காந்தியும் விவேகானந்தரும் வெ. சாமிநாத சர்மா

இளமையில் இருவரும்


விவேகானந்தர், ஒரு ஞானவீரர்; காந்தி, ஒரு கர்மயோகி. அவர், காட்டுத் தீ; இவர், பொறிகிளம்பாத அனற் பிழம்பு. அவர், கோடைகாலத்து இடி; இவர், கார்காலத்து மழை. அவர், கர்ஜிக்கும் சிங்கம்; இவர், கூவும் குயில். அவர், பேச்சிலே, பார்வையிலே, நடை யிலே எல்லாவற்றிலுமே க்ஷத்திரியர்; இவர், கருத்திலே, பேச்சிலே, செயலிலே எல்லாவற்றிலுமே அந்தணர். அவர், கர்மத்திலே அகர் மத்தைக் கண்டவர்; இவர், அகர்மத்திலே கர்மத்தைக் கண்டவர்; அவர், துறப்பதற்காகவே பிறந்தார்; இவர், இல்லறத்திலிருந்து கொண்டே துறவியானார்.

மேலே சொன்ன இந்தத் தன்மைகளெல்லாம், இரண்டு பேருடைய இளம்பிராயத்திலேயே துளிர் விட ஆரம்பித்தன. இதனைப் பற்றிச் சிறிது ஆராய்வோம்.

ஆயிரம் வருஷத்திலே வாழவேண்டிய வாழ்க்கையைச் சுமார் நாற்பது வருஷத்துக்குள்ளேயே வாழ்ந்துவிட்டுப் போய்விட்டார் விவேகானந்தர் என்று கூறினார் ஓர் அறிஞர். இது மிகவும் உண்மை. விவேகானந்தருடைய வாழ்க்கையைப் பாலியத்திலிருந்து நாம் கவனித்துப் பார்த்தோமானால், ஒரு துடி துடிப்பு, ஒரு வேகம், எதையும் சீக்கிரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்ற ஓர் ஆத்திரம் இவைகளை யெல்லாம் காண்கிறோம். இவர், அடிக்கடி தமது சிஷ்யர்களிடம் நான் நாற்பது வரையில் இருக்க மாட்டேன் என்று சொல்வார். அதனாலேயோ என்னவோ, அந்த வயதுக்குள் தாம் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து முடித்துவிட வேண்டும் என்ற ஓர் ஆவல் இவரிடத்தில் பூரண மாகக் குடிகொண்டிருந்தது. கிழிந்து போன சட்டையைக் கழற்றி எறிவது போல், இந்த உடலை விட்டெறிந்துவிட்டு நான் போகலாம். ஆனால் வேலை செய்து கொண்டிருப்பதை யென்னவோ நிறுத்த மாட்டேன் என்று ஒரு சமயம் இவர் கூறினார். உடலைவிட்டு உயிர் பிரிந்த பிறகு கூட சேவை செய்து கொண்டிருப்பேன் என்று உறுதியோடு சொன்ன ஒரு மகானைப் பெற்றது நம் தாய் நாடு! சேவையிலே எவ்வளவு ஆர்வம்!

விவேகானந்தர், செல்வமான குடும்பத்திலே பிறந்தார். சீராகவே வளர்க்கப்பட்டார். ஆனால் குழந்தைப் பருவத்திலிருந்தே மகாதுடுக்கு. சதா சேஷ்டை. பிடிவாதம் பிடித்து எப்படியாவது காரியத்தைச் சாதித்துக் கொள்வார். தான் நினைத்த காரியம் கைகூடவில்லையென்றால் கூவென்று உரக்கக் கத்துவார். இவரைச் சமாதானப் படுத்துவதென்பது குடும்பத்தினருக்கு ஒரு பெரிய காரியம்.

மூன்றாவது வயது. குழந்தை செய்கிற விஷமமோ சகிக்க முடியவில்லை. பார்த்தாள் தாயார். மிரட்டினாள்; அடித்தாள்; ஒன்றும் பயனில்லை. கடைசியில் ஒரு நாள், தன்னையும் மிஞ்சிப் போய், குழந்தையைப் பரபரவென்று இழுத்துக் கொண்டு போய் குழாயின் கீழ் உட்கார வைத்துக் குழாயைத் திறந்து விட்டாள். தண்ணீர் தலையில் வேகமாக விழவே, நரேந்திரன் சேஷ்டை அடங்கியது. சரியான பரிகாரம் கண்டுபிடித்து விட்டதாகத் தாயார் திருப்தி கொண்டாள். அது முதற்கொண்டு நரேந்திரன் எப்பொழுதாவது தொந்திரவு செய்ய ஆரம்பித்தால் உடனே குழாயின் கீழே கொண்டு போய் உட்காரவைத்து விடுவாள்.

புவனேசுவரி மாதா, தவங்கிடந்து பெற்றாள் இந்தக் குழந்தையை. ஆனால் ஒரு சமயம், குழந்தையின் உபத்திரவம் பொறுக்க முடியாமல் நான் ஒரு குழந்தையைக் கொடுத்தருளுமாறு சிவபிரானைப் பிரார்த்தனை செய்தேன்; ஆனால் அவர் தமது பூத கணங்களில் ஒன்றை என்னிடம் அனுப்பிவிட்டார் என்று கூறினாள். ஒரு தாய் இப்படி வாய்விட்டுச் சொல்லியிருக்க வேண்டு மானால் அந்தக் குழந்தை எவ்வளவு சேஷ்டை செய்திருக்கும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ளலா மல்லவா?

தாயார், குழந்தையைச் சாந்தப்படுத்துவதற்கு, குழாயின் கீழ் உட்கார வைப்பதைத் தவிர, வேறோர் உபாயத்தையும் கையாண்டாள். இப்படி எல்லாம் நீ உபத்திரவம் பண்ணுவாயானால், ஒழுங்காக நடந்துகொள்ளா விட்டால், சிவபெருமான் உன்னைக் கைலாசத்திற்கு அழைத்துக் கொள்ள மாட்டார் என்று பயமுறுத்துவாள். உடனே சாதுவாகிவிடும் குழந்தை. “ஐயோ! என்ன வாக்கு! தாயே! உனது பயமுறுத்தல் பேச்சிலே ஏன் இப்படி உன்னையறி யாமல் ஒரு மரண அழைப்பைக் கொண்டு புகுத்திவிட்டாய்?” இப்பொழுது எங்கள் விவேகானந்தர் இருந்திருந்தால், அவருடைய எண்பதாவது வயதுக் கொண்டாட்டத்தை எவ்வளவு பெருமையோடு கொண்டாடியிருப்போம்!

மகான்களென்போர், சர்வ ஜீவராசிகளிடத்திலும் தயை பூண்டவர்கள். இந்தத் தயாவிதையானது அவர்களுடைய சிறு பிராயத்திலேயே ஊன்றி விடுகிறது. குழந்தை நரேந்திரனின் பாலிய சினேகிதர்கள் யாரார் தெரியுமா? ஒரு குரங்கு, ஓர் ஆடு, ஒரு மயில், இரண்டு மூன்று வெள்ளைச் சுண்டெலிகள், சில புறாக்கள் முதலியன. இவையெல்லாவற்றிற்கும் மேலாக, வீட்டிலே வளர்ந்த பசு. அந்தப் பசுவை நரேந்திரர், தம் சகோதரிகளுடன் சேர்ந்து குளிப்பாட்டுவார்; புஷ்பங்களால் அலங்கரிப்பார். அதற்கும், மற்றப் பிராணி சினேகிதர்களுக்கும் தம் கையாலேயே ஆகாரம் கொடுப்பார். இந்தப் பிராணி தயை விவேகானந்தருக்குக் கடைசி காலம் வரையில் இருந்தது.

நரேந்திரருடைய துறவு மனப்பான்மையைப் பாருங்கள். விசுவநாத தத்தருடைய வீட்டுக்கு அடிக்கடி சாதுக்கள் வருவது வழக்கம். அந்தச் சாதுக்களைப் பார்த்தால் இவருக்குத் தனியான ஓர் ஆனந்தம். அவர்களுக்கு எதையும் கொடுத்துவிடுவார். இதனால் குடும்பத்தினர்பாடு தர்ம சங்கடமாகி விடும். ஒருநாள், பட்டும் சரிகையும் கலந்த ஒரு புதிய துண்டை இவர் இடுப்பிலே கட்டி விட்டார்கள். அதைக் கட்டிக்கொண்ட சிறிது நேரத்திற்குள், தெருவாயிலில் நாராயண ஹரி, நாராயண ஹரி என்ற சப்தம் கேட்டது. நரேந்திரர் உடனே தெருப்பக்கம் ஓடினார். ஒரு சந்நியாசி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். அந்தச் சந்நியாசி, எனக்குக் கட்டிக்கொள்ள ஒரு துணி கொடுப்பாயா? என்று கேட்டார். நரேந்திரன் அப்பொழுது ஒரு குழந்தையாக இருக்கவில்லை; கொடையாளியாக விளங்கினார். உடனே தம் இடுப்பிலிருந்த புதுத்துணியை அவிழ்த்து அவர் கையிலே கொடுத்து விட்டார்! ஆச்சரியமடைந்த அந்தச் சந்நியாசி, அதை, தன் தலைப்பாகையாகச் சுற்றிக்கொண்டு போய்விட்டார்!

நரேந்திரருக்கு, சாதுவென்றும், சந்நியாசியென்றும் சொல்லிக் கொண்டு யார் வந்தாலும் அவர்களிடத்திலே ஒரு விசேஷ பக்தி, சிறு வயதிலிருந்தே ஏற்பட்டிருந்தது. விசுவநாத தத்தர், தம் வீட்டுக்குத் துறவியாக யார் வந்தாலும் அவரே நேரில் உபசரிப்பார். இதனை, குழந்தை நரேந்திரன் கவனித்துக் கொண்டிருப்பார். பொதுவாகவே, கல்கத்தாவில் தத்தர் குடும்பத்து வீடு என்று சொன்னால் அது துறவிகளின் அடைக்கல தானமாக இருந்தது. இந்த வாசனை, பாலிய நரேந்திரன் மீது வீசாமலிருக்குமா?

எல்லாப் பிள்ளைகளையும் போல் நரேந்திரன், பள்ளிக் கூடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் அங்கே வகுப்பில் ஒரு கண மாவது அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டுமே, கிடையவே கிடையாது; அப்படியே ஒரு சிறிது நேரமாவது நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்க வேண்டுமே, அதுவும் இவரால் முடியவில்லை. எப்பொழுதும் ஒருவித அமைதியற்ற தன்மை, ஒரு துடிதுடிப்பு இவரிடம் இருந்தது.

ஆசிரியர்களிடத்தில் பாடஞ் சொல்லி கொள்கிற விஷயத்தில் தானா கட்டும், ஒன்றைச் சொல்லிக் கொடுத்தால் பத்தைக் கிரகித்துக் கொண்டு விடுவார். உபாத்தியாயர் ஒருமுறை உரக்கப் படித்தால் போதும். அதை உடனே திருப்பி ஒப்புவிப்பார். ஞாபக சக்தி அவ்வளவு அதிகம். ஏழாவது வயதில் ராமாயணம் பாரதம் முதலிய காவியங்களிலிருந்து அநேக சுலோகங்களை எடுத்துச் சொல்லும் சக்தி இவரிடம் இருந்தது. இவை யெல்லாம், இவருடைய பிற்கால வாழ்வின் சூசகங்களாயிருந்தன.

இனி, காந்தியின் பாலிய பருவத்திற்குள் பிரவேசித்துச் சிறிது பார்ப்போம். விவேகானந்தர், செல்வமுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்ததைப் போல் இவர் – மோகனதா கரம்சந்த் காந்தி – செல்வாக்குள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தார். இவர் பாட்டனார் சத்திய சீலர். போர்பந்தர் சமதானத்தில் மந்திரியாயிருந்தார். பின்னர், சில பிணக்குகள் காரணமாக அங்கிருந்து விலகி வந்து ஜுனகாட் நவாப்பினிடம் அடைக்கலம் புகுந்தார். நவாப்புக்கு இடது கையால் சலாம் செய்தார். அவமரியாதை செய்ததாக அங்குள்ளவர்கள் முணுமுணுத்தார்கள். அவமரியாதை ஒன்று மில்லை. வலது கையை போர்பந்தர் மன்னருக்கு ஏற்கெனவே கொடுத்து விட்டிருக்கிற படியால் இடது கையால் சலாம் செய்தேன் என்று அந்த உத்தமர் கூறினார். அவர் பெயர் உத்தம சந்த் காந்தி.

அவருடைய மகன்தான் நமது காந்தியின் தகப்பனார். செல்வத்தைக் குவித்து வைக்க வேண்டுமென்ற ஆசை யில்லாதவர். அதைப்போல அதிகமான படிப்பும் இல்லாதவர். ஆனால் அனுபவம் நிறைந்தவர். அப்படியே அற நெறியில் வாழ வேண்டு மென்ற ஆசையுடையவர். மதத்தைப் பற்றிய நுணுக்கமான ஆராய்ச்சிகளை அறியமாட்டார். ஆனால் மதப் பற்று நிரம்பியவர்.

இந்த மாதிரியான பரம்பரைச் செல்வத்துடன் பிறந்த மோகனதாஸ் காந்தி, சிறுவயதில் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப் பட்டார். ஆனால் படிப்பிலே அவ்வளவு சூடிகையாக இல்லை. கொஞ்சம் நிதானமென்றே சொல்ல வேண்டும். பெருக்கல் வாய்ப்பாட்டை மனப் பாடஞ் செய்வதே இவருக்குப் பெரிய சிரமமாயிருந்தது. தவிர ஞாபக சக்தியும் குறைவு.

வயதாகி மேல் வகுப்புகளில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் கூட, படிப்பிலோ, விளையாட்டிலோ எவ்வித சுறுசுறுப்பும் காட்டவில்லை. கூடப் படிக்கிற மாணாக்கர்களோடு கூடிப் பழக மாட்டார். நிரம்ப சங்கோஜம், புஸ்தகமுண்டு, தானுண்டு என்ற அளவோடுதான் இருப்பார். சிறு பிராயத்திலிருந்தே பொய் சொல்லி அறிய மாட்டார்.

ஒரு சமயம், பள்ளிக்கூடத்துக்கு இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். பிள்ளைகளின் அறிவையும், ஆசிரியர்களின் போதனா சக்தியையும் ஒரே சமயத்தில் சோதிக்க வேண்டியது அவருடைய கடமை யல்லவா? எனவே, சில வார்த்தைகளைச் சொல்லி அவற்றைச் சரியானபடி எழுதுமாறு பிள்ளைகளுக்குக் கூறினார். அதில் ஒரு வார்த்தையை மோகனதாஸ் தவறாக எழுதினார். இதைப் பக்கத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த வகுப்பு ஆசிரியர், அடுத்த பையன் சரியாக எழுதியிருக்கிறான் பார்; அதைப் பார்த்துச் சரியாக எழுது என்று இவரிடம் சைகையினால் கூறினார். அப்படிச் செய்ய இவர் மனம் ஒப்பவில்லை அந்தச் சிறு வயதிலேயே, பிள்ளைகள், காபி அடிக்காமல் பார்த்துக் கொள்வதற்காக ஆசிரியர் இருக்கிறாரே தவிர, காபி செய்யுமாறு தூண்டுவதற்காக அல்லவே என்று இவருடைய மனச்சாட்சி இவரைக் கேட்டுக் கொண்டே இருந்தது.

மோகனதாஸின் இளமையில் இரண்டு நாடகக் காட்சிகளைப் பார்த்தார். இவை, இவருடைய வாழ்க்கை நாடகத்தின் பீடிகை யென்று சொல்லலாம். ஒன்று, சிரவணன் என்ற ஒரு சிறுவனுடைய கதை. இவன், வயதான, கண்ணில்லாத தனது தாய் தந்தையரைக் காவடியில் தூக்கிக் கொண்டு காசியாத்திரை போகிறான். வழியில், எதிர்பாராத விதமாக மரணத்தை யடைகிறான். இதைக் கண்டு அந்தப் பெற்றோர்கள் புலம்பிப் புலம்பி புத்திர சோகத்தினால் இறந்து போகிறார்கள். மற்றொன்று, அரிச்சந்திர நாடகம். இவ்விரண்டும் மோகனதாஸின் மனதில் நன்றாக பதிந்து விட்டன. ஒவ்வொருவரும் ஏன் சிரவணனைப் போல் பெரியோர் களிடம் பக்தி செலுத்தக் கூடாது? அரிச்சந்திரனைப் போல் சத்திய சந்தனாக இருக்கக் கூடாது ? என்று அடிக்கடி தம்மையே கேட்டுக் கொள்வார். அரிச்சந்திரனைப் போல், சத்தியத்தைக் காப்பாற்றும் பொருட்டு எல்லாவித கஷ்டங்களையும் அனுபவிக்கத் தயாரா யிருக்க வேண்டும் என்று அப்பொழுதே இவருடைய களங்கமற்ற பசிய உள்ளம் சங்கற்பித்துக் கொண்டது போலும்!

காந்தி, எப்பொழுதுமே வெறும் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற வரல்லர்; சீலத்திற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறவர். என்னுடைய அறிவுக்கு நான் அதிகமாக மதிப்புக் கொடுத்த தில்லை. எனக்கு, பரிசோ, உபகாரச் சம்பளமோ கிடைத்தால் நான் ஆச்சரியமே அடைவேன். ஆனால் என்னுடைய சீலத்தை மட்டும் நான் மிகுந்த ஜாக்கிரதையுடன் காப்பாற்றி வந்தேன். என்னிடத்தில் ஏதேனும் ஒரு சிறிது களங்கம் இருப்பதாகத் தெரிந்தால் கூட நான் அழுது விடுவேன். இது காந்தியின் சுய வாக்கு.

விவேகானந்தரும் காந்தியும், தங்கள் தாய்மார்களைப் பொறுத்த மட்டில் மகா பாக்கியசாலிகள். தன் மகனைச் சான்றோன் எனக் கேட்க இரு தாய்மார்களும் ஆவல் கொண்டார்கள். அதன்படியே தங்கள் புத்திரர் களை வளர்த்து வந்தார்கள். சிவாஜி மகாராஜனுக்கு எப்படி ஜீஜாபாய் தாயாக வாய்த்தாளோ அப்படியே விவேகானந்தருக்கு புவனேசுவரியும், காந்திக்கு புத்ரி பாயும் தாய்மார்களாக வாய்த்தார்கள். தாயின் மடியே இவர் களுக்குப் பாடசாலை. அவர்கள் சொல்லிக் கொடுத்த ராமாயண பாரதக் கதைகளே மந்திரோபதேசம். இவ்விருவரும், தங்கள் பிற்கால வாழ்க்கையில், பெண்மையிலே தெய்வத் தன்மையைக் கண்டார்கள். இதற்குக் காரணம் இவர்களுடைய தாய்மார்களின் நல்லுபதேசந்தான். புவனேசுவரி மாதா, தமது மகனுக்கு உபதேசம் செய்வாள்: மகனே! மரணம் வந்தெய்தினாலும் சரி, உண்மையாக நடந்துகொள். ஒழுக்கமுடையவனாயிரு. எப்பொழுதும் பெருந் தன்மையோடு நடந்துகொள். மற்றவர்களுடைய உணர்ச்சிகளை மதித்து நட. பிறருடைய உரிமைகளில் தலையிடாதே. எல்லோரிடத்திலும் கருணையோடு நடந்து கொள். ஆனால் உறுதி யோடிரு. சந்தர்ப்பம் என்று சொல்லிக் கொண்டு உறுதியினின்று பிறழாதே, அசைந்து கொடாதே.

பிற்காலத்தில் இருவரும் தியாக மூர்த்திகளாக விளங்கியதற்கு இவர்களுடைய தாய்மார்களின் தூய வாழ்க்கையே காரணம். இருவரும் தம் தம் தாய்மாரிடத்தில் அத்தியந்த விசுவாசம் வைத் திருந்தார்கள். எவனொருவன் பெற்ற தாயை பக்தி சிரத்தையோடு போற்றாமலிருக் கிறானோ அவன் பெரிய மனிதனாகான் என்பது விவேகானந்தரின் வாக்கு.

தங்கள் தாய்மார்களுடைய மனதை எந்த விதத்திலும் புண்படுத்தக் கூடாதென்ற ஒரு நோக்கம் இருவருக்கும் இருந்தது. காந்தி, லண்டனுக்கு பாரிஸ்டராகப் பயிற்சி பெறச் செல்வதற்கு முன்னர், புலாலுண்ணேன், மதுபானம் செய்யேன், அந்நிய ஸ்திரீ களைக் கண்ணெடுத்துப் பாரேன் என்று தாயாரிடம் வாக்குக் கொடுத்து விட்டுச் சென்றார். பாரிஸ்டர் பரீட்சையில் தேறி விட்டுத் திரும்பி வந்தார். பம்பாய் துறைமுகம் வந்திறங்கியவுடனே, விரைவில் தாயாரைக் காண வேண்டுமென்ற ஆவல் இவருக்கு அதிகமாக இருந்தது, ஏன் தெரியுமா? கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டேன் என்று தாயாரிடம் பெருமையோடு சொல்வதற்காக. ஆனால் புத்திரிபாய், இவர் வருகைக்கு முன்னரே இறைவனடி சேர்ந்து விட்டாள். அந்தோ! காந்தியின் ஆவல் வெள்ளம், துக்கக் கண்ணீராக வடிந்தது.

புவனேசுவரி மாதாவும் புத்திரிபாயும் தாங்கள் நல்ல பிள்ளை களைப் பெற்றதற்காக மகிழ்ச்சியடையலாம்; பெருமை கொள்ளலாம். மகிழ்ச்சியடையவும் பெருமை கொள்ளவும் அவர்களுக்குப் பூரண உரிமை யுண்டு; தகுதியுண்டு. ஆனால் அவர்கள், உண்மையில், பாரத மாதாவின் தவத்தினையே இரண்டு திருவுருவங்களாகப் பெற்றெடுத்தார்கள் என்று சொல்ல வேண்டும். அவ்விரு அன்னைமாரும் வாழ்க!

விவேகானந்தர், இளமையிலிருந்தே உடல் உறுதியுடையவராக இருந்தார். உடற் பயிற்சிப் போட்டிகளில் அநேக பரிசுகளும் பெற்றிருக்கிறார். தமது வீட்டிலேயே உடற் பயிற்சிசாலை யொன்றை அமைத்து, அதில் தமது தோழர்கள் எல்லோருக்கும் அநேக விளையாட்டுகளைக் கற்றுக் கொடுத்தார். சிலம்பம் பயிலுதல், படகோட்டுதல், மல்யுத்தம் செய்தல் முதலிய எல்லா வித்தைகளும் இவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தன.

காந்தி, இளமையில் இதற்கு நேர் மாறாகவே நடந்து கொண்டார். பள்ளிக்கூடத்தில் படித்த போது, உடற் பயிற்சி வகுப்புக்குப் போவது இவருக்கு வேம்பாகவே இருந்தது. ஒரு சமயம் இந்த வகுப்புக்குப் போகாமலிருந்ததற்காக ஓர் அணாவோ இரண்டணாவோ அபராதம் கூடச் செலுத்தியிருக்கிறார்!

இங்ஙனம் இருவரும் இளமையில் உடலோம்புகின்ற முறையில் மாறுபட்டவர்களாக நடந்து வந்தபோதிலும், பிற்காலத்தில், இருவரும், எல்லாவித கஷ்டங்களையும் சகித்துக் கொள்ளக் கூடிய உடல் உரம் பெற்றவர்களாகவே இருந்தார்கள். ஓயாமல் உழைப்பதற்கும், அடிக்கடி சுற்றுப் பிரயாணம் செய்வதற்கும் இருவருடைய தேகமும் இடங் கொடுத்தன. காந்தி, லண்டனுக்கு வட்டமேஜை மகா நாட்டை முன்னிட்டுச் சென்ற போது, குளிரிலும் பனியிலும் கூட, தமது இயற்கையான உடை யுடன்தான் இருந்தாரே தவிர, வேறு அதிகமான உடைகளை உபயோகிக்கவில்லை. இதற்கு இவருடைய மனோசக்தி காரணமென்று சிலர் கூறலாம். இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஆனால், வாழ்க்கையில் எவனொருவன் புலனடக்கம் பெற்றிருக்கிறானோ, தனது அன்றாட வேலைகளைச் செய்வதில் ஒருவித ஒழுங்கை அனுசரிக்கிறானோ, உணவு, உடை, தூக்கம் முதலிய விஷயங்களில் மிதமாயிருக்கிறானோ அவனை நோய்கள் சுலபமாக அண்டுவதில்லை. அப்படி அண்டினாலும் அவைகளினால் அவன் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை. அவன், உழைப்பிலே சோர்வு காணமாட்டான். அவன் அறிவிலே ஒரு தெளிவு இருக்கும். விவேகானந்தரும், காந்தியும் தங்களுடைய வாழ்க்கையில் ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடித்து வந்தார்களாதலி னாலேயே அவர்களால் அதிகமான வேலையைச் செய்ய அவர் களுடைய உடல் இடங்கொடுத்தது. சுருக்கமாகச் சொல்ல வேண்டு மானால், இருவரும், தங்கள் உடலைத் தங்களுக்கு அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டிருந் தார்களே தவிர, உடலுக்குத் தாங்கள் அடிமையாயிருக்கவில்லை.

விவேகானந்தர், பரம்பரையான வக்கீல் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் வக்கீல் தொழிலை இவர் அறவே வெறுத்து வந்தார். தம் நண்பரொருவருக்குப் பின்வருமாறு புத்திமதி கூறுகிறார்: எனது தகப்பனார் ஒரு வக்கீல்தான். ஆனால் என் அன்புக்குரியவர் யாரும் வக்கீலாவதை நான் விரும்பவில்லை. எனது குருநாதர் வக்கீல் தொழிலுக்கு விரோத மாயிருந்தார். எந்தக் குடும்பத்தில் அதிகமான வக்கீல்கள் இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் நிச்சயம் துக்கத்தை யடையும் என்பது என் நம்பிக்கை. நமது தேசத்தில் இப்பொழுது வக்கீல்கள் நிரம்பியிருக்கிறார்கள்.

காந்தி, மந்திரி பரம்பரையிலே பிறந்தவர். இவர் பாட்டனாரும் தகப்பனாரும் ராஜபக்தர்களாக இருந்து காலங் கழித்து விட்டார்கள். ஆனால் இவர், தம்மை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதிலே திருப்தியடைகிறார். இவருடைய முன்னோர்கள் அரசர்களுக்கு மந்திரிகளா யிருந்தார்கள். இவரோ, தொட்டிலிலே உதைத்து விளையாடும் குழந்தை முதல், முக்காலால் நடந்து செல்லும் முதியோர் வரை எல்லோருக்கும், அவரவர்களுடைய நிலைமையிலிருந்து, வரும் பொருளுரைக்கும் மந்திரியாயிருக்கிறார். எல்லோரும் எல்லா விஷயங்களைப் பற்றியும் இவரிடம் யோசனை கேட்கிறார்கள். உலகத்து ராஜ தந்திரிகள், அரசாங்கத்து மந்திரிகள் ஆகிய எல்லோரும், காந்தி என்ன சொல்கிறாரென்று ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இவருடைய முன்னோர்கள், ஒரு சிறிய பிரதேசத்திற்கு மட்டும் மந்திரிகளா யிருந்தார்கள். இவரோ உலகத்துக்கெல்லாம் மந்திரியாயிருக்கிறார்.

விவேகானந்தர் ஆளப்பிறந்தார். காந்தி தொண்டு செய்யப் பிறந்தார். இருவருடைய பாலிய வாழ்க்கையிலும் இந்த அறிகுறிகள் காணப்பட்டன. விவேகானந்தருடைய முக்கியமான சிறு பிள்ளை விளையாட்டுகளிலே ஒன்று என்னவென்றால், தமது வீட்டு முற்றத்தில், தம்மோடு விளையாட வரும் எல்லாப் பிள்ளைகளையும் ஒன்று கூட்டி வைத்துக் கொள்வார். ஒரு தர்பார் நடக்கும். அதில் விவேகானந்தர் அரசன்; ஓர் உயர்ந்த தானத்தில் கொலு வீற்றிருப்பார். அவருக்கு எதிரே இரு பக்கங்களிலும் ஆதானிகர்கள் இருப்பார்கள். பிரஜைகள் வேறே. யாராவது ஒரு பையன் குற்றவாளியாக விசாரணைக்கு கொண்டு வரப்படுவான். அவனை அரசன் விசாரிப்பார்; தண்டிப்பார். இந்த மாதிரியான விளை யாட்டுகளிலேதான் விவேகானந்தருக்கு அதிகமான விருப்பம். பள்ளிக்கூட மைதானத்திலேயாகட்டும், வேறு எங்கேயாகட்டும், விவேகானந்தர்தான், மற்றப் பிள்ளைகளுக்குத் தலைமை வகித்து அவர்களை நடத்திச் செல்வாரே தவிர, மற்றவர்களைப் பின்பற்றி இவர் செல்லமாட்டார். வீட்டிலே கூட, பெற்றோர்களும் மற்ற உறவினர்களும், இவருடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டே நடப்பார்கள். இவர் பேசுவதும் அதிகார தோரணையிலேயே இருக்கும்.

காந்தியோ, சிறு பிராயத்திலிருந்தே, மற்றவர்களுக்கு எந்த விதத்தில் உதவி செய்யலாம், பெரியோர் மனம் புண்ணாகாமல் எப்படி எப்படி நடந்து கொள்ளலாம் என்ற கருத்துடையவராக இருந்திருக்கிறார். பள்ளிக் கூடத்தில் படிக்கிற போது, உடற்பயிற்சி வகுப்புக்குக்கூட இவர் செல்ல விரும்பவில்லை. அங்குச் சென்று கழிக்கிற நேரத்தை, தகப்பனாருக்குப் பணிவிடை செய்வதில் கழிக்கலாமே யென்று கருதுவார். அப்படியே பணிவிடையும் செய்வார். உடற் பயிற்சி விஷயத்தில் எனக்கு ஏற்பட்டிருந்த அருவருப்புக்குக் காரணம், எனது தகப்பனாருக்குத் தாதி போல் இருந்து சிசுருஷை செய்ய வேண்டுமென்ற அதிகமான ஆவல்தான். பள்ளிக்கூடம் விட்டவுடனே, வேகமாக நேரே வீட்டுக்கு வந்து அவருக்குப் பணிவிடை செய்யத் தொடங்குவேன் என்று இவர் தமது சுய சரித்திரத்தில் கூறுகிறார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *