ஒன்றே ஒன்று
கி. வா. ஜகந்நாதன்

மந்தியின் அன்பு

தாய் அன்பு என்பது எல்லாவற்றிலும் தூயது; உயர்ந்தது; பயனை எதிர்பாராமல் நிகழ்வது.

தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள உறவில் மனித குலத்தைக் காட்டிலும் விலங்குகள் சிறந்து நிற்கின்றன. அறிவு படைத்திருப்பதனால் அதன் நிழலாகத் தன்னலமும் விருப்பு வெறுப்பும் மனிதனுடைய உள்ளத்தில் எழுகின்றன. தான் பெற்ற குழந்தையை வீசி எறியும் தாய்மார்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய அறிவு, குழந்தையைப் பழி யுருவமாகப் பார்க்கிறது! விலங்கினத்தில் இந்தக்கேடு இல்லை. அவற்றிற்கு அறிவு இல்லை அல்லவா?

இதனால்தான் பேரன்பர்கள் இறைவனிடம் தாய்க்கும் குழந்தைக்குமிடையே உள்ள அன்பு இருக்க வேண்டுமென்று வற்புறுத்தும் போது மானிடத் தாயைக் காட் டிலும் வேறு தாயையே சொல்கிறார்கள்.

“கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே” என்பர் மாணிக்கவாசகர்.

நாகரிகமும் அறிவும் ஏற ஏற அன்பு எங்கோ மறைந்து புதைந்து போகிறது. நாகரிகம் அற்ற மலை வாழ் சாதியினரில் அன்பும் ஒழுக்கமும் சிறந்து நிற்கின்றன. தாய்மை யென்னும் பண்பை மக்களிடம் பார்ப்பதை விட மிகுதியாக விலங்கினங்களிடம் பார்க்கலாம்.

சங்க காலத்து நூல்களில் விலங்கினங்களிடம் உள்ள தாய்மையைப் புலவர்கள் பல வகையில் பாராட்டியிருக்கிறார்கள். திருஞான சம்பந்தர் தேவாரம் முதலியவற்றிலும் தாய்மைக் காட்சிகள் வரும்.

நக்கீரர் பாடிய திருவீங்கோய்மலை எழுபது என்ற நூலில் ஒரு காட்சி வருகிறது. அதை இப்போது பார்க்கலாம்.

திருவீங்கோய்மலை என்பது சோழ நாட்டில் தேவாரம் பெற்ற தலங்களில் ஒன்று; காவிரிக்கு வட கரையில் இருக்கிறது. திருவெங்கிநாதர் மலை என்று இப்போது அதன் பெயர் திரிந்து வழங்குகிறது. முசிரிக்கு அருகில் இருக்கிறது. காவிரியின் தென்கரையில் இருக்கும் கடம்பர் கோயில், வாட்போக்கி என்ற இரத்தின கிரி. திரு ஈங்கோய்மலை என்ற மூன்றும் தொடர்புடைய தலங்கள். ஒரே நாளில் மூன்று வேளைகளில் இந்த மூன்று தலங்களையும் தரிசித்தால் நலம் உண்டு என்று பக்தர்கள் கூறுவார் கள். “காலைக் கடம்பர், மத்தியான்னச் சொக்கர், அந்தித் திருவெங்கிநாதர்” என்று இந்த முறையைப் பற்றி ஒரு பழமொழி அந்தப் பக்கங்களில் வழங்குகிறது.

ஈங்கோய் என்றால் வண்டுகள் வைத்த தேனடை என்று பொருள். ஈ- வண்டு. கோய்-பை அல்லது அடை. இந்த மலையில் பண்டைக் காலத்தில் எங்கும் நிறைந்த தேனடைகள் இருந்தமையால் இந்தப் பெயரை வைத்தார்கள் போலும்.

நக்கீரர் ஈங்கோய் மலைக்கு வந்தார். எங்கே பார்த் தாலும் தேன் அடைகள். பல இடங்களில் அடைகளில் தேன் கசிந்து ஒழுகிக்கொண்டிருந்தது. குரங்குகள் கிளைக்குக் கிளை தாவிக்கொண்டிருந்தன. அவற்றைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தார். இயற்கையெழிலைக் கண் டால் அதிலே ஈடுபட்டு எல்லாவற்றையும் மறந்து நிற்பது புலவர்கள் இயல்பு அல்லவா?

ஒரு குரங்கு மாத்திரம் ஒரு மரத்தின் கிளையிலே படுத்திருந்தது. அது தாவக் காணவில்லை. அதன் அருகில் மிக இளைய குட்டி ஒன்று இருந்தது. அப்போதுதான் பெற்ற குட்டி போலத் தோன்றியது. குட்டியை ஈன்றெடுத்த தாய்க் குரங்கு அந்த இளைப்பினாலே எங்கும் போகாமல் அங்கேயே கிடந்தது. குட்டி கீச்சுக் கீச்சென்று கத்தியது. மந்தி பால் கொடுத்தது. அப்போதும் குட்டி கத்துவது நிற்கவில்லை. மந்தி சுற்றும் முற்றும் பார்த்தது; மேலே பார்த்தது. மலைப் பக்கத்தில் வளர்ந்த மரம் அது. மலைப்பாறையின் இடுக்குகளில் மிக உயரத்தில் அடையடையாகத் தேன் இருந்தது. அங்கிருந்து அது ஒழுகிக் கொண்டிருந்தது. அது மரத்தின் கீழே ஓரிடத்தில் தேங்கியிருந்தது. மந்தி உடனே கீழே இறங்கியது. குட்டி அதைக் கட்டிக் கொண்டே இருப்பதுதானே? மெல்லத் தேன் தங்கிய இடத்துக்கு வந்து தன் கையைத் தேனில் தோய்த்து அந்தத் தேனைக் குட்டிக்கு ஊட்டத் தொடங்கியது. அது அந்தத் தேனைச் சுவைக்கவில்லை. தன் குழந்தைக்கு ஊட்டியது என்ன தாயன்பு! குட்டி அப்புறம் ஏன் கத்துகிறது? அது பசித்திருந்தது. மந்தி தந்த பால் போதவில்லை. இப்போது இனித்த தேன் கிடைத்தது. தாய் தேனை ஊட்ட உண்டு மகிழ்ந்தது.

“இந்த மந்திக்குத் தன் குட்டியினிடம் எத்தனை அன்பு! இந்தக் காட்சியைக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைத்ததே!” என்று எண்ணி நக்கீரர் மகிழ்ந்தார்.

“அன்புக்குள் தாய் அன்பு மிகச் சிறந்தது; இனியது; துன்பத்தை நீக்குவது. அதனால்தானே இறைவனுடைய அன்புக்கு அதைப் பெரியவர்கள் உவமை கூறுகிறார்கள்?”

இப்படி நினைத்தவுடனே இறைவனுடைய திருவருளின் பெருமையை அவர் எண்ணலானார். இறைவனிடம் அன்பு கொள்வதில் இரண்டு வகை உண்டு. பூனைக்குட்டியைப் பூனை கெளவிக் கொண்டு போகும். குரங்குக் குட்டி தன் தாயைத் தானே பற்றிக்கொள்ளும். குழந்தையின் முயற்சியின்றித் தாய் முயன்று பற்றிக் கொள்ளும் அன்பைப் பூனையினிடம் பார்க்கிறோம். இறைவனும் தன்

அடியார்களுக்குக் கவலை ஒன்றும் இல்லாமல் தானே வலிய வந்து பாதுகாக்கிறான்; இது மார்ஜால நியாயம் என்று சொல்லப்பெறும்.

குட்டி பற்றிக் கொள்ளக் குரங்கு நடமாடுகிறது. அது பற்றை விட்டால் அதற்கு ஆபத்து உண்டாகும். அப்படி இறைவனை இடைவிடாமல் பற்றிக் கொண்டால் அவன் அருள் கிடைக்கிறது. இதை மரக்கட நியாயம் என் பார்கள். பூனைக் குட்டிக்குச் செயல் இல்லை; குரங்குக் குட்டிக்குச் செயல் உள்ள வரையில் பயம் இல்லை.

மந்தியையும் அதன் குட்டியையும் கண்ட நக்கீரருக்கு இறைவனுடைய அருள் நினைவு உண்டாயிற்று, ”அன்பர்கள் இறைவனை இறுகப் பற்றிக்கொண்டால் அவன் அவர்களுக்கு உண்டாகும் துன்பத்தைப் போக்கி, இன்பத்தை உண்டாக்குகிறான். இந்த மந்தி தன்னைப் பற்றிக் கொண்ட குட்டிக்கு முதலில் பசியைப் பாலால் போக்கிப் பின்பு இனிமையான தேனை ஊட்டியது. இது இறைவன் இயல்பைப் போலத் தோன்றுகிறது.

அவன் எழுந்தருளியிருக்கும் இந்த ஈங்கோய் மலையில் இத்தகைய காட்சிகள் அவன் அருளை நினைப்பூட்டும் வகையில் நிகழ்தல் எவ்வளவு பொருத்தம்!”

தம் கருத்தையெல்லாம் சுருக்கியமைத்து அவர் ஒரு பாடலைப் பாடிவிட்டார்.

ஈன்ற குழவிக்கு மந்தி இறுவரைமேல்
நான்ற நறவத்தைத் தான்நணுகித்
தோன்ற
விரலால்தேன் தோய்த்துஊட்டும் ஈங்கோயே

நம்மேல் வரலாம்நோய் தீர்ப்பான் மலை.

[தான் பெற்ற குட்டிக்குத் தாயாகிய மந்தி மலைப் பக்கத்தின் மேலிருந்து ஒழுகிய தேனை அதனருகிலே சென்று பிறர் காணும் படியாகத் தன் கை விரலால் அத் தேனைத் தோய்த்து ஊட்டுகின்ற ஈங்கோயானது, தன்னை நம்பிய அடியார்களாகிய நம் மேல் படை எடுத்து வரலாகும் துன்பங்களைத் தீர்த்தருளும் இறைவன் எழுந்தருளியிருக்கும் மலை ஆகும்.

மந்தி – பெண் குரங்கு இறு வரை – மலையின் பக்கம்; “இருள் தூங்கு இறுவரை – இருள் செறிந்த பக்கமலை” (கலித் தொகை, 43:13, நச்சினார்க்கினியர் உரை); பெரிய மலை என் றும் பொருள் கொள்ளலாம் (சீவகசிந்தாமணி, 1463.) நான்ற ஒழுகிய இடைவெளியின்றிக் கம்பி தொங்குவது போல ஒழுகுவதால் தொங்கிய என்ற பொருளையுடைய நான்ற என்ற சொல்லை அமைத்தார்; “காம்பு கால்பொரக் கண்ணகன் மால்வரைப் பாம்பு நான்றெனப் பாய்பசுந் தேறலே” (கம்பராமாயணம், நாட் டுப் படலம், 35.) நறவம் -தேன். நணுகி – அணுகி, வரல் ஆம் நோய் -வரலாகிய துன்பங்களை. ஈங்கோய்,தீர்ப்பான் மலை என்க.]

இது ஈங்கோய் மலை எழுபதில் உள்ள 9-ஆவது பாட்டு.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !