. நாட்டின் அரசியல் வாழ்வில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொள்வதற்குரிய சாத்தியப்பாடும் பறி போகவில்லை. சர்க்கார் சன்னிதானத்தில் மத சமத்துவம் ஏற்பட்டது. சர்க்கார் எந்த மதத்திற்கும் எந்தச் சலுகையும் கொடுக்கவில்லை. நாட்டின் சட்டத்தை மீறக் கூடாது என்பது மட்டுமே சர்க்கார் மதங்களுக்கு விதித்த நிபந்தனை.
ஆனால் உண்மையான மத சுதந்திரம் ஏற்பட்டது. அதனால் வைதீக சர்ச்சைச் சேர்ந்த சில “மலை விழுங்கி மகா தேவர்கள்” ஆரம்பத்தில் எதிர்ப்புக் காட்டினாலும் நாளா வட்டத்தில் எல்லா மகஸ்தர்களும் சர்க்காரை முழு மனத்தோடு ஆதரிக்கும் நிலை உருவாயிற்று.
1927இல் ஸ்டாலின்
1927ல் சோவியத் யூனியனுக்குச் சென்றிருந்த அமெரிக்கத் தொழிலாளர் குழு சோவியத் யூனியனில் மதத்தின் நிலைமை பற்றிக் கேட்ட கேள்விக்கு ஸ்டாலின் கீழ்வருமாறு பதில் அளித்தார்.
“எந்த மகத்தில் சேர்வதற்கும் குடி மக்களுக்கு எங்கள் சட்டம் இடம் கொடுக்கிறது. இது ஒவ்வொரு மனித னுடைய மனச்சாட்சியையும் பொறுத்த விஷயமாகும். ஆகவேதான் நாங்கள் சர்க்காரிலிருந்து சர்ச்சைப் பிரித்து விட்டோம். ஆனால் சர்க்காரிலிருந்து சர்ச்சைப் பிரித்து ஒவ்வொருவருக்கும் மத சுதந்திரம் உண்டு என்று பிரகடனப்படுத்திய பொழுதே, ஒவ்வொருவருக்கும் எந்த ஒரு மதத்திற்கும் அல்லது எல்லா மகங்களுக்கும் எதிரிடையாக நியாயம் கூறிப் பிரச்சாரக் கிளர்ச்சி செய்வதற்கு உரிமையுண்டு என்றும் பிரகடனப்படுத்தியுள்ளோம்.’
சோவியத் யூனியனில் மதத்தை அடிப்படையாகக் கொண்டு பாகுபாடு காட்டப்படுவதில்லை. மதவாதிக்கும் நாத்திகனுக்கும் இடையில் பாகுபாடு காட்டப்படுவதில்லை. தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் சரி, கூட்டுப் பண்ணைகளிலும் பள்ளிக்கூடங்களிலும் சரி இந்தப் பாகுபாடு காட்டப்படுவதில்லை. ஒருவன் ஒரு அலுவலில் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டாலும் சரி. ஒருவன் பள்ளிக்கூடத்தில் புகுந்து விட்டாலும் சரி, அல்லது பொது ஜன ஸ்தாபனங்களில் அங்கம் பெற்று விட்டாலும் சரி அவனுடைய மத நம்பிக்கையைப் பற்றித் தகவல் தெரிவிக்க அவன் கடமைப்பட்டவனல்ல. சர்க்காரின் ஜனக் கணிதப் புத்தகத்தில் மதவாரிப் பிரிவினையைப் பார்க்க முடியாது.
சர்க்கார் – சர்ச்சுப் பிரிவினையும், சர்ச்சுகல்விச் சாலைப் பிரிவினையும் சோவியத் மக்களுக்கு யார் மீதும் யாரும் எந்த மதத்தையும் சுமத்தாமல், மதப்பிரிவினையில் மனச் சாட்சிப் படி தங்குதடையின்றி நடந்து கொள்ளப் பரிபூரண விடுதலையை அளித்துள்ளன.
ஸ்டாலின் அரசியல் சட்டத்தில்
1936ல் சோவியத் யூனியன் அரசியல் சட்டத்தின் நகலின் மீது ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அப்பொழுது ஒரு திருத்தத்திற்குப் பதில் சொல்லுகையில் பின்வருமாறு சொன்னார். “நகல் சட்டத்தின் 124வது பிரிவுக்கு ஒரு திருத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மதச் சடங்குகளுக்குத் தடை விதிக்க வேண்டுமென்று பொருள்படும் விதத்தில் 124வது பிரிவில் மாறுதல் செய்ய வேண்டுமென்று இந்தத் திருத்தம் கூறுகிறது. இந்தத் திருத்தத்தை நிராகரிக்க வேண்டுமென்று நான் கூறுகிறேன். ஏனென்றால், நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைக்கு இது நேர் விரோதமானது.
1918 ஜனவரி 23-ந் தேதி வெளியிட்ட உத்தரவு அறிக்கை (பிரகடனம்)யில் காணப்படுகிற மதசுதந்திரம் என்ற கொள்கைதான் ஸ்டாலின் அரசியல் சட்டத்தின் 124வது பிரிவில் காணப்படுகிறது. அந்தப் பிரிவு கூறுவ தாவது:
“குடி மக்களின் மனச்சாட்சி சுதந்திரத்தை உறுதிப் படுத்துவதற்காக, சர்க்காரிடமிருந்து சர்ச்சும், சர்ச்சி லிருந்து பள்ளிக்கூடமும் பிரிக்கப்படுகிறது. மதத்தொழுகை சுதந்திரமும், மத எதிர்ப்புப் பிரச்சார சுதந்திரமும் எல்லா மக்களுக்கும் உண்டு என்பதை அரசியல் சட்டம் அங்கீகரிக் கிறது.”
இவ்வாறு மத சுதந்திரம் அளிக்கப்பட்டதன் விளைவு என்ன?
மதவாதிகள் ஆதரவு
ஹிட்லர் – எதிர்ப்பு யுத்தத்தில் சோவியத் யூனியனிலுள்ள சகல மத ஸ்தாபனங்களும் ஒரு மனிதன் மாதிரி ஒன்றாக நின்று சோவியத் சர்க்காருக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தனர். ஜார்ஜீய வைதீகச் சர்ச்சும் அர்மேனியன் மாதா கோவிலும், முஸ்லிம்களும். கத்தோலிக்கர்களும் புராட்டஸ்டண்டுகளும், பாப்டிஸ்டுகளும், இதர எல்லா மதக்காரர்களும் செஞ்சேனைக்கு நிதி வசூலித்தளித்து அதன் விடுதலைப் போராட்டப் பணியை மனமாரப் புகழ்ந்தனர்.
‘நாங்கள் சோவியத் சர்க்காரை ஆதரிப்பது பயத்தால் அல்ல. அப்போஸ்தலரின் போதனையின்படி, மனச் சாட்சியின் தூண்டுதலால்தான் ஆதரிக்கிறோம்” என்று மகாகுரு ஸெர்கியஸ் கூறியுள்ளார். இவர் சோவியத் யூனியனிலேயே மிகப் பெரிய பாதிரியார்.
ஜார் ஆட்சியில் வைதீகச் சர்ச்சின் ஆதிக்கத்தில் முஸ்லிம்களாகிய நாங்கள் மதச் சித்திரவதைக்கு ஆளானோம். இன்று பரிபூரண சுதந்திரத்தோடு வாழ்கிறோம்” என்று மத்திய ஆசியாவிலுள்ள பல முஸ்லிம் மதத் தலை வர்கள் நன்றியறிதலுடன் மகிழ்ச்சி பொங்கக் கூறியுள்ளார்கள்.
உள்நாட்டு மதத் தலைவர்கள் மட்டுமல்ல; வெளிநாட்டுப் பார்வையாளர்கள் கூறுவதையும் கவனியுங்கள்!
பிரிட்டிஷ் குழு
1951ல் சோவியத் யூனியன் சென்றிருந்த பிரிட்டிஷ் தொழிலாளர் குழு லண்டனில் வெளியிட்டுள்ள ஒரு நூலில் கூறுகிறார்கள்.
“சோவியத் யூனியனில் மத சுதந்திரம் இருக்கிறது. மத வாழ்வு நடத்துவதற்காக யாரும் தண்டிக்கப்பட வில்லை. மதமற்றவர்களுக்கும் அங்கு சுதந்திரம் உண்டு. ‘சர்ச்சு’களில் எத்தனையோ குழந்தைகள் தொழுவதைப் பார்த்தோம். ஸ்டாலின்கிராடில் அழிக்கப்பட்ட இரண்டு சர்ச்சுகள் மீண்டும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்டாலின் சட்டத்தைத்தான் மாலங்கோ கடைப் பிடிக்கிறது” என்பது உலகறிந்த ரகசியம்.
உதாரணத்திற்கு நவம்பர் 12-ந்தேதி ‘ஹிந்து’ பத்திரி கையின் 3ம் பக்கத்தைத் திருப்பிப் பாருங்கள். 11-ந் தேதிய மாஸ்கோ செய்தி ஒன்று வெளிவந்திருக்கிறது. ”கம்யூனிஸ்டுக் கட்சியின் சில கமிட்டி அங்கத்தினர்கள் மத எதிர்ப்புப் போராட்டத்தில் அத்துமீறிச் சென்று விட்டார்கள் என்று சோவியத் யூனியன் கம்யூனிஸ்டுக் கட்சியின் முதல் செய லாளரான நிகிதா குருஷ்சேவ் கண்டிக்கிறார். கட்சிப் பத்திரிகையான பிராவ்தாவும் கண்டிக்கிறது.”
இழிவுறுத்தும் தாக்குதல் புறம்பானது
“இழிவுறுத்தும் தாக்குதல் கட்சியின் கொள்கைக்குப் புறம்பானது. மனச்சாட்சி சுதந்திரத்திற்கு ஸ்டாலின் சட்டம் அளித்துள்ள உத்தரவாதத்திற்கு விரோதமானது” என்று கண்டிக்கிறது பிராவ்தா. தான் கையொப்பமிட்ட மத்தியக் கமிட்டியின் அறிக்கையில் குருஷ்சேவ் கூறுகிறார்! “மிகப் பெரும்பாலான ஜனத்தொகை மத நம்பிக்கையி லிருந்து விடுதலை பெற்றுவிட்டது. ஆனால் நாட்டுக்காக நேர்மையுடன் தங்கள் சமூகக் கடமைகளை நிறைவேற்றுகிற சிலர் பலர் இன்னும் பல்வேறு மத நம்பிக்கைகளில் பிடிப்பு உடையவர்களாக ருக்கிறார்கள். அவர்களை அரசியல் சந்தேகத்தோடு இழிவாகத் தாக்கிப் பிரச்சாரம் செய்வது அற்பத்தனமான செயல்; கேடு சூழ்கிற வேலை.”
“சகிப்புத் தன்மை கொண்ட, முறையான பிரச்சாரம் தான், மத நம்பிக்கையுடையவர்கள் அவர்களுடைய மதத் தவறுகளிலிருந்து விடுபட உதவி செய்யும். மாறாக, சர்க்கார் நடவடிக்கைகளும் இழிவுப் பிரச்சாரங்களும் அவர்களுடைய குருட்டு நம்பிக்கைகளை உறுதிப்படுத்தவே துணை போகும்!”
மதத் துறையில் லெனினும், ஸ்டாலினும், மாலங்கோ வும், குருஷ்சேவும் மேற்கூறிய கொள்கையைக் கடைப் பிடித்ததால் விளைந்த விளைவு என்ன?
சுத்தானந்தர் சொல்கிறார்
தமிழ் நாட்டில் ஒரு யோகியும், ஆஸ்திகரும், சிறந்த தமிழ் எழுத்தாளரும், தமிழகம் நன்கு அறிந்தவரும் அண்மையில் சோவியத் யூனியன் சென்று வந்தவருமான சுவாமி சுத்தானந்த பாரதியாரைக் கொண்டு பதில் சொல்ல வைக் கிறேன்; “தினமணி” சுடர் அனுபந்தத்தில் (5-12-54) தாம் எழுதிய “ரஷ்யாவும் சமயமும்” என்ற கட்டுரையில் பின்வருமாறு யோகி அவர்கள் கூறுகிறார்கள்.
“ரஷ்யாவில் ஏராளமான சர்ச்சுகள் இன்றும் உள்ளன. அன்று கட்டிய மணி இன்றும் முழங்குகிறது…
சோவியத் ரஷ்யா விஞ்ஞானத்தை உயிராகவும், சமுதாய சேவையை நரம்பாகவும், நாட்டன்பே உடலாகவும் கொண்ட புதிய சமுதாயமாகும். அங்கே வளர்வது விஞ்ஞான சமயம்; பகுத்தறிவுச் சமயம்…
“மாஸ்கோவிலுள்ள வைதீகச் சர்ச்சில் அன்பர்கள் அணி அணியாக நின்று பிரார்த்தனை செய்வதைக் கண் டேன்…
“ரஷ்யாவிலுள்ள இஸ்லாமிய நாடுகள் ஆறு. ஆறு நாடுகளிலுள்ள மசூதிகளில் தொழுகைகள் நடைபெறுகின்றன.
“எனினும் பொது மக்கள் சமயப் பற்று இல்லாதவர்களே. இருபது கோடி ரஷ்யாவில் சுமார் லட்சம் பேர் மதத்தை நம்பலாம். மற்றவர்களிடம் உங்கள் சமயம் என்னவென்றால் “எங்கள் தாத்தா, பாட்டி இஸ்லாமியர், கிறித்துவர். நாங்கள் பகுத்தறிஞர் (Scientific atheists) விஞ்ஞான நாத்திகர்” என்பர்.
பரிபூரண மத சுதந்திரம் அளித்துச் சமுதாய ரீதியாக ‘விஞ்ஞான நாத்திகத்”தை அதாவது விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட மனித வாழ்வை உருவாக்கி யிருக்கிறார்கள் சோவியத் யூனியனில்.”
26-12-54
முற்றும்.
★ ★ ★



