அமுத மொழிகள் – குன்றக்குடி அடிகளார்

வாழ்வியல்

முகத்தைச் சோப்புப் போட்டுக் கழுவித் தூய்மைப் படுத்தினால் புற அழகு ஏற்படும். அவா, வெகுளி, இன்னாச் சொல் ஆகியவற்றை நீக்கி அகத்தைத் தூய்மைப் படுத்தினால் அக அழகும் ஏற்படும்; புற அழகும் ஏற்படும்.

**

குழந்தைகளை நன்றாகப் பழக்க வேண்டும் கண்டித்து வளர்க்க வேண்டும். ஆனாலும், கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

**

வாழ்க்கையின் இலட்சியமே ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதுதான்.

பிறரை வாழ்வித்து வாழவும், பிறரை மகிழ்வித்து மகிழவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

**

ஆர்வம் தோன்றுவது இயற்கை. அதைச் செயற் படுத்தும் திறமை முயற்சியால் பெறக்கூடியதாகும்!

**

பிறநாட்டுக் கலைகளையும் இலக்கியங்களையும் நாம் ஏற்றுக்கொள்ளாமல் நம்முடைய கலைகளையும் இலக்கியங் களையும் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் வலியுறுத்துவதும் ஆதிக்கத்தின் பாற் பட்டதாகும். அவ்வாறின்றிக் கொண்டும் கொடுத்தும் வாழ்வதுதான் அன்பின் வழிப்பட்டது. இவ்வாறு கொண்டும் கொடுத்தும் வாழும் வாழ்க்கை இன்றையத் தமிழ்ச் சமுதாயத்திற்கு மிக மிக இன்றியமையாதது.

**

இளம் பிள்ளைகளின் உள்ளம் மிக மென்மையானது நுண்ணியது. அவர்கள் விஷயத்தில் பின்னலை அவிழ்ப்பது போன்ற பொறுமையைக் கையாளவேண்டும்..

**

பொன் நிரந்தரமான பெருமதிப்புடையது! ஒருவருக்கு நாம் பொன்னாடை போர்த்துகிறோம் என்றால் அவருடைய தொண்டினை – அவருடைய அறிவினை – நாம் பொன் போல மதித்துப் போற்றுகின்றோம் என்பது பொருள். இந்த அடிப்படையிலேயே பொன்னாடை போர்த்தும் பழக்கம் தோன்றியிருக்க வேண்டும்.

**

திருக்குறள் தோன்றிய நாடு நமது தமிழ்நாடு என்ற பெருமை மட்டும் நமக்குப் போதாது. ‘குறள் நெறி ‘ நடை முறையில் உள்ள நாடு என்ற பெருமையை நாம் உண்டாக்க வேண்டும்.

**

அடக்கம் வேறு – அச்சம் வேறு. அடக்கம் உடையவனிடத்தில் ஒன்றை அறிந்து கொள்ளும் ஆர்வம்- துடிப்பு இருக்கும் ; பண்பிருக்கும் – அச்சமுடையவனிடமோ அவற்றில் எந்த நல்லதையுமே காணமுடியாது. அடிமையுணர்ச்சிதான் மேலோங்கி நிற்கும்.

**

மனத்தில் தன்னுடைய ப ற்றுக்கோடுகளைப் ‘பெரிதாக்கிக் கொள்ளாமல் தன்னலத்தைத் துறப்பதுதான் துறவு. ஒன்றை இழந்தபோது வருந்தாமலும், ஒன்றைப் பெற்றபோது மகிழாமலும் இருக்கின்ற மனப் பண்புடையராக இருத்தல் வேண்டும். இவற்றிற்கெல்லாம் மேலாகத் தொண்டு செய்வதையே இலட்சியமாகக் கொள்ள வேண்டும். பொதுவாக, ‘இது இல்லையானால் என்னால் வாழமுடியாது’ என்கிற மனோபாவத்தை மாற்றிக் கொண்டாலே பாதித் துறவு வந்துவிடும்.

**

பரம்பரைச் செல்வ உரிமையின் பேராலும், சோம் பேறித்தனத்தின் காரணமாகவும் தேங்கிக் கிடக்கின்ற உழைப்பாற்றலைக் கிளறிவிட்டுப் பயன் பெறச் செய்ய வேண்டும்.

**

பிறரைக் கண்டு அஞ்சி நடுங்குபவன் கோழைத்தன மானவன்; பிறர் கண்டு அஞ்சி நடுங்கும்படியாக நடந்து கொள்ளுபவன் மிருகத்தனமானவன்.

**

உறவுக் குடும்பங்களில் பெண் எடுப்பதும் ஒருவரை யொருவர் நன்றாகப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பதற்காகத்தான். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழுகிற இல்வாழ்க்கையே சிறந்தது.

**

நம் உரிமையை நாம் காப்பாற்றிக்கொள்வது மிக இன்றியமையாதது ; அதே நேரத்தில் மற்றவர்கள் அவர்களுடைய உரிமையைக் காப்பாற்றிக் கொள்ளவும் நாம் உதவியாக இருப்பது அவசியம்.

மற்றவர்களின் வாழ்க்கையுரிமையை – பிறப்புரிமையை மதித்து நடக்காதவன் மனிதனல்ல – மனித உருவில் விலங்கு.

**

நாள்காட்டியில் ஒரு தாள் கிழிக்கிறோமென்றால் அதனை அறிவோடும் சிந்தனையோடும் கிழிக்க வேண்டும் நமது வாழ்நாளில் ஒருநாள் போய்விட்டது – இனி அந்த நாள் திரும்பி வராது என்ற சிந்தனை உணர்வுடன் கிழித்தால் காலம் போற்றும். பண்பும் – கடமையுணர்வும் தோன்றும்.

**

சுயநலத்தை விட்டுவிட வேண்டும் என்று சொல்லுகிறார்கள். சுயநலம் இருந்தாலும் பரவாயில்லை என்று நான் சொல்லுவேன். சுயநலத்திற்காகப் பொதுநலத்திற்குக் கெடுதல் பண்ணக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. நம்முடைய மரத்திற்கு உரமிட்டுப் பாதுகாப்பது தவறில்லை. ஆனால், புறம்போக்கு மரத்தை வெட்டியெறியக் கூடாது. சுயநலத்திற்காகப் பொது நலத்தைப் பலி கொடுக்காத பண்பு வளர்ந்த பிறகு வேண்டுமானால் சுயநலத்தை விட்டுவிடுங்கள் என்று சொல்லலாம்.

**

நல்லற நூல்களைப் படித்து அவற்றின் கருத்துக்களை வாழ்க்கையோடு இணைத்து வாழ்பவர்களே அறிவுடையவர்கள்.

**

இன்று மணமுடிக்கும் போது மணமகன் அல்லது மணமகளுடைய செல்வம் – உடற்கட்டு – படிப்பு இவற்றையே நோக்குகின்றனர். எதிர்காலத்தில் நல்வாழ்வுச் சமுதாயத்தை – இலட்சிய சமுதாயத்தை அமைக்க இவை மட்டும் இருந்தால் போதுமா ? இந்த நாட்டுச் சமுதாயம் எதிர்காலத்தில் சிறப்புடன் விளங்கப் பணமிருக்கிறதா? உடற்கட்டிருக்கிறதா? படிப்பிருக்கிறதா என்பதை மட்டும் பார்க்காமல், இவைகளோடு அவர்களது வாழ்வில் நல்ல இலட்சிய நோக்கும் இருக்கிறதா. ஒத்த இலட்சியமாகவும் அமைந்திருக்கிறதா என்று பார்ப்பது அவசியம்.

**

எலும்பு முறிந்துவிட்டால்கூடச் சில எண்ணெய்களும், பச்சிலைகளும் வேறு சில மருந்துகளும் போட்டு மீண்டும் ஒட்டவைக்க முற்படும் மனிதர்கள், எண்ணத்தில் வேற்றுமை ஏற்பட்டால் கலந்து பேச முற்படுவதில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது.

**

உழைப்பின்றிச் செல்வம் வராது. செல்வச் செழிப்பின் ஊற்றுக் கண் மகிழ்வோடும் கடமையுணர்வோடும் திட்டமிட்ட வகையில் உழைப்பதுதான் !

**

மனித வாழ்க்கைதான் வரலாற்றின் கருப்பொருள்.

**

சர்க்கரைக்கு இனிக்கும் சக்தி இருந்தால்தான் அது சோற்றுக்கும் பிற உணவுப் பொருள்களுக்கும் இனிப்பைக் கொடுக்க முடியும். அதுபோல தாய் தந்தையர்கள் நல்ல வர்களாக-ஒழுக்கமுடையவர்களாக – பண்பாடுடைய வர்களாக இருந்தால்தான் அவர்கள் வழித்தோன்றும் குழந்தைகளிடத்தில் அந்தப் பண்புகளைத் தோற்றுவிக்க முடியும்.

**

உலகத்தோடு உறவாடி வாழ்ந்து காப்பாற்றிக் கொள்வதில்தான் பெருமையுண்டு. தனித்திருந்து பிரிந்திருந்து வாழ்ந்து தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் பெருமையில்லை.

**

நம் இதயத்தை இறைவனுக்காக்கி, அறிவு ஆற்றல் அத்துணையையும் மனிதகுல நல்வாழ்வுக்காக்க வேண்டும்.

**

குடும்ப வாழ்க்கை நடத்துகிற தலைமகனும் தலைமகளும் அன்பும் அறிவும் பண்பும் உடையவர்களாக இருந்தால் குடும்பத்திலேயே மகிழ்ச்சி பொங்கும் ! அவர்கள் மகிழ்ச்சியைத் தேடி வேறெங்கும் போகமாட்டார்கள் குடும்பமே மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும் இன்பச் சோலையாக இருக்கும்.

**

மேலும் மேலும் பலருடன் நட்புக்கொள்ள வேண்டும் என்று விரும்புவதைக் காட்டிலும் பழைய நண்பர்களைத் தொடர்ந்து போற்றி வாழ்வது மிகவும் பெருமையுடையது.

**

வறுமை மிகவும் கொடியதுதான் ; ஆனால் வறுமைக்கு மருந்து பணம் என்று பலர் கருதுகிறார்கள். உழைப்பும் உழைப்புக்கு அடிப்படையான முயற்சியுமே வறுமைக்கு மருந்து!

**

நமக்கு ‘ஆமாம்’ போடுகின்றவர்களையே பார்த்து நாம் நண்பர்களாகக் கொள்ளக் கூடாது. நம்மிடம் தவறு காணும்போது நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அன்பினால் தூண்டப்பெற்று நம்மைத் தடுத்து நிறுத்தி, ‘நீங்கள் செய்வது தவறு; உங்கள் போக்கு நேர்மையானதல்ல’ என்று இடித்துக் கூறித் திருத்த முற்படுகிறவர்களையே நாம் நண்பர்களாகப் பெறவேண்டும்.

**

தன்னுடைய உழைப்பாற்றலுக்கு ஏற்றவாறு உழைத்தலும் உற்பத்தியைப் பெருக்குதலும் பலருக்குத் தேவைப் படக்கூடிய ஒன்றை அவசியமின்றிச் சேமித்து வைக்காமல் இருப்பதும் சுதந்திரக் குடிமகனுக்கு இன்றியமையாக் கடமைகள் ஆகும்.

**

முதலில் இந்த நாட்டை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த நாட்டு மக்கள் அனைவரையும் அந்தரங்க சுத்தியுடன் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இப் பண்புகள் வளர்ந்தாலேயே ஜனநாயகத்தைக் காப்பாற்றும் சக்தியைப் பெறுவோம்.

**

ஒருவன் உங்களைப் பார்த்து அஞ்சுகிறான் என்றால் அது பெருமைக் குரியது அல்ல. பயப்படுகிறவன் உங்களைக் கொடியன செய்யும் விலங்கு என்றோ அல்லது பேய் பிசாசு என்றோ எண்ணிக் கொண்டிருக்கிறான் என்பதே அதன் பொருள். அச்சத்திலிருந்து மனிதனை விடுவிக்க வேண்டும். அஞ்சுதலும் இழிவு – பிறர் அஞ்சத்தக்க வழியில் வாழ்தலும் இழிவு. அச்சமற்ற வாழ்க்கையில் தான் உண்மையான சொர்க்கத்தைக் காணமுடியும்.

**

மக்கள் குறையுடையவர்கள். அந்தக் குறைகளை நீக்கி நிறைவைப் பெறத்தான் அவர்கள் வாழ்க்கை என்ற பல்கலைக் கழகத்திற்கு வந்திருக்கிறார்கள்.

**

மனிதன் புற உலகில் வளர்ந்திருக்கிற அளவிற்கு அக உலகில் வளர்ச்சியடையவில்லை. உலகம் அவனது காலடியில் வீழ்ந்து கிடக்கிறது. புயலை – வெள்ளத்தை – நோயை அடக்கியாளக் கற்றுக்கொண்டிருக்கிற மனிதன் பக்கத்து வீட்டுக்காரனோடு கூடிக் குலாவி அன்போடும் பண்போடும் வாழக் கற்றுக் கொள்ளவில்லையே !

**

நம்முடைய உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்தி அன்பின் வழியாக நம்முடைய சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் உரிய பணிகளைச் செய்யும் முயற்சியில் ஈடுபடு வதே சிறந்த குடிமைப் பண்புடையவரின் கடமை.

**

வேற்றுமைகளை உள்ளடக்கி விழுமிய ஒருமைப் பாட்டை உருவாக்கினால்தான் மனித சமுதாயம் ஒரு குடும்பமாக வாழமுடியும்.

**

நமது போக்குவரத்துக்காக அமைக்கப்பெற்ற சாலைகளில் உள்ள மேடு பள்ளங்களே கேடுகள் விளைவிக்கின்றன என்றால், மனிதனின் நல்வாழ்வுக்காக உள்ள சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் உயிரியில் வாழ்க்கைக்கும்-அவ்வழி அமையும் புற வாழ்க்கைக்கும் எத்துணைக் கேடு பயக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

**

கூட்டுறவு இயக்கத்தின் மூலம் சமுதாயத்தில் உள்ள மிகச் சாதாரண மக்களுக்கும் வாழ்வு தர முடியும்.

**

இந்த உலகில் முக்கியமாகப் பூசிக்கத் தகுந்தவை இரண்டு. ஒன்று கடவுள்-இன்னொன்று ஆன்மா. கடவுள் இயல்பிலேயே பூசிக்கும் தகுதியுடையது. கடவுளை அடைவதன் காரணமாகவே ஆன்மா பரிபூரணத்துவம் எய்துகிறது. ஆன்மா பரிபூரணம் எய்துதற்குரிய சாதனங்களே பிரார்த்தனை வழிபாடு அனைத்தும்! ஆன்மா கடவுளின் கருணைக்குரியதன் காரணமாக பூசனைக்குரியதாகிறது.

**

இறைவனின் சந்நிதி நியாயத்தின் சந்நிதி. இறைவனின் கொள்கை நீதி. நியாயமும் நீதியும் எங்கு எல்லாருக்கும் கிடைக்கின்றனவோ அந்த நாடே அமரர் நாடு. அங்கு வாழும் மக்கள் அமரர்களாலும் பின்பற்றக்கூடிய பெருமையுடையவர்கள்.

**

பல தனி மனிதர்களின் கூட்டுத்தான் சமுதாயம். சிலர் சமுதாயத்தோடு – கூட்டத்தோடு சேர்ந்திருக்கும் போது நல்லவர்களாக – நாணயமானவர்களாக நடந்து கொள்கிறார்கள். தனிமனிதர்களாக இருக்கும்போது விலங்குகளைவிடக் கொடியவர்களாக இருக்கிறார்கள்!

**

நாம் சில ஆண்டுகள் கூட்டுறவு இயக்கத்தில் ஈடுபட்டுக் கூட்டுறவுப் பண்பிலே திளைத்தால் கோபதாப உணர்வுகள் கூடக் குறைந்து மறைந்துவிடும். கூட்டுறவு இயக்கம் நம்மைப் பண்படுத்துகிறது – பக்குவப்படுத்துகிறது.

**

மனித உலகின் துன்பத்தை-துயரத்தை-ஏழ்மையை வறுமையைப் பிணியைப் போக்கி மற்றவர்களுக்குப் பயன்படும் வாழ்க்கை வாழ்வதுதான் நமக்குப் பெருமை-நாம் வணங்கும் கடவுளுக்கும் பெருமை.

**

கூட்டுறவு வாழ்க்கையை மேற்கொள்வதன் மூலம் தனி மனிதனும் ஒழுக்கநெறிகளில் தூண்டி வளர்க்கப் பெற்றுச் செழுமையுறுகிறான். சமுதாயமும் சிறப்பாக அமைகிறது. கூட்டுறவு வாழ்க்கையை மேற்கொண்ட சமுதாயத்தில் வளம்-வறுமை இவற்றிடையேயுள்ள வேறு பாடு குறையும். காலப்போக்கில் மறைந்துபோகும். ஆதிக்க உணர்வுகள் குன்றி சமுதாய ஒப்புரவுப் பண்பாடு மலரும்- பகை மறையும்-உறவு வளரும் – அன்பு செழிக்கும்-இன்ப மணம் எங்கும் கமழும். இம் மண்ணுலகே விண்ணுலகாக மாறும்.

**

தவம் செய்தற்கு வேண்டிய அளவு முயற்சியும் பண்பும் கூட்டுறவு வாழ்க்கையை ஏற்கவும் ஏற்படுத்தவும் வேண்டும்.

**

தொண்டால் மனிதன் உயருகிறான்-தொண்டால் மனிதனின் தன்மை வளர்கிறது. தொண்டால் மனிதன் கடவுளையும் ஏவல் கொள்ளலாம்.

**

ஒருமைப்பாடே உலகின் நியதி. அஃது அன்பை வளர்க்கும். அருளைப் பெருக்கும். இன்பத்தை விளைவிக்கும். நிரந்தரமான அமைதியை உண்டாக்கும்.

**

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *