
மதமும் மனித வாழ்வும்
ப. ஜீவானந்தம்
ரஷ்யாவில் மத சுதந்திரம்
மதவாதிகளுக்கும் நாத்திகர்களுக்கும் உரிமையுண்டு
“ரஷ்யாவா! அங்கே கடவுளும் கிடையாது. கர்த்தரும் கிடையாது. கோவிலும் கிடையாது, குளமும் கிடையாது. அங்கே மாதா கோவில்களையும், மசூதிகளையும் இடித்துத் தள்ளிவிட்டார்கள். மதவாதிகளையும் ஆத்திகர்களையும் செக்கில் போட்டு ஆட்டுகிறார்கள். ரஷ்யா நாத்திகர்களின் நரகம்!” – இவ்வாறு திண்ணை தூங்கி வைதீகர் களிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி ஐசன் ஹோவர் வரையில், சோவியத் யூனியன் மீது தவேஷாக்கினி மழை பொழிந்து கொண்டேயிருக்கிறார்கள். போப்பாண்டவரிலிருந்து நடுத் தெரு திருச்சபை உபதேசியார் வரையில், மத பக்தர்களின் ஒவ்வொரு வெளியீட்டிலும் சோவியத் நாட்டின் மத எதிர்ப்பைப் பற்றி “வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ” என்று அவதூறுப் பிரச்சாரம் நடத்திய வண்ணம் இருக்கிறார்கள்.
இதற்கு நேர் எதிர் துருவத்தில் நின்றுகொண்டு, அதி தீவிரக் “கடவுள் இல்லை வாதிகளும்” அனுமார்ப் பாய்ச்சல் மத எதிர்ப்பாளர்களும் சோவியத் யூனியனை ஆத்திகத்தின் கல்லறையென்றும், நாத்திகத்தின் பொன்னுலகென்றும் இஷ்டம் போல் பிரச்சார பீரங்கியை முடுக்கி விடுகிறார்கள்.
பூஜ்யரான காண்டர்பரி பாதிரியார் “ரஷ்யப் புரட்சியானது கடவுளைத் திரும்பக் கண்டுபிடித்ததாகும்” என்று மிக நிதானமாகச் சிறந்த மத உணர்ச்சியுடன் அளந்து சொல்கிறார். எங்கள் கவி வேந்தன் பாரதியோ, “மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாளங்கே, ஆகாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி” என்று நவம்பர் புரட்சியைக் கவிதாவேசத்தின் கொடுமுடியிலேற்றிக் காட்டுகிறான். அது மட்டுமா! ‘”கலி விழுந்தான்! கிருத யுகம் எழுந்தது!” என்று கண்டு ஆனந்தக் கூத்தாடுகின்றான்! மகாகவி தாகூரோ, ரஷ்ய விவசாயிகளைக் கிருஷ்ணனுடைய மக்களென்றும் பலராமனின் படை வரிசையென்றும் பகர்கிறார்.
மத சுதந்திரம்
ஆனால் அக்டோபர் புரட்சியின் (இது ரஷ்யப் பஞ்சாங் கப்படி) 36 வருட வரலாறு உலகத்தில் எந்த நாட்டிலும் எக்காலத்திலும் இல்லாத மத சுதந்திரம் சோவியத் யூனியனில் நின்று நிலவுகிறது என்பதைத் தெக்கத் தெளிவாக்குகிறது.
ரஷ்யப் புரட்சியின் சகாப்தகரமான பற்பல சாதனைகளில் இந்தச் சாதனையும் ஒன்று என்பதை, யதார்த்த காய்தல் உவத்தலின்றி அங்கீகரிக்கிற ஒவ்வொரு மதவாதியும் மத எதிரியும் அங்கீகரிப்பான் என்பதில் ஐயமில்லை.
அன்று எப்படி இருந்தது?
புரட்சிக்கு முற்கால ரஷ்யாவில் அதாவது 1917க்கு முந்திய ரஷ்யாவில் வைதீக கிறித்துவ மார்க்கம்தான் அரசாங்க மதமாக அதிகார ஆர்ப்பாட்டம் செய்தது. ஏனைய மார்க்கங்களெல்லாம் எமகண்டம் அரிகண்டங்களுக்கு இரையாயின அல்லது பெயரளவில் விட்டு வைக்கப் பட்டன. இஷ்டம் போல் எந்த மதத்தையும் தழுவ மக்களுக்கு உரிமையில்லை. வைதீக கிறித்துவ மார்க்கத்திற்கு மாறத் தடையில்லை. இதர மத மாறுதல்களுக்குத் தடை யிருந்தது.
கிறித்து மார்க்கத்திலிருந்து கிறித்துவமல்லாத மார்க்கத்தைத் தழுவுவது கடுமையாகத் தண்டிக்கப்பட்டது. நாத்திகம், அரசாங்கத்திற்கு விரோதமான கொடிய குற்றமாகக் கருதப்பட்டது. கிறித்து முறைப்படி மணம் புரிந்து கொள்ளாத மணமக்கள் தண்டிக்கப்பட்டனர். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ‘சட்ட விரோதமான’ குழந்தைகள்; அந்தக் குழந்தைகளுக்குப் பிரஜா உரிமை இல்லை.
ரஷ்ய வைதீக திருச்சபைக்கு வேறு சபைகளுக்கில்லாத தனிச்சலுகையும் யதேச்சாதிகாரமும் இருந்தது. ஜாரரசன் தான் இந்தத் திருச்சபையின் தலைவர் பெருமான். அரசாங்கத்தின் அடிப்படைச் சட்டங்களில், திருச்சபை ஜாரரசனுக்கு அடங்கிக் கிடந்த தன்மை எதிரொலித்தது. “கிறித்துவ மன்னராகிய சக்கரவர்த்திதான் திருச்சபையின் தலை சிறந்த காவலரும் புரவலருமாவார்” என்று மதச் சட்டம் முழங்கிற்று.
திருச்சபையின் உடைமையாகக் குபேரச் செல்வம்- தாவர சங்கமச் சொத்துகளாக மலையெனக் குவிந்து கிடந்தது. திருச்சபை மிகப் பெரிய முதலாளியாகவும், நிலப் பிரபுவாகவும் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் சுரண்டிக் கொழுத்தது. ஜார் அரசாங்கம் அதன் ஊழியர்களையும், பொதுமக்களையும் அடக்கி ஒடுக்க வைதீக திருச்சபையை உபயோகித்தது.மதத் தலைவர்களைப்போலீஸ் தலைவர்களாக உபயோகித்தது. பொதுமக்களுடைய அரசியல் போக்குகளைக் கண்காணிக்கும் பொறுப்பைப் புரோகிதர்களுக்கு அளித்தது.
ஜாரின் இனத் துவேஷம்
இனத் துவேஷத்தை வளர்த்து, வைதீக திருச்சபையைச் சேராத எல்லைப்புறப் பிரதேச மக்களை வாட்டி வதைத்தது அரசாங்கம். உத்தியோகங்களிலும் சரி, பள்ளிக்கூடங்களிலும் சரி வைதீக திருச்சபையைத் தழுவியவர்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு வேறொரு நீதி காட்டிற்று.
இவ்வாறு மத சுதந்திரமோ மனச்சாட்சிச் சுதந்திரமோ மருந்துக்குக்கூட ஜார் அரசாங்கத்தில் இருந்ததில்லை.
எனவே, ஜாரின் எதேச்சாதிகார ஆட்சியை எதிர்த்துப் போராடிய ரஷ்ய முற்போக்கு வாதிகள் மனச்சாட்சிச் சுதந்திரத்தையும் ஒரு கோரிக்கையாக வைத்தார்கள். அரசாங்கத்திலிருந்து திருச்சபையைப் பிரிக்க வேண்டும். திருச் சபையிலிருந்து பள்ளிக்கூடத்தைப் பிரிக்க வேண்டும். அதாவது மத சுதந்திரம் வேண்டுமென்று கோரினர்.
1833ல் “தொழிலாளர் விடுதலைக் கழகம்”–அதுதான் அன்றைய மார்க்சிஸ்ட் குழு-நிறுவப்பட்டு, “மனச்சாட்சிக்குத் தங்குதடையற்ற சுதந்திரம் வேண்டும்” என்றும், மத இன வேற்றுமை பாராட்டாது எல்லா மக்களுக்கும் பரிபூரண சம உரிமை வேண்டும் என்றும் கோரிக்கைகளை வைத்தது.
1902ல் லெனினால் தயாரிக்கப்பட்ட ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியின் திட்டம், பால், மத, இன வேற்றுமை பாராட்டாது எஸ்டேட்கள் ஒழிக்கப்பட வேண்டு மென்றும், சம உரிமை பரிபூரணமாக வழங்கப்பட வேண்டு மென்றும் கோரிற்று.
இன்று எப்படி இருக்கிறது ?
அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சி “அடிமைக்குத் தளை யில்லை. யாருமிப்போது அடிமையில்லை” என்ற சூழ்நிலையைப் படைத்தது. சோவியத் யூனியனில் திருச்சபைக்கும் (மதத்திற்கும்) அரசாங்கத்திற்கும் இருந்த ஒட்டும் உறவும் அறுபட்டன.
1918ல் ஜனவரியில் சோவியத் அரசாங்கம், அரசாங்கத்திலிருந்து திருச்சபையும், திருச்சபையிலிருந்து பள்ளிக் கூடமும் பிரிக்கப்பட்டன என்று பறையறைவித்தது. மத சுதந்திரப் பிரச்சினையும், மத ஸ்தாபனங்களின்பால் சோவியத் அரசாங்கத்தின் மனப்பான்மையும் அடியோடு பைசல் செய்யப்பட்டது.
அந்தப் பறைசாற்றின் முக்யாம்சங்கள் பின்வருவன:-
1. அரசாங்கத்திலிருந்து திருச்சபை பிரிக்கப்படுகிறது.
2. மனச்சாட்சியைப் பாதிக்கிற அல்லது தடைப் படுத்துகிற அல்லது குறிப்பிட்ட மத நம்பிக்கையின் அடிப்படையில் சலுகை வழங்குகிற சட்டங்கள் தடை செய்யப்படும்.
3. யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அல்லது பின்பற்றாதிருக்கலாம். குறிப்பிட்ட தொழுகையுடையவர் அல்லது தொழுகை நடத்தாதவர் என்ற அடிப்படையில் இருந்த சாதக, பாதக உரிமைகள் ஒழிக்கப்படும். பொது மக்களின் மதச்சார்பு பற்றிய குறிப்புகள் சர்க்கார் தஸ்தா வேஜுகளிலிருந்து நீக்கப்படும்.
4. அரசாங்க நடவடிக்கைகளிலும், அரசாங்கம் சம்பந்தப்பட்ட பொதுவான சமுதாய நடவடிக்கைகளிலும் சரி எவ்வித மதச் சடங்கும் அனுஷ்டிக்கப்பட மாட்டாது.
5. பொதுஜன அமைதியைப் பாதிக்காத வரையில் மற்றவர்களின் உரிமையில் குறுக்கிடாதவரையில் தங்களுடைய மதச் சடங்குகளை நடத்திக் கொள்ள ஒவ்வொருவருக் கும் உரிமையுண்டு.
ஸ்தல அதிகாரிகள் இதில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வர்.
6. நாட்டுக்கும் அரசாங்கத்திற்கும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையைத் தட்டிக் கழிக்க மத நம்பிக்கைகளைக் காட்டிச் சாக்குப்போக்கு சொல்லக்கூடாது.
இதற்கு விதிவிலக்கு வேண்டுமாயின் மக்கள் மன்றம் (Peoples Court) தீர்ப்புக் கூறும்.
மதத்தின் பேரால் நடைபெறும் சத்தியங்களும் ஆணைகளும் ஒழிக்கப்படும்.
8. சகல சமுதாயச் சடங்குகளும் சமுதாய அதிகாரிகளாலும் ஸ்தாபனங்களாலுமே நடத்தப்படும். மணச் சடங்கு, பிறந்த நாள் சடங்குகளை ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ் நடத்தி வைக்கும்.
9. திருச்சபையிலிருந்து பள்ளிக்கூடம் பிரிக்கப்படும்.
10. எல்லா அரசாங்கப் பொதுப் பள்ளிக்கூடங்களிலும் தனிப்பட்ட பள்ளிக்கூடங்களிலும் மத போதனை ஒழிக்கப்படும்.
லெனின் 1905ல் திருச்சபையை அரசாங்கத்திலிருந்தும் பள்ளிக்கூடத்தைத் திருச்சபையிலிருந்தும் பிரிக்க வேண்டு மென்று கூறிய அறிவுரை சோவியத் ஆட்சியில் வெற்றிகரமாக அமுலாக்கப்பட்டது.
வாய்ப்பும் வசதியும்
அரசாங்கத்திலிருந்து திருச்சபையைப் பிரிக்க வேண்டு மென்று ஏற்பட்டதால் ஜாராட்சியில் அரசாங்கத்தின் ஒரு அங்கமாகத் திகழ்ந்த ரஷ்ய வைதீக சபை விடுதலையடைந்து தனது முழுக் கவனத்தையும், மதப் பிரச்சினையிலேயே செலவிடும் வாய்ப்புக் கிடைத்தது.
அரசாங்கத்திலிருந்து திருச்சபை பிரிக்கப்பட்டதால், ஒவ்வொருவரும் மத ஸ்தாபனங்களில் கட்டாயம் அங்கம் வகிக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தத்திலிருந்து எல்லோருக்கும் விடுதலை கிடைத்தது.
அரசாங்கத்திலிருந்து திருச்சபை பிரிக்கப்பட்டதால் இதுவரை சர்க்கார் உதவிபெற்றுவந்த ரஷ்ய வைதீக திருச் சபைக்கு இனி அந்த உதவி கிடையாதென்றாகிவிட்டது.
இந்தப் பிரிவு புரோகிதர்களோ, அல்லது மத பக்தர்களோ நாட்டின் அரசியல் வாழ்வில் தீவிரமாகப் பங்கு கொள்வதற்கு முட்டுக்கட்டையாக இல்லை.
மதத்தை அடிப்படையாகக் கொண்டு சோவியத் பிரஜை யாருக்கும் எவ்விதத் தடையும் கிடையாது.
தனிச் சலுகை கிடையாது
சோவியத் யூனியனிலுள்ள சகல மதங்களும் அரசாங்கத்தின் கண்ணில் சம உரிமை பெற்றன. எந்த மதத்திற்கும் எந்த தனிச் சலுகையும் கிடையாது. அதே பொழுதில் சோவியத் சட்டத்தை எந்த மதமும் மீறக்கூடாது.
நாத்திகர்களுக்கும், சம்சயவாதிகளுக்கும், பகுத்தறிவு வாதிகளுக்கும் அவரவர் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதற்கும் பரிபூரண உரிமையுண்டு.
இந்த மாதிரியான சூழ்நிலையில்தான் உண்மையான- சம்பிரதாயப்படி அல்லாத மத சுதந்திரம் சாத்தியமாகும் என்பதை எந்த நியாய புத்தியுள்ளவனும் குரோதமற்றவனும் ஒப்புக்கொள்ளுவான்.
இத்தகைய சுதந்திரம் கிடைத்ததால் இன்று பிரபல மத ஸ்தாபனங்களும் தங்கள் சொந்த முன் முயற்சியோடு சமாதான இயக்கத்தில் பங்கு கொள்கின்றன. உலக சமாதானத்திற்கான சோவியத் அரசாங்கத்தின் திட்டங்களை முழு மூச்சோடு, அமுல் நடத்தப் பாடுபடுவதோடு அதைத் தங்கள் மதக் கடமையாகவும் கொள்கின்றன.
மிகப் பிரபலமான மதத் தலைவர்களெல்லாம் சோவியத் யூனியனிலுள்ள பற்பல குடி அரசுகளிலும் நடைபெறும் சமாதான மாநாடுகளில் தீவிரமான பங்கெடுத்துக்கொள்கிறார்கள்.
அகில யூனியன் எவாங்கலிக்கல் கிறித்துவ ஸ்தாபனத்தின் தலைவரான ஒய். ஐ. ஷிட்கோவ் கூறினார் : “மதவாதிகளாகிய எங்களுக்கு அக்டோபர் புரட்சியின் முக்கியத்துவம் என்னவென்றால், அது எல்லாவித மத ஸ்தாபனங்களுக்கும் சுதந்திரத்தைத் தேடித் தந்தது. இந்தப் புரட்சி சட்டத்தின் முன்னால் எல்லா மதங்களையும் சம உரிமை யுடையதாகச் செய்து விட்டது. எந்தத் திருச்சபையும் இன்று ஆதிக்கமுடையதாக இல்லை. ஜாராட்சியில் சித்திரவதைக்கு இரையாகி நசுங்கிக் கிடந்த எல்லா மத ஸ்தாபனங்களுக்கும் அக்டோபர் புரட்சி விடுதலை அளித்திருக்கிறது.
அவைகளின் சமுதாய நடப்பு, தொழுகை, சுதந்திரம் ஆகியவற்றிற்குரிய சகல உரிமைகளும் இன்று கிடைத்துள்ளன.
முஸ்லிம்கள் உரிமை
இதுபோல் 1951ல் பத்திரிகை நிருபர்களுக்குப் பேட்டியளித்தபோது டிரான்ஸ்காகேசியா முஸ்லிம் மத போர்டுத் தலைவராகிய ஷேக்உல் இஸ்லாம் ஆல்ஜாதே பின்வருமாறு கூறினார்: “புரட்சிக்கு முன்னால் எங்கள் நாட்டு முஸ்லிம்கள் மதச் சித்திரவதைக்கு இரையானார்கள். இன்று சோவியத் யூனியனில் எல்லா மதங்களும் சம உரிமையை அனுபவிக்கின்றன. ஸ்டாலின் அரசியல் சட்டம் மத சுதந்திரத்திற்குப் பூரண உத்தரவாதம் அளிக்கிறது.
“காக்கஸஸிலும் மத்திய ஆசியாவிலுமுள்ள மசூதிகளும் மத ஸ்தாபனங்களும் சுதந்திரமாகச் செயல்படுகின் றன. சோவியத் அரசாங்கத்தின் கீழ் முஸ்லிம்கள் கல்வி, உண்மையான உயர்தரப் பண்பாடு இவற்றின் நற்பலனை நன்றாகத் துய்க்கிறார்கள்.
“சர்வ சாதாரணமான முஸ்லிம் தொழிலாளர், விவசாயிகளின் புதல்வர், புதல்விகள் சர்க்கார் அமைச் சர்கள், பாக்டரி டைரக்டர்கள், விஞ்ஞானக் கழக நிர்வாகிகள் முதலிய பதவிகள் வகித்து அரசாங்க நிர்வாகத்தில் சிறந்த முறையில் பங்கு கொள்கிறார்கள்.”
எல்லா மதங்களும் சமம். மத அடிப்படையில் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை. மதவாதியோ, நாத்திகனோ, பாக்டரியிலும், பள்ளிக்கூடத்திலும், பட்டாளத்திலும் சமமாகவே பாவிக்கப்படுகிறான்.
மத நம்பிக்கைக்காகச் சித்திரவதை செய்வதை, உரிமை பறிக்கப்படுவதைச் சோவியத் யூனியன் தடை செய்கிறது. மத உணர்ச்சியைப் புண்படுத்துவதையும் தடுக்கிறது. மத உணர்ச்சி விழாக்களில் குறுக்கிடுவதைக் கண்டிக்கிறது. தண்டிக்கிறது.
1936ம் வருடத்திய ஸ்டாலின் அரசியல் சட்டத்தின் நகல் திட்டத்தின் 124வது பிரிவுக்கு ஒரு திருத்தம் வந்தது. மதச் சடங்குகளைத் தடை செய்யவேண்டுமென்பது அந்தத் திருத்தம். “நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கருத்துக்கு விரோதமாக இருப்பதால் இதை நிராகரிக்க வேண்டும்” என்று ஸ்டாலின் கூறினார்.
இவ்விதம், மதம் தனிப்பட்ட நபர்களின் சொந்த விஷயமாக்கப்பட்டது சோவியத் நாட்டில். அரசியலிலோ, பொருளாதாரத்திலோ, பள்ளிகளிலோ புரட்சிக்கு முன்னர் இருந்ததுபோல் மதத்திற்கு எவ்வித சம்பந்தமுமில்லாமல் செய்து இஷ்டப்பட்டவா, இஷ்டப்பட்ட மதத்தைத் தங்கு தடையின்றித் தழுவலாம் என்ற உரிமை அளிக்கப்பட்டது. அத்துடன் அவ்வித மத நம்பிக்கை விஞ்ஞானத்திற்கு விரோதமானது, பகுத்தறிவற்றது என எடுத்துக்காட்ட மத எதிர்ப்பாளர்களுக்கும் அங்கு உரிமை உண்டு.
8-11-53



