காந்தியும் விவேகானந்தரும் வெ. சாமிநாத சர்மா

விவேகானந்தர் ஏன் அமெரிக்கா சென்றார்?


1892ஆம் வருஷக் கடைசி. குமரிமுனையிலுள்ள ஒரு சிறிய பாறையின் மீது விவேகானந்தர் ஆழ்ந்த தியானத்திலிருக்கிறார். அவர் முதத்திலே ராஜகளை; உதட்டிலே புன் சிரிப்பு. முந்தைய பாரதத்தின் பெருமையும் இன்றைய பாரதத்தின் ஆவலும் ஓர் உருவாகத் திரண்டு வந்து அன்னையே! நின் சரணம் என்று பாரதத் தாயின் திருவடியின் கீழ் அமர்ந்திருப்பதைப் போலிருக்கிறது அந்தத் திருக்காட்சி.

சிறிது நேர தியானத்திற்குப் பிறகு விவேகானந்தருடைய மெய் சிலிர்த்தது. கண்கள் நீர் பெருக்கின. எனது தாய்நாடு? எனது தாய் நாடு? என்ற வார்த்தைகள் வாயிலிருந்து வெளி வந்தன. தாய்நாட்டு மக்களை நினைத்துக் கொண்டு விட்டார். அதுதான் இவைகளுக் கெல்லாம் காரணம்.

கன்னியாகுமரியை வந்தடைவதற்கு முன்னர் விவேகானந்தர் இந்தியா முழுவதையும் சுற்றிப்பார்த்தார். வேடிக்கை பார்க்கச் செல்லும் பிரயாணியைப் போலல்ல; மெய்ப் பொருளைக் காணும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மெய்ஞ் ஞானியைப் போல. முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று ஒரு காலத்தில் பெருமையோடு அழைக்கப்பட்டு வந்த இந்திய மக்கள் இப்பொழுது உதிர் சருகுகளைப் போலிருக்கிறார்கள். ஒரு காலத்தில் இவர்கள் மூச்சை அடக்கினார்கள். இப்பொழுது மூச்சு விடுவதற்குக் கூட இவர்களுக்குத் திராணியில்லை. இந்தியாவில் எத்தனையோ அரசர்கள் ஆண்டார்கள்; ஞானமென்றும் மோனமென்றும் எத்தனையோ பேர் உபதேசம் செய்தார்கள். அநித்தியமான இந்த உலகத்தைத் துறந்துவிட்டு நித்தியமான வாழ்வை நாடிச் சென்ற சந்நியாசிகள்தான் எத்தனை பேர்? ஆனால் இவர்களெல்லோரும் பாமர ஜனங்களுக்குச் செய்தது என்ன? அவர்களுக்குத் தத்துவ ஞானத்தை உபதேசித்தார்கள்! என்ன பைத்தியக்காரத்தனம்! லட்சக்கணக்கான இந்த அந்த ஏழை மக்கள், வயிற்றுச் சோற்றுக்கு வழியில்லாமல் அலைகிற போது அவர்கள் ஆன்மார்த்தமாக மேல் நோக்கிச் செல்வதெப்படி? இகலோகத்தில் வாழ்வதெப்படி என்பதை அவர்கள் தெரிந்து கொண்டாலல்லவோ, பரலோகத்தைப் பற்றிய எண்ணம் அவர் களுக்கு உண்டாகும்? எனவே, முதலில் அவர்களுக்குக் கவலையின்றி வாழக்கூடிய சௌகரியங்களைச் செய்து கொடுக்க வேண்டும். பின்னர், அவர்கள், தங்களுடைய பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்வார்கள். இதற்குத் தொண்டர்களும் பணமும் தேவை.

விவேகானந்தர், தம்முடைய சுற்றுப் பிரயாணத்தின் போது இந்தத் தேவையை நன்கு உணர்ந்து கொண்டார். ஆனால் தாம் என்ன செய்ய முடியும்? கையிலே காசில்லை; முற்றுந் துறந்த துறவி. அடிக்கடி ஏக்கங் கொள்வார்; இந்திய மக்களுக்கு ஏதேனும் விமோசனம் ஏற்படுமாவென்று தம்மைத் தாமே கேட்டுக் கொள்வார். இந்த மாதிரியான ஒரு மனோ நிலைமையில்தான் இவர், மேலே சொன்ன பிரகாரம் தியானத்திலே அமர்ந்தார்.

சில மணி நேரங் கழித்து, தமது தேகத்தை உதறிக் கொண்டு எழுந்து நின்றார், கண் மூடிக் கொண்டிருந்த சிம்மம் தேகத்தை உதறிக்கொண்டு எழுந்து நிற்பதைப் போல. ஆரம்பத்தில் இவரிடமிருந்த ஏக்கம், என்ன செய்வது என்ற கேள்வி ஆகிய எல்லாம் பறந்துவிட்டன. அவைகளை யெல்லாம் உதறித் தள்ளி விட்டதைப் போலவே தம் தேகத்தை உதறிக் கொண்டார். முக் கடலையும் நோக்கினார்; தமது தாய்நாட்டைத் திரும்பிப் பார்த்தார். மனதில் ஓர் ஒளி உண்டாயிற்று. புதிய சக்தி பெற்றவர் போலானார். சங்கல்பம் செய்து கொண்டார்: எனது குருநாதரின் திருவருளால் இந்தக் காரியத்தைச் செய்து முடிப்பேன். அவருடைய ஆசீர்வாத பலத்தினால், இந்தியாவிலுள்ள ஒவ்வொரு நகரத்திலிருந்தும், ஏழை மக்களின் பரிதாப நிலையைக் கண்டு துடிதுடிக்கிற, அவர்களுடைய நல்வாழ்வுக்காகத் தங்களுடைய வாழ்வையே அர்ப்பணம் செய்யக் கூடிய இருபதுக்கணக்கான தொண்டர்கள் தோன்றுவார்கள். ஆனால் பணத்திற்கு என்ன செய்வது? இந்தக் கவலையுடனும் ஏதேனும் செய்ய வேண்டுமே யென்ற எண்ணத்துடனும் இந்தியாவின் எல்லாப் பாகங்களிலும் சுற்றி வந்தேன். பணக்காரர்களுடைய மாளிகைகளுக்குச் சென்றேன்; அரசர் களுடைய அரண்மனை களுக்குச் சென்றேன். எதற்கு? உதவி பெறும் பொருட்டு. ஆனால் கிடைத்தது என்ன? உதட்டளவிலே அநுதாபம்! ஹிந்துதானத்தி லுள்ள யாருடைய ஆதரவையும் இனி நாடமாட்டேன். இந்தியாவி லுள்ள லட்சக்கணக்கான ஜனங்களின் சார்பாகக் கடலைக் கடந்து மேனாடுகளுக்குச் செல்வேன். என் அறிவுத் திறமையினால் பணம் சம்பாதித்துக் கொண்டு வருவேன். வந்து, இந்த ஏழை ஜனங்களின் புனருத்தாரணத்திற்காக நான் வகுத்திருக்கிற திட்டங்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருவேன்; அல்லது அந்த முயற்சியிலே இறந்து போவேன்.

விவேகானந்தர், இந்தமாதிரி சங்கற்பித்துக் கொண்டது எங்கே? கன்னியாகுமரியில்! தமிழ்நாட்டில்! தமிழ்நாடே! நீ என்ன பாக்கியம் செய்தாய்! இந்தப் பாக்கியம் தமிழ்நாட்டுக்குக் கிடைத்ததற்கு மற்றொரு முக்கிய காரண புருஷராயிருந்தவர் அப்பொழுதைய ராமநாதபுரத்து அரசர் பாஸ்கர சேதுபதி அவர்கள். விவேகானந்த ருடைய பெருமையை அவர் நன்கு உணர்ந்திருந்தார். தம்முடைய விருந்தினராக சுவாமிகள் இருந்தபோது, அமெரிக்காவுக்குச் சென்று ஹிந்து மதத்தை பிரபலப்படுத்த வேண்டு மென்று அடிக்கடி வற்புறுத்தி வந்தார்: அதற்கான உதவிகளையும் தாம் செய்வதாக வாக்களித்தார். தமிழ் மரபிலே வந்த தமிழ் மன்னரல்லவா?

கன்னியாகுமரியிலிருந்து சென்னை வந்து சேர்ந்தார் விவேகானந்தர். அப்பொழுது சென்னையில் ஆங்கில வாடை வேகமாக வீசிக் கொண்டிருந்தது. ஆங்கிலத்தைப் படிப்பதும் ஆங்கிலத்தில் பேசுவதும் கௌரவமென்று இளைஞர்கள் கருதிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த இளைஞர்கள்தான், விவேகானந்தரைச் சந்தித்த சிறிது காலத்திற்குள் இவருடைய அத்தியந்த சிஷ்யர்களாகி விட்டார்கள்!

உலகத்தினரெல்லோரும் விவேகானந்தரைப் போற்றினார்க ளென்று சொன்னால் அதற்கு முதன் முதல் வழி காட்டியது சென்னைதான். ஆசார சீர்திருத்தமென்ற பெயரால் ஹிந்து மதத்தை ஏளனம் செய்து வந்த இளைஞர்கள் பலர், விவேகானந்தரின் முதற் சிஷ்யர்களானது சென்னையில்தான். விவேகானந்தர் அமெரிக்கா செல்லுவதற்கென்று முதன் முதலாக ஒரு நிதி திரட்டப்பட்டது சென்னையில்தான். விவேகானந்தரின் உணர்ச்சி ததும்பும் பிரசங்கங்கள் நிகழ்ந்தது சென்னையில்தான். ஆங்காங்கு மடங்களை தாபித்தல், நூல்களை வெளியிடுதல் ஆகிய விவேகானந்தருடைய திட்டங்களை முதன் முதலாக நிறைவேற்றி வைத்தது சென்னை தான். விவேகானந்தர், மேனாடுகளுக்குச் சென்றிருந்தபோது அவருடைய உபதேசங்கள் இந்தியா வெங்கணும் பரவுவதற்குத் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டார்கள் சென்னை வாசிகள்தான். வாழியரோ சென்னையர்!

விவேகானந்தர் சென்னையில் தங்கியிருந்த காலத்தில் ஒரு நாள் காற்றுவாங்கக் கடற்கரைக்குச் சென்றிருந்தார். அங்கே செம்படவர்களின் வாழ்க்கை நிலையைக் கண்டார். கண்கலங்கினார். வாய்விட்டுப் புலம்பினார்: ஓ! கடவுளே! மகா கேவலமான இந்த மனித ஜென்மங்களை ஏன் படைத்தாய்? இவர்களைப் பார்ப்பதற்குக்கூட என்னால் சகிக்க முடியவில்லையே. எவ்வளவு காலம் இப்படி? கடவுளே! எவ்வளவு காலம் இப்படி? இவர் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வடிந்தது. பக்கத்திலிருந்தவர்கள் இதைப் பார்த்தார்கள். அவர்களும் குழந்தைகள் மாதிரி கூடவே அழ ஆரம்பித்து விட்டார்கள். ஏழைகளைக் கண்ட மாத்திரத்தில் விவேகானந்தரின் உள்ளம் புழுப்போல் துடித்தது; மெழுகு போல் உருகியது.

விவேகானந்தர், அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியத்தைச் சென்னையிலேயே அதிகமாக உணர்ந்தார். வரவர இந்த ஓர் எண்ணமே இவர் உள்ளத்தை நிரப்பிக்கொண்டு வந்தது. இவருடைய ஆவலை அறிந்த இவருடைய சிஷ்யர்கள், ஒரு தொண்டர் படையை அமைத்துக்கொண்டு நிதி வசூலிக்கப் புறப்பட்டார்கள். வீடு தோறும் சென்று பணம் தண்டினார்கள். இவர்கள், பணக்காரர்கள் வீட்டுக்கு அதிகமாகச் செல்லவில்லை; மத்திய வகுப்பாரிடமே சென்றார்கள். ஏனென்றால் விவேகானந்தர், இவர்களுக்குப் பிறப்பித்திருந்த ஆணையென்னவென்றால் நான் அமெரிக்கா செல்ல வேண்டுமென்பது ஜகதீசுவரியின் விருப்பமானால், அதற்காக நான் ஜனங்களிடமிருந்தே பணம் பெறவேண்டும். ஏனெனின் இந்திய மகாஜனங்களுடைய நன்மைக்காகவே நான் மேனாட்டுக்குச் செல்கிறேன். அவர்களுக்காகவே, அந்த ஏழை ஜனங்களுக்காகவே செல்கிறேன் என்பதாகும்.

இங்ஙனம் அமெரிக்கா செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தனவென்றாலும், விவேகானந்தர், உடனே துணிந்து புறப்படவில்லை. உலகத்தை ஈன்று புரக்கும் ஜகன் மாதாவின் ஆணை தமக்குக் கிடைக்கவில்லை, அது கிடைத்த பிறகுதான் புறப் படவேண்டும் என்கிற மாதிரியான ஓர் எண்ணம் இவர் மனதில் இருந்து கொண்டிருந்தது. அப்படியே ஒருநாள், ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸர் தோன்றி தம்மைச் சமுத்திரத்தின் மீது அழைத்துச் செல்வதாக ஒரு கனவு கண்டார். குருவின் ஆணை பிறந்துவிட்டதாக உணர்ந்தார். பின்னரே பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் சுறுசுறுப்பாகச் செய்யப் பட்டன. அதே சமயத்தில், குரு பத்தினியான ஸ்ரீ சாரதாமணி தேவியின் ஆசீர்வாதமும் கிடைத்தது. கடைசியில் 1893-ஆம் வருஷம் மே மாதம் 31-ஆம் தேதி சிஷ்யர்கள் அடிபணிந்தார்கள்; நண்பர்கள் கண்ணீர் பெருக்கினார்கள் மாதா! வணக்கம் என்று சொல்லிக் கொண்டு கப்பலேறினார் விவேகானந்தர். கப்பலும் நகர்ந்தது. துறவுக்கு முக்கியத்துவம் கொடுத்த நாட்டிலிருந்து போகநாட்டிற்குச் செல்கிறேன் என்ற வார்த்தைகள் விவேகானந்தருடைய வாயிலிருந்து வெளிவந்தன.

போக நாட்டிற்கு ஏன் சென்றார் விவேகானந்தர்? போகத்தை அனுபவிப்பதற்கா? அபசாரம்?! அபசாரம்! போகத்திற்கும் இவருக்கும் எவ்வளவு தூரம்? அல்லது சிக்காகோவில் கூடப் போகிற சர்வ சமய மகாநாட்டிற்குச் சென்று ஹிந்து மதத்தின் புராதனத்தையும் பெருமையையும் எடுத்துச் சொல்வதற்காகவா? ஆம்; அஃதொரு காரணந்தான். ஆனால் அதுவே காரியமில்லை. சென்னையில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் பின்வருமாறு கூறுகிறார்:

தேசபக்தி, தேசபக்தி என்று சொல்கிறார்கள். நான் கூட ஒரு தேசபக்தன் தான். எனக்குக்கூட தேச பக்தியிலே நம்பிக்கையுண்டு…. ஆனால் சகோதரர்களே! நீங்கள் மனப்பூர்வமாக உணர்கிறீர்களா? கடவுளர்களின் வழித் தோன்றல்களென்றும் ரிஷி பரம்பரையினர் என்றும் சொல்லப்படுகிற லட்சக் கணக்கான பாரதநாட்டு மக்கள், இப்பொழுது மிருகங்களுக்கு அடுத் படியான வாழ்க்கையை நடத்து கிறார்கள் என்பதை நீங்கள் உணர்கிறீர் களா? லட்சக்கணக் கானபேர் இன்றைய தினம் பட்டினி கிடக்கிறார்கள், லட்சக்கணக் கானபேர் நாட்கள் கணக்காகப் பட்டினி கிடந்து வருகிறார்கள் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா? கருமேகம்போல் நமது நாட்டை அறியாமை சூழ்ந்துகொண்டிருக்கிறதென்பதை நீங்கள் உணர்கிறீர் களா? இதனால் உங்கள் மனம் பதை பதைக்கிறதா? இரவில் தூக்கம் வராமலிருக்கிறதா? இந்த உணர்ச்சி உங்களுடைய ரத்தத்திலே ஊறி, நரம்புகளிலே புகுந்து, இருதயத் துடிப்போடு ஒன்றாகி விட்டதா? இந்த உணர்ச்சி உங்களை ஒரு பித்து போல் ஆக்கி விட்டதா? பெயர், புகழ், மனைவி, மக்கள், சொத்து, தேகாபிமானம் முதலிய எல்லாவற்றையும் மறந்து இந்த ஏழை மக்களின் துயரம் ஒன்றையே நீங்கள் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருக்கிறீர்களா? இந்த நிலையை நீங்கள் அடைந்தீர்களானால் அதுதான் உங்கள் தேசபக்திக்கு முதல்படி. சர்வ சமய மகாநாட்டை உத்தேசித்து நான் அமெரிக்கா செல்லவில்லையென்பது உங்களிற் பலருக்குத் தெரியும். மேலே சொன்ன இந்த உணர்ச்சிதான், என்னிடத்தில் ஊறியிருந்தது; என்னுடைய ஆத்மாவைப் பற்றிக் கொண்டிருந்தது. இந்தியா முழுவதிலும் பன்னிரண்டு வருஷகாலம் சுற்றுப்பிரயாணம் செய்தேன். என் தாய்நாட்டு மக்களுக்கு எப்படித் தொண்டு செய்வ தென்பதற்கு எனக்கு வழி புலப்படவில்லை. அதனாலேயே நான் அமெரிக்கா சென்றேன். என்னை அறிந்தவர்களுக்கு இது தெரியும். சர்வ சமய மகாநாட்டைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்? என்னுடைய சதையும் ரத்தமும் தினந்தோறும் குன்றிக் கொண்டு வர, அவைகளைப்பற்றி – மகாநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி – யாருக்கு என்ன கவலை?

எனவே, விவேகானந்தர் எந்த நோக்கோடு அமெரிக்கா சென்றார் என்பது இதிலிருந்து நன்கு புலனாகிறது. சர்வ சமய மகாநாடென்பது ஒரு சந்தர்ப்பந்தானே தவிர அதுவே இவருடைய நோக்கமில்லை. இந்தியாவின் ஏழை மக்களைக் கை தூக்கிவிட வேண்டுமென்பதுவே இவர் நோக்கம். அதற்காகவே இவர் தமது சர்வத்தையும் தியாகம் செய்தார்; உணர்ச்சி வசப்பட்டு அநேக சமயங்களில் தன்வசமிழந்தும் நின்றார். அமெரிக்காவுக்குச் சென்ற பிறகு, இந்தியாவிலுள்ள தமது சிஷ்யர்களுக்கு ஒரு கடிதத்தின்மூலம் எப்படி உணர்ச்சி ஊட்டுகிறார் பாருங்கள்:

எனது இளைஞர்களே! மடி கட்டிக்கொள்ளுங்கள். நான் உங்களிடத்திலேதான், அடக்கமுள்ள, கீழானவர்களென்று கருதப் படுகின்ற, ஆனால் தன்னம்பிக்கையுள்ள உங்களிடத்திலேதான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். கடவுளிடத்தில் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள். கொள்கை, கொள்கையென்று கட்டிக்கொண்டு அழாதீர்கள். அஃதொன்று மில்லை. ஏழை மக்களுக்கு இரக்கங் காட்டுங்கள். உங்களுக்கு நிச்சயம் உதவி கிடைக்கும்… ரத்தம் வடிகிற உள்ளத்தோடு, உலகத்தின் பாதி பாகத்தைக் கடந்து இந்தப் புதிய நாட்டுக்கு வந்திருக்கிறேன். எதற்கு, உதவி பெறும் பொருட்டு. கடவுள் எல்லாம் வல்லவர். அவர் எனக்கு உதவி செய்வார். அஃதெனக்கு நன்றாகத் தெரியும். நான் இந்த நாட்டிலே குளிரினாலும் பட்டினியினாலும் இறந்து போகலாம். ஆனால் இளைஞர்களே! ஏழை மக்களிடத்திலே, பாமர ஜனங்களிடத்திலே, ஒடுக்கப் பட்டவர்களிடத்திலே நான் செலுத்துகிற அநுதாபத்தை, அவர்களுக்காக நான் நடத்துகிற போராட்டத்தை உங்களிடம் ஒப்படைத்துவிட்டுப் போவேன். கடவுள் முன்னிலையில் தைரியமாகச் செல்லுங்கள். பாரதநாட்டு முப்பது கோடி மக்களுக்காக, (இப்பொழுது நாற்பதுகோடி )நாளுக்கு நாள் கீழே போய்க் கொண்டிருக்கும் இந்த ஏழை ஜனங்களின் விமோசனத்திற்காக, எங்களுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்கிறோம் என்றுபிரதிக்ஞை செய்து கொள்ளுங்கள் கடவுட் கிருபையால் நாம் வெற்றியடைவோம். நமது போராட்டத்தில் நூற்றுக் கணக்கானவர் வீழ்ந்து படலாம். ஆனால் நூற்றுக்கணக்கான பேர் அந்த இடத்தைப் பூர்த்திசெய்ய முன்வருவர். நான் இங்கு வெற்றியடையாமல் இறந்து போகலாம். ஆனால் என்னுடைய வேலையை வேறொருவர் மேல் போட்டுக் கொண்டு நடத்துவர். உங்களுக்கு வியாதி இன்னதென்று தெரியும்; அதற்குப் பரிகாரமும் தெரியும். உங்களுக்கு வேண்டியது நம்பிக்கைதான்…வாழ்வா, சாவா, பட்டினியா, குளிரா, இவையெல்லாம் என்ன அவ்வளவு பிரமாதமான விஷயம்? இவைகளைப் பொருட்படுத்தவே படுத்தாதீர்கள். கடவுளை நம்பி முன்னே செல்லுங்கள். அவரே, அந்தக் கடவுளே, நமக்குத் தலைவர். அப்படிச் செல்லுகிற போது, யாரார் வழியில் விழுந்து விட்டார்க ளென்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு செல்லாதீர்கள். முன்னோக்கியே செல்லுங்கள். முன்னோக்கிக் கொண்டு போவீர்கள்.

இங்கே ஒரு விஷயம். விவேகானந்தர், அமெரிக்காவுக்குச் சென்றது, இந்தியாவுக்கு உதவி தேடிக் கொண்டு வரும் பொருட்டு மட்டுந்தான் என்று நினையாதீர்கள். மகான்கள், எப்பொழுதுமே பிறருடைய தயவை எதிர் பார்க்க மாட்டார்கள். சிறிய ஒன்றை மற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகி விட்டால், அவர்கள், பெரிய ஒன்றைக் கொடுத்துவிட்டுத்தான் அந்தச் சிறிய ஒன்றைப் பெறுவார்கள்.

விவேகானந்தர் ஒரு சமயம் மைசூர் மன்னரிடம் சம்பாஷித்துக் கொண்டிருக்கையில், இந்தியாவினுடைய ஆத்ம ஞானத்தை அமெரிக்காவுக்குக் கொடுத்துவிட்டு அதற்குப் பதில், இந்தியர் களுடைய லௌகிக வாழ்க்கைக்காக ஏதேனும் உதவி தேடிக் கொண்டு வரலா மென்பதற்காகவே தாம் அமெரிக்கா செல்ல வேண்டுமென்று விரும்புவதாகத் தெரிவித்தார். இன்னும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிலுள்ள தமது நண்பரொருவருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: நமது தேசத்தில் சமுதாய நற்குணங்கள் (அதாவது சமுதாயத்தைச் சேர்ந்த எல்லோரும் நன்றாக வாழவேண்டும், அதற்காக நாம் பாடுபடவேண்டும் என்கிற எண்ணம் முதலியன) குறைவாயிருக்கின்றன. இங்கே, அமெரிக்காவில், பாரமார்த்திக வாழ்வென்பது சூனியமா யிருக்கிறது. இந்தியாவின் பாரமார்த்திக ஞானத்தை நான் இவர்களுக்குக் கொடுக்கிறேன். இவர்கள் எனக்கு (இந்தியாவுக்காக)ப் பணம் கொடுக்கிறார்கள்.

எனவே, விவேகானந்தர் அமெரிக்காவுக்குச் சென்றாரென்றால் அங்கிருந்து இலவசமாக உதவி பெற்றுக்கொண்டு வருவதற்காக அல்ல. ஆத்ம ஞானத்தை அவர்களுக்கு அளித்துவிட்டு, அதற்கு ஒரு சிறு பிரதியாகவே, இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கான சில உதவிகளைப் பெற்றுக் கொண்டு வந்தார். ஆம், அழியாச் செல் வத்தைக் கொடுத்துவிட்டு அழியுஞ் செல்வத்தை வாங்கிக் கொண்டு வந்தார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *