இதய ஒலி
கலைஞர் மு. கருணாநிதி

ஜவ்வாது மாலையும் சந்தோஷ அலையும்!

உடன்பிறப்பே!

நமது மாநிலத்து நிதியமைச்சர் நாவலர் அவர்கள், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு வாசமிக்க ஜவ்வாது மாலை அணிவித்து மகிழ்ச்சி பொங்கிட புகைப்படக்காரருக்கு “போஸ்’ கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்தப் பூரிப்பு வழியும் புகைப்படம் தமிழ்நாட்டில் வெளிவரும் நாளேடுகள் பலவற்றில் கடந்த இரண்டு மூன்று நாட்களாகப் பிரசுரிக்கப் பட்டுள்ளன.

திடீரென்று டெல்லியில் உள்ள மத்திய நிதி அமைச்சருக்கு நமது மாநில நிதியமைச்சர் மாலை அணிவித்து மகிழ வேண்டிய நிகழ்ச்சி என்ன ஏற்பட்டுவிட்டது?

ஏதாவது தமிழகத்திற்கு புதிய திட்டத்தை அறிவித்து அதற்காகப் பல கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் அறிவித்து -அந்த நல்ல செய்தி கேட்டுத் தமிழக அரசின் சார்பாக மத்திய நிதி அமைச்சருக்கு நமது மாநில நிதி அமைச்சர் நன்றிப் பெருக்குடன் மாலை அணிவித்துப் போற்றிப் புகழ்பாடுகிறாரா? அப்போது எடுக்கப்பட்ட படமா?

அல்லது; பொதுத் தேர்தல் முடிவுற்று பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார் பிரணாப் என்ற செய்தி கேட்டு; அதற்காக அவரைப் பாராட்டுவதற்கு நாவலர் அவர்கள் மாலை அணிவித்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்துள்ளாரா? அப்போது “கிளிக்” செய்யப்பட்ட புகைப்படமா?

ஒருவேளை-டெல்லிக்குச் சென்ற நாவலரிடம்; பிரணாப் முகர்ஜிக்குப் பிறந்தநாள் விழா என்பதை யாராவது நினைவூட்டி-அதன் காரணமாக அவரை அலுவலகத்தில் சந்தித்து மாலை அணிவித்து அகமிக மகிழ்ந்து இன்ப வெள்ளத்தில் மிதக்கும்போது எடுக்கப்பட்ட நிழற் படமா?

இல்லை, இல்லை, உடன்பிறப்பே-இவை எதுவுமே

இல்லை!

முதலமைச்சர் உடல்நலிவுற்றிருப்பதை முன்னிட்டு; தமிழக ஆளுநர் குரானா அவர்கள் முதல்வரின் இலாக்காக்களை அனைத்தையும் கடந்த 25 ஆம் தேதி அன்று நாவலரிடமே ஒப்படைத்துவிட்டார் அல்லவா ; அந்தக் காரியம் நடைபெற்ற அடுத்த விநாடியே நிதியமைச்சர் நாவலர் அவர்கள் டெல்லிக்குப் புறப்பட்டு விட்டார்.

அண்ணா உடல் நலிவுற்றிருந்த போது அவரது இலாக்காக்கள் அண்ணாவே கோப்பில் கையெழுத்திட்டு, மூன்று நான்கு அமைச்சர்களிடத்திலே பிரித்துத் தரப்பட்டன.

அருமை நண்பர் எம். ஜி. ஆர். அவர்கள் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்றிருந்த போது கூட அவரது இலாக்காக்களை அவரே பகிர்ந்து இரண்டு மூன்று அமைச்சர்களுக்குத் தற்காலிகமாக அளித்து அவரே கோப்பில் அந்த ஆணையை இட்டு கையெழுத்துப்போட்டுதான் சென்றார்.

ஆனால் இப்போது மருத்துவமனையில் கடந்த 10ஆம் தேதியன்று கூட கோப்புகளை முதல்வர் பார்வையிட்டுக் கையெழுத்திட்டார் எனச் சட்ட சபையில் நாவலரே தகவல் தந்துள்ள நிலையிலும் கூட, முதல்வர்- தனது இலாக்காக்களை நாவலருக்குத் தற்காலிகமாக ஒப்படைப்பதாக ஒரு கோப்பிலும் எழுதவில்லை. ஆனால் அதற்கு மாறாக ஒன்பதாம் தேதி வாய்மொழியாக அந்த இலாக்கா மாற்றத்தை முதல்வர் அவர்கள் நாவலரிடம் கூறி விட்டாராம்! இப்படி நாவலரே சொல்கிறார்!

பத்தாம் தேதி “பைல்” பார்த்துப் “பைசல்” செய்யக் கூடிய நிலையில் இருந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஒன்பதாம் தேதி வாய்மொழியாகச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

டெல்லியின் ஆலோசனைப்படி கவர்னர் இப்படியொரு முடிவை எடுத்து – ஒரு புதிய அதிகாரத்தை கவர் னரின் கையில் தமிழக ஆட்சியாளர்கள் வலுவில் கொண்டு போய் வழங்கியிருக்கிறார்கள்.

முதல்வருக்கோ – நமது நெஞ்சு நெகிழத்தக்க அளவுக்குத் திடீரென பக்கவாத நோயினால் பேசும் சக்தி இழந்துள்ள நிலை! கையெழுத்தும் போட முடியாமல் கையை அசைக்கும் சக்தியை இழந்துள்ள நிலை! அதாவது 13ந் தேதிக்குப் பிறகு!

இப்படிப்பட்ட ஒரு அசாதாரண சூழலில் மாநிலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய நிர்வாகப் பணிகளுக்காக வேறு என்னதான் செய்ய முடியும் எனக் கேட்பது எனக்குப் புரிகிறது!

சுலபமான ஜன நாயக வழி ஒன்று இருக்கிறதே!

ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, முதல்வர் உடல் நலம் பெறுகிற வரையில் தற்காலிகமாக அவரது இலாக்கா பொறுப்புக்களை இந்த அமைச்சர் பகிர்ந்து கொண்டு பார்ப்பதற்கு சட்டமன்ற ஆளுங் கட்சி உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் கவர்னருக்குப் பரிந்துரை செய்கிறது என்று

ஒருவர் பெயரைக் குறிப்பிட்டுத் தீர்மானம் நிறைவேற்றி அதனைக் கவர்னரிடம் கொடுத்து அதன் வாயிலாக ஜனநாயக நெறியையும் காப்பாற்றி – மாநில உரிமையையும் பாதுகாத்துக் கொண்டிருக்க முடியுமே! இந்த என் கருத்தும் சிந்திக்கக் கூடிய ஒன்றுதானே!

இப்படி எதுவுமே முறைப்படி சிந்தித்து நடத்தப் படாமல் – முதல்வர் அவர்கள் வாய்மொழியாக ஒன்பதாம் தேதியே சொல்லி விட்டார் என்று ஒரு கற்பனைக் கதையைக் கட்டி, கவர்னர் மூலமாக முதலமைச்சரின் எல்லா இலாக்காக்களையும் நாவலர் தன்னகப்படுத்திக் கொண் டது; அவரது ராஜதந்திரத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியல்லவா?

அதற்கு ஆசி வழங்கி, அருள் பாலித்த டெல்லி பேரரசின் பிரதானியர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜிக்கு நன்றி தெரிவித்து-மாலை சூட்டி-மகிழ்ச்சிப் பெருக்கில் நாவலர் ஆழ்ந்திருப்பது ஆச்சரியமல்லவே!

உடன்பிறப்பே, எத்தகைய நேரத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பு என்பதைக்கூட சிந்தித்திட நாவலருக்கு நேரமில்லை!

கட்சி வேறுபாடுகளை மறந்து கண்ணீர் மல்கிட தமிழகத்து மக்கள் அனைவரும் முதல்வரின் உடல்நலம் பெற வேண்டுமென வாழ்த்திக்கொண்டிருக்கிற சமயம்!

பதவி – பவிசு -அதிகாரம்-அந்தஸ்து எதையுமே தங்கள் தலைவனிடம் எதிர்பாராமல் அவரிடத்தில் பாசங் கொண்ட அவரது கட்சியின் உடன்பிறப்புக்கள் அவர் நலம் பெற வேண்டுமென்பதற்காகத் தீக்குளித்துச் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பசி, உறக்கம், ஓய்வு அனைத்தையும் மறந்த தொண்டர்கள் அவர் உடல்நிலை குறித்து அறிந்திட அலைமோதிக் கொண்டிருக்கிறார்கள்!

இந்தச் சோகம் கப்பிய சூழ்நிலையில்தான்-அதுவும் முதல்வரின் உடல்நிலையில் நெருக்கடியும், சிக்கலும் ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்க்கப்பட்ட நாளில்தான் முதல்வரின் உடல்நிலை எவ்வாறுள்ளது என்ற முழு உண்மையையும் அறிந்து கொள்ளக்கூடிய இடத்திலே இருக்கிற நாவலர் அவர்கள் டெல்லிக்குச் செல்கிறார்!

இலாக்காக்கள் தன்பால் வந்துவிட்டன என்ற இனிய செய்தியை வெளியிட்டுவிட்டு – அந்த வாய்ப்பு வழங்கிய வடபுலத்துக்காரர்களுக்கு நன்றி கூறி மாலை அணிவித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார்! பிரதமருக்கும் மற்றவர்களுக்கும் மாலை அணிவித்த நிகழ்ச்சிகள் எல்லாம் படமாக வர வில்லை! பிரதமர் அலுவலகத்தில் அடிக்கடி புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை! பிரணாப் முகர்ஜிக்கும், ஆர். வெங்கட்ராமனுக்கும் ஜவ்வாது மாலைகள் அணிவித்த போது பிரதமருக்கு அணிவிக்காமல் இருந்திருப்பாரா?

ஆனால் பிரதமர் இங்கே முதல்வரைக் காண வந்த போது தனக்கு யாரும் மாலை அணிவிப்பதைத் தவிர்த்துவிட்டார்.

எனது சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் தென் ஆற்காடு மாவட்டத்தில் நடைபெற்ற போது எனக்கு யாரும் மாலை அணிவிக்கக் கூடாது என அறிக்கையே விடுத்தேன்.

தற்காலிகமாக-முதல்வரின் இலாக்காக்களை; டெல்லி அரசின் கடைக்கண் பார்வை-கவர்னரின் கருணாகடாட்சம் – இவற்றின் காரணமாகப் பெற்றுக்கொண்டதற்கே இத்தனைப் பேரானந்தமா?

மருத்துவமனையிலே முதல்வர் நடத்துவது உயிருக் குப் போராட்டம்!

மேலிடத்தில் உள்ள இவர்களுக்கோ மகிழ்ச்சிக் கொண்டாட்டம்!

உடன்பிறப்பே! இவர்கள் இயல்பு இதுதான் என்பது உனக்கும் எனக்கும் முன்பே தெரியும்!

அ.தி.மு.க. வில் உள்ள உணர்ச்சியுள்ள உடன் பிறப்புக்கள், இவர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென்பதற்காக இதனைக் குறிப்பிட்டேன்- அவ்வளவுதான்!

அன்புள்ள,

மு..

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *