ஒன்றே ஒன்று
கி. வா. ஜகந்நாதன்

சப்பாணி கொட்டும் ஞானக் கன்று

குழந்தைக்குக் கதை சொல்லும் பாட்டி அதன் மனத்திலே பல வகையான சித்திரங்களை உருவாக்குகிறாள். அவள் கதை சொல்லும் பாணி அப்படி இருக்கிறது. “ஒரே ஓர் ஊரில் ஒரு ராஜா. அவன் மிகவும் அழகாக இருந்தான்” என்று ஆரம்பித்துக் கதை சொல்லுகிறாள். அவள் கூறுகிற வர்ணனையினால் அந்த ராஜா மிகப் பெரியவன். மிக்க ஆற்றலுடையவன், மிகவும் அறிவாளி என்ற எண்ணங்கள் குழந்தைக்கு உண்டாகின்றன. அந்த எண்ணங்கள் உரு இல்லாமல் அருவாகக் குழந்தை மனத்தில் தங்குவது அரிது. அதன் மனத்தில் வானை முட்டும் உயரமுள்ள ஓர் அரசன் நிற்கிறான். அவன் முடி சோதி விட்டு ஒளிர்கிறது. நுட்பமாக உள்ளவற்றுக்கு உருவம் கொடுத்துச் சொல்கிறாள் பாட்டி. குழந்தையும் அந்த உருவத்தைப் பெரிதாக்கித் தன் மனத்தில் வாங்கிக் கொள்கிறது. ராஜா என்றால் மிக உயரமாகவும் பருமனாகவும் மலை போலவும் உள்ள உருவம் ஒன்றை அது நினைக்கிறது. ஆற்றல், அறிவு ஆகிய பெருமைகளையெல்லாம் அந்தப் பிரம்மாண்டமான உருவமாகவே காணுகிறது. அப்படிப் பார்த்தால்தான் அதனுடைய இளைய மனத்துக்கு இவன் பெரியவன் என்ற உணர்ச்சி தட்டுகிறது.

ஒருவிதத்தில் மனிதசாதி குழந்தை நிலையில்தான் இருக்கிறது. நுட்பமான உண்மைகளை அறிவினால் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அறிவு அந்த நுட்பத்தை உணர்கின்ற கூர்மை படைக்கவில்லை. நுட்பத்திலும் நுட்பமான கடவுளைப் பற்றிச் சொன்னால் மக்களுடைய மனம் உடனே பற்றிக் கொள்வதில்லை. புலனுகர்ச்சிக்கு உட்பட்டவற்றை உணரத் தான் மனத்துக்கு ஆற்றலுண்டு. அறிவு கூர்மையானால் அவற்றின் கருவை ஒருவாறு உணரலாம்; கடவுள் தத்துவத்தின் நுட்பத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

கட்புலனுக்குத் தோற்றும் வடிவாகிய பெருமைதான் தெளிவாக யாவருக்கும் தெரிகிறது. வேறு வகையான பெருமைகளைச் சுட்டும் போது வடிவுடைய பெரிய பொருளை உவமை யாக்கியோ அதுவாக உருவகப்படுத்தியோ சொல்லுவது கவிஞர்கள் வழக்கம். உலக வழக்கிலும் சில சமயங்களில் அதைக் காணலாம்.

“மலை போல நீ இருக்கிறபோது எனக்கு என்ன பயம்?” என்று ஒரு நண்பனைப் பார்த்து மற்றொரு நண்பன் சொல்கிறான். அவன் பேராற்றலுடையவன் என்பதையே அந்த உவமையால் நினைக்கிறானே யன்றி, மலையைப் போலப் பெருத்த உடம்பை உடையவன் என்று எண்ணுவதில்லை. கடல் போன்ற அறிவு என்று சொல்லும்போது இத்தனை மைல் நீளம், இத்தனை மைல் அகலம் என்ற நீளம், இத்தனை நீட்டலளவையைக் கருதுவதில்லை; பரந்த அறிவு என்ற நுட்பமான அளவைக் கண்ணால் பார்க்கும் வடிவத்தின் அளவைச் சொல்லி உணர வைக்கிறோம். கவிஞர்கள், “மல்லல் மலையனைய மாதவர்”, “கருணைமா கடல்” என்று சொல்லுவதும் நுட்பமான பொருளைப் பருப் பொருளால் உணர்த்தும் உத்தியைச் சார்ந்ததே யாகும்.

விநாயகர் பேராற்றல் உடையவர்; பெருங் கருணை யுடையவர். அவர் சிவபிரானுக்குக் குழந்தைதான். ஆனால் நமக்கெல்லாம் மிகமிகப் பெரிய கடவுள். கடவுட் குழந்தையாகிய அவருடைய விளையாடல் அவருடைய ஆற்றலுக்கு ஏற்றபடி அமையும். பசுவின் கன்று துள்ளி ஓடுவதற்கும் யானைக்குட்டி ஓடி ஆடுவதற்கும் வேறுபாடு உண்டு. யானைக்குட்டி ஓடினால் நிலம் அதிரும்.

விநாயகராகிய யானைக்குட்டி விளையாடுகிறது. நாம் காணும் யானைக் கன்றைப் போலவா விநாயகர் இருப்பார்? அவர் மிகமிகப் பெரியவர்: மலைபோன்றவர்.

குழந்தைகள் இரண்டு கைகளையும் தட்டி விளையாடும். அதைச் சப்பாணி கொட்டுதல் என்று சொல்வார்கள். சப்பாணிப் பருவம் என்று பிள்ளைத் தமிழில் ஒரு பருவ வருணனை வரும். விநாயகர் சப்பாணி கொட்டுகிறார். அந்த ஓசை உரமான ஓசை. வெடி வெடித்தால் நிலம் அதிர்கிறது. பேராற்றலுள்ள விநாயகர் சப்பாணி கொட்டும் போதும் அப்படியே நிலம் துளங்குகிறது. நிலத்தின் நடுவாக உயர்ந்து நிற்கும் சலனமற்ற மேருமலை கூடச் சலனம் அடைகிறது. வானுலகே அதிர்கிறது.

விநாயகர் கை பெரிது; அவற்றால் சப்பாணி கொட்டினால் பலத்த ஓசை கேட்கும்’ என்று சொல்வதை விட அப்படிக் கொட்டியதால் விளையும் விளைவைச் சொன்னால், அந்த யானையின் பலம் தெளிவாகும்.

அதிரா வடிகள் என்ற அடியவர் விநாயகருடைய ஆற்றலைச் சொல்ல வருகிறார். அவர் சப்பாணி கொட்டும்போது நிலந்துளங்கியதாம்; மேரு நடுங்கியதாம்; அகன்று உயர்ந்த வானம் அதிர்ந்ததாம்.

நிலம்துளங்க, மேருத் துளங்க, நெடுவான்
தலம் துளங்கச் சப்பாணி கொட்டும்.

[பூமி அதிரவும்,மேருமலை நடுங்கவும் உயர்ந்த வானமாகிய இடம் நடுங்கவும் சப்பாணி கொட்டுவான். துளங்க – நடுங்க. தலம் – இடம்.]

பூமி, அதன் அச்சு, வானம் இவை துளங்கினால் இவற்றினூடே உள்ள எல்லாப் பொருள்களும் அசையாமல் நிற்குமா? அவையும் அசையத்தானே வேண்டும்? விநாயகர் ஆடினால் உலகமே ஆடும் என்று சொல்வதன் விரிவே இது.

விநாயகர் யார்? அவர் குழந்தை; அன்பர்களுடைய உள்ளத்திலே கலந்து இடங்கொள்ளும் குழந்தைத் தெய்வம். குழந்தை என்றவுடன் யாருடைய குழந்தை என்ற கேள்வி எழுவது இயற்கை. சிவபெருமான் பெற்ற கன்று அவர். அவர் எத்தகையவர் என்பதைச் சுருக்கமாகச் சொல்லுகிறார் ஆசிரியர். அந்தச் சுருக்கத்திலும் ஓர் உண்மையைப் புலப்படுத்துகிறார்.

சிவபெருமானுக்குப் பிள்ளையென்று சொல்லும் போது, சிவபிரான் தந்தை, உமாதேவியார் தாயார், விநாயகர் அவ் விருவர்களுக்கும் பிறந்தவர் என்ற புராணக் கதை நினைவுக்கு வரும். உலகில் பிள்ளையென்றவுடன் தாய் தந்தையருடைய நினைவு வருவது இயற்கை. ஒருவன் ஒருத்தியை மணந்து அவளுடன் காம இன்பம் நுகர்ந்து பிள்ளையைப் பெறுகிறான்.

விநாயகரை இறைவன் பெற்றான் என்ற கதை, உலகத்துப் பிள்ளைப்பேற்றோடு சார்ந்தது அன்று. பிள்ளை தாய் தந்தையர் பெற்ற காம இன்ப நுகர்ச்சியின் விளைவு. காம இன்பம் இன்றிப் பிள்ளைப் பேறு இல்லை. இது உலக இயல். ஆனால், ‘சிவபெருமான் விநாயகரைப் பெற்றான்’ என்றால், அதற்கு முன் அவனும் காம இன்பத்தை நுகர்ந்தான்’ என்று உலகியலோடு சார்த்தி எண்ணக்கூடாது. இப்படிச் சொல்வனவெல்லாம் சில நுட்பமான உண்மைகளுக்கு உருக்கொடுத்துச் சொல்லும் முறையைச் சார்ந்தவை. சிவபெருமான் என்பது பரம் பொருளைக் குறிக்க வழங்கும் பெயர். அப்புரம் பொருளோடு இணைபிரியாமல் இருக்கும் அருளே உமாதேவியார். இறைவன் தன் அருளை வெளிப்படுத்தி உயிர்களுக்குப் பயன்படும் பொருட்டுப் பேராற்றலும் பெருங்கருணையும் உடையவனாக வந்து நலம் தருவான். அவன் எப்படி வந்தாலும் அந்த நிலை மூலப் பொருளின் தொடர்புடையது. இதையே அவன் எடுக்கும் கோலங்கள் காட்டுகின்றன. அத்தகைய கோலங்களில் மகனைப் போல வரும் விநாயகக் கோலமும் முருகக் கோலமும் சார்ந்தவை.

‘சிவபிரான் பெற்ற பிள்ளை’ என்று சொல்லும்போது காமம், அதன் விளைவு என்பவற்றின் தொடர்பே அங்கு இல்லை என்பதை நினைவுறுத்த எண்ணிய அதிராவடிகள், சிவபிரானைக் காமாரி என்று சொல்கிறார். அவன் காமனையே எரித்தவன். அவன் இருக்கும் இடத்தில் காமனுக்கு வேலை யில்லை. காமனையே எரித்தவன் காமம் உடையவனாகிப் பிள்ளையைப் பெற்றான் என்று சொல்லலாமா? உலகத்துப் பிள்ளைப் பேறு காம ராஜ்யப் பிறப்பு; இந்தப் பேறோ ஞான ராஜ்யப் பிறப்பு. உலகத்துப் பிள்ளைகள் சரீரத்தைப் பெற்று ஊன் வளர்ச்சியையே தம் வளர்ச்சியாகப் பெற்றவர்கள். இந்தப் பிள்ளை ஞானிகளுடைய தியானத்திலும் அடியார்களுடைய சிந்தனையிலும் புலவர்களின் கற்பனையிலும் உதயமாகி விளையாடும் குழந்தை.

காமாரி ஈன்றமணி

என்று அதிராவடிகள் விநாயகரைச் சொல்கிறார். அவன் அடியார்களோடு கலந்து அவர்கள் உள்ளத்தை இடமாகக் கொள்கிறான்; அவர்களுடைய தியானத்திலே வளர்கிறான்.

கலந்து உளங்கொள்
காமாரி ஈன்ற மணி.

தானே ஒளிவிடும் மணியைப் போல ஞான ஒளி வீசும் விநாயகர் எத்தகையவர்?

அவர் கருணையே வடிவானவர். தம் அருளை வேண்டுவாருக்கு வழங்கும் தண்ணளியுடையவர். அவர் நீண்ட துதிக்கையை உடையவர். அது அவருடைய ஈகையைக் குறிக்கும் அடையாளம், கன்றானாலும் மதம் பொழிகிறது. மற்ற யானைகளின் மதம் போன்றதன்று இது.

பசுபோதக் கவளமிடக் களித்துண்டு
கருணை என்னும்
வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை
நினைந்துவரு வினைகள் தீர்ப்பாம்

என்பர் பரஞ்சோதி முனிவர்.

மதம் புறப்படுகின்ற இடங்களிலிருந்து மழையைப் போல மதத்தைப் பில்கவிடுகிற யானைக் கன்று விநாயகர்; அவருடைய அருள் வெள்ளந்தான் அப்படி மதமாகப் பொழிகிறது.

கருங்கைக் கடதடத்து
மாமாரி ஈன்ற மணி.

[கரிய துதிக்கையையும் மதம் பிறக்கும் இடங்களில் பெரிய மழையைப் புறப்படவிடும் மணி போன்ற விநாயகர்.

கடம் – மதம். தடம் – இடம். மாரி -மழை. ஈன்ற-புறப் படவிடும்.]

விநாயகர் காமம் அகன்ற ஞான நிலத்திலே தோன்றியவர், அடியவர்களின் தியானத்துக்குப் பொருளாக இருப்பவர், கருணை மிக உடையவர், பேராற்றல் படைத்தவர் என்ற இத்தனையையும் நினைந்து பாடிய பாட்டு இது. இதைப் படித்துச் சொற்பொருள் தெளிந்து அவற்றினூடே பொருந்தியுள்ள குறிப்பை உணர்ந்தால் குழந்தையின் உள்ளத்தில் பாட்டி உண்டாக்கும் இன்பத்தை நம் உள்ளத்திலும் இந்தப் பாட்டு உண்டாக்கும்.

நிலம் துளங்க மேருத் துளங்க நெடுவான்
தலம் துளங்கச் சப்பாணி கொட்டும் கலந்து உளம்கொள் காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து
மாமாரி ஈன் ற மணி.

[கலந்து உளங்கொள் மணி,காமாரி ஈன்ற மணி, மாமாரியை ஈன்றமணி என்று தனித் தனியே கூட்டுக. மணி சப்பாணி கொட் டும் பாட்டு விநாயகரைப் பற்றியதாதலின், கலந்துளங்கொள் என்பதை அவருக்கே உரியதாக்குவது சிறந்தது.]

இது அதிராவடிகள் அருளிய மூத்தபிள்ளையார் திரு மும்மணிக் கோவையில் உள்ள இரண்டாவது பாட்டு.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !