மதமும் மனித வாழ்வும்
ப. ஜீவானந்தம்

மூவகைக் கருத்துக்கள்

இந்தக் கட்டுரையில் ஆதியோடந்தம் லெனின் மதத்தைப் பற்றிய கருத்துக்களையே எடுத்துக் காட்டுகிறோம். காரணங்கள் மூன்று.

1. இன்றைய உலகக் கம்யூனிஸ்ட்டு இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர் லெனின். லெனினுடைய கருத்துக்களை விரிவாகக் கொடுப்பதன் மூலம், கம்யூனிஸ்டுகளின் (அவர்கள் எந்த நாட்டவராயினும் சரி) மதத்தைப் பற்றிய அதிகார பூர்வமான அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.

2. தமிழகக் கம்யூனிஸ்டுகள் எந்த அளவு லெனின் வழியில் இத் துறையில் சென்றிருக்கிறார்கள் செல்கிறார்கள் என்பதை நிர்ணயிக்க உதவும்.

3. திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையினர் தங்கள் கருத்துக்களை மார்க்சியக் கருத்துக்களாக ஜோடித்து ஜிகினா வேலை செய்து காட்டும் பன்முயற்சியின் புரட்டும் மார்க்சிய இலக்கிய ஞான சூன்யமும் அம்பலத்திற்கு வரும்.

4. இத்தொடர் கட்டுரையில் இவ்வாரமும் அடுத்த வாரமும் மார்க்சிய மூலவர்களின் மதம் பற்றிய கொள்கையைக் குறிப்பிட்ட அளவு அலசிப் பார்ப்போம். அப்பால் இந்தக் கொள்கை, சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், குடியரசு சீனத்திலும் எவ்வாறு நடைமுறையில் வந்திருக்கிறது? அந்த நடைமுறையின் புதிய அனுபவங்களும், படிப்பினைகளும் என்ன என்பதை ஆராய்வோம். அதற்கும் அப்பால் கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்டுகள் இத்துறையில் என்ன திராவிட இயக்கத்தார் என்ன சொன்னார்கள்- என்ன செய்தார்கள் என்பதைப் பரிசீலனை செய்வோம். இத்தகைய ஆராய்ச்சிக்கு லெனினுடைய கருத்துக்கள் அடிப்படை அளவுகோலாக விளங்கும்.

இனி லெனினுடைய கருத்துக்களைக் கவனிப்போம். அதற்கு முன் வாசகர்களுக்கு ஒரு விஷயம்! பொருள்முதல் வாதம், லோகாயதவாதம். பௌதீகவாதம், பிரகிருதிவாதம் ஆகிய சொற்கள் ஆங்கிலத்தில் (Materialism) என்ற சொல்லின் பொருளைக் குறிக்கும். இயங்கு இயல், இயக்குவியல், தர்க்கவியல் என்ற சொற்கள் ஆங்கிலத்தில் (Dialectics) என் ற சொல்லின் பொருளையே குறிக்கும்.

மார்க்சியம்உயர்ந்தரகப் பொருள்முதல்வாதம்

லெனின் சொல்கிறார் கேளுங்கள்!

“மார்க்சியம் பொருள்முதல் வாதமே 18-வது நூற்றாண்டில் பிரெஞ்சு நாட்டில் அறிவுக் களஞ்சியம் கண்ட பகுத்தறிவு வாதிகளின் (Encyclopaedists) பொருள் முதல் வாதமும் 19வது நூற்றாண்டின் முற்பகுதியில் ஜெர்மனியில் பூர்பாக்கின் பொருள் முதல் வாதமும் எந்த அளவு மதத் திற்கு இணங்காத- வணங்காத எதிரிகளாக விளங்கினவோ அந்த அளவு உறுதியான உக்கிரமான எதிரிதான் மார்க்சியமும், இது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.

“நாம் மதத்தை எதிர்த்துத் தீர வேண்டும். இது பொருள் முதல் வாதத்தின் அரிச்சுவடி. எனவே மார்க்சி யத்தின் அனா ஆவன்னாவும் இதுதான். ஆனால் மார்க்சியம் அரிச்சுவடியில் நின்று விடுகிற பொருள் முதல் வாதமல்ல. மார்க்சியம் இந்த அரிச்சுவடிக்கு அப்பாலும் செல்கிறது. அது கூறுகிறது: மதத்தை எப்படி எதிர்க்க வேண்டும் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து தீர வேண்டும். அதன் பொருட்டு பொதுமக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிற மதம், மத நம்பிக்கை ஆகியவற்றின் மூல ஊற்றைப் பற்றி பொருள் முதல் வாதக் கண்ணோட்டத்தோடு, நாம் தெளிவான விளக்கம் பெற வேண்டும்.”

லெனின் வழி

“மத எதிர்ப்புப் போராட்டம் வெறும் தத்துவார்த்தப் பிரச்சாரம் என்ற எல்லைக்குள் அடங்கிவிடக்கூடாது, அல்லது அந்த அளவுக்குச் சுருங்கிவிடக் கூடாது. மத எதிர்ப்புப் போராட்டம் வர்க்கப் போராட்டத்தின் உருப்படியான வேலைகளோடு இணைக்கப்பட வேண்டும், மத எதிர்ப்புப் போராட்டத்தின் லட்சியம், மதத்தின் சமூக வேர்களை, ஆணிவேர், பக்கவேர், சல்லி வேரோடு அகழ்ந்தெறிவதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு லெனின் மத-எதிர்ப்புப் போராட்டத்தின் எல்லை வட்டத்தைத் தெக்கத் தெளிவாக நிர்ணயித்துத் தருகிறார். இதிலிருந்து மதத்தை எப்படி எதிர்க்க வேண்டும் என்பதிலேயே மார்க்சியம் முக்கிய கவனம் செலுத்துகிறது என்பது குருடனுக்குக் கூட வெளிச்சமாகும். இதிலிருந்து மத-எதிர்ப்பு, வர்க்கப் போராட்டத்திற்கு உள்ளடங்கி நடைபெற வேண்டும் என்பதும் மத எதிர்ப்பின் லட்சியம் மதத்தின் சமூக வேர்களை அகழ்ந்தெறிவதா யிருக்க வேண்டும் என்பதும்தான் லெனின் வழி என்று பளிங்கென விளங்கும்.

தி.மு.. தலைவர்களின் கருத்தோட்டங்கள்

தி.மு.க. தலைவர்களிடையில் மூன்று விதக் கருத்தோட்டங்கள் தென்படுகின்றன.

1. “அறிவுப் புரட்சி”க்குத் (மத எதிர்ப்பு)தான் ‘மார்க்சிய சித்தாந்தம்’ முதல் வரிசை அளிக்கிறது என்பது.

2. மார்க்ஸ் கண்ணோட்டமோ, லெனின் கண் ணோட்டமோ அதைப்பற்றிக் கவலையில்லை. மத எதிர்ப்பு தான் முதல் வேலை என்பது.

3. மார்க்ஸ்-ஏங்கெல்சுக்கு முன்னால் வால்டேர், ரூஸோ ஆற்றிய பணி, லெனின், ஸ்டாலினுக்கு முன்னால் டாஸ் டோயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் ஆற்றிய பணி, மாசே துங்குக்கு முன்னால் சன்யாட்சன் ஆற்றிய பணி – அதுதான். மத எதிர்ப்பு -அறிவு இயக்கப் பணி-அதுதான் எங்கள் முதற் பெரும் பணி என்பது. இன்னும் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி இந்த மூன்று கருத்தோட்டங்களையும் முடிச்சுப் போட்டுக் காட்டும் பெருந்தகைமையும் மேற்படித் தலைவர்களிடமுண்டு. இங்கு மார்க்சியத்திற்கு உரிமை கொண்டாடும் முதல் கருத்தோட்டத்தை, லெனின் காட்டும் வெளிச்சத்தில் பாருங்கள். இந்த ‘அறிஞர்கள்’ எத்துணை துணிந்த மார்க்சியப் புரட்டர்கள் என்பது புலனாகும்.

அவர்கள் என்ன சொல்கிறார்கள்

மதம் தனது பிடிப்பைப் பொதுமக்களிடம் எதற்காக நிலைநிறுத்திக் கொள்கிறது? நகரத்துப் பாட்டாளி மக்களில் பின்தங்கிக் கிடப்பவர்களிடமும், நாட்டுப்புறத்தில் அரை குறைப் பாட்டாளிகளிடமும், விவசாய மக்களிடமும் மதம் தனது சொந்த சக்தியை ஏன் காப்பாற்றிக் சொள்கிறது? இந்த வினாவுக்கு முதலாளித்துவ முற்போக்காளர்களும் தீவிரப் பொருள் முதல்வாதிகளும் ‘மக்கள் அறியாமை’ தான் காரணம் என்று உடனடியாக விடையிறுக்கிறார்கள். அவர்கள் அதோடு நிற்பதில்லை “ஆத்திகம் (மதம்) ஒழிக!” “நாத்திகம் வாழ்க!” என்று விண்வெடிக்கக் கோஷிக்கிறார்கள். நாத்திகத்தை (மத எதிர்ப்பை)ச் சந்து பொந்துகளெல்லாம் பிரச்சாரம் செய்வதுதான் எங்கள் முதற்பெரும் தனிப்பெருங் கடமை” என்று முழங்குகிறார்கள்.

மார்க்சிய வாதியின் பதில்

மார்க்சியவாதி என்ன பதில் அளிப்பான் தெரியுமா? “ஹூம்! அல்ல. மதம் நிலைத்து நிற்பதற்கு மக்களின் அறியாமையே காரணம் என்று இவர்கள் சொல்வது உண்மையல்ல. இத்தகைய கருத்து மேற்போக்கான கருத்து. குறுகிய எண்ணங்கொண்ட கருத்து. முதலாளித்துவக் கலைப் பண்பு படைத்த கருத்து, இவர்களுடைய இந்தக் கருத்து மதத்தின் வேரையும், தூரையும் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தோடு விளக்கவில்லை கருத்து முதல்வாதக் கண்ணோட்டத்தோடுதான் விளக்குகிறது என்று பதில் இறுப்பான்.

மார்க்சியவாதிகளின் கண்ணோட்டம் பொருள் முதல் வாதக் (Materialistic) கண்ணோட்டம், தி.மு.க. தலைமையின் கண்ணோட்டம், கருத்து முதல்வாதக் கண் சூட்டம் (Idealistic),

மதங்களின் மூலவேர்

நவீன முதலாளித்துவ நாடுகளில் மதத்தின் ஆதார பீடம், பிரதானமாக சமுதாய ரீதியானது என்கிறார் லெனின். இதன் பொருள் என்ன? இன்றைய மதங்களின் ஆக-ஆழமான ஆணிவேர் உழைத்து உடல் தேயும் பெரு வாரியான பொதுமக்களின் சமுதாய அடிமைத்தனத்தில் வேரடித்து நிற்கிறது. நிலப்பிரபுத்துவமும் முதலாளித்துவமும், பாட்டாளிப் புழுக்களை அல்லும் பகலும் அறுபது நாழிகையும் நெருப்புச் சட்டியில் போட்டு வறுத்துக் கொண்டே இருக்கின்றன. நிலப்பிரபுக்களும் ஏகாதிபத்திய வெறியர்களும் பண இராட்சதர்களும் அபூர்வமாக நிகழும் யுத்தம், பூகம்பம் ஆகிய படுபயங்கர நிகழ்ச்சிகளைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு நீச நாசத் தொல்லைகளையும் நெஞ்சு பிளக்கும் சித்திரவதைகளையும் பாட்டாளி உலகுக்கு இழைக்கிறார்கள். இத்தகைய நிலப்பிரபுத்துவக் குருட்டா வேசக் கும்மாளத்தின் முன்னால் முதலாளித்துவக் கண்மூடி தர்பாரின் எதிரில், கோடானு கோடிப் பாட்டாளி மக்கள் அனுதாபமும் ஆதரவுமின்றி நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடக்கிறார்களல்லவா? இத்தகைய கொடிய நிராதரவில் இன்றைய மதங்களின்-அடி வேர் நடு வேர் வேரூன்றி நிற்கிறது.

“கடவுள்களைப் படைத்தது பயம்.” நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் ஆகியவற்றின் நடவடிக்கைகளை முன்கூட்டியே புரிந்து தெரிந்து கொள்ளும் அறிவுக் கண் பொதுமக்களுக்கு இல்லை. ஆகவே, நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ சக்திகளைக் குருட்டு, இருட்டு சக்திகள் என்கிறோம். இந்தச் சக்திகள் வாழ்வின் ஒவ்வொரு படியிலும் தொழிலாளிகளை, விவசாயிகளை சிற்றுடைமையாளர் களான நடுத்தரத்தார்களை திடீரென” “எதிர்பாராத விதத்தில்” ‘அதாவெட்டில்”, நிகழும் அழிவுகளாலும், இழிவுகளாலும் கதி கலங்கச் செய்கின்றன. இந்த நாசங்களும் சேதங்களும் அவை பயணஞ் செய்கிற வண்டியிலேயே தங்களோடு பிச்சைக்காரத்தனத்தையும், பஞ்சைப் பணாதித்தனத்தையும், விபசாரித்தனத்தையும், பட்டினிச் சாவுத்தனத்தையும் பந்துமித்திரகளத்ராதிகளோடு அழைத்து வருகின்றன. இந்த அழிவும், இழிவும்தான் இன்றைய மதங்களின் மூலவேர்.

இந்த உண்மையை முதன்முதலாக எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு பொருள் முதல் வாதியும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பொருள் முதல்வாதத்தின் ஆரம்ப அரிச்சுவடிப்படிப்போடு அவன் நின்று விடாதிருக்க விரும்பினால் இந்த உண்மையை மனதில் ஆழப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார் லெனின்.

மத உணர்ச்சியின் பௌதீக அடிப்படையை லெனின் மார்க்சிய லெனினியத்தின் குருநாதன் இவ்வாறு தெளிவு படுத்துகிறார். லெனின் வழிக்கும் தி.மு.க. தலைமையின் கண்ணோட்டம்-கருத்தோட்டங்களுக்கும் ஆகாயத்திற்கும் பாதாளத்திற்குமுள்ள ஒட்டு உண்மை இதுதான். ஆனால் அவர்கள் லெனின்-ஸ்டாலின் சிந்து பாடுகிறார்கள்! லெனின் சித்தாந்தத்திற்கு வாரிசுரிமை கொண்டாடுகிறார்கள்! ஆஹா!

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று”

என்ற குறள் அறம் படிக்கிறார்கள் போலும்!

அறிவு மயக்கம்லெனின் மதிப்பீடு

நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ அரவையந்திரத்தால் அரைத்துப் பொடி சூரணமாக்கப் படும் பாட்டாளி மக்களின் – நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ அழிவு சக்திகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிற மனித கோடிகளின் உள்ளத்தில் ஊன்றியிருக்கும் மத உணர்ச்சியை எத்தகைய அறிவு இயக்க இலக்கியங்களாலும் நிர்மூலம் செய்துவிட முடியாது என்கிறார் லெனின். இதைத் தொடர்ந்து லெனின் மற்றொன் றும் கூறுகிறார். அதாவது அதே பொதுமக்கள், ஒன்றுபட்ட கட்டுப்பாடான, திட்டமிட்ட, உணர்வு பூர்வமான வகையில் மதத்தின் மூல காரணத்தை எதிர்த்துப் போராட எப்பொழுது கற்றுக் கொள்கிறார்களோ-அதாவது, நிலப் பிரபுத்துவ-முதலாளித்துவ ஆட்சியை அதனுடைய ஒவ்வொரு உருவத்திலும் எதிர்த்துப் போராட எப்பொழுது கற்றுக் கொள்கிறார்களோ அப்பொழுதுதான் மதத்தை அந்தப் பொதுமக்களிடம் இருந்து சல்லிவேரோடு செல்லி யெறிய முடியும் என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.

”மேற்சொன்ன கருத்துக்கு, மத எதிர்ப்பைப் போதிக்கும் நூல்கள், கேடு சூழ்பவை என்றோ அல்லது அவசியத்திற்கு அதிசமானவை என்றே அர்த்தமா? இல்லை. அவ்வாறு ஒருக்காலும் அர்த்தமில்லை. கம்யூனிஸ்டுகள் நடத்தும் மத எதிர்ப்புப் பிரச்சாரம், பாட்டாளி மக்களின் அடிப்படையான பெரும் பணிக்கு-அதாவது சுரண்டல் கொள்ளைக் காரர்களுக்கு எதிரிடையாக, சுரண்டப்பட்ட மக்கள் நடத்தும் வர்க்கப் போராட்டத்திற்கு-உள்ளடங்கின தாகவே இருந்து தீரவேண்டும் என்று தான் அர்த்தம். இவ்வாறு லெவின் வினா-விடை உருவத்தில் மத எதிர்ப்புப் போராட்டத்திற்கும் வர்க்கப் போராட்டத்திற்குமுன்ன உறவு முறையை நமக்கு விளக்கி வைக்கிறார்.

இது மட்டுமா?

இயங்கு இயல் பொருள் முதல்வாதத்தை, அதாவது மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய மேதைகளின் தத்துவ ஞானத்தை வேர் முதல் பழம் வரையில் கற்றறியாதவர்களுக்கு மேற்கூறிய உண்மையைப் புரிந்து கொள்ள முடி யாது என்றும் தத்துவஞானப் போராட்ட அறிவின் நிறைகுடமான லெனின் இடித்துச் சொல்கிறார். சொல்லி, இயங்கு இயல் பொருள் முதல்வாதத்தைப் பற்றிய தெள்ள றிவில்லாதவர்களுக்கு மகத்தைப் பற்றிய மார்க்சியத்தின் கொள்கை- செய்கை இணைப்பு “புரியாது” என்று வெட் டொன்று துண்டிரண்டாக மார்க்சிய விரோத மத எதிர்ப்பு வீரர்களின் மறுப்புக்குச் செம்மையாகப் பதில் கொடுக்கிறார்.

நாமும் அவர்களும்

வர்க்கப் போரட்டத்திற்கு உள்ளடங்கியதாகவே மத- எதிர்ப்புப் போராட்டம் நடைபெற வேண்டுமென் கிறார் லெனின். மத எதிர்ப்புப் போராட்டம்தான் முதல் போராட்டம் என்கிறார்கள் தி.மு.கழக அறிவியக்க வாதிகள்.

இயங்கு இயல் பொருள்முதல் வாதத்தைப் பற்றி நன்கு அறியாதவர்கள்தான், அறிந்துகொள்ளச் சக்தியற்றவர்கள் “கம்யூனிஸ்டுகளின் கொள்கையும் செய்கையும் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. கம்யூனிஸ்டுகள் பயந்துபோய் மதத்திற்கு விட்டுக் கொடுக்கிறார்கள். மதத்திற்கு ஆதரவு அளிக்கிறார்கள்” என்றெல்லாம் பிதற்றுவார்கள் என்று லெனின் சொல்கிறார். தி.மு.க. தலைவர்களோ, மத எதிர்ப்பில் மார்க்சிய வாதத்தின் கொள்கை நடைமுறை இணைப்புப் பற்றிய நுணுக்கங்களைப் புரிந்து கொள்ள முயலாது. புரிந்து கொள்ள முடியாது.”கம்யூனிஸ்டுகளின் தலையில் குழப்பம் புகுந்து கூத்தாடுகிறது” என் கிறார்கள்.

இத்தகைய தி மு க. தலைமை மத எதிர்ப்பைப் பொறுத்த மட்டில் மார்க்சியக் கோட்பாடுகளைத் தமிழகத்தில் கடைப் பிடிக்கும் “மகத்தான சக்தி” தாங்கள்தான் என்று டமாரம் அடிப்பதன் பொருள் என்ன? போகப்போகத் தெரியும்.

28-11-54

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *