நல்ல பிள்ளையார் கி.வா.ஜகந்நாதன்

மலைப்பாம்பும் நரியும்

ஒரு சிறிய குன்றுக்கு அடியில் ஒரு பெரிய காடு. அந்தக் காட்டுக்கு நடுவில் ஒரு பெரிய குளம். குளத்தில் நிறைய மீன்களும் நண்டுகளும் இருந்தன. நண்டுகள் சில சமயங்களில் குளத்தங்கரைக்கு வந்து ஓடிஓடி விளையாடின.

அந்தக் காட்டில் ஒரு பெரிய மலைப்பாம்பு இருந்தது. முயல், மான் குட்டி முதலியவைகளை அது பிடித்து விழுங்கி விடும். சில சமயங்களில் குளத்தங்கரைக்கு வந்து வெளியிலே வந்த நண்டுகளையும் விழுங்கும். நாம் பப்பர் மெட்டுத் தின்கிறது போல அந்த நண்டுகளைத் தின்று ருசி பார்க்கும். நண்டு தின்பதில் அதற்கு அதிகப் பிரியம் வந்து விட்டது.

ஒரு நாள் ஒரு கலைமான் குட்டியைப் பிடித்து அது விழுங்க ஆரம்பித்தது; உடம்பையெல்லாம் விழுங்கிவிட்டது. அந்த மான் குட்டியின் தலையில் கிளைகளோடு கூடிய கொம்பு இருந்தது. அதைப் பாம்பினால் விழுங்க முடியவில்லை, அது உள்ளே போகாமல் வாய்க்குள்ளே நின்று விட்டது. கூர்மையாக இருந்ததால் வாயைக் கிழித்து விட்டது. ரத்தம் கொட்டியது. அந்த வலியை அதனால் பொறுக்க முடியவில்லை.

மெதுவாக ஒரு மரத்தடிக்குப் போய் அந்த மரத்தோடு வாயைத் தேய்த்தது, அப்போதும் மான்கொம்பு வெளியே வரவில்லை. பாம்பு தவியாய்த் தவித்தது,

அப்போது ஒரு நரி வந்து பாம்பைப் பார்த்தது. “என்ன அண்ணே, இப்படி வாயெல்லாம் ரத்தம்?” என்று கேட்டது.

“தம்பி,தெரியாமல் கலைமான் குட்டியை விழுங்கினேன், கொம்பை விழுங்க முடியவில்லை; வாயைக் கிழித்துவிட்டது. எனக்கு ஓர் உபகாரம் செய்கிறாயா? என்று பாம்பு கேட்டது.

“என்ன செய்ய வேண்டும், சொல்; உடனே செய்கிறேன்” என்றது நரி.

‘இந்தக் கொம்பை என் வாயிலிருந்து பிடுங்கி விடவேண்டும்” என்று கெஞ்சியது பாம்பு,

“இதோ, பிடுங்கி விடுகிறேன்’ என்று சொல்லவே,பாம்பு ஒரு மரத்தின் அடிக்கு ஊர்ந்து சென்று அதைச் சுற்றிக் கொண்டது. நரி இழுப்பதற்குச் சௌகரியமாக இருக்கும் என்று அப்படிச் செய்தது. சுற்றிக் கொண்ட பிறகு வாயை ஆ என்று திறந்து காட்டியது. நரி தன் பலம் கொண்ட மட்டும் அந்தக் கொம்பைக் கடித்து இழுத்து வெளியிலே போட்டுவிட்டது.

“தம்பி, நீ செய்த இந்த உபகாரத்தை என்றைக்கும் மறக்க மாட்டேன். என்னாலே உனக்கு ஏதாவது உபகாரம் வேணுமானால் சொல், செய்கிறேன்” என்றது பாம்பு.

‘அண்ணே, எனக்கு நண்டு என்றால் மிகவும் பிரியம். இந்தக் குளத்தங்கரையில் வரும் நண்டுகளை நீயும் சாப்பிடுகிறாய். உனக்கு இந்த நண்டு ஓர் உணவா? இனிமேல் நண்டுகளையெல்லாம் எனக்கே விட்டுவிடு” என்று நரி சொல்லியது,

பாம்புக்கு நண்டு ருசியை விட மனம் இல்லை. என்றாலும் தனக்குப் பெரிய உபகாரம் செய்த நரிக்கு இதைச் செய்யாமல் இருக்கக்கூடாது என்று, அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டு, அப்படியே நடந்து வந்தது.

நரிக்கு இப்போது ஒரே கொண்ணாரம். தினந்தோறும் நண்டு விருந்து அதற்குக் கிடைத்துக் கொண்டு வந்தது.

சில நாட்கள் ஆயின. பாம்புக்கு நண்டு ருசி மறக்கவில்லை. மறுபடியும் அதைத் தின்னவேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. சில நண்டுகளைத் தின்னவும் தின்றது. அதை நரி பார்த்து விட்டது,

“என்ன அண்ணே, நீயும் நண்டைத் தின்கிறாயே! எல்லாவற்றையுமே எனக்குக் கொடுப்பதாக வாக்களித்துவிட்டு இப்போது பங்குக்கு வந்து விட்டாயே!” இப்படி நரி சொல்லியது.

“தம்பி, உனக்குத்தான் நிறைய நண்டுகள் கிடைக்கின்றனவே; நான் நாலு அஞ்சு தின்றால் உனக்குக் குறைந்து போகுமா?” என்று கேட்டது பாம்பு.

“தினமும் நிறைய நண்டுகள் வருவதில்லை, அண்ணே. சில நாள் மிகவும் குறைவாகவே வருகின்றன. நீயும் நண்டை விழுங்க வந்து விட்டால் நான் என்ன செய்வேன்!” என்று அழாக் குறையாக நரி சொன்னது.

“அதெல்லாம் முடியாது; நானும் சாப்பிடத் தான் சாப்பிடுவேன்” என்று முரட்டுத்தனமாக மலைப்பாம்பு சொன்னபோது, நரிக்கு அழுகையே வந்து விட்டது. அதனால் என்ன செய்ய முடியும்? பாவம்!

மற்றொரு நாள் அந்த மலைப் பாம்பு ஒரு முயலைப் பற்றி விழுங்கப் போயிற்று. அந்த முயல் ஒரு முள் புதருக்குள் ஓடி ஒளிந்து கொண்டது. பாம்புக்கு நிரம்பப் பசி, சரசரவென்று அந்தப் புதருக்குள் நுழைந்தது. முயலைப் பற்றிக்கொண்டு விழுங்க ஆரம்பித்தது. முள்ளுச் செடியை முயல் விடவே இல்லை, பசி வேகத்தில் பாம்பு முயலை இழுத்து விழுங்கும் போது அந்த முள்ளுச் செடியின் கிளையும் ஒடிந்து அதன் வாய்க்குள் போயிற்று. கூர்மையான முள் ஆகையால் பாம்பின் வாயை அது குத்திவிட்டது. அதை வெளியிலே கக்க முடியவில்லை,

வெளியிலே வந்து திணறிக் கொண்டிருந்தது, பாம்பு ‘அந்த நரி வந்தால் இந்த முள்ளை எடுக்கச் சொல்லலாமே’ என்று அது : நினைத்துக் கொண்டிருந்த போது, நரியே வந்து விட்டது.

“தம்பி, நல்ல சமயத்தில் வந்தாய். நான் மறு படியும் சங்கடத்தில் மாட்டிக் கொண்டு விட்டேன், என் வாயைப் பார்! முள் கொத்துக் கொத்தாக வாயில் நின்றுவிட்டது, விழுங்க முடியவில்லை. விஷமுள் போல இருக்கிறது. வாயெல்லாம் கடுக்கிறது” என்று பாம்பு மறுபடியும் கெஞ்சின குரலிலே பேசியது.

“அண்ணே, உன் ஆபத்தைத் தீர்க்க நான் வரவேணும், ஆனால் நீ உன் வாக்கைக் காப்பாற்றாமல், எனக்குக் கொடுத்ததைப் பங்கு போட வருகிறாய். உனக்கு உபகாரம் செய்வதற்கு மனசு வருமா ?” என்று கம்பீரமாகக் கேட்டது நரி.

“தம்பி, தம்பி, நான் செய்தது தப்புத்தான், இனிமேல் அப்படி நடக்காது, எல்லா நண்டுகளையும் நீயே சாப்பிடு. எப்படியாவது இந்த முள்ளை எடுத்து விடப்பா? என்னாலே வலி தாங்க முடியவில்லை” என்று மறுபடியும் குழைந்து கெஞ்சியது பாம்பு.

“நீ உன் வாக்கை இனிமேலாவது காப்பாற்றுவாய் என்ற நம்பிக்கையின் மேல் உனக்கு மறுபடி யும் உதவி செய்ய வருகிறேன். இனி மேலாவது என்னை ஏமாற்றாமல் இரு” என்று நரி சொல்லியது.

“தம்பி, திருப்பித் திருப்பி அதையே சொல்லாதே! எனக்குப் புத்தி வந்து விட்டது. சீக்கிரம் இந்த முள்ளை எடு” என்று பாம்புசொல்லவே, நரி முன்பு செய்தமாதிரி பாம்பின் வாயிலிருந்து

முள்ளை எடுத்துவிட்டது.

அதற்குப் பிறகு நரி நண்டுகள் எல்லாவற்றை யும் உண்டு வந்தது பாம்பு அந்தப் பக்கமே போகவில்லை.

பத்து நாள் ஆயின. பாம்புக்கு இன்னும் நண்டுச் சபலம் போகவில்லை. ‘பண்ணுகிறது தப்பு’ என்று ஒரு சமயம் நினைக்கும். அடுத்த கணம், ‘இந்த நரிப்பயலுக்குப் பயப்பட வேணுமா? என்ன செய்து விடுவான்? என்ற தைரியம் வரும், கடைசியில் நண்டுப் பட்சணத்தைச் சாப்பிடுவது என்று தீர்மானம் செய்து கொண்டது, அப்படியே அது நண்டுகளைத் தின்ன ஆரம்பித்தது.

நரி இதைப் பார்த்தது. இரண்டு முறை உபகாரம் செய்தது நரி. அது இல்லாவிட்டால் பாம்பு எவ்வளவோ சங்கடப்பட்டுப் போயிருக்கும். இரண்டு முறையும் பாம்பு வாக்குக் கொடுத்தது; ஆனால் அதைக் காப்பாற்றவில்லை. முதல் முறை போனால் போகிறது என்று எண்ணி, மறுபடியும் நரி உதவி செய்தது. இப்போது பழைய படியே தான் கொடுத்த வாக்குறுதியைப் பாம்பு காற்றில் பறக்க விட்டுவிட்டது, நரிக்குக் கோபம் கோபமாக வந்தது.

“என்ன அண்ணே, மறுபடியும் இப்படி?” என்று ஆத்திரத்துடன் கேட்டது.

“உனக்கு அதிகப் பேராசை! உலகத்திலே உள்ள நண்டெல்லாம் உனக்கே வேணும் என்று நினைக்கிறாய்!” என்று கொஞ்சம் கடுமையாகப் பாம்பு பேசியது,

இப்போது நரிக்குக் கோபம் அதிகமாகி விட்டது. ”போடா துரோகி ! நன்றி கெட்ட நாயே! உன்னைப் போய்க் காப்பாற்றினேனே! என் முட்டாள் தனத்தைத்தான் நொந்து கொள்ள வேணும். நீ பாவி; அக்கிரமக்காரன்; அயோக்கியன்; அல்பன்; கால் இல்லாமல் ஊர்ந்து வருகிற உனக்கு நாக்கு மாத்திரம் இரண்டு இருக்கின்றன. அந்த நாக்கு எப்படி வேணுமானாலும் பேசும். நீ பெரிய நயவஞ்சகன், அநியாயக்காரன்…” கோபத்தினால் படபடவென்று பேசின நரிக்குப் பெருமூச்சு வாங்கியது.

அது சரமாரியாகப் பொழிந்த வசவுகளைக் கேட்ட பாம்புக்கும் கோபம் பெரு நெருப்புப் போல மூண்டது, “என்ன சொன்னாய்? இப்போது உன்னையே விழுங்கி விடுகிறேன், பார்” என்று சர சர வென்று நரியை நோக்கி வேகமாக வந்தது.

நரி சட்டென்று அந்தக் குளத்தில் குதித்து நீந்தி அக்கரைக்குப் போய்விட்டது, கோப வெறியில் பாம்பும் குளத்தில் பாய்ந்து நீந்தத் தொடங்கியது, பெரிய உடம்பைத் தூக்கிக்கொண்டு அதனால் நீந்த முடியவில்லை. தடுமாறித் தத்தளித்தது, வேறு வழியில்லாமல் அது நரியைக் கூப்பிட்டு அலறியது; “தம்பி, இப்போது என்னைக் காப்பாற்றிவிடு. உன் வழிக்கே வரமாட்டேன். உனக்கு எது வேண்டுமானாலும் தருகிறேன். சாமி சத்தியமாகச் சொல்கிறேன், நீ என் வாலைப் பிடித்துக் கரையில் இழுத்து விடு” என்று புலம்பியது.

நரி சிறிது நேரம் பாம்பின் தவிப்பைப் பார்த்து நின்று கொண்டிருந்தது. “தம்பி, நீ சும்மா இருக் கிறாயே! என்னைக் காப்பாற்றிவிடு; உன் காலில் விழுகிறேன். எப்படியாவது என்னைக் கரையேற்று” என்று உரத்த குரலில் அழுதது மலைப்பாம்பு.

நரிக்கு மனசு இரங்கி விட்டது. குளத்தில் இறங்கி நீந்திக்கொண்டே வந்து பாம்பின் வாலை வாயில் பற்றிக்கொண்டது. மெதுவாகக் கரைக்குப் போய், பாம்பின் உடம்பு முழுவதையும் கரையில் இழுத்து விட்டது. கரைக்கு வந்தவுடன் பாம்பு சிறிது நேரம் மயக்கமாக அப்படியே கிடந்தது. பிறகு கண் விழித்தது. நரியைப் பார்த்து, “தம்பி, நீ என் உயிரையே காப்பாற்றினாய். இனிமேல் நீ எது கேட்டாலும் தருகிறேன்; எனக்குச் சாப்பிடக் கிடைக்கிறதை நீ கேட்டாலும், நான் சாப்பிடாமல் உனக்கே கொடுத்து விடுகிறேன், இனிமேல் நமக்குள்ளே பேதமே வேண்டாம். எனக்கு நல்ல புத்தி வந்து விட்டது. உன்னைத் தம்பி என்று சொல் கிறது கூடத் தப்பு. நீ என்னைப் பெற்றெடுத்த அப்பன்; என் அம்மா; என் தெய்வம்!” பாம்பு இப்போது ஆனந்தக் கண்ணீர் விட்டுக் கொண்டே நரியினிடம் போய் அதன் காலை இறுகப் பற்றிக் கொண்டது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *