
இதய ஒலி
கலைஞர் மு. கருணாநிதி
நானும் பிரார்த்தனை செய்கிறேன் !
என் இனிய நண்பரே!
உங்களுக்காக – உங்கள் உடல் நலிவு நீங்குவதற் காக பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு ஆளுநர் அவர்கள் வேண்டுகோள் செய்தி விடுத்துள்ளார்!
பல்வேறு தெய்வங்களின்பால் பக்தி கொண்டோர் நீங்கள் நலம் பெற்று எழ பிரார்த்தனை நடத்துகிறார்கள்!
உங்கள் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ள கட்சித் தோழர்கள்-முன்னணியினர்-ஆலயங்கள் பல சென்று உங்களை மீண்டும் நலமுடன் காண வேண்டுமென பிரார்த்தனை நடத்துகிறார்கள்!
பிள்ளைப்பிராய முதலே அந்த நம்பிக்கையில்லாமல் பெரியார் வழியில் அண்ணா வழியில் வளர்ந்துவிட்டவன் நான்! அதனால் நான் உங்களுக்காக தெய்வங்களிடம் கையேந்தி வரம் கேட்டுப் பயனில்லை என்று கருதுகிறவன்! அது என் கொள்கை!
அப்படியொரு கொள்கையிலே உறுதிப்பாடு கொண்டவன் என்பதற்காக உங்களுக்காக மற்றவர்கள் நடத்தும் பிரார்த்தனையைக் குறை கூறமாட்டேன்!
அவர்களது பிரார்த்தனை நம்பிக்கை பலித்து நீங்கள் பிழைத்தெழுந்து நடமாடுவீர்களேயானால் எனக்கேற் படும் மகிழ்ச்சி-பிரார்த்தனை நடத்துகிறவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு எந்த வகையிலும் குறைந்ததாக இருக்காது என்பதை எனக்கு உணவு பரிமாறிய உங்கள் தாயும், உங்களுக்கு உணவு பரிமாறிய என் தாயும் இப்போது உயிரோடிருந்தால் நிச்சயமாக நெஞ்சாரச் சொல்லி நெகிழ்ந்து போவார்கள்.
அந்தத் தாய்கள் நம்மிருவரையும் நேசித்து அன்பு குழைத்து அரவணைத்தது என்பது; ஏதோ அரசியலுக்காக அவிழ்த்து விடும் கதையோ; கற்பனையோ அல்லவே! மறுக்க முடியாத உண்மைகளாயிற்றே!
மந்திரிகுமாரி படத்தில் நீங்கள்தான் கதாநாயகனாக நடிக்க வேண்டுமென்று நானும், மருதநாட்டு இளவரசி படத்துக்கு நான்தான் கதை வசனம் எழுத வேண்டுமென்று? நீங்களும் வாதாடி வெற்றி பெற்ற அந்தக் காலம்; ஓ! அது, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய காலம் என்றாலும் அன்பு எனும் பொன் தகட்டில் செதுக்கப்பட்ட அழியாத எழுத்துகளன்றோ!
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு அடுத்த ராமநாதபுரமெனும் புறநகரில் நாம் இருவரும் ஒரே வீட்டில் வசித்த அந்த நாட்கள்… இருவரிடையே எழுந்த அரசியல் விவாதங்கள்… நீங்களே பலமுறை பேசியுமிருக்கிறீர்கள் – எழுதியுமிருக்கிறீர்கள் “என்னைக் கலைஞர் தன்பக்கம் ஈர்த்து விட்டார்” என்று! அந்த நினைவுகள் என் நெஞ்சில் அலைகளாய் மோதுகின்றனவே இப்போது!
அப்போதெல்லாம் அந்தச் சிறிய வீட்டிலிருந்து நீங்களும் நானும் இயக்குநர் காசிலிங்கமும் நண்பர் நம்பியாரும் கோவை நகருக்கு ஒரு குதிரை வண்டியில் தானே போவோம்! ஆம்; அதுவும் வாடகை வண்டி! ஒரு ஆளுக்கு இரண்டணா வாடகை!
மதியம் – பெரும்பாலும் கோவைக்குக் குதிரை வண்டிச் சவாரி! கடைத்தெரு முனையில் இருந்த ‘குருசாமி நாடார்’ மிலிடரி ஓட்டலில் சாப்பாடு! அதற்கிடையே எத்தனை சிரிப்புவெடிகள்! சிந்தனையைத் தூண்டும் உரை யாடல்கள்!
ஒன்றா இரண்டா? இப்படி ஓராயிரம் உண்டே! கலை உலகில் நம்மைப் பிணைத்து வைத்த நட்பின் முத்திரைகளைக் காலம் கரைத்திட முடியுமா? முடியவே முடியாது!
அரசியலில் இன்று நமக்கிடையே மாறுபாடு இல்லை என்று சொன்னால் – அதனை நீங்களும் நானுமே ஏற்றுக் கொள்ள மாட்டோம்! எத்தனையோ மாறுபாடு- எத்தனையோ வேறுபாடு- எப்படியோ முளைத்து விட்டன!
ஆனால் இந்தப் பனிரெண்டு ஆண்டுப் பகையை- நாற்பதாண்டு கால நட்பு; பனிக்கட்டி போல இன்று கரைத்து விட்டதற்கு அடையாளம்: உங்கள் நோய் பற்றிக் கேள்விப்பட்டவுடன் என் கண்கள் அருவிகளானது தான்!
அந்த அருவியில் கருத்து மாறுபாடுகள் கரைந்து போகவில்லை! அனால் கசப்பு உணர்வுகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டன!
மூதறிஞர் ராஜாஜியின் உடல் நிலையைக் கேள்வியுற்று மருத்துவமனைக்கு வந்த பெரியார் அப்படியே ஆடிப்போய் விடவில்லையா?
அந்தப் பெரியார் வளர்த்த குடும்ப பாச உணர்வும் அரசியல் பண்பாடும் பட்டுப்போய்விடுமா என்ன?
அரசியலில் நீங்களும் நானும் முப்பது ஆண்டுகள் இணைந்து இருந்தோம்- அதில் இந்தப் பனிரெண்டு ஆண்டுகளாகப் பிரிந்தும் இருக்கிறோம்!
ஆனால் அந்த 1953ஐ மறக்க முடிகிறதா? கல்லக்குடி போராட்டத்தில் ஆறுமாத சிறைவாசமேற்று திருச்சி சிறையிலிருந்து விடுதலையாகி சென்னை எழும்பூர் ரயிலடியில் நான் வந்திறங்கிய போது மக்கள் வெள்ளத்தில் அமிழ்ந்து போக இருந்தேன்! அன்று என்னைக் “காக்கும் கரங்களாக” உங்கள் கரங்கள்தானே நீண்டன! என்னை வாரி அணைத்துத் தோளிலே தூக்கிக் கொண்டு மக்கள் கடலைக் கடந்தீர்கள்! அப்போது விலை உயர்ந்த உங்கள் கைக்கெடிகாரம் அந்தக் கூட்டத்தில் போன இடம் தெரியவில்லை!
அம்மவோ; அதையெல்லாம் நினைத்தால்- அதுவும் இந்த நேரத்தில் நினைத்தால்; நீங்கள் நலம் பெற வேண்டு மென்பதைத் தவிர என் உள்ளமும் உதடுகளும் வேறு எதனை உச்சரிக்கும்!
அரசியலில் நீங்கள் எடுத்த அந்தத் திடீர் நிலை! அதனால் ஏற்பட்ட திருப்பங்கள்!
அதன் காரணமாக உங்கள் வழி வேறாகிவிட்டது! என் வழியோ எப்போது மிருந்த வழியாக இருக்கிறது!
நான் நடக்கும் வழிதான் நல்வழியென்று வாதம் செய்து மோதிக்கொள்வதிலே கூட ஒரு சுவையுண்டல்லவா நம் இருவருக்கும்; அதற்காகவும் நீங்கள் நலமுடன் திகழ வேண்டுமென்று தானே இந்த நண்பனின் இதயம் ஏங்கிக்கொண்டிருக்கும்!
நான் ஆலயங்களுக்குச் சென்றிருக்கிறேன்; ஆட்சிப் பொறுப்பின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக! கலைச் சிற்பங்களைக் கண்டு மகிழ்வதற்காக!
பிரார்த்தனைகள் செய்ததுமில்லை; அதற்காகப் பிரகாரங்கள் சுற்றியதுமில்லை! இப்போதும் உங்களுக்காக அந்தத் தெய்வீகப் பிரார்த்தனையில் நான் ஈடுபடவில்லை! என்னைப் பெரியாரும் அண்ணாவும் அப்படி வளர்த்து விட்டார்கள்!
ஆனால் என் இனிய நண்பரே! உங்களுக்காக நடைபெறுகிற பிரார்த்தனைகள் வெற்றி பெறட்டும்!
பாசமிகுந்த எனது பழைய காலத்துத் தோழரே! நீங்கள் அந்தப் பழைய புன்னகை முகத்தோடு எங் களைக்காண வாருங்கள்!
உங்களைக் காண எங்களுக்கு இப்போது அனுமதியில்லை!
பரவாயில்லை; நீங்கள் நலமெல்லாம் பெற்று எங்களைக் காண மட்டும் வந்தால் போதும்!
”பிரார்த்தனை” என்பதற்கு “துதி” என்பது மல்ல; “வேண்டுகோள்” என்றும் ஒரு பொருள் உண்டு!
அந்தப் பொருளில் வேண்டுமானால் நானும் பிரார்த்தனை செய்கிறேன்; கருத்து மோதல்களுக்கிடையிலேயும் கனிந்துரையாடிடக் கடுகி எழுந்து வருக! கதிரொளி பட்ட பனிமூட்டமென உங்கள் நோய் மூட்டம் விலகிடுக!
என்றும் உங்கள் நண்பன்
மு.க.



