மதமும் மனித வாழ்வும்
ப. ஜீவானந்தம்

மார்க்சிய வேஷம்

மத எதிரிகளில் மார்க்சிய எதிரிகளுக்கு இயங்கு-இயல் பொருள் முதல்வாதம் பற்றிய தெள்ளறிவு இல்லை. எனவே அவர்களுக்கு மார்க்சியவாதிகளின் கொள்கையும் செய்கையும், எப்படி ஜீவனுள்ள உறவோடு இணைந்து நிற்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் நுனிப்புல் மேய்ந்து விட்டு மார்க்சிய மத எதிர்ப்பை ‘முன்னுக்குப் பின் முரணானது’ என்று ஆட்சேபிக் கிறார்கள்.

“கம்யூனிஸ்டுகளே! நீங்கள் முதல் தரமாகக் கருத வேண்டிய கருத்துப் பிரச்சாரத்தை இரண்டாந்தரமாகக் கருதுகிறீர்கள். பண்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் ஆயிரம் ஆயிரம் ஆண்டு விரோதியான மதத்தை எதிர்க்கும் போராட்டத்தை வர்க்கப் போராட்டத்திற்குக் கீழடங்கிய தாக்க விரும்புகிறீர்கள். வர்க்கப் போராட்டந்தான் அரசியல் பொருளாதாரத் துறைகளில் உறுதியான நடைமுறைக் கொள்கையுடைய போராட்டம் என்கிறீர்கள். நாங்கள் இதை ஆட்சேபிக்கிறோம்” என்கிறார்கள் அவர்கள்.

“இத்தகைய ஆட்சேபனையில் மார்க்சிய இயங்கு இயல் (Marxist dialectics) பற்றிய அறிவு சூன்யம் முழு வடிவத்தோடு காட்சியளிக்கிறது,” என்கிறார் லெனின். மேற்படி ஆட்சேபனைக்காரர்களுக்குக் குழப்பம் உண்டு பண்ணுகிற முரண்பாட்டுக்குக் காரணம் வாழ்வில் காணப்படுகிற முரண்பாடுதான். இந்த முரண்பாடு இயங்கு இயல் ரீதியான முரண்பாடேயன்றி கம்யூனிஸ்டுகளின் சொல்லில் உள்ள முரண்பாடோ, கம்யூனிஸ்டுகளால் புதிதாகக் கற்பனை செய்யப்பட்ட முரண்பாடோ அல்ல என்றும் லெனின் அறிவுறுத்துகிறார்.

தமிழ் மக்கள் இந்த உண்மையை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக தி.மு.க. அணிகள்- தலைவர் களல்ல – மாணவர்கள், படிப்பாளி இளைஞர்கள். லெனின் குறிப்பிட்டுச் சிறப்பித்துக் கூறும் “இயங்கு-இயலை” (Dialectics) வருந்திப் படித்து நன்றாகச் சிந்தித்துத் தெளிய வேண்டுகிறோம். அப்பொழுதுதான் மதத்தைப் பற்றிய மார்க்சியக் கொள்கையைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியும்.

மதஎதிர்ப்பு தனிப் பிரச்சினை

“மத எதிர்ப்புப் பிரச்சாரம் பாட்டாளி மக்களிடம் காணப்படும் மத நம்பிக்கைகளை எதிர்த்து முறியடிக்கும் பிரச்சாரம்; இது வேறு, பாட்டாளி மக்கள் நடத்தும் வர்க்கப் போராட்டத்தின் பலாபலன்கள் வேறு, இரண்டும் தனித் தனியானவை என்று எல்லைக்கோடு வரைந்து காட்டுகிறவர்கள் பிரச்சினையை இயங்கு-இயல் அல்லாத முறையில் (Non-dialecticaly) புரிந்து கொள்கிறார்கள். எதார்த்த வாழ்வில் பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டுள்ள ஒன்றைப் பலவந்தமாகக் கத்தரித்தெடுக்க முயலுகிறார்கள்” என்று மத-எதிர்ப்பைத் தனிப் போராட்டமாக்குகிறவர்களுக்கு லெனின் பதில் சொல்கிறார். இந்த உண்மையை, ஒரு உதாரணத்தின் மூலமும் பின்வருமாறு விளக்குகிறார்.

பிளவு படுத்தாதே!

ஒரு குறிப்பிட்ட ஜில்லாவில் ஒரு குறிப்பிட்ட தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் இரண்டு கருத்தோட் டங்களோடு வாழ்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கணிசமான அளவு வர்க்க உணர்ச்சி பெற்றவர்கள்-கம்யூனிஸ்டுகள் (இவர்களை நாத்திகர்கள் என்று கருதுவது பொருந்தும்) கொஞ்சம் பேர். பெருவாரியான மற்றவர்கள் பின் தங்கிய தொழிலாளர்கள். இவர்கள் கிராமங்களோடும், விவசாயிகளோடும் உறவுடையவர்கள், கடவுள் நம்பிக்கை யுடையவர்கள். மாதா கோவிலுக்குத் தொழுகைக்குப் போகிறவர்கள். மதகுரு சொன்னபடி நடப்பவர்கள். இத்தகைய தொழிலாளர்களை அந்த மதகுரு கிறித்துவத் தொழிலாளர் சங்கம் என்ற ஒரு சங்கத்தில் திரட்டியிருக் கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பிரதேசத்தில் தொழிலாளர்களுடைய பொருளாதாரப் போராட்டம் ஒரு வேலை நிறுத்தத்தில் முடிந்திருக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம். இந்தச் சூழ்நிலையில் ஒரு கம்யூனிஸ்டின் கடமை என்ன? அவன் வேலை நிறுத்த வெற்றிக்குத்தான் மற்ற எல்லாவற்றையும்விட முதலிடம் கொடுக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிற தொழிலாளிகளை நாத்திகர்களென்றும், கிறித்தவர்களென்றும் பிரித்துப் பிளவு படுத்துவது பெருந்தவறு இந்தப் பிளவு வேலையை யார் செய்தாலும் அதை உறுதியாக எதிர்த்துப் போராட வேண்டும்.

இந்த உதாரணத்தைக் கொடுத்ததோடு லெனின் நிற்கவில்லை. “இத்தகைய சூழ்நிலையில் மத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வது அதிகப் பிரசங்கித் தனமாகவும் முடிகிறது” என்றும் சாட்டை கொடுக்கிறார். “பின் தங்கிய தொழிலாளர்கள் நம்மைவிட்டு மிரண்டு ஓடிப்போகக் கூடாதே என்று பயந்து இதைக் கூறவில்லை. தேர்தலில் பெருவாரி யான தொழிலாளர்களின் வாக்குகளை இழக்க நேரிடுமோ என்ற தொடை நடுங்கி மனப்பான்மையோடும் இதைக் கூறவில்லை. வர்க்கப் போராட்டத்தின் எதார்த்த வளர்ச்சியைப் பற்றிய கண்ணோட்டத்தோடேயே இதைக் கூறுகிறோம்” என்றும் லெனின் கம்யூனிஸ்டுகளின் நிலையைத் தெளிவுபடுத்துகிறார். லெனின் மேலும், இன்றைய முதலாளித்துவ சமுதாயச் சூழ்நிலையைப் பொறுத்தமட்டில், மொட்டையான மத எதிர்ப்புப் பிரசாரத்தை விட வர்க்கப் போராட்டத்தின் மூலம் நூறு மடங்கு அதிகப்படியாக, கிறித்துவத் தொழிலாளர்களைக் கம்யூனிசத்திற்கும், நாத்திகத்திற்கும் கொண்டுவர முடியும்” என்று தீர்க்க தரிசனத்துடன் உறுதி கூறுகிறார்.

“வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகள், மத நம்பிக்கைகளுக்கு இணங்கப் பிளவு பட வேண்டுமென்பதுதான் இந்த மத குருமார்களின் பிரார்த்தனை. எனவே, இத்தகைய காலகட்டத்தில், இம் மாதிரிச் சூழ்நிலையில் மத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வோர் “மாதா கோவிலுக்கும் மத குருமார்களுக்கும் ஐந்தாம் படை வேலை செய்கிறவர்களே ஆவார்கள்.” லெனினுடைய இந்தக் கண்டனத்தை விட, மத எதிர்ப்பில் இட பேதத்தையும், கால அகாலத்தையும் கவனியாமல் முந்திரிக் கொட்டை மாதிரி முந்திப் பாய்கிற கூட்டுக்கால் பாய்ச்சல் காரர்களை இதைவிட வேறு அழுத்தமாகக் கண்டிக்க முடியாது.

அனுகூல சத்ருக்கள்

“என்னவானாலும் சரி, மத-எதிர்ப்புப் போர் நடந்தே யாக வேண்டும் என்று பரணி பாடும் அராஜக-ஆவேசப் பிறவிகள் உண்மையில் மத குருமார்களுக்கும் முதலாளி வர்க்கத்திற்குமே ஒத்துழைக்கிறார்கள்.” மதத்தை ஒழித்த பிறகுதான் மறுவேலை என்று சண்டப்பிரசண்டம் அடிக்கும் ‘புஸ்’ வாணங்களுக்கும் லெனின் மேற்கண்டவாறு, நல்ல சூடு கொடுக்கிறார்.

“மார்க்சியவாதி ஒவ்வொருவனும் மத எதிரியாக இருந்து தீரவேண்டும் ஏனென்றால் மார்க்சியவாதி பொருள் முதல்வாதி. பொருள் முதல்வாதியிலும் இயங்கு இயல் பொருள் முதல்வாதி அவன். ஆகவே, அவன் மாறாத கொள்கை உபதேசியாக நின்று வெறும் தத்துவார்த்த ரீதியாக மட்டும் மதத்தை எதிர்த்துப் போராடக் கூடாது. பிரத்தியட்ச நிலைமையைக் கணக்கிலெடுத்துப் போராடியாக வேண்டும். கண் கூடாக நடைபெறுவதும் வேறெந்தப் போராட்டத்தையும் விடப் பொது மக்களுக்கு அதிக அறிவு வெளிச்சம் காட்டுவதுமான வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் போராடியாக வேண்டும். அதோடு ஒரு மார்க்சிய வாதிக்கு எதார்த்த சூழ்நிலையை ஒட்டுமொத்தமாகக் கணக்குப் போட்டுப் பார்க்க இயலவேண்டும்.”

அராஜகவாதமும் சந்தர்ப்பவாதமும்

அராஜகவாதத்திற்கும் சந்தர்ப்பவாதத்திற்கும் இடை யிலுள்ள எல்லைக்கோட்டை நிர்ணயிக்க மார்க்சியவாதிக்கு முடிய வேண்டும். இந்த எல்லைக்கோடு தன்னில் தானாகி நிற்கவில்லை. சார்ந்து நிற்கிறது; இயங்கிக் கொண்டிருக் சதா மாறிக் கொண்டிருக்கிறது. ஆயினும் அது இருக்கிறது.

“தத்துவ மாத்திரையான, சொற்றொடர் ரீதியான’ உண்மையில் பலவீனமான புரட்சித் தன்மை கொண்டது அராஜகவாதம்.

மத எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு அஞ்சுவது மத எதிர்ப்புக் கடமையை மறப்பது ஆத்திகத்தோடு சமரசஞ் செய்துகொள்வது, வர்க்கப் போராட்டத்தின் நலன்களை முன் வைப்பதை விட பாட்டாளி மக்களின் மத உணர்ச்சியைப் புண்படுத்தக்கூடாது; அவர்களைப் பயமுறுத்தக் கூடாது என்ற எண்ணத்தை முக்கியப்படுத்தி முன் வைப்பது வாழு, வாழவிடு” என்று சாதுரிய நியதியோடு ஒழுகுவது ஆகிய சுயநல-வழவழாத் தன்மையுடையது சந்தர்ப்ப வாதம்.

“அராஜக வாதத்திலும் சரி, சந்தர்ப்ப வாதத்திலும் சரி, மார்க்சியவாதி விழுந்து விடக் கூடாது.”

இவ்வாறு, இடதுசாரி அராஜகவாதத் திரிபு வலது சாரி சந்தர்ப்பவாதத் திரிபு ஆகியவற்றின் மீது, “டார்ச் லைட்” அடித்துக் காட்டிவிட்டு மார்க்சிய ராஜபாட்டையில் செல்ல வழி காட்டுகிறார் லெனின். அப்பால் மதத்தைப் பற்றிய குறிப்பிட்ட சில பிரச்சினைகளில் கம்யூனிஸ்ட்களின் மனப்பான்மையை விளக்குகிறார்.

மத குருவும் கம்யூனிஸ்ட் கட்சியும்

1. ஒரு மத குருவைக் கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கத்தினராகச் சேர்க்கலாமா?

பொதுவான அரசியல் பணிபுரிய ஒரு மதகுரு நம்மிடம் வருகிறார். மனப்பூர்வமாகக் கட்சியிட்ட கட்டளையை ஆற்றுகிறார். கட்சித் திட்டத்தை துளி கூட மறுக்கவில்லை; அப்படியே ஒப்புக் கொள்கிறார். அப்படிப்பட்ட மதகுருவைக் கம்யூனிஸ்டு கட்சியில் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ள ஆட்சேபனை இருக்கக் கூடாது.

இங்கு கட்சித் திட்டத்தின் உணர்ச்சி, கொள்கை ஆகிய வற்றிற்கும் மதகுருவின் மதம் பற்றிய கொள்கைப் பிடிப்புக்கும் இடையில் முரண்பாடுகள் மோதுகின்றன. இந்தச் சூழ் நிலையில் மதகுரு கட்சிக்காகத் தன்னையே மறக்கிறார். எனவே இவர் கட்சியில் அங்கத்தினராகத் தகுதியுடையவர்.

மற்றொரு மதகுரு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்கிறார். சேர்ந்த பிறகு தனது மதக் கருத்துகளைப் பிரச்சாரஞ் செய்வதையே முதற்பெரும் வேலையாக அல்லது தனிப்பெரும் வேலையாகக் கொள்கிறார். அப்படியானால் இந்த மத குரு கட்சியில் இருந்து ‘கல்தா’ கொடுக்கப்பட வேண்டியவர்.

இவ்வாறு விளக்கம் தந்துவிட்டு லெனின் சொல்கிறார்! “நம்மைப் பொறுத்தமட்டில் எந்தச் சந்தர்ப்பத்திலும் மத குருக்களைக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்க மாட்டோம் என்பதும் சரியல்ல. எதிர்மறையாக எந்தச் சந்தர்ப்பத்திலும் சேர்ப்போம் என்பதும் சரியல்ல” என்று.

கடவுள் நம்பிக்கையும் தொழிலாளியும்

2. மத நம்பிக்கையுள்ள தொழிலாளிகளைக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்கலாமா?

கட்டாயம் சேர்க்க வேண்டும் என்பதோடு மாத்திர மல்ல. அவ்வாறு சேர்க்கும் முயற்சியை இரட்டிப்பாக்க வேண்டும். இந்தத் தொழிலாளர்களின் மத நம்பிக்கையோடு லவலேசம் மோதுவதையும் நாம் முழு மூச்சோடு எதிர்க்க வேண்டும். நாம் கட்சியில் அவர்களைச் சேர்ப்பது கட்சித் திட்ட உணர்ச்சியை அவர்களிடம் உருவாக்கு வதற்கேயன்றி அவர்களுடைய மத உணர்ச்சியோடு மோதுவதற்காக அல்ல.

சோஷலிசம் எனது மதம்

3. ‘சோஷலிசம் எனது மதம்” என்ற கோஷத்தைக் கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தினர் கொடுக்கக் கூடாதென்ற தடை உண்டா?

இல்லை. இந்தக் கோஷத்தை அப்படியே பார்த்தால் இது மார்க்சியத்திலிருந்து வாபஸ் வாங்கும் கோஷம்தான். ஆனால் இந்தக் கோஷத்தின் இழுப்பு மையம் வற்புறுத்துவது பல்வேறு சூழ்நிலையில் பல்வேறுவிதமாயிருக்கும். ஒரு பிரச்சாரப் பேச்சாளி தொழிலாளிக் கூட்டத்தில் பேசுகிற பொழுது பின்தங்கிய மக்களுக்குத் தனது கருத்தை விளக்கும் பொருட்டு “சோஷலிசம் எனது மதம்’ என்கிறார். ஒரு எழுத்தாளன் ‘கடவுளைப் படைக்கும்’ சோஷலிசத்தைப் பிரச்சாரம் செய்ய ‘சோஷலிசம் எனது மதம்’ என்கிறான். மேற்படி பேச்சாளியைக் கண்டிப்பது பிரச்சார சுதந்திரத்திற்கு இடம்மாறித் தடை விதிப்பதாகும். எழுத்தாளன் விஷயத்தில் கட்சி தடை விதிப்பது அவசியமும், கடமையும் ஆகும். ‘சோஷலிசம் எனது மதம்’ என்ற கூற்று சில விஷயத்தில் மதத்தில் இருந்து சோஷலிசத்திற்கு வருகிற ஒரு படி; மற்றவர் விஷயத்தில் சோஷலிசத்திலிருந்து மதத்திற்குப் போகிற ஒரு படி.

தி.மு.. தலைமையின் கண்கட்டு வித்தை

மதத்தைப் பற்றி மார்க்சிய லெனினியத்தின் அடிப்படைப் பார்வை என்ன? மத எதிர்ப்பில் சரியான பாதை எது, தவறான சந்தர்ப்பவாதத் திரிபுகள் எவை, மத எ திர்ப்பின் எல்லை விட்டம் எது? முதலியவை குறித்தும் லெனினுடைய ஸ்படிகத் தெளிவான கருத்துக்களை இதுவரை எடுத்துக் காட்டினோம். இதிலிருந்து ‘ஜனசக்தி’யையும் தி.மு.க. ஏடுகளையும் படிக்கும் தமிழ் மக்கள், மதத்தைப் பற்றிய மார்க்சியக் கோட்பாடுகளுக்கும், தி.மு.க.வின் ‘அறிவுப் புரட்சி’க்கும் உறவு உண்டென்று அவர்கள் அளப்பது அப்துல்காதருக்கும், அமாவாசைக்கும் உள்ள உறவு மாதிரித் தான் என்பதை உணர்வார்கள். தி.மு.க. தலைவர்கள் தங்கள் கருத்துக்களையும் மார்க்ஸ், லெனின் ஆகிய உலக கம்யூனிஸ்டு தலைவர்களின் கருத்துக்களையும் இணைத்துக் காட்டுவது “மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் கண்கட்டு வித்தை” என்பதையும் அறிந்து கொள்வார்கள்.

நாம் மார்க்சிய மூலவர் கருத்துக்களை எடுத்துக் காட்டுகிறோம். அவர்கள் அவற்றை நமது குழப்படிக் கருத்துக்களாகப் புரட்டிக் காட்டி கம்யூனிஸ்டுகளைக் குறைப்படுத்தி விட்டதாக எக்களிப்படைகிறார்கள். அவர்கள் தங்களுடைய அற்புத மூளைகளில் வெடித்த முத்து முத்தான “கருத்து மணிகளை” நம்முன் அள்ளி வீசுகிறார்கள். அவற்றை மார்க்சியத்தின் 1954வது ஆண்டுத் தமிழகப் பதிப்பு என்று மாய்மாலம் செய்கிறார்கள்.

ஏன் இப்படிப் பாசறை வகுத்துப் பரணி பாடுகின்றனர் மு.க. தலைமையினர்? மார்க்சியமும் அதன் செயல் திறனும், புகழும் நாள்தோறும் வளர்கின்றன. உலக முழுவதிலும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகிய மேதைகளின் செல்வாக்கு பொதுமக்களிடம் மென் மேலும் பெருகுகிறது.

தமிழகத்தில் தி.மு.க. அணிகளிடை யிலும், தமிழ்ப்பொதுமக்களிடையிலும் இந்தச் செல்வாக்குப் பெருகிக் கொண்டிருக்கிறது. எனவே தி.மு.க. தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களுக்கு ‘மார்க்சிய’ ஆடை உடுத்தி கழக அணிகளையும் பொதுமக்களையும் திருப்திப்படுத்த நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

5-12-54

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *