மதமும் மனித வாழ்வும்
ப. ஜீவானந்தம்

மதமும் மனித வாழ்வும்

இன்றைய வாழ்வில் சிலர் பலரைச் சூறையாடுகிறார்கள். ஜனத்தொகையில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களான ஏகாதிபத்தியக் குபேரர்களும் நிலப்பிரபுக்களும் ஏகபோகப் பணாதிபதிகளும் தொழிலாளி-விவசாயிப் பெருமக்களைக் கசக்கிப் பிழிந்து சாறெடுக்கிறார்கள். பொது மக்கள் உலகம் “லட்சுமி புத்திரர்”களின் காலடியில் லாப உற்பத்தி செய்யும் அடிமை உலகமாக மாறித் தவிக்கிறது

பொருளாதார அடிமைத்தனம் அரசியல் அடிமைத் தனத்தையும் சமுதாய அவமதிப்பையும், கோடானுகோடி மக்களின் ஆத்மீக தார்மீக வாழ்வின் கொச்சைப் பாட்டையும் இருட்டடிப்பையும் பல்வேறு உருவங்களில் தவிர்க்க முடியாதபடி பெற்றெடுத்துப் பாலூட்டி வளர்க்கிறது.

பொருளாதார விடுதலைப் போராட்டத்திற்குத் தேவையான அரசியல் உரிமை கொஞ்சநஞ்சம் தொழிலாளி விவசாயி மக்களுக்குக் கிடைக்கக் கூடும். ஆனால் இன்றைய ஏகாதிபத்தியப் பிடிப்பையும், நிலப்பிரபுத்துவ அமைப் பையும் ஏகபோக மூலதனத்தின் ஆதீனத்தையும் தூக்கி யெறிந்தாலன்றி, வறுமை, வேலையின்மை, அடிமை ஆகிய சாபத்தீடுகளுக்குக் கழுவாய் காண முடியாது.

மதம் ஆத்மீக அடிமைத்தனத்தின் பல உருவங்களில் ஓர் உருவம். இது ஒய்வொழிவற்ற உழைப்பாலும், இல்லாமை என்கின்ற பொல்லாமையாலும், நிராதர வாலும் நசுக்குண்டு அலறும் பொது மக்களை எங்கும் எல்லா விடத்தும் கொடுமையாக அழுத்துகிறது.

இம்மையில் சுரண்டல் கொள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராட முடியாத கையாலாகாத்தனம் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு மறுமை நல்வாழ்வில் நம்பிக்கையை ஊட்டுகிறது.

இயற்கையை எதிர்த்துப் போராட முடியாத கையாலாகாத்தனம் காட்டுமிராண்டிகளுக்குக் கடவுள்கள், பேய் பூதங்கள், அற்புதங்கள் ஆகியவைகளில் நம்பிக்கையை ஊட்டியது போல.

இம்மையில் அடக்க ஒடுக்கமாகவும், பொறுமையாகவும் வாழ்ந்தால் மறுமையில் உங்களுக்குச் சொர்க்க போகம் கிடைப்பது உறுதி என்று பாடுபட்டும் பலனடையாத பாட்டாளி மக்களுக்கு, மதம் இதோபதேசம் செய்து அவர்களுடையபோர்க் குணத்தையும், வாழ்வுணர்ச்சியையும் மழுங்கடிக்கிறது. இம்மையில் தான தர்மங்களைச் செய்தால் மறுமையில் உங்களுக்குச் சொர்க்க போகம் கிடைப்பது உறுதி என்று கொள்ளைக்காரக் குபேரர்களுக்கு மதப் போதனை செய்து அவர்களுடைய சுரண்டல் கொள்ளை வாழ்வை நியாயப்படுத்துகிறது.

நமது கருத்து

மதம் மக்களை மயக்கும் அபின். மதம் ஒரு தினுசான ஆத்மீகத் தெகடுதத்தம். இந்தத் தெகடுதத்தத்தில் மூலதனத்தின் அடிமைகள், நிலபலத்தின் எடுபிடிகள் அதாவது பாமரப் பொது மக்கள், மனிதனுடைய பிரதிமையை அதாவது மனித அந்தஸ்தோடு வாழ வேண்டு மென்ற வாழ்வுக் கோரிக்கையை மூழ்கடித்து விடுகிறார்கள்.

“சோஷலிஸமும் மதமும்” என்ற கட்டுரையில் லெனின் கூறிய கருத்துக்களை மேலே கொடுத்துள்ளேன். இந்த மார்க்சிய – லெனினியக் கருத்து வெளிச்சத்தில் பார்த்தால் இரண்டு உண்மைகள் தெள்ளத் தெளியப் புலனாகும்.

1. பொருளாதார அடிமைத்தனம்தான் அடிப்படை சாபத்தீடு; அதிலிருந்துதான் அரசியல் அடிமைத்தனம், சமுதாய இழிவு, ஆத்மீக தார்மீக அடிமைத்தனம் ஆகியவை பிறக்கின்றன.

2. மதம் ஆத்மீக அடிமைத்தனத்தின் ஓர் உருவம். மதம் பாட்டாளிகளை மயக்கும் ஒரு அபின்; உடையவர் களின் கேடயம்.

இந்தக் கருத்துக்கள் உலகக் கம்யூனிச இயக்கத்தின் கருத்துக்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக் களும் தமிழ்நாடு கம்யூனிஸ்ட்களின் கருத்துக்களும் இவைகளேதான். மதநம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும்தான் அடிப்படையான சாபத்தீடுகள் என்று பிடிசாதனை யாகத் திருப்பித் திருப்பிச் சொல்லப்படும்-எழுதப்படும் “திராவிட அறிவியக்கக் கருத்துக்கள்” மார்க்சிய-லெனினியக் கருத்துக்களுக்கு நேர்மாறானவை.

கம்யூனிஸ்டுகளும் மதமும்

“தன்னுடைய அடிமைத் தனத்தை உணர்வு பூர்வமாகத் தெரிந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொள்ளும் ஒரு அடிமை தன்னுடைய அடிமைத்தனத்தில் பாதியை அழித்து விட்டவனாகிறான்” என்கிறார் லெனின். நவீன பாக்டரி தொழில் முறையில் உருவாகிற வர்க்க உணர்ச்சி பெற்ற தொழிலாளி நகர வாழ்க்கையால் புதிய வெளிச்சம் பெறுகிற பாட்டாளி, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டத்தில் முங்கி மூழ்கி ஜனநாயக உணர்ச்சிக் கூரேறிய விவசாயத் தொழிலாளி – வாரங் குத்தகைதார் மதக் குரோதங்களை வெறுப்புடன் உதறி எறிகிறான்; மோட்சத்தையும், சொர்க்கத்தையும் புரோகிதர்களுக்கும், நிலச்சுவான்தார், முதலாளி, மத வெறியர் களுக்கும் விட்டு விடுகிறான். இம்மையில் இங்கே நல்வாழ்வை நிலை நாட்டும் முயற்சியில் ஈடுபடுகிறான். இன்றைய நவீனப் பாட்டாளி சோஷலிஸ முகாமைத் தழுவுகிறான். கம் யூனிஸ்ட் கட்சி விஞ்ஞானத்தை ஆயுதமாகக் கொண்டு மத போதையை எதிர்த்துப் போராடுகிறது: கம்யூனிஸ்டுக் கட்சி இவ்வுலகத்தில் நல்வாழ்வுக்காக இன்றே போராடும் பொருட்டுத் தொழிலாளிகளை விவசாயப் பெருமக்களை ஒன்று திரட்டுவதன் மூலமாக மறு உலக நம்பிக்கையிலிருந்து அவர்களை விடுவிக்கிறது.

வாழ்க்கைப் போராட்டத்தில், வர்க்கப் போராட் டத்தில் ஒட்ட வைப்பதன் மூலம் பொது மக்களிடமிருந்து மதநம்பிக்கையைக் கழற்ற வேண்டும் என்கிறது லெனின் வழி. கருத்துப் பிரச்சாரத்தின் மூலம் மத ஒழிப்பு நடத்த முடியும் என்கிறது “திராவிட – அறிவியக்க வீரர்” வழி.

இது இவ்வாறாக, திராவிட இயக்கத்தைச் சேர்ந்த சில ‘அற்புத மூளைகள்’ மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகிய உலக மகாமேதைகளின் மதம் பற்றிய சித்தாந்தத்தை உறுதியாகக் கடைப்பிடிப்பவர்கள் ‘திராவிட இயக்க கம்யூனிஸ்டுகளே (பெரியார்-அண்ணா துரை முதலியவர்களே) அன்றி கம்யூனிஸ்டுக் கட்சி கம்யூனிஸ்டுகளல்ல” என்று பட்டப்பகலை இருட்டாக்குகிறார்கள்.

மதம் தனிப்பட்ட விவகாரம்

“மதத்தைத் தனிப்பட்ட விவகாரம் என்று பறைசாற்ற வேண்டும்” என்று கூறுவதன் மூலம் கம்யூனிஸ்டுகள் மதத்தைப் பற்றிய தங்கள் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறார்கள். சர்க்காரைப் பொறுத்தமட்டில் மதம் தனிப்பட் டவர் விவகாரமாக வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் கோருகிறார்கள். கட்சியைப் பொறுத்த மட்டில் அப்படிக் கருதக் கூடாது என்றும் கூறுகிறார்கள்.

சர்க்கார் மதச் சார்புடையதல்ல. சமய ஸ்தாபனங் களுக்கும் சர்க்கார் அதிகாரத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை; ஆத்திகனாகவோ நாத்திகனாகவோ வாழ ஒவ்வொருவனுக்கும் பரிபூரண சுதந்திரம் உண்டு. மத வேற்றுமையை அடிப்படையாகக் கொண்டு மக்களிடம் பாகுபாடு காண்பது அனுமதிக்கப்பட மாட்டாது. சர்க்காரின் தஸ்தாவேஜு களில் மதப் பெயர்களுக்கு இடமிராது. மத ஸ்தாபனங்களுக்குச் சர்க்கார் மான்யம் கிடையாது. இவ்வாறு சர்க்காருக்கும் சர்ச்சுக்கும் (மத ஸ்தாபனங்களுக்கு) இடையில் கல்விச் சாலைகளுக்கும், மதஸ்தாபனங்களுக்கும் இடையில் பரிபூரணப் பிரிவினை ஏற்படுத்தி முழுக்க முழுக்க நிபந்தனையின்றி மதம் தனிப்பட்ட விவகாரம் என்று பறைசாற்ற வேண்டும். இது மதத்திற்கும் சர்க்காருக்கும் இருக்க வேண்டிய உறவைப் பற்றிய லெனின் கருத்து.

கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதம் தனிப்பட்ட விவகாரமல்ல. பாட்டாளி வர்க்க விடுதலைக்காகவும், அதன் மூலம் தேசத்தின் உண்மையான ஜனநாயக விடுதலைக்காகவும், போராடும் வர்க்க உணர்ச்சி காண்டு முன்னேற்றத் தன்மை வாய்ந்த வீரர்களின் கட்சி-கம்யூனிஸ்ட் கட்சி. இத்தகைய கட்சி மத நம்பிக்கைகளின் உருவத்தில் காணப்படுகிற வர்க்க உணர்ச்சிக் குறைவு அறியாமை அல்லது பாமரத்தன்மை ஆகியவற்றைப் பொறுத்தமட்டில் அலட்சியப் பான்மையோடு இருக்க முடியாது; இருக்கக் கூடாது.

மத போதையை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடும் விதத்தில் மத ஸ்தாபனங்களின் பிடிப்பை மாற்ற, கம்யூனிஸ்டுகள் கொள்கைப் போராட்டம் நடத்தியாக வேண்டும். கம்யூனிஸ்டுகளுக்குக் கொள்கைப் போராட்ட மென்பது தனிப்பட்ட விவகாரமல்ல. பூராக் கட்சியின் விவகாரமாகும். “அப்படியானால் எங்களுடைய கட்சித் திட்டத்தில் நாங்கள் நாத்திகர்கள் என்று ஏன் பிரகடனம் செய்யவில்லை? எங்கள் கட்சியில் சேர்வதிலிருந்து இந்துக் களையோ, கிறித்தவர்களையோ, முஸ்லிம்களையோ இதர கடவுள் நம்பிக்கையுடையவர்களையோ ஏன் தடுக்கவில்லை?

அணுகுவது எப்படி?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலேயே மதப் பிரச்சினையை அணுகும் முறையில் கம்யூனிஸ்டுகளுக்கும்,

திராவிட இயக்கத்தாருக்கும் உள்ள மிக முக்கியமான வேற்றுமை விளக்கமாகும்.

எங்கள் திட்டம் முழுக்க முழுக்க விஞ்ஞானக் கண்ணோட்டத்தை அதாவது உலகாயதவாத உலகக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆகவே எங்களுடைய திட்ட விளக்கம் மத மயக்கத்தின் உண்மையான சரித்திர வேர்கள் பொருளாதார வேர்கள் எவை என்பதைப் பற்றிய விளக்கத்தையும் உட்கொண்டதாகும்.

கம்யூனிஸ்டுப் பிரச்சாரத்தில் நாத்திகப் பிரச்சாரம் விஞ்ஞான இலக்கிய வெளியீடு இவை அவசியம் அடங்கி இருக்க வேண்டும் என்கிறார் லெனின். பிரெஞ்சு நாட்டில் 18-வது நூற்றாண்டில் வாழ்ந்த பகுத்தறிவுவாதிகளின் இலக்கியங்களை ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்து ஜெர்மன் மக்களிடம் பரப்ப வேண்டுமென்று ஜெர்மன் கம்யூனிஸ்டுகளுக்கு ஏங்கெல்ஸ் அறிவுரை வழங்கியதையும் லெனின் எடுத்துக் காட்டுகிறார்.

இந்தக் கருத்தைத் திராவிட இயக்கப் பகுத்தறிவு வாதிகள் தங்களுக்கு ஆதரவான கருத்தாகக் கொள்ளக் கூடும். ஆனால் அடுத்தாற்போல் லெனின் கூறும் கருத்துக்களைக் கவனியுங்கள்.

“எந்தச் சந்தர்ப்பத்திலும் மத எதிர்ப்பைத் தத்துவ ரீதியாக லட்சிய ரீதியாக வர்க்கப் போராட்டத்திற்கு வெளியில் நடைபெறும், பகுத்தறிவுப் போராட்டமாகக் கையாளும் தவறைச் செய்யக் கூடாது. தீவிர ஜனநாயக வாதிகள் இந்தத் தவறைத்தான் அடுத்தடுத்துச் செய்தார்கள். பாட்டாளி மக்களை எல்லையில்லாத அடக்கல் ஒடுக்கல் கொடுமைக்கும் இழிவுக்கும் இரையாக்கும் ஒரு சமுதாயத்தில் வெறும் கருத்துப் பிரச்சாரத்தால் மட்டும் மதக் குரோதங்களை ஒழித்துவிட முடியும் என்று கருதுவது வடிகட்டின அசம்பாவிதமாகும்.

சமுதாயத்தில் காணப்படும் பொருளாதார அடிமைத்தனத்தின் பலனும் எதிரொலியும்தான் மனித வர்க்கத்தை ஆழ அழுத்திக் கொண்டிருக்கும் மத அடிமைத்தனம் என்பதை மறந்து விடுவது முதலாளித்துவக் குறுகிய மனப்பான்மையின் குணம்-முதலாளித்துவத்தின் இருண்ட சக்திகளை எதிர்த்துப் போராடும் போராட்டத்தில் அறிவு வெளிச்சம் பெறாத பாட்டாளி வர்க்கத்தை எத்தகைய நூற்களாலும், கருத்துப் பிரச்சாரத்தாலும் அறிவு வெளிச்சம் பெறச் செய்ய முடியாது. பூத உலக சொர்க்கத்திற்காகப் பாட்டாளி வர்க்கம் தொடுக்கும் இந்தப் புரட்சிப் போராட்ட ஒற்றுமை மேலுலக சொர்க்கத்தைப் பற்றிப் பாட்டாளி வர்க்கத்திடம் உண்டுபண்ணும் கருத்தொற்றுமையை விட நமக்கு மிகமிக முக்கியமானது.

இதனால்தான் நமது நாத்திகத்தை நமது திட்டத்தில் பொறிக்கவில்லை. இதனால் தான் மத நம்பிக்கையுள்ள பாட்டாளிகள் நமது கட்சியில் சேர்வதைத் தடுக்கவில்லை.”

“நாம் எப்பொழுதும் விஞ்ஞானக் கண்ணோட்டத் தையே கடைப்பிடிக்க வேண்டும். சில பல கிறித்தவர்களின் முன்னுக்குப் பின் முரணான போக்கை நாம் எதிர்த்துப் போராட வேண்டியது அவசியம். ஆனால் இவ்வாறு போராடுவது மத எதிர்ப்புக்கு முதலிடம் கொடுக்க வேண்மென்று ஒரு நாளும் அர்த்தமாகாது. பொருளாதார வளர்ச்சிப் போக்கில் குப்பை கூளங்களாகிப் போன அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றுவிட்ட மூன்றாந்தரக்கருத்துக்கள் அல்லது அர்த்தமற்ற கருத்துக்கள் உண்மையான புரட்சிகரமான பொருளாதார அரசியல் போராட்டத்தைப் பிளவு உண்டு பண்ண அனுமதிக்கக் கூடாது.”

லெனின் கண்டிக்கிறார்

லெனினுடைய கருத்துப்படி தி.க., தி.மு.க. வினர் வர்க்கப் போராட்டத்திற்கு வெளியில் ‘பகுத்தறிவு’ப் போராட்டத்தை நடத்துகிறார்கள். எனவே அவர்களுடைய பாதை தவறான பாதை. லெனின் கூறும் தீவிர ‘ஜனநாயக வாதிகள்’ தான் தமிழகத்தில் திராவிட இயக்கத்தினர்.

“வெறும் கருத்துப் பிரச்சாரத்தால் மட்டும் மதநம்பிக்கைகளை ஒழித்துவிட முடியும் என்று கருதுவது வடிகட்டின அசம்பாவிதம்’” என்ற லெனின் மொழியைப் பகுத்தறிவுச் சாணையில் வைத்துத் தீட்டிப் பாருங்கள் என்று திராவிட இயக்கத்தை அழைக்கின்றேன்.

மத எதிர்ப்பைப் பொறுத்தமட்டில் “முதலாளித்துவக் குறுகிய மனப்பான்மையின் குணம்” என்று லெனின் குறிப்பிடுகிறாரே அந்த “அரிய குணம்” திராவிட இயக்கத் தலைவர்களை அட்டை போல் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

தி. ., தி. மு. . போக்கு

இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி, லெனின் பாதையில் சென்று வர்க்கப் போராட்டத்தின் மூலம் பாட்டாளி மக்கள் அறிவு வெளிச்சம் பெற்று வருகிறார்கள். வர்க்கப் போராட்டத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கக் கொள்கையை நையாண்டி பண்ணிக் கருத்துப் பிரச்சாரத்தின் மூலம் உலகை ஒளிமயமாக்க ‘திராவிடப் பாணி’யில் கலை வளர்க்கிறார்கள் ‘திராவிட அறிவியக்கத்தார்!

சொர்க்கத்திற்காகப் புரட்சிப் போராட்ட ஒற்றுமையை உயர்த்துகிறார் லெனின், அவர் வழியைக் கடைப்பிடிக்கிறார்கள் கம்யூனிஸ்டுக் கட்சியினர். மேலுலக சொர்க்க எதிர்ப்பில், ‘கருத்தொற்றுமை’யைத் திரட்ட தங்கள் தனித் திறமைகளையெல்லாம் நூற்று வீதம் காட்டுகின்றனர், ‘அறிவியக்க மூளை!’

ஆரியன் – திராவிடன்’, ‘வடவன் – தென்னவன் “பிள்ளையார் உடைப்பு’, ‘இராமர் உடைப்பு’ இன்னபிற திராவிட இயக்கக் கருத்துக்கள் லெனின் கூறுவது போல். “உண்மையான, புரட்சிகரமான பொருளாதார, அரசியல் போராட்டத்தைப் பிளவுண்டு பண்ணும் “மூன்றாந்தரச் கருத்துக்கள்” அல்லவா என்பதைத் திராவிட இயக்க அணிகளும் தமிழ் மக்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“மதப் போராட்டத்தில் பொதுமக்கள் கவனத்தைத் திருப்பிவிட்டு உண்மையான முதல் தரமான அடிப்படையான பொருளாதார அரசியல் போராட்டத்திலிருந்து பொது மக்கள் கவனத்தை மாற்றச் சூது செய்வது” பிற்போக்கு முதலாளி- நிலப் பிரபுக்களின் வேலை என்கிறார் லெனின். பெரியார் பிள்ளையார் பொம்மையை உடைக்கிறார். “பிள்ளையார் பொம்மையை உடைக்க அழைக்கிறார் ஒரு தி மு.க. கலைஞர்.” இராமன்-சீதை விவகாரம் ராஜாஜி ஈ.வே.ரா. முகாம்களாகப் பிரிந்து மோதுகிறது. ‘ஒன்றே குலம்’ என்று கூறிக்கொண்டு ‘திராவிட நாட்டில்’ வர்க்கப் போராட்டத்தை மூழ்கடித்து மறைக்கப் பார்ப்பதும் ‘ஒருவனே தேவன்’ என்ற முழக்கொலியோடு, “மத எதிர்ப்புப் பகுத்தறிவுப் பிரச்சாரம்” முழங்குவதும் நன்கு நடைபெறுகிறது! இந்த வேலைகள், பொதுமக்களைப் பயங்கரச் சுரண்டலில் ஆழ்த்தும் பிற்போக்குச் சக்திகளின் சதித்திட்டத்திற்குத் துணை போகுமா போகாதா என்பதை லெனின் வெளிச்சத்தில் சிந்தித்தல் தமிழ் மக்கள் கடமை.

கம்யூனிஸ்டுகள் கடமை

மதத்தின் பேராலும், மத எதிர்ப்பின் பேராலும் இரண்டாந்தர மூன்றாந்தர வேற்றுமைகளுக்குத் தூபமிடும் போக்குகளை எதிர்த்துப் பாட்டாளி மக்கள் ஒற்றுமைக்காகவும் விஞ்ஞான உலகக் கண்ணோட்டத்திற்காகவும் அமைதியாகவும் முன்பின் முரணின்றியும், சகிப்புத் தன்மையோடும் கம்யூனிஸ்டுகள் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கிறார் லெனின்.

கம்யூனிஸ்டுக் கட்சி, சர்க்காரைப் பொறுத்த மட்டில் மதத்தை உண்மையான தனிப்பட்ட விவகாரமாகச் செய்ய இடையறாது பாடுபட வேண்டும். இத்தகைய அரசியல் அமைப்பின் மூலம் மத்திய கால ஏற்பாடுகளை முற்றும் துடைத்துச் சுத்தம் செய்து மனித வர்க்கத்தின் மத மௌட்டிகத்திற்கு உண்மைக் காரணமான பொருளாதார அடிமைத்தனத்தை வேரோடு கெல்லி எறிய விரிவான வெளிப்படையான போராட்டத்தை நடத்த வேண்டும் என்கிறார் லெனின்.

நவம்பர் புரட்சி லெனின் வழியில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. சோவியத் யூனியனில் மத சுதந்திரத்திற்குப் பரிபூரணப் பாதுகாப்பு இருக்கிறது. ஆயிரக்கணக்கான மாதா கோவில்களும், மசூதிகளும் அங்கே இருக்கின்றன. அவற்றில் தொழுகை நன்கு நடைபெறுகிறது. அதே பொழுதில் விஞ்ஞான உலகக் கண்ணோட்டத்துடன் வாழ்க்கை நடத்தும் கோடானு கோடி மக்களும் அந்த நாட்டில்தான் பூலோக சொர்க்கத்தை நிர்மாணிக்கிறார்கள். கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், குடியரசுச் சீனமும் லெனின் வழியைப் பின்பற்றி மேன்மேலும் மதத்தின் தேவையைத் தாண்டி வளர்ந்து புதிய வாழ்வை உருவாக்கிக் கொண் டிருக்கின்றன.

உலகப் பொது விதி தமிழனுக்கும்தான்.

7-11-54

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *