இதய ஒலி
கலைஞர் மு. கருணாநிதி

அ.தி.மு.க. உடன்பிறப்புகளுக்கு!

உடன்பிறப்பே!

எனது இனிய நண்பர் முதலமைச்சர் எம். ஜி.ஆர். அவர்களின் உடல்நிலை கேட்டு அதிர்ச்சியுற்று – பதறிப் போய் — தாங்க முடியாத வேதனையின் காரணமாக உணர்ச்சி வசப்பட்டு அ.தி. மு. க. தொண்டர்கள் பத்து பேருக்கு மேற்பட்டோர் தங்களின் மேனிக்கு தீயிட்டுக் கொண்டும் நஞ்சு அருந்தியும் உயிரைப் போக்கிக் கொண்டார்கள் என்ற செய்தி கேட்டுப் பதைத்துப் போகிறேன். மேலும் பலர் அந்த முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்ற செய்திகளும் இதயத்தில் வேல்களைப் பாய்ச்சுகின்றன.

தங்களின் தலைவனுக்கு வந்துற்ற நோய் எத்துணை இன்னலை அவருக்குத் தருகிறது என்பதை எண்ணிடும் போது உள்ளம் எரிமலையாகிற காரணத்தால் துடித்துப் போகிற அந்த உடன் பிறப்புக்கள்; உயிரோடிருந்து அந்த வேதனையை சகித்துக் கொள்ள முடியாமல் உயிரைப் போக்கிக் கொள்வதின் மூலம் தங்களுக்குத் தாங்களே அமைதியைத் தேடிக் கொள்கிறார்கள் என்பதை உணர முடிகிறது!

1964-1965 ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப் புரட்சியை யொட்டி கீழ்ப்பழுவூர் சின்னச்சாமி தொடங்கி மொத்தம் எட்டுத் தமிழர்கள்; தீக்குளித்தும், நஞ்சருந்தியும் தங்கள் உயிரைப் போக்கிக் கொண்ட போது அவர் களின் உணர்வு மதிக்கத்தக்கது என்றாலும் அவர்கள் மேற்கொள்கிற போராட்ட முறை ஏற்கத்தக்கது அல்ல என்று நமது அண்ணா அவர்கள் கருத்து தெரிவித்து, அந்த செயல்கள் இனித் தொடரா வண்ணம் ஒரு முடிவுக்கு வர வேண்டுமென்று விரும்பினார்கள்.

அதற்கடுத்து 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் இலங்கைத் தமிழர்களின் படுகொலையைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்கு முன்பு மறியல் செய்வதற்காக வீட்டிலிருந்து புறப்படும் போதே நான் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் பதினைந்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது- என்னை விடுதலை செய்யுமாறு கோரி பதினாறு பேர் தீக்குளித்து அவர்களில் ஏழு பேர் மாண்டு போயினர். நான் சிறையிலிருப்பதைத் தாங்கிக் கொள்ளாமல் அந்தச் செயலில் ஈடுபட்ட உடன்பிறப்புக்களின் உணர்வுக்கு உருகிய போதிலும் உடனடியாக சிறையிலிருந்தவாறே நானும்-நமது கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் தீக்குளிப்பதும் தற்கொலை செய்து கொள்வதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய முறைகள் அல்ல; தயவு செய்து நிறுத்துங்கள் என்று அறிக்கைகள் விடுத்தோம்!

ஆனாலும் நடந்தது நடந்து விட்டதே- என்ன செய்ய!

சென்ற ஆண்டு கூட ஆரணிக்கருகே நமது கழக உடன் பிறப்பு ஒருவர் ; இலங்கைத் தமிழருக்கு விளைந்த கொடுமை கண்டு கொதித்து தனக்குத் தானே கொள்ளி வைத்துக் கொண்டார்!

ஆந்திரத்தில் இந்திராகாந்தி நடத்திய ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து தமிழகத்தில் நாம் நடத்திய பேரணியின் போது- குன்றத்தூரில் கழக உடன் பிறப்பு ஒருவர் தீக்குளித்த செய்தி நமது நெஞ்சில் செந்தேளாகக் கொட்டிற்று!

மொழிப் போரில் தீக்குளித்து மாண்ட தீரர்களை- அன்றைக்கு இந்தி ஆதிக்கத்துக்கு வக்காலத்து வாங்கியவர்கள், இந்தி எதிர்ப்பாளர்களைச் சுட்டு வீழ்த்திய கட்சிக் காரர்கள்-வறுமையால் தற்கொலை செய்து கொண்டனர் என்றும்- கடன் தொல்லை-குடும்பச் சச்சரவு- அதனால் உயிரை மாய்த்துக் கொண்டனர் என்றும் நெஞ்சில் ஈரமும் இரக்கமுமின்றி இழித்தும் பழித்தும் பேசினர்! மக்கள் மன்றத்திலே மட்டுமல்ல; சட்டமன்றத்திலே கூட அன்றைய ஆளுங்கட்சி தரப்பிலே அந்தத் தியாகச் சீலர்களின் மீது சேறு வாரி இறைக்கப்பட்டது! அந்தத் தியாகத் தங்கங்களின் தற்கொலைச் செயல் முறையைக் கழகம் ஏற்றுக் கொள்ளாவிடினும், அந்த மாணிக்கங்களின் மீது மாசு கற்பித்த மமதையாளர்களின் போக்கு கண்டு மனம் நெகிழ்ந்தோம்!

அதே போலத்தான் சில நாட்கள் நான் சிறையில் அடைபட்டிருந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல்- என்றோ ஒரு நாள் விடுதலை ஆவேன் எனத் தெரிந்தும் பொறுத்துக் கொள்ள முடியாமல் – எழுவர் தீக்குளித்து இன்னுயிர் நீத்த போதும் அவர்கள் எடுத்த முடிவுக்கு ஏதேதோ இழிதகைக் காரணங்களைக் கூறி ஏடுகளில் செய்திகளைப் பரப்பினர்! எழுதினர்-பேசினர்! எவர்? யார்? அத்தகைய இதயமில்லா மனிதர்களாய் ஏகடியம் செய்தனர் என்பதற்குப் பழைய ஏடுகளே ஆதாரம்!

ஆனால் நானும் சரி; நமது கழகமும் சரி-எந்தவொரு இயக்கத்தில் தன்னலமற்ற தியாகச் சுடர்கள் இருந் தாலும் அவர்களையோ-அவர்களது உணர்வுகளையோ- என்றைக்கும் மதிக்கத் தவறியதில்லை!

இதே தங்களின் அன்பிற்குரிய தலைவருக்காக- என் இனிய நண்பருக்காக-பத்துக்கு மேற்பட்ட அ.தி.மு.க. உடன்பிறப்புக்கள், தங்களின் உயிர் மீது பற்றற்றுத் தணல் பாய்ந்த மெழுகாகியிருக்கின் றனர் என்கிற போது அய்யகோ! அவர்களின் பாசப் பிணைப்பை என்னவென்று புகழ்வது!

தி.மு. கழக உடன்பிறப்புக்கள் மொழிக்காக ஒரு முறையும் – எனக்காக ஒரு முறையும் தீக்குளித்துச் செத்தபோது அந்த நாட்களில் விரசமாக விமர்சித்தது போல ஆளுங்கட்சிப் பிரமுகர்களை விமர்சிக்கும் அரசியல் கீழ்த்தரம் எனக்கும் நமது கழகத்திற்கும் என்றைக்கும் ஏற்படாது! அது தான் நாம்! அதனால் தான் நாம்; நாமாக இருக்கிறோம்!

உடன்பிறப்பே; உன்னை “உடன்பிறப்பே” என அழைக்கும் உரிமை எனக்கிருப்பது போலவே – அ.தி.மு.க.வின் அடித்தளத் தொண்டர்களை “உடன் பிறப்புக்களே!” என அழைக்கும் உரிமை எனக்கிருப்பதாக நம்புகிறேன்! அந்த நம்பிக்கையைச் சிதைக்கச் சில “நல்லவர்கள்” (?) முனையலாம்! அது குறித்து நான் கவலைப்படவில்லை! எல்லோரும் ஒன்றாக இருந்த அந்தக் காலத்தை மறந்து விடாத நிலையில் அ.தி.மு.க. செயல் வீரர்களை நான் “உடன்பிறப்புக்களே” என விளிப்பதில் ஆச்சரியமுமில்லை! தவறுமில்லை!

எனவே, அந்த உடன்பிறப்புக்களை கேட்டுக் கொள்கிறேன்!

“உடன்பிறப்புக்களே! உங்களுக்கு உங்களின் உயிரினும் சிறந்த தலைவன் மீது இருக்கின்ற அன்பின் பெருக்கை அறியாதவனல்ல நான்! அவர் உடல்நலிவுற்றுத் துன்புறும் செய்தியால் உங்கள் இதயம் எப்படித் துளைக்கப்படும் என்பதை உணர முடியும் என்னால்! பன்னிரண்டு ஆண்டுக் காலம் பகை மூட்டத்துக்கிடையே பிரிந்து நின்ற நானே …பழைய பசுமையான தோழமைக் காலத்தை எண்ணி எண்ணி…துன்பச் சுமை தாங்காது தத்தளிக்கிறேன் என்கிறபோது; எந்தப் பதவியோ- பவிசோ – பரிசோ எதையுமே நாடாமல் அவரை நெஞ்சில் குடியமர்த்தி வைத்திருக்கிற உங்களால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்! அந்தத் துடிப்பு; அவர் முதலமைச்சராக இருக்கிறார் என்பதால் பயன் கருதி ஏற்படும் துடிப்பு அல்ல! பற்று பாசத்தால் ஏற்படும் துடிப்பு!

அந்தப் பற்றும் பாசமும் அவர் நீண்ட ஆயுளுடன் நெடுங்காலம் வாழ வேண்டும் என வாழ்த்துவதற்குப் பயன்பட வேண்டுமேயல்லாமல்- உங்களை நீங்களே கருக்கிக் கொள்வதற்குக் காரணமாகி விடக்கூடாது!

அவர் நலம் பெற்று வருகிறார் என்ற நல்ல செய்திகள்; அரசின் சார்பில் அறிவிக்கப்படுகின்றன! நான், இந்தக் கடிதம் எழுதும் நேரத்திலும் அமைச்சர் அண்டே அவர் கள் “முதலமைச்சர் உடல் நிலையில் மேலும் முன்னேற்றம்” என்ற செய்தியே தந்துள்ளார்.

அந்தச் செய்திகள் தொடரட்டும்! அவ்வாறு தொடர வேண்டுமெனத் தமிழகமே விழைகிறது!

அதற்கிடையே நீங்கள் நெருப்பிட்டுக் கொண்டு மாள்கிறீர்கள் என்று நெஞ்சைக் குலுக்கும் தகவல்களால் என்னைப் போன்றோர் படுந்துயர் கொஞ்சமல்ல!

உணர்வு மதிக்கத்தக்கது! வணங்கத்தக்கது! ஆனால் உயிரை வலுவில் போக்கிக்கொள்வது ஒருக்காலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல!

நீங்கள் சார்ந்திருக்கும் சமுதாயத்திற்காக-நீங்கள் ஆற்ற வேண்டிய கடமை எவ்வளவோ இருக்கிறது!

எந்தவொரு இயக்கத்திற்கும் அந்த இயக்கத்தின் தொண்டனே உயிர்நாடி!

அந்த உயிர்நாடிகள் எந்தவொரு இயக்கத்திலும் அறுந்து போய்விடக் கூடாது!

தொண்டனாகவே இருந்து வளர்ந்தவன் என்ற முறையில் வேண்டுகிறேன்; தொண்டுள்ளம் கொண்ட தியாக உடன்பிறப்புக்களே! உங்கள் உயிர்ப்பலியை நிறுத்துங்கள்! உங்கள் தலைவர்-எனது நண்பர்; நலம் பெற்று எழுந்துவர – நாமனைவரும் சேர்ந்து வாழ்த்துவோம்!”

உடன்பிறப்பே, இந்த வேண்டுகோளைத்தான் உன்னுடன் இணைந்து அ.தி. மு.க. உடன்பிறப்புக்களுக்கு விடுக்கிறேன்.

அன்புள்ள,

மு..

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *