

ஒன்றே ஒன்று
கி. வா. ஜகந்நாதன்
பதினோராந் திருமுறை என்ற பெயரே சைவத் திருமுறைகளைக் கோவை செய்து வரிசைப்படுத்தி அமைத்த செயலைக் குறிப்பிக்கிறது. இதற்கு முன் பத்துத் திருமுறைகள் உள்ளன என்பதை இப்பெயர் அறிவிக்கிறதல்லவா? நம்பியாண்டார் நம்பிகள், பதினொரு திருமுறைகளைத் தொகுத்தார். பதினோராந் திருமுறையில் ஆலவாயுடையார் அருளிச் செய்த திருமுகப் பாசுரத்தை முதலில் வைத்துப் பட்டினத்துப் பிள்ளையார் இயற்றிய திருவொற்றியூர் ஒருபா ஒருபஃதை இறுதியாக வைத்து 31 பிரபந்தங்களைத் தொகுத்தார். பிறகு அரசன் வேண்டுகோளின்படி நம்பியாண்டார் நம்பி இயற்றிய பத்துப் பிரபந்தங்களையும் பிறர் சேர்த்தனர்.
இத்திருமுறையில் பன்னிரண்டு அருளாளர்கள் பாடிய 41 நூல்கள் இருக்கின்றன. 1388 பாடல்கள் இப்போது கிடைக்கின்றன.சில நூல்களிற் சில பாடல்கள் கிடைக்கவில்லை. இந்த நூல்களை இயற்றிய திருவருட் செல்வர்கள் திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீர தேவர், கல்லாடனார், கபில் தேவர், பரணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி என்போர்.
இவர்களுள் திருவாலவாயுடையார் மதுரையில் எழுந்தருளி யிருக்கும் இறைவர் என்றும், அப்பெருமான் பாணபத்திரருக்காகச் சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பாசுரவடிவில் ஒரு திருமுகத்தை வரைந்து அளித்தாரென்றும், அதுவே திருமுகப் பாசுரமென்ற பாடலென்றும் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. பதினோராந் திருமுறையின் தொடக்கத்தில் உள்ள அது வருமாறு:
மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிறகு அன்னம் பயில்பொழில் ஆல வாயில் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு உரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமா மதியுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா உகைக்கும் சேரலன் காண்க:
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன் தன்போல் என்பால் அன்பன், தன்பால் காண்பது கருதிப் போந்தனன்;
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.
(சந்திரன் நிரம்பித் தங்கும் மதிலையுடைய நான் மாடக்கூடலென்னும் நகரத்தில் உள்ளதும், பால் போன்ற வெள்ளை நிறமும் கோடுகளும் உள்ள சிறகையுடைய அன்னங்கள் பழகுகின்ற சோலைகளையுடையதுமாகிய ஆலவாய்த் திருக்கோயிலில் வாழும் சிவனாகிய யான் உரைக்கும் வார்த்தையாகிய இதனை, கார்காலத்து மேகத்துக்கு ஒப்பு என்னும்படியரகப் பாவாணர்களுக்குத் தனக்கே உரிய இயல்பினாலே பலகாலும் பொருளை உதவின் ஒளி திகழும் நிறம் பெற்ற பெரிய சந்திரனை ஒத்து விளங்கும் குடையின் கீழ் இருந்து போரிற் செலுத்தும் குதிரையை ஊர்ந்து ஓட்டும் சேரன் காண்க: முறைப்படி யாழைப் பயில்கின்ற பாணபத்திரன் என்னும் இவன் உன்னைப் போல என்னிடம் அன்புடையவன்; உன்னிடம் உன்னைக் காணுவதை எண்ணி வந்தான்; மாட்சிமைப்பட்ட பொருளைக் கொடுத்து இவனை அனுப்ப வேண்டும்.
மதி – சந்திரன். புரிசை – மதில். மாடக்கூடல் – நான்மாடக்கூடல் இது மதுரையின் பெயர். ஆலவாய்: கோயிலின் பெயர். பருவம் – பொழி, கொண்மு – மேகம். படி – ஒப்பு, குரு-நிறம். செரு – போர்.
உகைக்கும் – ஓட்டும். பண்பு – யாழ் வாசித்தற்குரிய அமைதி. தன் என்றது படர்க்கையில் வைத்துச் சொன்னது. விடுப்பது – விடுக்க.]
காரைக் காலம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் என்னும் மூவரும் அறுபத்து மூன்று நாயன் மார்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய வரலாறுகள் பெரிய புராணத்தில் இருக்கின்றன. நக்கீரர், கல்லாடனார், கபிலர், பரணர் என்னும் நால்வரும் கடைச்சங்க காலத்துப் புலவர்கள். இப் பெயருள்ளவர்கள் இயற்றிய பாடல்கள் சங்க நூல்களிற் காணப்படுகின்றன. ஆயினும் இத்திருமுறையில் அவர்கள் இயற் றியனவாக உள்ள நூல்களில் திருமுருகாற்றுப் படையைத் தவிர மற்றவை சங்கத் தொகை நூல்களில் சேர்க்கப் பெறவில்லை. அவற்றின் நடை, உள்ளுறை யாகியவற்றால் அவை அந்தப் பழம் புலவர்களின் வாக்கென்று சொல்வதற்கு இல்லை,
நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சங்கத்துப் புலவர்களைப் பொய்யடிமையில்லாத புலவர் என்னும் தொகையடியார்களாக வைத்துப் பாடுகிறார்.
தரணியிற் பொய்ம்மை இலாத்தமிழ்ச்
சங்க மதிற்கபிலர்
பரணர்தக் கீரர் முதல்நாற்பத்
தொன்பது பல்புலவோர்
அருள் நமக் கீயும் திருவால
வாய்அரன் சேவடிக்கே
பொருள் அமைத்து இன்பக் கவிபல
பாடும் புலவர்களே.
அவர் கொள்கையின்படி இத் திருமுறையில் வரும் நூல்களை இயற்றிய நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர் என்னும் நால்வரும் நாயன்மார் கூட்டத்தைச் சேர்ந்தவர்களே.
இளம் பெருமானடிகள், அதிராவடிகள் என்னும் இரண்டு பெரியார்களைப் பற்றிய செய்திகள் பிற நூல்களிற் காணவில்லை. பட்டினத்துப் பிள்ளையார் வரலாறு தனியே வழங்குகிறது. நம்பியாண்டார் நம்பி தேவாரத்தை வெளிப்படுத்துவதற்கும் திருமுறைகளை வகுப்பதற்கும் உறுதுணையாக இருந்தவர். திருமுறை கண்ட புராணம் என்ற நூல் அவர் வரலாற்றைச் சொல்கிறது.
இந்தத் திருமுறையில் உள்ள நூல்கள் விநாயகர், முருகன், சிவபெருமான் ஆகிய தெய்வங்களைப் பற்றியும் நாயன்மார்களைப் பற்றியும் அமைந்தவை. விநாயகரைப் பற்றியவை -3; முருகனைப் பற்றியது -1; சிவபெருமானைப் பற்றியவை -26; திருஞான சம்பந்தரைப் பற்றியவை -6; திருநாவுக்கரசைப் பற்றியது-1; கண்ணப்பரைப் பற்றியவை – 2; சேரமான் பெருமாளைப் பாட் ருடைத் தலைவராக உடையது-1; திருத்தொண்டர் அனைவரையும் பற்றியது-1.
இதில் தொகுக்கப் பெற்ற பிரபந்த வகைகள் 41. அவற்றுள் அந்தாதி (வெண்பா — 4, கலித்துறை – 4) – 8, ஆற்றுப் படை-1, இரட்டை மணி மாலை -4, உலா -2, எட்டு-1, எழுகூற றிருக்கை – 1, எழுபது – 1, ஏகாதச மாலை -1, ஒருபா ஒருபது —], கலம்பகம் – 1, கலிவெண்பா – 1, கோபப் பிரசாதம் – 1, திருமுகப் பாசுரம் (சீட்டுக்கவி)-1, தொகை – 1, நான் மணிமாலை -1, பதிகம் –2, பெருந்தேவ பாணி-1, மறம்-2, மும்மணிக் கோவை –7,விருத்தம் – 2, வெண்பா-1.
ஏனைய திருமுறைகளுக்கு இல்லாத சிறப்பு ஒன்று இதற்கு உண்டு. ஆலவாய் இறையனார் இயற்றிய திருமுகப் பாசுரத்தை முதலில் உடையது இது. சிவபெருமானாலே இயற்றப் பெற்றதாகச் சொல்லப் பெறும் தமிழ் நூல் ஒன்று; இறையனார் அகப் பொருள் என்ற இலக்கணம் அது. அப் பெருமானாலே திருவாய் மலர்ந்தருளப் பெற்றவை என்று அன்பர்கள் நம்பும் பாடல்கள் இரண்டு. ஒன்று “கொங்குதேர் வாழ்க்கை” என்பது. அது குறுந்தொகை என்ற சங்க நூலில் இரண்டாவது பாட்டாக அமைந்திருக்கிறது. மற்றொன்று இந்தத் திருமுகப் பாசுரம். வேறு சில பாடல்கள் அப் பெருமானால் அருளப் பெற்றன என்று சில வரலாறுகள் வழங்குகின்றன.ஆயினும் பெரியோர்களால் ஏற்றுக் கொள்ளப்பெற்று, மதிப்பைப் பெறும் தொகை நூல்களிலே கோக்கப் பெற்றவை இந்த இரண்டு பாடல்களுமேயாம்.
மற்றொரு சிறப்பும் இந்தத் திருமுறைக்கு உண்டு. இதில் கடைச் சங்க காலத்து நூலாகிய திருமுருகாற்றுப்படை கோக்கப் பெற்றிருக்கிறது. சங்க நூல்களைப் பயில்வார் இல்லாமல் தமிழுலகம் மறந்திருந்த காலத்திலும் சைவத் திருமுறையில் சேர்க் கப்பெற்றமையின் இந்நூல் மறையாமல் நின்று விளங்கியது.
பதினோராந் திருமுறையை யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் பதிப்பித்திருக்கிறார்கள். வேறு சிலரும் அச்சிட் டிருக்கிறார்கள். பல காலமாக அச்சுப் புத்தகம் இருந்துவரினும் தமிழ் மக்கள் அதிகமாக இத் திருமுறையில் ஈடுபடவில்லை. அதனால் இதில் உள்ள பல பாடல்கள் மூல உருவம் இன்னதென்றே தெரி யாமல் இருக்கின்றன. பல பாடல்கள் விட்டுப் போயிருக்கின்றன. பல பாடல்களின் இடையிற் சில சொற்கள் விட்டுப்போயின. பல பாடல்களுக்குரிய பொருள் இன்னதென்று தெளிவுற இயலாத வகையிலே அவற்றின் உருவம் இருக்கிறது. ஏட்டுச் சுவடிகளை நன்கு ஆராய்ந்து அவற்றிலுள்ள பாடபேதங்களைத் தெரிந்து தொகுத்துப் பொருள் நிச்சயம் செய்தால், பல பாடல்களின் உண்மை உருவத்தைக் காணுதல் கூடும்.
ஸ்ரீ குமரகுருபர சுவாமிகளை முதல்வராகக் கொண்டு, அவர் செய்து வந்த சமயத் தொண்டையும் தமிழ்த் தொண்டையும் மிகச் சிறப்பாக நடத்திவரும் திருப்பனந்தாள் காசி மடத்தில் தலைவர்களாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலஸ்ரீ காசி வாசி அருள் நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்களுடைய விருப்பத்தின்படி 1950-ஆம் ஆண்டில் பதினோராந் திருமுறையை வெளியிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. திருமுருகாற்றுப் படைக்குப் புதிய வகையில் விளக்கம் எழுதி, ‘வழிகாட்டி’ என்னும் பெயரோடு வெளியிட முருகன் திருவருள் கூட்டிய செய்தியை அன்பர்கள் அறிவார்கள்.
இந்தச் சிறிய புத்தகத்தில் பன்னிரண்டு பாடல்களுக்குரிய விளக்கங்கள் உள்ளன. காரைக்காலம்மையாரின் திருவாக்காகிய இரண்டு பாடல்களும், சேரமான் பெருமாள் பாடல்கள் இரண்டும், நக்கீரர் பாடல்கள் மூன்றும், கபிலர் பாட்டு ஒன்றும், அதிரா வடிகள் பாட்டு ஒன்றும், பட்டினத்துப் பிள்ளையார் பாடல்கள் இரண்டும், நம்பியாண்டார் நம்பி திருவாக்கு ஒன்றும் இதில் இடம் பெறுகின்றன. பதினோராந் திருமுறையில் உள்ள 41 நூல்களில் அற்புதத் திருவந்தாதி, பொன் வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, ஈங்கோய் மலை எழுபது, சிவபெருமான் இரட்டை மணிமாலை, மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை, கோயில் நான் மணிமாலை, திருவிடை மருதூர் மும்மணிக் கோவை, ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை என்னும் பத்துப் பிரபந்தங்களிலிருந்து எடுக்கப் பெற்றவை அவை.
நான் காரைக் காலம்மையாருடைய தீவிரமான பக்திக்கு இணையாக வேறு எதைச் சொல்லமுடியும்?ஒன்றையே நினைந்து ஒன்றையே துணிந்து ஒன்றையே தம் உள்ளத்துள் அடைத்து இறைவனுக்கு அடிமைப்படும் திருவாட்டியார் அவர். உலக முழுவதும் அவருக்கு இறைவனுடைய திருவுருவத்தை நினைப்பூட்டுகிறது. காலை முதல் இரவு வரையில் தோற்றும் பல பொழுதின் காட்சியிலும் இறைவன் திருமேனியைக் காண்கிறார் (1,2.) சேரமான் பெருமாள் நாயனார் மன்னர் மாத்திரமா? அவர் புலவர்; இறைவனைப் பாடும் புலவர்; சுந்தரமூர்த்தி நாயனாரைத் தோழராகப் பெற்றவர். அவர் இறைவனைப் பாடினாலும் அதனால் தருக்கு அடையவில்லை. “என்ன பாடிவிட்டேன்! என் புன்சொல்லை நீ ஏற்றருள வேண்டும்” என்று பணிவுடன் விண்ணப்பித்துக் கொள்கிறார் (3) அகத் துறைப் பாட்டு ஒன்றில் பிரிந்து சென்ற தலைவியையும் செவிலியையும் காட்டி அந்தச் செவிலியின் வேதனையைத் தெரிவித்து, பாட்டினிடையே சார்த்து வகையால் ஆரூர்ப் பெருமான் புகழை இணைக்கிறார் (4) நக்கீரர் திருக்காளத்திக்கு வந்து இறைவனிடம் புகல் புகுந்து தாம் அதுகாறும் அடைந்த இடர்களினின்றும் நீங்கி, “துன்பங்களே! போய் வாருங்கள். நான் குளிர்ச்சியான இடம் ஒன்றை அடையப் போகிறேன்” என்று கூறுகிறார் (5) அடியார்களுக்கு யமபயம் இல்லையென்பதை அவர் அழகாகச் சொல்கிறார். “இறைவனுடைய பக்தர்களிடம் அணுகாதீர்கள்” என்று யமன் தன் தூதுவர்களுக்குக் கட்டளையிடுவானாம் (6) இயற்கை யெழிலைக் கண்டுகளிக்கும் புலவராகிய அவர் மந்தி தன் குட்டிக்கு விரலால் தேன் தோய்த்து ஊட்டும் காட்சியைக் கண்டு நமக்கும் காட்டி, “இந்த இடம் ஈங்கோய் மலை என்று இறைவன் திருப்பதியைச் சுட்டிக் காட்டுகிறார் (7.) நரைதிரை மூப்புச்சாவு என்பன மக்களுக்குத் தொடர்ந்து வருகின்றன. அந்த உண்மையை நினைப்பூட்டி, பேசத் தொடங்கும் போதே மறைக் காட்டு மணியைப் பரவுங்கள் என்று கபிலர் அறிவுறுத்துகிறார். மறைக் காட்டில் கலம் கரை சேரும் அழகைக் காட்டுகிறார் (8)
விநாயகரைப் பாடிய அதிராவடிகள் ஞானக் கன்றாகிய அப் பெருமான் சப்பாணி கொட்டுவதை வருணிக்கிறார். நிலந்துளங்கவும் மேருமலை அசையவும் வானம் துளங்கவும் அக் கன்று சப்பாணி கொட்டி விளையாடுகிறது (9) பட்டினத்துப் பிள்ளையார் தம்மை நாயகியாக்கிக் கொண்டு நடராசப் பெருமான்பால் காதல் கொள்கிறார். “அப் பெருமானை ஏற்றிக்கொண்டு எங்கள் தெரு வழியாக வரக்கூடாதா?”.என்று இறைவன் வாகனமாகிய விடையை நோக்கிக் கூறுகிறார் (10) திருவிடை மருதூர்ப் பெருந் தேனைச் சுவைத்தவர் அவர். அவர் இறப்பும் பிறப்பும் அற்ற நிலையை அடைந்தவர். புலன்களின் மயக்கு நீத்தவர். ஆசையை அறுத்தவர். யாரிடமும் எதையும் கேட்கவேண்டாத நிறைவு பெற்றவர் (II)
நம்பியாண்டார் நம்பி ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்தரைப் பாட்டுடைத் தலைவராக வைத்து அகத்துறைப் பாட்டுப் பாடுகிறார். அவர் மலையில் ஒரு தலைவன் ஓர் அழகியைக் காதலிக்கிறான். தினைப் புனம் காவல் செய்யும் அவளைக் கண்டு அவளது சாயல், மொழி, விழி இவற்றில் ஈடுபட்டு, இவளாவது! தினைப் புனத்தைக் காப்பதாவது! இவளைத் தம் இனமென்று எண்ணி மயிலும் கிளியும் மானும் வந்து கதிர்களை யெல்லாம் அழித்துவிடுமே!’ என்று கூறுகிறான் (12)
இந்தப் பாடல்களின் நடை வகையைப் பார்த்தால் சங்க காலப் பாடல்களைப் போன்ற அமைப்பைச் சிலவற்றில் காணலாம்; பிற்காலத்துப் பாடல்களின் அமைப்புச் சிலவற்றில் இருக்கும். பழமையும் புதுமையும் இணைந்த அழகைப் பதினோராந் திருமுறைப் பாடல்கள் கொண்டுள்ளன.
முருகன் திருவருளையும் என்னுடைய ஆசிரியப்பிரானின் நல்லாசியையும் துணைக்கொண்டு தொடங்கிய திருமுறை மலர்கள் என்ற நூல் வரிசையில் இது பதினோராவது புத்தகம். இம் மாலை நிறைவடைய இன்னும் ஒன்றே ஒன்று எஞ்சியிருக்கிறது. முருகன் திருவருள் அதனையும் நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.
கி.வா.ஜகந்நாதன்



