ஒன்றே ஒன்று
கி. வா. ஜகந்நாதன்

கரை சேர்ந்த கலம்

“சாகிற காலத்தில் சங்கரா, சங்கரா என்று சொல்வது போல” என்பது ஒரு பழமொழி. இறைவனுடைய திருநாமத்தைச் சொல்வதும், அவனைப் பக்தி பண்ணுவதும் சில நாட் பழக்கத்தாலே வந்துவிடுவன அல்ல; பல காலம் பழகிப் பழகி வரவேண்டியவை. “இறக்கும் தருணத்தில் இறைவனை நினைந்தால் அவன் அருள் கிடைக்கும்; பிறவித் துயர் நீங்கும்” என்று நூல்கள் கூறுகின்றன. “இப்போதே என்ன அவசரம்? வயசாகிற போது பார்த்துக் கொள்ளலாமே!” என்று இருந்துவிட்டால், முதுமையில் புதிதாக ஒரு பழக்கம் வராது. சாகிற காலத்தில் சங்கரா, சங்கரா என்று சொல்ல வரவேண்டுமானால், வாழ்கிற போதே அப்படிச் சொல்லிப் பழகியிருக்க வேண்டும். பழமொழி இந்தக் கருத்தைத் தெரிவிக்க எழுந்தது.

பலகாலம் உத்தியோகம் செய்து வாழ்ந்தவர்கள் ஓய்வு பெறுகிறார்கள். ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்குப் பழைய வாசனை மாறுவதில்லை. திடீரென்று தம்மையும் அறியாமல், “ஏ! பியூன்!” என்று அழைக்கிறார்கள். உத்தியோகசாலைக்குப் போவதும், அங்கே வேலை பார்ப்பதும், மாலையில் வீட்டுக்கு வந்து கூட்டுக்குள் அடைவது போல அடைவதுமே அவர்களுக்கு வழக்கமாகி விட்டன. ஓய்வு பெற்ற பிறகு புதிய வேலை ஒன்றும் செய்ய வருவதில்லை. ஆகவே ஓய்வு என்பது சிறை வாழ்க்கையைப் போல ஆகி விடுகிறது. மனம் தொய்ந்து உடம்பு துருப்பிடித்து விரைவில் இறந்து போகிறார்கள். உத்தியோக வாழ்வில் சுறுசுறுப்பும் பலமும் உடையவர்களாக இருந்தவர்கள் ஓய்வு பெற்ற பிறகு வலிமையிழந்து விரைவில் இறந்து போவது ஆச்சரியமாகத் தோன்றுகிறது. உத்தியோகத்தையன்றி அவர்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது. செய்வதற்கு ஒன்றும் இல்லாமையால் அவர்கள் வாழ்க்கை சூனியம் போலத் தோன்றுகிறது. புதிய முயற்சியும் புதிய சூழ்நிலையும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அதற்கு நெடுநாட் பழக்கம் வேண்டும் அல்லவா? அதனால் அவர்கள் மனம் குமைந்து வலிமையிழந்து போகிறார்கள்.

அப்படியின்றி உத்தியோக வாழ்வில் தமக்கு விருப்பமான ஒரு துறையில் பொழுது போக்கும் பழக்கத்தைச் செய்து கொண்டவர்கள் உத்தியோகத்தினின்றும் விடுதலை பெற்ற பிறகு, அந்தப் பொழுது போக்கு வேலையிலே ஈடுபட்டு மகிழ்கிறார்கள். அத்தகைய பொழுது போக்குச் செயல்களை ‘ஹாபி’ (Hobby) என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். அப்படிச் செய்கிறவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் சுறுசுறுப்பாகவும் உடல் நலன் குறையாதவர்களாகவும் விளங்குகிறார்கள். அவர்கள் செய்யும் காரியம் புதியதாகச் செய்வது அன்று; முன்பிருந்தே பழகி வந்தது.

வாழ்க்கையை வரையறை செய்துகொண்டு, உள்ளத்தைக் கண்டபடி சிதறவிடாமல் நம்முடைய அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற வகையில் கடமைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். வாழ்வதற்கு வேண்டியது பொருள். அதை ஈட்ட உத்தியோகம் வேண்டும். உத்தியோகத்தில் ஈடுபடும் போதே ஓய்வு பெறுங் காலத்தில் பிறர் கையை எதிர் பாராதபடி எய்ப்பில் வைப்பாகப் பொருளைச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொருளாதார உண்மையை யாவரும் உணர்ந்திருக்கிறார்கள். செயலிலும் கொண்டு வருகிறார்கள்.

பலர் உத்தியோக வாழ்க்கைக்குப் பின் ஓய்வு பெறும் காலத்தை இப்போதே நினைந்து பொழுதுபோக்கான பழக்கத்தையும் பொருளையும் சேமிப்பது அறிவும் நியாயமுமான செயலானால், இந்த வாழ்வுக்குப் பின் நம் தளர்ச்சியைப் போக்கிக் கொள்ள ஏதாவது செய்வதுதானே அறிவுடைமைக்கு அழகு? நியாயமும் அதுதானே?

இப்போது ஈட்டும் பொருள் பின்பு பயன்படுகிறது. இந்தப் பொருள் இப்பிறவி ஒழிந்தால் உடன் வராது. ஆதலின் இந்த வாழ்வின் முடிவாகிய மரணத்துக்குப் பின் நமக்குப் பாதுகாப்பாக எது நிற்கும் என்பதைத் தெரிந்து கொண்டு அதைச் சேமிக்க வேண்டும். அப்போது இன் பம் அடைவதற்குரிய பழக்கத்தை இப்போதிலிருந்து செய்ய வேண்டும்.

அப்போது பாதுகாப்பாக நிற்கும் பொருள் எது? அப்போது இன்பத்தைத் தரும் பழக்கம் எது ?

பொருளாதாரம் இவ்வுலக வாழ்க்கைக்குத் தான் உதவும். அவ்வுலக வாழ்க்கைக்கு அருளாதாரம் வேண்டும்.

அருளிலார்க் கவ்வுலகம் இல்லை; பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

என்று வள்ளுவர் கூறுகிறார். ஆதலின் அருளைச் சேமித்துக் கொண்டால் இவ் வாழ்வுக்குப் பின்னும் நன்றாக வாழலாம். அந்த அருளைச் சேமிப்பதற்குரிய செயல்களை இப்போதே செய்து பழக வேண்டும்.

இறைவன் திருவருளைப் பெறுவது, யாரோ செல்வரைப் புகழ்ந்து முகமன் பேசி அவரிடமிருந்து பொருளைப் பெறுவது போன்றதன்று. அருள் என்பது காசு பணம் போல், ஆடை அணி போல உருண்டு திரண்டு வாங்கவும் கொடுக்கவும் அமைந்தது அன்று. அது ஒரு நிலை. உலகில் நாம் இன்பம் துன்பம் என்று சொல்கிற இரண்டு நிலைகளை அறிவோம். கடலில் அலை உயர்ந்தால் அதன்கீழே சற்றே குழிவு தோன்றும். அலையும் குழிவும் இல்லாத கடல் அமைதியாக இருக்கும். இன்பம் என்பதும் துன்பம் என்பதும் ஒன்றனோடு ஒன்று தொடர்புடையன. அவ்விரண்டும் இல்லாத சாந்த நிலை ஒன்று உண்டு. அலையடங்கின கடலைப் போன்ற அமைதி நிலை அது அங்கே துன்பம் சிறிதும் இல்லாமையால் அதை இன்ப மென்று சொல்கிறோம். நாம் அநுபவத்தில் அடையும் இன்பம் அன்று அது. உலகியலோடு சாராத, இன்ப துன்ப எல்லை நீங்கின, உபசாந்த நிலை அது.

அந்த நிலையே இறைவனுடைய அருளால் விளைவது. அவனுடைய அருள் என்ற சக்தி நம்மை அந்த நிலையில் சேர்க்கும். அறியாமை நீங்கி அச்சம் அற்று எல்லாவுயிர் களுக்கும் இனியனாக அன்பு செய்து வாழ்பவர்களுக்கு அந்த நிலையை அடைய வழி திறக்கும்.

அன்பு வாழ்க்கை வாழ்வது எளிதன்று. உலகத்தின் உண்மையைத் தெரிந்துகொண்டு, எல்லாம் இறைவன் அருளாணையால் நிகழ்வன என்பதையும் அறிந்து, உயிருக்கு இன்னதுதான் இன்பம் என்ற உணர்வு தோன்றினால் அந்த வாழ்க்கை எளிதாகும். அதற்கு முதலில் இறைவ னிடத்தில் அன்பு உண்டாக வேண்டும். பற்றற்ற இறைவனைப் பற்றுகின்ற அன்புமுறுக முறுக, அறியாமையினால் பற்றிய மற்றப் பற்றுகள் தாமே நீங்கும்.

இறைவனிடம் அன்பு செய்வது என்பது மன மொழி மெய்களால் அவனோடு தொடர்புடைய செயல்களைச் செய்வதேயாகும். நமக்கு நம்முடைய உடம்பிலே மிகவும் திண்ணமான பற்று இருக்கிறது. அதனால் நம்முடைய எண்ணம்,பேச்சு,செயல் எல்லாம் இந்த உடம்பை வளர்க்கும் நெறியிலே அமைகின்றன. இது மாறி உயிரை வளர்த்து அதற்கு இன்பம் உண்டாகும்படியான ஆர்வம் எழும்போது, உயிருக்குயிராகிய பசுபதியினிடம் அன்பு உண்டாகும். அவனைப் பற்றியே சிந்திப்போம்; அவனைப் பற்றியே பேசுவோம்; அவனோடு தொடர்புடைய செயல்களையே செய்வோம்.

இதற்கு நீண்ட நாள் பழக்கம் வேண்டும். ஆயிரம் ஆண்டு, ஈராயிரம் ஆண்டு என்று பழக்கம் செய்ய நமக்கு இயலாது. நாம் பெற்றிருப்பது சில வாழ் நாட்களே. நெடுநாள் பழகினால்தான் வரும் என்று உணர்ந்து கொண்டால் அந்த நல்ல பழக்கத்தில் ஈடுபட உடனே முந்தவேண்டும் அல்லவா? இருக்கிற நாளோ மிகக் குறைவு. அவற் றில் ஒரு நாளையாவது வீணாக்கலாமா?

இறைவனுடைய திருநாமத்தைச் சொல்வது அருளா தாரம் பெறும் முயற்சி வகைகளில் ஒன்று. அதனால் நமக்கு நன்மை உண்டு. இறக்கும்போது அதைப் புதியதாகக் கற்றுக்கொண்டு சொல்லமுடியாது. முன்பே பழக வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு முன்பாகவே பழகுகிறோமோ அவ்வளவுக் கவ்வளவு நல்லது. இந்தப் பிறவிக்கு முன்பு நாம் சொன்னோமோ, இல்லையோ நமக்குத் தெரியாது. நாம் பிரத்தியட்சமாகக் காண்பது இப்போது நிகழும் வாழ்க்கையைத்தான். ஆகவே இந்த வாழ்க்கை தொடங்கும் போதே அந்தப் பழக்கம் உண்டானால் மிக மிக நல்லது. பிறந்தவுடன் இறைவனை நினைக்கவும், அவன் நாமத்தைச் சொல்லவும் நம்மால் இயலாது. அறிவு வராத பருவம் அது; பேச்சு வராத குழவிப் பருவம் அது. இது இன்ன பொருள் என்று நினைக்கும் ஆற்றல் எப்போது வரு கிறதோ. அப்போதே இறைவனை நினைக்கத் தொடங்கிவிட வேண்டும். எப்போது பேசவருகிறதோ அப்போதே அவன் நாமத்தைச் சொல்லத் தொடங்கிவிட வேண்டும்.

ஒவ்வொரு நிமிஷ உழைப்புக்கும் பத்து ரூபாயென்று சொல்லி ஒரு முதலாளி வேலை வாங்குகிறான். இரவும் பகலும் வேலை நடைபெறுகிறது. தொழிலாளி பத்து மணிக்கா போவான்? உடம்பு நலிவிருந்தால் கூட எவ்வளவு விரைவில் எழுந்து செல்லலாமோ, அவ்வளவு விரைவில் எழுந்து செல்வான்; தன் சக்தி எந்த மட்டிலும் இடம் கொடுக்குமோ அந்த மட்டிலும் அவன் வேலை செய்வான். எல்லாம் பொருளுக்காக அருளைச் சேமிக்கும் அன்பனும் அப்படித்தான் இருப்பான். பேசத் தொடங்கும் போதே இறைவன் நாமத்தைப் பேசுவான்.

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்

என்று காரைக்காலம்மையார் சொல்கிறார்.

“அருளாதார நெறியில் திருநாமத்தைச் சொல்லும் பழக்கத்தை வார்த்தை பேசும் ஆற்றல் தோன்றும் போதே தொடங்கிக் கொள்ளுங்கள்” என்று கபிலதேவ நாயனார் என்ற பக்தர் உபதேசம் செய்கிறார்.

உரைவந்து உறும்பதத்தே உரைமின்கள்

[பேச்சு வந்து அமையும் பருவத்தில் (இறைவன் திருநாமங் களைச்) சொல்லுங்கள். பதம் – செவ்வி; பருவம்.]

இந்தப் பழக்கம் நமக்குப் பாதுகாப்பாக அமையும். இந்த வாழ்க்கையின் முடிவில் மரணம் நேரும் போது காலன் வருவான். அவனால் வரும் துன்பத்துக்கு மாற்றாக அருளாதாரம் வேண்டும். அதை இப்போதிருந்தே தேடிக் கொள்ள வேண்டும்.

“அதற்குள் என்ன அவசரம்? போகப் போகப் பார்த்துக் கொள்ளலாமே!” என்று சிலர் சொல்லலாம்.

உலக வாழ்விலே ஈடுபட்டுவிட்டால் ஒன்றை விட்டு ஒன்று பற்றிப் பற்றி நாள் போய்க்கொண்டே இருக்கும். நமக்காகச் சம்பாதிக்கப் புகுந்து, பின்பு நம் மனைவிக்காகவும் உழைக்க முற்பட்டு, அப்பால் நம் பிள்ளைகளுக்கும் மற்றச் சுற்றத்தாருக்குமாகப் பலவகை முயற்சிகளைச் செய்வோம். பிரபஞ்ச வியாபாரம் வளர்ந்து கொண்டே வரும்; ஆசை விரியும். அதற்கு ஓர் எல்லைக் கோடே இராது. நம் ஆசையை ஓரிடத்தில் நிறுத்திக்கொண்டு, இறைவன் திருநாமத்தைச் சொல்லலாம் என்பது நடவாத காரியம். பொருளாதார வாழ்வினிடையே அருளாதாரத்துக்கும் வழி தேடவேண்டும்.

குழந்தை பையனாகிப் பையன் காளையாகிக் காளை பெரிய மனிதனாகிக் கிழவனாகிறான். இந்த நிலைகள் ஒன்றனோடு ஒன்று தொடர்ந்தே நிகழ்வதனால் இடையில் தனியே நின்று பார்க்கும் நினைவு வராது. நம் கண்முன்னே குழந்தை பெரியவனாகி ஒரு குழந்தைக்குத் தந்தையாகி விடுகிறான்.

பல ஆண்டுகள் நாம் பழகிய ஓர் ஊருக்குப் போகாமல் பிறகு போகிறோம். நாம் முன்பு பார்த்த குழந்தைகள் இப்போது வளர்ந்து காளைகளாகி விட்டார்கள். இளைஞர்கள் கிழவர்களாகி விட்டார்கள். ”இது என்னப்பா வேடிக்கையாக இருக்கிறது! நீ நேற்றுப் பிள்ளை; அதற்குள் தலை நரைத்துக் கிழவனாகி விட்டாயே!” என்று பேசுகிறோம். மற்றவர்களைக் கண்டு சொல்லுகிற நாம், நமக்கும் இந்த மாற்றம் உண்டாகிறது என்பதை மறந்து விடுகிறோம். கபிலர் அதை நினைப்பூட்டுகிறார். “பேசத் தெரிந்தபோதே இறைவனைப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாமென்று இருந்தால், முதுமைப் பருவம் வர நெடுநாள் செல்லாது. விரைவிலே வந்துவிடும்” என்று எச்சரிக்கை செய்கிறார்.

உரைவந் துறும்பதத் தேஉரை மின்கள்; அன்
றாயின், இப்பால் தரைவந் துறும்.

[பேச வரும் பருவத்தில் (இறைவன் நாமத்தைச்) சொல்லுங்கள்: அல்லாவிடின் இவ்வாழ்வில் (விரைவாக) நரை வந்தடையும்.

இப்பால் – இவ்வாழ்க்கையாகிய பகுதியில்.]

நரை வந்துவிட்டது என்றால் மக்கள் அஞ்சுகிறார்கள். அழகு குலைந்துவிட்டதே என்பது முக்கியமான காரணம் அன்று. நரை மூப்புக்கு அறிகுறி, மூப்பு மரணத்தின் முன் வாசல். மரணம் வருமே என்ற அச்சத்தை நரை காட்டுகிறது.

தசரதன் ஒரு நாள் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டான். காதோரத்தில் ஒரு நரை மயிர் தெரிந்தது. உடனே அவனுக்குத் தான் கிழவனாகிவிட்ட உணர்வு வந்தது.

“இனி நாம் பொருளாதார வாழ்க் கையை மாற்றிக்கொண்டு அருளாதார வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்” என்ற நினைவும் உடனே வந்து விட்டதாம்.

அறிவுடையவர்களுக்கு நரை வந்தது தெரிந்து உணர்வும் உடன் வரும். ஆனால் தலை நரைத்தாலும் ஆசை நரைக்காத மக்கள் பலர் உலகில் இருக்கிறார்கள். நரையே நம்மை அறியாமல் வரும்போது, அதற்கு அடுத்த மரணம் விரைவிலும் விரைவாக வருவது ஆச்சரியம் அன்று, நரை வந்த பின்பு மரணம் வரும்; மரணத்தை நிகழ்த்துகின்ற காலன் வந்து நிற்பான். முதுமையைக் காட்டுவது நரை; மரணத்தைக் கூட்டுபவன் காலன். இதையும் நினைப்பூட்டு கிறார் கபிலர்.

இப்பால்
நரைவந் துறும்; பின்னை வந்துறும்
காலன்.

[இக்காலப் பகுதியில் நரைவந்து அடையும்; பின்பு காலன் வந்தடைவான்.]

“ஆகையினால் உரைவந்து உறும் பதத்தே உரைமின்கள்” என்று கபிலர் உபதேசம் செய்கிறார். உரைமின்கள் என்று சொல்லிவிட்டு, ஏன் உரைக்க வேண்டும் என்று காரணம் சொன்னார். எதை உரைக்க வேண்டுமென்பதைப் பின்னே சொல்கிறார்.

இறைவன் திருநாமத்தை உரைக்கவேண்டும் என்று சொல்கிறார். இறைவனை அடையாளம் சொல்லி, அவன் நாமத்தைச் சொல்லுங்கள் என்று பாடுகிறார். அவர் கூறும் அடையாளம் அழகாக இருக்கிறது.

அவர் இறைவன் திருநாமங்களைச் சொல்லி அடையாளம் காட்டவில்லை. அவனுடைய உருவத்தைக் காட்டவும் இல்லை. அவன் இருக்குமிடத்தைச் சொல்லி, அங்குள்ள பெருமானைப் பற்றிப் பேசுங்கள் என்று சொல்கிறார். அந்த இடம் பெரிய சிவஸ்தலமாகிய மறைக்காடு; வேதாரண்யம். அங்கே மாணிக்கம் போல் அரிய பொருளாய், அறியாமையிருளோட்டும் ஞான ஒளி வீசுபவனாய், விலை மதிக்கலாகாததாய், மக்கள் முடிமேலும் இருதயத்துக் கருகிலும் பூணுபவனாய், எவ்விடத்து வைத்தாலும் அவ்விடத்துக்குப் பெருமை தருபவனாய் இறைவன் விளங்குகிறான்.

மறைக்காடு எப்படி இருக்கிறது? அது கடற்கரையில் உள்ள ஊர்; கடற்கரை வியாபாரம் நடந்த இடம். கடலில் யானைகள் வந்து இறங்கும். கஜாந்த ஐசுவரியம் என்று வளப்பத்துக்கு யானையைத் தலை எல்லையாகச் சொல்வது வழக்கம். யானை வந்து இறங்கும் என்றால் மற்ற ஐசுவரியங்களைப் பற்றிச் சொல்ல வேண்டாம். புலவராகிய கபிலர் யானை வந்து இறங்குவதை அழகாகச் சொல்கிறார்.

நரைவரும், பின்னால் காலன் வருவான் என்று துன்பங்களை அடுக்கடுக்காகச் சொன்னவர் அதுபோலவே இங்கே வளமான பொருள்களை அடுக்கடுக்காகச் சொல்கிறார்.

கடலில் அலை வீசிக்கொண்டிருக்கும். அந்த அலைகள் முத்துக்களைத் தள்ளிக்கொண்டு கரையில் வந்து சேருகின்றன. அந்தக் கரையில் நெடுநாள் கடற்பரப்பிலே வந்த கப்பல் வந்து சேர்கிறது. அந்தக் கப்பலிலிருந்து திண்ணிய துதிக்கையையும் வலிய காலையும் மலை போன்ற உருவத்தையும் உடைய யானை வந்து இறங்குகின்றது. இவை வந்து சேரும் கடலின் கரையிலே பெரிய நகரமாகிய மறைக்காடு இருக்கிறதாம். அங்கே மணியைப் போன்ற இறைவன் எழுந்தருளி யிருக்கிறான்.

திரைவந்து உறும்கரைக் கேகலம்
வந்துறத் திண்கைவன்தாள்
வரைவந்து உறும்கடல் மாமறைக்
காட்டுளம் மணியினையே

[நல்ல முத்துக்களைத் தள்ளிக்கொண்டு அலைகள் வந்து சாரும் கரையில் கப்பல் வந்து சேர, அதிலிருந்து திண்ணிய துதிக்கையையும் வலிய கால்களையும் உடைய மலை போன்ற யானைகள் வந்து இறங்கும் கடலையுடைய பெரிய மறைக் காட்டிலுள்ள, அடியவர்களாகிய எங்கள் சொத்தாகிய மணி போன்ற இறைவனை – உரை மின்கள்,

இடறுதல் – தள்ளுதல். திரை – அலை. கலம் – கப்பல். வரை – மலை. வரை யென்றது முன் உள்ள அடைகளால் யானையைக் குறித்தது. எம் மணியினை உரைமின்கள் என்று கூட்டவேண்டும்.]

அலைகள் முத்துக்களைக் கொணர்ந்து சேர்க்க, கப்பல்கள் யானைகளைக் கொணர்ந்து சேர்க்க, அந்த நகரம் எவ்வளவு பொருள் வளம் உடையதாக இருக்கவேண்டும்! அதோடு அங்கே அருள் வளமும் உண்டு. அதை வழங்கும் மணி அங்கே இருக்கிறதல்லவா?

கரையில் வந்து அடையும் கப்பலை இங்கே நினைத்தது முன்னே சொன்ன செய்திக்குப் பொருத்தமாக இருக்கிறது. இந்தப் பிறவியாகிய பெரிய கடலில் உடம்பாகிய கப்பல் பயணம் செய்கிறது. இதனுள் யானை போன்ற உயிர் இருக்கிறது. கப்பலுக்கு யாதோர் இடையூறுமின்றிக் கரை சேர்ந்தால் யானை அங்கே இறங்கி இன்பத்தை அடையும். கப்பல் கரையைச் சேர அதிலுள்ள யானை பாதுகாப்பாக இறங்கும் இடம் மறைக்காடு. உடம்பாகிய கப்பல், வாழ்க்கைப் பிரயாணத்தை இடையூறின்றி முடித் துக்கொண்டு இறைவனுடைய இன்ப நிலையமாகிய முத்திக் கரை சேர்வதற்கும் இந்த மறைக்காடு இடமாக இருக்கிறது.

இந்தக் குறிப்பை உட்கொண்டே கப்பலையும் களிற்றையும் கடலையும் இங்கே கூறினார் கபிலர்.

பிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந் தலைக்கும்
துயர்த்திரை உவட்டிற் பெயர்ப்பிடம் அயர்த்துக்
குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து
நிறையெனும் கூம்பு முரிந்து குறையா
உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும்
மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம்
கலங்குபு கவிழா முன்னம்……
வம்பலர் தும்பை அம்பல வாணநின்
அருள் எனும் நலத்தார் பூட்டித்
திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே

என்று பட்டினத்துப் பிள்ளையார் கோயில் நான்மணி மாலையில், பிறவியைக் கடலாகவும், உடம்பைக் கப்பலாகவும், இறைவன் அருளைக் கரை சேர்க்கும் பிறாகவும், திருவடியைக் கரையாகவும் கூறுவது இங்கே நினைப்பதற்குரியது.

”உங்களுக்குக் காலம் போவது தெரியாது. நரை விரைவில் வந்துவிடும்; அதையடுத்துக் காலன் வருவான்; ஆதலின் அவை வருவதற்கு முன்னே, வாயிலிருந்து வார்த்தை தோன்றும் குழந்தைப் பருவத்திலேயே, மறைக் காட்டில் உள்ள இறைவனை நீங்கள் என்று கபிலர் அறிவுறுத்துகிறார்.

உரைவந்து உறும்பதத் தேஉரை
மின்கள்; அன் றாயின், இப்பால்
நரைவந்து உறும்; பின்னை வந்து உறும்
காலன்; நன் முத்து இடறித்
திரைவந்து உறும்கரைக் கேகலம்
வந்து உறத் திண்கைவன்தான்
வரைவந்து உறும்கடல் மாமறைக்
காட்டுஎம் மணியினையே.

[மணியினை உரைமின்கள்; அன்றாயின் நரை உறும்; பின்னை காலன் உறும் என்க.]

மணியினை உரையாவிட்டால் வரும் துன்பங்களைச் சொன்னார். உரைத்தால் வரும் இன்பத்தை வெளிப்படையாகச் சொல்லவில்லை. மறைக்காட்டின் பெருமையைச் சொல்வதைப் போலக் களிறு கப்பலில் வந்து கரையில் இனிதே வந்து இறங்கும் என்று கூறியதன் மூலமாக உயிர் இறைவன் அருள் பெற்று உய்யும் என்பதைக் குறிப்பாகப் பெறும்படி வைத்தார்.

இது கபில தேவ நாயனார் பாடிய சிவபெருமான் திரு இரட்டை மணிமாலையில் உள்ள 16-ஆவது பாட்டு.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !