இதய ஒலி
கலைஞர் மு. கருணாநிதி

நெஞ்சில் இருந்ததைக் கொட்டி விட்டேன்!

உடன்பிறப்பே!

தேர்தலுக்கான ஆயத்தங்களும்– அந்த ஆயத்தங்கள் குறித்த அறிவிப்புகளும் வந்தவண்ண மிருக் கின்றன. அதிபர் ஆட்சி முறையா- அல்லது நாடாளு மன்றத்தின் ஆயுள் நீட்டிப்பா-அல்லது உரிய காலத்தில் தேர்தலா- என்ற கேள்விகளுக்கு மழுப்பலான பதில் களையே பெற முடிந்த நிலைமை மாறி; இப்போது தேர்தல் வந்தே விட்டது என்ற செய்திகள் செய்திகள் வரத் தொடங்கி விட்டன.

நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலும் இணைந்து வருமா என்பது இன்னமும் உறுதி யாக்கப்படவில்லை. ஆனால் இணைத்தே நடத்த வேண்டு மென்பதில் நாவலர் அவர்களும் இன்னும் சில அமைச்சர்களும் பிடிவாதமாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இரண்டு தேர்தலும் சேர்ந்து வந்தாலும் நாம் சந்திக்கத்தான் போகிறோம். அதற்கும் தயாராகவே இருக் கிறோம்.

ஆனால் என் உள்ளத்தில் உறுத்திக்கொண்டிருக்கிற ஒரு உணர்வை என்னால் வெளியிடாமல் இருக்க முடிய வில்லை. தர்மபுரி மாவட்ட சுற்றுப்பயண நிகழ்ச்சியின் போது கூட அதனைக் குறிப்பிட்டேன்.

முதலமைச்சர்–எனது இனிய நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் மிகவும் உடல்நலிவுற்று அமெரிக்க நாட்டில் நியூயார்க் மருத்துவ மனையில் படுக்கையிலிருக்கிறார் என்கிற போது அவர் தமிழ்நாட்டில் இல்லாத நேரத்தில்- அதுவும் நோயுற்று வெளிநாட்டில் வாடிக் கொண்டிருக்கும் போது – அதனையே முதலீடாக வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டுமென்று ஆளுங்கட்சியில் உள்ள சிலர் முனைவதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை! எடுத்துச் சொல்லாமலும் இருக்க முடியவில்லை!

உடன்பிறப்பே, சில நாட்களுக்கு முன்பு “நானும் பிரார்த்தனை செய்கிறேன்” என்ற தலைப்பில் நான் எழுதிய கடிதத்தை உன்னிப்பாக – ஒவ்வொரு வரியாகப் படித்திருப்பாய் என்று நம்புகிறேன்.

அதில்:-

“நான் நடக்கும் வழிதான் நல்வழியென்று வாதம் செய்து மோதிக்கொள்வதிலே கூட ஒரு சுவையுண்டல்லவா நம் இருவருக்கும்; அதற்காகவும் நீங்கள் நலமுடன் திகழ வேண்டுமென்றுதானே இந்த நண்பனின் இதயம் ஏங்கிக் கொண்டிருக்கும்!”

என்று நான் எழுதியிருந்த அந்த வாசகம், என் கண்ணீரால் எழுதப்பட்டது என்பதை அந்தக் கடிதத்தை எம்.ஜி.ஆர். படிக்கும் நிலையில் இருந்திருந்தால் நிச்சயமாக உணர்ந்துகொண்டிருப்பார்!

1971ல் நானும் எம். ஜி. ஆரும் இணைந்து நின்று : ஆம் – நமது இயக்கம் டில்லிக்காரர்களால் பிளவுபடுத்தப்படாமல் ஒரே இயக்கமாக இருந்து தேர்தல் களங்கண்டு தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 184 சட்ட மன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது!

அப்போது நானும் அவரும் ஒருமுனையில்! 1977ல் அவரும் நானும் எதிர்எதிர் முனைகளில்! ஏன்? எப்படி? யாரால்? இப்போது விளக்க விரும்பவில்லை! 1972ல் அச்சேறிய ஆதாரங்கள் சாட்சியங்களாக இருக்கின்றன! தேவைப்படும் போது தெரிவிப்பேன்! 1977ல் அவர் வென்றார்!

1980ல் நாடாளுமன்றத் தேர்தல்-மீண்டும் களம் கண்டோம்; அப்போதும் எதிர்எதிர் முனைகளில்தான்! அவரை வெற்றி கண்டோம்! அதுவும் மிகப்பெரிய வெற்றி!

அடுத்து சட்டமன்றத் தேர்தல்-களத்தில் இருமுனைகளில் நின்றே மோதிக் கொண்டோம். மீண்டும் அவர் பெரு வெற்றி பெற்றார்!

பின்னர் வந்த இடைத்தேர்தல் – இருமுனைகளில் நின்று மிகக் கடுமையாக மோதிக் கொண்டோம்!

அண்ணாநகர், மயிலாடுதுறை எனும் இரு பெரும் வெற்றி களைப் பெற்றோம்!

1953 முதல் நானும் அவரும் ஒருமுனையில் நின்று கழகத்தின் சிப்பாய்களாக அண்ணாவின் காலடியில் வெற்றிக் காணிக்கைகளைக் குவித்தோம்! இருவர் மட்டுமல்ல; இயக்கத்தின் முன்னணித் தளபதிகள் – செயல் திறன் கொண்ட ஜீவநாடிகளான அன்பு உடன்பிறப்புக் கள் – அனைவரும் ஓரணியில் இருந்துதான்!

1972க்குப் பிறகு — இருவரும் இருமுனைகளில்! சட்ட மன்றத்தில் அவருக்கு வெற்றி! நாடாளுமன்றத்தில் நமக்கு வெற்றி! மீண்டும் சட்டமன்றத்தில் அவருக்கு வெற்றி! அண்மையில் நடந்த இடைத்தேர்தலில் நமக்கு வெற்றி!

இப்படி வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்த போதும் – இருவரும் இருமுனைகளில் நின்று; புராண பாஷையில் கூற வேண்டுமானால் அர்ச்சுனனும் கர்ணனும் போல மோதிக் கொண்டோம்! மோதிக்கொள்ள நேரிட் டது! ஆம், அது தவிர்க்க முடியாததாகி விட்டது!

ஆனால் இப்போது தேர்தல் வந்தால்-நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமென்றால் அது நடந்தே தீர வேண்டும்! தேதியைத் தள்ளி வைக்க முடியாது! முடியுமென்று சொன்னாலும் அது ஜனநாயகமாகாது! அதனால் அந்தத் தேர்தலை சந்தித்தே ஆகவேண்டும்-சகலவலுவுடனும் களத்திற்கு வரப் போகிற இந்திரா காங்கிரசை எதிர்க்கப் போகிறோம்! நாம் எதிர்க்கப் போகிற அணிக்கு ஒரு தலைமை இருக்கிறது! அது திடகாத்திரமாக இருக்கிறது! அந்தத் தலைமையில்தான் தேர்தல் களத்தில் நமக்கு எதிரான அணி நிற்கப் போகிறது! அதாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் நாம் எதிர்க்கப் போகும் அணிக்குத் தலைமை எது என்பதும் – அது தனக்குரிய வலிமையுடன் களம்புகப் போகிறது என்பதும் தெளிவான விஷயமாகும்!

ஆனால் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலும் இணைத்து வைக்கப்படுமானால்-அப்போது நமது அணியுடன் மோதப்போகிற எதிர் அணியின் தலைவர் களத்தில் இருக்க மாட்டார் என எண்ணுகிறபோதும் அவர் நோயுற்ற நிலையில் இருப்பார் என நினைக்கிற போதும்- நம் “மோதிக்கொள்வதிலே கூட ஒரு சுவையுண்டல்லவா இருவருக்கும்; அதற்காகவும் நீங்கள் நலமுடன் திகழ வேண்டுமென்று தானே இந்த நண்பனின் இதயம் ஏங்கிக் கொண்டிருக்கும்!” என்று நான் கடிதத்தில் குறிப்பிட்ட அந்தக் கருத்து எத்துணை உணர்வுபூர்வமானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?

தேர்தலுக்குள் அவர் உடல்நலம் பெற்று களம் புகுந்து பணிகளையாற்றுவார் என்று நிச்சயிக்க முடியாத நிலையில் – டாக்டர்களும் அத்தகைய உத்திரவாதம் எதுவும் வழங்காத நிலையில்-சட்டமன்றத் தேர்தல் களத்தை இப்போது நினைத்துப் பார்க்கும்போதே ஏதோ ஒரு இனந் தெரியாத வேதனையால் இதயம் கனத்துப் போகிறது.

ஆனால் நாவலரும் அவரைச் சார்ந்தோரும் இப்போதே அந்தத் தேர்தலும் நடைபெற வேண்டும் – அவர் உடல்நலம் பெற்று வந்த பிறகு முறைப்படி ஜூன் மாதத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்தக் காத்திருக்கத் தேவையில்லை என்ற முடிவில அழுத்தமாக இருக்கிறார்கள் என்றே தெரிகிறது!

என்னைப் பொறுத்தவரையில் -சட்டமன்றத் தேர்தலுக்கு எனது இனிய நண்பர் எம்.ஜி.ஆர். உடல்நலம் பெற்று வந்து அவரைத் தேர்தல்களத்தில் சந்திப்பதையே பெருமையாகக் கருதுகிறேன்!

“அதற்காக ஜூன் மாதம் வரையில் நாங்கள் பொறுத்திருக்க வேண்டுமா? எங்கள் நிலைமை என்ன ஆவது? அவரது உடல்நலிவை பயன்படுத்தியே நாங்கள் லாபம் பெற எண்ணுகிறோம்!”

என்று ஆளுங்கட்சி வட்டாரத்திலே உள்ள முக்கிய பிரமுகர்கள் பிடிவாதமாக இருப்பார்களேயானால்-இப் போதே தேர்தல் இணைந்துதான் வரும்!

நெஞ்சில் இருந்ததைக் கொட்டி விட்டேன்!

பின்னர் உருவாகும் நிலைமைகளுக்கேற்ப – நமது வியூகங்களையும் வகுக்க வேண்டியதுதானே!

அன்புள்ள,

மு..

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *