மதமும் மனித வாழ்வும்
ப. ஜீவானந்தம்

நான் ஒரு நாத்திகன்

“ஷெல்லி – ஒரு நாத்திகன், ஒரு ஜனநாயகவாதி, ஒரு மனிதன்.”

இவ்வாறு, ஆங்கில நல்லிசைக் கவிஞராகிய ஷெல்லி தாம் நேப்பிள்ஸ் என்ற நகரத்தின் படிப்பகம் ஒன்றிற்குச் சென்றிருந்த பொழுது அங்கிருந்த பெயர்ப் பதிவு ஏட்டில் தீட்டினார்.

அதே ஷெல்லி மாணவராக இருந்த காலத்தில் ஒரு நிகழ்ச்சி நேர்ந்தது. அவர் ஒரு நாத்திகர் என்று கல்லூரித் தலைமை ஆசிரியருக்கு எப்படியோ தெரிந்து விட்டது. உடனே ஒரு உத்தரவு பிறந்தது: “இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் ஷெல்லி கடவுளைக் கண்டு பிடிக்காவிட்டால் அவனைக் கல்லூரியிலிருந்து கல்தா கொடுப்பேன்.”

ஷெல்லிக்காவது 24 மணி நேரம் அனுமதிக்கப்பட்டது. ஆனால் இன்றைய மதக் கிறுக்கர்களும் ஆஸ்திக வெறியர்களுமோ அந்த நேரம் கூட அனுமதிக்கத் தயாராக இல்லை. கம்யூனிஸ்டு விரோதிகளான இந்து, முஸ்லிம், கிறிஸ்துமதப் பிற்போக்காளர்களும் ஒரு கூட்டணி வகுத்து ஒரே மேடை யிலேறி ஒரே குரலில் ஒரே பல்லவியை ஊளையிடுகிறார்கள்.

“கம்யூனிஸ்டுகள் மத விரோதிகள்; அவிசுவாசிகள்; நாத்திகர்கள்; பொருள் முதல்வாதிகள். அவர்களைப் பகிஷ்கரியுங்கள்.”

திடீரென்று யாரேனும் ஒருவர் அவர்கள் அருகாமையில் சென்று, ‘நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நான் எந்த மதத்தை நம்ப வேண்டும்?’ என்று கேட்டுவிட்டால் போதும். என்ன நிகழும் தெரியுமா?

வேதாகமம் சாஸ்திரி சொல்வார். “சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற சதுர்வித மார்க்கங்கள் இந்து மதத்தில் தானுண்டு. உருவ வழிபாடு, அருவ வழிபாடு இரண்டின் மூலமாகவும் சாலோக, சாரூப, சாமீப சாயுஜ்ய பதவிகளை இந்து மதத்தில்தான் அடைய முடியும். எனது மதம்தான் மோட்ச சாம்ராஜ்யத்திற்குச் சரியான ராஜ பாதை.” சிவநேசச் செல்வர் உடனே ஆரம்பிப்பார்: “சிவாய நமவென்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒரு நாளுமில்லை! சைவநெறியே மெய் நெறி.”

இதற்குள் வைணவ சிரோமணி எழுந்து விடுவார்: “இம்மையே ராமா என்ற இரண்டெழுத்தினால் நன்மையும் செல்வமும் நாளும் நல்கும்” என்று அடித்துக் கூறுவார்.

முஸ்லிம் மௌல்வி கண்கள் சிவக்கச் சொல்வார்: “விக்ரக ஆராதனை (கல்லையும் செம்பையும் குறிப்பிடுவது) ஹராம். அல்லாவின் திருவடி நிழலைப் பெறுவதற்கு நேர் வழிகாட்டுவது எனது மதம் ஒன்றே. எனது மதமே சத்ய மதம்.

உடனே கிறித்தவப் பாதிரியார் குதித்தெழுந்து உபதேசம் செய்யத் தொடங்குவார்: “பாவிகளே ! உங்களுக்குப் பாவ மன்னிப்பு வேண்டுமென்றால், பரமண்டலத்திலிருக்கும் பிதா, தேவகுமாரன், பரிசுத்த ஆவி ஆகியவர்களிடம் அசையா நம்பிக்கை வைத்து ஞானஸ்நானம் பெறுங்கள்! எனது மதம் ஒன்றுதான் சத்திய மதம்.”

இவ்வாறு ஒரு பயங்கரச் சொற்போர் துவங்கும். விபூதிக் குறிக்கும் மெழுகு திரிக்கும் இடையில், சிலுவைக்கும் பூணுலுக்கும் இடையில், துருக்கித் தொப்பிக்கும் துளசி மணிக்கும் இடையில், பட்டை நாமத்திற்கும் கட்டுப் பூச்சுக்கும் இடையில், மொட்டைத் தலைக்கும் முழுத்தாடிக்கும் இடையில், ஒரு “லடாய்’ ஆரம்பிக்கும், “எல்லாம் வல்ல இறைவனைக்” காக்கும் பொருட்டு. அது, ஒருவேளை, வெட்டுப் பழி குத்துப் பழியில் கொண்டுபோய் விடவும் கூடும்.

இந்திய சரித்திரத்தைப் பார்த்தாலும் சரி, உலக சரித்திரத்தைப் பார்த்தாலும் சரி, பௌத்தனுக்கும் பார்ப்பானுக்கும் சண்டை, சைவனுக்கும் சமணனுக்கும் சண்டை, வடகலைக்கும் தென்கலைக்கும் சண்டை, கிறித்தவனுக்கும் முஸ்லிமுக்கும் சண்டை, இந்துவுக்கும் முஸ்லிமுக்கும், இந்துவுக்கும் கிறித்தவனுக்கும் சண்டை, ரோமன் கத்தோலிக்கனுக்கும் புராட்டஸ்தனிக்கும் சண்டை, ஸன்னிக்கும் ஷியாவுக்கும் சண்டை- இவ்வாறு எத்தனை எத்தனை சண்டைகள்! கடவுளைக் காப்பாற்றும் பொருட்டு, எத்தனை எத்தனைக் கொலைகள், கொள்ளைகள், வெட்டுப் பழி, குத்துப் பழிகள், கழுவேற்றங்கள், நெருப்பிட்டுப் பொசுக்கல்கள், சித்திரவதைகள், யுத்தங்கள்! கடவுளைக் காப்பாற்ற மத பக்தர்கள் போராடிப் பெருக்கிய இரத்த ஆறுகளை நினைத்தால் உலக யுத்தங்கள்கூட வெட்கித் தலைகுனியும்!

இவ்வாறு மனித வர்க்கத்தின் இரத்தம் ஆறாக ஓடுவதைக் காண நான் விரும்பவில்லை. ஆகவே நான் மத நம்பிக்கைக்கு எதிரி.

தீயினைக் கும்பிடும் பார்ப்பார்நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்
கோயில் சிலுவையின் முன்னேநின்று
கும்பிடும் ஏசுமதத்தார்

முதலிய எல்லா மத நம்பிக்கைக்காரர்களுக்கும் அது போல் எந்த ஒரு மதத்திலும் பற்றில்லாதவர்களுக்கும் இந்தப் பரந்து விரிந்த உலகத்தில் சண்டை போடாமல் சகோதர வாஞ்சையோடு வாழ்வதற்கு வேண்டிய நிலப் பரப்பு இருக்கிறதென்பது எனது நம்பிக்கை. ஆகவே, நான் எனது கருத்துக்கு உடன் படாதவர்களுடன் வம்புக்கு நிற்கவில்லை. அவர்களும் என்னோடு வம்புக்கு வர வேண்டிய அவசியமில்லை.

நான் ஒரு நாத்திகனான கம்யூனிஸ்ட். அப்படியானால் ஆத்திக உணர்ச்சியுள்ள கம்யூனிஸ்டுகளும் இருக்கிறார்களா? இருக்கக்கூடாது என்றில்லை. ஒரு மதத்திலும் நம்பிக்கையில் லாத நாத்திகர்களுக்கு மட்டும்தான் தொழிலாளர்களின் அரசியல் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியில் இடமுண்டு என்று கட்சியின் திட்டமோ, கட்சியின் ஸ்தாபன விதிகளோ திட்டவட்டமாக வரையறுத்துக் கூறவில்லை. நேர்மாறாக, தொழிலாளர் கட்சி, மத நம்பிக்கைகளைப் பலாத்காரமாக எதிர்ப்பது தவறு என்று மார்க்ஸிய ஞானாசிரியர்கள் அழுத்தந் திருத்தமாகக் கூறியிருக்கிறார்கள்.

1874ல் நாத்திகத்தைத் தொழிலாளர் கட்சி கொள்கைப் பிரமாணமாக அங்கீகரிக்க வேண்டுமென்பதை எங்கெல்ஸ் எதிர்த்தார். மத நம்பிக்கைக்கு எதிரிடையாகப் பகிரங்கப் போர் முழக்கம் செய்வது அறிவீனம் என்றும் அது மதநம்பிக்கையைத் தேய்ந்து மாய்ந்து போகச் செய்வதற்குப் பதிலாக அதனை நிலைநிறுத்தவே உதவும் என்றும் கூறினார். தொழிலாளி வர்க்கம் நடத்தும் வர்க்கப் போராட்டம்தான் பெருவாரியான பாட்டாளி மக்களை மேலும் மேலும் வசீகரித்து அவர்களை உணர்வு பூர்வமான புரட்சிகரமான சமுதாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் என்றும், அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களை மதப் பிடிப்பிலிருந்து விடுதலை செய்யும் என்றும் எடுத்துக் காட்டினார்.

மத எதிர்ப்புப் போரைக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் லட்சியமாகப் பிரகடனப்படுத்த வேண்டுமென்ற வாதம் பூர்ஷுவா அராஜகவாதிகளுடைய வாதம் என்று லெனின் சுட்டிக் காட்டியுள்ளார். அதனால்தான் லெனின் மதத்தைப் பற்றி எழுதியுள்ள தமது நூலில் மதநம்பிக்கையுள்ள தொழிலாளிகளைக் கட்சியில் கொண்டுவர குறிப்பிட்ட அளவிற்குக் கவனம் செலுத்த வேண்டுமென்று வற்புறுத்துகிறார். லெனினுடைய கருத்தில் புரோகிதன்கூட கம்யூனிஸ்ட் கட்சியில் சேரலாம். ஆனால் ஒரு நிபந்தனை; அவன் கட்சியின் திட்டத்தை எதிர்க்கக்கூடாது. மாறாக, கட்சியின் திட்டத்தை நடைமுறையில் கொண்டுவர உணர்வு பூர்வமாக முழு மூச்சோடு பணியாற்ற வேண்டும். கட்சியின் கட்டுப் பாட்டிற்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். மதப் பிரச்சாரத்திற்கான ஒரு கருவியாகக் கட்சியை உபயோகிக்கக் கூடாது. அவ்வளவுதான்.

மதத்தைப் பற்றி லெனின் வகுத்த கொள்கைகளின் அடிப்படையில் தான் சோவியத் யூனியனிலும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையில் ஆட்சி நடைபெறும் இதர நாடுகளிலும் மத நம்பிக்கைகளுக்குப் பரிபூரண சுதந்திரம் வழங்கப் பட்டிருக்கிறது.

இங்குதான் பகுத்தறிவு வாதிகளான பெரியார் ஈ.வே.ரா., சி. என். அண்ணாதுரை, (இவர்கள் இன்று ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கை பேசுகிற பகுத்தறிவுவாதிகள்) எஸ். இராமநாதன் ஆகியவர்களுக்கும் கம்யூனிஸ்டான எனக்குமுள்ள வித்தியாசம் இருக்கிறது. மத நம்பிக்கை பகுத்தறிவுக்கு விரோதமானவை என்றும் பகுத்தறிவாலும், அறிவுப் பிரச்சாரத்தாலும் மத நம்பிக்கைகளை வேரோடு சாய்த்துவிட முடியுமென்றும் பகுத்தறிவுவாதிகள் நம்புகிறார்கள் ஒரு மார்க்ஸியவாதியான நான் பொருள் முதல்வாதியாக இருப்பதால் திட்டவட்டமாக எல்லாவித மத நம்பிக்கைகளுக்கும் பரம வைரி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எனது பொருள் முதல் வாதம் பகுத்தறிவுக்காரர்களுடைய பொருள் முதல்வாதத்தை விட எத்தனையோ மடங்கு சிறந்ததாகும்

மத நம்பிக்கைகளுக்கு யதார்த்தமான, லௌகீகமான காரணங்கள் உண்டு என்று நான் கருதுகிறேன். அந்தக் காரணங்கள் நிலைத்து நிற்கும் வரையில் மத நம்பிக்கை நிலைத்து நிற்கும். வெறும் தத்துவார்த்தப் பிரச்சாரத்தால் மட்டும் மத நம்பிக்கையை ஒழித்துவிட முடியாது மத நம்பிக்கைகள் இல்லாதொழிய வேண்டுமானால் அவற்றிற்கு அடிப்படையாக நிலைத்து நிற்கும் பௌதீகச் சூழ்நிலைகள் மாற வேண்டும். மதத்தின் ‘சமுதாய வேர்களை ஆணி வேர், பக்க வேர், சல்லி வேரோடு’ கிள்ளி யெறிகிற நோக்கோடு நடைபெறும் போராட்டத்தை உருவாக்கி நடத்தாமல், மத நம்பிக்கைகளோடு போர் தொடுக்கச் செல்லுகிறவர்கள் உண்மையில் மத நம்பிக்கைகளைப் புத்துயிரூட்டி உறுதிப்படுத்தவே செய்கிறார்கள். எனவே இன்றைய சமுதாயத்தை மாற்றுவதற்காக நடைபெறும் மகத்தான போராட்டங்களிலிருந்து ஒதுங்கி நின்று கொண்டு பொதுமக்களுடைய கவனத்தை வேறு திசையில் திருப்பிவிட முயற்சிக்கும் பகுத்தறிவு வாதிகளின் பொருள் முதல் வாதம் ஒப்புக்கொள்ளத் தக்கதல்ல. பகுத்தறிவு வாதிகளின் பொருள் முதல் வாதம் பூர்ஷுவா பொருள் முதல் வாதமாகும். அது அராஜகச் சொற் சிலம்பு வீசி, வர்க்கப் போராட்டத்தை மறைத்து மறைமுகமாக முதலாளித்துவத்தையே ஆதரிக்கும். நேர் மாறாக எனது பொருள் முதல்வாதம் இயக்குவியல் பொருள் முதல்வாதம் (Dialectical Materialism) ஆகும். அதாவது மார்க்ஸியப் பொருள் முதல்வாதமாகும்.

இந்தப் புதிய பொருள் முதல் வாதத்தின் துணை கொண்டுதான் நான் இயற்கையையும், பிரபஞ்சத்தையும், சமுதாயத்தையும், பொருளாதார அமைப்புகளையும், அரசியல் ஸ்தாபனங்களையும், பொருளாதாரத் தேவைகளையும், மதத்தையும், தத்துவ ஞானத்தையும், சன்மார்க்கத்தையும், கலையையும், இலக்கியத்தையும், பண்பாட்டையும் இவை யாவற்றையும் அலசிப் பார்க்கிறேன். எல்லாவற்றையும் விஞ்ஞான ரீதியாகப் படிக்கவும் பரிசீலனை செய்து பார்க்கவும் இந்தப் பொருள் முதல்வாதம் எனக்குப் பெருந் துணை செய்கிறது. இந்தப்பொருள் முதல் வாதம் விஞ்ஞான ரீதியானது. னென்றால் இது உண்மையானது. சோவியத் யூனியன், சீனா, புதிய ஜனநாயக நாடுகள் ஆகிய உலகத்தின் மூன்றிலொரு பகுதி நிலப் பரப்பில் நடைமுறையில் தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது. பொருளாதார வாய்ப்பையும் பொருளாதாரத் தேவைகளையும் மாற்றுவதற்கு இந்தப் பொருள் முதல் வாதம்தான் எனக்குப் புத்தாற்றலும் புது ஊக்கமும் அளிக்கிறது. இந்தப் பொருள் முதல்வாதத்தின் வெளிச்சத்தில் தான் நான் மத நம்பிக்கைகளைக் கூட அலசிப் பார்க்கிறேன்.

ஆதிகால மனிதனாகிய காட்டாளன் இயற்கைச் சக்திகளின் முன்னால் கையாலாகாதவனாகவும், ஆதரவற்றவனாகவும் விளங்கினான். இந்தப் பலவீனமும் நிராதரவும்தான் மத நம்பிக்கைக்கு அடிப்படைகள். அறியாமையும் பயமும் மத நம்பிக்கையின் பெற்றோர்கள் என்பது இந்த உண்மையை வேறு விதமாகக் கூறுவதே. பூஜை புனஸ்காரங்களாலும், வணக்க வழிபாடுகளாலும், மந்திர தந்திரங்களாலும், நேர்ச்சை படைப்புகளாலும் இயற்கைச் சக்திகளை அடக்கி ஆளலாமென்று பண்டைய மனிதன் நம்பினான். ஆனால் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியோடு மனிதனுடைய அறிவும் வளர்ந்தது. விஞ்ஞானம் மெல்ல மெல்லக் குருட்டு நம்பிக்கைகளை அறை கூவத் தொடங்கிற்று.

சமுதாயம் வர்க்கங்களாகப் பிரிவுப்பட்ட பின்னர் வர்க்கப் போராட்டங்கள் முறுக்கேறத் துவங்கிய பொழுது அடக்கு முறையின் வேகம் அதிகரித்த காலையில் மத நம்பிக்கைகளுக்குப் புதியதோர் தேவை ஏற்பட்டது. ஆளும் வர்க்கத்தினிடம் உதையும் மிதியும் பட்டு நரக வாதனைப்படும் அடிமைப்பட்ட வர்க்கத்தாரின் நிராதரவு உணர்ச்சிக்கு ஒரு ஊன்றுகோல் தேவைப்பட்டது. வாழ்வு துன்பக் கேணி, துக்கமயம், மரணத்திற்குப் பின்னராவது இந்தத் துயரங்கள் தீரு மென்றால், இந்தப் பிறவிக்கு அப்பாலாவது நிறை இன்ப வாழ்வு கைகூடுமென்றால் எவ்வளவு நன்றாய் இருக்கு மென்று பட்டது.

மார்க்ஸ் குறிப்பிட்டார்; “மதம் துன்பப்படுகிறவர்களுக்குப் பெருமூச்சாகும்; இதயமற்ற உலகத்திற்கு இதயமாகும்; உயிரில்லாத பௌதீகச் சூழ்நிலையின் உயிராகும்! மக்களுடைய அபினி அது.”

பொது மக்களுக்கு ஏற்பட்ட மேற்படி நிராதரவுக்குத் தித்திப்பு ஊட்டவே மத நம்பிக்கைகள் உபயோகிக்கப் பட்டன. ஆளும் வர்க்கத்தின் கையில் மதம், பொது மக்களைச் சுரண்டுவதற்கும் ஆத்மீக ரீதியாக அடிமைப் படுத்துவதற்கும் ஓராயுதமாய் விளங்குகிறது.

பெருவாரியான மக்களைச் சுரண்டியும், சூறையாடியும் சுக போகங்களில் கிடந்து இன்பக் கூத்தாடுகின்ற ஆளும் வர்க்கத்தார் ஏழைகளுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். “போன நாட்களில் செய்த பாவத்தின் பலனாக இன்று நீங்கள் துக்கம் அனுபவிக்கிறீர்கள். ஆகவே பாவம் செய்யா தீர்கள்! அப்படி யென்றால் எங்களுக்கு இணங்கி நடவுங்கள். உங்களுடைய இரத்தத்தைக் குடிக்க எங்களை அனுமதி யுங்கள்!”

பொருளாதார அடிமைத்தனத்திலும், கஷ்ட நிஷ்டூரங்களிலும் சிக்கித் திக்குமுக்காடுகிற அடிமைப்பட்ட வர்க்கத்தை நோக்கி பைபிளையும், குர்ஆனையும், பகவத் கீதையையும், தேவார திருவாசக திவ்யப்பிரபந்தங்களையும் கையில் பிடித்துக் கொண்டு பிற்போக்குப் புரோகிதர்கள் மத குருமார்கள் இதோபதேசம் செய்கிறார்கள் !

ஆளும் வர்க்கத்தை எதிர்த்துக் கலகம் செய்வது பாவமாகும். “எல்லாம் ஈசன் செயல்” என்று சகித்துக் கொள்ளுங்கள். பொறுத்தவர் பூமி ஆள்வார். மரணத்திற்குப் பின் உங்களுக்குச் சொர்க்கம் நிச்சயம்.’

மக்களுடைய இயக்கங்கள் முறுக்கேறும்பொழுது தொழிலாளிகளும் விவசாயிகளும் ஸ்தாபன ரீதியாகத் திரண்டு முன்னேறும்பொழுது ஆளும் வர்க்கத்தின் பொருளாதார நிலைமை உடைந்து நொறுங்கத் தொடங்கும் பொழுது மத நம்பிக்கைகளுக்கு முன்னர் எப்போதுமில்லாத முக்கியத்துவம் ஏற்படுகிறது. பேயைக் குழப்பம் பிடிக்கும் பொழுது அது தெய்வத்தைக் கட்டிப் பிடித்துக்கொள் கிறது.

இந்து-முஸ்லிம்-கிறித்துவப் பிற்போக்காளர்களும் மற்ற எல்லாப் பிற்போக்காளர்களும் பிரத்தியட்ச வாழ்விலுள்ள தங்களுடைய சொத்துரிமைகளைக் காட்டிக் காக்கும் பொருட்டு தங்களுடைய குத்தகைகளும், லாபங்களும் பாங்கிக் கணக்குகளும் பறி போகாதிருக்கும் பொருட்டு மத நம்பிக்கைகளை உயர்த்திப் பிடிக்கிறார்கள். தங்களுடைய சுரண்டல் நிலைமையை மத நம்பிக்கை என்ற பட்டாடைகளால் புனைந்து நிலை நிறுத்த அவர்கள் முயற்சி செய்கிறார்கள். முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றின் லௌகீக உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு யுத்தத்திற்கும் பாசிஸத்திற்கும் ஆதரவளிக்கும் பொருட்டு கூட்டுக் கொலைகளையும், இரத்த ஆறுகளையும் நியாயப்படுத்தும் பொருட்டு சுருக்கத்தில் மனிதத் தன்மையைத் தேய்க்கும் பொருட்டு அவர்கள் கடவுளின் உதவியை-அருளை நாடுகிறார்கள்.

பஜகோவிந்தப் பிரச்சாரகர்களே! பிற்போக்காளர்களே! உங்களுக்குக் கடவுளின் கருணைப் பிரவாகம் அவசியமே. காரணம் சொந்த பலத்தைக் கொண்டு உங்களால் அடிமைத்தனத்தையும் சுரண்டல் கொள்ளையையும் நிலை நிறுத்த முடியாத வண்ணம் நீங்கள் அவ்வளவு கையா லாகாத கபோதிகளாகி விட்டீர்கள்.

ஆனால் இன்றோ பொதுமக்கள் ஆதரவற்ற அனாதைகள் அல்ல. உங்களுடைய மிலேச்சத்தனமான அடக்கல் ஒடுக்கல் முறைகளுக்கு எதிராக அவர்கள், ஏறுநடை போட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஊளையிட்டுக் கொள்ளுங்கள்! தொழிலாளிகளும் விவசாயிகளும் இதர நசுக்கப்பட்ட ஜனப்பகுதிகளும் தங்கள் தங்கள் கோரிக்கைகளை அடையும் பொருட்டு நடத்தும் போராட்டங்களைப் பொருள் முதல்வாதமென்று நீங்கள் வசை கூறிக் கூச்சலிட்டுக் கொள்ளுங்கள்! ஆயினும் மக்களின் நரம்புகளில் அபின் குத்தியிறக்கி அவர்களை ஆதரவற்றவர்களாக்க உங்களிடமுள்ள திவ்யமான ஆயுதம் வர வரக் கூர்மை மழுங்கி வருவது உங்கள் கண்களில் படவில்லையா!

எனக்கு உங்களுடைய அபின் தேவையில்லை. காரணம் அடக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கத்தாருடைய துன்பங்களையும் துயரங்களையும் நிலைநிறுத்த அல்ல-ஆனால் ஆளும் வர்க்கத்தாரின் மீத மிச்சம்கூட இல்லாத ஒரு புதிய சமுதாய அமைப்பைப் படைக்கவே நான் விரும்புகிறேன்

அழகும் நிறைவும் கொண்ட ஒரு வாழ்வை- சுவர்க்கத்திலன்று, இந்த மாநிலத்திலேயே நிர்மாணிப்பதற்காகவே நான் பணி புரிகிறேன். எல்லாவிதமான அடக்கல் -ஒடுக்கல் அடிமைத் தனங்களையும், சுரண்டல் சூறையாட்டங்களையும் இந்தப் பூமண்டலத்திலிருந்து துடைத்து எறிந்துவிட்டு மனிதனுடைய சிறந்த இன்பத்திற்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத பெளதீகச் சூழ்நிலைகளையும் சாதனங்களையும் படைக்கவே நான் போராடுகிறேன். மனிதத் தன்மையின் மாண்புகளைக் காலடியில் தள்ளி மிதித்துத் துவைக்கும் எல்லாப் பிற்போக்குத் தீமைகளுக்கும் எதிரிடையான இந்த அறப் போரில் எனது பொருள் முதல் வாதமும் எனது நாத்திக வாதமும் எனக்கு மாபெரும் சக்தியையும் உணர்ச்சிப் பெருக்கையும் ஊட்டுகின்றன.

நான் ஒரு நாத்திகன். காரணம், நான் மனிதனை நேசிக்கிறேன்.

1-5-53

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *