இதய ஒலி
கலைஞர் மு. கருணாநிதி

உள்ளத்தில் உள்ளதை ஒளிக்காமல்…!

என் இனிய நண்பரே!

ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் அமெரிக்காவில் புருக்லின் மருத்துவமனையில் இருக்கும் உங்களுக்கு இந்தக் கடிதம் கிடைப்பதற்கு வழியில்லை என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் உங்களைத் தங்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டு எந்தவொரு பதவியோ, லாபமோ பெறாமல்-பெறுவதற்கும் விரும்பாமல் – லாரிகளில் ஏறி வந்து உங்களை வாழ்த்தியும் -வாழ்த்தி விட்டுத் திரும்பச் செல்லும்போது அந்த லாரிகள் சில விபத்துக்குள்ளான காரணத்தால் அடிபட்டு கால் கை ஒடிந்த போதும்கூட அதைப்பற்றிக் கவலைப் படாமல் தங்களைக் கண்ட மகிழ்ச்சியில் வலியையே மறந்தும் உங்கள்பால் பாசத்தால் கட்டுண்டு கிடக்கும் அ.தி.மு.க. உடன்பிறப்புக்கள் இந்தக் கடிதத்தைப் படிக்கும்போது, நீங்களே இதனைப் படித்ததாக நான் எண்ணிக் கொள்வேன்.

நான் இப்போது சொல்வதும் எழுதுவதும் அ.தி.மு.க. உடன்பிறப்புக்கள் பல பேருக்கு நம்ப முடியாததாக இருக்கலாம்.

காரணம்; தலைவனுக்கு இப்படியொரு துன்பமா என எண்ணிப் பார்க்கக்கூட அவர்கள் இதயம் இடந்தராது என்பதால் நான் சொல்வதை அவர்களால் நம்ப முடியாது!

ஆனால் உங்கள் நிலை எனக்கு நன்றாகத் தெரியும் போது – அந்த உண்மையை மறைத்துவிட்டு உங்களை வைத்து அரசியல் விளையாட்டு நடத்துவதற்காக- உங்களைச் சித்ரவதை செய்து கொண்டிருக்கிறார்களே; உங்களைச் சுற்றியிருந்து உல்லாசம் அனுபவித்த சில நண்பர்கள் -அவர்கள் உங்களை படுத்தும்பாட்டை என்னால் சகித்துக்கொள்ள முடியாத நிலையில்தான் இதனை எழுதுகிறேன்.

இன்றைக்கு நான் சொல்வது கேட்டு திகைத்திடும் உங்களது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்கள்; எதிர் காலத்தில் நிச்சயமாக இந்தக் கருணாநிதி சொன்னது உண்மைதான் என்பதை உணர்ந்து கொள்ளத்தான் போகிறார்கள். தங்களை உண்மையிலேயே ஏமாற்றிப் பொய்கூறி, புனைந்துரைத்து, போலி நாடகமாடியவர்கள் யார் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும்போது அவர்களது ஆத்திர எரிமலைக்கு முன்னால் அந்த சுயநலப் பதர்கள் பொசுங்கித்தான் போவார்கள்!

ஒரு லட்ச ரூபாய் பெரியார் மாவட்டத்தில் அக்டோபர் 15ந் தேதி நிகழ்ச்சிகளில் தேர்தல் நிதி தருவதாக இருந்ததை ரத்து செய்துவிட்டு இரவெல்லாம் விழித்திருந்து தங்களைக் காண்பதற்காக சென்னை அப்போலா மருத்துவமனை நோக்கி ஓடோடி வந்தேன்.

ஆனால்…ஆனால்…

எனக்கு உங்களைக் காண அனுமதி மறுத்துவிட்டார்கள். அப்படியொரு போலீஸ் ராஜ்யம்! நாற்பதாண்டு காலம் பழகிய நண்பனாகிய எனக்கு ஏற்பட்ட கதி அது! தொலைவில் நின்றாவது கதவு ஓரத்தில் எட்டிப் பார்த்தாவது பார்த்து விட்டுப்போகிறேன். என்றேன்! அனுமதி கிடைக்கவில்லை. நண்பரே!

கழகக் கட்டுப்பாட்டை மீறி என்னதான் பேசியிருந்தாலும்- அவருடன் தனியாகப் பேசி அதன் பிறகு முடிவெடுக்கலாம் என்று செயற்குழு உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே-“அவர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்” என்று எனக்கும் தெரியாமல் பத்திரிகைகளுக்குக் கையெழுத்திட்டுச் செய்தி அனுப்பிய நாவலர் உங்களைப் பார்க்கவும் முடிந்தது! உங்கள் உடல் நலிவையே தனக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகக் கருதி பயனடையவும் முடிகிறது! இடைக் காலத்தில் அடைகிற பயன் போதாதென்று தொடர்ந்து பயனடைய உங்கள் வாடியிருக்கும் உடலை வாணிபப் பொருளாக மாற்றிக் கொள்ளவும் முடிகிறது!

ஆனால்-எனக்கு; ஆம்-ஒருவரிடம் ஒருவர் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் நாற்பதாண்டு காலம் பழகி னோமே; அந்த நண்பனுக்கு நீங்கள் உடல் நலிவுற்றுள்ள நிலையில் உங்களைக் காணும் வாய்ப்புகூட மறுக்கப்பட்டு விட்டது!

1969ல் நான் முதலமைச்சர் பொறுப்பேற்று -சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து முடித்துவிட்டு வெளியே புறப்படும்போது என்னை அப்படியே கட்டித் தழுவி என் நெற்றியில் முத்தமிட்டீர்கள்!

இடையில் கழகம் பிளக்கப்பட சில துரோகிகளின் முயற்சி வெற்றி பெற்று-அப்போதும் திராவிடர் இயக்கம் முற்றிலும் அழிந்து விடாமல்- நீங்கள் ஆளுங்கட்சித் தலைவராகவும் நான் எதிர்கட்சித் தலைவராகவும் எதிர் எதிரே அமர்ந்திருந்த போதும் – நாம் கடுமையாக மோதிக் கொண்ட போதும் – நம்முடைய தனிப்பட்ட கனிவான நட்பு; கடுகளவும் குறையாமலேதான் இருந்தது! இன்றும் இருந்து வருகிறது!

ஆனாலும் எனக்குத் தங்களை மருத்துவமனையில் தொலைவில் இருந்துகூடப்பார்க்க அனுமதி மறுக்கப்பட்டு விட்டது.

பார்த்தால் “இன்பெக்ஷன்” வந்துவிடும் என்று ஒரு சாக்குச் சொல்லி விட்டார்கள்! “இன்பெக்ஷன்” எதுவும் வராமல், உற்ற நண்பர்கள் பார்ப்பதற்கு எத்தனையோ தடுப்பு ஏற்பாடுகள் மருத்துவத்துறையில் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். மருத்துவமனையில் தங்கள் அறையிலேயே பணியாற்றிய சிப்பந்திகளும் மனிதர்கள் தானே! அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகூட எனக்குக் கிட்டவில்லை!

“சீட்டு வாங்க மூப்பனார் என் வீட்டு வாசலில் காத்திருந்தார்” என்று ஒருமுறை கூட்டத்தில் பேசினீர்கள். அது பத்திரிகைகளில்கூட வந்திருந்தது. ஆனால் அந்த மூப்பனார் அவர்கள்கூட உங்களை வந்து மருத்துவமனையில் நரசிம்ம ராவுடன் பார்க்க முடிந்தது.

ஆனால் வீட்டுக்கு வரும்போதெல்லாம் எதிர்கொண்டு அழைத்து-விடைபெற்றுக் கொண்டு புறப்படும்போது பின்னாலேயே வந்து வழியனுப்பி வைப்பீர்களே; அந்த நண்பனாகிட எனக்கு உங்களைச் சுற்றியிருந்தோர் உங்களைக் காண அனுமதி மறுத்து விட்டனர்!

உங்களை அமெரிக்கா கொண்டு செல்லும்போது அங்கே எடுக்கப்பட்ட படங்களை “இந்து” ஏட்டில் கண்டபோது என் கண்கள் நீர்வீழ்ச்சிகளானதை என் அருகிலிருந்த நண்பர்கள் மட்டுமே அறிவார்கள்!

உங்களை அமெரிககாவுக்குக் கொண்டு சென்றிருப்பதே- உங்கள் உயிரோடு விளையாடுகிற உன்மத்தர்கள் சிலரின் செயல்தான் என்பதை என்னால் உங்கள் கட்சியின் உடன்பிறப்புக்களுக்குச் சொல்லாமல் இருக்க முடியவில்லை!

நான் இப்போது சொல்வது உண்மைதான் என்பதை எதிர்காலத்தில் அந்த உடன்பிறப்புக்கள் தெரிந்து கொள்ளத்தான் போகிறார்கள். இதைத் திரும்பத் திரும்பச் சொல்வதற்கு காரணம்; உங்கள் உடல் இருக்கும் நிலையில் உங்களைச் சித்ரவதை செய்யும் கொடுமையை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

உங்கள் மூளையில் ரத்தக்கட்டு ஏற்பட்டதின் விளைவாக நீங்கள் சிந்திக்கும் சக்தியையே இழந்திருக்கிறீர் கள்! அய்யோ! இதனைச் சொல்லவே-நினைக்கவே வேதனையாக இருக்கிறது!

உங்கள் வலதுகையும் வலது காலும் அசைவற்று இருக்கின்றன!

சிறுநீரகம் பழுதுபட்டதால் அடிக்கடி ரத்தத்தில் உப்பு அதிகரிக்கிற பேரபாயம் ஏற்படுகிறது. அதனை உடனுக்குடன் “டயாலிசிஸ்” செய்துதான் சுத்திகரிக்க வேண்டியிருக்கிறது!

ஆபரேஷன் செய்து சிறுநீரகத்தை மாற்றி வைக்கிற முயற்சியானால் உயிருக்கு உடனடி ஆபத்து விளைந்தாலும் விளையுமென்று பிரபல டாக்டர்கள் கருதுகிறார்கள்.

சிந்திக்கும் சக்தியில்லை! பேசும் சக்தியில்லை! வலது கையை அசைக்கும் சக்தியில்லை! “பிளட் யூரியா” எனும் பேராபத்து தொடர்கிறது!

இந்த நிலையில் நீங்கள் உடல் நலம் பெற்று வரும் வரையில் காத்திருந்து உரிய காலமான ஜூன் மாதத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்தலாம் என்று நான் கருத்து தெரிவித்தேன்!

ஆனால், ஆதாயம் தேடிகளுக்கு என்ன அவசரம் பாருங்கள்!

உங்களுக்குள்ள அரசியல் சட்டத்தையே வளைத்தும் நெளித்தும் உரிமையை மறுத்து விட்டு அவர்களாகவே கூடி “அசெம்பிளி”யையே கலைத்து விட்டு, அவர்கள் அமைச்சர்களாகத் தொடருகிறார்கள்!

‘ஆக்டிங் சீப்மினிஸ்டர்” என்று அரசியல் சட்டத்திலேயே இல்லை!

அப்படியும் தங்களை அழைக்கச் செய்து ஆசையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்!

இதோடு உங்களைப் பயன்படுத்தி அதோடு விட்டா லும் பரவாயில்லை! உங்களை ஆண்டிப்பட்டி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப் போகிறார்களாம்!

அப்படி நீங்கள் ஆண்டிப்பட்டி தொகுதியில் இந்த உடல் நிலையோடு நிற்பதற்கு நீங்களே உண்மையில் விரும்பினால் -அந்தத் தொகுதியில் கழகம் தங்களுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தக் கூடத் தயாராக இல்லை! உங்களுக்கு அந்தத் தொகுதியைக் கழகம் விட்டுக் கொடுப்பதாக நான் பெருமை பேசவில்லை! எதிர்ப்பு என்கிற அந்தத் தொல்லையைக் கூடத் தங்களுக்கு இந்த நிலையில் நான் தருவதற்கு விரும்பமாட்டேன்!

ஆனால் என்னென்ன செய்திகள் வருகின்றன!

வேட்பு மனு தாக்கல் செய்ய உங்களால் கையெழுத்துப் போட முடியாதாம்! அதனால் இடது கை விரலை எழுதுவதற்குப் பயிற்சி தருகிறார்களாம்! உங்களின் கை ரேகை வாங்கப் போகிறார்களாம்!

இந்த ஏழாண்டு கால ஆட்சியில் எத்தனை ஆயிரம் கோப்புகளில் உங்கள் கையெழுத்தை இட்டிருக்கிறீர்கள்-அப்படிப்பட்ட உங்களிடம் கைரேகை பதிய வைக்கிற காரியத்தை நடத்தப் போகிறார்கள்! என்றால் இவர்களுக்கு இதயமென ஒன்று இருக்கிறதா?

வேட்பு மனு தாக்கல் செய்யும்போது உறுதி மொழியை அதிகாரி முன்னிலையில் படிக்க வேண்டுமே!

அதற்காக இப்போதே பொய் சொல்லத் தொடங்கி விட்டார்கள்: நீங்கள் பேச முயற்சிப்பதாக!

நீங்கள் எழுந்து நடமாடினால்-பேசினால் சிந்திக்கும் சக்தி பெற்று செயலாற்றினால்; நம் இருவரது தாய்களின் மீதும் – நமது அண்ணாவின் மீதும் ஆணையாகச் சொல்கிறேன்; அது கேட்டு என்னைப் போல் மகிழ்ச்சி அடைபவர் யாரும் இருக்க முடியாது!

இல்லையா நண்பரே! இதனை நல்லவர்கள் – நம்மை உணர்ந்தவர்கள்-யாராவது மறுக்க முடியுமா?

பன்னிரண்டு ஆண்டுகால பகைமூட்டத்திற்கு இடை யிலேதானே இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் நாம் இருவரும் சந்தித்தபோது கட்டித் தழுவிக் கொண்டோம்! அந்த அன்பையும் பாசத்தையும் அணை போட்டுத் தடுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சிகளால் முடியுமா? முடியவே முடியாது!

எனவே எனக்கிருக்கிற ஆதங்கமெல்லாம்-உடல் நலிந்தும், மெலிந்தும், வதங்கி வாடியிருக்கிற உங்களை உயிர் பிழைத்து வரச் செய்கிற முயற்சிகளில் காட்டுகிற அக்கறையை விட-அவசர அவசரமாகத் தேர்தலை நடத்தி ஆதாயம் பெறுவதில் அதிக அக்கறை காட்டுகிறார்களே-என்பதுதான்!

இன்று மறைக்கப்படுகிற உண்மைகள், நாளைக்கு விசுவரூபம் எடுத்து வெளிப்படும்போது அதன் விளைவுகளை தாங்கிக் கொள்ள யார் பொறுப்பேற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் நான் தொடர்ந்து எழுப்பி வருகிற கேள்வி!

உங்கள் மீது உயிரையே வைத்திருக்கும் உங்கள் அன்புத் தொண்டர்களை, இங்குள்ள உங்கள் கட்சியின் மேலிடத்தினர் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்த வேண்டிய அவசியத்திற்கு நான் ஆளாகி யிருப்பது எனது கடமை!

இந்தக் கடமை உணர்வை இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் அனைவரும் புரிந்து கொள்ளத்தான் போகிறார்கள்.

இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைக்காது! கிடைத்தாலும் உங்களால் படிக்க இப்போது இயலாது!

எனினும் என் உள்ளத்தில் உள்ளதை ஒளிக்காமல் உரைத்து விட்டேன்!

என்றும் உங்கள் நண்பன்,

மு. .

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *