ஒன்றே ஒன்று
கி. வா. ஜகந்நாதன்

புன்சொல்!

இறைவனிடம் மாறாத பக்தியுடையவர் அவர். புலமையும் நிரம்பியவர். இறைவனுடைய புகழைப் பலபடியாகப் பாடிப் போற்றினார். அவர் முடியுடை மன்னர்கள் மூவரில் ஒருவர். இறைவனுக்கு அன்பர் என்பது அவருடைய முதற் சிறப்பு; அடுத்தது அவர் புலமை நிரம்பியவர் என்ற சிறப்பு: அதற்கு அடுத்தபடிதான் அவர் மணிமுடி மன்னர் என்ற சிறப்பு நிற்கும்.

சேரமான் பெருமாள் என்பது அவர் பெயர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆகையால் சேரமான் பெருமாள் நாயனார் என்று அவரை வழங்குவார்கள்.

அவரோடு சிறிது கற்பனையாக உரையாடிப் பார்க்கலாம்.

அழகான கவிகளைப் பாடுகிறீர்களே, உங்களுக்கு இப்படியெல்லாம் பாட யார் சொல்லித் தந்தார்கள்? பல பெரியவர்களுடைய தொடர்பும் நட்பும் உங்களுக்கு இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. புலவர் பெருமக்களுடைய கூட்டத்தில் நீங்கள் ஒரு மணியைப் போல விளங்கியிருக்க வேண்டும்.”

“இந்த எளியேனையா கேட்கிறீர்கள்? நான் பாடுவதும் ஒரு பாட்டா?”

“நல்ல தீங்கவிகளைப் பாடியிருக்கிறீர்களே !”

“தீங்கவியா! அதை நினைத்தாலே எனக்கு நகை உண்டாகிறது. நல்ல தீங்கவி! ஆனால் என் விருப்பம் என்னவோ இனிய கவிகளாகப் பாட வேண்டும் என்பது தான். அதற்குத் தகுதி வேண்டாமா?”

“புலவர்களுடைய பாடல்களைக் கேட்ட மன்னர் நீங்கள். உங்களுக்குப் புலமை நிரம்ப இருக்கிறது.”

”நான் அறிவு தெளிந்த பெரியவர்களை நாடிச் சென்று உபதேசம் பெறாதவன். எனக்குக் கவிதை பாடும் தெளிவு எப்படி வரும்? என்றாலும் தீங்கவி பாட வேண்டும் என்று ஆசையோடு பாடத் தொடங்கி விட்டேன்.”

தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன்,
தீங்கவி பாடலுற்றேன்.

[அறிவு தெளிந்த மக்களைச் சேர்ந்தேன் இல்லை. ஆயினும் இனிய கவியைப் பாடத்தொடங்கினேன்.

தெள்ளிய – தெளிந்த. தீங்கவி – இனிய கவிதை ]

பெரியவர்கள் எப்போதும் தம்மைக் குறைத்தே பேசிக்கொள்வார்கள். “பணியுமாம் என்றும் பெருமை” என்று திருவள்ளுவர் சொல்கிறார். சேர மன்னர், பெரும் புலவர், பல பெரியோருடைய நட்பைப் பெற்றவர் என்று அறிந்து அவரை அணுகினால், “நான் நல்லவர்களோடு சேராமல், பாட்டு மாத்திரம் பாட வேண்டும் என்று அசட்டுத் துணிவோடு தொடங்கி விட்டேன்” என்கிறார்.

சேரர் பிரானே, நீங்கள் எவ்வளவு அழகாகப் பாடி யிருக்கிறீர்கள்? சொற் சுவையும் பொருட் சுவையும் செறிந்த பாடல்கள் அல்லவா உங்கள் பாடல்கள் ?

“சொல்லாவது பொருளாவது நல்ல சொற்களை நான் தேடிச் சென்றாலும் எனக்குக் கிடைப்பதில்லையே! நல்ல பொருள் இன்னதென்று எனக்குத் தெரியாது. ஒள்ளிய சொல்லும் பொருளும். நல்ல கவிஞரைத் தேடி வந்து அடையும் என்று சொல்லுகிறார்கள். நான் அவற்றைத் தேடி ஓடுகிறேன். அவை என் கைக்கு அகப்படுவதில்லை. அவற்றைப் பெறாமல் வருந்துகிறேன்.”

ஒள்ளிய சொல்லும் பொருளும் பெறேன்.

[விளக்கமான சொற்களையும் நல்ல பொருளையும் நான் பெறேன்.

ஒள்ளிய – நல்ல; விளக்கமான. ஒள்ளிய சொல்லும் ஒள்ளிய பொருளும் என்று கூட்டிப் பொருள் செய்ய வேண்டும்.]

“மற்றப் புலவர்கள் பாடலில் உள்ள சொற் பொருளுக்குக் குறைந்தவை அல்ல, உங்கள் பாடலில் உள்ள சொற் பொருள்.”

”எனக்கோ சொல்லும் தெரியாது; பொருளும் தெரியாது. ஆனாலும் பாடவேண்டும் என்ற ஆசை ஒழியவில்லை. என் செய்வது! எவ்வளவோ பெரியவர்கள் பாடியிருக்கிறார்களே, அவர்களுடைய பாடல்களிலிருந்து சொல்லையும் பொருளையும் எடுக்கலாம் என்று கூட இடையிலே ஒரு நினைப்பு வருகிறது. ஆனால் அப்படி எடுத்து வைத்துப் பாடும் பாட்டை நான் மறைவிலே வைத்துக் கொண்டு தான் பாடலாம். திருட்டுச் சொத்தை ஊரவர் காண வெளியிலே கொண்டு வந்தால் திருட்டுத்தனம் தெரிந்து விடும் அல்லவா? சொல்லையும் பொருளையும் பிறரிடமிருந்து திருடிப் பாட்டுப் பாடி வெளியில் விட்டால் மற்றவர்கள் ஒருகால் கவனிக்காமல் போகலாம். ஆனால் இந்தக் கவிகள் சும்மா இருப்பார்களா? இந்தச் சொல் இன்ன புலவருடையது, இந்தத் தொடர் இன்ன நூலில் வருவது என்று அக்கு வேறு, ஆணி வேறாகப் பிரித்து அவர்கள் என் மானத்தை வாங்கிவிட மாட்டார்களா?”

உரைத்தார் உரைத்த
கள்ளிய புக்காற் கவிகள்ஒட்டார்.

[பாடியவர்கள் பாடிய சொல்லையும் பொருளையும் திருடப் புகுந்தால், கவிஞர் அவ்வாறு செய்ய விட மாட்டார்கள்.

உரைத்தார் -தீங்கவிகளைப் பாடியவர். உரைத்த – சொன்ன சொல்லையும் பொருளையும்; வினையாலணையும் பெயர். கள்ளிய – திருட. ஒட்டார் – விட மாட்டார்கள்.]

அவர் திருடுவாரா?. ஆனாலும் ஒரு நிலையில், “நாம் ஆண்டவனைத் துதிப்பதுதானே முக்கியம்? பிறர் கொய்து தந்த மலரைக் கோத்து அணிவிப்பது போல நாமும் பிறர் தேடி வைத்திருக்கும் சொல்லையும் பொருளையும் எடுத்துப் பாடலாமே. நாம் பெரும் புலவன் என்ற சிறப்பைப் பெற வேண்டுமா? இறைவனை வாயாரப் பாடவேண்டும். அதற்கு இப்படிச் செய்யலாம்” என்று ஒரு கால் தோன்றினாலும் அதைச் செய்ய முடியாது. ஊரில் உள்ள புலவர்கள் திருட்டைக் கண்டு பிடித்துப் பழி தூற்றுவார்கள். புலவர்கள் பழிக்கும்படி ஒரு காரியத்தைச் செய்தால் அதை இறைவன்தான் ஏற்றுக்கொள்வானா?

“உங்கள் வாக்கைப்பற்றி நீங்கள் எப்படித்தான் எண்ணியிருக்கிறீர்கள்?”

“என் பாட்டு இறைவனுக்கு ஏற்றது அன்று. எத்தனையோ பெரிய பக்தர்களும் புலவர்களும் பாடிய பாடல்களைக் கேட்டுத் திருவுள்ளம் மகிழ்ந்த பெருமான் அவன். அவனுக்கு என் புன்சொல் எம்மாத்திரம்? என் கவிகள் அவனாற் கொள்ளப்பெறும் தகுதியுடையன அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.”

“அப்படியானால் நீங்கள் ஏன் பாடினீர்கள்?”

“ஆசையினால் பாடினேன்.”

“அவற்றை இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று தெரிந்தும் ஏன் பாடினீர்கள்?”

“அப்படி இல்லை. அவன் ஏற்றுக்கொள்வதற்குரிய தகுதி இவற்றில் இல்லை என்றேனே அன்றி, அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று சொல்லவில்லையே!”

“இரண்டும் ஒன்றுதானே?”

‘இல்லை, இல்லை; என் பாட்டுக்குத் தகுதியிருந்து அவன் ஏற்றுக்கொண்டால், அது என் பெருமையைக் காட்டும். தகுதியில்லாமல் ஏற்றுக்கொண்டால் அது அவன் கருணையைக் காட்டும். கருணை வடிவமான எம் பெருமான் என் பாட்டில் தகுதி இல்லையாயினும் ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கு உண்டாயிற்று.’

“அந்த நம்பிக்கையை உண்டாக்க ஏதேனும் காரணம் உண்டா?”

“எம்பெருமான் அன்று பாற்கடலில் தோன்றிய நஞ்சை உண்டான். வேறு யாரும் உண்ணாத நஞ்சை அவன் ஏற்று உண்டான். கொடிய நஞ்சையே அமுதாக ஏற்றுக் கொண்ட இறைவன் என் கவிகளையும் என் ஆசை கருதி ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கை எழுந்தது.”

சேரமான் பெருமாள் நாயனார் இப்படியெல்லாம் நினைத்து ஒரு பாட்டுப் பாடினார், சிவ பெருமானையே பார்த்து, “நான் அறிவு தெளிந்தவர்களோடு சேர்ந்து பயிலவில்லை. நல்ல சொல்லும் பொருளும் அவர்களுடைய சேர்க்கையாலோ, நூலறிவாலோ பெறவில்லை. பிறர் வாக்கிலிருந்து எடுத்தால் கவிஞர் விடமாட்டார்கள் நான் பாடுவன் தகுதியற்ற புன் சொற்களே, ஆயினும் கடல் நஞ்சை உண்டவனே! நீ ஏற்றுக் கொண்டருள வேண்டும்” என்று பாடினார்.

தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன்;
தீங்கவி பாடல்உற்றேன்!
ஒள்ளிய சொல்லும் பொருளும்
பெறேன்; உரைத் தார்உரைத்த
கள்ளிய புக்கால் கவிகள்ஒட்
டார்; கடல் நஞ்சு அயின்றாய்!
கொள்ளிய அல்லகண் டாய் புன்சொல்;
ஆயினும் கொண்டருளே.

[அயின்றாய் – உண்டவனே! கொள்ளிய – கொள்ளத் தகுவன. புன் சொல்- பொலிவற்ற சொல்; சொல்லுக்குப் பொலிவாவன பொருட் சிறப்பும் ஓசை இனிமையும்.]

தெள்ளிய மாந்தர் என்றது சிறந்த கவிஞர்களை: “உளங்கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர்” (சகல கலாவல்லி மாலை) என்று குமரகுருபரர் புலவரைச் சிறப்பித்துச் சொல்வார்.

சேரமான் பெருமாள் நாயனார் சொல்வது அத்தனையும் பொய் என்று இந்த அழகிய பாட்டே காட்டவில்லையா?

இது பொன்வண்ணத்தந்தாதியில் 24 -ஆம் பாட்டு.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !