
காந்தியும் விவேகானந்தரும் வெ. சாமிநாத சர்மா
காந்தி ஏன் ஒரு விவசாயி?
காந்தி, மேனாட்டு நடனம் முதற்கொண்டு எல்லாம் தெரிந்தவர். நியாயவாதியாக இருந்து ஆயிரக்கணக்கில் சம்பாதித்தவர். இன்றைய நாகரிகம் என்று எதைச் சொல்லுகிறோமோ அதன் பல கூறுகளையும் நன்றாக அனுபவித்தவர். ஆங்கில பாஷையை, அதன் கம்பீரமும் அழகும் குன்றாமல் எழுதுவதிலும் பேசுவதிலும் இவருக்கு ஒப்பாரும் மிக்காரும் உலகத்திலேயே ஒரு சிலர்தான் இருக்கின்றனர் என்பதை ஆங்கில அறிஞர்கள் அனைவரும் அங்கீகரித்துக் கொண்டிருக்கின்றனர். உலகத்திலேயே மிகச் சிறந்த கிறிஸ்துவராக ஒரு ஹிந்து இருக்கிறார்: அவர்தான் காந்தி என்று கிறிஸ்துவர்கள், தங்களிலே ஒருவராகக் காந்தியைக் கொண்டாடுகிறார்கள். நான், ரோமெய்ன் ரோலாந்தைப் பற்றி நினைக்கிற போது டால்டாயின் ஞாபகம் வருகிறது: லெனினைப் பற்றி நினைக்கிற போது நெப்போலியனுடைய ஞாபகம் வருகிறது: ஆனால் காந்தியைப் பற்றி நினைக்கிறபோது யேசுகிறிஸ்துவின் ஞாபகம் வருகிறது என்று அமெரிக்கப் பாதிரியான ஜே. எச். ஹோம் என்பவர் கூறுகிறார். இங்ஙனம் எல்லாம் தெரிந்த, எல்லோராலும் தங்கள் தங்களுடையவரென்று கொண்டாட்டப் பெறுகின்ற காந்தி, தம்மை என்னவென்று அழைத்துக் கொள்கிறார்? நான் ஒரு விவசாயி; எனது தொழில் நெசவுத் தொழில் என்று சொல்லிக் கொள்கிறார்.
இங்ஙனம் இவர் தம்மை ஒரு விவசாயி என்றும் நெசவுத் தொழிலாளி என்றும் சொல்லிக்கொள்வதன் நோக்கமென்ன?
உலகத்திலே மற்றவர்களுக்காக வாழ்கின்ற மகா புருஷர்கள் அத்தனை பேரும் எவ்விதமான கட்டுப்பாடுகளுக்கும் தங்களை உட்படுத்திக் கொள்ளச் சம்மதிக்கிறார்களில்லை; சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவே விரும்புகிறார்கள். தங்களுடைய ஜீவனோ பாயத்திற்காக, சுதந்திரமாயுள்ள ஒரு தொழிலில் ஈடுபடு கிறார்கள். அப்படி ஈடுபடுகிற போது ஏதேனும் கஷ்ட நிஷ்டூரங்கள் ஏற்பட்டால் அவற்றைப் பொறுமையோடு சகித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு முக்கியமான தேவை சுதந்திர வாழ்க்கையே.
உலக ரீதியாகப் பார்க்கிறபோது சுதந்திர வாழ்க்கை நடத்துகிறவர்களுக்கு அதிகமான செல்வம் கிடைக்காமலிருக்கலாம்; பட்டம் பதவி முதலியன கிட்டாமலிருக்கலாம். ஆனால் அவர்கள் உள்ளத்திலே வீரமும் ஈரமும் எப்பொழுதும் நிறைந்திருக்கும். அவர்கள் நமனுக்கஞ்சார்; தம்பிணியறியார்; யாருக்கும் பணியார். ஆனால் பொய்மைக்கு அஞ்சுவார்; பிறர் பிணிகளை நன்கறிவார். அடக்கமே அவர் அணிகலன். சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் உலகத்திற்கு அடிமைகளல்லர்; உலகத்தை அடிமையாகக் கொண்டவர்கள்.
சுதந்திர வாழ்க்கை நடத்துகிறவர்களால்தான் நல்ல சிருஷ்டிகளைச் செய்ய முடியும். தங்களுடைய சந்தோஷத்திற்காக அவர்கள் ஏதொன்றினையும் சிருஷ்டிப்பதில்லை; மற்றவர்களுடைய நன்மைக்காகவே சிருஷ்டி செய்கிறார்கள். அந்தச் செய்கையில்தான் அவர்கள் இன்பம் நுகர்கிறார்கள்: அதன் பலனில் அல்ல. அவர்கள் ஆடம்பரத்தை வெறுக்கிறார்கள்; இயற்கை வாழ்விலே இனிமையைக் காண்கிறார்கள்; இவைகளுக்கெல்லாம் அனுகூலமாயிருக்கிற முறையிலேயே தங்கள் ஜீவனோபாயத்தைத் தேடிக் கொள்கிறார்கள்.
சாதாரணமாக நாம் பார்க்கலாம், மானிட ஜாதியின் எண்ணப் போக்கில் யாரார் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கிறார்களோ அவர்களெல்லோரும் ஏதேனும் சுதந்திரமான ஒரு தொழிலைத் தங்களுடைய ஜீவனோபாயமாகக் கொண்டிருப்பதை. அந்தத் தொழில் பிறருக்கு உபகாரமாக இருக்கிற தொழிலாக இருக்குமே தவிர யாரையும் சுரண்டுவதாயிராது; யாருடைய தயவையும் எதிர்பார்ப்பதாயிராது. தாங்கள் செய்கிற சிருஷ்டிக்கோ அல்லது மற்ற நற்காரியங்களுக்கோ, தாங்கள் மேற்கொண்டிருக்கிற தொழில் ஒரு சாதனம் என்றே அவர்கள் கருதுகிறார்கள். அந்த அளவுக்குத் தான் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்; அதில் ஈடும்படுகிறார்கள்.
தனது அறியாமையை அறிந்து கொண்டிருந்த அறிஞனாகிய ஸாக்ரடீஸ் (கி.மு. 470-399) ஒரு சிற்பி. அரிஸ்டாட்டல் (கி.மு. 384-322) ஒரு வைத்தியன். கலீலியோ (1564-1642) என்ற வான சாஸ்திரி ஒரு கணித ஆசிரியன். கார்ல் மார்க்ஸ் (1818-1883) ஒரு பத்திரிகாசிரி யன். திருவள்ளுவர் நெசவுத் தொழில் நடத்தி ஜீவனம் செய்து வந்தார். ராம நாடகம் பாடிய அருணாசலக் கவிராயர் மளிகைக் கடை வைத்திருந்தார்.
மனிதனுக்கு முதல் தேவை உணவு. இரண்டாவது உடை. பிறகுதான் அறிவு, ஆத்மா முதலியனவெல்லாம். உலகத்திற்கு உணவை வழங்கு கிறவன் விவசாயி; உடையை வழங்குகிறவன் நெசவுத் தொழிலாளி. முன்னவன், பட்டினியைப் போக்குகிறான்; பின்னவன் மானத்தை மூடுகிறான். இவை இரண்டுமே உலகத்தில் சிறந்த தொழில்கள் என்பது அறிஞர்கள் துணிபு. இந்த இரண்டு தொழில்களிலும் அடிமை நாற்றமே கிடையாது; சுதந்திர மணம் எப்பொழுதும் கமழ்ந்து கொண்டிருக்கிறது.
உழுதுண்டு வாழ்வதுதான் உயர்ந்த வாழ்வு; சுதந்திர வாழ்வு. உழவரையொட்டியே உலகம் இயங்குகிறது. உழுவார் உலகத் தார்க்கு ஆணி அஃது ஆற்றாது, எழுவாரையெல்லாம் பொறுத்து என்பது திருக்குறள். உலகமென்னும் தேருக்கு அச்சாணி போன்ற வர்கள் விவசாயிகள். இவர்களைத்தான், ஒரு ராஜ்யத்தின் உரிமை யுள்ள பிரஜைகள் என்று சொல்லவேண்டும்.
இந்தியா ஒரு விவசாய நாடு என்றும், இந்திய நாகரிகம், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் சொல் கிறார்கள். இதன் கருத்து என்ன? இந்தியர்கள் சுதந்திரமான ஒரு தொழிலை தங்கள் ஜீவனோபாயமாகக் கொண்டிருந்தார்க ளென்பதும், சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட நாகரிகமே இந்தியர்களுடைய நாகரிக மென்பதுமே அர்த்தம். இன்றைய யந்திர நாகரிகத்தின் கீழ், முதலாளி நாகரிகத்தின் கீழ், விவசாயத்திற்கு மதிப்பு இல்லாமல் போயிருக்கலாம்; இதன் சுதந்திரத் தன்மையை யாரும் உணராமலிருக்கலாம். ஆனால் உலகத்தில் நிரந்தரமான சாந்தி நிலவ வேண்டுமானால், விவசாயத்தை யாரும் கௌரவித்தே ஆகவேண்டும். விவசாய நாகரிகந்தான் இயற்கை நாகரிகம். இந்த நாகரிகத்தின் கீழ்தான் மனிதனாகப் பிறந்தவன், மனிதனாக வாழ முடியும். இந்த விவசாய நாகரிகத்தின் பிரதிநிதியாகவே இன்று காந்தி விளங்குகிறார். இதனாலேயே இவரைத் தங்களுடைய பிரதிநிதி என்று இந்திய மகாஜனங்கள் கொண்டாடுகிறார்கள்.
படித்தவர்களென்ற அகந்தை யோடிருக்கிறவர்கள், விவசாய ஜனங்களைப் பார்த்து, பாமர மக்களென்றும், படிப்பு வாசனை யில்லாதவர் களென்றும் அலட்சியமாகப் பேசுகிறார்கள்; அவர்களைக் கை தூக்கிவிடப் போவதாகச் சொல்லிக் கொண்டு முன் வருகிறார்கள். என்ன பேதமை! பாமர ஜனங்களாகிய விவசாயிகள் கள்ளங்கபடில்லாதவர்கள்; விசாலமன முடையவர்கள்; அனுபவ ஞானம் நிறைந்தவர்கள். அவர்கள், தங்களிலே ஒருவராகக் காந்தியைக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் தெரியுமா? அவர்களிலே ஒருவராகத் தம்மை கருதிக் கொண்டிருக்கிறார் காந்தி.
படித்தவர்கள் என்று மேலே சொன்னோமே அவர்கள், காந்தி உபதேசிக்கிற சத்தியம் அஹிம்ஸை முதலியவைகளைப் பற்றி வாய் நிறையப் பேசுகிறார்கள்; கணக்கற்ற நூல்களைப் படிக்கிறார்கள். அவ்வளவு தான். ஆனால் பாமர ஜனங்களென்று அநுதாபத்தோடு அழைக்கப்படுகிற இந்த விவசாயிகளோ, சத்தியத்தையும் அஹிம்ஸையையும் வாழ்ந்து காட்டுகிறார்கள். இவர்களைப் பின்பற்றி நடக்க வேண்டுமென்று, நகரவாசிகளுக்கு, அதாவது படித்தவர்கள் என்று தங்களைக் கருதிக் கொண்டிருக்கிறவர்களுக்கு, காந்தி உபதேசம் செய்கிறார்:
இளைஞர்கள், நகரவாசத்தைவிட கிராம வாசத்தையே தங்கள் வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்ள வேண்டும். இந்தியர் களாகிய நாம் கிராம நாகரிகத்தின் வார்சுதாரர்கள். நமது நாட்டின் விதீரணம், அதிக ஜனத் தொகை, சீதோஷ்ண திதி முதலிய நிலைமைகள் யாவும் சேர்ந்து நம்மைக் கிராம நாகரிகத்திற்கே தகுதியுடையவர்களாக்கி யிருக்கின்றன. இந்த நாகரிகத்தில் சில குறைபாடுகள் இருக்கின்றனவென்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இவைகளைக் களைய நாம் முயல வேண்டுமே தவிர, இந்த நாகரிகத்தையே அடியோடு தவிர, இந்த நாகரிகத்தையே அடியோடு அப்புறப்படுத்தி விடுவதென்பது அசாத்தியமான காரியம்.
இன்னொரு விஷயம். நாம் யாரை கைதூக்கிவிட வேண்டு மென்று ஆசைப்படுகிறோமோ அவர்களை, அவர்களுடைய நிலைமையிலிருந்தே அணுக வேண்டும். உள்ளத்திலும் சரி, உடை யிலும் சரி, அப்பொழுதே அவர்கள் நம் வயப்படுவார்கள்; நாம் சொன்னதைக் கேட்பார்கள். அவர்களை நாம் முன்னேற்ற மார்க்கத் தில் அழைத்துச் செல்ல முடியும். காந்தி, செல்வாக்குப் பெற்றிருப் பதன் ரகசியம் என்னவென்றால் இவர், ஏழை நெஞ்சோடு ஏழைகளை அணுகுகிறார். விவசாயிகளுக்கு இவர் ஒரு விவசாயி; தொழிலாளர்களுக்கு ஒரு தொழிலாளி. அவர்களுடைய கல்மஷமற்ற மனமும், காந்தியின் அன்பு நிறைந்த உள்ளமும் ஒன்றுகூடிப் பேசுகின்றன. இவரை, அந்த விவசாயிகளும் தொழிலாளிகளும் நம்புகிறார்கள்; இவர் காட்டுகிற வழியைப் பின்பற்றிச் செல்லச் சித்தமா யிருக்கிறார்கள்.
விவசாயத்தையும் நெசவுத் தொழிலையும் இந்தியர்களாகிய நாம் புறக்கணித்து விடுவோமானால் இந்திய ஜாதியே அழிந்து போய்விடும் என்பது காந்தியின் கருத்து. வேத காலத்திலிருந்து இந்தியர்கள் இந்த இரண்டு தொழில்களையும் அதிகமாகப் போற்றி வந்திருக்கிறார்கள். விவசாயத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் அதனைப் பாதுகாத்து வருவது அரசனுடைய முக்கியமான கடமைகளில் ஒன்று என சாணக்கியன் தனது அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிடுகிறான். இப்படிப் பரம்பரையாக வந்து கொண்டிருக்கிற இந்த ஜீவனோபாயத்தை நாம் அலட்சியப்படுத்தி விட்டோமானால் நம்முடைய நாகரிகத்தையே நாம் அலட்சியப் படுத்தியவர்களாவோம். அது, நம்மையே நாம் அலட்சியப்படுத்திக் கொண்டதாகுமல்லவா? தன் மதிப்பு இழந்தவன், உலகத்தில் மதிப்புடன் வாழ முடியாதென்பது வெள்ளிடை மலை. இதையே காந்தி பல சமயங்களிலும் வற்புறுத்திக் காட்டுகிறார்.
நூல் நூற்றலும் நெசவு நெய்தலும், விவசாயத்தைப் போலவே நமது நாகரிகத்தின் முதற் குழந்தை. இதனாலேயே காந்தி, விவசாயத்தையும் நெசவையும் ஒன்றோடொன்று ஐக்கியப்பட்டிருக்கிற இரட்டைத் தொழில்கள் என்று குறிப்பிடுகிறார். முற் காலத்தில், அந்நிய ஆதிக்கம் நமது நாட்டில் ஊர்ஜிதமாவதற்கு முன்னர், ஒவ்வொரு வீட்டிலும் கைராட்டினம் இருந்து கொண் டிருந்தது. பெண்கள் நூற்பார்கள்; ஆண்கள் நெய்வார்கள்.
அது மட்டுமல்லாமல், கைராட்டினமானது, மனதைத் தூய்மைப் படுத்துவதற்கும் ஒரு முகப்படுத்துவதற்கும் ஒரு சிறந்த சாதனம் என்று காந்தி அடிக்கடி வற்புறுத்தி வருவதைக் கேட்டுச் சில இளைஞர்களுக்குச் சலிப்புக் கூடத் தட்டியிருக்கலாம். ஆனால் இவர், அதன் மூலமாகக் கடவுளையும் காண முடியும் என்ற உறுதியோடு பேசுகிறார்; உலகத்திற்கு உயர்வு அளிக்கப் போவது இந்தக் கைராட்டினந்தான் என்று கூறுகிறார். மகா யுத்தத்திற்குப் பிறகு உலகம் சலித்துப் போயிருக்கிறது. இன்றைய தினம் இந்தியா வுக்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருக்கிற இந்தக் கைராட்டினம், நாளைய தினம் உலகத்திற்கே ஆறுதலையளிக்க கூடும். ஏனென்றால் இஃது அதிகமான பேருக்கு அதிகமான நன்மையைச் செய்வ தென்பதில்லாமல், எல்லாருக்கும் அதிகமான நன்மையைச் செய்யக் கூடியதாயிருக்கிறது…..பிரகலாதன் எப்படி ராமனை எங்குமே பார்த்தானோ, துளசி தாஸர் எப்படி கிருஷ்ண விக்ரகத்தில் கூட ராமனையே பார்த்தாரோ, அப்படியே சர்க்காவின் தத்துவங்களை அறியக் கூடிய வழியிலேயே உங்கள் படிப்பெல்லாம் செல்லட்டும் என்று மாணக்கர்களுக்கு ஒரு சமயம் உபதேசித்திருக்கிறார்.
இலங்கை இளைஞர்களுக்குச் செய்த ஒரு பிரசங்கத்தில், கைராட்டினத்தில் கடவுளின் திருக்கரம் வேலை செய்வதை நான் காண்கின்றேன். ஏனென்றால் மனிதவர்க்கத்திலே மிக மிகச் சாதாரணமாயுள்ளவர்களுடைய தேவைகளையும் இந்தக் கை ராட்டினம் பூர்த்தி செய்விக்கிறது. இதனாலேயே எப்பொழுதும் இதில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். இதனைப் பிரார்த் திக்கிறேன்; இதனைப் பற்றி எங்கும் பேசுகிறேன் என்று கூறுகிறார்.
கடவுள் நெறியில் கைகாட்டி அழைத்துச் செல்லும் கருவியாகக் கைராட்டினம் இருக்கிறதென்று சொல்லும் விஷயத்தில் காந்தியே முதல்வரல்ல. இவருக்கு முன்னாடியே விவேகானந்தர், இந்தக் கைராட்டினத்தைப் பற்றி என்ன கூறியிருக்கிறார் என்பதைக் கேளுங்கள்: கைராட்டினம் சுழற்றும் கிராமப் பெண் என்ன சொல்கிறாள்: என்னிடத்தில், கடவுள் வேறு நான் வேறு என்ற துவைத பாவனையில் பேசாதீர்கள். ஏனென்றால் நான் சுழற்றிக் கொண்டிருக்கிற இந்தக் கைராட்டினம், ஸோஹம், ஸோஹம், அதாவது அவனே நான், அவனே நான் என்று சொல்லிக்கொண்டே யிருக்கிறது. இந்த யந்திரங்கள், இந்த விஞ்ஞான சாதிரங்கள் முதலியவற்றினால் என்ன பிரயோஜனம்? இவைகளினால் அறிவு பரவுகிறதே அஃதொன்றுதான். ஜனங்களுடைய தேவையை இன்னும் நீங்கள் பூர்த்தி செய்யவில்லை. அதற்குப் பதிலாக அந்தத் தேவைப் பிரச்னையை இன்னும் அதிகமாக்கி விட்டீர்கள். யந்திரங் களினால் வறுமை தீரவே தீராது. அதற்கு மாறாக மனிதர்கள், அந்த யந்திரத்தின் காரணமாக, இன்னும் அதிகமாகப் போராடவே வேண்டியிருக் கிறது. போட்டி அதிகமாகிறது. ஒரு பொருள், எந்த அளவுக்குக் கடவுளைப் பிரத்தியட்சப் படுத்திக் காட்டுகிறதோ அந்த அளவைக் கொண்டே அதன் மதிப்பை நிர்ணயிக்க வேண்டும்.
எனவே, மனிதனுடைய புற வாழ்வு செம்மையுற நடைபெறுவதற்கு விவசாயமும், அகவாழ்வு பண்புற அமைவதற்கு நூற்றலும் நெசவும் துணை செய்கின்றன. இதனாலேயே இவையிரண்டையும் நாகரிகச் சின்னங்களாகக் கொண்டார்கள் நமது முன்னோர்கள். காந்தி, நமது நாகரிகத்தின் பிரதிநிதி. இதனாலேயே மேற்சொன்ன இரண்டையும், அதாவது விவசாயத்தையும் நூல் நூற்றலையும், அதிகமாக வற்புறுத்துகிறார். தம்மை ஒரு விவசாயி என்றும் நெசவாளி என்றும் சொல்லிக் கொள்கிறார். இந்திய மகாஜனங்கள் இவரைப் போற்றிப் பின்பற்றுவதில் என்ன ஆச்சரியம்?
உலகத்திலுள்ள சர்வ மகா ஜனங்களும், காந்தியை, தங்களிலே ஒருவராக, தங்களுக்கு வழி காட்டும் நாயகராகக் கொண்டாடுவதன் ரகசியமும், இவர், தம்மை ஒரு விவசாயி என்றும் தொழிலாளி என்றும் சொல்லிக்கொள்வது தான். எப்படியென்றால், உலகத்தில் பெரும்பான்மை யோர் விவசாயிகளும் தொழிலாளிகளுமாவர். இவர்கள், உழைத்துப் பிழைக்கிறவர்கள்; அற்ப சொற்பமான வருமானத்தைக் கொண்டு அன்றாட ஜீவனத்தை நடத்துகிறவர்கள். இவர்களுடைய சுக துக்கங்களை யார் தங்களுடைய சுக துக்கங்களாகக் கருதுகிறார்களோ அவர்களையே இவர்கள் தங்கள் தெய்வமாகப் போற்றுகிறார்கள். தங்களால் எட்டிப்பிடிக்க முடியாத தெய்வத்தை இவர்கள் எட்டவிருந்து பார்த்து விட்டு, தங்களோடு உறவாடுகிற, தங்களுடைய உணர்ச்சிகளிலே கலக்கிறவர்கள் யாரோ அவர்களையே இவர்கள் பின்பற்றுகிறார்கள். இந்த மனப்பான்மையிலே இருக்கும் இவர்கள், காந்தியை, அவருடைய உடையினாலும், உணவு கொள்ளுதல் முதலிய பழக்க வழக்கங் களினாலும் தம்மிலே ஒருவராகக் கருதிக்கொண்டு விடுகிறார்கள். காந்தி, வட்டமேஜை மகாநாட்டை முன்னிட்டு 1931ஆம் வருஷம் லண்டன் சென்றிருந்த காலத்தில், ஏழை மக்கள் வசிக்கும் கிழக்குப் பகுதியிலேயே தங்கியிருந்தார். அங்கு வசித்தவர்கள் அத்தனை பேரும் தங்களிலே ஒருவர் வந்திருப்பதாக உணர்ந்தார்கள். அவர்கள் மத்தியில் காந்தியும் மனோ நிம்மதியுடன் இருந்தார்.
உலகத்திலே கீழான வகுப்பு என்று ஒரு வகுப்பு இருக்கு மானால் அதில் நான் ஒருவன்; குற்றவாளி என்று மனிதர்கள் புறக்கணிக்கப் படுவார்களானால் அந்தக் குற்றவாளிகளில் நான் ஒருவன்; சிறையில் ஓர் ஆத்மா இருக்கிறவரையில் நான் சுதந்திர புருஷனல்ல என்று மேனாட்டு அறிஞன் ஒருவன் கூறுகிறான். காந்தி, இந்த வாசகத்தை வாழ்ந்து காட்டுகிறார்.



