
அமுத மொழிகள் – குன்றக்குடி அடிகளார்
தத்துவம்
பலனில் பற்றின்றிப் பணி செய்யவேண்டும் என்பார்கள். என்னைக் கேட்டால் பலனில் பற்றின்றிப் பணி செய்யக் கூடாது என்றே சொல்லுவேன். பலனில் நிச்சயம் பற்று வேண்டும். ஆனால், எதிர்பார்க்கும் பலன் தன்னலச் சார்புடையதாக மட்டும் இருத்தல் கூடாது.
**
விரிந்த- பரந்த மனப்பான்மையுடன் புதிய கருத்துக்களையும் புதிய சிந்தனைகளையும் வரவேற்கும் சக்தியைப் பழமையின் மீது நமக்கிருக்கின்ற அளவற்ற பாசம் காரணமாக நாம் இழந்துவிடக்கூடாது. கூறப்பெறுகிற கருத்துக்கள். நல்லவைதாமா ஏற்புடைத்தாமா என்பதை நல்ல கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து நல்லதாக இருக்கு மானால் ஏற்கத் தயங்கக்கூடாது.
**
தீண்டாமை ஒரு சமூகக் கொடுமை. நம்முடைய சமுதாயத்தையும் சமயத்தையும் பிடித்துக் கொண்டிருக்கிற ஒரு பெரு நோய் அது. தீண்டாமை விலக்கின் மையம் கருத்துப் புரட்சி – மனமாற்றம் ஆகியனவே. இந்தக் கருத்துப் புரட்சியும், மனமாற்றமும் உயர்சாதி மக்கள் எனப்படுவோரிடையே ஏற்பட வேண்டும்.
**
பிறருக்குத் துன்பமில்லாத வாழ்க்கையை அன்பாலே தான் பெறமுடியும். நம் உடம்போடு உயிர் இணைந்திருப் பதே அன்பு செய்வதற்காகத்தான்.
**
காரை முறையாக இயக்கத் தெரிந்தவன் காரோட்டி ; மனத்தை முறையாக இயக்கத் தெரிந்தவனே மனிதன்.
**
சமுதாயத்தில் இன்பம் நிலைபெற வேண்டுமானால் நமது மனத்தில் அன்பு விதை பாவிக்கொள்வதோடு நம்மைச் சூழ்ந்து வாழுகின்ற மற்றவர்கள் மனத்திலும் அன்பு விதையைப் பாவவேண்டும்.
**
மனிதப் படைப்பின் நோக்கமே ஆர்வம் நிறைந்த உழைப்பினால் இந்த மாநிலத்தைப் பயன்படுத்திப் பயனுறுவதுதான். உழைக்காமல் இருப்பது பாவம் என்ற தத்துவம் மக்களிடத்தில் வளர்ந்து கால் கொள்ளும்படி செய்ய வேண்டும்.
**
பசு நாம் கொடுக்கும் தீனியைத் தின்று புல்லை மேய்ந்து வாழ்கின்றது. தன்னுடைய வாழ்வுக்குரிய அளவிற்கு எடுத்துக்கொண்ட உணவுப் பொருளில் ஒரு பகுதியை இரத்தமாக்கிக் கொள்ளுகிறது. எஞ்சியதைப் பாலாக்கிச் சமுதாயத்திற்குத் திருப்பிக்கொடுத்து விடுகிறது. மரங்களும் தாம் உயிர் வாழ்தற்குத் தேவையானது போக எஞ்சியதைக் காயாக-கனியாகச் சமுதாயத்திற்குத் திருப்பிக் கொடுத்து விடுகின்றன. மனிதனிடத்திலும் இந்த உயர்ந்த பழக்கம் வரவேண்டும். பசு பால் கொடுக்கும் – தென்னை காய் கொடுக்கும் என்பது போல மனிதன் வாழ்வு கொடுப்பான் என்கிற வழக்கு நடை முறைக்கு வரவேண்டும்.
**
உலகம் ஒரு சந்தைக்கூடம் ; அழுக்காறு. அவா, வெகுளி முதலிய சில பயன்படாத சரக்குகளை ஏற்றிக் கொண்டு இந்த உலகச் சந்தைக்கு வணிகர்களாக வந்துள்ளார்கள் மனிதர்கள். அந்தக் கெட்ட சரக்குகளை இங்கேயே இறக்கிவிட்டு அன்பு, ஒப்புரவு, ஈகை, கண்ணோட்டம் முதலிய நல்ல சரக்குகளைத் திரும்ப ஏற்றிக் கொண்டு மீண்டும் செல்லவேண்டும். அப்போதுதான் அவர்கள் கெட்டிக்கார வணிகர்களாக-சிறந்த வணிகர்களாக மதிக்கப் பெறுவார்கள்.
**
மனிதன் இயல்பிலேயே உள்ள பொருள்; அவன் படைக்கப் பெற்றவனுமல்லன் – அழிக்கப்படக்கூடியவனுமல்லன். அவன் ஓர் அறிவுப் பொருள். அவாக்களும் ஆர்வமும் நிறைந்தவன். ஆர்வத்தின் காரணமாகச் செயல் செய்யக் கூடியவன். பேரறிவு பெறத் தகுதியுடையவன்.
**
தன்னலத்தை முற்றிலும் விட்டுவிடுதல் என்பது அவ்வளவு எளிதானதல்ல. தன்னலத்திற்கு ஓர் எல்லை வகுத்துக் கொண்டால் போதும். தன்னலம் பிறர் நலத் திற்குக் கேடு செய்யாததாக அமையும்படி எல்லை வகுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அறநெறி.
**
மானிடப் பிறவி மதித்தற்குரிய பிறவி. இந்த உடம்போடு உயிர் கலந்துள்ளபோதே எண்ண – சிந்திக்க – பேச – செயல்பட முடியும். உடம்போடு தொடர்பு கொண்ட உயிர் – இயக்கத்தில் மூச்சுக்காற்று. மூச்சு நின்றுவிட்டால் உயிர் உடல் வழி இயங்கிய இயக்கம் நின்றுவிடுகிறது. அதன் பின் எண்ண-சிந்திக்க-பேச-செயல்பட முடியாது. எனவே இந்த உடம்பிலே இடமாகக்கொண்டு உயிர் இயங்கும் போதே. பாவத்தை-தீமையைத் தூற்றிப் புண்ணியத்தை- நன்மையைச் சேர்த்துக்கொள் என்று நமக்கு அறிவுறுத்துவது போலவே ‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்ற பழமொழி எழுந்தது.
‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்பது நல்ல ஞானப் பழமொழி. ஆனால் இன்று மக்களிடையில் இந்தப் பழமொழி வழங்கும் நிலை வேறு.
மற்றவர்கள் ஏமாந்திருக்கும்போது-வாய்ப்பு கிடைத்த போது வாரிச் சுருட்டிக்கொள் என்ற இழிபொருளிலே அந்தப் பழமொழி வழங்கப்பெற்று வருகிறது.
**
இன்பமும் துன்பமும் வாழ்க்கையில் உள்ளன. இன்பம் வரும்போது எல்லையற்ற இயல்பாக மகிழ்ச்சி கொள்ளாமலும் துன்பம் சூழ்ந்தபோது துவண்டுவிடாமலும் இருக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும்.
**
மார்க்சுக்கு லெனின், ஸ்டாலின் ஆகிய சீடர்கள் கிடைத்தார்கள். அவர்கள் மார்க்சீய தத்துவத்தை நடை முறைப்படுத்த முயன்றார்கள். வெற்றியும் கண்டார்கள். நமது திருவள்ளுவருக்கும். அப்பரடிகளுக்கும் கிடைத்த சீடர்களோ அவர்களின் தத்துவங்களைப் பாராட்டினார்கள்- போற்றிப் புகழ்ந்தார்கள் – அவர்களைக் கும்பிட்டார்கள்- நடைமுறைப்படுத்த முயலவில்லை.
**
மனிதனுடைய வாழ்வு வளரவில்லை-வாழ்வில் வளம் பெருகவில்லை. வாழப் பிறந்தவர்களைப் பிச்சைக்காரர் களாக்கி மகிழ்வது மகேஸ்வரனுக்குப் பிடிக்காத ஒன்று. மனிதனை வாழவைப்பதுதான்-மனித சமுதாயம் உய்யத் தொண்டு செய்வதுதான் மனிதப் படைப்பின் நோக்கம்- குறிக்கோள்.
**
துன்பம் வரும்போது நாம் அதைப் பார்த்துச் சிரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். துன்பத்திற்குக் காரணம் என்ன என்று எண்ணிப் பார்க்க வேண்டும். நம்மை நாமே எண்ணிப் பார்த்துச் சிரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நம்மை எண்ணிப் பார்த்து நாம் விமர்சனம் செய்து சிரிக்க மறந்துவிட்டால் நம்மைப் பார்த்து மற்றவர் கள் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள். துன்பம் வரும் போது, அந்தத் துன்பத்திற்குக் காரணம் நமது அறியாமையும் முட்டாள்தனமும் தான் என்று உணர்ந்து சிரிக்க வேண்டும்.
**
மனிதன் விடுகின்ற மூச்சுக் காற்று தண்மையாக இருந்தால் அன்பு வரும், ஆற்றல் பெருகும் என அறிவியல் கூறுகிறது. எனவே மூச்சுக் காற்று தண்மையாக இருக்குமானால், இந்த உலகையே சொர்க்கமாக்கலாம்.
**
விண்ணகத்திற்கும் மண்ணகத்திற்கும் இணைப் பூட்டும் ஒரு பொற்சங்கிலி அன்பு.
**
நதிகளில் நீராடினால் பாவம் தீரும்-புண்ணியம் சேரும் என்ற எண்ணத்தில் பாவிகள் பாவ மூட்டைகளைச் சுமந்து கொண்டு போய் நதிகளிலே நீராடுகின்றார்கள் ! ஆனால் அந்த நதிகளோ ‘ஐயகோ ! இவ்வளவு பெரும் பாவ மூட்டைகளோடு இவர்கள் வந்து முழுகி நம்மைக் கறைப் படுத்திவிட்டார்களே!’ என்று வருந்தித்தான் விரைந் தோடிச் சென்று கடலில் மூழ்கிவிடுகின்றன போலும்!
**
எல்லாருடைய உடம்பிலும் இரத்தம் ஓடுகிறது. எனினும் இரத்தத்தின் தன்மை வெவ்வேறாக இருக்கிறது.
**
இயேசுநாதரின் உடம்பிலும் இரத்தம் ஓடியது. அவரைச் சிலுவையில் அறைந்தவர்கள் உடம்பிலும் இரத்தம் ஓடியது. இயேசுநாதரின் உடம்பில் ஓடிய இரத் தம் அன்பு இரத்தம். மற்றவர்கள் உடம்பில் ஓடிய இரத்தம் கொலைவழிச் சார்புடையது.
நபிகள் நாயகம் உடம்பிலும் இரத்தம் ஓடியது. அவரைத் துரத்தி யடித்துத் தொல்லை விளைவித்த அவர் பகைவர்களின் உடம்பிலும் இரத்தம் ஓடியது. நபிகள் நாயகம் உடம்பில் ஓடியது அன்பு இரத்தம். அவர் பகைவர்கள் உடம்பில் ஓடிய இரத்தம் பகைவழிச் சார்புடையது.
காந்தியடிகள் உடம்பிலும் இரத்தம் ஓடியது. அவரைச் சுட்டு வீழ்த்திய கோட்சேயின் உடம்பிலும் இரத்தம் ஓடியது. காந்தியடிகள் உடம்பில் ஓடியது சாந்தம் தழுவிய இரத்தம். கோட்சேயின் உடம்பில் ஓடிய இரத்தம் கொலைத்தன்மை தழுவியது.
ஆழ்ந்து சிந்தனை செய்யுங்கள். உங்களுக்கு வேண்டியது யாருடைய உடம்பில் ஓடிய இரத்தம் ?
இயேசுநாதர் உடம்பில் ஓடிய இரத்தமா ? அவரைச் சிலுவையில் அறைந்த குண்டர்கள் உடம்பில் ஓடிய இரத்தமா?
முகம்மது நபியின் உடம்பில் ஓடிய இரத்தமா? அவரைத் துரத்தியடித்த தீயவர்கள் உடம்பில் ஓடிய இரத்தமா ?
காந்தியடிகள் உடம்பில் ஓடிய இரத்தமா ? அவரைச் சுட்டு வீழ்த்திய கயவனின் உடம்பில் ஓடிய இரத்தமா ?
சான்றோர்கள் உடம்பில் ஓடிய இரத்தமே நம்மை வழி நடத்தும்; வாழ்விக்கும் !
**
மனிதனோடு பேச வாய் ; இறைவனோடு பேச இதயம்.
**
உரிமை உயிர் போன்றது – தூய்மை மிக்கது அதைப் பறிக்க முயல்வது அறியாமை – பாவம் கொடுமை.
**
உயிர் இயங்குவதற்கு இந்த உடலைக் கருவியாகக் ‘கொண்டிருப்பதால் உயிருக்குள்ள சிறப்பு உடலுக்கும் உண்டு. ஆனாலும், உயிருக்குள்ள சிறப்பு நிரந்தரமானது – உடலுக்குள்ள சிறப்பு நிலையற்றது – மாறுந்தகையது.
**
தத்துவத்தை – கொள்கையை மக்கள் மன்றத்தில் நடைமுறைப்படுத்தி அவர்களோடு நாமும் ஒன்றி யிருந்து திருத்தொண்டு செய்யவேண்டும்.
எண்ணத்திற்கு ஒரு வலிவு உண்டு. இதைத்தான் மனம்போல் வாழ்வு என்பார்கள். முழுமனத்தோடு ஒன்றை நினைத்துவிட்டால் அது நடக்கும். முழுமனத்தோடு எண்ணிய எதுவும் நடக்கும்-எப்போதும் நடக்கும்.
**
மனிதன் இயல்பிலேயே விலங்குமல்லன்- பேரறிவுடையவனுமல்லன். அவன் எல்லைக்குட்பட்ட அறிவினின்று பயின்று வாலறிவனின் திருத்தாள் சிந்தனை யால் ஒரு பேரறிவு வட்டத்திற்குள் செல்லவேண்டியவன்.
**
சமயம் நிரந்தரமான உயிரோட்டமுள்ள ஒரு தத்துவம். அதற்கு எக்காலத்தும் அழிவு ஏற்பட்டதில்லை. காலநிலைமைகளின் விளைவாகச் சிலபொழுது அது மறைந்தது போலத் தோற்றமளிக்கக்கூடும். ஆனாலும் அழிவதில்லை. தத்துவத்துக்கு ஏது அழிவு? ஆனாலும் தத்துவம் உண்மையாதலும் – பயன்படுதலும் தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதின் மூலமேயாம்.
**
இறைவன் தத்துவங்களைக் கடந்தவன் ; உயிர்கள் தத்துவங்களுக்கு உட்பட்ட நிலையிலிருந்து கடந்த நிலைக்கு வளரும் முயற்சியே சமய வாழ்க்கை.
**
மனித வாழ்வின் ஊற்றுக்கண் சித்தம். நமது எண்ணம், சிந்தனை, செயற்பாடு அனைத்தும் சித்தத் திலிருந்தே பிறக்கின்றன. சித்தம் அழுகியதாக இருக்குமானால் நல்ல சிந்தனை தோன்றாது. நல்ல சிந்தனை இல்லை யென்றால் நல்ல எண்ணங்கள் தோன்றமாட்டா. நல்ல எண்ணங்கள் இல்லையானால் நல்ல செயற்பாடு தோன்றாது. இரத்தம் கெட்டால் நோய் ஏற்படும். சித்தம் கெட்டால் சீரழிவு தோன்றும்.
**
கடவுளை நம்பமாட்டேன் என்று சொல்லுவது பைத்தியக்காரத்தனம் ; நம்ப மறுப்பவனிடம் கடவுளைக் காட்ட முயல்வது அதைவிடப் பைத்தியக்காரத்தனம்.
**
நாம் பிறரிடமிருந்து எதை எதிர்பார்க்கிறோமோ அதையே நாம் மற்றவர்களுக்கு வழங்குகின்ற பண்பாடு உயர்ந்த சமுதாய ஒழுக்கநெறி.
**
மனிதர்களின் உள்ளுணர்வுக்கும் புறச் சூழலுக்கும் பெரும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போராட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் மேதைகளாக – ஞானிகளாக ஆகிறார்கள்.
**
வெறுப்பிலிருந்து விளைவது வேற்றுமை. அது காழ்ப்பையூட்டும், பகையை வளர்க்கும். போரைத் தோற்றுவிக்கும், தீராத தொல்லைகளையும் தரும்.
**



