
அமுத மொழிகள் – குன்றக்குடி அடிகளார்
மொழி
எனக்கு எந்த மொழியின் மீதும் வெறுப்புக் கிடையாது. எல்லா மொழிகளின் மீதும் பற்றுண்டு. ஆனாலும் தமிழ் மொழியின் மீது கொஞ்சம் அதிகப் பற்றுண்டு. ஏனெனில் எனது சிந்தனையைத் தூண்டிவிட்டு, எனது உள்ளத்தில் ஒரு கருத்தை உருவாக்குகின்ற மொழி என் தாய் மொழிதானே! எனவே, என் தாய் மொழி மீது நான் பற்றுக்கொள்வது – பாசங்காட்டுவது குற்றம் – பாவம் என்று யாராவது கூறமுடியுமா ?
**
கல்வி பயிலும் மாணவர்கள் தாங்கள் தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் படிக்கக் கூடாது. அவர்கள் மாணவர்களாக இருக்கும்போதே பொது அறிவை நன்றாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் அவர்களும் பயன் பெறுவர்; இந்த நாடும் பயன் பெறும்.
**
தமிழன் என்றைக்குத் தமிழினம் ஒன்று என்று கருத இன ஒருமைப்பாட்டுடன் வாழ்கிறானோ அன்றுதான் தமிழ் உலகப் பொதுமொழியாக வரமுடியும்.
**
சிந்தனையைத் தூண்டி வளர்ப்பதற்குரிய தாய்மொழி யிலிருந்து மனித இனத்தைப் பிரிப்பது அள்ளிச் சாப்பிடு தற்குரிய கையை வெட்டி யெறிவது போன்றது-நீரிலிருந்து மீனைப் பிரித்தெடுத்துக் கரையிலே எறிவது போன்றது.
**
நாம் பெறுகிற படிப்பு, கல்வி, அறிவு, பண்பாடு அனைத்தும் ஒழுக்கத்திற்காகத்தான். எனவே, ஒழுக்க நெறியை நாம் பேணிக் காக்க வேண்டும். அப்போதுதான் நாம் பெற்ற படிப்புக்கும், கல்விக்கும், பண்பாட்டுக்கும் சிறப்பு.
**
மலர்த்தேன் உடல்மலம் நீக்கும் ; மணிவாசகத்தேன் உயிர்மலம் நீக்கும்.
பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் கருத்துப்படி சமஸ்கிருதம் இந்தியாவுக்குள் மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்களுடைய தாய் மொழி என்றே கருதப்பெறுகிறது. அவர்கள், இந்த நாட்டுக்கு வந்தவுடன் இந்த நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பரவிக் குடியேறினார்கள்.
அவ்வம் மாநிலத்து மொழியையே தத்தமது தாய் மொழியாக ஏற்றுக்கொண்டு வாழத் தலைப்பட்டனர். இதனாலேயே சமஸ்கிருதம் பேச்சு வழக்கிலிருந்து விலகி இருக்கலாம். கிரந்த எழுத்துக்களையுடைய சமஸ்கிருத மொழி செய்யப்பட்ட மொழி. அதுவும் தமிழர்களாலேயே செய்யப்பட்ட ஒரு மொழி. சமய மரபுகளைப் புனிதமான தாகவும், மறை பொருளாகவும் வைத்துக் காப்பாற்றுதற் கென்றே அம்மொழியைத் தோற்றுவித்துக் காப்பாற்றி வளர்த்ததாகக் கருதலாம்.
**
நூல்நிலையத்திற்குள் பாம்பை நுழையவிட்டால் கூடப் பரவாயில்லை. நமது பண்பாட்டை, ஒழுக்கத்தை. உணர்வைக் கெடுக்கின்ற நூல்களை நுழையவிடக் கூடாது.
சமுதாயம் வளர்ந்தால்-வாழ்ந்தால்-அந்தச் சமுதா யம் பேசுகின்ற மொழி வளரும்-வாழும். மொழி வளர்ந்தால் கருத்து வளரும். கருத்தைப் பற்றிக் கவலைப்படாத வர்கள் – கருத்து வேட்கையில்லாதவர்கள் அகத்தால் மட்டுமின்றிப் புறத்தாலும் நலம்கெட்டு வளம் குன்றிப் போவார்கள்.
**
மொழியால் நாம் தமிழர்கள். நாட்டால் நாம் இந்தியர்கள். நாமெல்லாம் இந்தியக் குடிமக்கள் என்று இதய பூர்வமாக உறுதிமொழி எடுத்துக்கொள்வோமாக ! எந்த நிலையிலும் மொழியாலோ மதத்தாலோ சாதியாலோ எத் தகைய வேற்றுமையும் எழ நாம் இடமளிக்கமாட்டோம்.



