ஒன்றே ஒன்று
கி. வா. ஜகந்நாதன்

ஒன்றே ஒன்று

காலையில் எழுந்தவுடன், “பால்காரன் இன்னும் வரவில்லையே!” என்று அவன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். பால் வந்து காபிபோட்டுத் தந்து உண்ட பிறகுதான் நமக்கு நம்முடைய இயற்கையான நிலை வருகிறது. காபி வயிற்றுக்குள் போனபிறகு அடுத்தபடி தொழிலோ, விவசாயமோ, உத்தியோகமோ அதைப் பற்றிய கவலை வருகிறது. உத்தியோகமாக இருந்தால், மேலதிகாரியைத் திருப்திப் படுத்துவதைப் பற்றியும், அவர் நமக்குத் தந்திருக்கும் வேலையை முடிப்பதைப் பற்றியும் யோசனைகள் உண்டாகின்றன. குடும்ப காலக்ஷேபத்துக்கு வேண்டியபடி பணம் கிடைக்காமல் திண்டாடுகிறோம். வரவு செலவுகள் ஒத்து வருவதில்லை. குடும்பத்தில் ஒவ்வொரு வரையும் பற்றி நூறு கவலைகள். தொழிலாளிக்கும், விவசாயிக்கும் இப்படியே பல யோசனைகள், பல முயற்சிகள், பல கவலைகள்.

பணக்காரருக்கு இப்படி ஒன்றும் இல்லை என்று ஏழைகள் நினைக்கிறார்கள். ஏழைகளுக்கு உள்ள கவலைகள் அவர்களுக்கு இல்லையே தவிர, அவர்களுக்கென்று முத்திரை பெற்ற பல கவலைகள் இருக்கத்தான் இருக்கின்றன. ஏழை அடுத்த வேளைக்குச் சோறு இல்லையே என்று கவலைப்படுகிறான்; பணக்காரனோ போன வேளையில் சாப்பிட்ட உணவு சீரணமாகாமல் வயிற்றை வலிக்கிறதே என்று வேதனைப் படுகிறான். நமக்குக் கடன் கொடுப்பார் யாரும் இல்லையே என்று வறியவன் ஏங்குகிறான்; கொடுத்த கடன் வரவில்லையே என்று செல்வன் கவலைப்படுகிறான். கடவுள் ஏழையாகிய நமக்கு இத்தனை குழந்தைகளைக் கொடுத்துச் சோதிக்கிறாரே என்று அவன் வருந்துகிறான்; கடவுள் நமக்கு ஒரு குழந்தை கூட அருளவில்லையே என்று இவன் ஏங்குகிறான்.

பொதுவாக உலகில் உள்ளவர்களில் யாரைக் கேட்டாலும் அவர் தமக்குக் குறைகள் இருப்பதாகவும் அவற்றால் படும் கவலைகள் பல என்றும் சொல்வார். சும்மா இருக்கிற போது அவருடைய மனத்தில் ஓடிக் கொண்டிருக்கிற எண்ணங்களைப் படத்தைப் போலக் காணும் வாய்ப்புக் கிடைத்தால், என்ன என்ன காட்சிகளைக் காணலாம். தெரியுமா? தீய எண்ணங்களும், நல்ல நினைவுகளும், பொறாமையும், திருப்தியும், சென்ற கால நிகழ்ச்சி பற்றித் துன்பமும், சிலவற்றை எண்ணி இறுமாப்பும், வருங்காலச் செயலைப் பற்றி அச்சமும், ஒருசார் நம்பிக்கையும் இப்படிக் கணக்கிட முடியாத நிழற் படங்கள் மனத்திரையில் ஓடிக் கொண்டே இருக்கும்.

தெரியாமலா வள்ளுவர்,

ஒருபொழுதும் வாழ்வ தறியார்; கருதுப
கோடியும் அல்ல பிற

என்று சொன்னார்?

பலபல நினைவுகளை நினைக்கும் இயல்பு இந்த மனத்துக்கே உரிமையானது. மனத்தை வாயுவினுடைய அம்ச மென்று சொல்வார்கள். வாயுவைப்போல இது எப்போதும் சலனம் அடைந்து கொண்டே இருக்கிறது. இருந்த இடத்தில் இருந்தபடியே பதினான்கு உலகங்களையும் சுற்றி விடும் வியக்கத் தக்க ஆற்றல் இதற்கு இருக்கிறது.

இதை அடக்கினால் பெறாத இன்பம் எல்லாம் பெறலாம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மற்றவர்கள் செய்வதற்கரிய சித்து வேலைகளை யெல்லாம் முயன்றால் செய்து விடலாம்; ஆனால் “சிந்தையை அடக் கியே சும்மா இருக்கின்ற திறம் அரிதாம்.”

சினம் இறக்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும்
மனம் இறக்கக் கல்லார்க்கு வாய்ஏன் பராபரமே

என்று தாயுமானவர் சொல்கிறார்.

மனத்தை இருந்தபடியே அமிழ்த்திக் கொன்று விட முடியுமா? எத்தனை காலம் அது சர்வாண்டங்களையும் தன்னுடைய ஆட்சிக்குள் அடக்கி அதிகாரம் செலுத்துகிறது! இராவணன், இந்திரஜித் என்று சொல்லுகிற ராட்சசர்கள் கூட இவ்வளவு நுட்பமாகவும் விரிவாகவும் ஆட்சிபுரிய முடியாது. இந்தப் பேயை அடக்குவது என்பது எளிய காரியமா?

ஆனால் மனத்தை அடக்கிய மகான்கள் இல்லாமற் போகவில்லை. ராட்சசனுக்குப் புரோட்சசன் போலப் பேய் மனத்தை அடக்கி அதன் ஆட்சியினின்றும் விடுதலை பெற்றவர்கள் இந்த நாட்டில் பலர் இருந்திருக்கிறார்கள்; இன்னும் இருக்கிறார்கள்; இனியும் இருப்பார்கள். மனத்தைக் கொன்று, அதைப் புதைத்துவிட்டு அந்த மயானத்திலே ஆனந்தக் கூத்தாடும் ஞானிகளை மிக அருமையாகவே பார்க்க முடியும்.

அவர்கள் மாத்திரம் எப்படி மனத்தை அடக்கினார்கள்? அவர்களும் நம்மைப் போல இருந்தவர்களே. நம்முடைய மனத்தைப் போலவே அவர்களுடைய மனங்களும் அவர்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. பிறகு முயற்சி செய்தார்கள். ஒரு வழியைத் தெரிந்து கொண்டார்கள். மனத்தை மெல்ல மெல்ல வழிக்குக் கொண்டு வந்தார்கள். இறுதியில் அதன் சேட்டையை அடக்கி ஒடுக்கிக் கிடத்தி விட்டார்கள்.

இவ்வாறு மனத்தை அடக்கினவர்களில் காரைக்கால் அம்மையார் ஒருவர். அவர் தாம் மனத்தை அடக்கிய வழியைச் சொல்கிறார். அதை வேகமாகப் பார்த்தால் தெளிவுபடாது. சிறிது நிதானமாகப் பார்க்க வேண்டும்.

மனம் கொண்டிமாடு போன்றது. கொண்டிமாடு கண்ட கண்ட இடங்களில் திரிகிறது. அயலார் வயல்களிற் சென்று பயிர்களை நாசம் பண்ணுகிறது. நம்மையே முட்ட வருகிறது. ஒரு நீளமான கயிற்றை அதன் கழுத்தில் கட்டி ஒரு புல் வெளியில் முளை ஒன்றை அடித்துக் கட்டி விடுகிறோம். அது எப்போதும் துறுதுறு வென்று இருப்ப தாதலால், கட்டிப் போட்டவுடன் அது நிற்பதில்லை. வெறி கொண்டது போல நாலுகால் பாய்ச்சலில் ஓடுகிறது. முன்பும் அது ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அப்போது இன்ன திசையில்தான் அது ஓடும் என்று சொல்ல முடியாது. இப்போதும் அது ஓடுகிறது; நடுவில் உள்ள முளையைச் சுற்றி ஓடுகிறது. எவ்வளவு வேகமாக ஓடினாலும் அந்த முளையைச் சுற்றிச் சுற்றி வரவேண்டுமே ஒழிய, அதற்குப் புறம்பே போக முடியாது. வட்டமாக ஓட முடியுமேயன்றி நினைத்தபடி யெல்லாம் பாய முடியாது.

இதோடு மற்றொன்றும் நிகழ்கிறது. முளையைச் சுற்றி ஓடக் கயிறு முளையில் சுற்றிக் கொள்கிறது. அதனால் வெளியில் விட்ட கயிற்றின் நீளம் குறைகிறது; மாடு ஓட ஓடத் தன்னை அறியாமலே முளையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மாட்டுக்கும் முளைக்கும் உள்ள நீளம் குறைந்து கொண்டே வருகிறது. கடைசியில் முளையும் கழுத்தும் சேரும்போது அது நகர முடியாமல் விழுந்து விடுகிறது. மாட்டுக்கு வேகம் முன்பும் இருந்தது; பின்பும் இருந்தது. ஆனால் முளையைச் சுற்றி வரும்போது இருந்த வேகம் அதனை விரைவில் செயலடங்கும்படி செய்து விடுகிறது.

மனத்தில் ஆடை, அணி, உணவு, பதவி முதலிய பலவற்றை எண்ணுகிறோம்.அது வேகமாகத் தாவுகிறது. இறைவன் என்ற முளையை அடித்து அன்பு என்னும் கயிற்றை அதன் கழுத்தில் கட்டிவிட்டால் என்ன ஆகும்? முளையை நன்றாக இறுக அடித்துவிட வேண்டும்; கயிற்றையும் பலமாகக் கட்டிவிட வேண்டும். அப்போது முன்போலவே மனம் ஆடை, அணி, உணவு முதலியவற்றை எண்ணினாலும் அவற்றிலெல்லாம் இறைவனுடைய தொடர்பும் இருந்து கொண்டே இருக்கும். முன்பு நண்பர்களை யெல்லாம் அழைத்துப் பல வகை உணவு சமைத்து விருந்து போட நினைக்கும் மனம், இப்போது அப்படிச் சமைத்து இறைவனுக்கு நிவேதனம் செய்து அடியார்களுக்குப் போட நினைக்கும். முன்பு சாதமாக உண்பதை எண்ணிய மனம் இப்போது பிரசாதமாக உண்ண எண்ணும். ஆடையை வாங்கி அணிந்தால் அடியாருக்கும் ஒன்று கொடுக்கச் சொல்லும்.

“நான் இது செய்தேன்” என்று முன்பு சொன்னது மாறி, ‘இறைவன் திருவருளால் இதைச் செய்ய அடியேனால் முடிந்தது’ என்று சொல்லச் செய்யும்.

இப்படி மனம் பல பொருள்களையும் எண்ணினாலும் அவற்றினூடே இறைவனுடைய நினைவு சுருதி போடும். துன்பம் வந்தாலும், இன்பம் வந்தாலும் அவனை நினைக்கும் நிலை உண்டாகும்.

இந்த நிலை மேலும் மேலும் வளர்ந்து வந்தால், பக்தி முறுகி இறைவனுக்கும் நமக்கும் உள்ள தூரம் குறுகிவரும். நாம் பழகும் பொருள்களையும் எண்ணும் எண்ணங்களையும் நிகழும் நிகழ்ச்சிகளையும் இறைவனோடு தொடர்புபடுத்திப் படுத்தி நினைக்கும் நிலையில் இருந்தது மாறி, முயற்சியின்றியே எல்லாவற்றையும் இறைவனுடைய தொடர் புடையனவாக உணரும் நிலைவரும். முன்பு இருந்தது நினைவுப் பழக்கம்; இப்போது இருப்பது துணிவு. அடுத்த படி இறைவனாகவே யாவற்றையும் காணும் நிலை வரும். இறைவனுடைய தொடர்புடையனவாகப் பார்க்கும் பார்வையைவிட இது நெருக்கமானது.

இந்த மூன்று நிலையையும் காரைக்காலம்மையார் சொல்கிறார்.

“நினைவுகள் பலவாகவும் அவை சாரும் பொருள்கள் பலவாகவும் இருந்த நிலையை நான் மாற்றிக் கொண்டேன். நினைவுகள் பலவானாலும் அது ஒரு பொருளைப் பற்றியே எழுந்தன.”

ஒன்றே நினைந்திருந்தேன்.

“அடுத்தபடி பல நினைவுகளை மெல்ல மெல்லப்போக்கி அவற்றில் ஒன்றைத் துணிந்து அதனையன்றி மற்ற நினைவு களை அகற்றினேன்.”

ஒன்றே துணிந்தொழிந்தேன்.

“பிறகு, இந்த முறுகிய சாதனத்தால் அந்த ஒன்றை என் உள்ளத்தினின்றும் போகாவண்ணம் அடைத்துப் பூட்டிட்டுவிட்டேன்.”

ஒன்றேஎன் உள்ளத்தின் உள் அடைத்தேன்.

நினைத்துப் பிறகு துணிந்து பின்பு உள் அடைக்கும் படி வேறு ஏதும் இல்லையா? “இல்லை, இல்லை; அது ஒன்று தான் நினைப்பதற்குரியது; துணிவதற்குரியது; உள்ளடைப்பதற்குரியது.

ஒன்றே காண்.

அந்த ஒன்று எது?

“அடிமையாகும் செயல்.”

அடிமையா? யாருக்கு அடிமை ஆவது?

‘இறைவனுக்கு.’

அவனுக்கு ஆளானால் என்ன பயன் கிட்டும்?

“நாம் பண்ணும் தவம் பலிக்கும்.”

அதை எப்படித் தெரிந்து கொள்வது

“பகீரதனுக்குக் கங்கையின் அருள் வேண்டியிருந்தது. அவன் பிரமனை நோக்கித் தவம் புரிந்தான். கங்கையையே நோக்கித் தவம் செய்தான். அவன் தவம் பலிக்கவில்லை, கடைசியில் சிவபிரானை நோக்கித் தவம் செய்தான். அது தான் பலித்தது. யாருக்கு எந்தப் பொருள் வேண்டுமானாலும் அந்தப் பொருளையே நோக்கி முயல்வதால் பயன் இல்லை; தன்னை நோக்கித் தவஞ்செய்தால் யாவும் கிடைக்கும் என்பதை இறைவன் கங்காதரனாக இருந்து காட்டுகிறான்.”

தவம் செய்வது என்றால் புலனடக்கம் வேண்டும். அது அவ்வளவு எளிதில் செய்யும் காரியம் அல்லவே. நாம் பாதகங்களைத் தானே செய்து கொண்டிருக்கிறோம்?

‘தவம் செய்யாவிட்டாலும் அவனுடைய திருவடியைப் பற்றினால் போதும். முன்பு என்ன பாதகம் செய்திருந்தாலும் அதை மறந்து நமக்கு உயர்ந்த நிலையைத் தருவான்.’

அதற்குச் சான்று உண்டா?

“அவன் திருமுடியில் உள்ள சந்திரனே சாட்சி.அவன் தக்கயாகத்திற்குச் சென்று அராசகமான காரியம் செய்தான். காமத்தால் தவறு செய்தான். ஆயினும் தக்கயாக சங்காரத்தின் போது இறைவனுடைய திருவடித் தொடர்பு கிடைத்தது. அதன் பயனாக அவன் இறைவன் திருமுடியில் ஏறி உட்காரும் பேறு பெற்றான்.”

அது ஒரு பேறா?

“அதைவிட வேறு என்ன வேண்டும்? வானில் இருக்கும் மதியும் குறைகிறது; வளர்கிறது. குறையும் போது தேய்வு உண்டாகிறது; நிறையும்போது மறு உண்டாகிறது. இறைவன் திருமுடிப்பிறைக்கோ குறைவதும் வளர்வதும் இல்லை. அதனால் தேய்வும் மறுவும் அவனுக்கு இல்லை.”

அறியாமையுட் சிக்கியிருக்கும் நமக்கு இந்தப் பாக்கியம் கிடைக்குமா?

“அவனை நினைத்தால் திருவடி தோன்றும். அதைப் பற்றிக் கொள்ளலாம்; பின்பு அவன் தன் கரத்தைக் காட்டுவான். நம் அறியாமை இருளை ஓட்டி மலமாகிய குப்பையைச் சுட்டெரிக்கும் ஞானாக்கினியை அவன் தன் திருக்கரத்திலே வைத்திருக்கிறான்.”

இப்படியெல்லாம் பொருள் விரியும்படியாகத் தம்மை ஆளாகக் கொண்ட இறைவனுடைய அடையாளத்தை எடுத்துச் சொல்கிறார் அம்மையார்.

கங்கையான், திங்கட் கதிர்முடியான், பொங்கொளிசேர்
அங்கையாற்கு ஆளாம் அது.

காரைக்கால் அம்மையார் இறைவனுக்கு ஆளாக வேண்டும் என்ற ஒன்றைப் பற்றியே நினைத்தார். அவர் சிந்தனையும் கற்பனையும் அவனுக்கு அடிமையாகும் நெறியிலே படர்ந்தன.

பிறகு இப்படி அடிமைப்பட வேண்டும் என்று ஒரு வகையைத் துணிந்து பற்றிக் கொண்டார்.

இறுதியில் அவர் உள்ளத்தினின்றும் மாறாமல் இறைவனும் அவரும் ஒன்றுபட்ட ஆண்டானடிமை யிறுக்கம் உண்டாகிவிட்டது. அதைத் தவிர வேறு நாட்டமே அவருக்கு உண்டாகவில்லை.

ஒன்றே நினைந்திருந்தேன்; ஒன்றே துணிந்தொழிந் தேன்;
ஒன்றேஎன் உள்ளத்தின் உள் அடைத்தேன் ஒன்றே காண் ; கங்கையான், திங்கட் கதிர்முடியான், பொங்குஒளிசேர் அங்கையாற்கு ஆள்ஆம் அது.

[ஒன்றையே பலவகையில் நினைத்திருந்தேன்; ஒன்றையே துணிந்து மற்றவற்றை நீக்கினேன்; ஒன்றையே என் உள்ளத்தி னுள்ளே மாறாமல் அடைத்து வைத்தேன். அந்த ஒன்று, கங்கா தரனும், சந்திரசேகரனும், பொங்கும் ஒளியுடைய அனலைச் சேர்த்திய அழகிய கையுடையானுமாகிய இறைவனுக்கு ஆளாகும் அந்தப் பதவி.

நினைத்தல், துணிதல், உள்ளத்து அடைத்தல் என்ற மூன்றும் மூன்று நிலைகள். ஒன்றை நினைத்தேன், வேறு ஒன்றைத் துணிந்தேன், பின்னும் ஒன்றை உள் அடைத்தேன் என்று மயங்காமல் ஒன்றே என்று ஏகாரத்தோடு சொன்னார்.

ஒன்றே அது என்று கூட்டுக. காண் : அசை. ஒளியென்றது ஆகு பெயராய்க் கனலைக் குறித்தது. அது – அப்பதவி. அந்த ஒன்றுதான் ஆளாகும் அது என்றார்.)

காரைக்காலம்மையார் அருளிச் செய்த அற்புதத் திருவந்தாதியில் வரும் 11-ஆவது பாட்டு இது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !