காந்தியும் விவேகானந்தரும் வெ. சாமிநாத சர்மா

தொண்டு செய்!


உண்மையென்றால் என்ன? எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் வேற்றுமையற்று ஒன்றாகிவிடுமானால் அதற்கு ஒரு தனிப் பெயருண்டல்லவா? அது தான் உண்மை. உண்மையுள்ள இடத்திலே ஆடம்பரமில்லை; ஆரவாரமில்லை; அச்சமில்லை; அறியாமையில்லை. காந்தி, இந்த உண்மையை நாடிச்செல்லும் ஒரு பிரயாணி. பிரயாணமாவது யாது? அதுதான் தொண்டு; பற்றற்ற சேவை.

அந்தத் தொண்டு மௌனமானது. அதற்கு வாயில்லை; மனமுண்டு. அதன் உடலிலே நகையில்லை; ஆனால் முகத்திலே நகையுண்டு. அதற்கு அடக்கத் தெரியாது; அடங்கத் தெரியும். அது செயலிலே ஓய்வைக் காணும்; பிறர் துன்பத்தைப் பரிகரிப்பதிலே இன்பம் நுகரும். அது ஜாதி, மத, நிற வேற்றுமைகளைக் கடந்தது; கடமையிலே கண்ணுங் கருத்து முடையது.

காந்தியின் வாழ்க்கை, உண்மையைக் குறிக்கோளாகக் கொண்டது. சேவையை, அதனையடையும் மார்க்கமாகவுடையது. தொண்டு செய், தொண்டு செய் என்றே அவர் உபதேசிக்கிறார். சேவையின் கீதமாகவே அவருடைய கைராட்டினம் ஒலிக்கிறது. அவரது மணிமொழிகளில் சில வருமாறு:

இரும்பு விலங்குகளைக் காட்டிலும், பொன் விலங்குகள்தான் கேவலமானவை யென்பது என் கருத்து. ஏனென்றால், இரும்பு விலங்குகளின் உபத்திரவத்தை நாம் உணர்கிறோம். பொன் விலங்குகளோ, நமது நிலையை உணராமற் செய்துவிடுகின்றன.

சந்தோஷமாகச் செய்கிற தியாகத்திற்குத் தான் மதிப்பு உண்டு. முகத்தைத் தொங்க விட்டுக் கொண்டு தியாகம் செய்வதில் அர்த்தமேயில்லை. தன்னுடைய தியாகத்திற்கு எவனொருவன் அநுதாபத்தை எதிர்பார்க்கிறானோ அவன் வெகு சாதாரணமானவன்.

உண்மையைக் கடைப்பிடிப்பதென்பது ரோஜாப்பூக்கள் பரப்பிய படுக்கையாயிருந்தால், அதனாலே எவ்வித சிரமமும் இல்லையென்றால், சுகமாகவும், சுலபமாகவும் இருந்தால், அதில், அந்த உண்மையைக் கடைப்பிடிப்பதில், அழகேயிராது.

நீங்கள் தேசபக்தர்களாக வேண்டுமானால், ஏழைகளின் நலத்திற்குப் பாடுபடவேண்டுமானால், முதலில் உங்களை நீங்கள் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

வானிடிந்து வீழ்ந்தபோதிலும் நாம் உண்மையைப் பின்பற்ற வேண்டும்.

நமது சகோதர மக்களுக்குத் தொண்டு செய்யவே நாம் பிறந்திருக்கிறோம். அதற்கு நாம் எப்பொழுதும் விழிப்புடையவர் களாக இருக்க வேண்டும். இருளும் ஒளியும் சதா மனிதனுடைய இருதயத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் போராட்டத்தில், இருளின் வலிமைக்கு மனிதன் இரையாகாமலிருக்க வேண்டுமானால் அவன் பிரார்த்தனையிலேயே அடைக்கலம் புக வேண்டும்.

மனிதத்தன்மையென்பது வீண் பேச்சிலோ, அதிகார தோரணை யிலோ இல்லை. சமுதாயத்துறையிலோ, அரசியல் துறையிலோ, பிறதுறைகளிலோ, எது சரியென்று தோன்றுகிறதோ அதனை, அதன் பலாபலன்களை எதிர்பாராமல் செய்கிற துணிவிலே தான் இருக்கிறது. மனிதத்தன்மையென்பது சொல்லிலே இல்லை; செயலிலேயே இருக்கிறது.

எவன், தனக்குத்தானே சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனே சுதந்திர புருஷன்.

சுயராஜ்யம், கோழைகளுக்கல்ல; சிரித்துக் கொண்டே தூக்கு மேடையில் ஏறத் தயாராயிருக்கிறவர்களுக்குத்தான்.

சாசுவதமான ஏதோ ஒன்றை நாம் சாதிக்க வேண்டுமானால், முதலில் நமக்குத் தேவையானது அஞ்சாமை. மத உணர்ச்சி யில்லாமல் இதனை நாம் அடையமுடியாது. கடவுளுக்கு அஞ்சு வோம்; மனிதனிடத்தில் நமக்குள்ள அச்சம் தானாகவே போய்விடும்.

லட்சியத்தை முன்னிட்டு நடைபெற்றிருக்கிற எந்தப் போராட்டத் திலும் இதுவரை எண்ணிக்கை முக்கியமாகக் கருதப்படவில்லை. போராட்டத்தின் தன்மைதான், அதன் முடிவை நிர்ணயிக்கிறது. உலகத்து மகாபுருஷர் பலரும் தனிப்பட்டு நின்றே போராடியிருக்கிறார்கள்.

சிலர், தங்களுக்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லையென்று சொல்கிறார்கள். இஃது எப்படியிருக்கிறதென்றால் நான் மூச்சு விடுகிறேன்; ஆனால் எனக்கு மூக்கு இல்லை என்று சொல்வதைப் போலிருக்கிறது.

தன்னிடத்திலேயுள்ள தெய்வசக்தியை அறிய வேண்டுமென்ற ஆவலுடையவன் கட்டாயம் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும்.

பிரார்த்தனையின் போது, இருதயமில்லாத வார்த்தைகளைக் காட்டிலும், வார்த்தையில்லாத இருதயமே தேவை.

நம்பிக்கையும் தெய்வப் பிரார்த்தனையும் கலவாத வேலை, வாசனையில்லாத செயற்கை மலர் மாதிரி.

மற்றவர்களிடத்தில் நீ அன்பு செலுத்துகிறாய் என்றால் அதை நீ எப்படிக் காட்ட வேண்டும்? அவர்களைப் புகழ்வதனாலேயல்ல; அவர்களுக்குத் தொண்டு செய்வதனால்.

எவன், ஜனங்களுக்குத் தொண்டு செய்வதில் தலை சிறந்தவனாயிருக்கிறானோ அவனே உண்மையான அரசன். ஒரு ராஜ்யத்திற்கு ஜனங்களே உண்மையான எஜமானர்கள்.

விழித்துக் கொண்டிருக்கிறவர்களுக்குத்தான் சுயராஜ்யம்; தூங்கிக்கொண்டிருக்கிறவர்களுக்கும் அறியாமையில் ஆழ்ந்து கிடக்கிறவர்களுக்குமல்ல.

ஜனங்களுக்குத் தன்னலமற்ற தொண்டு செய்வதிலேயே அஹிம்ஸை விகாசமடைகிறது. அந்த விகாசத்தின் அடையாளமே கைராட்டினம்.

மதமானது, கடவுளோடு மனிதனையும், மனிதனோடு மனித னையும் பிணைக்குஞ் சக்தியுடையது.

நம்முடைய கடமைகளை நாம் செய்து கொண்டு போனால் உரிமைகள் தாமாகவே வந்து சேரும்.

அஹிம்ஸை யென்பது ஒரு சாதிரம். அதில் தோல்வி என்பதற்கு இடமேயில்லை.

உலகத்தில் யாராரை நாம் இப்பொழுது மகான்களென்று கொண்டாடுகிறோமோ அவர்களெல்லோரும் தங்கள் சேவையி னாலேயே அந்த மகான் பதவியை யடைந்திருக்கிறார்கள்.

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *