
ஒன்றே ஒன்று
கி. வா. ஜகந்நாதன்
செவிலியின் வேதனை
நேற்று இரவு எவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தாள்! சில நாளாக ஏதோ மாதிரி இருக்கிறாளே என்று எண்ணியிருந்த எனக்கு அப்போது பெருமகிழ்ச்சி உண்டாயிற்று. மனம் விட்டுப் பேசுவதாகவே எண்ணினேன். ஊர்ச் செய்திகளைப் பேசினோம். உலகத்துச் செய்திகளைப் பேசினோம். அயலிலே உள்ள நாட்டுக்குப் போகவேண்டுமானால் இடையிலே உள்ள பாலையைக் கடக்கவேண்டும் என்று சொன்னேன். அந்த வழியைப் பற்றி விரிவாகச் சொல்லச் சொன்னாள். அவள் அவ்வழியே செல்ல நினைத்திருக்கிறாள் என்பது அப்போது எனக்குக் கொஞ்சங் கூடத் தெரியவில்லையே! ஏமாந்து போய்விட்டேனே!”
இப்படிச் செவிலித்தாய் புலம்பினாள். அந்த வீட்டில் வளர்ந்த இளம் பெண், யாருடனும் சொல்லாமல் தன் காதலனுடன் புறப்பட்டுச் சென்றுவிட்டாள். இந்தச் செய்தி அவள் உயிர்த்தோழி ஒருத்திக்குத்தான் முன்பே தெரியும். மற்றவர்கள் விடிந்த பிறகுதான் உணர்ந்தார்கள்.
அந்தப் பெண்ணும் அவளுடைய காதலனும் சில காலமாகவே யாரும் அறியாமல் சந்தித்து அளவளாவி வந்தார்கள். அறிவு, அழகு, திரு, பண்பு ஆகியவற்றால் சிறந்த காளை அவன். அவளும் அவனுக்கு ஏற்ற தகுதியுடையவள். இருவரும் மனம் ஒத்துக் காதல் புரிந்தது வியப்பன்று அவர்களுடைய காதல் ஒரு நாளைக்கு ஒருநாள் உரம்பெற்று வளர்ந்தது. மறைவாக அளவளாவுவதால் மெல்லியலாகிய அவளுக்கு அச்சம் இருந்தது. சந்திக்கும் நேரத்தைக் காட்டிலும் அவனைப் பிரிந்திருக்கும் நேரம் பெரிதாக இருந்தது. அதனாலும் அவளுக்கு வேதனை உண்டாயிற்று.
இதற்கு மாற்று என்ன? திருமணம் செய்துகொள்வது தான். பெரியவர்களை அனுப்பி அவளை மணம் பேசும்படி செய்தால் அவளுடைய தாய் தந்தையர் ஒப்புக்கொள்ளலாம்; பிறகு திருமணம் நடைபெறக்கூடும். அந்தப் பெண்ணினுடைய தோழிக்கு இந்த இருவரும் களவுக் காதல் புரிவது தெரியும். அவள் இவர்களுக்குத் துணையாக நின்று உதவி வந்தாள்.
காதலியின் தாய் தந்தையர் அவளை வேறு யாருக்கோ திருமணம் செய்து கொடுப்பதாக எண்ணியிருந்தார்கள். அதைத் தோழி அறிந்தாள். காதலன் மணம் பேச யாரை யேனும் அனுப்பினால் அவர்கள் மறுத்தாலும் மறுத்துவிடு வார்கள் என்ற ஐயம் அவளுக்கு உண்டாயிற்று உறுதி யாக அந்தப் பெண்ணை அவளுடைய காதலனுக்கு அளிப் பார்கள் என்று தெரிந்தால் மணம் பேசும்படி அந்த ஆணழகனிடம் சொல்லலாம். அந்த உறுதிதான் இல்லையே!
இந்த நிலையில் என்ன செய்வது?
அவளை யாரும் அறியாமல் காதலன் தன் ஊருக்கே அழைத்துச் சென்று அங்கே மணம் செய்துகொள்வதுதான் தக்க செயல்; நடக்கக்கூடிய காரியம்.
தோழிதான் இந்தத் தந்திரத்தைக் காதலர் இருவரிடமும் தெரிவித்தாள். காதலன் உடம்பட்டான். அந்த இளம் பெண்ணும் அவனுடன் செல்ல ஒருப்பட்டாள்.
ஒருநாள் விடியற்காலையில் காதலன் தன் காதலியை அழைத்துக் கொண்டு போய்விட்டான். காலையில் எழுந்தவுடன் தம் வீட்டில் அப்பெண்ணைக் காணாமல் யாவரும் தேடினார்கள். தோழி மெல்ல மெல்ல உண்மையை வெளியிட்டாள். அவளுடைய காதலன் இன்னான் என்பதை அறிந்து திருமணத்துக்குத் தாம் இசையாமையால் தான் அவள் அவனுடன் போனாள் என்பதை வீட்டில் உள்ளார் தெரிந்துகொண்டனர்.
செவிலி அப்போது தான் வளர்த்த பெண்ணின் பிரிவினால் வருந்தலானாள். அந்தக் கடுமையான பாலை நிலத்தில் எப்படிப் போவாள்? நடுவில் தங்கவேண்டுமானால் எங்கே தங்குவாள்? பாலை நிலத்தில் வாழ்பவர்கள் வீட்டில் விருந்தினராகத் தங்குவாளா?” என்று எண்ணி எண்ணி அங்கலாய்க்கிறாள்.
அந்த இளம் பெண், மிக்க மென்மையுடைவள்; பூம் புனத்தின் நிழலில் ஒயிலாக நடமாடும் மயில்போன்ற சாயலை உடையவள். அவள் மென்மை மயிலை ஒத்திருந்தது மட்டும் அல்ல. நீண்ட கூந்தலை விரித்துவிட்டால் மயிலாகவே தோற்றுவாள். தன் கையாலே வாரிப் பின்னி அலங்காரம் செய்திருக்கிறாள் செவிலி.
புனமயிற் சாயற் பூங்குழல் மடந்தை.
[புனம் – முல்லை நிலம். சாயல் -மென்மை. பூங்குழல்- பூவை யணிந்த கூந்தல். மடந்தை: பருவத்தைக் குறியாமல் பெண் என்னும் துணையாய் நின்றது.]
அவளுக்கு அந்த வீட்டிலே வாழப் பிடிக்கவில்லையா? நிறை செல்வம் உடைய வீடு அது. அவளுக்கு ஏதாவது குறை உண்டா? உணவினால் குறைவா? உடையால் குறைவா? அணிகளுக்குக் குறைவா? அவள் எது வேண்டுமென்று கேட்கிறாளோ அதனை உடனே வாங்கி அளித்தார்கள். மனை நிறைந்த செல்வம் இருக்கும் போது அதனை விரும்பாமல் அவள் இப்போது போய்விட்டாள்.
அவளைப் பெற்றெடுத்த தாய் இருக்கிறாள்; தந்தை இருக்கிறார். கண்ணுள் மணியைப் போலப் பாதுகாத்து வளர்த்த செவிலி இருக்கிறாள்.
பிறந்தது முதல் மார் மேலும் தோள் மேலும் வைத்து வளர்த்தவள் அந்தச் செவிலி. இன்னும் உறவினர் பலர் இருக்கிறார்கள். பல காலம் பழகி அவள் மன இயல்பு தெரிந்து அன்போடு அவளிடம் பேசியும் ஒழுகியும் வந்த அவ்வளவு பேர் இருக்கவும், இப்போது யாரோ ஓர் அயலானுடன் போய் விட்டாள். அத்தனை பேரையும் விட அவன்தான் அவளுக்குச் சிறந்தவனாகிவிட்டான். அவனுடைய அன்பைத்தான் அவள் உணர்ந்தாளா? அயலானிடம் காதல்கொண்டு புறப்பட்டு விட்டாளே!
மனைமலி செல்வம் மகிழா ளாகி
ஏதலன் ஒருவன் காதலன் ஆக.
[இந்த வீட்டில் நிரம்பியுள்ள செல்வத்தை விரும்பாதவளாய் அயலான் ஒருவன் தன் காதலனாக – பாலை நிலம் சென்றாள் என்று சொல்ல வருகிறாள்.
மனை – வீடு. மகிழாள் – விரும்பாதவள்,ஏதலன் – அயலான்.]
அவள் போன இடம் எத்தகையது? நினைத்தாலே நெஞ்சு நடுங்கும். உள்ளும் புறமும் ஈரம் இல்லாத பாலை நிலம் அது. அதைப் பற்றிச் செவிலித்தாய் நாலு பேர் சொல்லக் கேட்கிறாள். அப்படிக் கேட்ட செய்திகள் எல்லாம் அவள் அகக் கண்ணிலே உருவெடுத்துத் தோற்றுகின்றன.
கதிரவன் இரக்கமின்றிக் காயும் நண்பகலில் அவள் அந்தக் கடும் பாலையில் போகவேண்டியிருக்குமே. நிழல் தரும் மரம் இல்லாத இடமாகையால் கோடைக்காலச் சூரியன் கொளுத்தி எரிப்பானே! தலைக்கு மேலே உச்சியில் கதிரவன் நின்று தன் சுடரை வீசுவான்; தன் கிரணங்களால் கொல்லாமல் கொல்லுவான். அப்போது அவன் வெம்மைக்குப் பயந்து நிழல்கூட அவரவர்கள் அடியின் கீழ்ப் போய் ஒளித்துக் கொள்ளுமே! எங்கே பார்த்தாலும் தரையெல்லாம் நெருப்புப் போலக் கொதிக்கும். நடப்பதற்கரிய வெம்மையையுடைய கொடுங் கானம் அது. மேலே வெயில், கீழே வெப்பம். இத்தகைய பாலையில் அவள் போகவேண்டியிருக்குமே!
விடுகூடர் நடுவு நின்று அடுதலின், நிழலும்
அடியகத்து ஒளிக்கும் ஆரழற் கானத்து.
[வீசுகின்ற சூரியனது கதிர் வானத்தின் நடுவாகிய உச்சியில் நின்று வருத்துவதனால் நிழலும் அவரவர்கள் அடியில் ஒளிக்கும் நடப்பதற்கரிய வெப்பத்தையுடைய பாலையில்.
விடு – வீசும். சுடர் – கதிர். கதிரை வீசும் சூரியன் என்றும் சொல்லலாம். நடுவு-நடு இடம். அடுதலின் – வருத்துவதனாலே. அடி- நடப்பவர்களின் அடி. ஆர் அழல்-நடப்பதற்கரிய வெம்மை; அழல் – நெருப்புப் போன்ற வெம்மை, கானம் – பாலை நிலம்.)
மேலே வெயிலும் கீழே பொடியும் சுடும் பாலையில் போவார்களுக்கு யாரேனும் துணைபுரிவார் உண்டா? தீங்கு புரியாமல் இருந்தாலே போதும். அவ்விடத்தில் வழிப் போவாரை அடித்துப் பறிக்கும் ஆறலை கள்வர்கள் வாழ்கிறார்கள். கொலைக்கு அஞ்சாத வேட்டுவர் இருக்கிறார்கள். அவர்களுடைய வேலை கொலை செய்யும் கொடுந் தொழில்தான். இந்த வெவ்வினை வேடர் உடுக்கையைத் தட்டி முழக்குவார்கள். அதை வழிப் போக்கர் கேட்டால்,”ஐயோ, நம்மை வருத்த வேடர் வருவார் போல் இருக்கிறதே!” என்று நடுங்குவார்கள். இந்த நடுக்கத்தைத் தரும் அழகான இடம் பாலை!
வெவ்வினை வேடர் துடிக்குரல் வெரீஇ
மெய்விதிர் எறியும் செவ்வித்து ஆகி.
[வெய்ய தொழிலையுடைய வேடர்களுடைய உடுக்கையின் ஒலிக்குப் பயந்து வழிப்போவார் உடம்பு நடுங்குகின்ற இயல்பை உடையதாகி.
வெவ்வினை என்றது வழிபறித்தல், அடித்தல், கொல்லுதல் முதலியவற்றை, இவை பாலை நில மாக்களாகிய வேடர்களுக்கு இயல்பு. துடி-உடுக்கை வெரீஇ – வெருவி ; அஞ்சி. மெய்- உடம்பு. விதிர் எறிதல் -நடுங்குதல். செவ்வி – இயல்பு. செவ் வித்து – இயல்புடையது.
கானத்தின் பகுதி இத்தகையது என்று சொல்கிறாள்.]
வெயிலுக்கு ஒதுங்கவும் வேடருக்கு அஞ்சி ஓடி ஒளியவும் அங்கே மரங்கள் அடர்ந்த இடம் ஏதேனும் இருக்குமா? பாலை நிலத்தில் அதற்கு இடம் இல்லை. மரங்கள் அடர்த்தியாக வளர்வதற்கு அங்கே ஈரம் ஏது? ஆனாலும் பேருக்குச் சில மரங்கள் அங்கே உண்டு. சில மரங்களில் முள் வேறு இலை வேறாக இருக்கும். இலையே முள்ளாக இருக்கும் மரம் ஒன்று இருக்கிறது; ஈச்சமரத்தின் இலை நுனி முள்தானே? முள்ளிலை ஈந்து பாலை நிலத்தில் இருக் கிறது. அது என்ன நிழலைத் தரப் போகிறது? இலவமரம் பாலை நிலத்தில் வளரும். அதன் அடி மரமெல்லாம் உலர்ந்து போய் இருக்கும். மழையில்லாத பாலையில் அது உயிர் வைத்துக் கொண்டிருப்பதே பெரிதல்லவா? விளா மரங்களும் அங்கங்கே கண்ணில் படும். இந்த மரங்கள் அடர்ந்து செறிந்து வளர்வதில்லை. இங்கொன்றும் அங் கொன்றுமாக இருக்கும். ஒரு மரத்துக்கும் மற்றொரு மரத்துக்கும் பரந்த வெளி இடையில் இருக்கும்.
முள் இலை ஈந்தும் முளிதாள் இலவமும்
வெள்ளிலும் பரந்த தெள்ளிடை மருங்கில்.
[முள்ளை நுனியிலேயுடைய இலைகளைப் பெற்ற ஈச்ச மரமும் உலர்ந்த அடிமரத்தையுடைய இலவ மரமும், விளா மரமும் அங் கொன்றும் இங்கொன்றுமாய்ப் பரவலாக வளர்ந்திருக்கும், நிழ லின்றித் தெளிந்த நடு இடத்தின் பக்கத்திலே.
ஈந்து – ஈச்சமரம். முளி – உலர்ந்த, தாள் – அடிமரம். வெள்ளில் – விளா மரம். தெள் இடை என்றது மரங்கள் நெருங்கியிராமல் இடையில் நெடு வெளி கிடக்க நிற்பதைக் குறித்தது. இடை – இடம். மருங்கில் – அருகில்.]
இத்தகைய இடத்தில் மறவர்கள் வாழ்கிறார்கள்;. தங்கள் மனைவி மக்களுடன் வாழ்கிறார்கள். அவர்கள் வாழும் வீடுகள் எப்படி இருக்கின்றன? பாலை நிலத்தில் மாளிகையையா கட்ட முடியும்? வீட்டுத் தூண்களில் வேட்டை நாய்களைக் கட்டியிருப்பார்கள். அவை குரைத்தால் கதிகலங்கிப் போகும். அவிழ்த்து விட்டாலோ அவற்றின் வேகத்தைக் கணக்கிட முடியாது. கோபமும் அத்தகையதுதான். நீண்ட கயிற்றில் நாயைக் கட்டியிருப்பார்கள். நாய்கள் சுற்றிச் சுற்றி வந்து இழுப்பதால் கயிறு தூணை அறுக்கும். அதனால் தூண் தேய்ந்திருக்கும். மறவர் வீட்டுத் தூண் இது. இத்தகைய தூண்களுக்கு மேலே கூரை வேய்ந்த குடிசை அது.
கூரையை வேயத் தென்னங்கீற்று இருக்கிறதா? வரகு இருக்கிறதா? புல் கூடக் கரிந்து போகும். அந்தப் பாலையில் வீட்டுக்கு மேலே போட என்ன இருக்கிறது? ஆனாலும் அவர்கள் தங்கள் வீடுகளை வேய்ந்திருக்கிறார்கள்.
வேறு எவ்விடத்திலும் இத்தகைய கூரையைப் பார்க்க முடியாது. அந்தக் கூரையே அதில் வாழ்வாருடைய கொடுமையைப் புலப்படுத்தும்.
மரை என்ற பெயருள்ள மிருகம் பாலை நிலத்தில் உலவும். காட்டிலிருந்து தவறிப் போய் இங்கே வந்து விடும். மானைப் போல இருந்தாலும் அதைவிடச் சற்று முரடாக இருக்கும். அதைக் கொன்று தின்று காலம் கழிப்பவர் மறவர். அதன் தோலைத் தங்கள் திருமாளிகைக்கு மேலே கூரையாக அமைத்துக் கொள்வார்கள். மயிரையும் சீவாமல் அப்படியப்படியே போட்டு விடுவார்கள். அவர்கள் குடிசைக்கு மேலே மயிர் சீவாத தோல் கிடக்கும்.
கடுங்குரற் கதநாய் நெடுந்தொடர் பிணித்துப்
பாசம் தின்ற தேய்கால் உம்பர்
மரை அதள் மேய்ந்த மயிர்ப்புன் குரம்பை.
[கடுமையான குரலையும் விரைவையும் உடைய நாயைக் கட்டும் நீண்ட கயிற்றைப் பிணித்து அந்தக் கயிறு தின்றதனால் தேய்ந்த கால்களுக்கு மேலே மரையின் தோலை வேய்ந்த மயிரோடு கூடிய பொலிவற்ற குடிசையில்.
கதநாய் – விரைவான நாய்; கதம் – கோபம் என்றும் கொள்ளலாம். நெடுந்தொடர் – நீண்ட கயிறு. பிணித்து – கட்டி. பாசம் – கயிறு. தின்ற – அறுத்த, தேய்கால் – தேய்ந்த தூணுக்கு. உம்பர் – மேலே. அதள் -தோல். புன்குரம்பை – புல்லிய குடிசை, புன்மை- பொலிவின்மை.)
தன் காதலனுடன் சென்ற இளம் பெண் பாலை நிலத்தில் இரவுக் காலத்தில் தங்கிப் போக வேண்டுமே. இந்த மயிர்ப்புன் குரம்பையில்தான் தங்கும்படி நேரும். அங்கே அவளை வரவேற்று உபசரிக்க யார் இருக்கிறார்கள் ? மறக்குல மகளிர் இருப்பார்கள்.
நரைத்த தலையும் ஒன்றும் தின்னாமையால் ஈரப்பசை யற்று வெளுத்துப் போன வாயும் உடைய மறத்தியர் வீட்டில் அவள் விருந்தாகத் தங்குவாள் என்ன கொடுமை! அச்சத்தைத் தரும் பாலை நிலத்தில், நினைத்தாலே அருவருப்பை உண்டாக்கும் குரம்பையில், நரைத்த தலையும் வெளுத்த வாயும் உடைய மறத்தியருக்கு விருந்தினளாகப் போனால் அவருக்கு என்ன விருந்து கிடைக்கும். அந்தோ! அவள் அந்த நிலையிலா இருப்பாள்?
விரிநரைக் கூந்தல் வெள்வாய் மறத்தியர்
விருந்தா யினள்கொல் தானே?
[வாராமல் விரித்திருக்கின்ற நரையையுடைய கூந்தலையும் உண்ணாத வெறும் வாயையும் உடைய மறக்குலப் பெண்களுக்கு விருந்தினள் ஆனாளோ?
விரி யென்றது பரட்டையைக் குறித்தது. வெண்மை – வெறுமை; உண்ணாது வறிதே இருக்கும் தன்மை. மறத்தியர் – வேடர் குல மகளிர். விருந்து – விருந்தினள்.]
மறுபடியும் அந்தப் பெண்ணின் உருவமும் இயல்புகளும் நினைவுக்கு வருகின்றன. அழகு நிரம்பிய அந்தப் பெண் அழகற்ற அழுக்கு நிறைந்த குடிசையில் தங்குவதா? “கடவுளே! ஆரூர்ப் பெருமானே! இது என்ன கூத்து!” என்று செவிலித்தாய் எண்ணினாள். அவள் திருவாரூர்த் தியாகராசப் பெருமானிடத்தில் மிக்க அன்பு பூண்டவள். எதை நினைத்தாலும் அந்த நினைவு ஆரூர்ப் பெருமானோடு வந்து எப்படியாவது ஒட்டிக் கொள்ளும். இப்போதும் அப்படியே ஆயிற்று.
தன் பெண்ணின் அழகை எண்ணிப் பார்த்தாள். ‘பாலை நிலத்தில் நடக்கும் அடியா அது? சின்ன அடி அல்லவா? கமலம் போன்ற அடி அல்லவா? வயலிலே தளதளவென்று வளர்ந்த கமலம் எவ்வளவு அழகாக, மென்மையாக, தண்மையாக இருக்கும்! அப்படி இருக்கும் அடியை யுடையவள் என் மகள்!’
கமலத்தை எண்ணியபோது அவளுக்கு மற்ற ஊர் வயல் நினைவுக்கு வரவில்லை. திருவாரூருக்குப் போய்ச் சுவாமி தரிசனம் செய்து கொண்டபோது அந்த ஊரின் அழகையெல்லாம் பார்த்து மகிழ்ந்திருக்கிறாள். அங்குள்ள வயல்களையும் அவற்றில் மலர்ந்த கமலங்களையும் கண்டிருக்கிறாள். இப்போது அந்தக் கமலம் நினைவுக்கு வந்தது. திருவாரூருக்குக் கமலாலயம் என்பது ஒரு பெயர். கமலத்தில் வாழும் திருமகள் தங்கித் தவம் செய்த தலம் அது. ஆதலின் அந்த ஊர்க்கமலம் சிறப்புடையது அல்லவா?
திருவாரூரில் அவளுக்கு அன்பு உண்டாவதற்குக் காரணம் அதனுடைய நிலவளம் அன்று. அங்கே இறைவன் எழுந்தருளியிருப்பதனால்தான் அவளுக்கு அன்பு உண்டா யிற்று. அப்பெருமானுடைய நினைவு இப்போது எழுவது இயல்புதானே? தன் மகளை ஆண்டவன் காப்பாற்ற வேண்டும் என்ற நினைப்பு எழ, அதனோடு தொடர்ந்து அவனது ஆரூரும் அதில் உள்ள கமலமும் நினைவுக்குவர, தன் பெண்ணின் அடியை நினைத்த நினைப்போடு அது இணைந்து கொண்டது.
ஆரூர்ப் பெருமான் அருள் இருந்தால் எல்லாத் துன்பங்களையும் போக்கிக் கொள்ளலாம். துன்பத்தில் எல்லாம் பெரிய துன்பம் மரணத் துன்பம். மரணத்தை உண்டாக்கு பவன் கூற்றுவன். அவனுடைய ஆற்றலைச் செற்றவன் ஆரூர் அண்ணல். அவன் வாழும் ஆரூரில் வயலில் மலரும் கமலத்தைப் போன்ற சிறிய அடியை உடையவள் அவளுடைய பெண்.
பாலை நிலத்தை நினைக்கையில் அந்தப் பெண்ணின் சிறிய அழகிய அடியும் நினைவுக்கு வந்து துன்புறுத்தியது. வெள்வாய் மறத்தியரை எண்ணியபோது தன் மகளின் செவ்வாய் நினைவுக்கு வந்தது. “என் பெண் கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயுடையவள் ஆயிற்றே!” என்று எண்ணினாள். வாய் நினைவுக்கு வந்தவுடன் அவளுடைய சொல்லினிமையும் தொடர்ந்து வந்தது. “குயில் கூவுவதைப் போலப் பேசுவாளே!” என்று நினைத்து ஏங்கினாள்
அவள் உருவம் முழுவதும் மென்மையானது. ஆரூர்ச் செய்யில் வளரும் கமலம் போன்ற சிறிய அடியும் கொவ்வைச் செவ்வாயும் குயில்மொழியும் உடைய பூங்கொடி அவள்.
கூற்றெனப் பெயரிய கொடுந்தொழில் ஒருவன்
ஆற்றல் செற்ற அண்ணல் ஆரூர்ச்
செய்வளர் கமலச் சீறடி
கொவ்வைச் செவ்வாய்க் குயில்மொழிக் கொடியே.
[திருத்தமில்லாத கூற்று எனப் பெயர் பெற்ற கொடிய தொழிலையுடைய ஒருவனது ஆற்றலை அழித்த இறைவனுக்குரிய திருவாரூரில் உள்ள வயல்களில் வளரும் தாமரையைப் போன்ற சிறிய அடியையும், கோவைக் கனியைப் போன்ற சிவந்த வாயையும், குயிலின் குரலைப் போன்ற மொழியையும் உடைய பூங்கொடியைப் போன்றவள்.
திருந்தா – திருந்தாத; கொடுமையை உடைய. கூற்று – யமன். பெயரிய – பெயர்பெற்ற. கொடுந்தொழில் என்றது உயிரைப் பிரிக்கும் செயலை. செற்ற-அழித்த. அண்ணல் -பெருமையை யுடையவன்; இறைவன். செய்-வயல். சீறடி – சிறு அடி. கொடி – கொடியைப் போன்ற மென்மையை உடையவள்.]
இவ்வளவு அழகும் மென்மையும் உடையவள் அன்புடைய உறவினர்களையும் செல்வம் நிரம்பிய வீட்டையும் விட்டு, அயலான் ஒருவனோடு நிழலற்ற பாலைவனத்தில் மரச்செறிவில்லாத வெளியில் உள்ள அழகற்ற வேடர் குடிசையில் மறத்தியருக்கு விருந்தினள் ஆனாளோ?” என்று செவிலி எண்ணி வேதனைப்படுகிறாள்.
புனமயிற் சாயற் பூங்குழல் மடந்தை
மனைமலி செல்வம் மகிழாள் ஆகி
ஏதலன் ஒருவன் காதலன் ஆக,
விடுசுடர் நடுவு நின்று அடுதலின் நிழலும்
அடியகத்து ஒளிக்கும் ஆரழற் கானத்து,
வெவ்வினை வேடர் துடிக்குரல் வெரீ இ
மெய்விதிர் எறியும் செவ்வித்து ஆகி
முள்இலை ஈந்தும் முளிதாள் இலவமும்
வெள்ளிலும் பரந்த தெள்ளிடை மருங்கில்,
கடுங்குரற் கதநாய் நெடுந்தொடர் பிணித்துப்
பாசம் தின்ற தேய்கால் உம்பர்
மரைஅதள் மேய்ந்த மயிர்ப்புன் குரம்பை
விரிதரைக் கூந்தல் வெள்வாய் மறத்தியர் விருந்துஆயினள்கொல் தானே,திருந்தாக்
கூற்று எனப் பெயரிய கொடுந்தொழில் ஒருவன்
ஆற்றல் செற்ற அண்ணல் ஆரூர்ச்
செய்வளர் கமலச் சீறடிக்
கொவ்வைச் செவ்வாய்க் குயில்மொழிக் கொடியே!
[மடந்தை, கொடி, கானத்து மருங்கில் குரம்பையில் மறத்தியர் விருந்து ஆயினள்கொல் என்று கூட்டுக. மகிழாள் ஆகி, ஆக, ஆயினள் கொல் என்று வினைமுடிவு செய்க.]
இது அகனைந்திணையில் பாலைத்திணையில் வந்த செய்யுள் சார்த்து வகையால் பாட்டுடைத் தலைவனாகிய ஆரூர் அண்ணலின் சிறப்பை இணைத்திருக்கிறார் ஆசிரியர். உடன் போக்கின்பின் செவிலி தலைவியை நினைந்து இரங்கியது என்பது இதன் துறை.
ஆரழற்கானம் என்று பாலை நிலமும், விடுசுடர் நடுவு நின்றடுதலின் என்பதால் பாலைக்குரிய பெரும் பொழுதாகிய வேனிலும் சிறுபொழுதாகிய நண்பகலும் வந்தன. இவை முதற்பொருள். ஈந்து, இலவம், வெள்ளில் என்னும் மரங்களும், கதநாய், மரை ஆகிய விலங்குகளும், துடியாகிய பறையும், வேடர், மறத்தியர் என்ற மக்களும் பாலைநிலத்துக்குரிய கருப்பொருள்கள், பிரிவாகிய உரிப் பொருள் அமைந்த பாட்டு இது.
இது சேரமான் பெருமாள் நாயனார் பாடிய திருவாரூர் மும்மணிக் கோவையில் உள்ள 13-ஆவது பாடல்.



