
காந்தியும் விவேகானந்தரும் வெ. சாமிநாத சர்மா
ஐம்பது வருஷங்களுக்கு முன்
ஐம்பது வருஷங்களுக்கு முன் நடைபெற்ற சம்பவம். இரண்டு பேர், பம்பாய்த் துறைமுகத்திலிருந்து கப்பலேறினார்கள். கப்பலேறிய போது இவர்களை உபசரித்து வழியனுப்பியவர்கள் யார்? நெருங்கிய நண்பர்களும் உறவினர்களுமாகிய ஒரு சிலர்தான். இவ்விருவரையும் பற்றிப் பொது ஜனங்களுக்கு ஒன்றுமே தெரியாது. இந்தப் பெரிய மனிதர் அந்த ஊருக்குப் பயணமானார், அந்தப் பெரிய மனிதர் இந்த ஊருக்கு வந்திறங்கினார் என்று இப் பொழுதைய பத்திரிகைகள் வெளியிடுகின்றனவே, அதைப் போல் அந்தக் காலத்தில் இவ்விருவரும் கப்பலேறியதை எந்தப் பத்திரிகையும் வெளியிடவில்லை. இவ்விருவரும், எந்தப் பத்திரிகை நிருபர்களுக்கும் பேட்டி கொடுத்து, தாங்கள் போகிற இடங்களில் சாதிக்கப் போகிற காரியங்களைச் சவிதாரமாகச் சொல்லிவிட்டுப் போகவு மில்லை. ஆனால் திரும்பி வந்தபோது இவர்கள் கழுத்திலே எத்தனை மாலைகள் விழுந்தன! என்ன பலமான கைகொட்டு முழக்கம்! இவர்கள் நடக்கிற மாதிரி, பார்க்கிற பார்வை, இவைகளையெல்லாங்கூட பத்திரிகை நிருபர்கள் நுட்பமாகக் கவனித்து எழுதினார்கள். என்ன மாறுதல் பார்த்தீர்களா?
இவர்கள் போன போது யாரும் இவர்களைக் கவனிக்கவில்லை. திரும்பி வருகிறபோது எல்லோருடைய கவனமும் இவர்களிடமே சென்றது. உலகத்தில் இது சாதாரண சம்பவந்தான் போலும்! ஆலம் வித்து, எப்பொழுது பூமியில் விழுந்தது என்பதை யாரேனும் கவனிக்கிறார்களா? இல்லை. ஆனால் அதுவே பிற் காலத்தில் பெரிய விருட்சமாகிக் கனியும் நிழலும் கொடுத்து உதவுகிறபோது, அந்த விருட்சத்தை அனைவரும் அண்ணாந்து பார்க்கிறார்கள்; சுற்றிச்சுற்றி வருகிறார்கள்; வியந்து வியந்து பாராட்டு கிறார்கள். அதன் நிழலிலேயே இருந்துவிட வேண்டு மென்று கூடச் சிலர் தீர்மானிக்கிறார்கள்!
1893ஆம் வருஷம். மேற்சொன்ன இருவரில் ஒருவர், ஏப்ரல் மாதம் தென்னாப்பிரிக்காவுக்குப் பயணமானார்; இன்னொருவர், மே மாதம் அமெரிக்காவுக்குப் பயணமானார். ஒருவர், வாழ்க்கையைத் தொடங்கச் சென்றார்; இன்னொருவர் வாழ்க்கையைத் துறந்து சென்றார். முன்னவர், சாதாரண ஒரு பாரிடர்; பின்னவர், சாதாரண ஒரு சந்நியாசி. அப்பொழுது பாரிடர் காந்திக்கு வயது இருபத்து நான்கு; சந்நியாசி விவேகானந்தருக்கு வயது முப்பது. இரண்டு பேரும் பிரமுகர்களல்ல; முன் பின் தெரியாத நாடுகளுக்குப் புறப் பட்டார்கள். அந்த நாடுகளிலோ, நிறத் துவேஷம் நிறைய. கறுப்பு நிறத்தவர், காட்டுமிராண்டிகளாகக் கருதப்பட்டார்கள்; நடத்தவும் பட்டார்கள். அப்படிப்பட்ட நாடுகளுக்குச் சென்ற இவர்கள், சிறிது காலங் கழித்துத் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பிய போது, அந்த நாட்டு மக்களின் பிரியா விடை பெற்றுத் திரும்பினார்கள்: தங்கள் தாய்நாட்டு மக்களின் ஆனந்தக் கண்ணீரினால் அபிஷேகம் செய்யப் பட்டார்கள்.
சென்றார்கள், திரும்பினார்கள் என்று சுருக்கமாக இங்கே சொல்லி விட்டோம். ஆனால் சென்று திரும்பிய இந்த இடைக்காலத்தில் இவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்! என்னென்ன விதமான அவமானங்களுக்குட் பட்டிருக்கிறார்கள்! ஏன் என்று கேட்கிறீர்களா? எல்லாம் தாய் நாட்டின் பொருட்டே!
காந்தி, தென்னாப்பிரிக்கா போந்து பத்து நாட்கள் கூட ஆகவில்லை. டர்பனிலிருந்து ஜொஹான்னபர்க் என்ற நகரத்திற்கு ஒரு வழக்கு நிமித்தம் போக வேண்டியிருந்தது. எனவே முதல் வகுப்புப் பிரயாணியாக ரெயிலில் பிரயாணம் செய்துகொண்டிருந்தார். ரெயில், மாரிட்பர்க் என்ற டேஷனை அடைந்தது. அங்கே திடீரென்று ரெயில்வே அதிகாரிகள் தோன்றி, இவரை வண்டியிலிருந்து கீழே இறங்குமாறு கூறினார்கள்; இறக்கியும் விட்டு விட்டார்கள். இவருடைய படுக்கை முதலிய சாமான்களெல்லாம் வண்டிக்கு வெளியே வீசி எறியப்பட்டன. வண்டியோ, கூவிக் கொண்டு வேகமாகப் போய்விட்டது. பிளாட்பாரத்திலே ஒண்டி யாக நிற்கிறார் காந்தி. அப்பொழுது இரவு ஒன்பது மணி. குளிர் நடுக்குகிறது. ஊரோ புதிது. பிளாட்பாரத்தில் போவோர் வருவோ ரெல்லோரும் இவரை முறைத்து முறைத்துப் பார்க்கிறார்கள். என்ன செய்வது?
இவ்வளவுக்கும் காரணம் என்ன? ஒரு கூலி முதல் வகுப்பில் பிரயாணம் செய்யலாமா வென்பது தான். இங்கிலாந்து சென்று பாரிடர் பட்டம் பெற்றாலென்ன? இந்தியன் இந்தியன்தானே? கூலி பாரிடர் தானே?
காந்தி, சிந்தனையிலாழ்ந்து விட்டார். எனது உரிமைகளுக்காக நான் போராடுவதா? அல்லது இந்தியாவுக்குத் திரும்பி விடுவதா? இந்த அவமானங்களை யெல்லாம் பொருட்படுத்தாமல், எந்த வழக்கை உத்தேசித்து வந்தேனோ அந்த வழக்கை முடித்துக் கொண்டு இந்தியாவுக்குத் திரும்புவதா? என்னுடைய கடமையை முடிக்காமல் திரும்புவதென்பது கோழைத்தனம். இங்கே ஆழ்ந்து பரவியுள்ள நிறத் துவேஷம் என்கிற வியாதியின் வெளிச்சின்னந்தான் நான் அனுபவிக்கிற இந்தச் சங்கடம். இந்த வியாதியை அடியோடு தொலைப்பதும் அதற்காகக் கஷ்டங்களை அனுபவிப்பதும் எனது கடமை. இருள் நிறைந்த அந்த இடத்திலிருந்துகொண்டு இவ ருடைய அன்பு நிறைந்த உள்ளம் இந்தமாதிரியாகச் சங்கற்பித்துக் கொண்டது. மறுநாள் ரெயிலேறி சார்லஸ் டவுன் என்ற ஊரை அடைந்தார்.
இதற்குப் பிறகுதான் எத்தனை அவமானங்கள்!
சார்லஸ் டவுனிலிருந்து ஜொஹான்னபர்க்குக்கு ஒரு கோச் வண்டியில் தான் போகவேண்டும். அந்தக் காலத்தில் ரெயில் கிடையாது. காசு கொடுத்து டிக்கட் வாங்கியிருந்தார் காந்தி. ஆனால் மற்றப் பிரயாணிகளுடன் இவர் வண்டிக்குள் உட்கார வைக்கப்படவில்லை. வெள்ளையர் பக்கத்தில் ஒரு கறுப்பன் உட்காரலாமா? எனவே, வழக்கமாக கண்டக்டர் உட்காருகிற இடத்தில், அதாவது வண்டியோட்டுகிறவன் பக்கத்தில், உட்கார வைக்கப்பட்டார். கண்டக்டர் பிரயாணிகளுடன் உள்ளே போய் உட்கார்ந்து கொண்டான். வண்டி, சில மைல் தூரம் சென்றது. சென்ற பிறகு, கண்டக்டருக்கு வெளியிலே வந்து, காற்றுவாட்டமாக உட்கார வேண்டுமென்று ஆசை தோன்றியது. உடனே வண்டியை நிறுத்தி, வண்டியில் ஏறுவதற்குப் படியிருக்குமே, அந்தப் படியின் மீது அழுக்கடைந்த ஒரு கோணிப்பையைப் போட்டு சாமி! இப்படி வந்து உட்கார் என்று சொன்னான். முடியா தென்றார் காந்தி. அவ்வளவுதான்; கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விழுந்தது. அறைந்ததோடு மட்டுமல்லாமல் அந்த துராத்மா, இந்த வருங்கால மகாத்மாவை , கையைப் பிடித்திழுத்துக் கீழே தள்ள ஆரம்பித்தான். இவரோ, தமது மணிக்கட்டு எலும்புகள் முறிந்து போனாலும் போகட்டுமென்று, வண்டியின் கம்பிகளைக் கெட்டி யாகப் பிடித்துக்கொண்டார். அவன் பலசாலி; முரடன். இவரோ தேக பலமில்லாதவர்; ஆனால் பொறுமைசாலி. இருவருக்கும் நடைபெறுகிற இந்தக் கைப்பிடிச் சண்டையை உள்ளேயிருந்த வெள்ளைப் பிரயாணிகள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் களுக்குக்கூட மனம் இரங்கிவிட்டது. காந்தி எங்களுடன் உள்ளே வந்து உட்காரட்டும் என்று சொன்னார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த கண்டக்டர் தோல்வி யடைந்தவன் போலானான்; சண்டை போடுவதை நிறுத்திக் கொண்டான். ஆனால் உன்னை ஒரு கை பார்த்துக் கொள்கிறேன் என்று உருட்டி மிரட்டிக் கொண்டே சென்றான். வண்டியும் சென்று கொண்டிருந்தது.
இன்னொரு சம்பவம். அப்பொழுது தென்னாப்பிரிக்கா யூனியன் தலைநகரான பிரிட்டோரியாவில் காந்தி இருந்தார். அங்கே விநோதமான இரண்டு சட்டங்கள் அமுலில் இருந்தன. ஒன்று, இந்தியர்கள், இரவு ஒன்பது மணிக்குமேல் வெளியில் எங்கும் நடமாடக் கூடாதென்பது. மற்றொன்று, ரோட்டுகளின் இருபக்கங்களிலுமுள்ள நடைபாதையின் மீது இந்தியர்கள் செல்லக் கூடாதென்பது. ஒரு நாள், அரசாங்கத் தலைவரான க்ரூகர் என்பவர் வசித்துக் கொண்டிருந்த பிரசிடெண்ட் வீதி என்ற தெருவில் நடை பாதையின் மீது சென்று கொண்டிருந்தார் காந்தி. பிரசிடெண்ட் க்ரூகர் வீடு வந்தது. வீட்டின் முன்புறத்தில் ஒரு காவற் சேவகன் நின்று கொண்டிருந்தான். இந்தியர்கள் நடைபாதையில் நடந்து செல்லக் கூடாதல்லவா? இவர் நடைபாதையில் வந்து கொண்டிருப்பதை அந்த முரடன் பார்த்தான். அதுவும் பிரசிடெண்ட் வீட்டு முன்னே இப்படிச் சட்டத்தை மீறி நடந்து செல்லலாமா? இவரைக் காலால் எட்டி உதைத்து ரோட்டுக்குத் தள்ளிவிட்டான்! அப்பொழுது அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்த காந்தியின் ஆங்கிலேய நண்பர் ஒருவர், அந்தக் காவற் சேவகனின் செயலைக் கண்டு ஆத்திரமடைந்து, அவன் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு காந்தியிடம் கூறினார். காந்தி மறுத்துவிட்டார். அவனுக்கென்ன தெரியும்? பாவம்! எல்லாக் கறுப்பர்களும் அவனுக்கு ஒன்றுதான். என்னுடைய சொந்த அவமானத்திற்குப் பரிகாரந் தேடிக் கொள்ளும் பொருட்டு நான் எந்தக் கோர்ட்டுக்கும் செல்லத்தயாராயில்லை என்றார்.
விவேகானந்தருடைய அனுபவங்களென்ன? அமெரிக்காவைப் போயடைந்த சில நாட்களுக்குப் பிறகு, சர்வதேச சமய மகாநாட்டை முன்னிட்டு ஒருநாள் சிக்காகோ நகரம் சென்றார். சென்ற இடத்தில், மேற்படி மகாநாட்டுக் காரியாலயத்தின் விலாசத்தை எங்கேயோ மறதியாக விட்டுவிட்டார். எனவே, மகாநாட்டின் காரியாலயம் எங்கே, எங்கேயென்று பல இடங்களிலும் தேடியலைந்தார். யாரும் இவருக்குச் சரியான தகவல் சொல்லவில்லை. கறுப்பு மனிதன் தானே? சுயராஜ்ய மில்லாத ஒரு தேசத்தின் மக்கள், அந்நிய நாடுகளில் எவ்வளவு கேவல மாகக் கருதப்படுகிறார்கள் என்பதை இவர் அப்பொழுதே தெரிந்துகொண்டு விட்டார்.
வீதிகள் தோறும் அலைந்தார் விவேகானந்தர். ஹோட்டல்
களுக்குச் சென்று தங்குவதற்கு இடங்கேட்டால், கறுப்பு மனிதனுக்கு இடமில்லையென்பதைச் சொல்லாமல் சொல்லி வெளியே அனுப்பி விடுகிறார்கள். என்ன செய்வார்? கைகால்கள் சோர்ந்து போயின. இரவு வந்துவிட்டது. நிறத் திமிர் பிடித்தவர்களுடைய இருதயம் போல் எங்கும் இருள் சூழ்ந்துகொண்டது. சில்லென்று காற்று வேறே அடிக்கிறது. குளிரோ தாங்க முடியவில்லை. நேரே ரெயில்வே டேஷனுக்குச் சென்றார். அங்கே ஒரு மூலையில் பெரிய காலி மரப்பெட்டி யொன்று இருந்தது. அதற்குள் சென்று படுத்துக் கொண்டார். படுத்ததுதான் தெரியும் இவருக்கு. ஒரே தூக்கம்.
காலையில் எழுந்தார். தேகத்திலே சோர்வு. வயிற்றிலே பசி. மறுபடியும் நகரவலம் வந்தார். ஏதேனும் ஆகாரம் கிடைக்குமா வென்று வீடுதோறும் நுழைந்து நுழைந்து பார்த்தார். ஆகாரம் கிடைக்கவில்லை; பரிகாசப் பேச்சுகளும் அவமானங்களுமே கிடைத்தன. சிக்காகோ பட்டணத்திலே, கோடிக்கணக்கில் செல்வம் புரளுகின்ற அந்தக் குபேர புரியிலே, நமது விவேகானந்தருக்கு, உலகத்திலுள்ள சர்வமான பேருடைய வயிற்றுப் பசியை மட்டுமல்ல, ஆத்மப் பசியையும் தீர்த்துவைக்க வேண்டுமென்ற ஒரே லட்சியத் திற்காக வாழ்ந்த மகானுக்கு, ஒரு பிடி சோறு கிடைக்கவில்லை; ஒரு துண்டு ரொட்டி கொடுப்பாரில்லை. இந்தியா, அடிமை நாடாயிருப்பதற்கு இந்த ஒரு தண்டனை போதாதா?
கடைசியில், மெய் சோர்ந்து வேறோர் சொல்லும் கூறாமல் பாதையோரமாகப் போய் ஓரிடத்தில் உட்கார்ந்துவிட்டார் விவேகானந்தர். கடவுளே! இதுவும் உன் திருவுளச் சம்மதமோ என்று இவருடைய தூய உள்ளம் ஏங்கிநின்றது. அப்பொழுது, திடீரென்று, இவர் உட்கார்ந்திருந்த இடத்திற்கு எதிரே, ஒரு மாளிகையின் வாயிற்கதவு திறந்தது. அங்கிருந்து ஒரு பெண்ணரசி இவர் அருகே வந்து ஐயா! தாங்கள் சர்வசமய மகாநாட்டுக்குப் பிரதிநிதியாக வந்திருக்கிறீர்களா? என்று கேட்டார். ‘ஆம்’ என்றார் இவர். உடனே அந்த அம்மையார், இவரைத் தமது மாளிகைக்கு அழைத்துக் கொண்டு போய் உபசாரம் செய்தார்; ஆகாரம் அளித்தார். அந்த அன்னபூரணி வாழ்க!
இங்ஙனம் இருவரும் அந்நிய நாடுகளில் அநேக விதமான கஷ்ட நிஷ்டூரங்கள் பட்டுக்கொண்டிருந்த காலத்தில் இவர்களைப்பற்றி நாம் யாரும் நினைக்கக் கூட இல்லை. ஆனால் இவர் களென்னவோ, தங்கள் தாய்நாட்டு மக்களின் நினைவுடையவர் களாகவே இருந்தார்கள்.
ஒரு சமயம், விவேகானந்தருக்கு சிக்காகோ நகரில் ஒரு தனவான் மாளிகையில் ஆடம்பரமான விருந்தொன்று நடை பெற்றது. விருந்தன்று இரவு இவர் அங்கேயே தங்கினார். இவருக் கென்று தனியான அறை, மெத்தென்ற படுக்கை முதலிய எல்லாச் சௌகரியங்களையும் அந்தப் பெரிய மனிதர் செய்துகொடுத்தார். விவேகானந்தரும் அந்த அறைக்குச் சென்று பஞ்சணை மீது படுத்துக்கொண்டார். ஆனால் அஃது இவருக்கு முள் படுக்கையாக இருந்தது. தூக்கமே வரவில்லை. தமது தாய் நாட்டு மக்களின் வறியகோலம் இவர் முன்னே வந்துநின்றது. கண்கள் நீர் பெருக்கின; கதறினார்; தாயே! எனது ஜன்மபூமி, சொல்லொணாத வறுமையிலே அழுந்திக் கிடக்கிறபோது, எனக்குப் பெயர் எதற்கு? புகழ் எதற்கு? இவைகளைப்பற்றி எனக்காவதென்ன? இந்தியாவின் பாமர மக்களை யார் கைதூக்கிவிடப் போகிறார்கள்? அவர்களுக்கு யார் சோறு கொடுக்கப் போகிறார்கள்? மாதா! அவர்களுக்கு நான் எப்படி உதவி செய்வதென்று எனக்கு வழிகாட்டு.
விவேகானந்தரின் உள்ளம் எந்த நிலையிலே நின்றது பார்த்தீர்களா! இவர் எதற்காக அமெரிக்கா சென்றார்? இவரே, ஒரு கடிதத்தில் காரணங் கூறுகிறார். என்னுடைய ஆவலைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவோ அல்லது புகழுக்காகவோ நான் இந்த நாட்டுக்கு வரவில்லை. இந்தியாவிலுள்ள ஏழை மக்களைக் காப்பாற்றுவதற்கு இங்கே ஏதேனும் வழி ஏற்படுமா வென்று பார்ப்பதற்காகவே வந்தேன். ஆனால் இதை அப்பொழுது – ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் – நாம் சரியாகத் தெரிந்துகொள்ளவில்லை.
காந்தியும் விவேகானந்தரும் முறையே தென்னாப்பிரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் சென்ற விஷயத்தில் ஒரு வித்தியாசம் உண்டு. இருவரும் போகிறபோது, சிறிது காலம் அங்கு தங்கிவிட்டுத் திரும்பிவிட வேண்டுமென்ற எண்ணத்துடனேயே போனார்கள். ஆனால் விவேகானந்தருக்குத்தான் அது சாத்தியமாயிற்று. காந்திக்கோ, தென்னாப்பிரிக்காவிலேயே சுமார் இருபது வருஷ காலத்திற்கு மேல் நிரந்தரமாகத் தங்கும்படி நேரிட்டது. விவேகானந்தர், வெளி நாடுகளுக்குச் சென்று இந்தியர்களின் பரம்பரைக்கும் நாகரிகத்திற்கும் ஒரு பெருமையை வாங்கிக் கொடுத்தார். காந்தியோ, வெளிநாடுகளுக்கு வயிற்றுப் பிழைப்பு நிமித்தம் சென்றிருந்த இந்தியர்களுக்குத் தன் மதிப்புணர்ச்சியை ஊட்டினார். காந்தி, தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்னர், அங்கிருந்த இந்தியர்கள், அடிமைகளைப் போலவே நடத்தப்பட்டார்கள். இந்தியர்களும் அப்படியே நடந்து கொண்டார்கள். லட்சக்கணக்கில் பணஞ் சம்பாதித்த வியாபாரிகள் கூட, ‘பணஞ் சம்பாதிக்க வந்த இடத்தில் மானத்தைப் பார்த்தால் முடியுமா?’ என்கிற மாதிரியாகக் கேட்டார்கள். காந்தியின் மனித உள்ளம் இதைக் கேட்டு வெகுண்டு எழுந்தது. மானமிழந்து வாழாமை முன்னினிதே என்பது சத்திய வாசகமல்லவா? அங்கிருந்த இந்தியர்களின் மானத்தைக் காப்பாற் றும் பொருட்டு முதலில் ஒரு வருஷ ஒப்பந்தத்தின் பேரில் வக்கீலாகச் சென்ற காந்தி, அங்கேயே இருபது வருஷ காலம் தங்கினார். சென்றபோது ஒரு வக்கீலாகச் சென்றார். அங்கே, இந்தியர்களின் கட்சியை எடுத்துச் சொல்லும் வக்கீலாக வாழ்ந்தார். இந்தியாவுக்குத் திரும்புகிற போது ஒரு வெற்றி வீரராகத் திரும்பினார்.
காந்தியும் விவேகானந்தரும் வெளி நாடுகளுக்குச் சென்று வெற்றிச் சங்கு ஊதிய பிறகுதான் அவர்களுடைய பெருமையை நாம் உணர்ந்து கொண்டோம். அவர்கள் திரும்பி வந்தபோது ஜே கோஷம் போட்டோம். இதற்கு நமது அறியாமை காரணமென்று சொல்கிறார்கள். அப்படிச் சொல்வது ஒரு சிலருடைய சம்பிரதாயமும் கூட. ஆனால் உண்மையில் நமது அடிமைத்தனந்தான் காரணம். எந்த ஜாதி, அடிமைக் குழியிலே விழுந்துகிடக்கிறதோ, அது தன்னையே மறந்து கிடக்கிறது. ஆள்வோரின் பாதுகாப்பிலே அது தன் சுய உணர்வை இழந்து கிடக்கிறது. அந்த நிலையிலே, தன்னைப் பற்றிய ஒரு தாழ்வான எண்ணம், அந்நியர்களுடைய நாகரிகத்திலே ஒரு மோகம், எப்பொழுதும் ஒருவித அச்சம், புதுமை போலித்தனம் பகட்டு முதலியவைகளிலே மேலெழுந்த வாரியான ஒரு நம்பிக்கை ஆகிய இந்தத் தன்மைகளெல்லாம் அதனிடத்தில் குடிகொண்டு விடுகின்றன. இவைகளிலிருந்து அந்த ஜாதியைக் கைதூக்கி விட்டு அதற்குச் சுய உணர்வை உண்டுபண்ணுவதென்பது லேசான காரியமா? அந்தக் காரியத்தை யார் செய்ய முடியும்? அயலார் வந்து செய்ய முடியுமா? அயலார், அதிலும் நல்லெண்ணமுடையவர்கள், எட்டி யிருந்து அநுதாபம் காட்டலாம். ஆனால் யார், அந்த ஜாதியிலேயே ஒருவராகப் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகிறார்களோ, யாருக்கு, தன்னுடைய ஜாதி இப்படி கேவலமான திதியிலிருக்கிறதே யென்று இருதயத்திலிருந்து ரத்தம் வடிகிறதோ, யார், விருப்பு வெறுப்பில்லாமல், பலனை எதிர்பாராமல் செய்ய வேண்டிய கடமையைச் செய்துகொண்டு போவதிலேயே திருப்தி யடைகிறார்களோ அவர்கள்தான் அந்த ஜாதியைக் கைதூக்கி விட முடியும். அப்படிக் கை தூக்கி விடுகிற முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருக்கிற போது, அவர்களுடைய சுயஜாதியினரே அவர் களை எள்ளி நகையாடலாம்; எண்ணிறந்த இம்சைகளுக்குட்படுத்தலாம். ஆனால் அவர்கள், இவைகளையெல்லாம் லட்சியம் செய்வதில்லை; செய்யவும் மாட்டார்கள். தூங்கிக் கொண்டிருப்பவர்களைத் தட்டி எழுப்பு வதற்காகச் சதா விழித்துக் கொண்டிருப்பதும், சுமந்து செல்கிறவர்களின் சுமையை இறக்கி வைப்பதற்காகக் காத்துக் கொண்டிருப்பதும், தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்து கொண்டிருப்பதும் அவர்களுடைய அன்றாட வேலைகளாயிருக் கின்றன. அவர்களைத்தான் மகான்களென்று கொண்டாடுகிறோம்; பெரியார்களென்று போற்றுகிறோம்.
காந்தியும் விவேகானந்தரும் மகான்களல்லரோ? பெரியார்களல்லரோ?



