
ஒன்றே ஒன்று
கி. வா. ஜகந்நாதன்
எங்கே விளையும்?
பதினோராந் திருமுறையைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பிகளுக்குத் திருஞான சம்பந்தப்பெருமானிடத்தில் அளவிறந்த பக்தி. அப்பெருமானைப் பற்றி ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்,ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவை, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை, ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருத் தொகை என்று ஆறு நூல்களை இயற்றியிருக்கிறார். பல பல வகையில் அவருடைய புகழை எடுத்துப் பாராட்டியிருக்கிறார்.
தமிழில் அகப்பொருள் அமைந்த பாட்டைச் சிறப்பாகச் சொல்வார்கள். தமிழுக்கே உரியவை அவை என்றும் சொல்வது உண்டு. நாயக நாயகி பாவத்தில் பாடிய பாடல்கள் மற்ற மொழிகளிலும் உண்டு. அவற்றில் பாட்டுடைத் தலைவனையே பாட்டில் வரும் நிகழ்ச்சிக்குரியவனாக வைத்துப் பாடியிருப்பார்கள். நிகழ்ச்சியில் வருபவனைக் கிளவித்தலைவன் என்று கூறுவது மரபு. பாட்டுடைத் தலைவனையே கிளவித் தலைவனாக வைத்துப் பாடிய பாடல்கள் தேவாரம், திவ்யப் பிரபந்தம் முதலியவற்றில், இருக்கின்றன. அவை அகத் துறையைச் சார்ந்தன அல்ல. புறத்துறையில் ஒரு சிறந்த தலைவனைப் புகழும் முறையில் அவை ஒருவகை; பாடாண் திணையைச் சார்ந்தவை.
பாட்டுடைத் தலைவனை வேறாகவும்,கிளவித் தலைவனை வேறாகவும் வைத்துப் பாடுவதே அகப்பாட்டு. சங்க காலத்து அகத்திணை நூல்களில் உள்ள எல்லாப் பாடல்களிலும் கிளவித் தலைவன் இன்னானென்று பெயர் சுட்டப் படாமல் இருப்பவனே. யாரையேனும் பாராட்ட வேண்டுமானால் அவன் பெயரைச் சார்த்து வகையினால் எப்படியாவது பாட்டில் இணைப்பார்கள். அவனுடைய மலையில் இப்படி நிகழ்ந்தது என்றாவது, அவனுடைய வேல்போல் கூரிய விழியுடையாள் என்றாவது, அவனுடைய பகைவர்கள் போகும் பாலை நிலம் என்றாவது சொல்வார்கள். பிற் காலத்தில் எழுந்த கோவை நூல்கள் யாவும் பாட்டுடைத் தலைவர்களைச் சார்த்து வகையில் புகழ்வனவே. மாணிக்க வாசகர் பாடிய திருச்சிற்றம்பலக் கோவையாரின் பாட்டுடைத் தலைவன் தில்லையம்பலப் பெருமான். அந்த நூலில் வரும் காதல் நாடகத்தின் தலைவன் இறைவன் அல்ல. ஆதலின் அக்கோவை அகப்பொருட் கோவை.
கலம்பகம், அந்தாதி முதலிய நூல்களில் பாட்டுடைத் தலைவனையே கிளவித் தலைவனாக வைத்துப் பாடும் புறத் திணைப் பாடாண் திணையைச் சார்ந்த பாடல்களும், பாட்டுடைத் தலைவனைச் சார்த்து வகையிற் பாராட்டிப் பெயர் கூறாத தலைவனைக் கிளவித் தலைவனாக வைத்துப் பாடிய அகத்துறைப் பாடல்களும் இருக்கின்றன. “மதுரைப் பெருமான் தம்முடைய மாலையை இன்னும் அளிக்கவில்லையே!” என்பது போல வருவது புறத்திணைப் பாடாண்பாட்டு. “மதுரைப் பெருமானுடைய மலையில் என் காதலருடைய மாலையைப் பெறாமல் வாடுகின்றேன்” என்பது போல வருவது அகத்துறைப் பாட்டு.
ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவையில் உள்ள ஓர் அகத்துறைப் பாட்டைப் பார்க்கலாம்.
இந்த நிகழ்ச்சி நடக்கும் இடம் மலை செறிந்த குறிஞ்சி நிலம். ஞானசம்பந்தப் பெருமானுக்குரிய மலை என்று அவருடைய பெயரைச் சார்த்திச் சொல்கிறார் நம்பியாண்டார் நம்பி. இந்தப் பெரிய பூமியில் கனத்தையுடைய பெரிய மதில்களையுடைய சீகாழியில் திருவவதாரம் செய்த திருஞான சம்பந்தப் பெருமானுடைய காடுகள் நிரம்பிய மலையில் இந்தக் காதல் நிகழ்ச்சி நடைபெறுகிறதாம்.
இருநிலத்துக்
கனமா மதிற்காழி ஞானசம் பந்தன்
கடமலைவாய்.
அங்கே ஒரு தினைப்புனம். அதைக் காவல் புரிகிறாள் ஓர் இளமங்கை. அவளைக் கண்டு காமுறுகிறான் இளமையும் எழிலுமுடைய ஆடவன் ஒருவன். அவள் பரணின் மேலிருந்து கொண்டு தினைக்கதிரை மயிலும் கிளியும் மானும் உண்ணாமல் காவல் புரிந்து கொண்டிருக்கிறாள்.
அந்த ஆடவன் ஒரு பக்கத்திலிருந்து அவளுடைய செய்கையைக் கவனித்துக் கொண்டிருக்கிறான். அவள் எழிலைக் கண்டு கண்டு இன்புறுகிறான். அவள் கூந்தல் எவ்வளவு நீளமாக இருக்கிறது! அவள் சாயல் எவ்வளவு ஒயிலாக இருக்கிறது! மயிலைப் போல இருக்கிறது அந்தச் சாயல். அவள் பேசினாலோ கிளி கொஞ்சுவது போல இருக்கிறது. நேரே பாராமல் மறைவிலிருந்து அவள் பேசுவதைக் கேட்டால், நன்றாகப் பேசக் கற்றுக் கொடுத்த கிளி பேசுவது போலவே ஒரு மயக்கம் உண் டாகும். அவள் கண்ணிலுள்ள மருண்ட பார்வையை என் னென்று சொல்வது! மான் விழிப்பது போல விழிக்கிறாள்.
அவள் கூந்தல், சாயல், மொழி, விழி ஆகியவற்றை அந்த அழகன் கண்டும் கேட்டும் இன்புறுகிறான். ‘இவ்வளவு அழகான பெண்ணை இந்தத் தினைப்புனத்தைக் காக்கும்படி வைத்திருக்கிறார்களே; என்ன பேதைமை!!’ என்று எண்ணுகிறான். அடுத்தபடி மற்றோர் எண்ணம் வருகிறது.
அதை எண்ணித் தானே சிரித்துக் கொள்கிறான். ‘இவளை இங்கே காவல் புரிய வைத்தவர்கள் மயிலும் கிளியும் மானும் தினைக்கதிரை அணுக வொட்டாமல் இவள் ஓட்டுவாள் என்றல்லவா நினைத்திருக்கிறார்கள்? ஆனால் அதற்கு நேர்மாறாக, இவள் இருப்பதனால் அவை கூட்டம் கூட்டமாக இங்கே வரும்படியல்லவா ஆகிவிடும்?’ என்ற எண்ணந்தான் அது.
அது எப்படி?
மயில் வராமல் காக்க வேண்டியது தலைவியின் கடமை. அவளே மயிலைப் போல இருக்கிறாள். அவளைக் கண்டு, ‘இதோ ஒரு மயில் இருக்கிறதே! நம் இனம் இருக்கும் இடத்தில் என்ன பயம்?’ என்று எண்ணி மயில்கள் அந்த இடத்தை விட்டுப் போகாமல் நின்றுவிடுமே !
புனமா மயில்சாயல் கண்டுமுன் போகா.
(புனம் – காடு. சாயல் மென்மை.)
அடுத்தபடி கிளிகள் கதிர்களைக் கொத்திக் கொண்டு போய்விடும். அவற்றை வராமற் செய்ய வேண்டும். ஆனால் அவள் வாய்திறந்து பேசினால் அறிவுடைய மனிதர்களே கிளியென்று ஐயுறுவார்கள். அப்படி இருக்க, அங்கே வரும் கிளிகள் கேட்டால், “இங்கே நம்முடைய இனத்தைச் சேர்ந்த கிளி இருக்கிறது” என்று எண்ணி அந்த இடத்தை விட்டுப் போகாமல் இருக்கும்.
கிளி பிரியா.
பறவை இனங்கள் இருக்கட்டும். மலைப்பக்கத்தில் ஓடி யாடித் திரிகிற மான்களும் தினைக்கதிரைத் தின்று விளைவை அழித்துவிடும். அவள் விழிக்கிற விழியைப் பார்த்தால் மானைப் போலவே இருக்கிறது, மான்களும் அந்த விழியைக் கண்டு தம் இனமென்றெண்ணிப் போகாமல் இருந்து விடுமே!
இனமான் விழிஒக்கும் என்றுவிட்டு
ஏகா.
[இனம்மான் – கூட்டமாக உள்ள மான்கள். விழி ஒக்கும் – இவள் விழி நம் விழியை ஒக்கும்.]
எவற்றை ஓட்டவேண்டுமோ அவற்றை யெல்லாம் அழைத்துக் கூட்டம் போடும்படி செய்யும் நிலையில் இருக்கிறாள் அந்த அழகி. மயில்களை அவள் சாயல் அழைக்கிறது.
கிளிகளை அவள் மொழி அழைக்கிறது. மான்களை அவள் விழி வரவேற்கிறது. அவள் தினையைக் காவல் காக்கிறேன் என்று பேர் வைத்துக்கொண்டு மற்ற மாதர்களைப்போல் வந்திருந்தால் ஏதாவது பயன் உண்டா? தினைக்கதிர் அங்கே விளையப் போகிறதா? பூட்டை விடும் போதே கிளியும் மயிலும் மானும் தின்று அழித்துவிடுமே! கதிர்கள் எங்கே விளையப் போகின்றன?
தினைமாது இவள்காக்க எங்கே
விளையும் செழுங்கதிரே?
[தினையில் கதிர் எங்கே விளையும்?]
‘தினைக்கதிர்களைத் தலை நீட்டும்போதே அழித்துவிட வேண்டுமென்று எண்ணி இவளை இங்கே வைத்தால் வைக்கலாம். இவளாவது ! காவல் காக்கவாவது!’ என்று தலைவன் எண்ணுகிறான். மயிலும் கிளியும் மானும் அவளுடைய அங்க அழகில் மயங்கித் தினைக் கதிர்களை அழிக் கின்றனவோ இல்லையோ, தெரியாது; அவன் மனத்திலுள்ள வலிமையை அந்த அழகு அழிக்கிறது என்பது உண்மை. அதனால்தான் இப்படிப் பேசுகிறான்.
புனமா மயில்சாயல் கண்டுமுன்
போகா; கிளிபிரியா;
இனமான் விழிஒக்கும் என்றுவிட்டு
ஏகா; இருநிலத்துக்
கனமா மதிற்காழி ஞானசம்
பந்தன் கடமலைவாய்த்
தினைமாது இவள் காக்க எங்கே
விளையும் செழுங்கதிரே?
[காட்டில் உள்ள பெரிய மயில்கள் இவள் சாயலைக் கண்டு இவளும் தம் இனம் என்று எண்ணிப் போகா. கிளிகள் இவள் மொழியைக் கேட்டுத் தம் இனம் என்றெண்ணிப் பிரிந்து செல்லா. கூட்டமான மான்கள் இவள் விழி தம் விழியை ஒக்கும் என்றும் தம் இனம் என்றும் எண்ணி இவ்விடத்தை விட்டுப் போகா; பெரிய நிலவுலகத்தில் பெருமையையுடைய மதில் சூழ்ந்த சீகாழியில் திருவ வதாரம் செய்த திருஞான சம்பந்தனுக்குரிய காட்டையுடைய மலையினிடத்தில், மாதாகிய இவள் காவல் புரியத் தினையில் எங்கே வளப்பமுள்ள கதிர் விளையும்?
புனம் – காடு; தினைப்புனமுமாம். கனம் என்பதைக் காழி யுடன் சேர்த்தும் சொல்லலாம். கடம் – காடு. மாது காக்கத் தினையில் கதிர் எங்கே விளையும்? எங்கே என்பது எப்படி என்ற பொருளில் வந்தது; எங்ஙனம் என்பதைப் போல.]
இது அகப் பொருளில் குறிஞ்சித்திணையைச் சார்ந்த பாட்டு. களவுக் காலத்தில் பகற் குறியில் தலைவியைக் கண்ட தலைவன் தன் நெஞ்சோடு சொல்லியது.
ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவையில் இருபத்தேழாவது பாட்டு இது.
முற்றும்.
★ ★ ★



