
காந்தியும் விவேகானந்தரும் வெ. சாமிநாத சர்மா
மனிதனாயிரு!
“அரிது அரிது மானிடராதல் அரிது” என்றார் நமது நாட்டுப் பெரியார் ஒருவர். எவ்வளவு ஆழ்ந்த கருத்துடைய வாசகம் இது? மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று அவர் சொல்லவில்லை; மானிடர் ஆதல் அரிது என்றே சொன்னார். மனிதனாகப் பிறந்து விட்டால் மட்டும் போதுமா? மனிதனாக இருக்க வேண்டும், மனிதனாக வாழவேண்டும். இதற்குத் துணை செய்வதுதான் மதம். இந்த மதத்தையே விவேகானந்தர் வலியுறுத்துகிறார். இந்தியாவிலே நான் மனிதர்களைச் சிருஷ்டிக்க வேண்டும் என்று ஓரிடத்தில் கூறுகிறார். பகுத்தறிவு படைத்த மனிதன், தனது சக்திகளைப் பிறர்க்குப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலமாகத்தான் அவன் வளர்கிறான். இந்த வளர்ச்சிக்கான ஒரு சாதனமே மதம். அப்படியிருக்க இந்த மதத்தை, வாழ்க்கையிலிருந்து எப்படிப் பிரிக்க முடியும்?
நாட்டை விட்டுக் காட்டுக்கு ஓடிவிடுவது மதமாகாது. மூக்கைப் பிடித்துக்கொண்டு மூலையிலே உட்கார்ந்திருப்பது மதமாகாது. இவைகளினால் கடவுளைக் காணவும் முடியாது. நம்மைச் சுற்றி எங்கும் கடவுள் இருக்கிறார், ஒவ்வொரு ஜீவ ராசியினிடத்திலும் இருக்கிறார், விளையாட்டிலும் வினையிலும் இருக்கிறார், அழுகையிலும் சிரிப்பிலும் இருக்கிறார், இப்படி எங்கும் இருக்கிறார், எதிலும் இருக்கிறார் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். இந்த நம்பிக்கையிருக்கிறவன்தான், உலகத்தில் மேலான காரியத்தைச் செய்ய முடியும். இந்த நம்பிக்கையையூட்டுவது தான் மதம்.
மதத்தின் மேற்பரப்பிலுள்ள சில அமிசங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அவைகளையே மதமாகக் கொண்டுவிட்டது இந்தியா சில நூற்றாண்டுகளாக. இந்த எண்ணத்தைத் தொலைத்து, மதத்தின் உண்மையான தத்துவங்களை வெளிக்கொணர்ந்து காட்டினார் விவேகானந்தர். பரலோகத்தை நம்பி இகலோகத்தை விட்டுவிடக் கூடாதென்று போதித்தார். உடல் வலிமையும் வேண்டும், உள்ளத்துறவும் வேண்டுமென்று கூறினார். இந்தியா வுக்கு இஸ்லாமிய தேகமும் வேதாந்த மூளையும் தேவை என்று இவர் கூறியதன் தாத்பரியம் இதுதான். நடமாடுங் கோயில்கள் நலிந்து கிடக்க, படமாடுங் கோயில்களுக்குச் சென்று பூஜை போடுவதில் யாருக்கு என்ன நன்மையென்று கேட்கிறார்.
இவருடைய உபதேசங்களிலிருந்து சில மணிகளைப் பொறுக்கியெடுத்துக் கீழே தருகிறோம்:
மிருகத்தை மனிதனாக்குவதும், மனிதனைத் தெய்வ மாக்குவதும் மதம்.
மனிதன், இயற்கையை வெல்வதற்காகப் பிறந்தானேயொழிய, அதனைப் பின்பற்றிக் கொண்டு செல்வதற்காக அல்ல.
உலகமென்பது ஓர் உடற்பயிற்சி சாலை. அதில் நாம், நம்மைப் பலசாலிகளாக்கிக் கொள்ளவே வந்திருக்கிறோம்.
கடவுள் மனிதனாகிவிட்டார்; மனிதன், மறுபடியும் கடவுளாகக் கூடும்.
கடவுளிடத்தில் நம்பிக்கை கொள்ளாதவனையே நாஸ்திகன் என்று பழைய மதங்கள் கூறின. தன்னம்பிக்கை இல்லாதவனே நாஸ்திகன் என்று இந்தக் காலத்து மதம் கூறுகிறது.
உண்மைக்காக நாம் எதையும் தியாகம் செய்துவிடலாம்: ஆனால் எதற்காகவும் நாம் உண்மையைத் தியாகஞ் செய்யக்கூடாது.
எல்லா ஜீவராசிகளிடத்திலும் அன்பு செலுத்து. துன்பத்திலே உழன்றுகொண்டிருக்கிறவர்களுக்கு இரக்கங்காட்டு. யாரிடத்திலும் பொறாமை கொள்ளாதே. மற்றவர்களிடத்தில் என்ன குற்றங்கள் இருக்கின்றன வென்பதைப் பாராதே.
எவனுடைய மனமெனும் புத்தகம் திறக்கப்பட்டுவிட்டதோ அவன் வேறு நூல்களைப் பயில வேண்டியதேயில்லை.
உங்களுடைய முப்பத்து மூன்று கோடி தேவர்களிடத்திலும் உங்களுக்கு நம்பிக்கையிருக்கலாம்; இன்னும் அந்நியர்கள் புகுத்தியுள்ள மற்ற எல்லாத் தெய்வங்களிடத்திலும் உங்களுக்கு நம்பிக்கையிருக்கலாம். ஆனால் உங்களிடத்திலேயே உங்களுக்கு நம்பிக்கையில்லாவிட்டால் உங்களுக்கு விமோசனமே கிடையாது. தன்னம்பிக்கை கொள்ளுங்கள்; அதன் மீது நில்லுங்கள்.
உன்னுடைய விமோசனத்தைமட்டும் நீ தேடிக் கொள்வா யானால் உனக்கு நரகந்தான் கிடைக்கும்.
எனது நாட்டில் பட்டினியோடு ஒரு நாய் இருக்கிறவரையில், அதற்கு உணவளிப்பதுதான் என்னுடைய மதம்.
உண்மையான மதத்தில், புதகப் படிப்புக்கு இடமேயில்லை.
ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு தேசமோ தன்னம்பிக்கை யிழந்து விடுமானால் மரணம் சம்பவிப்பது நிச்சயம். முதலில் உங்களை நம்புங்கள்; பிறகு கடவுள் நம்பிக்கை கொள்ளுங்கள்.
இந்தியாவை இனி யாரும் அடக்க முடியாது. இனியும் அது தூங்கப் போவதில்லை. அந்நிய சக்திகள் எவையும் இனி அதனைப் பின்னுக்கு இழுக்காது. காலங்கடந்த இந்தியா, இப்பொழுது எழுந்து நிற்க ஆரம்பித்துவிட்டது.
நீ ஏதாவது தீங்கு செய்யவேண்டுமென்று ஆசைப்பட்டால், அதை உன்னைவிட மேலானவர்கள் முன் செய்.
இந்தியாவின் விமோசனம், இந்தியன் ஒவ்வொருவனும் தன்னுடைய பலத்தை உணர்வதிலே, தன்னிடம் தெய்வசக்தி இருக்கிறதென்பதை உணர்வதிலே இருக்கிறது.
மானிட சமூகத்திற்கு நன்மை செய்யவேண்டுமென்று ஆசைப்படுகிறவர்கள், தங்களுடைய சொந்த சுக துக்கங்களையும், பெயரையும் புகழையும், மற்றச் சுயநலங்கள் யாவற்றையும் ஒரு மூட்டையாகக் கட்டிச் சமுத்திரத்திலே எறிந்துவிட்டுக் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கவேண்டும்.
எனக்கு நானே நன்மையைச் செய்துகொண்டு ஒரு மோட்சத்தை அனுபவிப்பதைக் காட்டிலும், மற்றவர்களுக்கு நன்மைசெய்து அது காரணமாக ஆயிரம் நரகங்களுக்குச் செல்ல நான் தயாராயிருக்கிறேன்.
கடவுள் ஒருவர்தான் கொடுக்கக்கூடியவர்; உலகமெல்லாம் சந்தைக்கடை. அவரிடமிருந்து செக்கைப் பெற்றுக் கொள்ளுங்கள். அஃது எங்கும் மாறும்.
உலக சரித்திரம் என்பது என்ன? தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய சரித்திரந்தான். அந்தத் தன்னம்பிக்கை, மனிதனிடத்திலேயுள்ள தெய்வ சக்தியைத் தூண்டிவிடுகிறது. அப்பொழுது எது வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம்.
கடவுளைத் தேடிக்கொண்டு நீ எங்கே போக வேண்டும்? ஏழைகள், துன்பப்படுவோர், பலவீனர் இவர்களெல்லோரும் கடவுளர்களல்லவா? அவர்களை முதலில் வணங்கக்கூடாதா? கங்கைக் கரையில் ஏன் கிணறு வெட்ட வேண்டும்? ஜன சமுதாயமே உன்னுடைய கடவுள். ஜனங்களைப் பற்றி நினை; அவர்களுக்காக வேலை செய்; அவர்களுடைய நலனுக்காக இடைவிடாது பிரார்த்தனை செய். கடவுள் உனக்கு வழி காட்டுவார்.
ஓ இந்தியாவே! மற்றவர்களுடைய குரலுக்கு எதிரொலி கொடுத்துக் கொண்டிருக்கிறாய்; மற்றவர்களைப் பார்த்து நடிக்கிறாய்; பிறரைச் சார்ந்து நிற்கிறாய்; அடிமைத்தனமான பலவீனம் உன்னிடம் இருக்கிறது; கீழ்த்தரமான கொடிய பழக்க வழக்கங்களை அனுஷ்டிக்கிறாய். இவைகளைக் கொண்டு, இந்தச் சாதனங்களைக் கொண்டு நாகரிகத்தின் பெருமையை எப்படி அடையப் போகிறாய்? வீரர்களுக்கே உரியது சுதந்திரம். அப்படிப் பட்ட சுதந்திரத்தை, உன்னுடைய கேவலமான கோழைத்தனத் தினால் எப்படியடையப் போகிறாய்? ஓ இந்தியாவே! உனது பெண்மையின் லட்சியம் சீதை, சாவித்திரி, தமயந்தி என்பதை மறவாதே; நீ வணங்குகிற கடவுள், துறவிகளுக்கெல்லாம் பெரிய துறவி, சர்வ சங்க பரித்தியாகியான சங்கரன், உமாபதி என்பதை மறவாதே; உனது விவாகம், உனது செல்வம், உனது வாழ்க்கை எல்லாம் சிற்றின்ப சுகத்திற்காக அல்ல, உன்னுடைய சொந்த சந்தோஷத்திற்காக அல்ல என்பதை மறவாதே; ஜகன்மாதாவின் பலி பீடத்திலே பலியாவதற்காக நீ பிறந்திருக்கிறாய் என்பதை மறவாதே; உனது சமுதாய அமைப்பு, எல்லையற்ற உலகத் தாய்மையின் பிரதிபலிப்பு என்பதை மறவாதே; தாழ்ந்த ஜாதியினர் என்று அழைக்கப்படுகிற அறிவில்லாதவர்கள், ஏழைகள், பாமரர்கள், சக்கிலி, தோட்டி முதலிய எல்லோரும் உன்னுடைய சதையும் ரத்தமுமானவர்கள், உன்னுடைய சகோதரர்கள் என்பதை மறவாதே! ஓ வீரனே! தைரியங்கொள்; துணிவு கொள்; நீ ஓர் இந்தியன் என்பதற்காகப் பெருமை கொள். நான் ஓர் இந்தியன், ஒவ்வோர் இந்தியனும் என்னுடைய சகோதரன் என்று பெருமையோடு முழக்கம் செய்! பாமர இந்தியன், ஏழை இந்தியன், நிர்க்கதியாயுள்ள இந்தியன், பிராமண இந்தியன், பறைய இந்தியன் ஆகிய ஒவ்வொருவனும் என்னுடைய சகோதரன் என்று சொல்லு. நீ கூட இடுப்பிலே ஒரு கந்தைத் துணியைக் கட்டிக்கொண்டு உரத்த குரலெடுத்து ஒவ்வோர் இந்தியனும் என்னுடைய சகோதரன், ஒவ்வொர் இந்தியனும் என்னுடைய உயிர், இந்தியாவின் தெய்வங் களெல்லாம் என்னுடைய கடவுள், இந்திய ஜன சமுதாயம் எனது குழந்தைப் பருவத்தின் தொட்டில், இளமையின் உத்தியானவனம், புனிதமான மோட்சலோகம், முதுமைப் பருவத்தின் காசி க்ஷேத்திரம் என்று சொல்லு. சகோதரா! இந்தியாவின் மண் என்னுடைய மேலான மோட்சலோகம்; இந்தியாவின் நன்மையே என்னுடைய நன்மை என்று சொல்லு; அடிக்கடி சொல்லு. தினந்தோறும், இரவு பகலாகப் பின்வருமாறு பிரார்த்தனை செய்: ஓ! கௌரீநாதா! ஜகன்மாதா! எனக்கு ஆண் தகைமையைக் கொடு! ஓ! வலிமையின் தாயே! எனது பலவீனத்தை எடுத்துக் கொண்டு விடு; எனது அபௌருஷத்தை எடுத்துக் கொண்டு விடு; என்னை ஒரு மனிதனாக்கு!



