அமுத மொழிகள் – குன்றக்குடி அடிகளார்

சமயம்

எனது பக்தி, அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒத்தது. மனிதனுக்குப் புதிய உணர்வையும் புதிய தெம்பையும் உண்டாக்கி அவனைப் பூரணத்துவத்திற்கு – உயர்ந்த பரிபூரண வாழ்விற்கு அழைத்துச் செல்வதுதான் எனது சமயம்.

**

எல்லாம் வல்ல இறைவன் நமக்கு இந்தப் பிறப்பைத் தந்தருளியது பிறருக்குச் சேவை செய்து பேறு பெறுவதற்காகத்தான். எனவே பிறருக்குச் சேவை செய்து பேறு பெறுவதுதான் பிறவியின் பயன் – சமயத்தின் சாரம்!

**

இறைவன் சோறு போடமாட்டான்; நிச்சயமாகப் போடமாட்டான். அவன்தான் சோற்றை உண்டாக்கிக் கொள்ள நிலம், நீர், அறிவு, ஆற்றல், உழைக்கக் கைகள் அனைத்தும் கொடுத்திருக்கிறானே !

**

மனிதகுலம் இன்ப அன்பிலே திளைத்து இன்புற்று வாழவே இந்த உலகம் – பேசும் மொழி – ஒழுகும் சமயம் யாவும் !

**

அரசியல் என்பது சமுதாயத்திற்கு ஒரு வேலி போல. சமயம் என்பது மனிதனுக்கு உள்ளும் புறமுமாக இருந்து அவனை உணர்வால் – சிந்தனையால் தூண்டி வளர்த்துப் பக்குவப்படுத்துகின்ற ஓர் அரும்பெரும் சாதனம்.

**

சுவையால் கனிக்குச் சிறப்பு ஏற்படுவது போல, மணத்தால் மலருக்குச் சிறப்பு ஏற்படுவது போல, நீரால் ஆற்றுக்குச் சிறப்பு ஏற்படுவது போல அவனுடைய ஆன்மாவின் தரத்தினாலும் – தகுதியினாலும் (கருத்தாலும் – உணர்வாலும்) மனிதனுக்குச் சிறப்பு ஏற்படும்!

**

இன்றைய அறநிலையங்களில் அங்குள்ள நகைகள், தங்கம், வெள்ளி, வைடூரியம் ஆகியவைகளுக்கு வகை வகையான பட்டியல்கள் இருக்கின்றன. ஆனால் அவ்வற நிலையங்களைச் சுற்றியுள்ள ஊர்களில் வாழும் பக்தி நலஞ் சான்ற அடியவர்கள் பட்டியல் இல்லை. அங்கு வரவு செலவைத் தக்கவாறு சரிசெய்து வளமூட்டத் தணிக்கையாளரைக் காண்கின்றோம். ஆனால், அங்கு வரும் அடியவர்கள் வாழ்வைச் சீராக்கி வளமூட்டத் தணிக்கையாளர்கள் இல்லை. மேன்மை கொள் சைவநீதி தழைத்தோங்கத் தங்கம் வெள்ளி வைர நகைகளின் பட்டியலும் வரவு செலவுத் தணிக்கையுமா தேவை! அடியவர்கள் பட்டியலும் அவர்கள் வாழ்வில் வளமூட்டும் தணிக்கையு மல்லவா தேவை.

**

நம்மைப்பற்றி நாம் சரியாகப் புரிந்துகொண்டால் தான் நாம் இறைவனைப் பற்றியும் புரிந்துகொள்ள முடியும். நம்மை நாம் சரியாகப் புரிந்துகொள்ள நமக்குத் துணை நின்றுதவுவது சமயம்.

**

குறைகள் நிறைந்த மனித சமுதாயம் நிறைவுடைய இறைவனின் திருவருளை – திருவருள் இன்பத்தை நோக்கிப் பயணம் செய்வதே இலட்சியத்துடன் கூடிய வாழ்க்கை.

**

பிறரை வாழ்விப்பது எனது கடமை என்ற கருத்தை வளர்ப்பது சமயத்தின் அடித்தளமான நோக்கம்.

**

அறம் வேறு சமயம் வேறல்ல. கைகால் எல்லாம் சேர்ந்ததுதான் உடம்பு. அவை உடம்பின் உறுப்புக்கள். அவை இல்லாவிட்டாலும் ஒருவன் வாழ்ந்துவிடலாம்.

**

இதயம் இல்லாமல் மனிதன் வாழ முடியுமா? இதயம் வேறு மனிதன் வேறல்ல. மனித வாழ்வுக்கு இதயம் போல சமயத்திற்கு அறம். ஆகவே, அறம் வேறு சமயம் வேறல்ல. அறமே சமயம் – சமயமே அறம்!

**

மனிதனை வாழ்வாங்கு வாழச் செய்வதற்காக – மனித குல ஒருமைப்பாட்டை உருவாக்குவதற்காகத் தோன்றியதே சமயம். ஆனால், காலப்போக்கில் அது கடவுளுக்கே என்று ஆக்கப்பெற்றுவிட்டது. சமயம் மக்களுக்காக என்றிருப்பதுதான் நியாயமானது !

**

உலகில் ஈ. தேனீ ஆகிய இரண்டையும் நாம் பார்க்கிறோம். ஈ மலத்திலும் உட்காரும், மலரிலும் உட்காரும். ஆனால் தேனீ மலரில் மட்டுமே உட்காரும். ஈ நமது ஆரோக்கியத்திற்குக் கேடு பயப்பது. தேனீயோ ஆரோக் கியத்திற்கு உதவும். தேனைச் சேகரித்துத் தருகிறது. ஈயை ஒழிக்க முயல்கின்றோம். தேனீயை வீடுகளிலேயே வளர்க்கிறோம். மனிதனின் மனம் ஈ போல இருக்கிறது. அதைத் தேனீ போல மாற்ற வேண்டும். அதாவது நல்லது நினைக்கவும் – செய்யவுமே பழக்க வேண்டும். இந்த முயற்சியுடைய வாழ்க்கைக்கு சமய வாழ்க்கை என்று பெயர்.

**

இன்று திருக்கோயில்களுக்குக் கூட்டம் வருவதாகப் பலர் கருதுகின்றனர். அக்கருத்துத் தவறானது. ஏனெனில், வரவேண்டியவர்கள் எத்துணை பேர் என்று தெரிந்தால் அல்லவா வந்தவர்களின் எண்ணிக்கை நிறைவுடையது தானா என்று மதிப்பிட முடியும்?

**

உண்மையான சமயம் ஒருபோதும் சமதர்மத்திற்கு மாறுபட்டதல்ல. சாதி, குலம், பிறப்பு என்ற எல்லைகளைக் கடந்ததே சமயம். இறைவன் எல்லா உயிர்வர்க்கங்களுக்கும் தாயும் தந்தையுமாக — அம்மையப்பனாக இருக்கின்றான் என்பது சமயநெறியின் தத்துவம். அப்படியானால் அவன் எப்படி உயிரினங்களிலே தாழ்வுயர்வுகளை-மேடு பள்ளங்களை அங்கீகரிப்பான் ? ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய அப்பரடிகள் சமதர்மத்திற்கு விரோதமான பிரிவு உணர்ச்சிகளை, அப்பட்டமான தன்னல வாழ்க்கையைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

**

ஆன்மீகத்தின் அடிப்படை எண்ணம் தன்னை அறிதலாகும். ஆன்மாவைப் பற்றி அறிதல் ஆத்மீகம். அதாவது உயிரியலைப் பற்றிய அறிவு.

**

கூட்டுச் சிந்தனையும் கூட்டு வேலைத் திட்டமுமே தனி மனித முன்னேற்றத்திற்கும் சரி – சமுதாய முன்னேற்றத் திற்கும் சரி – தத்துவங்களை நடைமுறைப்படுத்தும். முயற்சிக்கும் சரி வெற்றி தரக்கூடியனவாகும்.

**

திருக்கோயில்களில் இறைவன் முன் படைக்கப் பெறுகின்ற திருவமுதை இறைவன் உண்ணாமலிருப்பதற்குக் காரணம் தனது மக்களிற் பலர் உண்ண முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதுதானோ ?

**

வாழ்வாங்கு வாழ்வது என்றால் என்ன பொருள் ? முறையாக உண்டு உடுத்து வாழ்வதாகுமா? இல்லை. வாழ்க்கையின் குறிக்கோளை அடைகிற வழியில் பயனுடைய வாழ்க்கை வாழ்தலே வாழ்வாங்கு வாழ்தல். வாழ்க்கையைப் பொருளோடு கூட்டி. அறத்தோடு அணைத்து, இன்பத்தோடு இணைத்துப் பின் விலகி வீடு பெறும் வேட்கை வழி நின்று வாழ்வதே முறையான வாழ்க்கை.

வீடு என்றால் விடுதலை பெற்று வாழும் இடம் என்று பொருள். துன்பத்தினின்றும் விடுபடுதலே விடுதலை என்பது. துன்பத்திற்குக் காரணம் பிறப்பு. பிறப்பிலிருந்தும் அதனைத் தொடர்ந்துவரும் துன்பங்களினின்றும் விடுதலை பெறுதலே வீடு – வீடுபேறு.

**

இந்த உலகத்தைப் போற்ற வேண்டும்.இவ்வுலக உயிர்களுக்குத் தொண்டு செய்யவேண்டும். அது ஒரு சிறந்த வழிபாடு.

**

சிந்தை திருந்தினாலொழியச் செயல் திருந்த வழியில்லை ; சிந்தையைத் திருத்தும் ஆற்றல் சமயத்திற்குத்தான் உண்டு.

பழைய காலத்தில் கோயில்கள் சமுதாயத்தின் எல்லா நலன்களையும் காக்கின்ற மைய நிலையங்களாக விளங்கின. அதனால்தான் ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற பழமொழியும் எழுந்தது. இன்று கோயில்கள் தம் கடமையை மறந்து வணிக நிலையங்கள் போலாகி விட்டன. நமது சமூக இளைஞர்கள் அனைவரும் திரண்டெழுந்து, கோயில்களை மீண்டும் சமூகத்தின் மையமாக்கி, கண்ணீர் துடைக்கும் கருணை நிலையங்களாக மாற்றப் புரட்சி செய்யவேண்டும்!

**

உலகியல் எண்ணங்கள் அதிகமாகி வாழ்வியல் வெப்பமடைந்து போகும் காலத்துச் சமயம் மக்களின் காட்சிக்கு அல்லது வாழ்க்கைக்கு வருவதில்லை. உலகியல் வெப்பம் தணிந்த பிறகு சமயம் மீண்டும் மக்கள் வாழ்க்கைக்கு வருகிறது. இதுவே சமயநெறியின் சுழல் வரலாறு!

**

உலகிலேயே மிகச்சிறந்த சமயம் சைவசமயம். மார்க் சீயத்திற்கும் நமக்கும் 35 அல்லது 40 விழுக்காடுதான் வேறுபாடிருக்கும். அதுவும் கடவுளுண்மையில். இந்த வேறுபாட்டிற்குக் காரணம், மார்க்ஸ் பிறந்த நாடு – அவர் பேசிய மொழி – அவர் வாழ்ந்த சமுதாயம் ஆகியனவே. மார்க்ஸ் நமது தமிழகத்தில் தோன்றியிருந்தாரானால், இந்த வேறுபாடும் இருந்திருக்காது. அந்த அளவிற்கு நமது சைவ சமயம் உயிருண்மை – உயிர்களின் உரிமை ஆகியன பற்றி வலியுறுத்துகிறது.

**

சமுதாயத்தில் எங்கெங்கு அழுகைக்குரலும், அவலக்குரலும் எழுந்ததோ அங்கெல்லாம் உடனடியாக விரைந்து சென்று அந்த அழுகைக் குரலையும், அவலக் குரலையும் நமது ஞானச் செல்வர்களான திருநாவுக் கரசரும், ஞானசம்பந்தரும் மாற்றி இன்பம் தந்தருளி னார்கள். சமுதாயத்தின் அழுகுரலை மாற்றுவது இறை வனுக்கு உவகையைத் தரும் என்று கூறினார்கள் – செய்தும் காட்டினார்கள்.

**

பண்பட்ட சமய ஒழுக்கமுடையவன் மறந்தும் கூட மற்றவர்களிடம் பகையோ காழ்ப்போ கொள்ளமாட்டான். உயிர்களிடத்து அன்பு காட்டுவதுதான் உயர்ந்த சமய ஒழுக்கம்.

**

சமுதாயத்தின் அன்றாடச் சிக்கல்களில் அக்கறை காட்டித் தீர்த்துவைக்க வேண்டிய பொறுப்பு மற்றெல்லாத் துறைகளையும் விடச் சமயத்துறைக்கே அதிகம் இருக்கிறது.

**

உலகத்தின் வைப்புக்கள் அனைத்தும் பொதுமை ; அவற்றை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்பதே உயர்ந்த – மிக உயர்ந்த சமய ஒழுங்கு.

**

மனிதன் நடப்பதற்கு இரண்டு கால்கள் தேவைப்படுவது போல, மனித வாழ்க்கைக்குக் கடவுள் நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் தேவை. கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் நாணயத்தின் இருபுறங்கள் போல அடியவர்கள் ஆண்டவனிடம் இரப்பதில்லை. அடியவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்க அவன் கடமைப் பட்டவன். அடியவர்கள் இறைவனிடம் தங்கள் தேவையைப் பெற்றுக்கொள்வது உரிமையின்பாற்பட்டது.

மனிதனை மனிதனாக மதித்து வாழவைக்கும் உண்மைச் சமயத்தையே நாம் விரும்புகின்றோம்.

**

சமயம் என்பது மனிதனுடைய இதயத்தில்தான் அரும்புகிறது.

**

சித்தத்தை அடக்கி, அதன்மூலம் புலன்களை அடக்கினால் ஞானத்தைப் பெறலாம். சித்தத்தை அடக்காமல் பொறிகளை மட்டும் அடக்கினால் சோம்பேறித்தனம் தான் வளரும். சோம்பேறித்தனம் வளராமல் புலன்களுக்கும் பொறிகளுக்கும் வேலை கொடுப்பதற்கே நம் நாட்டில் திருக்கோயில் வழிபாடும் – திருத்தொண்டும் தோன்றின. புலன்களையும். பொறிகளையும் ஒருசேரப் பக்குவப்படுத்தும் நெறிதான் சமய நெறி.

**

வாழ்க்கையை விட்டு விலகிய சமயம் பயன் தராது; சமயச் சார்பற்ற உலகியல் உறுதி பெறாது – அது பரிபூரண நன்மையாகவும் இருக்க முடியாது. சமுதாயத் தொடர்பில்லாத சமயம் காலவெள்ளத்தில் மறைந்து போகும்.

**

நல்ல சமையல்-ஆரோக்கியமான உணவு. மருத்துவ மனைகளை இழுத்து மூடும் ; நல்ல சமயப் பண்பு சிறைச் சாலைகளையும் காவலர் நிலையங்களையும் இழுத்து மூடும்.

**

சமயப் பற்றைப் போலவே நாட்டுப்பற்றும் முக்கியமான ஒன்றாகும். ஆன்மஞானம் வளர வேண்டுமென்றால் அந்த ஆன்மாவையுடைய மனிதன் வாழும் நாடு செழிக்க வேண்டும்.

சமயம் ஒரு தத்துவம்-கொள்கை-வாழ்க்கை முறை. அது மனித சமுதாயத்தை நிலைக்களனாகக் கொண்டுதான் வளர முடியும். எந்த ஒன்றும் விளக்கம் காட்டுவது ஒன்றன் சார்பிலே நின்றேயாம். அது போல சமய விளக்கம் சமுதாயத்தின் வாழ்க்கைப் போக்கின் மூலம் விளக்கம் காண்பது.

**

தொண்டின் வாயிலாக மனிதனைப் பக்தியுலகிற்கு அழைத்துச் செல்வது மிகவும் எளிது. எனவே சமய வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது தொண்டு நெறி.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *