
அமுத மொழிகள் – குன்றக்குடி அடிகளார்
பல்சுவை
இறைவன் நமக்குத் தந்திருக்கிற அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தாமல் பாழடிப்பது கறந்த பாலைக் கற்பாறையிலே கொட்டிக் கவிழ்ப்பது போன்றது. இது, நமக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்த இறைவனுக்கே. துரோகம் செய்வது போன்றது.
**
தனிமனிதனுக்கு ஒரு கேடு வரும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கலாம். சமுதாயத்திற்குக் கேடு வரும் போது எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்.
**
தனிமனிதனைச் சமுதாயத்தைக் காட்டிலும் பெரிதாக மதிக்கின்ற தொத்துநோய் நம் நாட்டில் நீண்ட நெடு நாட்களாக வளர்ந்து வருகிறது. அது நல்லதல்ல.. தனிமனித மலரிலே சமுதாய மணம் கமழவேண்டும்.
**
சிங்கம், புலி, கரடி முதலிய கொடிய விலங்கினங்கள் காடுகளிலும் மலைகளிலும்தான் வாழ்கின்றன என்பதில்லை. நம்மோடு வாழ்கின்ற பலரின் உள்ளங்களிலும் அவை வாழ்கின்றன -நடமாடுகின்றன. அத்தகைய கொடிய உள்ளங்களைத் தூய்மைப்படுத்தும் சமுதாய கேந்திரமே திருக்கோயில்கள்.
**
ஒருவன் தன்னுடைய உரிமை-மரியாதைகளை எவ்வளவு புனிதமாக்குகிறானோ அந்த அளவிற்கு-ஏன் அதைவிடச் சற்று அதிகமாகவே பிறருடைய உரிமைகளையும் மரியாதைகளையும் கருதிப் போற்றிப் பாதுகாத்துக் கொடுக்கும் பண்பின் வழியில் நாம் வளரவேண்டும்.
**
வலிவற்றவனுடைய உரிமையையும் உடைமையையும் காப்பாற்றித் தரவேண்டிய பொறுப்பு வலிவுடையவர்களுக்கு இருக்கிறது. வலிவுடையவர்கள் இதைச் செய்யத் தவறிவிட்டனர். சுதந்திர நாட்டில் அப்பாவி மக்களின் உரிமைக்காகப் போராடி எந்தத் தியாகத்தையும் செய்யத் தொண்டர்கள் தயாராக வேண்டும்.
**
திருவாசகம் தமிழகத்தின் தவநூல்; ஞானப் பனுவல் ; பக்திப்பெரு நூல். தத்துவக் கருவூலம் ; அறிவுக் களஞ்சியம் ; பிறவிப் பிணிக்கு அருமருந்து. நெஞ்சை நெகிழ்விக்கும் செந்தமிழ்ப் பாட்டு. மடுவனைய வாழ்க்கையிலிருந்து மலையனைய வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் அருட்பாட்டு. அதை ஓதியுணர்ந்து அனுபவியுங்கள்,
**
இந்தியக் குடிமகன் ஒவ்வொருவனுக்கும் வாழ்வுரிமை யளிப்பதே கூட்டுறவு இயக்கத்தின் இலட்சியம்.
**
நன்மையை நன்மைக்காகவே செய்யவேண்டும். அதில் வேறு உள்நோக்கம் இருந்தால் செயலில் வெற்றி காண முடியாது.
**
படிக்கல்லையும் பொருளையும் ஒரு தராசில் போட்டால் இரு தட்டுக்களும் சரியாக நிற்க வேண்டும் என்பது போல உரிமையும் கடமையும் சரிசமமாக இருக்க வேண்டும். உரிமையில்லாமல் கடமையைச் செய்வது கள்ள வாணிகம் போன்றது. கடமையைச் செய்யாமல் உரிமையைக் கோருவது நாணயமும், நேர்மையும், நியாயமும் ஒழுங்கும் அற்றது.
**
மனிதன் என்றால் அவன் துன்பத்தை மாற்றுகிறவனாக-இன்பத்தை ஆக்குகிறவனாக இருக்க வேண்டும். இந்த ஆற்றல் அற்றவன் மனிதனல்ல-மனித உருவிலே உலவும் விலங்கு.
**
இன்று இறைவனிடம் சென்று எதைக் கேட்பது என்பதுகூடப் பலருக்குத் தெரிவதில்லை. மளிகைக் கடையில் போய் காய்கறியும், காய்கறிக் கடையில் போய் மளிகைச் சாமானும் கேட்பவர்கள் போல் பலர் இருக்கின்றனர். தமது தேவைகளடங்கிய ஒரு பெரிய விண்ணப்பத்துடனேயே பலர் இறைவனைச் சந்திக்கிறார்கள். கேட்கக் கூடாதனவற்றையெல்லாம் கேட்கிறார்கள். இறைவனிடம் குறையுடைய என்னை நிறைவுடையனாக்கு ! எனது ஆன்ம வளர்ச்சிக்குத் தேவையான அறிவை, ஆற்றலை பண்பாட்டை, குணநலன்களைக் கொடு என்றுதான் கேட்கவேண்டும். காசு பணத்தைத் தா! நிலபுலன்களைத் தா!’ என்று கேட்கக்கூடாது. அவற்றை அவர் தரமாட்டார். அவற்றைத் தேடிக்கொள்வதற்கான ஆற்றலையும் அறிவையும்தான் அவர் தருவார்.
**
கூட்டுறவு, ஆற்றல்மிக்கதொரு மந்திரச் சொல்- ஆற்றல் பெற்ற ஒரு நல் ஆசான் – ஆற்றல் பெற்ற ஒரு மருத்துவன். கூட்டுறவாலேயே குடிகள் உயரும் – இந்த நாடும் உயரும். கூட்டுறவினால் அகநிலையும் – புறநிலையும் சமமாக வளரும்.
**
கூட்டுறவு இயக்கங்கள். கோயில்கள், பஞ்சாயத்துக்கள் ஆகியவற்றில் பங்கேற்பவர்கள் அழுக்காறு,விருப்பு, வெறுப்பு ஆகிய உணர்வுகளினின்று விடுபட்டவர்களாக இருக்கவேண்டும். இவற்றிற்கெல்லாம் மேலாக மனச் செழுமையுடையவர்களாகவும் இருக்கவேண்டும்.
**
எழுத்தாளனுக்கு இப்படியும் ஒரு பொருள் சொல்லலாமோ என்று தோன்றுகிறது. சாதாரணமாக ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய இன்பதுன்பங்களுக்கு அவனுடைய தலை எழுத்தே காரணம் என்பார்கள்! அதாவது, இங்கு தலைஎழுத்து என்னும்போது அறிவு என்று பொருள் சொல்லுவதில் தவறில்லை. ஒருவனுடைய அறிவுக்குக் காரணமாக அமைவன அவனுடைய கல்வி கேள்விகள் ; அவற்றிற்குக் கருவி எழுத்தாளனுடைய படைப்புக்கள். ஆதலால் பிறருடைய தலை எழுத்தை ஆளுகிறவர்கள் எழுத்தாளர்கள் என்றும் சொல்லலாமல்லவா?
**
நமது எழுத்தாளர்கள் சென்ற காலச் சிந்தனையை உரமாக வைத்து நிகழ்காலச் சிந்தனையை உணர்ச்சியாக வைத்து எதிர்காலத்தை உருவாக்க முயலவேண்டும். பழங்கால நந்தவனங்களில் பூத்த நமது அறிவுமலர்களை எல்லாம் பிறநாட்டார் கொய்து சூடிக்கொள்ளத்தக்க முயற்சியில் ஈடுபடும்படி செய்யவேண்டுவது எழுத்தாளர்களின் கடமை.
**
கவிஞர்களில் மூன்று பிரிவினர் உள்ளனர் ; காலத்தை விட்டு ஒதுங்கி நிற்பவர் ஒருவகையினர் ; காலத்தோடு கலந்து நிற்பவர் ஒருவகையினர்; காலத்தை வென்று நிற்பவர் ஒருவகையினர் ; முதல்வகையினர்க்கு நிகழ்காலம் தெரியும் ; காலச்சூழல் தெரியும்; குற்றம் குறை தெரியும் ; எனினும் நிறைகாணும் முயற்சியில் ஈடுபடமாட்டார்கள். இரண்டாம் வகையினர் இருக்கிற நிலைக்குச் சமாதானம் கூறுவர். மூன்றாம் வகையினர், இருக்கிற தீமையை எடுத்துக்காட்டி அதை எதிர்த்து நிற்கவேண்டும் எனக் கூறி மக்களுக்கு அதற்கான உணர்ச்சியை ஊக்கத்தை ஊட்டுவார்கள்.
**
உணர்ச்சியால் உந்தப்பட்டு அந்த உணர்ச்சியை அறிவுக் கால்களின் வழிச்செலுத்தி, அனுபவம் என்ற நீரைச் செயல் என்ற கழனியில் பாய்ச்சும்போதுதான் நல்ல பயன் ஏற்படும். எனவே உணர்ச்சிதான் இலக்கியப் படைப்புக்கு ஆதாரமாக அமைகிறது !
**
சமுதாயத்தில் காணப்பெறும் குறையைப் போக்கி, நிறைவை ஏற்படுத்தி அந்த நிறைவை நோக்கி மனித சமுதாயத்தை இழுத்துச் செல்வனவே இலக்கியப் படைப்புக்கள்.
**
கோயிலுக்குச் செல்லும் வழியில், நடைபாதையில் பளுவான – பெரிய பட்டியல்கற்கள் பதிக்கப்பெற்றிருந்தன. அவற்றில் ஒரே ஒரு கல் மட்டும் தன் நிலையிலிருந்து மேலே எழும்பி, நடப்போரின் கால்களைப் பதம் பார்த்த வண்ணம் இருந்தது. ஒரு நாள் தவத்திரு அடிகளார் அவர்கள் அந்தக் கல்லைக் காண நேர்ந்தது. உடனே அந்தக் கல்லைப் பெயர்த்தெடுத்து மீண்டும் பதிக்கும்படி கட்டளையிட்டார்கள். ஆறேழு வேலைக்காரர்கள் கனத்த கடப்பாரைகளின் துணைகொண்டு அந்தக் கல்லை மிகவும் சிரமப்பட்டுப் பெயர்த்தெடுத்தார்கள்! என்ன வியப்பு ! உள்ளே சுமார் ஒன்றரை முழம் நீளமுள்ள – கடப்பாரை போன்ற பருமனுள்ள ஒரு பசிய வேர் – பசு மரத்தின் வேர் ஓடிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேரை வெட்டி எடுத்துவிட்டு மீண்டும் அந்த ஆறேழு வேலைக் காரர்களும் சேர்ந்து முழு முயற்சியோடு அந்தக் கல்லைப் பதித்தார்கள். இந்தக் காட்சி தவத்திரு அடிகளார் அவர்களின் மனத்தில் மின்னல் போலப் பளிச்சிட்டு, ஓர் அழகான உவமையாக வெளிவந்தது. ” பல டன் எடையுள்ள- பலர் சேர்ந்து முழு முயற்சியுடன் பெயர்க்கக்கூடிய இந்தப் பெரிய கல்லை ஒன்றரையடி நீளமுள்ள இந்த வேர் நெம்பித் தூக்கிவிட்டது. இந்த அற்புதம் எப்படி நிகழ்ந்தது ? கல் பல டன் எடையுள்ளது. ஆனாலும் அதற்கு உயிரோட்ட மில்லை. வேரோ சுமார் ஒன்றரை முழ நீளமிருந்தாலும் அதற்கு உயிர்ப்பு இருக்கிறது-உயிரோட்டமிருக்கிறது. அது பசுமரத்தின் வேர். உயிரோட்டமில்லாத பட்ட மரத்தின் வேர் ஒன்றை இந்தக் கல்லுக்கு அடியில் போட்டால் வேர் நசுங்கிப் போகும். மனிதனும் இப்படித்தான்! அவன் நாளும் சிந்தனையால் செயலால் வளரும் சக்தி படைத்தவனாக-உயிரோட்டமுள்ளவனாக இருந்தால் அடுக்கடுக் காகத் துன்பங்கள் வந்தாலும் அவற்றை எதிர்த்து நின்று வெற்றி பெற்றுவிடலாம். மனுதனக்கு உயிரோட்டமிருக் கிறது என்பதன் அடையாளமே அவன் நாள்தோறும் சிந்தனையால் செயலால் வளர்வதுதான் !’ என்று கூறி முடித்தார்கள். பக்கத்தில் இருந்த அனைவரும் அடிகளார் அவர்களின் உவமையின்பத்தில் மூழ்கித் திளைத்தார்கள். எவ்வளவு அழகான உவமை !
**
அடிக்கடி வண்ணம் மாறுகிற சென்னைத்துணி (Bleeding Madras) போல மனித மனம் அடிக்கடி மாறுகிற தன்மையுடையதாக இருக்கின்றது.
**
காவிரி கடலோடு கலப்பது உண்மை ; ஆனாலும் கடல்நீர் முழுவதும் காவிரிக்கு வந்துவிட்டால் காவிரி நீரின் சுவை கெட்டுவிடும். இரண்டுக்கும் உறவில்லை யென்றாலோ, காவிரியின் ஊற்றுவளம் குன்றும். எனவே, காவிரியும் வேண்டும் – கடலும் வேண்டும். காவிரிக்கும் கடலுக்கும் உறவு இருப்பது போல, உலக மொழிகளோடும். இந்திய மொழிகளோடும் தமிழுக்கு உறவிருக்க வேண்டும். ஆனாலும் அவற்றோடு கலந்துவிடாமல், தமிழ் தன்னுடைய தன்மையை தகுதிப்பாட்டை இழந்து விடாமல் பாதுகாக்கப் பெறவேண்டும். நம்முடைய தமிழினத்தினுடைய தமிழ் உணர்வும் ஆற்றலும் முயற்சியும் இதற்குப் பயன்பட வேண்டும்.
**
செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குவது மக்களுக்கு மகிழ்ச்சி தருவதற்கு என்பதுபோல, நம்முடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரத்தக்கதாக அமைய வேண்டும்.
**
வண்டிக்கு பிரேக் அவசியமாக இருத்தல் போல, மனிதர்களுக்கு அவர்களின் இயல்பான உணர்ச்சிப் போக்குக்குத் தடைபோட்டு ஆற்றுப்படுத்தும் நண்பர்கள் தேவை.
**
கொடியும் கொம்பும் ஒன்றாகிவிடுவதில்லை. ஆனாலும் அவை இரண்டுக்கும் உறவிருக்கும். இவ்வாறு கொடிக்கும் கொம்புக்கும் உள்ள உறவு போல உலகின் எல்லா மொழி களோடும் தமிழுக்கு உறவு இருக்கவேண்டும். அப்போது தான் தமிழ் தழைக்கும்.
**
அரைக்கீரை கிள்ளக் கிள்ளத் துளிர்த்து வளர்வது போல ஆற்றல் நிறைந்த மனிதன் துன்பத்தால் தாக்கப் பெறத் தாக்கப்பெற அவன் ஊக்கமும் உற்சாகமும் பெறு கின்றான். கோழைகள் பகைவரால் அழிக்கப்படுகிறார்கள்.
**
திருக்கோயிலுக்குள் நாம் நுழையும்போது காற் செருப்பை வெளியே கழற்றி வைத்துவிட்டுப் போவது போல. பஞ்சாயத்துக்குள் நுழைபவர்கள் தனி மனித உணர்வு, சாதிய உணர்வு ஆகியவற்றையெல்லாம் வெளியிலேயே விட்டுவிட்டுப் போகவேண்டும்.
**
உத்திரத்திலோ சுவரிலோ புகை படிவது போலவே மனித மனத்தில் தீமைகள் படிகின்றன. புகை கொஞ்சம் கொஞ்சமாகவே படியும். தீமையும் அப்படித்தான் !
**
இங்குள்ள பற்றாக்குறைகளை நிறைவு செய்து கொள்ள- அனுபவிக்க மனிதன் அறிவியல் உதவியோடு சந்திர மண்டலத்திற்குப் போகிறான். அங்கு போய் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் பகைமையை வளர்த்துச் சண்டை போட்டுக்கொண்டால் வளர்ந்த அறிவியலால் என்ன பயன்? அது போல, பாலை நன்றாக வற்றக் காய்ச்சிச் சுவை யுண்டாக்கிக் குடிக்கப் போகும்போது சண்டை போட்டுக் கொண்டு பாலைக் கொட்டிக் கவிழ்த்துவிட்டால் என்ன பயன்? இத்தகையதொரு நிலை ஏற்படாமல் காக்கச் சமயம் (அருளியல்) தேவை.
**
இன்றையச் சமுதாய வாழ்க்கை கலைந்த வீடு போல் காட்சியளிக்கிறது. கலைந்த வீட்டில் குடியிருப்பது என்பது எப்படி முடியாதோ அது போலவே, அன்பிலும் உறவிலும் வாழவேண்டிய சமுதாயம் தம்முள் கலைந்துவிடுமாயின் மனித சமுதாயம் வாழ முடியாது!
**
மழை பெய்து புரண்டுவரும் தண்ணீரைக் கால்வாய்களின் வழிக்கொணர்ந்து ஏரிகளில் தேக்கிக் கழனிகளுக்குப் பாய்ச்சும் போதுதான் உரிய பயன் ஏற்படுகிறது. அது போல, மனிதனிடம் தோன்றும் இயல்பான உணர்ச்சிகளை அறிவுக் கால்வாய்கள் வழிச் செலுத்தி அனுபவம் என்ற ஏரியில் தேக்கிச் செயல்முறை என்ற கழனியில் செலுத்தினால்தான் உரிய பயன் விளையும். சிந்திக்காத மனிதனின் உணர்ச்சிகள் பொட்டல் காட்டில் பெய்த மழையைப் போலப் பயன்படாமல் போய்விடும்.
**
சாம்பாரில் கடுகு அதிகமாகிப் போனால் சாம்பார் கசக்கும். பருப்பு அதிகரித்தால் சுவைக்கும். தன்னலம் பெருகுவது கடுகு அதிகரிப்பது போல. பொதுநலம் பெருகுவது பருப்பு அதிகரிப்பது போல.
**
சந்தைக்குச் சென்று கீரைக்கட்டு வாங்கும்போது பூச்சிக்கீரைகளை ஒதுக்கி நல்ல கீரைதானா என்று பார்த்து வாங்குகிறோம். ஆனால், தரமான இலக்கியங்களைத் தேர்ந் தெடுத்துப் படிப்பதில் கீரைக்கட்டு வாங்குவதில் காட்டும் அளவு அக்கறைகூடக் காட்டுவதில்லையே !
**
நங்கை ஒருத்தி தன் உடலை நலமாகவும் அழகுப் பொலிவுடையதாகவும் வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவதின் மூலம் அவள் தனது கணவனுக்கு இன்ப நலனும் மகிழ்வும் ஊட்டுகின்றாள் என்பது உண்மை.. ஆனால் அதே காலத்தில் தான் நோயுறா வண்ணமும் காப்பாற்றிக் கொள்ளுகிறாள் என்பதை மறந்துவிடக் கூடாது.
**
நாம் நமது கடமைகளைச் செய்வதன் மூலம் நம் முடைய வாழ்க்கையை இலட்சியச் சார்புடையதாக்கி அவ் வழிப் பயனுடையதாக்கி மறுமை இன்பம் பெறுகிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
**
நான்கு புறமும் சாளரம் உள்ள வீட்டில்தான் நல்ல ஆரோக்கியமான காற்றோட்டம் இருக்கும்; அதுபோல நாம் பல மொழிகளையும் பயில்வதன் மூலமே நமது தாய் மொழி செழுமையுறும்.
**
கற்ற கல்வியை மறந்துவிடுவது என்பது சம்பாதித்த பணத்தை தெருவிலே போட்டுவிட்டு வருவது போன்றது. கற்ற கல்வியை மறந்துவிட்டால் அது உற்ற நேரத்தில் கைகொடுத்து உதவாது.
**
நாம் பல்வேறு வகையான உணவுகளையும் சாப்பிட்ட பிறகு கொஞ்சம் ஊறுகாயைச் சாப்பிட்டால் நாம் சாப்பிட்ட உணவனைத்தும் செரித்து ஊறுகாயின் மணம் மட்டும் மேலெழுந்து நிற்பது போல மதமும், கடவுள் நம்பிக்கையும் நம்மிடமுள்ள வஞ்சம். பொய், களவு, சூது, சினம் ஆகியவற்றைச் சீரணிக்கச் செய்து அன்பையும் சகோதரத்துவத்தையும் மேலெழுந்து நிற்கச் செய்யும்.
**
ரோஜா மலர் மணத்தால் வண்ணத்தால் பலருக்கும் விருந்தளிக்கிறது. அது போல, மனிதனும் காட்சியாலும் செயலாலும் மற்றவர்களுக்கு இன்பமளிக்கவேண்டும். அது மனிதன் கடமை.
**
ஒலிப்பதிவு நாடாவில் (Tape Recorder) நாம் ஒலிப்பதிவு செய்ததையே மீண்டும் கேட்கிறோம். புதிதாகக் கேட்க முடிவதில்லை. அப்படிப் புதியது கேட்க விரும்புவோ மானால் அழித்துவிட்டுப் புதுப்பதிவு செய்யவேண்டும். அது போல, நம் உயிரின் ஒலிப்பெட்டியில் நாம் எண்ணியனவும் சிந்தித்தனவுமே பதிகின்றன. அவையே நம்மை நிழல் போலத் தொடர்கின்றன.
**
இரும்பை நெருப்பில் போட்டுச் சூடுண்டாக்கிச் சம்மட்டியால் அடித்தால்தான் அது வில்லாக வளையும் என்பது போல, மனிதனை நோன்பால் வருத்திப் பக்குவப்படுத் தினால்தான் அவன் பயன்படும் மனிதனாவான்.
**
சமையற்காரர்களின் திறமையைப் பொறுத்துச் சமையலின் சுவை அமைவது போல, ஆசிரியர்களின் திறமையைப் பொறுத்தே மாணவர்களின் எதிர்காலம் அமையும்.
**
ஒன்றை நிறுத்துக் காட்டுகின்ற தராசின் முள் மட்டும் தனித்துக் கிடக்குமானால் அதற்குக் கடமையுமில்லை. சிறப்புமில்லை. அதே முள் தராசில் இணைக்கப் பெறுமானால் கடமையுண்டு – சிறப்பும் உண்டு. அப்பொழுது அம்முள் குறையையும், நிறையையும் காட்ட வேண்டும். அது போல, மனிதர்கள் பொறுப்புள்ள பதவிகளைப் பெறுவார்களானால். அப்பதவிகளுக்கு ஏற்படக் கடமைகளுண்டு. குறை நிறை காட்டும் கடமை புரியாத தராசு-ஓட்டைத் தராசு. கடமையைச் செய்யாமல் பதவியில் வீற்றிருப்பவர்கள் உபயோகமற்றவர்கள்; உதவாக்கரைகள்.
**
மரம் செழித்து வளர வேண்டுமானால் அந்த மரம் தங்கி முளைக்கும் மண்ணைச் செழிப்பாக்க வேண்டும். மதம் செழித்து வளர வேண்டுமானால் அம்மதத்தைத் தழுவுகிற-அம்மதத்தில் வாழுகிற மனிதர்களின் வாழ்க்கையைச் செழிப்பாக்க வேண்டும்.
**
கேணிச்சுவர் வெள்ளியால் கட்டப் பெற்றிருந்தாலும், வாளி தங்கத்தால் செய்யப் பெற்றிருந்தாலும், கயிறு வெள்ளியினால் செய்யப் பெற்றிருந்தாலும் அந்தக் கேணியில் இறைக்கும் நீர் குப்பென்று நாற்றமடித்தால் என்ன பயன்? அது போல, மனிதன் மாடமாளிகையில் வாழ்ந்தாலும், கூட கோபுரத்தில் குடியிருந்தாலும், எல்லா இன்பங் களையும் அனுபவித்தாலும் அவனிடத்தே அன்பும், ஆன்மீக உணர்வும், மனிதப் பண்பும் இல்லையானால் என்ன பயன் ?
**
சாப்பிடுகிற மனிதனுக்குப் பசி நீங்கவேண்டும்; குளிக்கிற மனிதனுக்கு உடல் அழுக்கு நீங்கி வெப்பம் தணிய வேண்டும் என்பன போல், வழிபாடு செய்கிற மனிதனுக்கு உள்ளத்தில் உள்ள வெப்ப நோய் நீங்க வேண்டும். இல்லையானால் வழிபாட்டால் என்ன பயன் ?
**
தண்ணீருக்கும் தாமரைக்கும் இருக்கிற உறவு போல, மண்ணுக்கும் மரத்திற்கும் இருக்கிற உறவு போல தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் நெருங்கிய உறவு இருக்க வேண்டும்.
**
விண்ணோக்கிச் செல்லும் பொருளை மண்ணோக்கி இழுக்கும் ஈர்ப்புச் சக்தி மண்ணுக்கு இருப்பது போல, மேல்நோக்கிப் பறக்கின்ற மனிதனைக் கீழ்நோக்கி இழுக்கின்ற ஆற்றல் வஞ்சனை பொய் களவு சூது சினம் ஆகியவற்றிற்கு உண்டு. அவற்றின் ஆற்றலை அடக்கி மனிதனை மாமனிதனாக ஆக்கும் சக்தி மதத்திற்கும் கடவுள் நம்பிக் கைக்கும் உண்டு.
**
மாறுதலும் முன்னேற்றமும் சமுதாயத்தின் உயிர்ப் பண்பு. இவ்வுயிர்ப் பண்பை இழந்த சமுதாயம் வளராது- வாழாது. அது ஓட்டம் தடைப்பட்டு நின்ற குட்டை போல தேங்கிக் கெட்டுவிடும்.
**
ஆறுகளுக்குத் துறை பலவாறாக இருக்கலாம் ; ஆனாலும் நாம் ஒரு நேரத்தில் இறங்கிக் குளிக்க ஒரு துறையே பயன்படும். அது போல, இறைவனுக்குப் பெயர்கள் பலவாக இருக்கலாம் பல வடிவங்களும் இருக்கலாம். எனினும் நாம் அனுபவித்து மகிழ – பயன் பெற ஒவ்வொருவரும் – ஒரு நாமத்தையே உறுதியாகக் கொள்ள வேண்டும்.
**
தேனிலோ உப்பிலோ ஊறிய பொருள் அவற்றின் சுவையைப் பெறுவது போல, இறைவனுடைய திருவருளை நினைந்து நினைந்து அந்த இன்ப அனுபவத்தில் ஊறித் திளைத்தவர்கள் அருள் வசமாகிவிடுவார்கள்.
**
சமூகம் என்பது ஒரு சீன வெடிக்கட்டுப் போன்றது ; சீன வெடிக்கட்டில் ஓரிடத்தில் தீ வைத்தாலும் கட்டு முழுவதும் வெடிப்பது போல, சமூகத்தில் எங்கேனும் ஒரு மூலையில் தீமை பற்றினால் அது சமூகம் முழுவதையுமே பற்றத்தான் செய்யும்.
**
நிலத்தை உழுதல் வளப்படுத்துதல் பயிர் செய்தல் பயிர்களைப் பாதுகாத்தல் முதலான அனைத்துமே விவசாயத் தொழில்கள்தாம் என்பது போல, மனித குலத்திற்கு நல்லறிவு தருதல், நலத்தைப் பாதுகாத்தல், வறுமை பிணி பகை முதலியவற்றிலிருந்து பாதுகாத்தல் ஆகிய அனைத்துமே சமயத் தொண்டுகள்தாம்.
**
கழனிகள் இல்லையேல் விளை பொருள்கள் இல்லாமற் போவது போல, மக்கள் மன்றம் இல்லையேல் சமயம் இல்லாமற் போகும்.
**
நமக்கு இருக்கிற நிலபுலன்களையும், சொத்துக்களையும் நாம் நமது வாரிசுகளுக்குப் பத்திரம் செய்து கொடுப்பது போல, நமது அருளாளர்களும், ஞானியர்களும் நமக்களித் திருக்கிற அருட்பாடல்களையும், அறவுரைகளையும் நமது பரம்பரைக்கு நாம் பத்திரம் செய்து கொடுத்துப் படிக்கச் செய்து சொந்தமாக்கிக் கொள்ளும்படி செய்யவேண்டும்.
**
கரித்துண்டை என்னதான் பாலூற்றிக் கழுவினாலும் கரித்துண்டு பாலின் நிறத்தைப் பெறாதது போல, எட்டிக் காயை என்னதான் தேனில் ஊறப் போட்டாலும் எட்டிக் காய் தேனின் இன்சுவையைப் பெறாதது போல கீழ்மைக் குணம் படைத்த கயவர்களை எவ்வளவுதான் திருத்த முயன்றாலும் அவர்கள் திருந்தி நல்லவர்களாக மாட் டார்கள். மாறாகக் கரித்துண்டு பாலைத் தன் நிறத்திற்கு மாற்றிவிடுவது போல, கீழ்மைக் குணம் படைத்த கயவர் கள் நல்லவர்களையும் கெடுத்துவிடுவார்கள்.
**
உரிமையைக் கடமையாகச் செய்தால்தான் உரிமை சிறக்கும். உரிமை மட்டும் இருந்து கடமை சிறக்கவில்லையானால் அந்த உரிமையும் சிறப்பிழக்கும். பயிரைப் பாதுகாக்க வேலி இருப்பது போல உரிமையைப் பாதுகாக்க கடமை இருக்கிறது.
**
நாள்தோறும் உடலில் சேரும் அழுக்கைக் குளிப்பதன் மூலம் தூய்மைப்படுத்திக்கொள்வது போல-நாள்தோறும் உடையில் சேரும் அழுக்கைத் துவைப்பதன் மூலம் தூய்மைப்படுத்திக் கொள்வது போல நாள்தோறும் உள்ளத்தே எழும் துன்பங்களையும் துயரங்களையும் இறைவனை நோக்கி அழுவதன் மூலம் போக்கித் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். அந்த அழுகை இதயத்திலிருந்து பொங்கிவர வேண்டும். அதுதான் பிழையைத் திருத்தும்- பிழையிலிருந்து நம்மை விடுவிக்கும், பிறப்பைத் தடுக்கும். பேரின்பத்தை அளிக்கும்.
**
படிப்பவர்களின் எண்ணிக்கையையும் தரத்தையும் பொறுத்தே பத்திரிகைக்குப் பெருமை என்பது போல கும்பிடுகிறவர்களின் எண்ணிக்கையையும் தரத்தையும் பொறுத்தே நெறிக்கும் கடவுளுக்கும் பெருமை ஏற்படும்.
**
பாலிலே தண்ணீர் கலப்பதும், அரிசியிலே கல்லைக் கலப்பதும் எவ்வளவு பெரிய குற்றமோ அதைவிட பெரும் குற்றம் சிந்தனையிலே நஞ்சு கலந்து மக்கள் மத்தியிலே உலவ விடுவது.
**
வீடில்லாதவர் வாழ்க்கையில் வெய்யில் வருத்துவது போல சமூகம் இல்லாதவர் வாழ்க்கையில் பகை வருத்தும். வீடில்லாதவர் வாழ்க்கையில் குளிர் வருத்துவது போல சமூகம் இல்லாதவர் வாழ்க்கையில் அழுக்காறு வருத்தும். சமூக வாழ்க்கை மிக மிக முக்கியமானது. அதுதான் கடவுள் பக்தி என்று நான் கருதுகிறேன்.
**
உள்ளத்தில் உள்ள சக்திதான் பக்தி. அதைப் பயன் படுத்திச் செயலாக்குவதுதான் தொண்டு. பக்தியும் தொண்டும் உடலும் உயிரும் போல; மலரும் மணமும் போல.
**
வான் மழை பொழிந்தால் மண்ணில் மரம் செடி கொடிகள் தழைக்கும் என்பது போல மனித மனத்தில் அன்பு மழை பொழிந்தால் மனித சமுதாயம் செழிக்கும் !
**
குழந்தைகளின் மனம் சுறுசுறுப்பாக இயங்கும் ஆற்றல் மிக்கதோர் இயந்திரம் போல. அது, எதையும் படம் பிடித்துக்கொள்ள சக்தி வாய்ந்த ஒரு காமிரா எனவே, குழந்தைகளிடத்தில் மிகவும் கவனமாகவும், பொறுப்புடனும் பழக வேண்டும். அவர்களுக்கு நல்ல காட்சிகளையும் நல்ல சூழலையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
**
மக்களுக்கு மணமும் தேனும் தந்துதவுகிற மலர்களை இறைவன் விரும்புவது போல, மக்களுக்கு அன்போடும் பண்போடும் உதவி செய்கின்றவர்களையும் இறைவன் விரும்புவான்.
**
பக்தியும் தொண்டும் ஒரு நாணயத்தின் இரு புறங்களைப் போல, கண்களை மூடிக்கொண்டு பஜனை செய்கின்ற அளவிலேயே நிற்பது பக்தி. மனிதன் அசைய ஆரம்பித்ததும் தொண்டு மலர்கிறது. பானைக்குள் இருக்கும் தண்ணீரைத் தூய்மையாக வைத்துக் காப்பது பக்தி. அதனை அள்ளிக் குடிக்கும்படி செய்வது தொண்டு.
**
கட்டுச்சோறு மறுநாள் பயணத்திற்குப் பயன்படுவது போல, குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் கல்வி அவர்களின் எதிர்காலத்திற்குப் பயன்படக்கூடியதாக இருக்கவேண்டும்.
**
பெய்கின்ற தண்ணீரைத் தனக்கு உணவாக ஏற்றுக் கொள்ளாத செடிகொடிகள் செழித்து வளராதது போலக் கற்கின்ற கல்வியை-அந்தக் கல்வியின் மூலம் கிடைக்கக்கூடிய சிந்தனையை உணவாக ஏற்றுக்கொள்ளாத குழந்தைகள் சிறந்து வாழ முடியாது.
**
முற்றும்.



