
அமுத மொழிகள் – குன்றக்குடி அடிகளார்
அரசியல்
நிலத்தையும் வீட்டையும் . பிரிக்கமுடியாதது போல அரசையும் தனிமனித வாழ்க்கையையும் பிரிக்கமுடியாது. தனிமனிதனின் நல்வாழ்வுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்; அரசின் சிக்கல்களுக்குப் பரிகாரம் காண்பதற்குத் தனிமனிதன் பொறுப்பேற்க வேண்டும்.
**
சோஷலிச சமுதாய அமைப்பிற்குரிய ஊற்றுக் கண்கள் ஒற்றுமை-உழைப்பு-அளவுக்கு மீறிய தன்னலமின்மை ஆகியன.
**
மனிதனுடைய திறமைகள் எவ்வாறிருப்பினும் அவனுடைய செல்வத்திற்கும் அனுபவத்திற்கும் கட்டுப்பாடு உண்டாக்கி இயந்திரம் போல மனிதனை வாழச் செய்வது- தனிமனிதனைப் பற்றிக் கவலைப்படாது சமுதாயத்தை முதன்மைப்படுத்துவது-இதுதான் கம்யூனிசம்!
**
முதலாளித்துவத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடைப் பட்டதாக மனிதனுடைய திறமைக்கு வாய்ப்பளித்து எந்த ஒரு மனிதனுடைய திறமையையும் வாய்ப்பையும் வேறு எந்த மனிதனின் திறமையும் வாய்ப்பும் அபகரிக்காமல் இருக்கும்படி தடுத்து எல்லாருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்கும்படி செய்வது-இதுதான் சோஷலிசம், நமது தாயகத்தின் கொள்கை !
சுதந்திரம் வாங்குவது பெரிதல்ல. சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதுதான் பெரிது. மக்களிடத்தே உணர்ச்சி பூர்வமான மாறுதல் ஏற்படாதவரை புதிய சமுதாயத்தை அமைக்க முடியாது.
**
தன்னுடைய கடமைகளை ஒழுங்காகவும் முறையாகவும் செயயும் சக்தியுடையவனே தலைசிறந்த குடிமகன்.
**
பஞ்சாயத்து என்பது நீதியின் பெயர் – நம்பிக்கையின் பெயர்-தூய்மையின் சின்னம். பஞ்சாயத்து உறுப்பினர்கள் இதனை நன்றாக மனத்தில் பதிய வைத்துக்கொண்டு, மக்களின் உழைப்பாற்றலைப் பெருக்கவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் பாடுபடவேண்டும்.
**
ஒருவன் ஏகபோகமாக வாழ்கின்றான் என்றால் அவன் ஒரு நூறு பேரையாவது சுரண்டித்தான் அவர்களையெல்லாம் அழ வைத்திருக்கிறான் என்று பொருள். எனவே, அந்த நூறு பேரின் அழுகை தீரவேண்டும் என்றால் அந்த ஒருவனுடைய ஏகபோக உரிமை ஒழிக்கப்பட வேண்டும்.
**
சாதியால் இனத்தால் பேசும் மொழியால் இன்ன பிறவற்றால் மக்களைப் பிரிக்காமல் அவர்களின் உழைப்பை- உழைப்பாற்றலை வளர்க்க ஏற்பட்ட ஒரு நல்ல அமைப்பே பஞ்சாயத்து. மக்களைச் சமுதாயக் கூட்டு வாழ்க்கைக்குப் படிப்பிப்பது. பஞ்சாயத்தின் விழுமிய கடமைகளில் ஒன்று.
**
இறைவனின் கருணை நிறைந்த சந்நிதானத்தில் கொடுமை என்பதே இருக்கக்கூடாது. இதற்குப் பஞ்சாயத்து ஆட்சி தேவை. திருக்கோயில்களில் அருச்சகர் களுக்குத் தேவையான மனத்தூய்மையும். விருப்புவெறுப்பற்ற தன்மையும், மனப்பக்குவமும் பொறுப்பும் பஞ்சாயத்து உறுப்பினர்களுக்குத் தேவை.
**
இந்த நாடு அன்னியர்க்கு அடிமைப்பட்டதற்கு அடிப்படைக் காரணம் பெண்ணடிமைதான். ஈன்று புரந் தரும் தாய் அடிமையாக இருந்தால் அவள் ஈன்று தருகிற குழந்தையும் அடிமையாகத்தானே இருக்கும்!
**



