
ஒன்றே ஒன்று
கி. வா. ஜகந்நாதன்
விடைக்கு விண்ணப்பம்
செல்வர் ஒருவருடைய தயை நமக்கு வேண்டியிருக்கிறது. அவரை நேரே அணுக நமக்குப் போதிய தைரியம் இருப்பதில்லை. அவர் நம்மை ஏறெடுத்துப் பார்ப்பாரோ மாட்டாரோ என்ற ஐயம் வேறு எழுகிறது. அதனால் நேர் முகமாக அவரைச் சந்தித்து அவர் தயையைப் பெறாமல். ஏதாவது குறுக்குவழி உண்டா என்று ஆராய்கிறோம். அவருக்கு வேண்டியவராகவும், நாம் எளிதில் அணுகக் கூடியவராகவும் ஒருவர் இருந்தால் அவரிடம் போய்க் கெஞ்சிப் பணிந்து நம் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வழி தேடுகிறோம். சாமியை வழிபடுவதை விடப் பூசாரியை வழிபடுவது நமக்குக் குறுக்கு வழியாகிவிட்டது.
செல்வருடைய காரை ஓட்டுகிறவனை அணுகி அவனுக்கு வேண்டியதைக் கொடுத்துச் சிநேகம் பண்ணிக் கொண்டு அவன் மூலமாக அவரை அடைகிற பேர்வழிகள் உண்டு. கார் ஓட்டிக்கு இவர்கள்மேல் கருணை உண்டாகி விட்டால் பிறகு செல்வருடைய கருணை கிடைப்பது எளிதாகிவிடும்.
இந்தத் தந்திரத்தை ஒரு பெண்மணி செய்கிறாள். சிவ பெருமானாகிய செல்வனது தயை பெறாமல் அதற்காக ஏங்கித் தவிக்கும் காதலி அவள். இறைவன் பேரழகன் என்று கேட்டிருக்கிறாள். எங்கோ ஒரு முறை கண்டும் இருக்கிறாள். அவளுக்கு அப்போதே ஆராத காதல் தோன்றி விட்டது. அவனை மேலும் மேலும் பார்த்துப் பார்த்துக் கண்களால் அவன் அழகை மொண்டு மொண்டு உண்ண வேண்டும் என்ற ஆசை வளர்கிறது. தன் ஆசையை இறைவனிடம் நேரே சொல்ல முடியுமா? அவன் அமரராலும் அணுகுவதற்கு அரியவன். அவளோ கண்ட இடத்துக்கு நாலுபேர் காணச் சென்று தன் காதலை உரைக்க முடியாத படி நாணம் என்னும் கவசம் பூண்டவள்.
ஆனாலும் அவனைக் கண்டு களிக்கவேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் மிகுதியாகிக் கொண்டே வந்தது. தக்க வண்ணம் அவளுடைய நிலையைச் சொல்லி இறைவனுடைய அருளுக்கு உரியவளாக அவளைச் செய்ய யாரும் முன்வரவில்லை. அவனுடைய திருவருளுக்கு உரியவளாவது கிடக்கட்டும்; அவனைக் கண்ணாரக் கண்டு இன்புறவாவது ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்று ஏங்கி நிற்கிறாள். ஒரு முறை கண்டு காதல் கொண்டாள். அவன் அழகுருவத்தை உள்ளத்தே எழுதிப் பார்த்துப் பார்த்துக் களிக்கிறாள். ஆனாலும் அந்த உருவம் மங்காமல் இருக்க அடுத்தடுத்துப் புறக்கண்ணாலும் பார்ப்பது அவசியம். கண்ணாற் காணக் காணத்தான் கருத்துக்குட் புகுந்த உருவம் நன்றாகப் பதிந்து நிற்கும்.
அவனை எப்படிக் காண்பது? “தேவரீர் இங்கே எழுந் தருள வேண்டும்” என்று சொல்ல முடியுமா?
அவனை முதலில் கண்டபோது இருந்த கோலத்தை அந்த இளம்பெண் நினைத்துப் பார்க்கிறாள். என்ன அழகு! அவன் விடையின் மேல் ஊர்ந்து வந்தான். இதை நினைத்தவுடன் அவளுக்கு ஏதோ ஒரு குறுக்கு வழி கிடைத்துவிட்டது போன்ற நம்பிக்கை உதயமாயிற்று. அவனைத் தன் மேல் ஏற்றிக்கொண்டு வரும் ஆனேற்றைப் பற்றியே அவள் நினைவு படர்ந்தது. அது இறைவனைத் தாங்கி எந்த எந்த இடங்களிலோ செல்கிறது. அது மனசு வைத்தால் இந்தத் தெருவின் வழியே வரலாம். விடை வந்தால் அதன்மேல் இறைவன் வருவான். இந்த வீதி வழியே போகும்போது அந்தப் பெண்ணும் தரிசித்துக் கொள்ளலாம்.
விடைக்குத் தயை உண்டானால் இந்தத் தெருவழியே வரலாம். இந்த வீட்டுக்கு எதிரே சில கணம் நின்றாலும் நிற்கலாம்.- அதற்குமேல் அவள் மனம் போகவில்லை. உடம்பு புல்லரித்தது.
அந்த ஆனேற்றுக்கு ஒரு விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என்று துணிந்தாள். அது நாலு தெருவிலும் நடப்பதுதான். எந்தத் தெருவானாலும் அதற்கு நடை ஒன்று. ஆனால் இந்தத் தெருவில் வந்தால் அவள் வாழ்வாள்; சிவபெருமானைக் காணவில்லையே என்று நாளுக்கு நாள் மயங்கி மாழ்கி உயிர் தேயும் அவளுக்கு அவனுடைய காட்சி புதிய உயிரை ஊட்டும். அவள் இப்போது அந்த விண்ணப்பத்தைத் தொடங்குகிறாள்.
ஆன்ஏறே! போந்தால் அழிவுண்டே? அன்புடைய
நானேதான் வாழ்ந்திடினும் நன்றன்றே?
[விடையே, நீ வந்தால் உனக்கு ஏதேனும் கெடுதி உண்டோ? அன்புள்ள நானே வாழ்ந்தாலும் நன்றன்றா? உண்டே – உண்டா? அன்றே – அன்றா?]
”ஆனேறே! நீ இங்கே வந்தால் உனக்குள்ள மதிப்புக் கெட்டுப்போகுமா? உன் பொருள் ஏதாவது கெட்டுப் போகுமா? அப்படி ஒன்றும் இல்லையே! நீ வருவதனால் நான் வாழ்வு பெறுவேன். நான் வாழ்வு பெறுவது நல்லது அன்று என்று சொல்வாயா? நீ செய்கிற சிறு காரியம் ஓர் உயிரையே வாழ்விக்கின்ற தென்றல் அந்தக் காரியத்தை நீ செய்ய வேண்டியவனாயிற்றே!” என்று சொன்னாள்.
‘இப்போது சிவபெருமான் ஓரிடத்துக்குப் போகிறார். அவரை ஏற்றிக்கொண்டு செல்லவேண்டும். அவர் ஓய்வாக இருக்கும் போது உன் வீதிக்கு வருகிறேன்; உன் வீட்டுக்கும் வருகிறேன்” என்று விடை கூறியது.
அவள் அதையா விரும்பினாள்? விடை அவள் வீட்டுக்கு வந்தால் என்ன, வராவிட்டால் என்ன? விடை மேலழகனாகிய இறைவன் வருவதுதானே முக்கியம்? “நீ இறைவனை ஏற்றிக்கொண்டு உலா வரும்போது இந்தப் பக்கமாக வரவேண்டும்” என்று அவள் தெளிவுபடுத்து கிறாள்.
இறைவனை ஏற்று நடவாவிட்டால் அந்த விடைக்கு மதிப்பு ஏது? உலகில் உலாவும் எருத்துமாடும் அதுவும் ஒன்றாகத்தானே போய்விடும்? இறைவனுடைய சம்பந்தத்தால் அதற்குப் பெருமை. இறைவன் இருப்பதனால்தான் தில்லை மன்றுக்கே மதிப்பு உண்டாகின்றது. தில்லையில் வானோங்கும் பொழில்கள் வளர்ந்திருக்கின்றன. மலரும் கனியும் குலுங்கும் மாட்சியையுடைய பொழில்கள் அவை. அதனால் தில்லைக்குப் பெருமை வரவில்லை. அங்கே உள்ள சிற்சபையாகிய மன்றினால்தான் அதற்குப் பெருமை. அந்தச் சபைக்கும் இறைவனால் விளக்கம் உண்டாயிற்று. இறைவன் மன்றைப் பொலிவிக்கும் கோமான். அந்த மன்று தில்லையைப் பொலிவிக்கிறது. இறைவனை ஏற்று வருவதனால்தான் இடபவாகனத்துக்கும் விளக்கம் உண்டாகிறது.
இவற்றையெல்லாம் நினைக்கிறாள். அவற்றை அப்படியே சொல்லிவிடலாமா? குறிப்பாக வைத்து, “தில்லையிலுள்ள பொன் மன்றத்துக்குப் பொலிவு உண்டாக்கும் கோமானை இத் தெரு வழியாகக் கொண்டு வா” என்று அந்த அழகி சொல்கிறாள்.
-வான்ஓங்கு
வாமாண் பொழில்தில்லை மன்றைப்
பொலிவித்த கோமானை இத்தெருவே கொண்டு.
[வானளவும் ஓங்கிய பரந்த மாட்சிமைப்பட்ட பொழிலை யுடைய தில்லை நகரத்திலுள்ள பொன் மன்றைப் பொலிவு பெறச் செய்த இறைவனை இந்தத் தெரு வழியாகக் கொண்டு – போந்தால் அழிவுண்டே என்று கூட்ட வேண்டும்.
வாம் – பரவிய. மாண் – மாட்சிமைப்பட்ட; பொழிலுக்கு மாட்சியாவன மலரும் தேனும் கனியும் நிழலும். மன்று – சபை; இங்கே பொன் மன்றமாகிய சிற்சபை. பொலிவித்த – விளக்கம் பெறச்செய்த. கோமான் – தலைவன்.]
இறைவன் அழகிய மன்றத்திலே இருப்பதனால் அவனுக்குப் புதிய பெருமை ஏதும் உண்டாகவில்லை. அழகான பொருளைத் தங்கமாக இருக்கிறது என்று சொல்வது உலக வழக்கம். தில்லையில் தங்கமான சபைக்கும் இறைவன் விளக்கத்தைத் தருகிறான்; தன் சந்நிதியாகக் கொண்டு அதைப் பொலிவு பெறும்படி செய்கிறான். பொலிவு என்றது கண்ணுக்கு விளக்கமாக இருப்பது அன்று; அது தங்கத்துக்கு இயல்பாகவே உண்டு. நூல்களிலும் அடியார் உள்ளங்களிலும் பொன் மன்றம் நின்று பொலிவு பெறுகிறது. இந்தப் பெருமையையே பொலிவாகக் கருத வேண்டும்.
இறைவனை நாயகனாகக் கொண்டு தம்மை நாயகியாக வைத்துப் பட்டினத்துப் பிள்ளையார் பாடிய பாடல் இது.
ஆன்ஏறே! போந்தால் அழிவு உண்டே? அன்புடைய நானேதான் வாழ்ந்திடினும் நன்று அன்றே?- வான் ஓங்கு வாமாண் பொழில்தில்லை மன்றைப் பொலிவித்த கோமானை இத்தெருவே கொண்டு.
[ஆனேறே! கோமானைக் கொண்டு இத் தெருவே போந்தால் அழிவுண்டே?]
இது கோயில் நான்மணி மாலையில் உள்ள முப்பத் தேழாவது பாட்டு.



