அமுத மொழிகள் – குன்றக்குடி அடிகளார்

சமூகம்

பெண்களின் சொத்துரிமை பறிக்கப்பெற்ற பிறகு பெண்கள் அடிமைகளானார்கள். அவர்கள் உயிருள்ள பாத் திரங்களாக கருதப் பெற்றார்கள்.

**

சாதியுணர்ச்சி சமுதாய முன்னேற்றத்திற்கு ஒரு மாபெரும் முட்டுக்கட்டை. மனிதர்கள் ஒருவரோடொருவர் இணைந்தும் பிணைந்தும் வாழ்வதற்கு இடையூறாக இருக்கிற சாதிகுல வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஒழிந் தாலன்றிச் சமுதாயத்தில் அமைதி நிலவாது; இன்பம் மலராது.

**

மனிதன் உள்ளுணர்வுகளை வெளிக் காட்டக் காரியங்கள் செய்கிறான். நாம் இறைவனுக்குப் பூ, நீர், கனி ஆகியன தருகின்றோம். இவை இறைவனுக்கு விருப்பமானவை என்ற அடிப்படையில் அல்ல. இறைவன் இவற்றை விரும்புவதுமில்லை. இறைவன் மலர் போன்ற மனத்தையும், தண்ணளி மிக்க நெஞ்சையும், கனிந்த உள் ளத்தையுமே மனிதர்களிடமிருந்து எதிர்பார்க்கிறான். இது தான் பொருள். நமக்கும் மலருக்கும், நமக்கும் தண்ணீ ருக்கும், நமக்கும் கனிக்கும் உள்ள இடைவெளியை எண்ணிப் பாருங்கள். இறைவன் எப்படி நம்மை மகிழ்ந் தேற்பான் ?

**

ஒருவருக்கொருவர் மாறிக் கவலைப்படுகிறவர்களே நல்ல மனிதர்கள். தங்களைப் பற்றியே கவலைப்பட்டுக் கொள்ளுபவர்கள் சுயநலவாதிகள். மாறிக் கவலைப்படுகின்ற மனிதர்கள் நிரம்பிய சமுதாயத்தில் எல்லோரும் நலமாக வாழ்வார்கள். அமைதியும், அன்பும், இன்பமும் அங்கு குடிகொண்டிருக்கும்.

**

நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் செய்யும் பிரார்த்தனையில் மனித குலத்தில் இன்ப அன்புணர்ச்சி பெருகி அவ்வழி சமுதாயம் இனிது வாழவேண்டும் என்ற நினைப்பைக் கலக்க வேண்டும்.

**

மனிதன் கோயிலுக்குள் சென்று ஆண்டவன் முன்னிலையில் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குவது தவிர இங்கு யாரும் சோற்றுக்காகவோ துணிக்காகவோ கண்ணீர் சிந்தும் நிலை இருக்கக்கூடாது.

**

இறைவன் அருச்சனை வயலுள் வில்வமலர்க் குவியலுக்குள் அகப்பட்டுக் கொண்டு தவிக்கிறான். அவனுக்குத் தேவையான ஒன்றை வயலுக்குள் தேடிப் பார்த்தான். கிடைக்கவில்லை. தனது அருமைத் தொண்டர் மாணிக்க வாசகரிடம் தெரிவித்தான். அவர் மற்றவர்களிடம் அருச்சனை வயலில் அன்பு விதையிட மறந்துவிடாதீர்கள் என்று கூறினார்! எனினும் மறதி போனபாடில்லை.

**

மனித சமுதாயம் மேம்பாடுடையது ; விலை மதிப்பில்லாத பெருமையுடையது; இயற்கையும் கடவுளும் கூட மனித சமுதாய மேம்பாட்டின் மூலம்தான் பெருமை பெறுகிறது.

**

எண்ணங்களே மனிதனைச் செலுத்தும் மின் ஆற்றல். அந்த எண்ணங்களை உறுதியுடையனவாக- ஆக்க வழிப் பட்டனவாக—தூய்மை நிறைந்தனவாக-திருவருட் சார்புடையனவாக அமைத்துக்கொள்ள முயல்வதிலேயே நமது வெற்றி யிருக்கிறது.

**

சமுதாயத்தின் தீய சக்திகளாக விளங்குகின்ற வகுப்புவாதம், ஏகபோகம், பிரிவினை சக்திகள் ஆகியவைகளைச் சமுதாயத்திற்கு இனங்காட்டித் தனிமைப்படுத்தி ஒதுக்கி ஒழித்தாக வேண்டும்.

**

நாடு வயல் என்றால் குடும்பம் ஒரு வாய்க்கால். நாட்டிலுள்ள குடும்பங்கள் கெட்டால்-குடும்பங்களுக்குள் உள்ள உறவு கெட்டால் நாடு கெடும்.

**

சோற்றுக்கும் துணிக்கும் பஞ்சமின்றி மனிதன் வாழ வேண்டும்; அதற்குச் சமுதாயம் அவனுக்கு உத்தரவாத மளிக்க வேண்டும். சோற்றுக்கும், துணிக்கும், இன்ன பிற அடிப்படைத் தேவைகளுக்கும் உத்தரவாதமளிக்காத சமுதாயத்தில் பேராசை. போட்டி, பொறாமை முதலியன இருந்துகொண்டேதான் இருக்கும்.

**

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *