
அமுத மொழிகள் – குன்றக்குடி அடிகளார்
அறவுரை
சமய சமூகநல நிறுவனங்கள் தங்களுடைய சிறந்த இலட்சியங்களுள் ஒன்றாகத் தீண்டாமை விலக்கை வைத்துப் பணியாற்ற வேண்டும். தீண்டாமை விலக்கில் தொடங்கி சாதியற்ற சமுதாய அமைப்பில் நம்முடைய இலட்சியம் நிறைவேற வேண்டும்.
**
சர்க்கஸ் ஆடப் பலருக்குத் தெரியாது-அதற்கான தைரியமும் இருக்காது. ஆனாலும், சர்க்கஸ் ஆடுகிறவர்களைப் பார்த்து மகிழும் மனம் கூட இல்லாமல் மயங்குகிறவர்களைப் பற்றி நாம் என்ன நினைப்பது? அதுபோல பலருக்கு இசைபட வாழ்தலுக்குரிய முயற்சியிருக்காது. ஆனாலும் பிறருடைய புகழில் அழுக்காறு கொள்ளுகிறார்கள்.
**
நமது ஆற்றலும் வசதியும் அவ்வளவுதான் என்று இரண்டுக்கும் ஓர் எல்லைக்கோடு கட்டிவிட்டால் அதன் பிறகு வாழ்க்கையில் முன்னேறுவதென்பது முடியாத ஒன்று. வாழ்க்கையில் முடியாததென்பதொன்றில்லை- எதுவுமே முயன்றால் முடியக்கூடியதுதான் என்ற நம்பிக்கை முன்னேற்றத்திற்கு வித்து.
**
அடக்கத்தின் பேரால் அச்சத்தை வளர்ப்பது பூக்கிற பூவைக் கசக்கி எறிவது போன்றது.
**
மனிதன் மனிதத்தன்மையை விட்டு விலகி வெறித் தன்மைக்குப் போகும்போது அதை எதிர்க்காமல் எப்படி அனுமதித்துக் கொண்டிருக்க முடியும்?
**
நான் இலக்கிய உலகில் திருவள்ளுவரையும். சமய உலகில் மாணிக்கவாசகரையும், அரசியல் நேருஜியையும் நம்புகிறேன்-பாராட்டுகிறேன்-பின்பற்றுகிறேன்.
**
விலங்குக்கும் மனிதனுக்கும் வேறுபாடு இருக்க வேண்டாமா? தின்னுவதில் யானை மனிதனை வென்று விட்டது. ஊர் சுற்றுவதில் நாய் மனிதனை வென்றுவிட் டது. இனப்பெருக்கம் செய்வதில் பன்றி மனிதனை வென்று விட்டது. எனவே இவற்றாலெல்லாம் மனிதன் உயர்ந்தவன் அல்லன். சிந்தனையால்தான் மனிதன் சிறந்தவனாக வாழமுடியும்.
**
சாதீய முறையை உருவாக்கிய அந்த முதலாளித்துவ சுரண்டல்காரர்கள் தங்கள் கொள்கையை உறுதிப்படுத்தச் சமயத்தை-மதத்தைத் துணைக்கழைத்துக் கொண்டார்கள். மன்னன் ஆணை என்றால் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறவர்களும் மகேசுவரன் கட்டளை என்றால் மறுக்காமல் ஒத்துக் கொள்வார்கள். இதை வைத்தே முதலாளித்துவவாதிகள் சமயத்திற்கும் சாதீய முறைக்கும் முடிச்சுப்போட்டார்கள். அவ்வளவுதான். எனவே, சாதீய முறை நமது சமயத்திற்கு முற்றிலும் முரண்பட்டது.
**
சாதீயமுறை முதலாளித்துவமுறை. முதலாளித்துவ வாதிகள் தங்கள் சுரண்டலுக்கும் சுகபோகங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடாமல் தடுத்துக் காத்துக்கொள்ளவே சாதீய முறைகளை உருவாக்கி அதற்கு ஆதரவும் கொடுத்து வருகின்றார்கள்.
**
உலகம் முழுவதிலும் வாழும் மனிதகுலம் அனைத்தும் ஒரு குலம்-ஓரினம்-ஒரு நிறை. இதுவே அறநெறியின் அடிப்படை, அருள்நெறியின் இலட்சியம். நியாயத்தின் வழி.
**
நிலத்திற்கு உரமிட்டால் நிலவளம் பெருகும். அது போல, மனிதனுக்குக் கருத்துணவு கொடுத்தால் அவனது உளவளம் பெருகும்.
**
உழவனும் இளைத்து உழவுமாடும் இளைத்துப்போனால் அந்த நாடு உருப்படுமா?
**
ஆண்கள் பெண்களின் கற்பைக் காப்பாற்ற வேண்டும்; பெண்கள் ஆண்களின் புகழைக் காப்பாற்ற வேண்டும்.
**
வீணை வாசிப்பதைவிட வாழ்வாங்கு வாழ்வது மிகச் சிறந்த கலை. அந்தக் கலையில் மிகச் சிலர்தாம் வெற்றி பெறுகின்றனர்.
**
இந்த உலகில் நீதியும் சமதர்மமும் நிலைத்து அன் பியல் செழித்து வளர்வதற்கான கருத்தை உருவாக்கும் கல்வியையே நாம் நமது குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
பல்வேறு பிறப்புக்களில் ஏற்பட்ட இன்பதுன்பங்களை மறப்பதற்கான ஒரு நல்ல சாதனம்தான் மரணம்.
**
அறிவிலே தெளிவு தோன்றும்போது மனிதனுக்குக். குறிக்கோளும் தோன்றிவிடுகிறது.
**
நமது ஆற்றலும் வசதியும் அவ்வளவுதான் என்று இரண்டுக்கும் ஓர் எல்லைக்கோடு கட்டிவிட்டால் அதன் பிறகு வாழ்க்கையில் முன்னேறுவது அரிது. வாழ்க்கையில் முடியாததொன்றில்லை. முயன்றால் எதுவும் முடியக் கூடியதுதான் என்ற நம்பிக்கைதான் முன்னேற்றத்திற்கு வித்து.
**
ஒரு துறவி தவறு செய்தால் அது சமுதாயத்தை- நாட்டின் எதிர்காலத்தை அவ்வளவாகப் பாதித்துவிடாது. காரணம் துறவிக்கு வாரிசு இல்லை. இல்லறத்தான் தவறு செய்தால் அது வழிவழியாகத் தொடர்ந்து வரும். நாட்டையும் சமுதாயத்தையும் பெரிதும் பாதிக்கும்!
**
கோயிலுக்கும் குடிசைக்கும் இடையேயுள்ள தூரம் குறையவேண்டும்.
**
நாம் உண்ணுகின்ற உணவால்-பாலால் பழங்களால் இன்னபிற சுவையுணவுகளால் இரத்தம் ஊறுகிறது, ஆனாலும், அந்த இரத்தத்திற்கு வடிவமும் குணமும் பண்பும் கொடுப்பது நமது சிந்தனைதான். ஆதலின் நாம் நமது சிந்தனை யூற்றைச் செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மனித குலம் குறைகளை நீக்கி நிறைவை நோக்கிப் பயணம் செய்வதற்குக் கிடைத்த அரும் பிறவி மானிடப் பிறவி. அத்தகு மானிடப் பிறவியின் மாண்பையும் பயனையும் நமது சிந்தனைகளால் – செயல்களால் கெடுத்துவிடக் கூடாது.
**



