காந்தியும் விவேகானந்தரும் வெ. சாமிநாத சர்மா

இரண்டு சக்திகள்


காந்தியும் விவேகானந்தரும் சாதாரண இரண்டு மனிதர்களாக நமக்குக் காட்சியளிக்கிறார்கள் என்பது வாதவம். ஆனால் உண்மையில் இவர்கள் இரண்டு சக்திகள்; இரண்டு தாபனங்கள். இருவரிடமிருந்து இரண்டு இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன. ஒன்று காந்தீயம்; மற்றொன்று ராமகிருஷ்ணர் இயக்கம். இரண்டும் இந்தியாவிலே தோன்றி, உலக முழுவதிலும் பரவியிருக்கின்றன. இந்த இயக்கங்களில் சம்பந்தப்பட்டவர்கள், வாழ்க்கையை ஒரு புதிய கோணத்திலிருந்து பார்க்கிறவர்கள்; தங்களுக்கென்று ஒன்று மில்லாதவர்கள்; ஆனால் உலகத்தையே தங்கள் குடும்பமாகக் கொண்டவர்கள். இவர்கள் வாழ்க!

காந்தி, ஒரு மகாத்மா. யாரொருவருடைய இருதயத்திலிருந்து ஏழைகளுக்காக ரத்தம் வடிகிறதோ, அதாவது, யார் ஏழைகளுடைய துன்பத்தைத் தங்களுடைய துன்பமாகக் கருதுகின் றனரோ அவர்தான் மகாத்மா; இல்லாவிட்டால் அவர் துராத்மா என்பது விவேகானந்தர் வாக்கு.

விவேகானந்தர் ஒரு துறவி. துறவு என்பது என்ன? காந்தி கூறுகிறார்: செயலில், செயலின் மூலமாகத் துறவு காண வேண்டும். செயலைத் துறந்து விடவேண்டுமென்பதல்ல. ஏனென்றால், உயிர் வாழ்க்கைக்குச் செயல் இன்றியமையாதது. எனவே, எவ்வித பற்றுமின்றி, செயல் செய்து கொண்டிருப்பது தனது கடமை யென்று கருதிச் செயலைச் செய்து கொண்டு போகிறவனே துறவி.

மகாத்மா தன்மைக்குத் துறவி லட்சணங் கூறியிருக்கிறார். அப்படியே துறவுக்கு மகாத்மா லட்சணங் கூறியிருக்கிறார். இருவரும் சேர்ந்து இந்தியாவின் லட்சியம் என்னவென்பதை உலகத்திற்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

இருவரும் இந்தியாவை ஒரு தொகுப்பாகவே பார்க்கிறார்கள். பாஷை வித்தியாசம், மாகாண வித்தியாசம் முதலிய வித்தியாசங்கள் இவர்கள் மனத்தில் எழுவதேயில்லை. அப்படியே இவர்கள் மதம் வேறு, வாழ்க்கை வேறாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. மனிதர்களிலும், ஏழையென்றும் பணக்காரரென்றும், உயர்ந்தவரென்றும் தாழ்ந்தவ ரென்றும் வித்தியாசம் பார்ப்பதில்லை. இவர்கள் எல்லாவற்றையும் கடவுள் மயமாகவே காண்கிறார்கள்.

இருவரும் வெளிப்பார்வைக்குச் சுலபத்தில் அணுக முடியாத வர்கள் போல் காணப்படுகிறார்கள். ஆனால் குழந்தைகள் கூட இவர்களிடத்திலே தாராளமாகப் பழகுகின்றன. ஏனென்றால் இவர்கள் குழந்தை உள்ளம் படைத்தவர்கள். அதனால் கபடமின்றி உரக்கச் சிரிக்கிறார்கள்; கலகலத்துப் பேசுகிறார்கள். இவர்கள் பிரசங்கத்தைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வது சகஜம். துறவி பேசுகிறபோது, அணையை உடைத்துக் கொண்டு ஆற்று வெள்ளம் புரண்டோடுவதைப் போலிருக்கும். மகாத்மா பேசுகிற போது, அடங்கியிருக்கும் ஓர் எரிமலை, தன் உள்ளிருந்து நிதான மாக நெருப்புத் துண்டங்களை மேலே வீசி எறிவது போலிருக்கும். இருவருடைய பேச்சுக்களும் கேட்பவர்களுடைய உள்ளத்தைத் திறந்துவிடும். அந்த உள்ளத்திலிருக்கும் கோழைத்தனம், மந்தம் முதலிய மாசு மறுக்கள் யாவற்றையும் கரைத்தும் எரித்தும் விடும்.

இருவரும் பகைவருக்கு அருளும் நெஞ்சமுடையவர்கள். அந்த நெஞ்சத்தில் வன்மம் என்பது இம்மியளவும் காண முடியாது; அன்புதான் துளிர்த்துக் கொண்டிருக்கும். காந்தி, தென்னாப்பிரிக்காவில் சத்தியாக் கிரகப் போர் நடத்திக் கொண்டிருந்த போது அரசாங்கச் சார்பில் இவருக்கு எதிரியாயிருந்தவர், தளபதி மட்ஸ் என்பவர். இவர், சட்டத்தையும் அமைதியையும் காப்பாற்றுகிற தமது பொறுப்பை முன்னிட்டுக் காந்தியைச் சிறையிலே வைத்தார். தம்மைச் சிறையிட்டவருக்கு காந்தி என்ன பிரதி செய்தார்? சிறையிலிருந்த போழ்து என்னுடைய (மட்ஸி னுடைய) உபயோகத்திற்கென்று ஒரு ஜதை மிதியடிகளைத் தயாரித்து, விடுதலையானவுடன் அவற்றை எனக்குச் சன்மானமாக அளித்தார்! அதனை அநேக காலம் வரை நான் உபயோகித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த மகானால் தயாரிக்கப்பட்ட மிதியடிகளின் மீது நான் நிற்கத் தகுதியுடையவனல்லன் என்ற உணர்ச்சி மட்டும் எனக்கு இருந்து கொண்டேயிருந்தது. இந்த இடத்தில் காந்தியின் சான்றாண்மைக் குணம் சிறந்து விளங்குகிறது. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு!

விவேகானந்தருடைய சுபாவமும் இப்படித்தான். இவர் உள்ளத்தில் வன்மம் என்பது அணுவளவும் கிடையாது. இவரை யாராவது தூஷித்தால் சிவ, சிவ என்பார். உடனே முகத்தில் புன்சிரிப்புத் தவழும். அப்படி என்னைத் தூஷித்ததும் கடவுள் வாக்குத் தானே என்பார். பக்கத்திலிருக்கிற சிஷ்யர்களுக்கு, இவருடைய இந்த சாந்த சுபாவத்தைக் கண்டு சிறிது கோபங்கூட உண்டாகும். அப்பொழுது இவர் சிஷ்யர்களுக்கு தூஷிக்கிறவனும் தூஷிக்கப்படுகிறவனும், புகழ்கிறவனும் புகழப்படுகிறவனும் எல்லோரும் ஒன்றே என்று உணர்ந்து கொண்டு விட்டோமே யானால் நமக்குக் கோபமே வராது என்று சாந்தமாகப் பதிலளிப்பார். எவ்வளவு உயர்ந்த மனோ நிலை!

இருவரும் குழந்தை உள்ளம் படைத்தவர்களானாலும், தமக்கு ஊறு செய்ய வந்தவர்களை மன்னித்து விடுகிற கருணை யுடையவர் களானாலும், பொய்மை, போலித்தனம், கோழைத்தனம் முதலியவைகளைக் கண்டிக்கிற விஷயத்தில் சிறிது கூடத் தயை தாட்சண்யம் காட்டாதவர்கள். உள்ளதை உள்ளபடி சொல்வதில் சிறிதும் பின் வாங்கார்; யாருக்கும் அஞ்சார்; எதற்கும் அஞ்சார்.

ஒரு சமயம் விவேகானந்தர், மைசூர் மன்னரான ஸ்ரீ சாம ராஜேந்திர உடையாரின் விருந்தினராகத் தங்கியிருந்தார். அமெரிக்கா சென்று பிரசித்தியடையாத காலம் அது. ஒருநாள் மன்னர், தமது ஆதானிகர்களுடன் அத்தாணி மண்டபத்தில் கொலுவீற்றிருந்தார். விவேகானந்தரும் கூட இருந்தார். அரசர், இவரைப் பார்த்து சுவாமி! என்னுடைய ஆதானிகர்களைப் பற்றித் தங்களுடைய அபிப்பிராயம் என்னவென்று கேட்டார். விவேகானந்தர் பதில் கூறினார்: நல்லது அரசே! உங்களுக்கு நல்ல மனம் இருக்கிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக உங்களை ஆதானிகர்கள் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆதானிகர்கள் எங்கும் ஆதானிகர்கள் தானே? இதைக் கேட்ட அரசர் திகைத்துப் போனார்; ஆதானிகர்கள் ஆத்திரமடைந்தார்கள். ஆயினும் யார் என்ன செய்ய முடியும்?

பின்னர், மகாராஜா, விவேகானந்தரைத் தமது தனியறைக்கு அழைத்துக்கொண்டு போய் சாந்தமாகச் சில வார்த்தைகள் கூறினார்: சுவாமி! இந்த மாதிரி கொஞ்சங்கூட ஒளிமறைவின்றி மனதில் தோன்றியதை அப்படி அப்படியே சொல்வீர்களாயின் தங்களுடைய உயிருக்கே ஆபத்து உண்டாகக் கூடும். தங்களை விஷமிட்டுக் கொன்று கூட விடுவார்கள். இந்த மாதிரி அநேக சாதுக்களுக்கு நடந்திருக்கிறது. உடனே விவேகானந்தர், “என்ன, என்ன! யோக்கியமான ஒரு சந்நியாசி, உண்மையைச் சொல்ல பயப்படுவான் என்று நினைக்கிறீர்களா?” அதனால் அவனுக்கு என்ன தீங்குகள்தான் நேரிடட்டுமே, உயிர்தான் போகட்டுமே, சத்தியத்தினின்று பிறழவே மாட்டான். நாளைய தினமே உங்களுடைய மகன் என்னிடம் வந்து ‘என்னுடைய தகப்பனாரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது, உங்களிடத்திலே யில்லாத நற்குணங்களெல்லாம் உங்களிடத்திலே இருப்பதாகச் சொல்லலாமா? நான் அப்படிப் பொய் சொல்வதா? முகஸ்துதி செய்வதென்பது ஆதானிகர்களுடைய வேலை. உண்மையைப் பேசுவது சந்நியாசிகளின் வேலை என்று கர்ஜித்தார். அரசர் ஒன்றும் சொல்ல முடியாமல் அடங்கிவிட்டார். ஆனால் இதே அரசரைப் பற்றிப் பிற்காலத்தில் விவேகானந்தர் எவ்வளவு புகழ்ந்திருக்கிறார்! எவ்வளவு மரியாதை கொடுத்துப் பேசியிருக்கிறார்!

இன்னோர் உதாரணம். விவேகானந்தர் வட இந்தியாவிலுள்ள ஆள்வார் சமதானத்தில் யாத்திரை செய்து கொண்டிருந்த போது, அரசருடைய தொடர்பு ஏற்பட்டது. அரசனும் ஆண்டியும் நெருங்கிப் பழகினார்கள். ஒருநாள் அரசர், “சுவாமி! தாங்கள் பெரிய பண்டிதர் என்று கேள்விப்படுகிறேன். மாதந் தோறும் நிறையப் பணம் சம்பாதித்துக் கொண்டு சுகமாக இருக்கலாமே! ஏன் இப்படி பிட்சை யெடுத்துக்கொண்டு அலைய வேண்டும்?” என்று கேட்டார். உடனே விவேகானந்தர், “மகாராஜா! நீங்கள் ஏன் ராஜ்யத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விட்டு உங்களுடைய நேரத்தையெல்லாம் வெள்ளைக்காரர்களுடன் கூடிக்கொண்டு வேட்டை யாடுவதில் கழிக்கிறீர்கள்?” என்று பதில் கேள்வி கேட்டார்.

பக்கத்திலிருந்தவர்கள் பிரமித்துப் போனார்கள். ஆனால் மகாராஜா அந்த வார்த்தைகளைப் புன்சிரிப்போடு வாங்கிக் கொண்டு நிதானமாக ஏன் இப்படிச் செலவழிக்கிறேன் என்பதற்குக் காரணம் தெரியவில்லை. ஆனால் இப்படிச் செலவழிப்பதை நான் விரும்புகிறேன் என்றார். நான் கூட அதே காரணத்திற்காகத்தான் சந்நியாசியாகத் திரிகிறேன் என்றார் விவேகானந்தர்.

இந்த ஆள்வார் மன்னருக்கும் விவேகானந்தருக்கும் இன்னொரு நாள் விக்கிரக ஆராதனையைப் பற்றி விவாதம் நடைபெற்றது. மகாராஜா, மண்ணையும் கல்லையும் உருவங்களாகச் சமைத்து அவைகளிலே கடவுள் இருப்பதாகச் சொல்லிக் கும்பிட்டு விழுவதை ஏளனம் செய்து, விக்கிரக ஆராதனையில் தமக்குச் சிறிது கூட நம்பிக்கையில்லை யென்று தெரிவித்துக் கொண்டார். இதை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் விவேகானந்தர். அங்கே சுவரில் அரசருடைய பெரிய படம் ஒன்று மாட்டப் பட்டிருந்தது. அந்தப் படத்தை எடுத்துக் கொண்டு வரும்படிச் சொன்னார் விவேகானந்தர். அப்படியே படம் கொண்டுவரப்பட்டது. பக்கத்திலிருந்த திவானைக் கூப்பிட்டார் விவேகானந்தர்.

“இது யாருடைய படம்?”

“எங்கள் அரசருடைய உருவம் வரைந்திருக்கிற படம்.”

“இதன் மீது காரி உமிழுங்கள். இங்குள்ளவர் யார் வேண்டு மானாலும் இதன்மீது எச்சில் துப்பலாம். இஃதென்ன ஒரு காகிதந் தானே? உங்களுக்கென்ன ஆட்சேபம்?”

அரசருக்கும் அவர் பரிவாரங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. மறுபடியும் வற்புறுத்தினார் விவேகானந்தர். திவான் சொன்னார்: “என்ன சுவாமி இது? எங்களுடைய மகாராஜாவின் உருவமல்லவோ இதில் இருக்கிறது” என்றார். விவேகானந்தர், வாஸ்தவம். ஆனால் மகாராஜர், சதையும் ரத்தமுமான உடலோடு இதில் இருக்கவில்லை. இதில் அவருடைய நிழல்தான் இருக்கிறது. மகாராஜாவைப் போல் இது பேசுவதுமில்லை; அசைவது மில்லை. ஆனாலும் இதன் மீது எச்சில் துப்பினால், உங்கள் மகாராஜாவை அவமானப்படுத்தியதாக நீங்கள் நினைக்கிறீர்கள். இதைப் போல்தான் விக்கிரக ஆராதனையும். கடவுளின் சாயல், அவரவர் வழிபடும் உருவங்களில் இருப்பதாக பக்தர்கள் நினைக்கிறார்கள் என்று சொல்லி முடித்தார். என்ன தைரியம்! துறவிக்கு வேந்தன் துரும்பு!

1916ஆம் வருஷம் ஸ்ரீ காசியில் ஹிந்து சர்வ கலாசாலையின் கால் கோள் விழா நடைபெறுகிறது. ராஜப் பிரதிநிதியான லார்ட் ஹார்டிஞ்சும், மற்றச் சுதேச மன்னர்களும் ஆடம்பர கோலத்துடன் வீற்றிருக்கிறார்கள். அப்பொழுது காந்திக்குப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. என்ன சொன்னார்?

நேற்றைய தினம் நமது கூட்டத்திற்குத் தலைமை வகித்த மகாராஜர், இந்தியாவின் ஏழ்மை நிலையைப் பற்றிக் கூறினார். மற்றவர்களும் இதை வலியுறுத்திச் சொன்னார்கள். ஆனால் இங்கே நாம் என்ன காண்கிறோம்? ஆடம்பரமான காட்சி! பாரிஸிலிருந்து ஒரு நகை வியாபாரி வந்தால், அவனுடைய கண்களுக்கு விருந் தளிக்கக் கூடிய மாதிரி, எல்லோரும் சிறந்த ஆபரணங்கள் அணிந்து கொண்டிருக்கிற காட்சி! இந்தப் பிரபுக்களோடு, இந்தியாவின் லட்சக்கணக்கான ஏழை மக்களை ஒப்பிட்டுப்பார்க்கிறேன். அப் பொழுது இந்தப் பிரபுக்களைப் பார்த்து இந்த நகைகளையெல் லாம் கழற்றி, இந்திய மக்களின் சார்பாக இவைகளைப் பத்திரப் படுத்தி வையுங்கள்; அப்படிச் செய்யாவிட்டால் இந்தியாவுக்கு விமோசனமே கிடையாது என்று சொல்லவேண்டுமென்கிற ஆத்திரம் எனக்கு உண்டாகிறது.

அப்பொழுதுதான், தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வுக்கு வந்திருக்கிறார் காந்தி. இந்திய அரசியல் அரங்கத்தில் இவருக்கு இன்னும் ஒரு தலைமை தானம் ஏற்படவில்லை. ஆயினும், தமது வருங்காலப் பெயர், புகழ் எல்லாவற்றையும் கவனியாமல், தமது உள்ளத்தில் தோன்றியதை அப்படியே சொல்லிவிட்டார். அந்தக் காலத்தில் இவருடைய இந்தப் பேச்சு எவ்வளவு பரபரப்பை உண்டு பண்ணியது!

வெளிநாட்டுக்குச் சென்று திரும்பி வருகிற இந்தியர்கள் பலரும், தங்களோடு என்ன கொண்டு வருகிறார்கள்? பணம், பட்டம், பதவி முதலியன. இவையொன்றும் அதிகமாக இல்லா விட்டாலும் மேனாட்டு மனைவியர்! காந்தியும் விவேகானந்தரும் இந்தியாவுக்குத் திரும்புகிற போது என்ன கொண்டு வந்தார்கள்? கீர்த்தி! மேனாட்டுச் சிஷ்யர்கள்! சுக போகத்திலே வாழ்ந்த பலர், இந்த இருவருடைய எளிய வாழ்க்கையிலும் மகத்தான சக்தியிலும் ஈடுபட்டு இவர்களுக்குச் சிஷ்யர்களாகி இவர்களைப் பின் தொடர்ந்து வந்தார்கள்; இந்தியாவின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணம் செய்தார்கள். இங்ஙனம் அர்ப்பணம் செய்தவர்களிலே சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் பெண்களே!

காந்தியும் விவேகானந்தரும் பெண்மைக்குப் பெருமை கொடுக்கிறவர்கள். உலகத்திலேயே தாயின் நிலைதான் மிகச் சிறந்தது. தன்னலமின்மையை, இந்த ஓர் இடத்திலிருந்துதான் கற்றுக் கொள்ள முடியும்; அனுஷ்டிக்க முடியும். கடவுளன்புக்கு அடுத்தபடியாகவுள்ளது தாயன்பு; மற்றவையெல்லாம் இதற்குக் கீழ்ப்பட்டதுதான் என்று தாய்மைக்குப் பக்தி செலுத்துகிறார் விவேகானந்தர். இப்படிப்பட்ட தாய்மார் பலரையும் தங்களுடைய சிஷ்யர்களாகக் கொண்டார்கள், ஒரு மகாத்மாவும் ஒரு சந்நியாசியும். விவேகானந்தருக்கு சகோதரி நிவேதிதை அமைந்ததைப் போல் காந்திக்கு மீராபாய்! இவர்கள் போன்ற இன்னும் பலர்.

இவர்கள் தங்கள் குருமார்களுக்கு என்னென்ன விதங்களில் பணி விடைகள் செய்திருக்கிறார்கள்! துணி துவைத்திருக்கிறார்கள்; பாத்திரங்களைக் கழுவி இருக்கிறார்கள். இவர்கள் சிஷ்யைகளாக இருந்த போதிலும், கூடவே தங்கள் குருமார்களுக்கு சிசுருஷை செய்யும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்கள்; தாய்மார்களாக இருந்து அவர்களைக் காப்பாற்றி வந்தார்கள்!

இந்த இரண்டு குருமார்களும் தங்களுடைய சிஷ்ய வருக்கத்தினரிடத்தில் எவ்வளவு அன்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள்! தங்கள் கையினாலேயே சமைத்துப் போட்டிருக்கிறார்கள்; அவர்கள் நோயுற்ற போது சிகிச்சை செய்திருக்கிறார்கள்; பொதுவாக அவர்களுடைய சுயமதிப்பு உணர்ச்சிக்குப் பங்கம் ஏற்படாதபடி அவர்களை நடத்தி வந்திருக்கிறார்கள்; அவர்களுக்குத் தந்தையாக நடந்து வந்திருக்கிறார்கள்.

இருவரும் பரம்பொருளைக் காணும் முயற்சியில் ஈடுபட்டவர் களேயானாலும், உலக ஞானம் நிறையப் பெற்றவர்கள். இயற்கை யழகையும் செயற்கை வாழ்க்கையையும் ஒரே மாதிரியாக அனுபவிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.

இருவரும் ஆசிரமங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஆசிரமங்கள் கர்ம க்ஷேத்திரமாகவும், யோக பூமியாகவும் விளங்கு கின்றன. இந்தியாவின் பிற்கால சரித்திரத்தில், இந்த ஆசிரமங்கள் செய்து வருகிற வேலை முக்கிய இடம் பெறும். ஏனென்றால் இந்தியாவின் எதிர்கால வாழ்வைப் பண்படுத்துவன அல்லவோ இவை?

துறவைப் பெருமைப்படுத்திவிட்டார் விவேகானந்தர். சிறையைப் புனிதப்படுத்திவிட்டார் காந்தி. இருவரும் அரண்மனைகளில் கொண்டாடப்படுகிறார்கள்; குடிசைகளில் வாழ்கிறார்கள். முன்னவர் இறந்து வாழ்கிறார்; பின்னவர் இருந்து வாழ்கிறார். இந்தியா என்ற பெயர் உள்ள வரையில் இப்பெரியார் இருவரும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *