காந்தியும் விவேகானந்தரும் வெ. சாமிநாத சர்மா

இருவரும் மகான்கள்


தர்மம் குன்றி அதர்மம் ஓங்கி நிற்கின்ற காலத்தில், அந்த அதர்மத்தை வீழ்த்தி தருமத்தை தாபிக்கும் பொருட்டு கடவுள் அவதரிக்கிறார் என்று கீதையைக் குறிப்பிட்டுக் காட்டிப் பெரியோர்கள் நமக்கு உபதேசிக் கிறார்கள். இதன் தாத்பரியம் என்ன? தர்மம் குன்றி விட்டது, அதர்மம் ஓங்கிவிட்டது என்று சொன்னால் அதற்கு அளவுகோல் என்ன? இதனைப் பற்றி நம்மில் அநேகர் சிந்திப்பதே இல்லை. இந்தப் பிரச்னை, நமது அன்றாட வாழ்க்கை யோடு ஒட்டியதன்று, நமது வாழ்க்கைக்குப் புறம் பானது என்று கருதி, இதனை நாம் புறக்கணித்து விடுகிறோம். இப்படிப் புறக் கணித்து வந்ததன் பயன்தான் இப்பொழுது நாமிருக்கும் நிலை: அதுதான் அடிமை வாழ்வு.

மனிதன் பிறக்கிறபோது சுதந்திரமாகவே பிறக்கிறான் என்று பிரெஞ்சு அறிஞனாகிய ரூஸோ என்பவன் இருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னர்தான் சொன்னான். இது, நமது முன்னோர்கள் கண்ட உண்மையின் ஒரு மெல்லிய எதிரொலிதான். மனிதனுடைய ஆத்மா பந்தமற்றது, அப்படி இருப்பதுதான் அத னுடைய இயற்கை நிலையென்று பாரத நாட்டு முனிவர்கள் நமக்கு எத்தனையோ வகைகளில் வலியுறுத்திச் சொல்லிவிட்டுப் போயிருக் கிறார்கள். மனிதன், தனது அறியாமை காரணமாக, இந்த இயற்கை நிலையிலிருந்து இறங்கி விடுவானாகில் அவனை அநேக பந்தங்கள் வந்து சூழ்ந்து கொள்கின்றன. இயற்கைக்கு எஜமானனாயிருப்பது போய், அவன் அதற்கு அடிமையாகி விடுகிறான். இந்த அடிமை நிலையிலே அவனை அநேக துன்பங்கள், துயரங்கள், பிணிகள் முதலிய எல்லாம் வந்து சூழ்ந்து கொள்கின்றன. இவைகளினின்று அவனை விடுதலை செய்ய யாரோ ஒரு மகான் தோன்று கிறான். அந்த மகானிடத்தில் அசாதாரணமான திறமையும் சக்தியும் இருக்கின்றன. அவன் எந்தவித பந்தங்களினாலும் பிணிக்கப்படாமலிருக்கிறான். அப்படி பிணிக்கப்படாமலிருப்பதனால் தான், அவனால் மற்றவர்களைக் கைதூக்கி விட முடிகிறது. தங்களைவிட வலியனாகவும் முன் யோசனையுடையவனாகவும் அந்த மகான் இருப்பதைப் பார்க்கிற ஜனங்கள், அவனிடத்தில் ஒரு தெய்வத்தன்மை குடி கொண்டிருக்கிறதென்று நம்பி, அவனை ஒரு தெய்வாமிசம் என்றும், கடவுளின் அவதாரமென்றும் கொண்டாடுகிறார்கள். ஏனென்றால், எந்தச் சக்திகள், கடவுளிடத்தில் இருப்பதாக அவர்கள் நம்புகிறார் களோ அந்தச் சக்திகளில் ஒரு சிலவேனும் தங்களிடத்தில் இல்லாம லிருப்பதையும், அந்தச் சில சக்திகள் மேற்படி மகானிடத்தில் இருப்பதையும் அவர்கள் பிரத்தியட்ச மாகப் பார்க்கிறார்கள். இதனா லேயே அவனை அவதார புருஷ னென்று கொண்டாடுகிறார்கள்.

கடவுளிடத்திலே சில சக்திகள் இருப்பதாக மனிதன் நினைக்கிறானே, அந்தச் சக்திகள் யாவும் அவனிடத்திலும், பிரதியொரு மனிதனிடத்திலும் இருக்கின்றன. இதை அவன் உணர்வதுதான் இல்லை. தான், பரம்பொருளென்னும் செந்தழலிலிருந்து கிளம்பின ஒரு பொறி என்பதை அறவே மறந்து விடுகிறான். இதற்குக் காரணம், அவன் தனது இயற்கை நிலையை, உணராததுதான்; அந்த நிலையிலிருந்து இழிந்துபட்டதுதான். இயற்கை நிலையை அதாவது பந்தமற்ற வாழ்வை, உணர்கிறவன் யாரோ, உணர்த்தவல்லவன் யாரோ, அவன்தான் மகான்; கடவுளின் அவதார புருஷன். மனிதனுடைய அறிவும் இதயமும், பொருளாதார ஆதிக்கத்திற்கோ, அரசியல் ஆதிக்கத்திற்கோ, சமுதாய ஆதிக்கத்திற்கோ, மத ஆதிக்கத் திற்கோ ஏதோ ஒருவித ஆதிக்கத்திற்குட்பட்டு அடிமையாகிவிடுமே யானால் அதுதான் இருள் படர்ந்த யுகம். அதாவது எங்கே அடிமைத்தனம் நிலவியிருக்கிறதோ அங்கே அறியாமை குடி கொண்டு விடுகிறது. இந்த அஞ்ஞான இருளைப் போக்கவரும் ஞான சூரியனே மகான்.

அடிமைத்தனமும் அறியாமையும் கலந்திருக்கிற கலப்புக்குத் தான் அதர்மம் என்று பெயர். அப்படியானால் தர்மம் என்பது என்ன? இதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமல்லவா? தர்மம் என்பதற்கு அறிஞர் ராதாகிருஷ்ணன் பின்வருமாறு ஓர் அழகான வியாக்கியானம் செய்கிறார்: தனிப்பட்ட ஒரு வியக்தியாகவும், சமுதாய அங்கத்தினனாகவும் பிரதியொரு மனிதனையும் பண்படுத்திக் கொடுக்கிற லட்சியங்கள், சக்திகள், நோக்கங்கள், தாபனங்கள் முதலிய யாவற்றிற்கும் பிரதிநிதியாக இருப்பது எதுவோ, அது தான் தர்மம். இதனுடைய சாரம் என்னவென்றால், மனிதனுடைய அற வாழ்க்கையையும் அரசியல் வாழ்க்கையையும் ஒழுங்குபடுத்திக் கொடுப்பது எதுவோ அதுதான் தர்மம். இந்த இரண்டுக்கும், அதாவது அற வாழ்க்கைக்கும் அரசியல் வாழ்க்கைக்கும், என்று முரண்பாடு ஏற்படுகிறதோ அன்றே, தர்மம் குலைந்து அதர்மம் மேலோங்கி விட்டதென்பது அர்த்தம். முரண் பட்ட இந்த நிலையை மாற்றி ஒழுங்குபடுத்தவே அவ்வப்பொழுது மகான்கள் தோன்றுகிறார்கள்.

காந்தியும் விவேகானந்தரும் இந்த மகான் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இந்த மகான்களின் பரம்பரையானது இந்திய நாகரிகத்தின் அடிப்படையான அமிசத்தை மட்டும் எப்பொழுதும் விடாமல் காப்பாற்றி வந்திருக்கிறது. அந்த அடிப்படைதான் என்ன?

இந்தியாவில் எப்பொழுதும் வாழ்க்கையை லௌகிக வாழ்க்கை யென்றும் பாரமார்த்திக வாழ்க்கையென்றும் இரண்டு கூறாக்கி யாரும் பேசியதே கிடையாது. வாழ்க்கையை ஒரு தொகுப்பாகவே நமது முன்னோர்கள் பார்த்தார்கள். வாழ்க்கை, பூரணத்துவம் அடையவேண்டுமானால் லௌகிகமும் தேவை, பாரமார்த்திகமும் தேவையென்றுதான் சொன்னார்களே தவிர இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடுடையவை என்று அவர்கள் சொல்லவில்லை. வாழ்க்கையை மதத்தோடு பிணைத்தே அவர்கள் பேசியிருக்கிறார்கள். அறிஞர் ராதாகிருஷ்ணன் கூறுகிறார்: இந்தியாவின் பாரமார்த்திக ஞானம், எங்கோ தனியாகவுள்ள குகைகளில் வாசஞ் செய்யவில்லை; மனிதர்களுடைய அன்றாட வாழ்க்கையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது. கீதையும் உப நிஷதங்களும், பொது ஜனங்களுடைய நம்பிக்கையோடு ஒட்டினாற் போலவே இருக்கின்றன. அவை, தேசத்தின் சிறந்த இலக்கியங்களாக இருப்பதோடு, ஜனங்களுடைய உயர்ந்த எண்ணங்களின் கருவிகளாகவும் இருக்கின்றன. உயர்ந்த உண்மைகள் சாதாரண ஜனங்களுக்குச் சுலபமாக விளங்கவேண்டு மென்பதற்காக அவைகளைப் புராண இதிகாசக் கதைகளினால் அலங்கரித்து அந்த உயர்ந்த உண்மைகளைப் புகட்டியிருக்கிற விஷயத்தில் இந்தியர்களே பெரிய வெற்றி யடைந்திருக்கிறார்கள்.

பிரதியொரு மனிதனும் இரண்டு கடமைகளுடையவனாய் இருக்கிறான். ஒன்று தனக்கு அல்லது தனது குடும்பத்திற்கு; மற்றொன்று தனது சமுதாயத்திற்கு. ஒன்றைப் புறக்கணித்து விட்டு மற்றொன்றை அவன் செய்ய முடியாது; செய்யவும் கூடாது. முன்னதை அற வாழ்க்கை யென்றும் பின்னதை அரசியல் வாழ்க்கையென்றும் சொல்கிறோம். இந்த இரண்டு விதமான வாழ்க்கைகளையும் அவன் ஒன்றுபடுத்தி நடத்திச் சென்றால்தான் அவன் பிரயோஜனமான வாழ்க்கையை நடத்தியவனாகிறான். குழந்தைக்குத் தகப்பனாகவும், குடும்பத்திற்கு எஜமானனாகவும், சமுதாயத்திற்கு நல்ல பிரஜையாகவும் பிரதியொரு மனிதனும் இருக்க வேண்டு மென்பதே நமது முன்னோர்களின் உபதேச சாரம். இதனையே காந்தியும் விவேகானந்தரும் புதிய பாஷைகளில் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

காந்தி, அரசியல் என்று சொல்லிக்கொண்டு ஆன்ம உபதேசம் செய்கிறார். விவேகானந்தர், ஆன்மா என்று சொல்லிக் கொண்டு அரசியலைப் போதித்தார். ஆனால் இருவருடைய நோக்கமும், இந்தியாவானது ஆன்மார்த்த விஷயத்திலும் அரசியல் விஷயத்தி லும் பூரண சுதந்திரம் பெற்றிருக்க வேண்டுமென்பதுதான். காந்தி, பலமுறை, தாம் அவசியத்தை முன்னிட்டே அரசியலில் பிரவேசிக்க வேண்டியிருந்த தென்றும், ஆனால் உண்மையில் அது மெய்ப் பொருளைக் காணும் முயற்சிகளிலே ஒன்றென்றும் கூறியிருக்கிறார். அறிஞர் ராதாகிருஷ்ணன், இந்தியா ஏன் தற்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறதென்பதன் காரணத்தைப் பின்வரும் இரண்டு வாக்கியங்களினால் அழகுபடத் தெரிவித்திருக்கிறார்: ஆத்மாவைக் காத்துக் கொள்ளவேண்டு மென்ற ஆவலின் பகிரங்க ஓசை தான், சுயராஜ்யம் என்ற முழக்கம். எனவே, அரசியல் அடிமைத்தனத்தினால் ஆன்ம வளர்ச்சிக்கு இடையூறு ஏற்பட்டு விடுமென்பதற்காகவே காந்தி, அந்த அடிமைத்தனத்திலிருந்து மீளும் முயற்சியிலே ஈடுபட்டுடிருக் கிறார்.

விவேகானந்தர் ஓர் அரசியல்வாதியல்ல. தாம் அரசியல் வாதியென்று சொல்லப்பட்டதையும் அவர் கண்டித்து வந்தார். ஆனால் அரசியல் பிரயோஜனம் எதுவோ அதற்காகவே அவர் பாடுபட்டு வந்தார்.

அரசியலின் பிரயோஜனம் என்ன? எல்லா ஜனங்களும் இன்ப வாழ்வு நடத்த வேண்டுமென்பது, பிரதியொரு மனிதனும், தனது அறிவுக்கும் திறமைக்கும் இயன்றவாறு வளர்ச்சி பெறுவதற்கு என்னென்ன சாதனங்கள் வேண்டுமோ அந்தச் சாதனங்களை யெல்லாம் தேடிக் கொடுப்பதுதான் அரசியலின் நோக்கம். இந்த நோக்கம் நிறைவேறுகிற அளவுக்குத்தான் பிரதியொரு மனித னுடைய ஆன்ம வளர்ச்சியும் இருக்கிறது. பட்டினி கிடக்கும் வயிற்றில் ஞானத்தை, அஃது எவ்வளவு உயர்ந்த பண்டமாயிருந் தாலும், கொண்டு திணிக்க முடியுமா? காலியாயுள்ள வயிற்றுக்கு மதம் இல்லை என்றார் ராமகிருஷ்ண பரமஹம்ஸர். இதனாலேயே விவேகானந்தர், பாமர ஜனங்களின் வாழ்க்கையில் படர்ந்து கிடக்கும் வறுமைப் பிணியையும் அறியாமை இருளையும் போக்க வேண்டுமென்று பல இடங்களிலும் வற்புறுத்திப் பேசியிருக்கிறார்.

பாமர மக்களென்று அழைக்கப்படுகிற சாதாரண ஜனங்களை நாம் புறக்கணித்து விட்டோம். இது நமது தேசமே சேர்ந்து செய்த பெரும் பாவம். நாம் இப்பொழுது வீழ்ந்து பட்டிருப்பதற்கு இதுதான் காரணம். நமது சகோதரர்களுக்கு நல்ல கல்வி கொடுத்து, நல்ல உடை வழங்கி, நன்றாகக் கவனிக்கப் படாதவரையில், நாம் அரசியலைப் பற்றி எவ்வளவு பேசினாலும் அதனால் எவ்வித பயனும் ஏற்படாது. நாம் பெறும் கல்விக்கு அவர்கள் பணம் கொடுக்கிறார்கள்; நமது கோயில்களை அவர்கள் கட்டுகிறார்கள்; இவைகளுக்குப் பிரதியாக நம்மிடமிருந்து உதை பெறுகிறார்கள். அனுபவ ரீதியாகப் பார்க்கப் போனால் அவர்கள் நம்முடைய அடிமைகளாகவே இருக்கிறார்கள். இந்தியாவைப் புனருத்தாரணம் செய்ய வேண்டுமென்பது நமது நோக்கமானால், முதலில் நமது பாமர சகோதரர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும். இது விவேகானந்தர் வாக்கு.

அறத்தை அடிப்படையாகக் கொள்ளாத அரசியல் தேவை யில்லை யென்கிறார் காந்தி. அரசியல் இல்லாவிட்டால் அற வாழ்வு சோபிக்காது என்கிறார் விவேகானந்தர். இரண்டும் ஒன்றுதான். இரண்டு பேருடைய உபதேசங்களிலும், அறத்தையும் அரசியலை யும், கடவுளையும் மனிதனையும், தூல உடலையும் சூட்சும ஆன்மாவையும் ஒன்று படுத்திக் காட்டி யிருப்பதையே நாம் நன்றாகப் பார்க்கிறோம். இந்தியாவில் நெடுங்காலமாக உபதேசிக்கப்பட்டு வந்ததை அனுசரித்தே இவர்கள் இம்மாதிரி உபதேசிக்கிறார்கள்.

காந்தியும் விவேகானந்தரும் ஹிந்து மதத்தின் உண்மையான பிரதி நிதிகள். அப்படித் தங்களை அழைத்துக் கொள்வதில் இவர்கள் பெருமை கொள்கிறார்கள். ஆனால் ஹிந்து மதத்தின் மேலே படிந்து மூடிக்கொண்டிருக்கும் காலங் கடந்த தூசுகள், குப்பைகள் முதலியவைகளை இவர்கள் நிர்த் தாட்சண்யமாக அப்புறப்படுத்தி யிருக்கிறார்கள். இதனால், ஹிந்து மதத்தைச் சேர்ந்த அநேகருடைய கோபதாபங்களுக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.

இன்றைய ஹிந்து ஜாதி எப்படியிருக்கிறது? இதை அரவிந்தர் வாக்கால் எடுத்துச் சொல்ல விரும்புகிறோம்: உபநிஷத காலத்திலோ அல்லது பௌத்த காலத்திலோ அல்லது இதிகாச காலத்திலோ பிறந்து வாழ்ந்த ஓர் இந்தியன், தற்கால இந்தியாவிற்கு வந்து பார்ப்பானாயின், அவன் தன்னுடைய ஜாதி, புராதனத்தின் உருவத்தையும் மேல் மூடியையும், நைந்து போன கந்தல்களையும் விடாமல் பற்றிக் கொண்டிருப்பதையும், அந்தப் புராதன உபதேசங்களின் உயர்ந்த கருத்துக்களில் பத்துக்கு ஒன்பது மடங்கை இழந்து விட்டிருப்பதையும் பார்த்துத் திகைத்துப்போவான். இன்னும், மனோபலமின்மை, தேக்கம், திருப்பித் திருப்பிச் சொல்லுதல், விஞ்ஞானத்தின் ஒடுக்கம், கலை ஊற்று வற்றிபோயிருத்தல், சிருஷ்டி சத்தியின் குறைவு முதலியவைகளையும் கண்டு ஆச்சரியமடைவான்.

இன்றைய ஹிந்து, ஒரு கோழையாயிருக்கிறான். வேதமென்றும் புராணமென்றும் அவன் வாய் நிறையச் சொல்லிக் கொள்கிறான். உபநிஷதத்தையும் பகவத் கீதையையும் பாராயண புத்தகங்களாகப் பூஜையிலே வைத்திருக்கிறான். கடவுளை நம்பித் தன்னம்பிக்கை இழந்து நிற்கிறான். ஒரு காலத்தில் ஞான கோபுரத்தின் மீது ஏறி நின்ற அவன் இப்பொழுது அறியாமைக் குழியிலே விழுந்து உழன்று கொண்டிருக்கின்றான். அவன் உருவத்தைப் போற்றிக் கொண்டே உயிரை இழந்து விட்டான்.

ஒரு காலத்தில் அவன், தான் ஹிந்து என்று சொல்லிக் கொள்வதிலே பெருமை கொண்டான். அந்தப் பெருமையோடு தன் கடமையையும் நன்கு உணர்ந்து கொண்டிருந்தான். இதற்குக் கீதையிலிருந்தே ஓர் உதாரணத்தை எடுத்துக் காட்ட விரும்புகிறோம். போர்க்களத்தில் கௌரவ சேனையைப் பார்த்து விட்டு அர்ஜுனன் சோர்வடைகிறான். அவனுடைய வாய் உலர்ந்து போகிறது. உடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது. அவனுடைய காண்டீவம் கூட கையிலிருந்து நழுவுகிறது. இவைகளை யெல்லாம் பார்த்தான், பார்த்தனுக்கு ரதம் ஓட்டி வந்த கண்ணன், என்ன சொல்லுகிறான்? இஃது ஆரியருக்குத் தகாது என்கிறான். இதைச் சொல்லிவிட்டுப் பிறகுதான், பேடித்தன்மை யடையாதே என்பன போன்ற உபதேசங்களைச் செய்கிறான். ஆரியருக்குத் தகாது என்கிற ஒரு வாக்கியத்திலே நமது ஜாதீய தர்மத்தை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறான் கண்ணன்?

இதையே காந்தியும் விவேகானந்தரும் பல வழிகளில் எடுத்துச் சொல்லுகிறார்கள். காந்தி, யங் இந்தியா பத்திரிகையில் எழுதுகிறார்: ஹிந்துக்களாகிய நாம் பயத்தையும் கோழைத்தனத்தையும் விட்டுவிட வேண்டும். பிறரை நம்பக்கூடிய தைரியம் நமக்கு வேண்டும். எல்லாம் சரிப்பட்டுவிடும். அச்சமும் அறியாமையுந்தான் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் தளைகள். இவற்றை அறுத்தெறிய வேண்டும். ஹிந்து என்று சொல்லிக் கொள்வதில் ஒவ்வொருவனும் பெருமை கொள்ள வேண்டும். விவேகானந்தர் முழங்குகிறார் கேளுங்கள்:

ஹிந்து என்கிற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில், உங்களுடைய தேகத்தில் ஒரு சக்தி உண்டாக வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் ஹிந்துக்கள். ஹிந்து என்று சொல்லிக் கொண்டு எந்த நாட்டிலிருந்து எவன் வந்தாலும் சரி, அவன் எந்த பாஷையைப் பேசினாலும் சரி, அவனை நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினனாகக் கருத வேண்டும். ஒரு ஹிந்து, துன்பத்திலே உழன்று கொண் டிருந்தால், உங்கள் வயிற்றிலே பிறந்த பிள்ளையே அம்மாதிரி அவஸ்தைப்படுகிறான் என்று நீங்கள் கருத வேண்டும். உங்களுடைய சகோதர ஹிந்துக்களின் நலனுக்காக நீங்கள் எல்லாத் துன்பங்களை யும் குருகோவிந்த சிம்மனைப் போல் சகித்துக்கொள்ள வேண்டும். அவன் – அந்த குருகோவிந்தன் – கொடியர்களிடமிருந்து தனது நாட்டைக் காப்பாற்றினான். ஆனால் அந்த நாட்டிலிருந்தே விரட்டப்பட்டு விட்டான். ஹிந்து மதத்தைக் காப்பாற்றுவதற்காகத் தனது ரத்தத்தைச் சிந்தினான். யுத்த களத்தில் தனது பிள்ளைகள் கொல்லப்படுவதைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான். யார்பொருட்டுத் தன் ரத்தத்தையும், தனது நெருங்கியவர்களுடைய ரத்தத்தையும், பிரியமானவர்களுடைய ரத்தத்தையும் சிந்தினானோ அவர்களாலேயே கைவிடப்பட்டுவிட்டான். கடைசியில் அவன் காயமடைந்த சிம்மம் போல் தனது நாட்டிலிருந்து அமைதியாக வெளியேறி தெற்கு நோக்கிச் சென்றான். ஆனால் அவன் வாயி லிருந்து, யார் அவனைக் கைவிட்டு விட்டார்களோ அவர்களுக்கு விரோதமாக ஒரு வார்த்தை கூட வெளிவரவில்லை! உங்கள் நாட்டுக்கு நீங்கள் நன்மை செய்யவேண்டுமானால் நீங்கள் ஒவ் வொருவரும் ஒவ்வொரு குருகோவிந்த சிம்மனாயிருக்க வேண்டும். உங்கள் நாட்டு மக்களிடத்தில் நீங்கள் ஆயிரக்கணக்கான குறைகளைக் காணலாம். ஆனால் அவர்களுடைய தேகத்தில் ஹிந்து ரத்தம் ஓடுகிறதென்பது உங்கள் நினைவிலிருக்கட்டும். அவர்கள் உங்களுக்கு என்ன தீங்கிழைத்தாலும் சரி, அவர்களைத்தான் உங்களுடைய முதற் கடவுளர்களாக நீங்கள் வணங்க வேண்டும். அவர்களில் ஒவ்வொருவரும் உங்களுக்கு ஒவ்வொரு சாபமிட்டாலும் சரி, நீங்கள் அவர்களுக்கு அன்பான வார்த்தைகளையே சொல்லவேண்டும். அவர்கள் உங்களை வெளியே துரத்திவிடுவார்க ளானால், அந்த கோவிந்த சிம்மத்தை போல் மௌனமாக மரித்துப் போக எங்கேயாவது செல்லுங்கள். அப்பொழுதுதான் ஹிந்து என்னும் பெயருக்கு நீங்கள் தகுதியுடையவர்கள். அப்படிப்பட்ட லட்சியம்தான், நமக்கு முன்னே எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கவேண்டும். நம்முடைய பிணக்குகளையெல்லாம் புதைத்து விடுவோமாக! நம்மைச் சுற்றி எங்கணும் இந்த அன்பு வெள்ளத்தைப் பாய்ச்சுவோமாக!

இங்ஙனம் இருவரும் ஹிந்துக்களுக்கு அன்பையும் அஞ்சாமையையும் குழைத்து ஊட்டியிருக்கிறார்கள். இன்று இந்தியாவில் சிறிது நிமிர்ந்து நடக்க வேண்டுமென்ற எண்ணம் மக்களுக்கு உண்டாகி யிருக்கிறதென்றால் அதற்கு இவ்விருவருமே காரணம். விவேகானந்தர் பண்படுத்திய அஞ்சாமை நிலத்தில்தான், காந்தி, அஹிம்ஸை விதையை ஊன்றினார்.

தாங்கள் சநாதன ஹிந்துக்களென்று சொல்லிக் கொள்வதில் காந்தியும் விவேகானந்தரும் பெருமை கொள்கிறார் களென்றாலும், இருவரும் சமரஸ ஞானிகள். இதில்தான் இவர்களுடைய பெருமை இருக்கிறது. என்னுடைய தாயை எப்படி நான் நேசிக்கிறேனோ அப்படியே என்னுடைய மதத்தை நான் நேசிக்கிறேன். ஆனால் அதே சமயத்தில் மற்றத் தாய்மார்களிடத்தில் நான் எப்படி பக்தி சிரத்தையோடு நடந்து கொள்கிறேனோ அப்படியே மற்ற எல்லா மதங்களின் விஷயத்திலும் நடந்து கொள்கிறேன். இந்தமாதிரியான கருத்துடையவரே காந்தி. எனது மதத்திற்குப் பூகோள எல்லையே கிடையாது. என்று ஓரிடத்தில் கூறுகிறார். உலகத்திலே ஒரு மதம் உண்மையானதாயிருந்தால் எல்லா மதங்களும் உண்மையானவை யாயிருக்கவேண்டும். அடிப்படையான அமிசங்களில் எல்லா மதங்களும் ஒன்றுதான். எனக்கு ஐந்து விரல்கள் இருப்பது உண்மை யானால், மற்றவர்களுக்கும் ஐந்து விரல்கள் இருப்பது உண்மை தானே? என்று விவேகானந்தர் கேட்கிறார். இருவரும், புத்தருடைய கருணையையும், யேசுநாதரின் தியாகத்தையும், நபிகள் நாயகத்தின் சகோதர நேயத்தையும் அப்படியே தங்கள் வாழ்க்கை யில் அனுஷ்டித்துக் காட்டியிருக்கிறார்கள்.

காந்தியும் விவேகானந்தரும் தீண்டாமைக்குப் பரம விரோதிகள். ஹிந்து மதத்திற்கு இஃதொரு பெரிய களங்கம் என்று கருதுகிறார்கள். ஹிந்து சாதிரங்களிலே தீண்டாமைக்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. அப்படி ஆதாரம் இருப்பதாகக் காட்டி, தீண்டாமையை ஹிந்து மதம் அங்கீகரிக்கிறதென்று யாராவது சொன்னால், நான் ஹிந்து மதத்தைத் துறந்துவிடச் சிறிதும் தயங்க மாட்டேன் என்று கூறுகிறார் காந்தி. எல்லா ஜீவராசிகளிடத்திலும் ஒரேவிதமான கடவுட் தன்மையைக் காணும் மகா புருஷர்கள், மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருப்பதைக் கொஞ்சங் கூட சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அந்த ஏற்றத் தாழ்வுகளைச் சமன்படுத்திக் கொண்டு போக அவர்கள், மகத்தான தியாகங்களையும் செய்வார்கள். தீண்டாதவன் என்று கருதப்படுகிற ஒருவன் இருக்கிற வரையில் நானும் ஒரு தீண்டாதவனே என்று காந்தி மனம்பொங்கிக் கூறுகிற போது, அவருடைய தியாகத்தின் எல்லையை நாம் ஒருவாறு எட்டிப்பார்க்கிறோம்.

விவேகானந்தரும் இங்ஙனமே தீண்டாமையை பலபடக் கண்டித்திருக்கிறார். தீண்டாமை என்பது ஹிந்து மதமல்ல. நமது கிரந்தங்களில் அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அந்தத் தீண்டாமைக் கறையானது, நம்முடைய தேசீய சக்தியைக் குன்றச் செய்திருக்கிறது என்று ஆத்திரப்படுகிறார். தேசீய திருஷ்டியில் தான் இவர் இந்தத் தீண்டாமைப் பிரச்னையை நோக்குகிறார். ஏனென்றால் நமது தேசம் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்பது இவர் நோக்கம். வாழ்வு எங்கேயிருக்கிறது? அன்பிலே இருக்கிறது. எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துகிறவன்தான் உண்மையான வாழ்க்கையை நடத்தியவனா கிறான். அப்படியிருக்க, நம்மிலே ஒரு சிலரைமட்டும் ஒதுக்கி வைத்து விட்டு, அதாவது கடவுளின் குழந்தை களான ஒரு சிலரை ஒதுக்கி வைத்து விட்டு, நாம் மட்டும் அவருடைய குழந்தைகளென்று சொல்லிக்கொண்டு அந்தக் கடவுளிடம் போக முயலலாமா? அப்படிப் போனால்தான், கடவுளின் ஆசீர்வாதம் நமக்குக் கிடைக்குமா? தம் சிஷ்யரொரு வருக்கு விவேகானந்தர் எழுதுகிறார்:

எல்லா ஜீவ சிருஷ்டிகளையும் உன்னைப் போலவே பார் என்ற உபதேசம் நூலோடுதான் நிற்க வேண்டுமா? பசியோடு புலம்பும் வாய்க்கு ஒரு துண்டு ரொட்டி கொடாதவர்கள், மற்றவர்களுக்கு எப்படி விமோசனம் அளிக்கப் போகிறார்கள்? மற்றவர்களுடைய மூச்சுப்பட்ட மாத்திரத்தில் அசுத்தர்களாகிவிட்டதாகக் கருதுபவர்கள், மற்றவர்களை எப்படி பரிசுத்தப்படுத்தப் போகிறார்கள்? தீண்டாமை யென்பது ஒரு மனோ வியாதி. எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துகிற வாழ்க்கைதான் விரிந்த வாழ்க்கை. சுய நலம் என்பது சுருங்கிய வாழ்க்கை. ஆகையால் எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துவதுதான் வாழ்க்கையின் ஒரே விதமான சட்டம். எவனொருவன் அன்பு செலுத்துகிறானோ அவன் வாழ்கிறான். அப்படியே எவனொருவன் தன்னலத்தை மட்டும் கவனித்துக் கொண்டிருக்கிறானோ அவன் இறந்து போனவனாகி விடுகிறான். எப்படி வாழ்வதற்கு மூச்சுவிட வேண்டியது அவசியமாகிறதோ அப்படியே அன்புக்காக அன்பு செலுத்துவதும் அவசியமாகிறது.

காந்தியும் விவேகானந்தரும் கீதையின் போதனையிலே பெரிதும் ஈடுபட்டவர்கள். உலகத்திற்கேற்ற ஒரு பொதுக் கிரந்தமாக இருவரும் இதனைக் கருதுகிறார்கள். காந்தி, பாரிஸ்டர் பரீட்சைக்குப் படிக்க இங்கிலாந்து சென்றாரல்லவா? அங்குதான் இவருக்குக் கீதையின் பரிச்சயம் உண்டாயிற்று. இந்தக் கிரந்தம் விலை மதிக்கவொண்ணாதது என்று எனக்குப்பட்டது. அந்த எண்ணம் எனக்கு வர வர வலுத்துக்கொண்டு வருகிறது. மெய்ப் பொருளை அறிவதற்கு அது மிகவும் ஏற்றது. உயர்ந்தது என்பது என் அபிப்பிராயம். நான் மனச் சோர்வு அடைந்திருக்கிற காலங்களில் அஃதெனக்குப் பெரிதும் உதவியாயிருக்கிறது என்று கூறுகிறார்.

பின்னர் தென்னாப்பிரிக்கா சென்று அங்கே பல போராட்டங் களில் ஈடுபட்டிருந்த காலத்தில் இவருக்கு சாந்தியைக் கொடுத்தது இந்த பகவத் கீதைதான். இந்தக் காலத்தில்தான் இவர் கீதை முழுவதையும் மனப்பாடம் செய்தார். மனப்பாடம் செய்வதற்கு இவர் தனியாக ஒரு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளவில்லை. காலையில் பல் துலக்குகிற போதும், நானஞ் செய்கிற போதும், சுவரில் ஒரு சுலோகத்தை எழுதி வைத்துவிட்டு அதைப் பார்த்து மனப்பாடஞ் செய்துகொண்டே பல் துலக்குவார்; நானஞ் செய்து முடிப்பார். இப்படியே தினம் ஒரு சுலோகமாக, கீதை பூராவையும் மனப் பாடஞ் செய்துவிட்டார். கீதையை ஆழ்ந்து ஆராய்ச்சி செய்த பிறகுதான் தமக்குத் துறவு மனப்பான்மை ஏற்பட்டதென்று இவர் கூறுகிறார். இதன் பயனாக இவர் இன்ஷ்யூரென்ஸ் கட்டிக்கொண்டு வந்ததைக் கூட நிறுத்திவிட்டார். என்னையும் என் மனைவி மக்களையும் படைத்த கடவுள் அவர்களைக் காப்பாற்றுவார் என்ற உறுதி இவருக்கு ஏற்பட்டது. அது வரையில் தாம் சம்பாதித்துச் சேர்த்து வைத்திருந்ததை யெல்லாம் தமது சகோதரருக்குக் கொடுத்து விட்டார். கீதை, இவரை ஒரு மகா தியாகியாக்கி விட்டது. கீதையின் நோக்கமும் இதுதானே?

விவேகானந்தர், சிக்காகோ சர்வ சமய மகா நாட்டில் முதன் முதலாகப் பிரசங்கம் செய்தபோது யாவர் என்னை எங்ஙனம் வேண்டு கிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன். பார்த்தா! மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள் என்ற கீதா சுலோகத்தை எடுத்துச் சொல்லி, ஹிந்து மதத்தின் சமரஸத் தன்மையை விளக்கிக் காட்டினார். கீதையை எல்லோரும் பயில வேண்டுமென்பது இவர் விருப்பம். ஏனென்றால் இது மனிதனுக்குக் கடமை இன்னதென்பதைத் தெரிவிக்கிறது; வீரத்தை ஊட்டுகிறது. இந்த இரண்டுந்தான் இன்றைய இந்தியாவுக்கு அவசியம் தேவை. இதனை இந்தியர்கள் எல்லோரும், எந்தக் கவனத்துடன் படிக்கவேண்டுமோ அந்தக் கவனத்துடன் படிக்கவில்லை யென்பதற்காக இவர் அடிக்கடி வருத்தப்பட்டதுண்டு.

கீதையென்பது, மோட்ச லோகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஓர் ஏணியென்று சிலர் கருதுகிறார்கள். இது மிகத் தவறு. கீதை, நமது அன்றாட வாழ்க்கைக்கு உறுதுணை; மன அமைதி கொடுக்கும் அருமருந்து; பற்றில்லாமல் சேவை செய்துகொண் டிருப்பதிலேதான் உண்மையான இன்பம் இருக்கிறதென்பதை நமக்கு உணர்த்துகிறது. இப்படிப்பட்ட பொக்கிஷத்தை நாம் பெற்றிருந்தும் அதனை உபயோகத்திற்குக் கொண்டு வராமல் இருக்கிறோம். என்ன ஆச்சரியம்! இனியேனும் நமது இளைஞர்கள், காந்தியைப் பின்பற்றுவதாகச் சொல்லால் முழக்கும் இளைஞர்கள், அவரைப் போல் தினந்தோறும் ஒரு சுலோகத்தை மனப்பாடஞ் செய்வார்களா? நிச்சயம் அது நம்மைச் சுயராஜ்ய பாதையில் சீக்கிரம் கொண்டுவிடும்.

காந்தியும் விவேகானந்தரும் சிறந்த பக்தர்கள்; கடவுளின் புகழைப் பாடி அதில் மெய் மறந்து நிற்கும் ஆற்றல் பெற்றவர்கள். இதனாலேயே இவர்களுடைய மனம் எவ்வித சஞ்சலத்திற்கும் உள்ளாகாமல் எப்பொழுதும் ஒரு சாந்த நிலையில் நிற்கிறது. இவர்கள் கடவுள் புகழைப் பாடுகிறார்கள்; கடவுள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்; கடவுள் ராஜ்யத்தை இந்தப் பூலோகத்தில் தாபிக்க வேண்டுமென்பதற்காக ஓயாமல் உழைக்கிறார்கள்; அந்த உழைப்பிலே இன்பம் நுகர்கிறார்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *